திங்கள், ஏப்ரல் 06, 2015

மேகதாடு அணை

மேகதாடு அணை விவசாயிகள் பிரச்சனை மட்டும் அல்ல தமிழகத்தில் நீர் குடிக்கும் எல்லாருக்கும் நிகழ போகும் ஆபத்து !!!! முழுவதும் படியுங்கள், நம் தாய் தமிழகத்திற்கு நேர போகும் ஆபத்தை உணருங்கள்
கவிஞர் மகுடேசுவரன்-----shared by தகடூர் ஆளவந்தார்:
கூகுள் முப்பரிமாண வரைபடத்தில், வனத்தில் பாய்ந்து தமிழ்நாட்டுக்குள் நுழையும் காவிரியை ஆராய்ந்தேன். வனத்தடத்தில் வரும் காவிரியாறு ‘ஆடுதாண்டும் காவிரி’ என்ற பகுதியில் மலைமுகடுகளுக்கிடையில் குறுகலான பாறையிடுக்குகளில் புகுந்து வருகிறது.
சிவசமுத்திர அருவியில் தொடங்கி மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிவரை காவிரி பாய்வது மலைகளுக்கிடையேதான். திருச்சிக்கருகில் அகண்ட காவிரி ஆவதும், இம்மலைப் பகுதியில் ஆடுதாண்டும் காவிரியாவதும் நாம் பள்ளியில் படித்த பாடங்கள். மேக என்றால் ஆடு. தாடு என்றால் தாண்டு.
‘மேகதாடு’ எனப்படும் ஆடுதாண்டும் காவிரிப் பகுதியில் மலை முகடுகளுக்கிடையில் தடுப்புச் சுவர் எழுப்பினால் அது அணையாகிவிடும். அங்கே எழுப்பப்படும் மிகச்சிறிய கட்டுமானத்தின் மூலம், காவிரியின் குரல்வளையை இறுக்கிக்கட்டுவது போன்ற எளிய செயல் மூலம், ஆற்றின் முழுத் தண்ணீரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தைக் கர்நாடகம் நிறைவேற்றிக்கொள்ளும்.
மேகதாடுவில் அணைச்சுவர் எழுப்பப்பட்டால், அணையின் நீர்கொள்ளும் பரப்பளவாக, நாம் கற்பனை செய்தே பார்த்திராத அளவு, மலைகளுக்கிடைப்பட்ட பள்ளங்களில் கிடைத்துவிடும். இணைப்பில் உள்ள படத்தில் எங்கே அணைச்சுவர் கட்டப்படலாம் என்பதைக் கறுப்பிலும், அணை கட்டப்பட்டால் நீர்தேங்கும் பகுதியாய் எவை இருக்கக்கூடும் என்பதை நீலத்திலும் குறித்துள்ளேன்.
இதில் தொண்ணூறு டிஎம்சிக்கும் மிகுதியான தண்ணீரைத் தடுத்துவைக்க முடியும் என்று படித்தேன். மேட்டூர் அணையின் கொள்ளளவு 93 டிஎம்சிகள்தாம். கர்நாடகத்தின் இம்முயற்சி மேட்டூர் அணையை அப்படியே தம் மாநிலத்திற்குள் கட்டிக்கொள்வதைப் போன்றதுதான். இது காவிரியின் நீர்கோள் அனைத்தையும் தன்னுடையதாக்கிக்கொள்வதேயன்றி வேறில்லை. நமக்குரியதைப் பறிக்க முயல்வதைப் போன்றது இம்முயற்சி.
மழைப்பொழிவு வற்றிக்கொண்டே வரும் தொழிற்காலகட்டமாகிய இத்தருணத்தில் ஆற்றின் நீரை, அதற்கு உரிமைப்பட்டவர்கள் நீதியின்படி பங்கு பிரித்துக்கொள்வதுதான் உடனடித் தீர்வு.
இது விவசாயியின் பிரச்சனையன்று. ஒரு மிடறு தண்ணீர் குடிக்கின்ற ஒவ்வொருவர்க்கும் நேர்ந்துள்ள ஆபத்து என்பதை உணர்க.
காவிரியில் நீர்ப்பாய்வு இல்லையேல், அவ்வாற்றின் இருமருங்கும் இருநூறு கிலோமீட்டர்கள் தொலைவு வரையுள்ள தமிழ்நிலங்கள் நிலத்தடி நீரற்றதாகும். இச்செய்தி பலர்க்கு வியப்பாக இருக்கக்கூடும். ஆனால் அதுதான் உண்மை.நிலத்தடி நீர்க்கால்களின் வலைத்தொடர்பு நாம் கருதியிருப்பதைவிடவும் அகன்று பரவியிருப்பது. ஆழ்குழாய் அகழ்கின்ற தொழிலில் இருப்பவர் கூறியதைச் சொல்கிறேன். தம் பகுதியில் ஆயிரம் அடிகளுக்குக் கீழே ஆழ்குழாய் தோண்டப்பட்டதாம். சிறிதளவே நீர் கிடைத்திருக்கிறது. அகழ்வு முடிந்தது. எல்லாரும் அகன்றிருந்த வேளையில், ஆழ்குழாய்க் கிணற்றருகே வைத்திருந்த டீசல் கொள்கலன் மண்நெகிழ்ந்து சாய்ந்துவிட்டது. டீசல் மொத்தமும் ஆழ்குழாய்க்குள் இறங்கிவிட்டது. இத்தவற்றால் ஆழ்குழாய்க் கிணறு பாழ்பட்டது என்று அகழ்ந்தவர் துயருற்று மறந்துவிட்டார். ஆனால், சில நாள்கள் கழித்து எண்பது கிலோமீட்டர்கள் தள்ளியிருந்த ஊரொன்றின் ஆழ்குழாய்க் கிணற்றில் வெளிப்பட்ட தண்ணீரில் டீசல் மிதந்ததாம். எங்கோ கலந்த டீசல் வெகுதொலைவுக்கு அப்பால் இருந்த கிணற்றில் தோன்றியிருக்கிறது. இதுதான் நிலத்தடி நீர்க்கால்களின் பயணம். இந்த நிகழ்வில் முன்பின் இருக்கலாம். ஆனால், அதன் சாரத்தை மறுக்கவியலாது.
காவிரி மணலில் இறங்கும் தண்ணீர்தான் தமிழகத்தின் நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்குகிறது. காவிரியில் நீரின்றேல் நம் காலடியில் நிலத்தடி நீர் இருக்காது. பற்பல மாநகரங்களுக்குக் குடிநீர் கிட்டாமல் போகலாம். காவிரிப் படுகைதான் தமிழர்களின் குருதிநாளம். இதை மறந்துவிடக் கூடாது ! நமக்குரிய உரிமையைப் பெற ஒன்றுபட்டு நிற்கவேண்டிய நேரமிது.
நன்றி : ‪#‎KamalaBalachandar‬

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக