திங்கள், டிசம்பர் 21, 2009

சேவற்கட்டு.

இப்படித்தான் ஒரு நாலு வாரமுன்னாடி பொழுதோட வேலை முடிஞ்சு ஊட்டுக்கு போலாமுன்னு கிளம்பி வண்டிய எடுத்துட்டு போய்ட்டு இருந்தேன்.

எங்க ஊருக்கு முன்னாடி ஒரு மலை ஒண்ணு ரெண்டு தொடரா இருக்கும்,அது பெரிய கரடு . அதுக்குள்ள ரெயிலு போற பாதை ஒண்ணு இருக்கும் , அதை ஒட்டி ஒரு தார் ரோடு ஒண்ணு இருக்கும். நைட்டு தனியா போகணுமின்னா கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்,

அந்த கணவாய் வழியா நானும் போறப்ப ஒரு ஏழரை மணிக்கு மேலதான் இருக்கும். திடீருன்னு போலீஸ் ஜீப் ஒரு நாலு வண்டி , ஒரு பெரிய எய்சர் வேன் ஒண்ணு ரோட்டை மறைச்சு நிக்குது.

என்ன ஏதுனு கிட்ட போயி நின்னு பாத்தா பக்கத்திலேயே பைக்கு ஒரு 20 நிக்குது. ஆண் போலிஸ் 10 பேரு, பெம்போலிஸ் 10 பேரு , ஆம்பிள்ளங்க ஒரு 20 பேரு கைய கட்டிட்டு நிக்கறாங்க.

நமக்கு ஒண்ணும் புரியல, என்ன ஏதுன்னும் தெரியல.

ஆனா நமக்கு வேற ஒரு ஓசனை வந்தது , ஏன்னா அதே இடத்தில
நாலு மாசம் முன்னாடி இதே டைமுக்கு வாரப்ப போன் ஒண்ணு வந்ததுன்னு
ஒரு பத்து நிமிசம் நின்னு பேசிட்டிருக்கப்ப திடீருன்னு எதுத்தாப்பல காட்டுக்குள்ள ஒரு பைக் கெளம்புற சத்தம் கேக்குது, நமக்கு தூக்கி வாரிப்போட்டுது , பாத்தா லைட்ட கூடப்போடாம ஒரு ஆணும், பொண்ணும்
பைக்கில தொன்ணூறுல போயிட்டாங்க.

அந்த மாதிரியான்னு பாத்தா அதுவும் இல்ல , சரி என்னதானு ஒருத்தர கேக்கலாமுன்னு கேட்டா , அவரு நம்மள நீங்க யாருனு கேட்க , அட நானு வழிப்போக்கனுங்க அப்படிங்க , சரி,சரி நீங்க கிளம்புங்க ஒரு பிரச்சனையுமில்ல
அப்படின்னு தாட்டி உட்டுடாறு.

சரி வெடிஞ்சா என்ன ஏதுனு தெரியாமயா போகுதுன்னு ஊடு வந்துட்டேன்.

காத்தால நம்ம பக்கத்து ஊட்டுல ஒருத்தர பாத்து என்ன மேட்டருன்னு கேக்க
அப்ப பாத்து அங்க வந்த பாரஸ்ட் கார்டு அது ஒண்ணுமில்ல , ஒரு நாலு மாசமா சேவற்கட்டு காட்டுக்குள்ள நடத்துனாங்க , அதுதான் போலிஸ் வந்துட்டுதுன்னு சொன்னாரு.

சொன்னதோட இல்லாம நாந்தான் ஒரு பத்து பேர காப்பாத்தி உட்டேன்னு கதை வேற உட்டாரு.

அதைக்கேட்ட நம்ம பக்கத்து ஊட்டுக்காரரு நானெல்லாம் அந்த காலத்திலேயே
சாவக்கட்டுல் பெரிய ஆளு, இது நடந்தது நமக்கு தெரியாம போச்சுனேன்னு
வருத்தப்பட்டு பழைய கதைய கொஞ்சம் அவுத்து உட்டாரு.
அப்பல்லாம் வெள்ளீக்கிழமைதான் சாவக்கட்டு நடக்கும் . இதே மாதிரி நானும் கோழிய கொண்டு போயிறுவேன். அப்ப சாவக்கட்டு மும்முரமா நடக்கும் போது போலிஸ் வந்துருச்சு .

பாதிப்பேரு துண்டக்காணம் , துணியக்காணமுன்னு உளுந்தடிச்சு ஓடீயே போயிட்டாங்க, ஆனா நானு அக்கட்ட இக்கட்ட போகமாக அங்க இருக்கறதிலேய கொஞ்சம் எளைச்ச ஆளாப்பாத்து டப்புனு எட்டி தோளப்புடிச்சி " ஏண்டா கேப்மாரி ஆட்டை மேய்டானு சொன்னா ஆட்டை உட்டுட்டு சாவக்கட்டு பாக்க வந்துட்டியா தாளி" அப்படின்னு சொல்லி உட்டேன் பாரு ஒரு அப்பு , போலிஸ் கிட்ட ஓடி வந்து "அட ஏனுங்க இப்படி ஆள்காரனப் போட்டு இப்படி அடிக்கறீங்க" அப்படின்னு சொல்லி கூட்டிட்டு போங்கன்னு சொல்லி உட்டுங்காங்க , இப்படித்தான் வெவரனா இருக்கோனு , இல்லே நாம கம்பி எண்ண வேண்டியதுதானு சொல்லிட்டு

"இதே மாதிரி ஒருக்கா ஆளுங்களையும் புடிச்சுட்டு சாட்சிக்கு கோழிங்களையும் புடிச்சுட்டு போயிறுச்சு. அப்புறம் அந்த ஊரு ஆளுங்க நம்மளையும்,கட்சிக்காரங்களையும் கூப்பிட்டு ஸ்டேசனுக்கு போயி ஏதாச்சும்
பண்ணி ஆளுங்களை வெளிய கொண்டுவாங்க அப்ப்டின்னு சொல்லி அனுப்புனாங்க".

அப்புறம் நாங்களும் போயி ரைட்டரப்பாத்து ஒரு அமவுண்ட கரெக்ட் பண்ணி
சாட்சிக்கோழியில ரெண்டப் புடிச்சுட்டு காத்தாலக்குள்ள சாவற மாதிரி இருந்த
4 கோழிகளை அங்கேயே உட்டுட்டு வந்துட்டோம்.

அப்புறம் காலையில கோர்ட்டுக்கு போனா நாங்க எதிர்பார்த்த மாதிரியே நாலு கோழியிலே மூணு அவுட், ஆனா ஒண்ணு போலிஸ்காரங்க வெவரமா போண்டாக்கோழி நாலக்கொண்டுவந்துட்டாங்க.

செரி அப்புறம் என்ன ஆச்சு சொல்லுங்க,

சேவக்கட்டு ஆளுங்க கேஸ் வந்ததும் நீதிபதி நம்ம ஆளுங்கள பாத்து "சேவக்கட்டு ஆடுனீங்களா , அப்படினு கேக்க நம்ம ஆளூங்க இல்லீங்க கோயில் பொங்க வெக்க கோழிச்சேவல வெச்சுட்டு கும்பலா இருந்தோம் .அப்ப பாத்து வந்து போலிஸ் புடிச்சுட்டாங்க அப்ப்டின்னு சொன்னாங்க.

உடனே நீதிபதியும் அப்படியா கோழிகள நான் பாக்கனுமே சொல்லிட்டு
இறங்கி வந்துட்டாரு. போலிஸும் கோழிகள காட்ட நீதிபதி அதுகள பாத்துட்டு
"ஏய்யா இதுங்கள வெச்சுட்டு என்னய்யா பண்ணமுடியும், சேவக்கட்டுனா என்னன்னு தெரியுமாய்யா உங்களுக்கு அப்படின்னு சொல்லிட்டு உசுரு போற மாதிரி இருந்த சாவலத்தூக்கி எறக்கய ஒரு தட்டுத்தட்டி உட்டாரு பாருங்க , சும்மா சாவலு ஜிவ்வுனு ரெக்கய விரிச்சுகிட்டு முறையுது .

போலிஸ்காரங்களே அசந்து போயிட்டாங்க .

நீதிபதி அப்பத்தான் சொன்னாரு " யோவ் நான் தஞ்சாவூர்க்காரனயய்யா , அந்தப்பகுதியில சாவக்கட்டுல எங்கப்பா ரொம்பப்பேமஸு , நானும் நல்லா வெளையாடுவேன் , அதானால போண்டாக்கோழியிலாம் காட்டி ஏமாத்தாதீங்க "
அப்படின்னு சொல்லி நம்மாளுங்கள உட்டுட்டாங்க


இது மாதிரி பல நிகழ்வுகள அவரு தொடர்ச்சியா சொல்ல ஆரம்பிக்க நம்ம காது தாங்காது சாமின்னுட்டு எஸ்கேப் !
............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக