திங்கள், ஏப்ரல் 06, 2015

விநாயகரின் மகள்



விநாயகரின் மகள் யார் என்று தெரிந்துகொள்வோம் !
விநாயகர் சதுர்த்தி முடிந்து, விநாயகர் நம்ம ஊர் கடவுள் இல்லை, வடக்கில் இருந்து வந்தவர், ஆரிய கடவுள் என்ற கார சாரமான பேச்சு சற்றே ஓய்ந்த நிலையில் இந்த பதிவு, வெறும் வாய்க்கு அவுல் போட்டது போல் அமையும்.
விநாயகருக்கு சித்தி புத்தி என்ற இரு மனைவிகள் என்பது ஒருவாரு எல்லோருக்கும் தெரியும்.
அவர்களுக்கு இரு மகன்கள் சுபம் மற்றும் லாபம். விநாயகர் ஒருமுறை குடும்பத்துடன் பூமிக்கு வந்தார். அன்று ரக்ஷா பந்தன், சகோதரிகள் தன் சகோதரனுக்கு ராக்கி கட்டிக்கொண்டிருப்பதை பார்த்த லாபமும், சுபமும் தங்களுக்கு ஒரு தங்கை இருந்தால், இவர்களை போல நாமும் ராக்கி கட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்திருக்கலாமே என்று வருந்தினர்.
அந்த நேரம் பார்த்து அங்கு வந்த நாரத முனிவர், லாபம் மற்றும் சுபம் முகத்தில் மாற்றம் இருப்பதை அறிந்து, கவலைக்கான காரணத்தை வினவினார்.
லாபம் நாரத முனிவரிடம் காரணத்தைக் கூறினார். நாரதரும் தன்னுடைய பயணம் வீண் போகவில்லை என்று எண்ணி, இதோ இப்போதே கலகத்தை துவக்குகிறேன் என்று கூறி விநாயகப் பெருமானிடம் வந்து கூறினார். அத்துடன் பெண் பிள்ளை இருக்கும் இடம் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் இடம், அதை பூமியில் கண்ட அவர்கள் இப்படி நினைப்பது ஒன்றும் தவறு இல்லை என்று நாரதர் கொளுத்திப் போட்டார்.
மகன்களின் மனக்குறையை அறிந்த தந்தை, ஒரு அழகான பெண் குழந்தையை உருவாக்கினார். அன்று வெள்ளிக்கிழமை, தங்களுக்கு சகோதரி கையில் ராக்கி கயறு கட்டுவாள் என்று எண்ணி அவர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். அவர்களின் சந்தோஷத்தை பார்த்த விநாயகர், இவள் பிறந்தவுடன் மற்றவைகளை ஆனந்தப்படுத்தியதால், மகளுக்கு ஸ்ரீ சந்தோஷி என்று பெயர் வைத்தார்.
ஸ்ரீ சந்தோஷி மலைமகளின் வீரத்தையும்,
அலைமகளின் செல்வம் மற்றும் மகிழ்ச்சியும், கலைமகளின் கல்வி ஞானத்தையும் பெறுவாள் என்று வாழ்த்தினார்கள். வெள்ளிக் கிழமை பிறந்த சந்தோஷிக்கு வெள்ளிக் கிழமையில் விரதமிருந்து வணங்குபவருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை, செல்வச்செழிப்பு, மனதில் தைரியம் மற்றும் நல்ல குணங்களை அருள்வாள்.
ஸ்ரீ சந்தோஷியை வழிபடுபவர்கள் விரதம் இருக்கும் நாட்களில் சுனீதி கதையை படிப்பது வழக்கம். வெள்ளிக்கிழமைகளில் அன்னையை வழிபட இன்னல் துடைத்து இன்பம் அருள்வாள் ஸ்ரீ சந்தோஷி மாதா.
அப்படி அன்னையை வழிபட்ட ஒரு பக்தையின் கதை தான் சுனீதி மற்றும் போலாநாத் கதை.
ஆனந்த நகரம் என்ற ஊரில் சுனீதி போலாநாத் தம்பதியினர் வாழ்ந்தார்கள். சுனீதியின் கணவன் போலாநாத்க்கு சரியான படி வருமானம் இல்லாததால் சொந்த வீட்டிலேயே தாழ்வாக நடத்தப்பட்டனர்.
இதை சகிக்க முடியாமல், போலாநாத், கர்ப்பமாக இருக்கும் சுனீதியை விட்டு வெளியூருக்கு பொருள் தேடிச் சென்றான். அவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது.
வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு தன் குழந்தையையும் கவனித்துக் கொண்டாள்.
கணவன் வீட்டாரின் பல கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டு சுனீதி, ஸ்ரீ சந்தோஷி மாதாவை வணங்கி வந்தாள். அவளின் பக்தியைக் கண்டு ஸ்ரீ சந்தோஷி மாதா பேய் உருக்கொண்டு வந்தாள், பேய் உருவைக் கண்ட அனைவரும் சத்தம் போட்டுக்கொண்டு ஓடினார்கள். தஞ்சம் அடைய வழி இல்லாமல் தவித்தனர். சுனீதி தன் குழந்தையை மடியில் வைத்திருந்தாள். இந்த சத்தம் கேட்டு தான் வழிபடும் மாதா வந்துகொண்டிருக்கிறாள் என்று எண்ணி, மடியில் குழந்தை இருப்பதை மறந்து சட்டென எழுந்தாள். அவள் எண்ணத்தில் ஸ்ரீ சந்தோஷி மாதா நிறைந்திருந்தாள். குழந்தை கீழே விழாமல் சந்தோஷி மாதா தன் கையில் ஏந்தினாள். சுனீதிக்கு சகல சம்பத்தும் கிட்ட ஆசிர்வதித்தாள்.
தங்களுக்கு பேய் உருவாகவும், சுனீதிக்கு தெய்வமாகவும் கட்சி கொடுத்ததை அறிந்து, தம் குற்றத்தை எண்ணி மனம் வருந்தினார்கள். மனம் திருந்திய அவர்களுக்கும் தன் திருவுருவத்தைக் காட்டினாள் ஸ்ரீ சந்தோஷி மாதா. அப்போது அனைவரும் ஸ்ரீ சந்தோஷி மாதாக்கு ஜெய் !
ஸ்ரீ சந்தோஷி மாதாக்கு ஜெய் !
ஸ்ரீ சந்தோஷி மாதாக்கு ஜெய் !
என்ற கோஷங்களை எழுப்பினர்.
குடும்ப ஒற்றுமைக்காக ஸ்ரீ சந்தோஷி மாதாவை வணங்குவது வழக்கம். கடலை மற்றும் வெல்லம் ப்ரியமான உணவு. புளிப்பு ஆகாது. விரதமிருக்கும் நாட்களில் யாருக்கும் காசு கொடுக்க கூடாது.
காயத்திரி மந்திரம்
ஓம் ருபாதேவீ ச வித்மஹே; சக்திரூபிணி தீமஹி
தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்!
நன்றி - கவிதாமணி நாச்சியார்.
Like · Comment · 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக