வானொலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வானொலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், நவம்பர் 20, 2013

ஆகாசவாணி எங்கள் வீட்டு மகாலட்சுமி

ஆகாசவாணி எங்கள் வீட்டு மகாலட்சுமி
(தமிழர்கள் இலங்கை வானொலியின் நிகழ்ச்சிகளில் லயித்திருக்க தமிழீழத்தைச் சேர்ந்தவர்கள் தமிழக வானொலிகளைத் தேடியது வியப்புதான்.கானா பிரபா வின் எழுத்துகளில்)

கடந்த மே மாசம் யாழ்ப்பாணத்துக்குப் போயிருந்த போதும் இதே கூத்து தான். காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு வீட்டில் இருக்கும் சுவாமி அறைக்குப் போனால், ஏற்கனவே விடிகாலையில் எழுந்து காலைக்கடன்களை எல்லாம் முடித்து விட்டு யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைப் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு ராகம் சேர்த்து பாடுகின்றார் அப்பா. என்னைக் கண்டதும் வாயில் பாடலை முணுமுணுத்துக் கொண்டே கையால் சைகை செய்து தன்னருகில் வரவழைத்துவிட்டு திருநீற்றுச் சட்டியில் தன் ஐந்து விரல்களையும் அழுத்தி ஒற்றிவிட்டு என் நெற்றியில் ஒரு இழுப்பு இழுத்து விட்டு முதுகைத் தடவிப் போகச் சொல்கிறார் மீண்டும் சைகை மூலம். காலை ஆறரை மணிப் பூசைக்கு மடத்துவாசல் பிள்ளையார் கோயிலுக்குப் போய் விட்டு என் ஆஸ்தான வாகனம் லுமாலா சைக்கிளில் திரும்புகிறேன். வீட்டு முகப்பை அண்மித்ததுமே ஏழு கட்டை தாண்டி ஒலிக்குமாற்போல எங்கள் வீட்டில் இருந்து வெளிக்கிளம்புகிறது வானொலி வழியாகப் பாய்ந்து வரும் ஆகாச வாணி. என் நினைவு தெரிந்த நாள் முதல் எங்கள் வீட்டில் பெண் பிள்ளை இல்லாத குறைக்கு நிறைவாக ஆகாச வாணி காலையில் தொடங்கி விடுவாள் தன் கச்சேரியை வைக்க.

எங்கள் வீட்டில் மட்டுமல்ல அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான குடும்பத்தலைவர்களின் விருப்பத் தேர்வாக இருந்தது ஆகாசவாணி தான். "திருச்சீல விடு திருச்சீல விடு எண்டோண்ணை அவன் றேடியோவுக்குள்ளை திரிச்சீலையை (விளக்கு எரிக்கப்பயன்படும் துணி) விட்டுட்டான்" என்று அந்தக்கால அங்கதம் ஒன்று புழங்கியிருக்கிறது. "இந்தியா என்ன சொல்லுது" என்றவாறே திருச்சி வானொலி, திருநெல்வேலி வானொலி நிலையம் சென்னை வானொலி நிலையமெனத் தாவுவார்கள். என்னைப் பொறுத்தவரை தமிழகத்துக்கும் தமிழீழத்துக்குமான உறவுப்பாலங்களில் இலக்கியத்தைக் கடந்து அடிமட்டம் வரை பாய்ந்ததென்றால் வானொலி ஊடகம் தான். தமிழகத்தவருக்கு எவ்வளவு தூரம் றேடியோ சிலோனின் ஆக்கிரமிப்பு இருந்ததோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் கிராமப்புறங்களில் ஆகாசவாணியின் படையெடுப்பு இருந்தது. நம்முடைய வானொலி அனுபவம் என்பது எண்பத்து மூன்றுக்குப் பின்னால் தான் பிள்ளையார் சுழி போட்டது என்பதால், இலங்கை வானொலியும் அதன் சாயத்தை இழந்து இரண்டும் கெட்டான் அரச ஊதுகுழலாகவும் மாறியதும் மிக முக்கிய காரணங்களில் ஒன்று. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மெல்ல மெல்ல தனியார் பண்பலை வரிசை (FM 99 உள்ளிட்டவை) ஆரம்பிக்க முன்னரேயே இலங்கை வானொலி தன்னை அது நாள் வரை நேசித்தவர்களிடமிருந்து விலகிப் போக ஆரம்பித்து விட்டது.

என் அப்பாவைப் பொறுத்தவரை அவரின் செல்ல மகள் ஆகாசவாணி தான். செய்தி நேரத்தைக் கடந்தும் வானொலி ஒன்றைக் கேட்கிறார் என்றால் கண்ணை மூடிக்கொண்டே அது எந்த வானொலி என்று சொல்லுமளவுக்கு நேசம் கொண்டிருக்கிறார். அது அப்படியே நிலைய வாத்திய இசையோடு தற்காலிக ஓய்வெடுத்துக் கொள்ளும். மதியம் சக்தி எஃப் எம் செய்திகள், சூரியன் எஃ.ப் எம் செய்திகள், என்று மெல்லத் தொட்டுப் பார்த்து விட்டு மீண்டும் ஆகாசவாணிக்கு வந்து விடுவார்.

சென்னை வானொலியில் இரவு ஏழுமணிக்கு வரும் விவசாய நிகழ்ச்சியில் கூட எனக்கு அப்போது ஈர்ப்பிருந்தது. பாமர ஜனங்களுக்குப் புரியும் வகையில் மொட்டைக்கருப்பன் உள்ளிட்ட அரிசி ஜாதிகளையும், பூச்சி கொல்லி மருந்துகளைப் பாவிக்கும் விதத்தையும் குறு நாடங்களாகவும் ஓரங்க வானொலி நாடகங்களாகவும் படைப்பார்கள். எனக்கு எவ்வளவு தூரம் இது உபயோகமாக இருந்தது என்பது ஒருபுறம் இருந்தாலும் தமிழ்நாட்டின் மூலாதாரமான விவசாயப் பெருமக்களுக்கு இந்த நிகழ்ச்சி பெருஞ்சேவை செய்திருக்கும் என்பதை அதன் படைப்பாற்றலை இப்போது அசை போடும்போதும் உணர்கின்றேன்.

"என் அத்தானின் வயலினிலே அருவி போல் தண்ணீரு பாயுதே, பினலெக்ஸ் பைப்பின் ஜாலமே தங்கமே தங்கமே இது".
முதல் அடிகளைப் பெண்குரலும் இரண்டாவது அடியை ஆண்குரலுமாகப் பாடும் சென்னை வானொலியின் விவசாய நிகழ்ச்சியின் விளம்பரப்பாடல் தான் அது. 18 வருடங்கள் கழிந்தும் என் ஞாபகமூலையின் ஓரமாய் ரீங்காரமிடும் பாடலாக இன்றும் இருக்கின்றந்து. இன்றைய கணக்கில் பினலெக்ஸ் பைப்புக்கள் இன்னும் தமிழ் நாட்டில் இருக்கின்றதோ என்னவோ தெரியவில்லை, ஆனால் ஆண்டாண்டு கடந்தும் இந்த வர்த்தக விளம்பரம் மட்டும் என் மனசில் பசையாக ஒட்டிக்கொண்டு விட்டது.
என் பள்ளிகூட நாட்களில் காலை பள்ளிக்குப் போக முன் 7.33 இற்கு வரும் தென்கச்சி சுவாமிநாதனின் "இன்று ஒரு தகவல்" கேட்பதற்காக விறுவிறெனக் குளித்து முடித்துச் சீருடை அணிந்து காலை ஆகாரமும் உண்டு காத்திருப்பேன்.சுவாமிநாதனும் வழக்கம் போல் ஒரு அறிவுரை சார்ந்த கதையையும் , நடைமுறை யதார்த்தத்தில் வரும் நகைச்சுவைத் துணுக்கையும் பொருத்தமாக இணைத்துப் படக்கென தன் ஸ்டைலில் நிறுத்தும் போது வானொலியின் வாயை என் கைகள் மூட, கால்கள் ஏஷியா சைக்கில் மேல் தாவிப்போகும்.

சனி, ஞாயிற்றுக்கிழமை என்றால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி வரும் ஏனென்றால் பகலிலும் விசேடமாகப் பாடல் கேட்கலாமே என்பது தான். காலை 9 மணிக்கு புதுச்சேரி வானொலி நிலையத்திற்கு அலைவரிசை பிடித்தால் போதும் திரை கானம் என்ற பெயரில் முத்தான திரையிசைப்பாடல்கள் வந்து விழும். வானொலிப் பெட்டி என் படிப்பு மேசையில் இருக்கும். அதற்கு அருகில் எவ்வளவுக்கெவ்வளவு நெருக்கமாக என் தலையைச் சாய்த்துவைத்திருக்கமுடியுமோ அவ்வளவுக்கு நெருக்கமாக மேசையில் என் தலை கவிழ்ந்திருக்கப் பாடல் கேட்பது என் வழக்கம்.

"உவன் ஒரு இடமும் உலாத்தாமல் வீட்டில இருக்கிறதே போதும்” என்ற நிம்மதியில் குசினிக்குள் (சமையலறை) என் அம்மா.
“புதுச்சேரி வானொலி நிலையம் , திரையிசைப்பாடல்களில் அடுத்துவருவது, ஈரமான ரோஜாவே படத்திலிருந்து இசைஞானி இளையராஜா இசையில் மனோ பாட்டியது" …..என் காதை இன்னும் உன்னிப்பாய்த் தீட்டிக்கொண்டு பாடலைக் கேட்க ஆயத்தமாவேன். மனோ " அதோ மேக ஊர்வலம் " பாடலைப் பாடிக்கொண்டிருக்கச் சரணத்தில் "ஆ" என்ற ஹம்மிங்கை சுனந்தா ஆலாபனை செய்ய, குசினிக்குள் ஈரவிறகோடு போராடும் அம்மா எட்டிவந்து " சோக்கான பாட்டு" என்று சொல்லிவிட்டு மறைவார்.

ஞாயிற்றுக்கிழமை கோயிலடிப்பக்கம் இருந்தாலென்ன, சுதா வீட்டுப்பக்கம் யார்ட் விளையாட்டு விளையாடினால் என்ன அந்த இடத்தை விட்டு என்னை நகர்த்தி என் வீட்டு வானொலிப் பக்கம் வரவைப்பது மாலை 4 மணிக்கு வரும் சென்னை வானொலி நிலைய நேயர் விருப்பம். இந்த நேயர்விருப்பம் நிகழ்ச்சிக்கு அடிக்கடி பாடல் கேட்கும் நேயர் பட்டியல் எனக்கும் பாடமாய் ஆகும் அளவிற்கு வந்த நாட்கள் அவை. எமக்கும் பிடித்த பாடல்களை ஒலிப்பதிவு செய்யவும், திரையில் பார்க்கவும் முடியாத அன்றைய யுத்தகாலத்தில் , இந்த நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையின் கடைகோடியில் இருக்கும் சகோதரனோ, சகோதரியோ நான் விரும்பிக்கேட்க விரும்பிய பாடலைத் தாமும் கேட்க அது ஒலிபரப்பாக, அந்த எதிர்ப்பாராத இன்ப அதிர்ச்சிச் தருணங்கள் வார்த்தைகளால் வடிக்கமுடியாதவை. அடிக்கடி அன்று பாடல் கேட்கும் சென்னை நேயர்கள்
லல்லு, சத்யா, ரேவதி, நீங்கள் இப்போது எங்கிருக்கிறீர்கள்? இன்னும் சென்னையிலா? இன்னும் அந்த உங்கள் விருப்பம் இன்னும் வருகின்றதா? அதில் இன்னும் பாடல் கேட்கின்றீர்களா என்று கேட்க எனக்கு அல்ப ஆசை.

இன்று வரை என்னை இளையராஜாவின் இசைமோகத்திலிருந்து விலகிவிடாமல் பார்த்துக்கொண்டதில் சென்னை வானொலிக்கும் முக்கிய பங்கு பெற்றிருக்கிறது. தேன் கிண்ணம், நேயர்விருப்பம், திரை இசை, திரை கானம் என்று எத்தனையோ த்லைப்பிட்டுப் பாடல் நிகழ்ச்சிகள் வந்தாலும் ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர, சில சமயம் அதுவுமில்லாமல் எல்லாமே ராசாவின் ராக ராஜ்ஜியம் தான். மனோஜ் கியானின் இசையில் இணைந்த கைகளில் வரும் " அந்தி நேரத் தென்றல் காற்று, சந்திர போஸின் இசையில் பெண் புத்தி முன் புத்தி படத்தில் வரும் " கொலுசே கொலுசே" பாடல், தேவாவின் இசையில் வைகாசி பொறந்தாச்சு படத்திலிருந்து "சின்னப்பொண்ணுதான்"
போன்ற விதிவிலக்குகள் தவிர, பச்ச மலப்பூவு (கிழக்கு வாசல்), இரண்டும் ஒன்றோடு ( பணக்காரன்), ஈரமான ரோஜாவே படத்தின் அனைத்துப்பாடல்களும், தானா வந்த சந்தனமே (ஊரு விட்டு ஊர் வந்து) என்று ஒவ்வொரு நேயர்விருப்பத்திலும் ராஜா தான் ஹீரோ.

நான் வீட்டில் வானொலி கேட்ட காலத்தை வீதிக்குக் கொண்டுவந்தது திண்டுக்கல் வானொலி நிலையம். 92 ஆம் ஆண்டு வாக்கில் ஒருநாள் யதேச்சையாக வானொலியின் அலைவரிசை முள்ளு விலகியபோது கேட்டது அந்த திண்டுக்கல் வானொலி நிலையப் பண்பலை வரிசையின் பரீட்சார்த்த ஒலிபரப்பு. என் அண்ணன் கொழும்பிலிருந்து கொண்டுவந்து பெட்டிக்குள் வைத்திருந்த வாக்மென்னுக்குள் (Walkemen) என்னிடம் அடைக்கலம் புகுந்த மற்றைய பென்ரோச் வகை பற்றறிகளைப் பொருத்திச் சைக்கிளில் போகும் போதும், சிவலிங்க மாமா வீட்டுத் திண்ணையில் இருந்த மாலைப் பொழுதுகளும் திண்டுக்கல் வானொலி நிலையத்தின் துல்லியமான பரீட்சார்த்த ஒலிபரப்பின் பாடல்களே கதியென்று இருந்தேன். எங்களூரில் வாக்மென்னின் வாசனை பிடிபடாத காலமது. என் பாட்டுக்குப் பாடல் கேட்டுக்கொண்டு இருக்கும் போது சுப்பையா குஞ்சியப்பு
" உவனுக்கென்ன காதில குறைபாடோ ?" (செவிட்டு மெஷின்?) என்று எட்டிப் பார்த்துப் போவார்.
தேவாவின் இசையில் "சோலையம்மா" படப்பாடல்கள் முழுவதையும் மூச்சுக்கு முன்னூறு தரம் ஒலிபரப்பி என் சாபத்தை வாங்கினாலும், ராஜாவின் இசையில் பாண்டி நாட்டுத் தங்கத்தில் வரும் " உன் மனசில பாட்டுத்தான் இருக்குது" போட்டுப் புண்ணியம் கட்டிக்கொண்டார்கள் திண்டுக்கல்லுக்காரர்கள்.

இடைக்கிடை வந்து போக்குக் காட்டியும், சீன மற்றும் மற்றைய மொழி அலைவரிசை வகையறாக்குள் சிக்கிப் பாடல் பாதி இரைச்சல் பாதியாக வந்து போன தூத்துக்குடி வானொலி நிகழ்ச்சிகளையும் கேட்டு வளர்ந்த காலம் அது. பாடசாலைகளும் ஒழுங்காக இயங்காமல் , நிலைமை சீர்கெட்ட காலத்தில் வந்த “எங்கிருந்தோ வந்தான்”……. “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்தேனோ” என்று மனதுக்குள் நன்றி போட வைத்த நண்பர்கள் இந்த வானொலிகள்.

“நிர்மா... நிர்மா வாஷிங் பெளடர் நிர்மா”, “சொட்டு நீலம் டோய்.... ரீகல் சொட்டு நீலம் டோய்”, “அஞ்சால் அலுப்பு மருந்து” இத்தியாதி விளம்பரங்களுக்க்குள் வந்து போகும் வானொலி நிகழ்ச்சிகள். “ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது” என்றவாறே சரோஜ் நாராயணஸ்வாமி வந்து போவார்.

விறுவிறுவெனப் படித்து முடித்து சாப்பாட்டு இடைவேளைக்காக நான் தேர்ந்தெடுப்பது இரவு 8 மணியை. அப்போது தான் ஹிந்தி நிகழ்ச்சிகள் முடிந்து தேன் கிண்ணத்தோடு வரும் "விவித் பாரதியின் வர்த்தக சேவை". புத்தம் புதுப் படங்களின் விளம்பரங்களை அரை நிமிடத்துக்குள்ளோ ஒரு நிமிடத்துக்குள்ளோ இலாவகமாக அடக்கிச் செய்யும் அந்த அறிவிப்பாளர்களின் திறமை வெகுசிறப்பானது. வைகாசி பொறந்தாச்சு பட வெற்றி பல புதிய அறிமுகங்களைத் தமிழ்த்திரைக்குக் கொண்டுவந்ததை விவித் பாரதியைக் கேட்டதன் மூலம் ஊகித்துக்கொண்டேன். ஆத்தா உன் கோவிலிலே, தாயம்மா, வசந்த காலப்பறவை, மதுமதி போன்ற விவித்பாரதியின் பட விளம்பரங்கள் நீளும். அப்போது வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களைப் படம் வாரியாக ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதிவைத்தேன் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் இந்த பொழுது போக்கு இருந்தது. அன்றைய காலகட்டத்துப் படங்களின் இசையமைப்பாளர்களையும் பாடல்களையும், கூகுள் போன்ற உலாவிகள் துணையின்றி என் ஞாபக ப்ளொப்பியில் இருந்து அவ்வப்போது எடுக்க விவித் பாரதிதான் கைகொடுத்தது. விவித் பாரதியின் வர்த்தகசேவை இன்னும் இருக்கிறதா தெரியவில்லை.

சிறு புல்லாங்குழல் ஓசை நெருடலோடு இலேசான சிரிப்புடன் எஸ்.பி.பி பாடும் “மண்ணில் இந்தக் காதல் இன்றி” என்ற பாதி வரியோடு வசந்த் இன் "கேளடி கண்மணி" பட விளம்பரம் வரும் போது இந்தப் பாடலை நான் முழுமையாகக் கேட்கும் காலம் எப்போது என்று மனசுக்குள் ஏக்கம் வரும்.
அதையும் மீறி, குலவை ஒலியைப் பெண்கள் இசைக்க,
“குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே " என்று சொர்ணலதா பாடவும், ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் இன்
" என் ராசாவின் மனசிலே" என்று சன்னமான குரலில் ஒரு பெண் அறிவிப்பு வந்து இந்தப் பாடலின் மேல் வெறி கொள்ளவைத்தது.

அந்தத் தொண்ணூறாம் ஆண்டு காலப்பகுதியில் வந்த பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் பால்யப் பருவத்தின் காதலியை நினைக்குமாற்போல உள்ளுக்குள் ஒரு புத்துணர்வு வந்து போகும். அந்த நேரம் கடும் யுத்த காலம் ஆரம்பமாகி கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் தேங்காய் எண்ணெய் விளக்கே கதி என்று கிடந்தாலும் வானொலிக்கு மட்டும் பற்றறிகளை வாங்கி வைத்துக் கேட்போம், அதுதான் அப்போது எமக்குக் கிடைத்த ஒரே பொழுது போக்கு அல்லது அதையும் கடந்து எங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய கணங்கள்.

சென்னைக்குச் செல்லும் போதெல்லாம் யாராவது சென்னை வானொலி நிலையம் கேட்கிறார்களா என்று கேட்க ஆசை வரும் ஆனால் மனதுக்குள் அடக்கிக் கொள்வேன். இணையத்திலும் அவ்வப்போது நேரடி ஒலிபரப்பு வருகிறதா என்று தட்டிப்பார்ப்பேன்.
இன்றைக்கு சென்னை வானொலி தன் எழுபத்தைந்தாவது ஆண்டை நிறைவு செய்து பவளவிழாக் காணும் போதும் எங்கள் வீட்டில் தொடர்ந்து ஒலிக்கும் அவளின் குரல் இடைவிடாது ஒலிக்க வைக்கும் போது, என் தாயகத்தின் பசுமையான நினைவுகளை வழங்கியதன் நன்றிக்கடனாக உள்ளூர எண்ணி மகிழ்கின்றேன்.

1938-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி சென்னை எழும்பூர் மார்ஷல் சாலையில் சென்னை வானொலி தொடங்கப்பட்டது. அன்றைய சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி ஒலிபரப்பு சேவையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.அதன்பிறகு தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு பல மாற்றங்களைக் கண்டுள்ளது. எழும்பூரில் செயல்பட்ட சென்னை வானொலி 1954-ல் தற்போதைய காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கத்துக்கு எதிரே மாற்றப்பட்டது. 1957 விவிதபாரதி சேவையும், 1968-ல் வர்த்தக ஒலிபரப்பும் தொடங்கப்பட்டது. (செய்தி மேற்கோள்: தினமணி ஜூன் 13, 2013)

வியாழன், நவம்பர் 03, 2011

வானொலி கேட்டல்

வானொலி ..வானொலி கேட்ட ஆரம்ப நாட்கள் எப்படிப்பட்டன என்பது இன்று நினைத்தாலும் மனம் மகிழ்ச்சியடையும் என்பது அந்த காலங்களில் வானொலி கேட்டவர்களுக்குதான் தெரியும்..

நான் சிறு பையனாக இருந்தபோது, எங்கள் வீட்டின் அருகில் ஒரு கைத்தறி நெசவுக்கூடம் ஒன்றில் பிலிப்ஸ் ரேடியோ,பாடிக்கொண்டிருக்கும்... அதில் காலை 6மணி முதல் 8.30 வரை திருச்சி வானொலியும் ,பிறகு 8.30 முதல் 9 வரை கோவை வானொலியும் பாடிக்கொண்டு இருக்கும்.
பிறகு 9மணி முதல் மாலை 4 மணி வரை இலங்கை வானொலி வர்த்தக சேவையின் சிற்றலை வரிசையில் பாடிக்கொண்டு இருக்கும்,

பக்கத்து வீட்டில் இருக்கும் பெரியப்பா மர்ப்பி வானொலி ஒன்றை கிரிக்கெட் கமெண்ட்ரி கேக்கவென்றே புதிதாக வாங்கினார்.அவர் தயவால் இன்னும் கொஞ்சம் வானொலி நிகழ்ச்சிகளை தெளிவாக கேட்க முடிந்தது.

நமது வாமுகோமு ரேடியோவில் சில சித்துவேலைகளை செய்து உலக வானொலிகளை அவ்வப்போது ஒலிக்க விடுவார்..

அதன் பிறகு எங்கள் வீட்டில் புதிதாக பிலிப்ஸ் ரேடியோ ஒன்றை எங்களப்பா எலக்சன் செய்தி கேக்கவென வாங்கி வந்தார்..அடடா அந்த ரேடியோவை காண என் நண்பர் கூட்டமாக வந்தது தனிக்கதை..

பிறகு சொல்லவா வேணும்.என் நேரமும் அந்த ரேடியோவை குடஞ்சுகிட்டே இருக்கறதுதான் நம்ம வேலை. இதில் SW 3 பேண்ட் இருந்தது...13‍மீ முதல் 90மீ வரை இருந்தது..பாதிக்குமேல் எந்த ஸ்டேசனும் வராது..பள்ளி ஆண்டு விடுமுறை நமக்கு இதில் தான்..

எந்த எந்த வானொலியில் எந்த நேரங்களில் பாட்டுப்போடுவார்கள் ..எந்த எந்த வெளிமாநில ரேடியோக்களில் தமிழ் எந்த நேரம் வரும் என்பதும் நமக்கு அத்துபடி.. திருவனந்தபுரம் ரேடியோவுல கூட தமிழ் நிகழ்ச்சி,பாட்டு போடுவாங்க..

தமிழ் நிகழ்ச்சி ஒலிபரப்பும் எல்லா நாட்டு வானொலியையும் நமக்கு அறிமுகம்.

பாகிஸ்தான் வானொலியிலும் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்புவார்கள். மதியம் 2.45 முதல் 3.15 வரை. சினிமா பாடல்கள் ஒலிபரப்புவார்கள்.

இரவு 7.30 முதல் 8.30 நேரங்களில் சீன வானொலி(தற்போது காலை நேரமும் வருகிறது)அறிவிப்பாளர்கள் தமிழ் பெயரைக் கொண்ட சீனர்கள்...

மாலை 5க்கு மேல் சிங்கப்பூர் வானொலி...அருகிலேயே 7க்கு மேல் எடுக்கும் மலேசியா தமிழ்.
நம்ம ரபி பெர்னாட் முதல் முதலா வந்த பிலிப்பைன்ஸ் வானொலி,வேரித்தாஸ் வானொலி,மாஸ்கோ தமிழ், இரவு லண்டன் பி.பி.சி தமிழோசை... இப்படி பல வானொலிகளும் அதன் நிகழ்ச்சிகளும் நமக்கு அத்துபடி..


இதுபோக புலிகளின் குரல் என பல வானொலிகள் நினைத்த நேரங்களில் வந்து கொண்டு இருந்தது..இந்த வானொலியை 3 ஆண்டுகளுக்கு முன்னால் சேட்டிலை மூலமாக சி பேண்ட்டில் கேட்டதுண்டு.

இந்த நேரங்களில் இந்த நாட்டு வானொலி எனக்கு கிடைத்தது ..உனக்கு கிடைத்தா என கேட்பதற்கே நண்பர்கள் வட்டம் உண்டு..மறு நாள் அந்த வானொலி நிகழ்ச்சியை கேட்காமல் தூக்கமே வராது..

இப்படித்தான் இலங்கை வானொலியின் சிற்றலை வர்த்தக சேவையும்,ஆசிய சேவையும்,அவ்வப்போது வரும் சிறப்பு சேவைகளும்..அதிலும் இலங்கை வானொலியின் வர்த்தக சேவையின் நிகழ்ச்சிகளை கேட்டிருக்காத அந்த கால நேயர்கள் யாருமேயில்லை என்று கூட சொல்லலாம்..

புலரும் பொழுது, காலைக்கதிர், ,, பொங்கும் பூம்புனல்,, என் விருப்பம்... , நேயர் விருப்பம்.,சித்திரை செவ்வானம், நெஞ்சில் நிறைந்தவை, ஒரு படப்பாடல்கள்,இசை களஞ்சியம், இன்றைய நேயர்,இப்படி பல வித்தியாசமான தலைப்புகளில் நிகழ்ச்சிகளை அளித்தது இலங்கை வானொலி என்பது மறுக்கமுடியாது..

ஞாயிறுகளில் வரும் பாட்டுக்கு பாட்டு,ஒலிச்சித்திரம்..கதையும் கானமும் அருமையான நிகழ்ச்சிகள்..இந்த பாட்டுக்கு பாட்டுதான் சிறிய மாற்றங்களுடன் இன்றும் பி.எச்.அப்துல்ஹமீது அவர்களால் சன்டிவியில வருகிறது ,தற்போது கலைஞர் என நினைக்கிறேன்.

இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து கொழும்பு சர்வதேசவானொலி மீடியம் வேவில் வந்தது.. தமிழர்களுக்கு புதுப்பாடல் மோகத்தை தீர்க்கவும் ,,தமிழக விளம்பரங்களை குறி வைத்தும் வந்ததென சொல்லலாம்,6 மணியுடன் நிறுத்தி மத நிகழ்ச்சிகளுக்கு சென்று விடுவார்கள்..அதில் மாலை 5.45 தமிழ் போராளிகளை கிண்டலிக்கவும் செய்தார்கள்.இந்திய ரேடியோக்கள் புதுப்பாடல் போடவே மாட்டார்கள்.

அந்த சிறு பிள்ளை வயதுகளில் இலங்கை போக எங்கள் ஏரியாவில் மக்களை கொள்ளை கொண்டது கோவை வானொலியின் கொங்குத்தமிழ் வழக்கில் வரும் சூலூர் கணேசின் புதன் இரவு,சனி காலை நாடக‌ங்கள்தான், மக்கள் இதற்கென காத்துக்கொண்டு இருந்தது ஒரு காலம்...

அன்றைய நாளில் இலங்கை வானொலி அழகிய உச்சரிப்புடன் தமிழை சிதைக்காமல் தந்த இனிமையை கேட்ட காதுகளுக்கு, இப்போதைய பண்பலை ஒலிபரப்புகள் இனிமையை தருவதில்லை. .

அன்று வானொலி கேட்டல் மிக பெரிய பொழுது போக்கு. இன்று பல்வேறு பொழுது போக்குகள் வந்துவிட்டன.

மலை மீது இருந்து எட்டுத்திக்கும் மெட்டுப்போடும் கோடைப்பண்பலை கொஞ்சம் உயிரோட்டமான வானொலி என்பதை மறுக்க முடியாது..22 மாவட்டங்களை கொள்ளை கொண்டுள்ள கோடைப்பண்பலை தற்போது தமிழகம் தாண்டி இலங்கையின் சில இடங்கள்,கேரளாவின் பல இடங்கள் என சென்று கொண்டிருக்கும் பண்பலை ஒலிபரப்பு,இன்னும் கொஞ்சம் தன் திறனை 10 மெகாவாட்டிலிருந்து 20 மெகாவாட்டாக உயர்த்துமெனில் மைசூர்,ஆந்திரா என எட்டும் என்பது எங்கள் அவா..

ஆனால் இலங்கையில் 90களீல் பண்பலை பிரபலமாகிவிட்டதென நினைக்கிறேன்.அப்போதே தனது பரிட்சார்த்த ஒலிபரப்பை ஆரம்பித்த இந்த கோடைபண்பலை மதுரை வானொலியை அஞ்சல் செய்ய ஆரம்பிக்க அதுவும் படுமோசமான ஒலிபரப்பாக 2000 ஆரம்பித்த ஞாபகம்..ஆனால் அதற்கு முன்பு இவர்களின் பரிட்சார்த்த ஒலிபரப்பை கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் " புதுசா சிடி பிளேயர் எதும் வாங்கிட்டியா" என கேட்டதுண்டு.நல்ல வேலை கொஞ்ச நாளிலேயே தனது சொந்த ஒலிபரப்புக்கு மாறிவிட்டது.

வானொலிக்கும் சேவை என்பது போய் வியாபாரமாகி விட்டன. பாடல்களுக்கு நடுவே விளம்பரங்கள் போய் இப்போது விளம்பரங்களுக்கு நடுவே பாடல்கள். நல்ல பாடல் வருகிறதென்றால், சகித்து கொண்டு நாற்பது விளம்பரங்களை கேட்கலாம். விளம்பரம் முடிந்து வரும் பாடலை கேட்டால், விளம்பரமே தேவலாம் என்கிற ரீதியில் பாடல்கள் வருகிறது. ஆனால் கோடைப்பண்பலையில் அவர்கள் போடும் ஒன்றிரண்டு பாடல்களுக்காகவே விளம்பரங்களை சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது.

இன்னும் பல விசயங்களை எழுதலாம்...பிறகு ஒரு தனிப்பதிவாக எழுதலாம்..இப்போது வானொலி கேட்காவிட்டாலும், வானொலியை பெரிய விஷயமாக கருதி வாழ்ந்த நாட்களை மறக்க இயலாது.
..


திங்கள், பிப்ரவரி 14, 2011

சூரிய ராகங்கள் 97.9 தமிழகத்தில்

இன்று காலை காதலர் தினத்தில் நமது பண்பலைகள் எந்த மாதிரியான நிகழ்ச்சிகளை அளிக்கின்றன என்று வானலைகளில் நமது எப்.எம் வானொலியைக்கொண்டு தேடும் போது என்றைக்கும் இல்லாமல் இன்று இலங்கையின் வானொலிகள் அனைத்தும் என்று சொல்வதை விட அரசு வானொலிகளான தேசிய சேவை,தென்றல் ,சிங்களம்,ஆங்கில சேவைகள் மற்றும் சூரியன் பண்பலை ஆகியன எடுத்தன.

நமது ஈரோடு மாவட்டத்தில் இதுமாதிரியான காலகட்டங்களில் பின்பனிக்காலங்களிலும்,வானிலை மிக தெளிவான காலகட்டகளிலும் நாம் இலங்கை வானொலிகளை பண்பலைகளில் கேட்டதுண்டு(எப்.எம்).இது மாதிரியான காலங்களில் இவர்களின் வானொலிகள் நமது லோக்கல் வானொலிகளான மிர்ச்சி,கோவை,சூரியன்,ஹலோ பண்பலைகளை அமுக்கிவிட்டு ஒலிக்க ஆரம்பித்துவிடும்,அத்தனையும் மிகத்தெளீவாக அதுவும் ஸ்டீரியோவில்.

புதிதாக கேட்பவர்கள் புதுசா ஆரம்பிச்சிட்டாங்களோனு எண்ணத் தோன்றும் அளவிற்கு தெளிவாக கேட்கும். இது கடலைகளினாலும்,வளிமண்டலத்தில் ஏற்படும் ஒரு வித காந்தகோடுகளினால் ஏற்படும் ஒரு மாற்றமே என சுஜாதாவும்,மதனும் ஒரு சில விகடன் கேள்விபதில் பக்களிலும் பதில் அளித்துள்ளனர்,இவர்களும் இவற்றை கேட்டிருக்கக்கூடும்.இல்லையெனில் பதிலளிக்க வாய்ப்பிருக்காது.

ஆனால் நான் இன்று கேட்ட சூரிய பண்பலையின் இடையே அவர்கள் அறிவித்ததுதான் நம்மை கொஞ்சம் ஆச்சரியத்திற்கு உள்ளடக்கியது. பொதுவாக கண்டி,யாழ்,கொழும்பு,ஊவா என,தீவு முழுக்க என சில அலைவரிசைகளை சொல்லும் இவர்கள் கூடவே தமிழகத்தில் 97.9 என சொன்னதுதான் நம்மை வியப்பிற்க்கு உள்ளடக்கியது.

எனக்குத் தெரிந்து இன்னும் ஒரு சில மாதங்களில் இலங்கை அரசு வானொலி,மற்றும் தொலைக்காட்சி ஆனது இலங்கையின் மிக உயர்ந்த மலையின் மீது அமைத்து இருக்கும் டவரிலிருந்து ஒலி,ஒளிபரப்பை துவக்குவதாகவும் அது தமிழகம் முழுக்க தெளிவாக இருக்கும் வகையில் இருக்கும் என கேள்விப்பட்டு உள்ளோம், ஆனால் சூரியன் அதற்கு முன்பே முந்தி விட்டதோ எனத் தோன்றுகிறது. அவர்களின் அறிவிப்பு அப்படித்தான் தோன்றுகிறது.

ஆனாலும் இன்றைய காதலர்தின நிகழ்ச்சிகளில் தமிழக வானொலிகளை விட இலங்கை வானொலிகளீன் நிகழ்ச்சி நன்றாகவே இருந்தது. அவர்களின் புரோகிராமைத்தானே நமது வானொலிகளும் காப்பி அடிக்கிறது. .

இவர்களின் தாக்கத்தால் நாங்களும் கூட எங்களூர் கிரிக்கெட் கமெண்டிரிகளை 94 ஆண்டு காலகட்டங்களில் சாதாரண எப்.எம் மைக்கை கொஞ்சம் ஆல்டர் செய்து 3 கிமீ சுற்றளவுக்கு கேட்கும்படி ஒலிபரப்பினோம்.

இவர்களும் தமிழகத்தில் போட்டிக்கு வந்துவிட்டால் நமது வானொலிகளின் தரம் இன்னும் மேம்படும் என்பதில் ஐயமில்லை.

..