வியாழன், ஜனவரி 21, 2016

மிதுன ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்


மிதுன ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்
உங்களின் மிதுன ராசிக்குரிய அதிபதி புதன் ஆவார். மிதுன புதன் என்பது சாத்வீகமானதாகும். எதற்கும் சட்டென்று அவசரப்பட மாட்டீர்கள். முதலில் தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக் கொண்டு, பதில்களை நோக்கி நகர்கின்ற தன்மையை உங்களுக்குக் கொடுப்பார் புதன். அதனாலேயே உங்களில் படைப்பாளிகள் அதிகம் பேர் உண்டு. நேரடியான விமர்சனங்களாக இல்லாமல், ‘இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்’ என நாசூக்கான ஆலோசனையும் அறிவுரையுமாகப் பேசுவீர்கள்.
இப்படிப்பட்ட உங்களுக்கு ஆறாம் இடம் என்றழைக்கப்படும் கடன், நோய், எதிரிகள் ஸ்தானத்திற்கு அதிபதியாக செவ்வாய் வருகிறார். ஏற்கனவே, புதனும் செவ்வாயும் பகையாவார்கள். புதன் என்பது, அத்துமீறாமல் அமைதியாகவே கருத்துகளை வெளியிடும் கிரகமாகும். ஆனால் செவ்வாய் என்பது, ‘மீறினால் என்ன’ என்று சவால் விட்டு சட்டத்தை உடைக்கும் கிரகமாகும். இப்படிப்பட்ட செவ்வாய் உங்களின் ஆறாமிடத்திற்கு அதிபதியாக வருவதால், எங்கேயாவது வாயை விட்டு சிக்கிக் கொள்வீர்கள். பேச வேண்டிய இடத்தில் பேசாமல், பேசக் கூடாத இடத்திற்குப்போய் பேசி சிக்கிக் கொள்வீர்கள்.
செவ்வாய் உணர்ச்சிகரமாகவும் கோபத்தோடும் பேசி சிக்க வைத்து விடுவார். சின்ன விஷயத்திற்குப் போய் சடாரென்று பேசி பெரிய பிரச்னையில் மாட்டிக் கொள்வீர்கள். ‘‘அப்படியெல்லாம் அவரு பேசவே மாட்டாரு. என்னன்னு தெரியலை’’ என்பார்கள். உங்கள் ராசியாதிபதியான புதன் சாத்வீகமும் சௌம்யமும் நிறைந்தது. ஆனால் இந்த செவ்வாய், அடிக்கடி எமோஷனலாகி ஆணவத்தோடு செயல்பட வைத்து விடுவார். இந்த முரண்பாட்டை சமமாக்க முடியாமல் எப்போதும் தவிப்பீர்கள். ‘‘நான் என்ன சொல்ல வர்றேன் தெரியுமா’’ என்று கேட்டுவிட்டு அதீத கோபத்தோடும் கடுமையாகவும் செவ்வாய் பேச வைத்து விடுவார்.
செவ்வாய் ரத்த பந்தங்களுக்கு உரியவராக இருப்பதால், உங்களுக்கு உடன்பிறந்தோர்களுடன் பிரச்னை ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு. மேலும், செவ்வாய் பூமிக்குரியவராக இருப்பதால் மிதுன ராசியில் பிறந்த சகோதரர்களுக்குள் திருமணம் செய்வதற்கு முன்னரே சொத்துக்களை பிரித்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தை பெற்றோர் சரியாகச் செய்து விடவேண்டும். இல்லையெனில் சர்வ சாதாரணமாக அண்ணன் தம்பிகளுக்குள் ஒருவருக்கொருவர் வழக்கு தொடர்ந்து மோதிக் கொள்வார்கள். மிதுன ராசியில் பிறந்தாலேயே, ‘உடன்பிறந்தவர்கள் ஏதாவது செய்தால் செய்யட்டும். இல்லையெனில் விட்டுவிடுவோம்’ என்கிற மனோநிலைக்கு வந்து விடவேண்டும். ஆனாலும், என்னதான் நீங்கள் ஏமாற்றப்பட்டாலும் அண்ணன், தங்கை, அக்கா, தம்பி என்று அவர்கள் நினைவாகத்தான் இருப்பீர்கள். உங்களில் சிலருக்கு உடல்நலம் குன்றிய உடன்பிறப்பெல்லாம் உண்டு.
பூமிகாரகனாக செவ்வாய் வருவதால் நிலம் வாங்குவதை விட, கட்டிய வீடாக வாங்குவது நல்லது. இதையும் மீறி, வெறும் நிலமாக வாங்க ஆசைப்படுபவர்கள், வாழ்க்கைத்துணையின் பெயரில் பதிவு செய்து கொள்வது நல்லது. அப்படி வாங்கிவிட்டீர்கள் எனில், பேருக்காவது அஸ்திவாரம் போட்டு மூன்றடி உயரத்திற்கு சுவர் எழுப்புங்கள். இல்லையெனில், ‘‘இந்த இடத்தை வாங்கினதுலேர்ந்து பிசினஸே மந்தமாயிடுச்சி’’ என்பீர்கள். அதேபோல தாய்ப் பத்திரங்கள் சரியாக உள்ளனவா என்று பார்த்துத்தான் வாங்க வேண்டும். பிரச்னைக்குரிய சொத்துக்களை வாங்கி வைத்துவிட்டு அவஸ்தைப்படாதீர்கள்.
நீங்கள் காவல்துறை, மின்சாரத்துறை, நில அளவை போன்ற துறை சார்ந்த இடங்களில் வேலை செய்தால் அடிக்கடி எதிர்ப்புகள் வந்தபடி இருக்கும். இடமாற்றத்தைத் தவிர்க்க முடியாது. ஆறாமிடத்து செவ்வாய் இப்படி ஏதாவது பிரச்னைகளைக் கொடுத்து, அவற்றைப் பெரிதாக்கி, ஒரு படிப்பினையையும் தருவார். பலவித வேண்டாத நட்பைக் கொடுத்தெல்லாம் வாழ்க்கை அனுபவங்களை கூட்டுபவராகவும் செவ்வாய் செயல்படுவார். வேகமாகப் பேசுபவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், கோபக்காரர்களிடம் எப்படி ஒதுங்கியிருக்க வேண்டும் என்றெல்லாமும் செவ்வாய் சொல்லித் தருவார். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் குமார், செல்வம், பழனிவேல் என்பது போன்ற பெயருள்ளவர்களிடம் அவ்வப்போது உரசல் வந்து நீங்கும். காரணமற்ற பகை வளரும். ‘‘என்னமோ அவரைப் பார்த்தா புடிக்கலை’’ என்று சொல்பவர்களும் உங்களில் சிலர் உண்டு.
அலுவலகத்தில் மேலதிகாரியின் தவறை நேரடியாக தலைமை அதிகாரியிடம் கொண்டு செல்வீர்கள். நீங்கள் சொல்வதில் தவறில்லை. ஆனால் அவர்களாகக் கூப்பிட்டு அபிப்ராயம் கேட்கும்போது, அவர் என்ன செய்தால் நல்லது என விளக்குவது போலப் பேசுங்கள். இல்லையெனில், உங்களை சம்பந்தப்பட்டவர் எந்தக் காரணமும் இல்லாமல் முதல் எதிரியாகப் பாவித்து விடுவார். இதனால் மறைமுகப் பகை வளர்ந்து, தேவையற்ற வம்புகள், வழக்குகள் வரை நீளும். ‘‘எப்போடாப்பா என் மேல பழி சுமத்தறதுன்னு காத்துக்கிட்டிருக்கானுங்க’’ என்று அடிக்கடி நீங்களே நொந்து கொள்ளும்படியாகும்.
கைமாற்றாக அடிக்கடி கடன் வாங்க வேண்டாம். நீங்கள் பெரிய கடன்களைக்கூட அடைத்து விடுவீர்கள். ஆனால், சிறிய கடன்களை அடைக்க மறப்பீர்கள். இதனால் வெளியிடங்களிலும் அலுவலகத்திலும் நட்பை இழக்க வேண்டியது வரும். சிறிய பெட்டிக் கடைக்காரன் கூட, ‘‘முதல்ல காசைக் கொடுங்க ஸார். இதோட நூறு ரூபா நீங்க தரணும்’’ என்று அவமானப்படுத்தி விடுவான். இதேபோல சேமிப்புகளை அடிக்கடிக் கரைத்து விடுவீர்கள். தொடர்ச்சியாக உங்களால் சிறிய அளவிலான தொகையைக் கூட சேமிக்க முடியாமல் போய்விடும்.
நீங்கள் சொத்துக் கடன் வாங்கலாம்; வீட்டையோ இடத்தையோ அடகு வைத்துக்கூட கடன் எடுக்கலாம். ஆனால், தங்க நகையை மட்டும் அடகு வைக்கக் கூடாது. ஏனெனில், தங்கத்திற்குரிய குருவானவர் உங்களுக்கு பாதகாதிபதியாக வருகிறார். நகை மூழ்கிப் போய் வீட்டுக்கே திரும்ப வராமல் போய்விடும் அபாயம் உண்டு.
சமூகப் புரட்சி என்று திடீரென்று தோன்றும் அமைப்புகளில் சென்று சேரும்போது எச்சரிக்கை வேண்டும். ஏனெனில், நாட்டில் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்பதிலும், அரசுக்கு பெட்டிஷன் எழுதுவதிலும் வல்லவர்கள் நீங்கள். உங்களின் மூளை பலத்தை நன்கு உபயோகித்துக் கொண்டு, பிரச்னை வரும்போது உங்களைத் தனியாகக் கழற்றி விட்டு விடுவார்கள். சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்கிற சூழலுக்கு ஆளாவீர்கள். தூது கிரகமாக புதன் இருப்பதால், செவ்வாய் எமோஷனலாக உங்களைப் பேச வைத்து நண்பர்களைக் கூட எதிரியாக்குவார். உங்களின் சொந்த ஜாதகத்தில் குருவும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடுவீர்கள். மேலும், குரு பாதகாதிபதியாக இருப்பதால் பதவியையும் பறிகொடுத்து பதவியில் இருக்கும்போது தண்டனையையும் அனுபவிக்கும்படி சிலருக்கு நேரிடும்.
இருசக்கர வாகனங்களிலுள்ள சைலன்சரில் அடிக்கடி சுட்டுக் கொள்வீர்கள். கவனமாக இருங்கள். மின்சாரத்தைக் கையாளும்போது மற்றவர்களை விட நீங்கள் பன்மடங்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரவே தீராதா என்று அடிக்கடி நொந்து கொள்வீர்கள். அடிக்கடி எண்டோஸ்கோபி எடுக்கும் ராசிக்காரரும் நீங்கள்தான். இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது ஆட்டுக் கிடா குறுக்காக வந்தால் எச்சரிக்கையாக இருங்கள். பெரும்பாலும் விபத்து அப்படித்தான் ஏற்படும்.
பக்கத்து தெருவுக்கு வண்டி எடுத்துக்கொண்டு போகும்போது கூட ஹெல்மட் போட்டுக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில், கடந்த கால நினைவுகளை மறந்துபோதல் போன்ற மூளை சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் வயதான காலத்தில் பெரும்பாலும் வரும். ஆனால், உங்களுக்கு விபத்து ஏற்படும்போது மிக முக்கியமாக தலையில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜனன இந்திரியங்களுக்கு உரியதாகவும் செவ்வாய் வருவதால் ஆண்களுக்கு விதைப்பை வீக்கம் போன்ற தொந்தரவுகள் வந்து நீங்கும். ரத்தம் உறைதலில் பாதிப்பு ஏற்படும்.
புதனின் யோசனைத் திறனையும் செவ்வாயின் ஆக்ரோஷத்தையும் சரிசமமாகக் கலக்கும் திறன் பெற்றவர்களாக நீங்கள் இருந்தால் பிரச்னையில்லை. இல்லையெனில் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும். கோபத்தில் புதன் தாறுமாறான சிந்தனைகளைத் தந்துவிடுவார். ஆரம்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவேண்டும். எதிலுமே பழிக்குப் பழி என்று நீங்கள் இறங்கினால், உங்கள் இயல்பிலிருந்து வேறுபட்டால், பிரச்னைகளில் எளிதாக சிக்கிக் கொள்வீர்கள். சபதம், சவால் என்றெல்லாம் பேசாமல், வாயை விடாமல், உறுதியை உள்ளத்தில் வைத்து உழைப்பை வெளியில் கொட்டி முன்னேறுங்கள். நீங்கள் சவால் விட்ட காரியங்கள் தோல்வியுறும் வாய்ப்பு உள்ளது.
மறியல், கண்டனம் ஆர்ப்பாட்டங்களுக்கு ஸ்லோகன்களையும், புரட்சிகரமான வசனங்களையும் எழுதித் தாருங்கள். ஆலோசனை கேட்டால் சொல்லுங்கள். ஆனால், கொடிபிடித்து நரம்பு புடைக்க கத்தாதீர்கள். ஏனெனில், கண்டனம், மறியல் போன்ற போராட்டமான விஷயங்கள் கூட ஆறாம் இடத்திற்கு உரியவை ஆகும். ஆளுமையிலும், அதிகாரத்திலும் செவ்வாய் திருப்தி காணுமெனில், புதன் ஆலோசனையிலும், திட்டம் தீட்டுவதிலும் திருப்தி காணும். எனவே, இந்த அலைவரிசை மாறும்போது பிரச்னைகள் தோன்றும். துவர்ப்பு ருசி அதிகமுள்ள பாக்கு போடாதீர்கள். உங்களின் செவ்வாய் தன்மையை அது அதிகப்படுத்தும்.
‘‘கூடப் பிறந்தவங்க ஏதாவது சொல்லிட்டுப் போனா போகட்டும்’’ என்று நீங்கள் வந்துவிட்டால் பரவாயில்லை. ஏனெனில், அவர்களால் வரும் சிறு மன உளைச்சலைக் கூட தாங்க முடியாமல் தவிப்பீர்கள். அலுவலகத்தில் எங்கோ, யாரோ செய்த தவறுக்கெல்லாம் தன்னையும் ஏதேனும் செய்து விடுவார்களா என்றெல்லாம் மனோபயம் உங்களை பீடிக்கும். நண்பர்களே உங்களுக்கு எதிரியாகும் சூழ்நிலையை சகோதர உறவுகள் உருவாக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அபராதம் செலுத்துகிறீர்களோ இல்லையோ, உங்கள் சகோதர, சகோதரிகள் செய்யும் தவறுகளுக்குத்தான் அபராதம் செலுத்துவீர்கள்.
நவகிரகங்களில் சூரியன் மற்றும் குருவிற்கு அடுத்தபடியான முழுமையான ஆண் கிரகம் செவ்வாய்தான். அங்காரகன் என்று இவரை ஆசையோடு அழைப்பர். ஆயுதம் ஏந்தும் காவலும் ராணுவமும் இவரின் இரு கண்கள். எனவே, ‘ராணுவப் பகுதி... உள்ளே நுழையாதீர்கள்’ என்ற தகவல் பலகையை மீறி உள்ளே செல்ல முயற்சிக்காதீர்கள். உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் சரி... அல்லது பிரச்னையை எதிர்கொள்ளும் திறன் வேண்டும் என்று கேட்டாலும் சரிதான்... நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் முருகப் பெருமான். மேலும், அத்தலத்தில் அங்காரகனுக்கு சிறப்பு வழிபாடோ அல்லது அங்காரகன் வழிபட்ட தலமாகவோ இருந்தால் நல்லது. அப்படிப்பட்ட தலமே வைத்தீஸ்வரன்கோயில் ஆகும்.
இங்கு ஈசன் வைத்தியநாதர் என்றும், அம்பாள் தையல்நாயகி எனும் திருப்பெயரோடும் அருள்பாலிக்கிறார்கள். அதேசமயம் முத்துக்குமாரசுவாமிக்கும் அங்காரகனுக்கும் பிரதான அம்சம் கொடுத்து பக்தர்கள் வழிபடுகிறார்கள். பொதுவாகவே ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இங்கு சென்று வழிபட்டு வருவார்கள். எனவே, நீங்களும் செவ்வாயால் ஏற்படும் எல்லா பாதிப்புகளிலிருந்தும் விடுபட நிச்சயம் வைத்தீஸ்வரன்கோயில் முருகனையும், அங்காரகன் என்கிற செவ்வாய் பகவானையும் தரிசியுங்கள். கடனையும் நோய்களையும் விரட்டுங்கள்.
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக