திங்கள், ஜனவரி 11, 2016

கூட்டணிக்கு ஜே? குழப்பத்தில் ஜெ!-விகடன்


ஜெயலலிதா சலனப்பட்டுப்போய் இருக்கிறார். சென்னை திருவான்மியூரில் பொதுக்குழு என்ற பெயரால் கூட்டப்பட்ட அ.தி.மு.க திருவிழாவில் அவர் பேசியிருக்கும் பேச்சு, அவர் பெரிய குழப்பத்தில் இருக்கிறார் என்பதை பட்டவர்த்தனமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது!
‘நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டி’ என ஒருகாலத்தில் அறிவித்த ஜெயலலிதா அல்ல இவர்.
‘எனக்கு முன்னால் பார்க்கிறேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளையே காணோம்’ என கர்ஜித்த ஜெயலலிதாவைக் காணவில்லை.
`எந்தக் கட்சியையும் கூட்டுச்சேர்க்காமல் தனித்து நிற்க அ.தி.மு.க தயார்;  கருணாநிதி தயாரா?’ என ஜெயலலிதா வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை.
‘எங்களுக்கு எவர் தயவும் தேவை இல்லை’ என்ற பிரகடனத்தைப் பார்க்க முடியவில்லை.
பழைய ஜெயலலிதாவின் இந்தப் போர்ப்பிரகடனங்கள் எல்லாம் வெள்ளம்போல வடிந்துவிட்டன. வரப்போகும் தேர்தல் அவரைப் பயமுறுத்தத் தொடங்கியிருப்பது அவரது வார்த்தைகளிலேயே தெரிகிறது.
`இந்தப் பொதுக்குழுத் தீர்மானத்தின்படி, வரும் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு, எனக்கு நீங்கள் முழு அதிகாரம் அளித்துள்ளீர்கள். ஒவ்வொரு தேர்தலிலும் அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்தல் வியூகங்களை நான் அமைத்துவருகிறேன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
தேர்தல் களத்தில் வெற்றிபெற நாம் பல்வேறு உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் விதமாக நாம் உத்திகளை வகுக்க வேண்டும். தேர்தலைச் சந்திப்பதற்கு எந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய உத்தி என எதுவும் கிடையாது. இந்த அடிப்படையில்தான் 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடளுமன்றத் தேர்தலை, ஒருசில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்கொண்டோம். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒருசில கட்சி களுடன் கூட்டணி அமைத்து எதிர்கொண்டோம். 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தனித்தே போட்டியிட்டு 37 இடங்களை வென்று, இன்று மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயரைப் பெற்றுள்ளோம். அதேபோன்று, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப நான் சரியான முடிவை எடுப்பேன்’ – இதுதான் ஜெயலலிதாவின் திருவான்மியூர் வியூகம்!
கூட்டணி வைத்தும் போட்டியிட்டுள்ளோம்; தனித்தும் போட்டியிட்டுள்ளோம். எப்படியும் போட்டியிடுவோம் என்பதுதான் ஜெயலலிதா பேச்சின் உட்கருத்து.
2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நீங்கலாக, ஜெயலலிதா தனது அரசியல் வாழ்க்கையில் எதிர்கொண்ட அனைத்து சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களிலும், கூட்டணி அமைத்தே அதை எதிர்கொண்டார் என்பதே வரலாறு. 1991-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் ஆட்சியைப் பிடித்தார். அப்போது காங்கிரஸுடன் கூட்டணி. 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தார். அப்போது மூப்பனார் உள்ளிட்ட ஏராளமான கட்சிகளுடன் கூட்டணி. 2011-ம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்தார். ஒரே ஒரு எம்.எல்.ஏ வைத்திருந்த விஜயகாந்துக்கு, 41 தொகுதிகளைத் தூக்கிக்கொடுத்து அவரை கூட்டணியில் சேர்த்துக் கொண்டார். மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் கூட்டணி அமைத்து, கூட்டணியின் மூலமாகவே வென்று முதலமைச்சர் ஆனவர் ஜெயலலிதா. தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர் அல்ல. இந்த நடைமுறை உண்மைதான், ‘சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்தல் வியூகம்’ என்ற வார்த்தைகளை அவரை வழிமொழியவைக்கிறது.
2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 44 சதவிகித வாக்குகளைப் பெற்று, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் கன்னியாகுமரி, தருமபுரி நீங்கலாக 37 தொகுதிகளை ஜெயலலிதா கைப்பற்றினார். இது ஒரு மகத்தான சாதனை. இதற்கு முன்னர் இத்தனை தொகுதிகளை ஒரே கட்சியோ, இத்தனை சதவிகிதத்தை ஒரே கட்சியோ பெறவில்லை என்பதும் உண்மைதான். 44 சதவிகித வாக்குகளை நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற ஜெயலலிதா, இரண்டே ஆண்டுகளுக்குள் நடக்கும் தேர்தலைத் துணிச்சலாக, தனித்தே எதிர்கொள்ளலாம். ஏனென்றால், 44 சதவிகித ஆதரவை தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க., காங்கிரஸ், ம.தி.மு.க., த.மா.கா., இரண்டு கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய அனைத்துக் கட்சிகளும் சேர்ந்தால்கூட எட்டுவது சிரமம். எனவே, ஜெயலலிதா தயங்கத் தேவை இல்லை. ஆனாலும் ஏன் தயங்குகிறார்?
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகள் இரண்டாக உடைந்துவிட்டன. ஆளும் ஆட்சியின் எதிர்ப்பு வாக்குகள் பா.ஜ.க. – தே.மு.தி.க – பா.ம.க – ம.தி.மு.க ஆகிய கட்சிகள் கொண்ட கூட்டணிக்குப் போய்விட்டன. சுமார் 74 லட்சம் வாக்குகளை இந்தக் கூட்டணி பெற்றது. தமிழ்நாடு அரசியலில் தி.மு.க., அ.தி.மு.க அல்லாத கூட்டணி இத்தனை லட்சம் வாக்குகள் பெற்றது கடந்த தேர்தலில்தான். இப்படி ஒரு கூட்டணி அமையாமல் போயிருந்தாலோ அல்லது இவர்கள் தி.மு.க-வுடன் இணைந்திருந்தாலோ, ஜெயலலிதாவின் மாபெரும் வெற்றி சாத்தியமாகி யிருக்காது. இது மற்றவர்களைவிட ஜெயலலிதா வுக்கு நன்கு தெரியும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கத் தவறிய தி.மு.க., இந்தச் சட்டமன்றத் தேர்தலில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதை ஜெயலலிதா உணர்ந்துவிட்டார். தே.மு.தி.க., காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே தி.மு.க கூட்டணியில் இடம்பெறும் என ஜெயலலிதா நினைக்கிறார். கடைசி நேரம் வரை போக்குக்காட்டி முடிந்தவரை கறக்கும் தந்திரம்கொண்டவர் விஜயகாந்த் என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும். கடந்த தேர்தலின் போது போயஸ் கார்டன் வீட்டுக்கு 7 மணிக்குப் போவதற்கு முன்னர் வரை, ‘தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே ஆட்சிக்கு வரக் கூடாது’ எனச் சொல்லிவந்தவர்தான் விஜயகாந்த். ‘41 ஸீட்டுக்கு மேல் கூட்ட முடியாது. இப்போது வந்து கையெழுத்து போடாவிட்டால், அதற்கும் சேர்த்து அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுவிடுவார்கள்’ என பண்ருட்டி ராமச்சந்திரன் மூலமாகச் சொன்ன பிறகுதான், விஜயகாந்த் கிளம்பினார். இப்போதும் அப்படித்தான் கோபாலபுரம் போவார் என நினைக்கிறார் ஜெயலலிதா.
தி.மு.க – தே.மு.தி.க கூட்டு சேர்ந்தால் அதில் காங்கிரஸும் இடம்பெறும் என்பதும் ஜெயலலிதாவின் முடிவு. காங்கிரஸ் கட்சிக்குப் பகிரங்க அழைப்பை கருணாநிதி விடுத்துள்ளார். கேரளாவில் வைத்து இது தொடர்பாக சோனியாவிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியுள்ளார். ‘கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம். என்றாலும் தி.மு.க-வுடன் இணக்கமாகச் செல்லுங்கள்’ என அப்போது சோனியா கூறியுள்ளார். இப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அது தி.மு.க-வுக்கு வலுசேர்ப்பதாக அமையும் என ஜெயலலிதா நினைக்கிறார்.
மழைக்கு முந்தைய நிலவரப்படி தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க – தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க., த.மா.கா  ஆகிய ஏழு  அணிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலைமை இப்போது மாறிக்கொண்டி ருக்கிறது. தி.மு.க எல்லா கட்சிகளுடனும் பேசி வருகிறது. தே.மு.தி.க., காங்கிரஸ், த.மா.கா., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சித் தலைவர்களிடம் தனது எண்ணங்களை வெளிப்படுத்திவருகிறது தி.மு.க. யார் வருவார்கள், யார் வர மாட்டார்கள் என்ற தெளிவு கிடைக்காவிட்டாலும் கருணாநிதியின் மெகா கூட்டணி முயற்சிகளை ஜெயலலிதா அறிந்தே உள்ளார். இந்த நிலையில் தனித்துப் போட்டி என்ற முடிவு சரியானதாக இருக்காது என்ற முடிவுக்கு ஜெயலலிதா வந்துவிட்டதையே அவரது பேச்சு வெளிப்படுத்துகிறது.
தி.மு.க அணியில் எந்தெந்தக் கட்சிகள் சேருகிறது என்பதைப் பொறுத்து, சில கட்சிகளைச் சேர்க்க நினைக்கிறார் ஜெயலலிதா. மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளை, தன்னோடு சேர்க்க ஜெயலலிதா முயற்சிக்கலாம். த.மா.கா-வை தனக்கு அனுசரணையான கட்சிகளில் ஒன்றாக ஜெயலலிதா நினைக்கிறார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன், ஏற்கெனவே அ.தி.மு.க கூட்டணியில்தான் இருக்கிறார்.
தங்களை இணைத்துக்கொள்வார் என பா.ஜ.க-வும் நம்புகிறது. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு இரண்டு தயக்கங்கள் உள்ளன. அந்தக் கட்சியைச் சேர்த்துக்கொண்டால், சிறுபான்மையினர் வாக்குகள் மொத்தமாக தி.மு.க-வுக்குப் போய்விடும் என்பது ஒன்று. இரண்டாவது, பா.ஜ.க., அ.தி.மு.க அணியில் இடம்பெற்றால் தே.மு.தி.க நிச்சயம் தி.மு.க-வுடன் போய்விடும் என்பது. ‘பா.ஜ.க – தே.மு.தி.க அணி அமைவதே அ.தி.மு.க-வுக்கு நல்லது’ என நினைக்கிறார் ஜெயலலிதா.
இந்தக் கூட்டணிக் கணக்குகள்தான் நாஞ்சில் சம்பத்தின் பதவிப் பறிப்புக்குமே பின்னணிக் காரணம். ‘யானை நடந்து வந்தால் எறும்பு சாகத்தான் செய்யும்’, ‘ஒரு வீட்டில் இழவு என்றால், இன்னொரு வீட்டில் திருமணம் நடக்கக் கூடாதா?’ என்றெல்லாம் கேட்டதற்காக நாஞ்சில் சம்பத் பதவி பறிக்கப்படவில்லை. கூட்டணியில் யாரை எல்லாம் சேர்க்கலாம் என  ஜெயலலிதா மனக்கணக்கு போட்டுக் கொண்டிருக்க… மொத்தக் கட்சிகளையும் ஒரே பேட்டியில் நாஞ்சில் சம்பத் கழுவிக் கொட்டி விட்டார்.
`புதுவரவே இல்லாத கட்சி ம.தி.மு.க.’ `கம்யூனிஸ்ட்கள் இருக்கும் நாகப்பட்டினமும் திருத்துறைப்பூண்டியும்தான் தமிழ்நாடா?’, `விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காட்டுமன்னார் குடியை விட்டால் கீழவளவில்தான் இருக்கிறது’, `கன்னியாகுமரியில் ஜெயித்தது பா.ஜ.க அல்ல… மதம்’, `தருமபுரியில் ஜெயித்தது பா.ம.க அல்ல… சாதி’, `காங்கிரஸ் கட்சியை நாங்க சேர்த்துக்க மாட்டோம்’ என்ற வார்த்தை வெட்டுக்கள் எல்லாம் நாஞ்சில் சம்பத் பேட்டியில் இருந்தன. ‘சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் வியூகங்களை நான் அமைத்துவருகிறேன்’ என ஜெயலலிதா பேசிய இரண்டாவது நாளே, சூழ்நிலையை சூனியம் ஆக்கினார் நாஞ்சில் சம்பத்.
ஏதோ ஒரு வார்த்தை சொன்னதற்காக நட்ராஜை (அதைச் சொன்னவர் வேறு நட்ராஜாக இருந்தாலும்!) கட்சியைவிட்டே நீக்கிய ஜெயலலிதா, நாஞ்சில் சம்பத்தை அப்படி கட்சி்யை விட்டே நீக்கவில்லை; பதவியை மட்டும்தான் பறித்திருக் கிறார். ஏனென்றால், இப்போதைய சூழ்நிலையில்  எந்த ஒருவரையும் அவர் இழக்க விரும்பவில்லை. எந்தவொரு கட்சியையும்தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக