புதன், ஏப்ரல் 03, 2013

சிம்மம்(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

            சிம்ம ராசி அன்பர்களே!

இதுவரை ராசிக்கு 10-ல் இருந்த குரு இப்போது 11-ஆம் இடமான மிதுனத்திற்கு வந்திருக்கிறார்.

பொதுவாகவே குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆகிய இடங்கள்தான் முழு யோகம் தரக்கூடிய சுப ஸ்தானங்கள்.

குருப்பெயர்ச்சியினால் ராஜயோகத்தையும் செல்வாக்கையும் அடையப் போகும் அதிர்ஷ்டசாலிகள் ரிஷப ராசி, சிம்ம ராசி, துலா ராசி, தனுசு ராசி, கும்ப ராசி ஆகிய ஐந்து ராசிக்காரர்கள்தான். அந்த அதிர்ஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவர்.

அது மட்டுமல்ல; 3-ல் ராகுவும் சனியும் நிற்பதும் ஒரு பலம். 3, 6, 11-ஆம் இடங்கள் பாவ கிரகங்களுக்கு யோகம் தரும் இடமாகும். ராகுவையும் சனியையும் குரு பார்ப்பதால்- குருவுக்கும் ராகு, சனிக்கும் சம்பந்தம் ஏற்படுகிறது.

செல்வாக்கு படைத்த கட்சிகள் இரண்டும் தேர்தல் கூட்டணி அமைத்து ஜெயிப்பது மாதிரி.

11-ஆம் இடம் வெற்றி ஸ்தானம்; லாப ஸ்தானம். அங்கு குரு நிற்கிறார். அவருக்கு திரிகோண ஸ்தானத்தில் சனியும் ராகுவும் நின்று குருவின் பார்வையைப் பெறுகிறார்கள். சிம்ம ராசிக்கு 3-ல் தைரிய ஸ்தானத்தில் சனியும் ராகுவும் இருப்பது- உங்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் தரும். 11-ஆம் இடத்தில் உள்ள குரு, சனி- ராகுவைப் பார்ப்பதால், 11-ஆம் இடத்திற்கு ராகு, சனி சம்பந்தம் ஏற்படுவதாக அர்த்தம். அதனால் எங்கும் வெற்றி எதிலும் வெற்றிதான். இந்த வெற்றி- தோல்வி இருக்கிறதே... திறமையை வைத்தோ சாமர்த்தியத்தை வைத்தோ வருவதில்லை. நேரம் காலத்தை வைத்துதான் வெற்றி- தோல்வி ஏற்படும். இன்றைய நாகரிக அரசியல் உலகில் காசு பணம் நிறைய இருப்பவர்களுக்கும் வெற்றி வந்து சேரும். கடந்த எம்.பி தேர்தலில் ஒரு வேட்பாளர் உண்மையில் தோற்றுப் போனாலும், முடிவில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு மந்திரியாகவும் ஆகிவிட்டார். பலகோடி புரண்டதாகப் பேசிக் கொண்டார்கள். இப்படி பல உதாரணங்கள் உண்டு. அதுமட்டுமல்ல; யோகக்காரர் களுக்கு ஆண்டவன் காவல்காரன் என்பது மறுக்கமுடியாத உண்மை. யோகக்காரரோடு சேர்ந்தால் யோகமில்லாதவனுக்கும் யோகம் உண்டாகிவிடும். அதற்கு உதாரணம்- கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆளும் கட்சியையும் எதிர்கட்சியையும் அடிக்கடி விமர்சித்த ஒரு நடிகர் தலைவரே எதிர்கட்சியோடு சேர்ந்து வெற்றிபெற்று, எதிர் கட்சியாய் இருந்தவர்கள் ஆளும் கட்சியாய் மாறவும், நடிகரும் எதிர் கட்சி அந்தஸ்து பெற்றவராகவும் மாறிவிட்டார். பிறகு ஆளும் கட்சிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஊராட்சி தேர்தலில் ஒதுக்கப்பட்டார். ஆக, தெற்கே வீசுகிற காற்று வடக்கேயும் மாறி வீசத்தான் செய்யும். நேரம் காலத்தை மிஞ்சி எதுவுமே இல்லை. அந்த யோகம் யாருக்கும் எப்போதும் சாஸ்வதம் இல்லை.

மிதுன ராசியில் நிற்கும் குரு 5-ஆம் பார்வையாக 3-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 5-ஆம் இடத்தையும்; 9-ஆம் பார்வையாக 7-ஆம் இடத்தையும் பார்க்கிறார். 

3-ஆம் இடம் சகோதர- சகாய- தைர்ய- வீர்ய ஸ்தானம்!

சகோதர வகையில் நன்மையும் அனுகூலமும் அடையலாம். "தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்று சொன்னமாதிரி, பொது எதிரியைப் போராடி ஜெயிக்க சிலருக்கு பங்காளி துணையும் ஆதரவாக அமையும். உங்களுக்கு தைரியமும் வீரமும் உண்டாகும். இந்தக் காலத்தில் ஒன்று பணபலம் இருக்க வேண்டும். அல்லது படைபலம் இருக்கவேண்டும். கஞ்சி ஊற்ற ஆள் இல்லாவிட்டாலும் கச்சை கட்ட ஆள் இருந்தால் எதிரியோடு மோதி ஜெயிக்க முடியும். இந்த பாலிஸிப்படிதான்- கடந்த தேர்தலில் தொண்டர்கள் இல்லாத வெறும் லட்டர்பேடு கட்சிகள் எல்லாம், வலுவான கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு பதவிகளைப் பெற முடிந்தது.

தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் உடன் பிறந்தவர்களினால் தொல்லைகளும் உருவாகும். உடன்பிறப்புகளுக்கு தந்தை ஸ்தானத்தில் நின்று கல்யாணம், காட்சி, தொழில், வேலைவாய்ப்பு வசதிகள் எல்லாம் சொந்தச் செலவு செய்து நிறைவேற்றுவீர்கள். அவர்கள் எல்லா சௌகர்யங்களையும் அடைந்த பிறகு "டாட்டா' காட்டிவிட்டுப் போய் விடுவார்கள். அவர்களுக்கு மனதில் கொஞ்சம் நஞ்சம் பாசம் பயம் இருந்தாலும், அவர்களுக்கு வாழ்க்கைத் துணையாக வந்து வாய்த்த வர்கள் அதைக் கெடுத்து வாய்ப்பூட்டு போட்டு விடுவார்கள்.

நீண்டகாலமாக தடைப்பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு யோகம் போன்ற காரியங்கள் யாவும் இனிமேல் கைகூடும். மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை எல்லாம் திருப்தியாக நிறைவேற்ற முடியும். அரசு உத்தியோகத்தில் பெரும்பதவிகள் வகித்து மிகவும் "ஹானஸ்ட்டாக' செயல்பட்டு, குடியிருக்க ஒன்றரை சென்ட் இடம்கூட வாங்க முடியாமல் ஏங்கி கவலைப்படுகிறவர்களுக்கு, இந்த குருப்பெயர்ச்சியில் எப்படியோ ஒருவகையில் அதிர்ஷ்டவசமாக சொந்த வீடு, இடம், பிளாட் அமையும்.

குரு 7-ஆம் பார்வையாக தன் ராசியான தனுசு ராசியைப் பார்க்கிறார். "பாவகாதிபதி பாவகத்தைப் பார்க்க பாவ புஷ்டி' என்பது பலதீபிகை யின் கருத்து. இதுவரை தடைப்பட்ட திருமணம் இனி செயல்படும். மணமானவர்களுக்கு மனைவியால் யோகமும் வருமானமும் வரும். ஏற்கெனவே மனைவி கொண்டுவந்த சீர் சீதனம், நகைகளையெல்லாம் விற்று செலவு செய்தவர்கள், இக்காலம் குருபார்வை பலத்தால் இழந்த பொருள்களை அதிர்ஷ்டவசமாகத் திரும்ப அடைந்து மனைவியையும் மாமனார் வீட்டாரையும் சந்தோஷப்படுத்தலாம். இதுவரை மனைவியின் ஆரோக்கியத்துக்காக ஆயிரக்கணக்கில் செலவுசெய்து நைந்து நொந்து போனவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல்- மனைவிக்கு முழு ஆரோக்கியம் உண்டாகும்.

தசாபுக்திகளை அனுசரித்து ஒருசிலர் வாரிசுக்காக மறுமணம் செய்து கொள்ளும் யோகம் உண்டு. தாரம் இழந்து ஏற்படவும் விதியுண்டு. ஆந்திராவிலும் தமிழகத்திலும் இரண்டு பெரும் அரசியல் வாதிகள், வயதான காலத்தில் யோகத்திற்காக திருமணம் செய்துகொண்டார்கள். அதை பரிகார திருமணம் என்று சொல்லிக் கொண்டார்கள். 

9-ஆம் இடத்தை குரு பார்ப்பதால், பூர்வ புண்ணிய பாக்கியம் நன்மையளிக்கும், உங்களுடைய தெய்வபக்தியும் பிரார்த்தனையும் நீங்கள் செய்த யாகமும் பூஜா பலனும் இதுபோன்ற நல்ல நேரத்தில் பலன்தரும். எதிரிகளிடமிருந்து உங்களைக் காப்பாற்றும். பொய் வழக்குகளைப் பொடிப் பொடியாக்கும்.

தர்மமிகு வாழ்வுதனை சூது கவ்வும்; ஆனாலும் முடிவில் தர்மமே வெல்லும்!

28-5-2013 முதல் 26-6-2013 வரை மிருகசீரிடத்தில் குரு சஞ்சாரம்.

மிருகசீரிடம் செவ்வாயின் நட்சத்திரம். சிம்ம ராசிக்கு செவ்வாய் ராஜயோகாதிபதி; 4, 9-க்குடையவர். இக்காலம் உங்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக அமையும். பூமி, வீடு, வாகனம் முதலியவற்றில் நன்மைகள் நடக்கும். தாயார், தன்சுகம், கல்வி முதலிய 4-ஆம் பாவம் சம்பந்தப்பட்ட பலன்கள் யாவும் நன்மையாக நடக்கும். 9-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். அங்கு கேது நிற்க ராகு பார்ப்பதால், ஆலய வழிபாடு, குலதெய்வ வழிபாடு, தெய்வ ஸ்தல ஆன்மிக யாத்திரைகள் எல்லாம் கைகூடும். தகப்பனார் வகையில் உதவி, பிதுரார்ஜித சொத்துகளினால் நன்மை உண்டாகும்.

26-6-2013 முதல் 28-8-2013 வரை திருவாதிரையில் குரு சஞ்சாரம்.

திருவாதிரை ராகுவின் நட்சத்திரம். ராகு 3-ல் நிற்கிறார். குருவின் பார்வையைப் பெறுகிறார். இது உங்களுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தரும். துணிவோடு செயலாற்றி சாதனைகள் படைப்பீர்கள். திருவாதிரையில் குரு சஞ்சாரம் இரண்டு கட்டமாக ஏற்படும். முதற்கட்டம்: 2013 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை; பிறகு வக்ரகதியாக 26-1-2014 முதல் 13-4-2014 வரை சஞ்சரிப்பார். இக்காலம் வக்ரத்தில் உக்ர பலம் என்பதால் நன்மைகளே நடக்கும். யோகங்களும் சிறப்பாக இருக்கும். கும்பகோணமருகில் திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும். அங்கு சென்று ராகுகால பூஜையில் கலந்து கொள்ளலாம்.  

28-8-2013 முதல் 26-1-2014 வரை (முதல் கட்டம்), அடுத்து 13-4-2014 முதல் 13-6-2014 வரை (இரண்டாம் கட்டம்) புனர்பூசம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்.

புனர்பூசம் குருவின் நட்சத்திரம். குரு சிம்ம ராசிக்கு 5, 8-க்குடையவர்; 11-ல் இருக்கிறார். 8-ஆம் இடம் 2, 9, 11-க்குடையவரோடு சம்பந்தப்படும்போது அதிர்ஷ்ட ஸ்தானமாக மாறும். ஆகவே இக்காலம் உங்களுக்கு எதிர்பாராத லாபங்களும் நன்மைகளும் அதிர்ஷ்டங்களும் வந்துசேரும். குருவருளும் திருவருளும் பரிபூரண மாகக் கிடைக்கும். மேற்படி யோகமும் அதிர்ஷ்டமும் ஏமாற்ற மில்லாமல் வந்தடைய திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார் கோவில் சென்று (அறந்தாங்கி வழி) வழிபட வேண்டும். அங்கு சுவாமிக்கு லிங்கத் திருமேனி இல்லை. வெறும் பீடமாகத்தான் இருக்கும். நால்வரில் மாணிக்க வாசகருக்கு அந்த எல்லையில்தான் சிவபெருமானால் குருந்தமரத்தடியில் குரு உபதேசம் கிடைக்கப் பெற்றது. மூல ஸ்தான ஆத்மநாதர் அருவ நிலையில் உள்ளார். 

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

இக்காலம் ஜாதகரீதியாக யோகமான தசாபுக்திகள் நடந்தால், குருவின் அஸ்தமனம் சில சலனங்களையும் சஞ்சலங்களையும் ஏற்படுத்தலாம். நூலிழையில் வெற்றி வாய்ப்புகள் கை தவறிப் போகலாம். லாட்டரி டிக்கெட்டில் பம்பர் பரிசில் ஒரு நம்பர் வித்தியாசத்தில் ஏமாற்றமடைவதுபோல சில சம்பவங்கள் நடக்கலாம். ஆகவே நிதானமாக- தைரியமாகச் செயல்படவும். குரு தசையோ குரு புக்தியோ நடக்குமானால் சோதனைகளும் வேதனைகளும் அதிகமாக நடக்கும். மயிலாடுதுறையருகில் வள்ளலார் கோவில் என்னும் பகுதியில் உள்ள சிவாலயத்தில் மேதா தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. நந்திவாகனத்தின்மேல் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கிறார். வியாழக்கிழமை அங்கு சென்று வழிபடவும்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

இக்காலம் 11-ஆம் இடத்து குரு எல்லா வகையிலும் உங்களுக்கு வெற்றியையும் லாபத்தையும் மேன்மையையும் தருவார். அதனால் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற மாதிரி பெரிய திட்டங்களை எண்ணி செயல்படுத்துங்கள்.

மக நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி குருவருளும் திருவருளும் பரிபூரணமாகத் தரும். மக நட்சத்திரத்தின் அதிதேவதை விநாயகர். (மகம்- கேதுவின் நட்சத்திரம்). கும்பகோணம் மாசி மகக் குளத்தில் நீராடி ஈஸ்வரனையும், சுவாமிமலை போகும் பாதையில் உள்ள திருவலஞ்சுழியில் வெள்ளை வாரணப் பிள்ளையாரையும் வணங்கவும்.

பூர நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி தொழில் வளம், புதிய தொழில் முயற்சி, தனலாபம், கணவன்- மனைவிக்குள் இணக்கம் ஆகிய நன்மைகளைத் தரும். ஆண்களுக்குப் பெண்களாலும், பெண்களுக்கு ஆண்களாலும் அனுகூலம் உண்டாகும். திருச்சி அருகே ஸ்ரீரங்கம் சென்று வழிபடவும்.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி பதவி, பாராட்டு, செல்வாக்கு ஆகிய யோகங்களைத் தரும். சூரியனார் கோவில் சென்று வழிபடவும். (கும்பகோணமருகில் உள்ளது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக