வியாழன், ஆகஸ்ட் 26, 2010

மரங்களை வெட்டுங்கள்

பதிவு யாருடையது என்பது தெரியவில்லை. ஆனால் எனக்கு மெயிலில் நண்பர் சதீஷ் தாய்லாந்து நாட்டில் இருந்து அனுப்பியிருந்தார்.(இப்படிக்கூட காப்பி அடிக்கலாமோ?) அதனை நான் நம் வலையில் பதிவிடுகிறோம்.

மரங்களை வெட்டுங்கள்

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்

இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.


உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.


அறியாமை

நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!

(பதிவு யாருடையது என்பதையும் , பதிவு பற்றிய லிங்க்கும் நண்பர் சௌந்தர் அவர்கள் அனுப்பியுள்ளார். நன்றிகள் கௌசல்யா அவர்களுக்கு.)


வியாழன், ஆகஸ்ட் 05, 2010

வெள்ளியங்கிரியும் ஈஷா யோகமும்










ஆடிப் பதினெட்டை முன்னிட்டு ஒரு சிறிய பயணமாக வெள்ளியங்கிரிக்கும் அருகிருக்கும் ஈஷா மையத்துக்கும் செல்லலாம் என கிளம்பி பேமிலியாக சென்றோம். கோவையின் போக்குவரத்து நெருக்கடி பேரூர் வரை தொடர்கிறது.
பேரூர் பட்டீஸ்வரர் கோயில் அருகில் இன்னும் அதிக நெருக்கடி . அரைமணீ நேரமாகிறது கோயிலைக்கடக்க.

கடந்து செம்மேடு அடையும் போதே சற்றுக்குளிர் எடுக்க ஆரம்பிக்கிறது. வெள்ளியங்கிரியை அடிவாரம் எட்டும் போது சற்றே மழைச்சாரல் பொழிய ஆரம்பமாகியது. மழைச்சாரலின் குழுமையுடன் கோயிலில் வெள்ளியங்கிரி ஆண்டவரின் தரிசனம் மிக அருமை. சுற்றிலும் பசுமை.

சிறிது காற்று அடிக்கும் போது கூட வானுயர்ந்து நிற்கும் மரங்களின் இலைகளில் இருந்து விழும் மழைத்துளி மிகவும் குளுமையுடன் நம்மீது படுகிறது.

மலை ஏறும் படிக்கட்டை அண்ணாந்து பார்க்கும் போதே சற்று பிரமிப்பு நமக்கு. இந்த படிக்கட்டில் எப்படி ஏறி மலை உச்சி வரை கடந்த இருவருடங்களாக சென்றோம். ஒரு வேளை இரவு நேரங்களில் ஏறத்துவங்குவதால் ஒன்றும் தெரிவதில்லையோ?

அன்னதான மண்டபத்தில் இருந்து அனைவரையும் அழைத்து சாப்பாடு போடுகின்றனர். கூட்டமும் சற்றே குறைவுதான். கோயிலுக்கு வரும் அரசுப்பஸ்கள் அனைத்தும் சொகுசுப்பேருந்துதான். அதனால் பயணமும் அலுப்படையச் செய்யாது. அப்படியே செய்தாலும் கோயில் அமைந்திருக்கும் இடத்தின் அமைதி நம்மை அப்படியே ரிலாக்ஸ் செய்துவிடும்.

இங்கு இருந்து 1 கிமீக்கு அருகில்தான் ஈஷா யோகமையமும் உள்ளது. இங்கு இருக்கும் தியான‌லிங்கம் மிகவும் பெரியது. அமைதிதான் இங்கும் . அதனால் பெண்களை கொலுசுகளைக் கழட்டிவரச் சொல்கிறார்கள். மேலும் குழந்தைகளை தியான லிங்க மண்டபத்தினுள் அனுமதிப்பதில்லை.

இங்கும் அதே மழைச்சாரல்தான் . அதுவுமில்லாமல் குளிர் காற்று மலைஅடிவாரத்திலிருந்து வந்து செல்கிறது. ஆனால் இங்கும் ஏசி வைத்த குடில்களை காணமுடிகிறது. கேண்டீன் ஒன்றும் இங்கு உள்ளது .விலைகள் வழக்கமான சரவணபவன் தான்.

இந்த யோகமையம் சார்பாக பல ஊர்களில் மரங்களை நட்டு வைத்து பராமரித்து வருகிறார்கள். திருப்பூரிலும் நட்டுவைத்துள்ளனர். அவற்றில் சில நல்ல நிலையில் உள்ளது.

ஆனால் இவர்கள் மையம் அருகே மற்றும் செல்லும் வழியில் எங்கும் பார்த்தால் வேலிமுள் மரம்தான் அதிகம் காணப்படுகிறது. புளியமரங்களும் காணப்பட்டாலும் மிகுதி வேலிமுள்தான். இவை சூடும் கூட.

அதுவல்லாமல் வெள்ளியங்கிரி பாதையில் இருந்து இவர்கள் மையத்திற்க்கு செல்லும் பாதை மண்பாதைதான். இவர்களுக்கு இருக்கும் வசதிக்கு வந்து செல்லும் பார்வையாளர்களுக்காக நல்லதரமான சாலையை கோவையிலிருந்தே சொந்தமாகச் செய்யலாம்.

அதேபோல வேலிமுள்களை வெட்டிவிட்டு அல்லது ஊடாக நல்ல தரமான மரங்களை நட்டு பராமரிக்கலாம். வனத்துறை இடமாக இருந்தாலும் மையம் அருகே இருப்பதால் அவர்கள் உதவியுடனே இதைச் செய்யலாம்.

வேலிமுட்களையும்,பாதையையும் பார்த்தவுடன் நம்மனம் சற்றே உள்ளே செல்ல யோசித்தது. இன்னும் சற்று அவர்கள் முயற்சித்தால் யோக மையம் இன்னும் சிறப்படையலாம்.

..

புதன், ஆகஸ்ட் 04, 2010

இந்தக் கொடுமைக்கு கோர்ட்க்கே போயிருக்கலாம்

கோர்ட் நடவடிக்கைகளை மதிக்காமல் நடக்கும் ஜெயலலிதாவைக் கண்டித்து மாவட்டந்தோறும் நடைபெறும் திமுக இளைஞர் அணியினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களால் திருப்பூர் காலை 10 மணீ முதல் போக்குவரத்து நெருக்கடியால் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

இவர்கள் ஆர்ப்பாட்டம் மாநகராட்சிக் கட்டிடம் அருகே நடைபெறுவதாலும் , மாநகராட்சி நகரின் மையப்பகுதியில் இருப்பதாலும் திருப்பூர் ரோடுகள் அனைத்தும் நகரின் மையப்பகுதியினூடாகவே அமைந்திருப்பதாலும் , வாகன ஓட்டிகள் அனைவரும் மிகுந்த சிரமத்தினூடாகவே பயணிக்க வேண்டியுள்ளது.

இவ்வளவு போக்குவரத்து நெருக்கடியில் அம்மையாரை ரெயில்வே ஸ்டேசனில் இருந்து ரமணா ஓட்டல் வரை , காரில் பயணிக்க வைத்தால் போதும் , இந்தக் கொடுமைக்கு கோர்ட்க்கே போயிருக்கலாம் என்று நினைத்து விடுவார்.

அடிக்கடி ஆர்ப்பாட்டங்களை நடத்திய கட்சிக்கே , நாமும் சளைத்தவரல்ல என்று திராவிட முன்னேற்றக் கழகம் பதிலளித்துக் கொண்டிருக்கிறது.

..