வெள்ளி, அக்டோபர் 23, 2015

மந்திரி தந்திரி – 27 !விகடன் டீம் எம்.எஸ்.எம்.ஆனந்தன்


முதலில் ஒரு ஃப்ளாஷ்பேக் நினைவு…
எம்.ஜி.ஆர் தலைமையில் அ.தி.மு.க ஆட்சி நடந்துகொண்டிருந்த 80-களின் இறுதி. திருப்பூரில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தார் சுகாதாரத் துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் அ.தி.மு.க-வினருக்கும் இடையே மோதல் வெடித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்க’த்து இளைஞர்களும் கோதாவில் குதித்தனர். அதில் ஒருவர், பொதுக்கூட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க-வின் கொடிக் கம்பங்களை ஆக்ரோஷமாக வெட்டி வீழ்த்தினார். பிறகு அ.தி.மு.க-வினர் புகார் அளிக்க, அந்த வாலிபர் மீது வழக்கு பாய்ந்தது.
இப்போது ஒரு சமீப நிகழ்வு…
இப்போதைய அ.தி.மு.க அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ஓர் அமைச்சர் மீது எகிடுதகிடாகப் புகார் தெரிவித்தார் ஒரு பெண். அந்த அமைச்சர் தன்னிடம் இருந்த பணத்தையும் மோசடி செய்ததோடு, நம்பிக்கைத் துரோகமும் செய்துவிட்டதாக ஊடகங்களில் மன்றாடினார். முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டை முற்றுகையிட்டு அமைச்சருக்கு எதிராகக் குரல்கொடுத்தார். ம்ஹும்… எந்தப் பலனும் இல்லை. ‘அமைச்சர் பந்தா’வுடன் வலம்வந்துகொண்டிருக்கிறார் அந்தப் பெண்ணால் குற்றம்சாட்டப்பட்டவர்.
வாலிபராக கம்யூனிஸ்ட் கலகம்செய்து அ.தி.மு.க கொடிக்கம்பத்தை வெட்டியவரும், இப்போது பரபரப் புகார்களுக்குப் பின்னரும் அ.தி.மு.க-வில் அமைச்சராக வலம்வருபவரும் ஒருவரே… அவர்தான் வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்!
அரசியலில் பதவி கிடைப்பதும் அதைத் தக்க வைத்துக்கொள்வதும் பெரும் சூதாட்டத்துக்கு நிகரானது. ஆனால், ஆனந்தன் ஏதேதோ காய் நகர்த்தி அந்தச் சூதாட்டத்தில் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார். அது எப்படி?
காம்ரேட் டு கழகம்!
திருப்பூர், முருங்கப்பாளையம்தான் ஆனந்தனின் பூர்விகம். பாரம்பர்ய கம்யூனிஸ்ட் குடும்பம். சித்தாந்தம், சோஷலிசம் பேசும் குடும்பத்தில் வளர்ந்த ஆனந்தனும் ‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்க’த்தில் உறுப்பினராக இருந்ததில் ஆச்சர்யம் இல்லை. 10-ம் வகுப்புக்கு மேல் படிக்கப் பிடிக்கவில்லை. ஏதேதோ பல வேலைக்குப் பிறகு லாரி ஓட்டுநர் ஆனார். கோவை டு குஜராத் ரூட்டில் சரக்கு வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த கம்யூனிஸ்ட் கலகம் எல்லாம் அரங்கேறியது; வழக்கும் பாய்ந்தது. அதோடு வேலையிலும் ஒரு பெரும் சிக்கல். அனைத்தையும் சமாளிக்க ஒரே உபாயமாக, ‘ஆளும் கட்சியில் சேர்ந்துவிட்டால் வழக்கு பிரச்னையில் இருந்து தப்பிவிடலாம்’ எனத் தீர்மானித்து ‘தோழர்’ அவதாரம் கலைத்து ‘ரத்தத்தின் ரத்தம்’ ஆனார்! 
சிவப்புச் சட்டை போட்டு ‘ஜிந்தாபாத்’ முழக்கம் போட்டவர், அ.தி.மு.க-வுக்குத் தாவிய பிறகு நெற்றியில் குங்குமப்பொட்டு, மணிக்கட்டில் காவிக்கயிறு என பக்திமான் ஆனார். கட்சியிலேயே ஐக்கியமாகிவிட்டதால் அ.தி.மு.க கொடிக் கம்பங்களை வெட்டி வீழ்த்திய வழக்கும் வாபஸ் ஆனது.
ஆனந்தன் கட்சியில் சேர்ந்த சமயம் திருப்பூர் பகுதி அ.தி.மு.க-வில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது ‘திருப்பூர்’ சிவசாமி. அதனால் சிவசாமியின் நம்பிக்கைக்கு உரியவராகச் செயல்பட்டார் ஆனந்தன். 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ-வாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசாமி,  தன்னைத் தாண்டி தொகுதிக்குள் யாருக்கும் செல்வாக்கு வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆனந்தனை வளர்த்தெடுத்தார். நகரச் செயலாளர் பதவி கிடைக்கச் செய்தார். தன் நிழலிலேயே ஆனந்தனுக்கு அரசியல் பாடத்தைக் கற்றுக்கொடுத்தார். ஆனால், திடீரென சிவசாமி மீது அ.தி.மு.க தலைமைக்கு அதிருப்தி ஏற்பட, அதை எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனந்தன், துரிதமாக வியூகம் வகுத்தார். சிவசாமி வகித்த ‘மாவட்டச் செயலாளர்’ பதவிக்கு குறிவைத்தவர், சிவசாமியிடம் கற்றுக்கொண்ட வித்தையை அவர் மீதே பிரயோகித்தார். ஆங்காங்கு காய் நகர்த்தி, சிவசாமியை வீழ்த்தி, மாவட்டச் செயலாளர் ஆனார். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வென்றார். மீண்டும் சில காய் நகர்த்தல்கள்.
சில மாதங்களிலேயே அமைச்சரவையில் இடம்பிடித்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆனார். தன் சகோதரி மகனின் காதல் விவகாரம், உட்கட்சிப் பூசல், ஒரு பெண் சுமத்திய ‘விவகாரமான’ புகார் எல்லாம் சேர்ந்து, ஆனந்தனின் அமைச்சர் பதவியைப் பறித்தன; தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பதவியும் பறிபோகும் என்ற நிலை. மீண்டும் வியூகங்கள் வகுத்தார். மா.செ பதவியைத் தக்கவைத்துக் கொண்டதோடு, ‘பவர் சென்டர்’களைப் பிடித்து மூன்றே மாதத்தில் மீண்டும் அமைச்சர் ஆனார் ஆனந்தன். இந்த அளவுக்கு ஆர்வம், சிரத்தையை அமைச்சர் துறை செயல்பாடுகளில் காட்டியிருக்கிறாரா? 
துறையில் சாதித்தது என்ன?
ஒருகாலத்தில் சென்னை மத்திய கைலாஸம் வரை 5,000 ஹெக்டேர் பரப்பளவுக்குப் பரந்து விரிந்திருந்தது பள்ளிக்கரணை சதுப்பு நிலம். ஆனால், இப்போது பெருங்குடிக்கு அருகில் வெறும் 500 ஹெக்டேர் பரப்பளவுக்குச் சுருங்கிவிட்டது. அரசின் அலட்சியம், அரசியல்வாதிகளின் ஆசீர்வாதம், ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் சதுப்பு நிலப் பகுதியைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிகொடுத்துக்கொண்டே இருக்கிறோம். அரசே இங்கே குப்பைகளைக் கொட்டி சதுப்பு நிலத்தைச் சமாதி ஆக்குவதும் நடக்கிறது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், குப்பைகளைக் கொட்டுவது நின்றபாடு இல்லை. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இன்றைக்கும் பறவைகளின் சொர்க்கபுரி. ஆனால், அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. ‘ஒருகாலத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 80 சதுர கிலோமீட்டர் நீளமும், 3 கிலோமீட்டர் அகலமும் கொண்டதாக ஒருகாலத்தில் இருந்தது. இங்கே ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்தன. இந்த நிலத்தை பலர் ஆக்கிரமித்துவிட்டதால் சதுப்பு நிலத்தின் அளவு குறைந்துவிட்டது’ என வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் சொன்னார். அதோடு, ‘பள்ளிக்கரணை சதுப்பு நிலம் முதலில் எவ்வளவு சுற்றளவு கொண்டதாக இருந்தது, இப்போது நிலத்தின் அளவு எவ்வளவு, நிலத்தை யார் எல்லாம் ஆக்கிரமித்திருக்கிறார்கள், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, இந்த நிலத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளைக் கொட்டுகிறதா?’ என, சரமாரியாகப் பல கேள்விகளைக் கேட்டு, அதற்கு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டார். வனத் துறையின் சார்பில் அளிக்கப்பட்ட பதில், ‘பள்ளிக்கரணையில் 2 ஆயிரத்து 380 ஏக்கர் சதுப்பு நிலம் இருக்கிறது. இதில், சுமார் 25 ஏக்கர் நிலத்தை 682 பேர் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அவர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்திருக்கிறோம். இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பலர் பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள்’ என நீண்டது பதில். குப்பைகள் கொட்டுவது தொடர்பான கேள்விக்கு ‘மாநகராட்சிதான் பதில் அளிக்க வேண்டும்’ எனச் சொல்லி மழுப்பியது. அந்தப் பதிலில் அதிருப்தியான நீதிபதி, ‘நான் எழுப்பிய கேள்விகளுக்கு முழுமையாகப் பதில் அளிக்கவில்லை. நிலம் தொடர்பான முழுமையான விவரங்கள் அறிக்கையில் இல்லை’ என்றார். அதற்கு எல்லாம் கவலைப்படவில்லை வனத் துறை.
சூழல்… சுழல்..!
ஒருபக்கம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பறிகொடுத்துவிட்டு, இன்னொரு பக்கம் ‘சூழல் சுற்றுலா’வை ஊக்குவிக்கப்போவதாகத் திட்டமிடும் அமைச்சர் ஆனந்தனின் அக்கறையை என்னவென மெச்ச?! இயற்கையைக் கண்டுகளிக்க பல்வேறு வனப் பகுதிகளைத் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. தொட்டபெட்டா போன்ற சிகரங்களும் கடலோரச் சமவெளிகள் சிலவும் வனங்களில்தான் அமைந்திருக்கின்றன. சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள், முத்துப்பேட்டை, பிச்சாவரம் போன்ற சதுப்பு நிலப் பகுதிகள் மற்றும் கடலோர மணற்குன்றுகள் உள்ளிட்ட வனப் பகுதிகளை, இயற்கையின் அடிப்படையில் ‘சூழல் சுற்றுலா’வாக மாற்றுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆனால், கண்டறிவதோடு நிறுத்திக்கொண்டார்கள். அவற்றை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ், 25 சூழல் சுற்றுலாத் தலங்கள் தேர்வுசெய்யப்பட்டன. ஆனால், மேற்கொண்டு பணிகள் எதுவும் முடுக்கிவிடப்பட்டதாகத் தெரியவில்லை!
அல்லாடும் வன உயிரினங்கள்!
நகரமயமாதல், மக்கள்தொகைப் பெருக்கம்… போன்ற காரணங்களால் வன உயிரினங்களின் வாழ்விடங்கள் சுருங்கிவருகின்றன. இதனால் அந்த இடங்களைவிட்டு உயிரினங்கள் மனித வாழ்விடங்களுக்கு இடம்பெயர்கின்றன. பயிர்களும் கால்நடைகளும் பாதிக்கப்படுவதோடு, மனித உயிர் இழப்புகளும் நேர்கின்றன. இப்படி எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் உரிய தடுப்புகள் அமைத்தல், தீவன வளங்களைப் பெருக்குதல், வனங்களில் குடிநீர் வசதி செய்து தருதல் அவசியம். ஆனால், அதைச் செய்யாததால் உயிர் இழப்புகள் தொடர்கதையாக இருக்கின்றன. வன எல்லைகளை ஒட்டி சூரிய மின்வேலி மற்றும் யானை புக முடியாத அகழி போன்ற தடுப்புகள் அமைக்கும் திட்டம் போன்றவை இன்னும் முழுமையடையாமல்தான் இருக்கின்றன. யானைகள் தங்களது உணவு மற்றும் வாழ்வாதாரத் தேவைகளைத் தேடி இடப்பெயர்ச்சி மேற்கொள்ள ஏதுவாக, அவற்றுக்கு உரிய 13 வழித்தடங்களை வன உயிரின நிபுணர் குழு கண்டறிந்திருக்கிறது. அதோடு சரி. அவற்றை வரைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் எதுவும் துரிதப்படுத்தப்படவில்லை!
களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் போன்ற நான்கு புலிகள் காப்பகங்கள், ஐந்து தேசியப் பூங்காக்கள், 15 வன உயிரினச் சரணாலயங்கள், 14 பறவைகள் சரணாலயங்கள்… என 22,877 சதுர கிலோமீட்டர் தூரத்துக்குப் பரந்து விரிந்திருக்கிறது தமிழ்நாட்டின் வனப் பரப்பு. தமிழ்நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் இது 17.59 சதவிகிதம். சந்தனமரம், யானை தந்தம், செம்மரக் கடத்தல்கள் தொடங்கி, வனவிலங்குகளை வேட்டையாடுதல் வரை வனத் துறை கொள்ளை பற்றிய செய்திகள், தொடர்ந்து வட்டமடிக்கின்றன. ஆனால், இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பெரிய அளவில் இல்லை. ஆந்திர வனப் பகுதிக்குள் மட்டும் அல்ல… தமிழ்நாட்டின் சேலம், திருவண்ணாமலை போன்ற பகுதிகளிலும் செம்மரக் கடத்தல் நடக்கின்றன என்பது மறுக்க முடியாத நிகழ்வுகள்!
பட்டர்ஃப்ளை பார்க் நாடகம்!
திருச்சியின் முக்கியமான சுற்றுலாத் தலம் முக்கொம்பு. இதைத் தவிர சுற்றுலாத் தலம் என சொல்லிக்கொள்ள வேறு எதுவுமே திருச்சி பகுதியில் இல்லை. ஜெயலலிதா ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றபோது, ‘சினிமா தியேட்டருடன்கூடிய வண்ணத்துப்பூச்சி பூங்கா ஸ்ரீரங்கம் தொகுதியில் 12 கோடி ரூபாயில் அமைக்கப்படும்’ என அறிவித்தார். ஸ்ரீரங்கம் – மேலூர் காவிரி ஆற்றின் கரையின் மேல் அணைக்கட்டுக் காப்பு வனப் பகுதியில் வனத் துறைக்குச் சொந்தமான 25 ஏக்கர் பரப்பில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்க  அடிக்கல்லும் நாட்டினார் ஜெயலலிதா. அந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவில் இரண்டு ஏக்கரில் நட்சத்திர வனம், செயற்கைக் குளங்கள், நீர்வீழ்ச்சிகள், மூங்கில் குடில்கள், மலர்வனம், வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள திரையரங்கம், செயற்கைப் புல்வெளிகள், குழந்தைகள் விளையாட தனி இடம், மலைவாழ் மக்கள் வசிக்கும் மாதிரி குடிசைகள், செயற்கை நீரூற்று, பார்வையாளர்கள் சுற்றிவர நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபாதை, நீர்த் தாவரங்கள் கொண்ட குட்டைகள், சிறு மரப் பாலங்கள், வண்ணத்துப்பூச்சிகளின் மாதிரி உருவங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டன. அதோடு வண்ணத்துப் பூச்சிகள் வளர்ச்சிக்கு உதவும் தாவரங்களும் பல இடங்களில் இருந்து இந்தப் பூங்காவில் நடப்பட்டன.
அழிந்துவரும் வண்ணத்துப்பூச்சி இனத்தைப் பாதுகாக்கும் வகையில், ஆசியாவிலேயே மிகப் பெரிய வண்ணத்துப்பூச்சிப் பூங்காவாக உருவாக்கும் முனைப்பில் மூன்று ஆண்டுகளாகப் பணிகள் நடந்துவந்தன. அதிகாரிகள் ஆய்வு, அமைச்சர்கள் விசிட் எனத் தடபுடல் மேற்பார்வையும் அரங்கேறியது. ஆனால், பூங்கா திறந்தபாடு இல்லை. ‘அடுத்த மாதம் திறக்கப்படும்’ என்பதையே ஆறு மாதங்களுக்கும் மேலாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இடையில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ பதவி பறிப்பு, சிறை அடைப்பு,  மேல் முறையீடு வழக்கு, விடுதலை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்… என, பரபரப்பு களைகட்டியதில், ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தை மறந்தேவிட்டார். ‘நல்லதாப்போச்சு’ என வனத் துறை அதிகாரிகளும் ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சிப் பூங்காவை மறந்துவிட்டார்கள்.  பூங்கா அமைக்கச் செலவான மக்களின் கோடானுகோடி ரூபாய் வரிப் பணமும் பாழ்!
சரி, இதை எல்லாம் வனத் துறை அமைச்சர் ஆனந்தன் கண்டுகொள்ள மாட்டாரா? அவருக்குத்தான் ‘அம்மா’வைச் சுற்றி பட்டாம்பூச்சியாகப் படபடக்கவே நேரம் சரியாக இருக்கிறது. இதில், பட்டாம்பூச்சிப் பூங்காவாது… தோட்டமாவது!

‘அம்மா’வுக்கும் மேலே!
அ.தி.மு.க-வில் அனைவருக்கும் ‘அம்மா’தான் தெய்வம். ஆனால், ஆனந்தனுக்கு அந்தத் தெய்வத்தைவிடவும் அதிமுக்கிய மானவர்… லதா. மாவட்ட மகளிர் அணி பொறுப்பில் இருக்கும் லதாதான், ஆனந்தனுக்கு மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ ஸீட், அமைச்சர்… என பதவிகள் கிடைக்க காரணமாக இருந்தவராம். மன்னார்குடியின் கொங்கு மண்டலப் பொறுப்பாளராக ஆதிக்கம் செலுத்திவந்த ராவணனை, ஆனந்தனுக்கு அறிமுகப்படுத்திவைத்தவரும் லதாதானாம். ஆனந்தன் எல்லா முடிவுகளையும் லதாவிடம் கேட்டுத்தான் எடுப்பார். மன்னார்குடி ஆட்களை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கிய சமயம், லதா மீதும் நடவடிக்கை பாய்ந்தது. அப்போதும்கூட அவரோடு ரகசிய நட்பு பாராட்டினாராம் ஆனந்தன்! 

காதல்… மோதல்… கலாட்டா!
தன் அக்கா மகன் காதல் விவகாரத்தை ஆனந்தன் கையாண்ட விதம், அவருக்கும் பெரும் சிக்கலை உண்டாக்கியது. மர நிறுவனம் ஒன்றை நடத்திவந்த  ஆனந்தனின் சகோதரி மகன் கோகுல், அந்த நிறுவனத்தில் பணியாற்றிய வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்தார். ‘வேற்று மதப் பெண்ணை எப்படிக் காதலிக்கலாம்…’ என கோகுலை ஆனந்தன் கண்டிக்க, காதல் ஜோடி தப்பி ஓட, ஆனந்தன் தரப்பினர் அவர்களை இடைவிடாமல் துரத்த, மிரட்சியில் விஷம் குடித்தனர் காதலர்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில், கோகுலை மட்டும் அழைத்துப்போனது ஆனந்தன் தரப்பு. காதல் ஜோடி கேரளாவில் திருமணம் செய்துகொண்ட ஆதாரங்களை அதட்டி மிரட்டிப் பிடுங்கிக்கொண்டார்களாம். பெண் தரப்பினர் போலீஸிடம் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இடையில் கோகுலுக்கு ரகசியமாகத்  திருமணத்தை நடத்தி முடித்ததாகத் தகவல் தந்தியடிக்க, உயர் நீதிமன்றப் படியேறியது வழக்கு. ‘ஆனந்தனின் அமைச்சர் பதவியைப் பறிக்க இந்த காதல் பஞ்சாயத்தும் ஒரு காரணம்’ என்கிறார்கள் கட்சி வட்டாரத்தில்! 

பெண் பாவம் பொல்லாதது..!
ஜெயலலிதா முன்னிலையில் மாற்றுக் கட்சியினரை அ.தி.மு.க-வில் சேர்த்தார் ஆனந்தன். அந்த நிகழ்வில், ஒரு பெண்ணுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. ஜெயலலிதாவின் வலதுப் பக்கத்தில் அமைச்சர் ஆனந்தனும், இடதுப் பக்கத்தில் அந்தப் பெண்ணும் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர். ஆனால், அந்தப் பெண்தான் பின்னர் ஆனந்தன் மீது அதிரடிப் புகார்கள் கிளப்பினார். அவர்… ‘திருப்பூர்’ ஜெயமணி.
கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழும் ஜெயமணி, திருப்பூரில் ‘பனியன்’ நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். ஜெயலலிதா படம்போட்ட பனியன் ஆர்டர்களை ஜெயமணிக்கு அமைச்சர் கொடுத்தார். அப்படியே இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் நடந்தது ஜெயமணி வார்த்தைகளிலேயே… ‘சென்னையில் கார்மென்ட் ஷோரூம் திறக்க, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஒப்பந்த அடிப்படையில் ஒதுக்கித்தருவதாகச் சொல்லி, ஒரு கோடி ரூபாயை என்னிடம் இருந்து வாங்கினார். ஆனால், பதிலுக்கு எதையும் அவர் செய்யவில்லை. இந்த நிலையில், ‘நம்மைப் பற்றி கார்டனுக்கு நிறையப் புகார்கள் போயிருக்கின்றன. அவற்றை ஒன்றும் இல்லாமல் ஆக்கவேண்டும் என்றால், கார்டனில் ஒருவரை நீ அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்’ என்றார். நான் அதற்கு மறுக்கவும், என்னை மிரட்டத் தொடங்கினார். ஒருகட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற என்னைக் காப்பாற்றி, திருப்பூருக்கு அனுப்பிவைத்தார். ‘என் பணத்தையாவது திருப்பிக் கொடுங்கள்’ எனக் கேட்டேன். அதையும் தரவில்லை. அவர் என்னவெல்லாம் செய்தார், செய்துகொண்டிருக்கிறார் என்பதற்கு எல்லாம் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதை வைத்து நான் என்ன செய்வேன் என அவருக்குத் தெரியாது’ எனப் பொருமுகிறார் ஜெயமணி.
ஜெயமணி விவகாரம் பரபரப்பான நிலையில் சிறிது காலம் கடந்து அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார் ஆனந்தன். ஆனால், அடுத்த மூன்றே மாதங்களில் ஆனந்தன் மீண்டும் அமைச்சரானார். ஆனந்தன் மீண்டும் அமைச்சர் ஆகவிருக்கிறார் எனச் செய்தி பரவவும், சென்னைக்கு வந்த ஜெயமணி போயஸ் கார்டன் ஏரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவரையும் அவரது குடும்பத்தினரையும் குண்டுகட்டாகத் தூக்கி காரில் ஏற்றி, அங்கு இருந்து அப்புறப்படுத்தியது போலீஸ்!

எதிர்த்தால்…
தன்னை வளர்த்துவிட்ட திருப்பூர் சிவசாமியை ஓரங்கட்டியதோடு, மீண்டும் அவர் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் ஆனந்தன் ஏக உஷார். மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து சிவசாமி நீக்கப்பட்ட பிறகு, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விரட்டியடித்து தன் இருப்பை உறுதிப்படுத்திக்கொண்டார். சிவசாமி மட்டும் அல்ல வேறு யாருமே தனக்குக் கீழே முளைத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இத்தனைக்கும் ஒவ்வொரு மாதமும் ஆனந்தன் மீது நூற்றுக்கணக்கில் புகார்கள் குவியுமாம். ஆனாலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது. தன் மீது அதிகப் புகார்களைத் தட்டிவிட்ட திருப்பூர் மாவட்ட வழக்குரைஞர் அணி இணைச் செயலாளர் மணிவண்ணனை, கட்சியைவிட்டே தனியாகக் கட்டம் கட்டிவிட்டார் ஆனந்தன். இதனால் உள்ளூரில் ஆனந்தனுக்கு எதிராக யாரும் முண்டா தட்டுவது இல்லை. மாவட்டச் செயலாளர் தேர்தலில் ஆனந்தனை எதிர்த்து மனு செய்தவர்கள், இரண்டே பேர் என்பது அதற்கு ஓர் உதாரணம்!

உறவுகளுக்கே பதவிகள்!
மனைவி லட்சுமிக்கு கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் இயக்குநர் பதவி, 23 வயதே ஆன அக்கா மகன் கோகுலுக்கு, ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய திருப்பூர் தொடக்க வேளாண் விற்பனை சங்கத் தலைவர் பதவி, அமைச்சரின் உறவினரான தி.மு.க கிளைச் செயலாளர் மனைவி வசந்திக்கு திருப்பூர் கூட்டுறவு வசதி சங்கத் தலைவர் பதவி, அவரது மகன் பார்த்திபனுக்கு உள்ளூர் திட்டக்குழு உறுப்பினர் பதவி என ஆனந்தனின் உறவினர்களுக்கே ஒட்டுமொத்த கோட்டாவும் ஒதுக்கப்படுகிறது எனப் பொருமுகிறார்கள் ர.ர-க்கள்! 

திருப்பூரில் மல்லுக்கட்டு!
திருப்பூரில் ஆனந்தனுக்குக் கடும்போட்டி கொடுப்பவர் திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி. மாநகராட்சியில் தன் அதிகாரத்தைப் பாய்ச்ச, துணை மேயராக தன் ஆதரவாளர் குணசேகரனைக் கொண்டுவந்தார் ஆனந்தன். மாநகராட்சியில் தலையிட முயன்ற ஆனந்தனை நேரடியாக எதிர்த்தார் விசாலாட்சி. இதனால் இருவருக்கும் இடையே  தொடர் முஓவியங்கள்: ஹாசிப்கான், கார்த்திகேயன் மேடிட்டல் மோதல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக