செவ்வாய், ஏப்ரல் 21, 2015

ஜெ.சி.டேனியல் (2014)

ஜெ.சி.டேனியல் (2014)

   
4
 
0
SHARE 
மலபார் சினிமாவின் தந்தை என போற்றப்படும் ஜோசப் செல்லப்பா டேனியல் (ஜெ.சி.டேனியல்) என்ற சாதனை மனிதனின் வாழ்வை அடிப்படையாக வைத்து அருமையாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் கமல். இப்படம் நமக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சர்யத்தையும் கொடுத்திருக்கிறது. அது என்னவென்றால், மலையாள சினிமாவுக்கு தந்தை என போற்றப்பட்டவர் ஒரு தமிழர் என்பது தான்.
சினிமா மீது கொண்ட அளவுகடந்த காதலால் தனது சொத்துக்களை விற்று படமெடுக்க டேனியல் முடிவெடுக்கிறார். அப்போது சினிமாவில் கொடிகட்டிப் பறந்த டி.ஜி.பால்கேயையும், தமிழ் சினிமாவின் முன்னோடி என வர்ணிக்கப்பட்ட நடராஜ முதலியாரையும் சென்று சந்திக்கிறார். அவர்களிடம் ஆலோசனை கேட்டு ‘விகத குமாரன்’ என்ற மலையாள மௌன படத்தை தயாரிக்கிறார்.
பெண்கள் நடிப்பதே மிகப்பெரிய குற்றமாக கருதும் அந்த காலத்தில் இவருடைய படத்தின் கதாநாயகியை தேர்வு செய்வதற்காக மும்பைக்கு செல்கிறார். அங்கு பிரபலமாக இருக்கும் ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்ய முடிவெடுக்கும் இவர், அவர் போடும் கண்டிஷன்களால் நொந்துபோய், தாழ்ந்த இனத்தை சேர்ந்த, கூத்துகளில் நடித்துக் கொண்டிருந்த ரோசம்மாவை கதாநாயகியாக தேர்ந்தெடுக்கிறார். அவரை தன்னுடைய படத்தில் உயர்ந்த அந்தஸ்து நாயர் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார்.
தனது சொத்துக்கள் முழுவதையும் விற்று ஒருவழியாக ‘விகத குமாரன்’ படத்தை எடுத்து முடிக்கிறார். மலபாரின் பிரபலமான கேபிட்டல் தியேட்டரில் மலையாள மொழியில்  உருவான இம்முதல் படத்தை திரையிடுகிறார். அப்போது திரையரங்கில் நடைபெறும் சம்பவங்களால் டேனியலின் படம் எதிர்பார்த்தபடி ஓடாமல் போகிறது. இதன்பிறகு அவரது வாழ்க்கை என்னவானது? அவரது படத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளாதது ஏன்? என்று தனது திரைக்கதையால் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கமல்.
ஜெ.சி.டேனியலாக ப்ரித்விராஜ் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட, அவராகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். நம்முடைய கவனத்தை ஈர்க்கும் மற்றொருவர் சாந்தினி. ரோசம்மாவாக வரும் இவருடைய சந்தோஷமும், சோகமும் கலந்த முகபாவனைகள் மிகவும் அருமை.
ஒருவருடைய வாழ்க்கையை படமாக எடுக்கும்போது, அவருடைய வாழ்க்கையின் யதார்த்தம் மீறாமல், அதே நேரத்தில் உண்மை நிகழ்வுகளை மறைக்காமல் திரைக்கதை அமைப்பது என்பது மிகப்பெரிய சவால். அதை படம் பார்ப்பவர்களுக்கு போரடிக்காமல் அருமையான திரைக்கதையால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார் இயக்குனர் கமல்.
வேணுவின் கேமரா கதையின் ஓட்டத்திற்கு ஈடுகொடுத்துள்ளது. இவருடைய அருமையான ஒளிப்பதிவு நம்மை படத்தோடு ஒன்றச் செய்கிறது. ஜெயச்சந்திரனின் பின்னணி இசை படத்திற்கு மேலும் ஒரு பலம்.
இந்தப்படம் மலையாளத்தில் செல்லுலாயிட் என்ற தலைப்பில் வெளியானது. அதை தமிழில் ஜெ.சி.டேனியல் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். மலையாள படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு காட்சியமைப்புகளை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து அனைவரையும் கவரும் வண்ணம் வெளிக்கொண்டுவந்துள்ள தயாரிப்பாளர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. 
மொத்தத்தில் ‘ஜெ.சி.டேனியல்’ செல்லுலாயிட் சித்திரம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக