புதன், ஏப்ரல் 03, 2013

கடகம்(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

            டக ராசி அன்பர்களே!

இதுவரை கடக ராசிக்கு 11-ல் இருந்த குரு இப்போது 12-ஆம் இடத்துக்கு மாறியிருக்கிறார். ஏற்கெனவே இருந்த 11-ஆம் இடம் மிக நல்ல இடம்தான். அதனோடு ஒப்பிடும்போது இப்போது மாறியுள்ள 12-ஆம் இடம் மோசமான இடம்தான். "வன்மையற்றிட இராவணன்முடி பன்னிரண்டினில் வீழ்ந்ததும்' என்பது பாடல். எனவே 12-ல் வந்துள்ள குரு உங்களுக்கு வீழ்ச்சியைத் தருமா? தோல்வியை ஏற்படுத்துமா? துன்பத்தைத் தருமா? துயரத்தைக் கொடுக்குமா? விரயத்தை உண்டாக்குமா என்றெல்லாம் யோசிக்கச் செய்யும். மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் 12-ஆம் இடத்து குரு நல்லது செய்யாது என்றுதான் தோன்றும். ஆனால் தீவிரமாக அலசி ஆராய்ச்சி செய்தால் அதன் ரகசியமும் உண்மையும் புலப்படும்.

குருவுக்கு எப்போதும் நின்ற இடத்துப் பலனைவிட அவர் பார்க்கும் இடத்துக்குத்தான் பலன் அதிகம். அதனால்தான் "குரு பார்க்க கோடி நன்மை' என்றார்கள். கடக ராசிக்கு குரு 6, 9-க்குடையவர். 6-க்குடையவர் 12-ல் மறைவது நன்மை. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் நன்மை. ஆனால் 9-க்குடையவர் 12-ல் மறைவது நல்லதல்ல!

9-க்குடையவர் 12-ல் மறைவதால் பிதுரார்ஜித சொத்துகள் விரயமாகலாம். வில்லங்கப்படலாம். அல்லது தகப்பனார் வகையில் விரயச் செலவுகள் ஏற்படலாம். தகப்பனாருக்கு இடமாற்றம் ஏற்படலாம். தகப்பனார் வகையில்- உடன்பிறந்தோர் வகையில் இழப்புகள், விரயங்கள் ஏற்படலாம். ஒரு அன்பர் தன் முன்னோர்கள் சொத்தை நல்ல லாபத்துக்கு விற்று அதற்கு பதில் வேறு ஒரு சொத்தை வாங்கினார். அப்படி வாங்கிய சொத்து மைனர் சொத்து என்றும்; வாங்கியதும் விற்றதும் செல்லாது என்றும் ஒருவர் கேஸ் போட்டார். பல வருடங்கள் கேஸ் நடந்தது. இதனூடே மைனர் மேஜராகிவிட்டார். அவருக்கு மேலும் கொஞ்சம் தொகையைக்  கொடுத்து அவரிடமும் கிரயப் பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டார். சிக்கல் தீர்ந்துவிட்டது. அதுமட்டுமல்ல; அன்று வாங்கிய சொத்தின் மதிப்பும் இரட்டிப்பு மடங்கு விலை ஏறிவிட்டது. இதுதான் 9-க்குடையவர் 12-ல் மறைந்த பலன்.

அதேநேரம் 6-க்குடைய குரு 6-ஆம் இடத்தையே பார்ப்பதால், 6-ஆம் இடம் வலுப்பெற்றது என்று அர்த்தம். மேலும் பாவாதிபதி பாவத்தை பார்ப்பதால் பாவபுஷ்டி என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதாவது எதிரி, போட்டி, கடன், விவகாரம் எல்லாம் வந்தது என்று அர்த்தம். ஆனால் முடிவில் ஜாதகருக்கு அனுகூலமாகிவிடும்.

இதையும் ஒரு உதாரணத்தோடு சொல்லலாம். ஒரு அன்பருக்கு பிதுரார்ஜித சொத்தில் பங்கு கிடைத்தது. அவர் மைத்துனர் தனது நிதி நிறுவனத்தில் அதை முதலீடு செய்யச் சொன்னார். அதிக வட்டி வருமென்று கூறியதால் அவருடைய பைனான்ஸ் கம்பெனியில் பணத்தை முதலீடு செய்தார். சில காலம் ஒழுங்காக வட்டி வந்தது. ஒரு நிலையில் நிதி நிறுவனத்தில் பிரச்சினை ஏற்பட்டு வட்டியும் வசூலாகவில்லை; அசலும் கிடைக்கவில்லை. தகப்பனார் வகை சொத்தில் கிடைத்த பங்கு மைத்துனர் பைனான்ஸ் கம்பெனியில் இழந்துவிட்டது. 6, 9-க்குடையவர் 12-ல் மறைந்து, 6-க்குடையவர் 6-ஆம் இடத்தையே பார்த்த பலன் இதுதான்!

ஆனால் குரு நின்ற இடத்தைவிட அவர் பார்வைக்குத்தான் பலம் அதிகம் அல்லவா?

அந்த விதிப்படி மிதுன குரு 5-ஆம் பார்வையாக கடக ராசிக்கு 4-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 6-ஆம் இடத்தையும், 9-ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தையும் பார்க்கிறார். இப்படி குரு பார்க்கும் இடங்களில் 4-ஆம் இடத்துப் பார்வை மட்டும் நல்லதாகக் கணக்கிட முடியும். ஆனால் 6, 8-ஆம் இடத்தைப் பார்ப்பது நல்லதல்ல என்றாலும், முதலில் சொன்ன உதாரணப்படி 6-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் கடன் ஏற்படும்; வைத்தியச் செலவு வரும்; போட்டி, பொறாமை, எதிர்ப்புகள் உருவாகும். அதனால் ஏற்படும் கவலைகளும் சஞ்சலங்களும் உங்களை டென்ஷன் ஆக்கலாம். 8-ஆம் இடம் என்பது கவலை, சஞ்சலம், ஏமாற்றம் ஆகிய பலனைக் குறிக்கும் இடம்.
விரய ஸ்தானத்தில் நின்று 4-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பூமி, வீடு,  வாகனம் போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதற்காக வெளியில் அல்லது வங்கியில் கடன் வாங்கலாம். சிலர் மேற்படிப்பு படிக்கலாம். சுகம் உண்டாகும். தாயின் ஆரோக்கியம் தெளிவடையும். தாய்க்கு பிணி, பீடை நிவர்த்தியாகும். தாயாதி வகையில் நிலவிய பகை வருத்தம் விலகி, உடன்பாடும் ஒற்றுமையும் உண்டாகும். சிலர் எப்போதோ வாங்கிப்போட்ட இடத்தில் இப்போது வீடு கட்டும் முயற்சியில் இறங்கலாம். ஒருசிலர் வாகனப் பரிவர்த்தனை செய்வார்கள். அதாவது பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கலாம்.

குரு 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் அனுகூலமும் உண்டு; பிரிதிகூலமும் உண்டு. சிலருடைய அனுபவம்- உங்களால் ஆதாயமும் நன்மையும் அடைந்தவர்களே உங்களுக்குப் போட்டியாக மாறி எதிரியாகச் செயல்பட்டு உங்களை வீழ்த்த சூழ்ச்சி பண்ணலாம். ஒரு அன்பர் நண்பர்களையெல்லாம் சேர்த்து ஒரு  டிரஸ்ட் ஏற்படுத்தப் போவதாகச் சொல்லி எல்லாரின் பணத்தை வைத்து ஒரு இடத்தை வாங்கி கோவில் கட்டினார். திருமண மண்டபம் கட்டினார். பற்றாக்குறை பணத்துக்கு- கடன் வாங்கினார். கடைசியில் இடத்தையும் கோவிலையும், திருமண மண்டபத்தையும் தன் பேரிலும் குடும்பத்தில் உள்ளவர்களின் பேரிலும் ரகசியமாக மாற்றிக்கொண்டார். நண்பர்களையெல்லாம் கழற்றி விட்டுவிட்டார். அவர்கள் எல்லாம் பகையாகிவிட்டனர். இப்படி சிலர் தனது சௌகர்யங்களை வளர்த்துக் கொண்டு மற்றவர்கள் பகை, வருத்தத்தை சம்பாதித்துக் கொள்ளலாம். அவர்களால் (எதிரிகளால்) வேதனை, பழிச்சொல், அபகீர்த்திகளைச் சந்திப்பதால் 8-ஆம் இடத்துப்பலனும் நடக்கும்.

ராமபிரான் கடக லக்னம், கடக ராசி. ஏகபத்தினி விரதன். மக்களுக்காகவே தியாகவாழ்வு வாழ்ந்தவர். கட்டிய மனைவியையும் பிரிந்தவர். பெற்ற குழந்தையையும் பிரிந்தவர். அவருக்கும் சோதனை களும் வேதனைகளும் வந்து சூழ்ந்தன. அதைவிட வாலியினாலும், சீதையாலும் பழிச்சொல் சுமந்தார். அது பழிச்சொல்லா? பாவச் செயலா என்றால் இரண்டுமில்லை. கொலைக்குற்றவாளிக்கு மரணதண்டனை தீர்ப்பு சொல்லும் நீதிபதியின் செயல் பாவச் செயலா? அல்லது அந்த மரணதண்டனையை நிறைவேற்றும் தூக்குமேடை ஊழியர் செய்வது பாவச் செயலா? அதுமாதிரி கடக ராசியில் பிறந்தவர்கள் அல்லது கடக லக்னத்தில் பிறந்தவர்களில் இருசாரார்களும் உண்டு. சுயநலம் உள்ளவர்களும் உண்டு; தியாகிகளும் உண்டு. பெரும்பாலும் இந்தத் தன்மை கடகம், சிம்மம் இரண்டு ராசிக்கும் பொருந்தும். ஏனென்றால் இந்த இரண்டு ராசிகளுக்கும்தான் சனி நல்லவராகவும் இருக்கிறார். கெட்டவராகவும் இருக்கிறார். கடகத்துக்கு சனி 7, 8-க்குடையவர். சிம்மத்துக்கு சனி 6, 7-க்குடையவர். அதற்காக சனி கெட்டவர் இல்லை. தர்மவான். கர்மாவின் பலனை அனுபவிக்கச் செய்கிறார். கடகம் என்பது நண்டு எனப்படும். நண்டுக்கு தன் உடம்பைச் சுற்றி கால்கள் உண்டு. மற்ற ஜீவராசிகள் எல்லாம் உடலைத் திருப்பித்தான் நடக்க வேண்டும். நண்டுக்கு மட்டும் நின்ற இடத்தில் இருந்தபடியே நாலு திசையிலும் பயணம் போகும் தன்மை உண்டு. அதனால் சாமர்த்தியமும் உண்டு; ராஜதந்திரமும் உண்டு.

கடக ராசிக்கு 4-ல் உள்ள சனி உச்சம் பெற்று கடக ராசியைப் பார்க்கிறார். சனி 10-க்கு 10-க்குடையவர். அதாவது தொழில் ஸ்தானத்துக்கு தொழில் ஸ்தானாதிபதி. இதை பலதீபிகையில் "பாவாத் பாவகம்' என்று சொல்லப்படும். அதாவது 7-ஆம் இடத்தைப் பார்க்கும் போது அதற்கு 7-ஆம் இடத்தைப் பார்க்க வேண்டும். 2-ஆம் இடத்தைப் பார்க்கும்போது அதற்கு 2-ஆம் இடத்தைப் பார்க்க வேண்டும். அதுபோல 10-ஆம் இடம் தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆய்வு செய்யும்போது, 10-க்கு 10-ஆம் இடம் ராசிக்கு 7-க்குடையவரையும் பார்க்க வேண்டும். 7-க்குடையவர் கடக ராசிக்கு 4-ல் உச்சம் பெற்று 10-ஆம் இடத்தையும் ஜென்ம ராசியையும் பார்ப்பதால், தொழில், வேலை, உத்தியோகம் சம்பந்தமான முன் னேற்றங்களும் நன்மைகளும் உண்டாகும்.

10-க்கு 12-க்குடைய குரு ராசிக்கு  12-ல் நின்று 10-க்கு 10-க்குடைய சனியைப் பார்ப்பதால், வெளிநாட்டு வேலை, உத்தியோகம் உண்டாகும். சிலருக்கு குடியிருப்பு மாற்றம் உண்டாகும். அதாவது வாடகை வீட்டிலிருப்போர் ஒத்தி வீட்டுக்கும், ஒத்தி வீட்டிலிருப்போர் சொந்த வீட்டுக்கும் போகலாம். சிலர் புதிய வீடு அல்லது மனை அல்லது வாகனம் வாங்கலாம். டூவீலர் வைத்திருப்பவர்கள் நான்கு சக்கர வாகனம் (கார்) வாங்கலாம். ஏற்கெனவே கார் வைத்திருப்பவர்கள் பழைய காரைக் கொடுத்துவிட்டு புதிய கார் வாங்கலாம். குரு 6-க்கும் அதிபதி என்பதால் அதற்காக பேங்க் லோன் கிடைக்கும்.

10-ஆம் இடம் செவ்வாயின் வீடு. 10-ஆம் இடத்தை சனி, ராகு பார்க்க 10-ல் கேது இருப்பதால், இக்காலம் கட்டடம், காண்ட்ராக்ட் தொழில், ரியல் எஸ்ட்டேட், கெமிக்கல், அக்னி சம்பந்தமான தொழில் ஆரம்பிக்கலாம். சிலர் ஏற்றுமதி- இறக்குமதி அல்லது பிளாஸ்டிக், ரப்பர், தோல் (லெதர்) சம்பந்தப்பட்ட தொழிலும் யந்திர சம்பந்தமான தொழிலும் செய்யலாம். தனகாரகன் குரு 12-ல் மறைவதால் சிட்பண்ட், பைனான்ஸ் தொழில் மட்டும் செய்யவேண்டாம். குரு புதன் வீட்டில் இருப்பதால் கமிஷன் தொழில், ஷேர் மார்க்கெட்டிங் போன்ற தொழில் வகையில் முதலீடு செய்யலாம்.

17-2-2013 முதல் 5-7-2013 வரை சனி வக்ரமாக இருக்கும் காலம்; அடுத்து 2-3-2014 முதல் 28-6-2014 முடிய இரண்டாவது முறையாக சனி வக்ரமடையும் காலம் கடக ராசிக்காரர்களுக்கு ராஜயோகமான காலமாக அமையும். எதிர்பாராத லாபம், முன்னேற்றம், ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய முயற்சிகள் கைகூடும்.

மிதுன குரு 4-ஆம் இடம் துலா ராசிக்கு 9-ல், 8-ஆம் இடம் கும்ப ராசிக்கு 5-ல் இருக்கிறார். ஒரு கிரகம் எந்தெந்த இடத்துக்கு திரிகோணத்தில் இருக்கிறாரோ அந்தந்த இடத்துக்கு சாதகமான பலனையும், எந்தெந்த இடத்துக்கு 6, 8, 12-ல் இருக்கிறாரோ அந்தந்த இடத்துக்கு பாதகமான பலன்களையும் செய்யும்.

அந்த விதிப்படி 4-ஆம் இடத்துக்கும் 8-ஆம் இடத்துக்கும் யோகம். தாயார், பூமி, வீடு, மனை, சுகம், கல்வி, வாகனம் சம்பந்தமான நன்மைகளை எதிர்பார்க்கலாம். 8-க்கு யோகம் என்றால் விபத்து, ஏமாற்றம், அவதூறு, கௌரவப் போராட்டங்களையும் உருவாக்கும். அந்த மாதிரி சந்தர்ப்பத்தில் குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை விசேஷமாக வழிபட வேண்டும். தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை கொண்டைக்கடலை மாலை சாற்றலாம்; நெய்தீபம் ஏற்றலாம்; மஞ்சள் வஸ்திரம், மஞ்சள் பூ மாலை சாற்றலாம். அத்துடன் திருவாரூர் தெப்பக்குளம் பின்புறம் மடப்புரம் என்னும் பகுதியில் குருநாதர் தட்சிணாமூர்த்தி மகான் ஜீவசமாதி இருக்கிறது. அங்கு சென்று வியாழக்கிழமை தரிசனம் செய்யலாம்.

தட்சிணாமூர்த்தி மகான் ஒரு அவதூதர். மாபெரும் சித்தர். அவர் ஒரு சமயம் மடத்தில் சிஷ்யர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, வெளியூரில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு சீடர் கைதவறி கீழே விழும்போது "குருநாதா' என்று அபயக்குரல் கொடுத்தார். அது தட்சிணாமூர்த்தியின் ஞான திருஷ்டியில் தெரிந்து, அப்படியே இருந்த இடத்தில் இருந்தே அந்த சீடரை தாங்கிப் பிடித்து தரையில் வைத்த மாதிரி பாவனையாகச் செய்ய, அந்த சீடருக்கு யாரோ ஒருவர் கைத் தாங்கலாக பிடித்து தரையில் கிடத்தி வைத்ததாக உணர்வு தெரிந்தது. குருநாதர் முன்பு இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சில மணி நேரத்தில் தவறிவிழுந்த சீடர் குருநாதரைத் தேடிவந்து காலில் விழுந்து நன்றி செலுத்தி கண்ணீர் உகுத்தார். அப்போதுதான் எல்லாருக்கும் விவரம் தெரியவந்தது. இப்படி எத்தனையோ சித்துகள் செய்தவர். ஆவணி மாதம் 21-ஆம் தேதி 6-9-2013 வெள்ளிக்கிழமை குருநாதர் குருபூஜை நடக்கிறது. அன்று 100 மூட்டைக்கு மேல் அரிசியை சமைத்து காலை முதல் இரவு வரை அன்னதானம் நடக்கும்.

கடக ராசிக்கு 5-ஆம் இடத்துக்கு எட்டிலும், 7-ஆம் இடத்துக்கு ஆறிலும், ஜென்ம ராசிக்கு 12-ஆம் இடத்திலும் குரு இருப்பதால் பிள்ளைகள் வகையிலும் மனைவி வகையிலும் எதிர்பாராத செலவுகள் வந்துசேரும். ஜாதகரீதியாக சாதகமான தசாபுக்தி நடந்தால் யோகமான சுபசெலவுகளாகவும், பாதகமான தசாபுக்தி நடந்தால் அசுபசெலவு களாகவும் இருக்கும். கெடுபலனுக்குப் பரிகாரம் முன் குறிப்பிட்ட மடப்புரம் குரு தட்சணாமூர்த்தி வழிபாடே போதுமானது.

கடக ராசிக்கு 12-ல் உள்ள குரு விரயத்தை உண்டாக்கினாலும், பெரும்பாலும் சுபவிரயச் செலவுகள் ஆகவே அமையும். சிலர் வெளிநாட்டு வேலைக்குப் போகலாம். அல்லது வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். ஏற்றுமதி- இறக்குமதி வியாபாரம் செய்யலாம். ராகுவை குரு பார்க்க, கேதுவும் குருவைப் பார்க்கிறார். ராகு- கேதுவுக்கு 7-ஆம் பார்வையுடன் 3, 11-ஆம் பார்வை யும் உண்டு. ராகு- கேது வலப்புறமாகப் பார்த்தாலும் இடப்புறமாகப் பார்த்தாலும் ஒன்றாகத்தான் கணக்கு வரும்.

ராகு தசையோ புக்தியோ நடந்தால் திருப்பதி அருகில் காளஹஸ்தி சென்று ருத்ரஹோம பூஜை செய்யலாம். அல்லது உத்தமபாளையத்தில் (தென் காளஹஸ்தி என்று பெயர்) ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 4.00 மணிக்குமேல் ராகு கால பூஜை அபிஷேகம் செய்யப்படுகிறது. 300 ரூபாய் செலுத்தி டோக்கன் வாங்கிக்கொண்டால் கோவில் குருக்களே எல்லா பூஜை சாமான்களும் வெள்ளி நாகர் உருவமும் கொடுத்து பரிகாரம் செய்துவிடுவார். ஜி. நீலகண்டன் சிவாச்சாரியார், செல்: 93629 93967-ல் தொடர்புகொள்ளவும்.

ஆகவே குருப்பெயர்ச்சி உங்களின் எண்ணங்களைப் பொறுத்து நல்லது செய்யும் அல்லது கெட்டது செய்யும். அதுதான் பூர்வ புண்ணியம். மனம் போல் வாழ்வு என்பதன் ரகசியமும் அதுதான். நல்லதே செய்தால் நல்லதே நடக்கும் என்பதன் தத்துவமும் அதுதான். வாரியார் சுவாமிகள் "வருவது- தானே வரும்; வருவதுதானே- வரும்' என்றார்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

குருவின் அஸ்தமனம் இந்த ராசியைப் பொறுத்தவரை நல்லதே செய்யும். 12-ல் உள்ள குரு அஸ்தமனம் ஆவதால் விரயமும் வேதனையும் அஸ்தமனமாகிவிடும் என்று அர்த்தம். 6-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு 6-க்குடையவர் என்பதால், அந்த 6-ஆம் இடத்துப் பலன் அஸ்தமனம் ஆகிவிடும். அதனால் எதிரி, கடன், வைத்தியச்செலவு, போட்டி, பொறாமை ஆகிய கெடுபலன்கள் எல்லாம் அஸ்தமனம் ஆகிவிடும் என்று அர்த்தம். பாலைவனச் சோலை மாதிரியும், கெட்டதிலும் நல்லது என்பது மாதிரியும் குருவின்அஸ்தமனம் ஒரு மாதம் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். இதை விபரீத ராஜயோக காலம் எனலாம். குரு நல்ல பலனைச் செய்ய சிங்கம்புணரி முத்துவடுகச் சித்தரை (வாத்தியார் கோவில் சென்று) வழிபடலாம். மதுரை திருச்சி ரோட்டில் கொட்டாம்பட்டியிலிருந்து 5 கிலோமீட்டர். தூரத்தில் உள்ளது.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

குரு வக்ரமாக இருக்கும் இக்காலம் நல்லதும் நடக்கும்; ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் கெட்டதும் நடக்கும். கெட்டது பாதிக்காமல் இருக்க திண்டுக்கல் மலைக்குப் பின்புறம் ஓதசுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபட வேண்டும். அல்லது உங்கள் பகுதியிலுள்ள சித்தர்களின் ஜீவசமாதிக்குச் சென்றும் வழிபடலாம்.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:

புனர்பூசம் குருவின் சொந்த நட்சத்திரம் என்பதால், தன்னைத்தானே அடித்துக்கொண்டால் வலி அதிகம் தெரியாது என்பதுபோல, குரு உங்களுக்கு கெடுதல் செய்தாலும் கெடுபலன் தெரியாது. உங்கள் திறமையும் பெருமையும் வெளிப்பட, சோதனைகளைச் சந்திப்பது போல குரு உங்களுக்குப் பரீட்சை வைப்பார். அதில் நீங்கள் வெற்றியடையலாம்.

பூச நட்சத்திரக்காரர்களுக்கு:

பூசம் சனியின் நட்சத்திரம். சனி 4-ல் நின்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். அதனால் பூமி, வீடு, லாபம், வாகன சுகம் போன்ற யோகத்தைத் தருவார்.

ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி யோகத்தையே செய்யும். புதன் 3, 12-க்குடைய ஆதிபத்தியம் பெற்றவர். புதன் வீட்டில் குரு இருப்பதால் சகோதர வகையிலும் நண்பர்கள் வகையிலும் குருப்பெயர்ச்சி அனுகூலமான பலனையும் ஆதாயத்தையும் செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக