வியாழன், ஜனவரி 21, 2016

கன்னி ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்

கன்னி ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்
புத்தியை பிரதானமாக்கும் புதன் என்கிற கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவர் நீங்கள். எப்போதுமே ஒரு ஈர்ப்பு சக்தியோடு, அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மையைப் பெற்றிருப்பீர்கள். நீங்கள் நடமாடும் நூலகம் எனில் அது மிகையில்லை. பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்களைக் கண்டால் பிடிக்காது. சுரீரென்று விளாசுவீர்கள். ‘‘அவனா பார்த்து திருந்தட்டும்’’ என்கிற சொல்லே உங்களுக்குப் பிடிக்காது. ‘‘தப்புன்னா தப்புதான். அதைச் சொன்னாதான் உறைக்கும்’’ என்பதுதான் உங்களின் பாலிஸி. பிறகு அதற்காக உள்ளுக்குள் வருத்தப்படுவீர்கள். இப்படி பாதிக்கப்பட்டவர்கள், நீங்கள் எப்போது ஏமாறுவீர்கள் என்று காத்திருப்பார்கள். நீங்கள் கொஞ்சம் தவறு செய்தாலும் அதைப் பெரிதாக்கவே முயற்சிப்பார்கள்.
உங்களின் கடன், நோய், எதிரிக்குரிய இடமாக கும்பச் சனி வருகிறது. உங்களின் எதிரிகள் வெகு வருடங்களாக காத்திருந்துதான் தாக்குவார்கள். நீங்கள் எதிரிகளைக் கையாளும் விதமே வித்தியாசமானது. உள்ளுக்குள்ளே ஒரு லிஸ்ட் போட்டுக் கொண்டே வருவீர்கள். ‘‘இவன் அங்க நம்மள பத்தி சொல்றான்...’’, ‘‘இவன் இந்த இடத்துல நம்ம காலை வாரி விடறான்...’’ என்று பொறுமையாக யோசித்துக் கொண்டே வருவீர்கள். சரியான சந்தர்ப்பம் வரும்போது வைத்து விளாசி விடுவீர்கள்.
எந்த விஷயமாக இருந்தாலும் சரிதான்... உள்மனதோடு ஒருமுறை உரையாடிவிட்டுத்தான் வெளிப்படுத்துவீர்கள்.
நெருப்பு கிரகமான சூரியன் முதல் ஐந்து பாகைக்குள்ளேயே உங்கள் ராசிநாதனான புதனோடு நெருக்கமாக இருக்கிறது. அதனால் கோபமென்றால் கொந்தளிப்பீர்கள். நரம்புகள் புடைக்க சத்தமிடுவீர்கள். ‘‘இதுக்குப் போய் இவ்ளோ கோவமா’’ என்பதுபோல எல்லோரும் உங்களை பார்ப்பார்கள். அதுவே கொண்டாட்டம் எனில் குழந்தையாகி விடுவீர்கள். இவ்வாறு கணத்திற்கு கணம் உங்கள் உருவம் மாறிக் கொண்டேயிருக்கும். எந்த உணர்வாயினும் சரிதான்... வெகுநேரம் உங்களிடம் நீடிக்காது. புதனின் வேகத்தால் வெவ்வேறு விஷயங்களுக்கு மனம் ஓடிக் கொண்டேயிருக்கும். மூளையை மட்டும் வைத்துக் கொண்டு யோசிக்க மாட்டீர்கள். தலைமுடியிலிருந்து கால் நகம் வரை உங்களுக்காக யோசிக்க வைப்பீர்கள். ஏனெனில், அத்தனை உணர்வு பூர்வமாக புதன் உங்களை மாற்றுவார்.
எதையுமே கொஞ்சம் மிகையாகத்தான் பார்ப்பீர்கள். சிறிய தலைவலியாக இருந்தாலும் அதை அலட்சியமாக விடமாட்டீர்கள். ஏதோ பெரிய தொந்தரவு போல் பெரிதாக்கிப் பார்க்கும் குணம் இருக்கும். ஒருவர் உங்களின் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டால் அவரைப் பற்றி மரம், மட்டை, செடி, கொடி என்று எல்லோரிடமும் சொல்வீர்கள். துரோகம் இழைத்து விட்டாலோ, ‘‘அவரைப் போல கேவலமானவரு யாரும் இல்லை’’ என்று சொல்லத் தயங்க மாட்டீர்கள். மனதிற்குப் பிடித்தவர்களுக்கு கணக்கு வழக்கு பார்க்காமல் செலவு செய்வீர்கள். ‘நீரா... பணமா...’ என்று தெரியாமல் அள்ளி வீசி செலவு செய்வீர்கள்.
மனதில் பட்ட விஷயத்தை உடனே செயல் வடிவத்துக்கு மாற்ற இறங்குவதால், சுற்றியிருப்போர் கொஞ்சம் அதிர்ந்து போவார்கள். மாறி மாறி அறிவுரை வழங்குவார்கள். இவர்களெல்லாம் தோழர்களா எதிரிகளா என்று ஆரம்பத்தில் கொஞ்சம் குழம்பிப் போவீர்கள். இவர்களை எந்த இடத்தில் வைப்பது என்று தெரியாமல் தவிப்பீர்கள். ஆனால், வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால் யார் சொன்னாலும் கேட்க மாட்டீர்கள். பெரும்பாலும் உங்களுக்கு எதிரிகளே, நீங்கள் மதிக்கும் நபராகத்தான் இருப்பார்கள். உங்களால் போற்றப்பட்டவர்களே உங்களை இழித்தும் பேசுவார்கள். எனவே, அவர்களை நீங்கள் எதிர்மறையாக நினைக்கும் சூழ்நிலையும் உருவாகும். உங்களிடம் ஒருவர் எப்படி நடந்து கொள்வார்களோ, அப்படித்தான் நீங்களும் நடந்து கொள்வீர்கள். உங்களுக்கு மரியாதை கொடுத்தால் நீங்கள் பதிலுக்கு மாலையே போடுவீர்கள். மரியாதையாக நடத்துவதுபோல நடிப்பது புரிந்தால், தூக்கி குப்பைத் தொட்டியில் போடவும் தயங்க மாட்டீர்கள்.
புதனுக்கு சனிக்கும் ஒரு நட்புறவு இருப்பதால் எதிரிகள் நியாயமானவர்களாக இருந்தால் சட்டென்று நண்பர்களாக மாற்றிக் கொள்ளவே முயற்சிப்பீர்கள். புகழ்ந்தால் பிடிக்கும். அதுவே அதிகமாகப் புகழ்ந்தால் ஜாக்கிரதையாகி விடுவீர்கள். மெல்ல அலட்சியப்படுத்தி ஒதுக்குவீர்கள். உங்களின் ஒவ்வொரு விஷயமும் அக்கம்பக்கம், உறவினர்கள் என்று பல்வேறு விதங்களில் பிரதிபலித்த வண்ணம் இருக்கும்.
உங்களின் ஆறாம் இடத்திற்குண்டான சனியே, ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருகிறது. எனவே அடுத்த தலைமுறை மற்றும் குழந்தைகளைப் பற்றி கவனமாக இருப்பீர்கள். அடுத்த தலைமுறை மிகவும் பிரகாசமாக இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். இதனாலேயே பழைய விஷயங்களை நவீனமான முறைகளோடு கலவையாக்கி அவர்களுக்குத் தருவீர்கள்.
பொதுவாகவே புதனுக்கு செவ்வாய் எதிரியாக வருவதால், ரத்த பந்தங்களோடு தீராப் பகை இருந்து கொண்டேயிருக்கும். ஏனோ ரத்த பந்தங்களைவிட நண்பர்கள்தான் உங்களுக்கு அதிகமாக உதவுவார்கள். நீங்கள் வீடு வாங்கினால் எந்தப் பிரச்னையும் வராது. அதே, காலி மனையாக வாங்கினால் பிரச்னை வரும். அப்படி காலி மனை வரும்போதே பத்திரங்களில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என்று பார்த்துவிட்டு வாங்குங்கள். எதிலுமே ஓவர் பட்ஜெட் போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள்.
புதன் அமைதியாகவே கருத்துகளை வெளியிடச் செய்வார். ஆனால், சனி அவ்வப்போது சமூகத்தையே புரட்டிப் போடும் பிரச்னைகளைக் கையாளுவார். நீதி, நேர்மைக்குரிய கிரகமாக சனி வருவதால், நீங்கள் நேர்மையான வழியில் செல்லும்போது வெற்றி உங்கள் வசம் வரும். மாற்று வழிகளைக் கையாளும்போது சனி உங்களை சட்டச் சிக்கலில் சிக்க வைத்து விடுவார். புதனின் வேகமும், சனியின் மந்தத் தன்மையும் உங்களை சில முரண்பாடான மனிதர்களை சந்திக்க வைக்கும். உங்களின் வேகத்தோடு ஒத்துப் போகாத நண்பர்களிடத்தில் சென்று சூழ்நிலைக் கைதியாக இருக்க வேண்டி வரும்.
இதே சனிதான் உங்கள் பிள்ளைகள் ஸ்தானத்தை நிர்ணயிப்பதால், உங்களைப் போன்றே அவர்களும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களை விட்டுப் பிடித்தால், உங்கள் வழிக்கே அவர்கள் திரும்புவார்கள்; எதிர்த்தால் உங்களை வெறுக்கவும் செய்யலாம். உங்களின் ராசியாதிபதியான புதனுக்கும் செவ்வாய்க்கும் பகையென்று முன்னரே பார்த்தோம். எனவே, திருமணத்திற்கு முன்னரே சகோதரர்களுக்குள் சொத்துக்களைப் பிரித்துக் கொள்ள வேண்டும். பெற்றோர் இதை சரியாகப் புரிந்து கொண்டு செய்ய வேண்டும். உங்களில் சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட உடன்பிறப்பெல்லாம் கூட உண்டு.
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக