புதன், நவம்பர் 20, 2013

ஆகாசவாணி எங்கள் வீட்டு மகாலட்சுமி

ஆகாசவாணி எங்கள் வீட்டு மகாலட்சுமி
(தமிழர்கள் இலங்கை வானொலியின் நிகழ்ச்சிகளில் லயித்திருக்க தமிழீழத்தைச் சேர்ந்தவர்கள் தமிழக வானொலிகளைத் தேடியது வியப்புதான்.கானா பிரபா வின் எழுத்துகளில்)

கடந்த மே மாசம் யாழ்ப்பாணத்துக்குப் போயிருந்த போதும் இதே கூத்து தான். காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு வீட்டில் இருக்கும் சுவாமி அறைக்குப் போனால், ஏற்கனவே விடிகாலையில் எழுந்து காலைக்கடன்களை எல்லாம் முடித்து விட்டு யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைப் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு ராகம் சேர்த்து பாடுகின்றார் அப்பா. என்னைக் கண்டதும் வாயில் பாடலை முணுமுணுத்துக் கொண்டே கையால் சைகை செய்து தன்னருகில் வரவழைத்துவிட்டு திருநீற்றுச் சட்டியில் தன் ஐந்து விரல்களையும் அழுத்தி ஒற்றிவிட்டு என் நெற்றியில் ஒரு இழுப்பு இழுத்து விட்டு முதுகைத் தடவிப் போகச் சொல்கிறார் மீண்டும் சைகை மூலம். காலை ஆறரை மணிப் பூசைக்கு மடத்துவாசல் பிள்ளையார் கோயிலுக்குப் போய் விட்டு என் ஆஸ்தான வாகனம் லுமாலா சைக்கிளில் திரும்புகிறேன். வீட்டு முகப்பை அண்மித்ததுமே ஏழு கட்டை தாண்டி ஒலிக்குமாற்போல எங்கள் வீட்டில் இருந்து வெளிக்கிளம்புகிறது வானொலி வழியாகப் பாய்ந்து வரும் ஆகாச வாணி. என் நினைவு தெரிந்த நாள் முதல் எங்கள் வீட்டில் பெண் பிள்ளை இல்லாத குறைக்கு நிறைவாக ஆகாச வாணி காலையில் தொடங்கி விடுவாள் தன் கச்சேரியை வைக்க.

எங்கள் வீட்டில் மட்டுமல்ல அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான குடும்பத்தலைவர்களின் விருப்பத் தேர்வாக இருந்தது ஆகாசவாணி தான். "திருச்சீல விடு திருச்சீல விடு எண்டோண்ணை அவன் றேடியோவுக்குள்ளை திரிச்சீலையை (விளக்கு எரிக்கப்பயன்படும் துணி) விட்டுட்டான்" என்று அந்தக்கால அங்கதம் ஒன்று புழங்கியிருக்கிறது. "இந்தியா என்ன சொல்லுது" என்றவாறே திருச்சி வானொலி, திருநெல்வேலி வானொலி நிலையம் சென்னை வானொலி நிலையமெனத் தாவுவார்கள். என்னைப் பொறுத்தவரை தமிழகத்துக்கும் தமிழீழத்துக்குமான உறவுப்பாலங்களில் இலக்கியத்தைக் கடந்து அடிமட்டம் வரை பாய்ந்ததென்றால் வானொலி ஊடகம் தான். தமிழகத்தவருக்கு எவ்வளவு தூரம் றேடியோ சிலோனின் ஆக்கிரமிப்பு இருந்ததோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் கிராமப்புறங்களில் ஆகாசவாணியின் படையெடுப்பு இருந்தது. நம்முடைய வானொலி அனுபவம் என்பது எண்பத்து மூன்றுக்குப் பின்னால் தான் பிள்ளையார் சுழி போட்டது என்பதால், இலங்கை வானொலியும் அதன் சாயத்தை இழந்து இரண்டும் கெட்டான் அரச ஊதுகுழலாகவும் மாறியதும் மிக முக்கிய காரணங்களில் ஒன்று. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மெல்ல மெல்ல தனியார் பண்பலை வரிசை (FM 99 உள்ளிட்டவை) ஆரம்பிக்க முன்னரேயே இலங்கை வானொலி தன்னை அது நாள் வரை நேசித்தவர்களிடமிருந்து விலகிப் போக ஆரம்பித்து விட்டது.

என் அப்பாவைப் பொறுத்தவரை அவரின் செல்ல மகள் ஆகாசவாணி தான். செய்தி நேரத்தைக் கடந்தும் வானொலி ஒன்றைக் கேட்கிறார் என்றால் கண்ணை மூடிக்கொண்டே அது எந்த வானொலி என்று சொல்லுமளவுக்கு நேசம் கொண்டிருக்கிறார். அது அப்படியே நிலைய வாத்திய இசையோடு தற்காலிக ஓய்வெடுத்துக் கொள்ளும். மதியம் சக்தி எஃப் எம் செய்திகள், சூரியன் எஃ.ப் எம் செய்திகள், என்று மெல்லத் தொட்டுப் பார்த்து விட்டு மீண்டும் ஆகாசவாணிக்கு வந்து விடுவார்.

சென்னை வானொலியில் இரவு ஏழுமணிக்கு வரும் விவசாய நிகழ்ச்சியில் கூட எனக்கு அப்போது ஈர்ப்பிருந்தது. பாமர ஜனங்களுக்குப் புரியும் வகையில் மொட்டைக்கருப்பன் உள்ளிட்ட அரிசி ஜாதிகளையும், பூச்சி கொல்லி மருந்துகளைப் பாவிக்கும் விதத்தையும் குறு நாடங்களாகவும் ஓரங்க வானொலி நாடகங்களாகவும் படைப்பார்கள். எனக்கு எவ்வளவு தூரம் இது உபயோகமாக இருந்தது என்பது ஒருபுறம் இருந்தாலும் தமிழ்நாட்டின் மூலாதாரமான விவசாயப் பெருமக்களுக்கு இந்த நிகழ்ச்சி பெருஞ்சேவை செய்திருக்கும் என்பதை அதன் படைப்பாற்றலை இப்போது அசை போடும்போதும் உணர்கின்றேன்.

"என் அத்தானின் வயலினிலே அருவி போல் தண்ணீரு பாயுதே, பினலெக்ஸ் பைப்பின் ஜாலமே தங்கமே தங்கமே இது".
முதல் அடிகளைப் பெண்குரலும் இரண்டாவது அடியை ஆண்குரலுமாகப் பாடும் சென்னை வானொலியின் விவசாய நிகழ்ச்சியின் விளம்பரப்பாடல் தான் அது. 18 வருடங்கள் கழிந்தும் என் ஞாபகமூலையின் ஓரமாய் ரீங்காரமிடும் பாடலாக இன்றும் இருக்கின்றந்து. இன்றைய கணக்கில் பினலெக்ஸ் பைப்புக்கள் இன்னும் தமிழ் நாட்டில் இருக்கின்றதோ என்னவோ தெரியவில்லை, ஆனால் ஆண்டாண்டு கடந்தும் இந்த வர்த்தக விளம்பரம் மட்டும் என் மனசில் பசையாக ஒட்டிக்கொண்டு விட்டது.
என் பள்ளிகூட நாட்களில் காலை பள்ளிக்குப் போக முன் 7.33 இற்கு வரும் தென்கச்சி சுவாமிநாதனின் "இன்று ஒரு தகவல்" கேட்பதற்காக விறுவிறெனக் குளித்து முடித்துச் சீருடை அணிந்து காலை ஆகாரமும் உண்டு காத்திருப்பேன்.சுவாமிநாதனும் வழக்கம் போல் ஒரு அறிவுரை சார்ந்த கதையையும் , நடைமுறை யதார்த்தத்தில் வரும் நகைச்சுவைத் துணுக்கையும் பொருத்தமாக இணைத்துப் படக்கென தன் ஸ்டைலில் நிறுத்தும் போது வானொலியின் வாயை என் கைகள் மூட, கால்கள் ஏஷியா சைக்கில் மேல் தாவிப்போகும்.

சனி, ஞாயிற்றுக்கிழமை என்றால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி வரும் ஏனென்றால் பகலிலும் விசேடமாகப் பாடல் கேட்கலாமே என்பது தான். காலை 9 மணிக்கு புதுச்சேரி வானொலி நிலையத்திற்கு அலைவரிசை பிடித்தால் போதும் திரை கானம் என்ற பெயரில் முத்தான திரையிசைப்பாடல்கள் வந்து விழும். வானொலிப் பெட்டி என் படிப்பு மேசையில் இருக்கும். அதற்கு அருகில் எவ்வளவுக்கெவ்வளவு நெருக்கமாக என் தலையைச் சாய்த்துவைத்திருக்கமுடியுமோ அவ்வளவுக்கு நெருக்கமாக மேசையில் என் தலை கவிழ்ந்திருக்கப் பாடல் கேட்பது என் வழக்கம்.

"உவன் ஒரு இடமும் உலாத்தாமல் வீட்டில இருக்கிறதே போதும்” என்ற நிம்மதியில் குசினிக்குள் (சமையலறை) என் அம்மா.
“புதுச்சேரி வானொலி நிலையம் , திரையிசைப்பாடல்களில் அடுத்துவருவது, ஈரமான ரோஜாவே படத்திலிருந்து இசைஞானி இளையராஜா இசையில் மனோ பாட்டியது" …..என் காதை இன்னும் உன்னிப்பாய்த் தீட்டிக்கொண்டு பாடலைக் கேட்க ஆயத்தமாவேன். மனோ " அதோ மேக ஊர்வலம் " பாடலைப் பாடிக்கொண்டிருக்கச் சரணத்தில் "ஆ" என்ற ஹம்மிங்கை சுனந்தா ஆலாபனை செய்ய, குசினிக்குள் ஈரவிறகோடு போராடும் அம்மா எட்டிவந்து " சோக்கான பாட்டு" என்று சொல்லிவிட்டு மறைவார்.

ஞாயிற்றுக்கிழமை கோயிலடிப்பக்கம் இருந்தாலென்ன, சுதா வீட்டுப்பக்கம் யார்ட் விளையாட்டு விளையாடினால் என்ன அந்த இடத்தை விட்டு என்னை நகர்த்தி என் வீட்டு வானொலிப் பக்கம் வரவைப்பது மாலை 4 மணிக்கு வரும் சென்னை வானொலி நிலைய நேயர் விருப்பம். இந்த நேயர்விருப்பம் நிகழ்ச்சிக்கு அடிக்கடி பாடல் கேட்கும் நேயர் பட்டியல் எனக்கும் பாடமாய் ஆகும் அளவிற்கு வந்த நாட்கள் அவை. எமக்கும் பிடித்த பாடல்களை ஒலிப்பதிவு செய்யவும், திரையில் பார்க்கவும் முடியாத அன்றைய யுத்தகாலத்தில் , இந்த நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையின் கடைகோடியில் இருக்கும் சகோதரனோ, சகோதரியோ நான் விரும்பிக்கேட்க விரும்பிய பாடலைத் தாமும் கேட்க அது ஒலிபரப்பாக, அந்த எதிர்ப்பாராத இன்ப அதிர்ச்சிச் தருணங்கள் வார்த்தைகளால் வடிக்கமுடியாதவை. அடிக்கடி அன்று பாடல் கேட்கும் சென்னை நேயர்கள்
லல்லு, சத்யா, ரேவதி, நீங்கள் இப்போது எங்கிருக்கிறீர்கள்? இன்னும் சென்னையிலா? இன்னும் அந்த உங்கள் விருப்பம் இன்னும் வருகின்றதா? அதில் இன்னும் பாடல் கேட்கின்றீர்களா என்று கேட்க எனக்கு அல்ப ஆசை.

இன்று வரை என்னை இளையராஜாவின் இசைமோகத்திலிருந்து விலகிவிடாமல் பார்த்துக்கொண்டதில் சென்னை வானொலிக்கும் முக்கிய பங்கு பெற்றிருக்கிறது. தேன் கிண்ணம், நேயர்விருப்பம், திரை இசை, திரை கானம் என்று எத்தனையோ த்லைப்பிட்டுப் பாடல் நிகழ்ச்சிகள் வந்தாலும் ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர, சில சமயம் அதுவுமில்லாமல் எல்லாமே ராசாவின் ராக ராஜ்ஜியம் தான். மனோஜ் கியானின் இசையில் இணைந்த கைகளில் வரும் " அந்தி நேரத் தென்றல் காற்று, சந்திர போஸின் இசையில் பெண் புத்தி முன் புத்தி படத்தில் வரும் " கொலுசே கொலுசே" பாடல், தேவாவின் இசையில் வைகாசி பொறந்தாச்சு படத்திலிருந்து "சின்னப்பொண்ணுதான்"
போன்ற விதிவிலக்குகள் தவிர, பச்ச மலப்பூவு (கிழக்கு வாசல்), இரண்டும் ஒன்றோடு ( பணக்காரன்), ஈரமான ரோஜாவே படத்தின் அனைத்துப்பாடல்களும், தானா வந்த சந்தனமே (ஊரு விட்டு ஊர் வந்து) என்று ஒவ்வொரு நேயர்விருப்பத்திலும் ராஜா தான் ஹீரோ.

நான் வீட்டில் வானொலி கேட்ட காலத்தை வீதிக்குக் கொண்டுவந்தது திண்டுக்கல் வானொலி நிலையம். 92 ஆம் ஆண்டு வாக்கில் ஒருநாள் யதேச்சையாக வானொலியின் அலைவரிசை முள்ளு விலகியபோது கேட்டது அந்த திண்டுக்கல் வானொலி நிலையப் பண்பலை வரிசையின் பரீட்சார்த்த ஒலிபரப்பு. என் அண்ணன் கொழும்பிலிருந்து கொண்டுவந்து பெட்டிக்குள் வைத்திருந்த வாக்மென்னுக்குள் (Walkemen) என்னிடம் அடைக்கலம் புகுந்த மற்றைய பென்ரோச் வகை பற்றறிகளைப் பொருத்திச் சைக்கிளில் போகும் போதும், சிவலிங்க மாமா வீட்டுத் திண்ணையில் இருந்த மாலைப் பொழுதுகளும் திண்டுக்கல் வானொலி நிலையத்தின் துல்லியமான பரீட்சார்த்த ஒலிபரப்பின் பாடல்களே கதியென்று இருந்தேன். எங்களூரில் வாக்மென்னின் வாசனை பிடிபடாத காலமது. என் பாட்டுக்குப் பாடல் கேட்டுக்கொண்டு இருக்கும் போது சுப்பையா குஞ்சியப்பு
" உவனுக்கென்ன காதில குறைபாடோ ?" (செவிட்டு மெஷின்?) என்று எட்டிப் பார்த்துப் போவார்.
தேவாவின் இசையில் "சோலையம்மா" படப்பாடல்கள் முழுவதையும் மூச்சுக்கு முன்னூறு தரம் ஒலிபரப்பி என் சாபத்தை வாங்கினாலும், ராஜாவின் இசையில் பாண்டி நாட்டுத் தங்கத்தில் வரும் " உன் மனசில பாட்டுத்தான் இருக்குது" போட்டுப் புண்ணியம் கட்டிக்கொண்டார்கள் திண்டுக்கல்லுக்காரர்கள்.

இடைக்கிடை வந்து போக்குக் காட்டியும், சீன மற்றும் மற்றைய மொழி அலைவரிசை வகையறாக்குள் சிக்கிப் பாடல் பாதி இரைச்சல் பாதியாக வந்து போன தூத்துக்குடி வானொலி நிகழ்ச்சிகளையும் கேட்டு வளர்ந்த காலம் அது. பாடசாலைகளும் ஒழுங்காக இயங்காமல் , நிலைமை சீர்கெட்ட காலத்தில் வந்த “எங்கிருந்தோ வந்தான்”……. “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்தேனோ” என்று மனதுக்குள் நன்றி போட வைத்த நண்பர்கள் இந்த வானொலிகள்.

“நிர்மா... நிர்மா வாஷிங் பெளடர் நிர்மா”, “சொட்டு நீலம் டோய்.... ரீகல் சொட்டு நீலம் டோய்”, “அஞ்சால் அலுப்பு மருந்து” இத்தியாதி விளம்பரங்களுக்க்குள் வந்து போகும் வானொலி நிகழ்ச்சிகள். “ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது” என்றவாறே சரோஜ் நாராயணஸ்வாமி வந்து போவார்.

விறுவிறுவெனப் படித்து முடித்து சாப்பாட்டு இடைவேளைக்காக நான் தேர்ந்தெடுப்பது இரவு 8 மணியை. அப்போது தான் ஹிந்தி நிகழ்ச்சிகள் முடிந்து தேன் கிண்ணத்தோடு வரும் "விவித் பாரதியின் வர்த்தக சேவை". புத்தம் புதுப் படங்களின் விளம்பரங்களை அரை நிமிடத்துக்குள்ளோ ஒரு நிமிடத்துக்குள்ளோ இலாவகமாக அடக்கிச் செய்யும் அந்த அறிவிப்பாளர்களின் திறமை வெகுசிறப்பானது. வைகாசி பொறந்தாச்சு பட வெற்றி பல புதிய அறிமுகங்களைத் தமிழ்த்திரைக்குக் கொண்டுவந்ததை விவித் பாரதியைக் கேட்டதன் மூலம் ஊகித்துக்கொண்டேன். ஆத்தா உன் கோவிலிலே, தாயம்மா, வசந்த காலப்பறவை, மதுமதி போன்ற விவித்பாரதியின் பட விளம்பரங்கள் நீளும். அப்போது வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களைப் படம் வாரியாக ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதிவைத்தேன் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் இந்த பொழுது போக்கு இருந்தது. அன்றைய காலகட்டத்துப் படங்களின் இசையமைப்பாளர்களையும் பாடல்களையும், கூகுள் போன்ற உலாவிகள் துணையின்றி என் ஞாபக ப்ளொப்பியில் இருந்து அவ்வப்போது எடுக்க விவித் பாரதிதான் கைகொடுத்தது. விவித் பாரதியின் வர்த்தகசேவை இன்னும் இருக்கிறதா தெரியவில்லை.

சிறு புல்லாங்குழல் ஓசை நெருடலோடு இலேசான சிரிப்புடன் எஸ்.பி.பி பாடும் “மண்ணில் இந்தக் காதல் இன்றி” என்ற பாதி வரியோடு வசந்த் இன் "கேளடி கண்மணி" பட விளம்பரம் வரும் போது இந்தப் பாடலை நான் முழுமையாகக் கேட்கும் காலம் எப்போது என்று மனசுக்குள் ஏக்கம் வரும்.
அதையும் மீறி, குலவை ஒலியைப் பெண்கள் இசைக்க,
“குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே " என்று சொர்ணலதா பாடவும், ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் இன்
" என் ராசாவின் மனசிலே" என்று சன்னமான குரலில் ஒரு பெண் அறிவிப்பு வந்து இந்தப் பாடலின் மேல் வெறி கொள்ளவைத்தது.

அந்தத் தொண்ணூறாம் ஆண்டு காலப்பகுதியில் வந்த பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் பால்யப் பருவத்தின் காதலியை நினைக்குமாற்போல உள்ளுக்குள் ஒரு புத்துணர்வு வந்து போகும். அந்த நேரம் கடும் யுத்த காலம் ஆரம்பமாகி கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் தேங்காய் எண்ணெய் விளக்கே கதி என்று கிடந்தாலும் வானொலிக்கு மட்டும் பற்றறிகளை வாங்கி வைத்துக் கேட்போம், அதுதான் அப்போது எமக்குக் கிடைத்த ஒரே பொழுது போக்கு அல்லது அதையும் கடந்து எங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய கணங்கள்.

சென்னைக்குச் செல்லும் போதெல்லாம் யாராவது சென்னை வானொலி நிலையம் கேட்கிறார்களா என்று கேட்க ஆசை வரும் ஆனால் மனதுக்குள் அடக்கிக் கொள்வேன். இணையத்திலும் அவ்வப்போது நேரடி ஒலிபரப்பு வருகிறதா என்று தட்டிப்பார்ப்பேன்.
இன்றைக்கு சென்னை வானொலி தன் எழுபத்தைந்தாவது ஆண்டை நிறைவு செய்து பவளவிழாக் காணும் போதும் எங்கள் வீட்டில் தொடர்ந்து ஒலிக்கும் அவளின் குரல் இடைவிடாது ஒலிக்க வைக்கும் போது, என் தாயகத்தின் பசுமையான நினைவுகளை வழங்கியதன் நன்றிக்கடனாக உள்ளூர எண்ணி மகிழ்கின்றேன்.

1938-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி சென்னை எழும்பூர் மார்ஷல் சாலையில் சென்னை வானொலி தொடங்கப்பட்டது. அன்றைய சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி ஒலிபரப்பு சேவையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.அதன்பிறகு தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு பல மாற்றங்களைக் கண்டுள்ளது. எழும்பூரில் செயல்பட்ட சென்னை வானொலி 1954-ல் தற்போதைய காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கத்துக்கு எதிரே மாற்றப்பட்டது. 1957 விவிதபாரதி சேவையும், 1968-ல் வர்த்தக ஒலிபரப்பும் தொடங்கப்பட்டது. (செய்தி மேற்கோள்: தினமணி ஜூன் 13, 2013)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக