வியாழன், ஜனவரி 21, 2016

மீன ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்

மீன ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்
பன்னிரெண்டு ராசிகளிலேயே கடைசியாக வருவதும், மிகவும் பள்ளமானதும் மீனம்தான். அந்தத் தன்மைக்கு ஏற்றாற்போல சகல விஷயங்களையும் உள்ளுக்குள் வைத்து பதுக்குவீர்கள். அதேசமயம் உங்களைத் தேடி மனிதர்களும், பல்வேறு விஷயங்களும் வந்தவண்ணம் இருக்கும். ஆர்ப்பாட்டமில்லாத ஒரு தன்மை எப்போதுமே இருக்கும். பெரும்பாலும் அமைதியாக இருப்பதையே விரும்புவீர்கள். வாழ்க்கையில் புத்தகப் பாடத்தை விட அனுபவப் பாடத்தையே அதிகம் நம்புவீர்கள். எல்லோருக்கும் எத்தனை அறிவுரைகள் கூறினாலும் தனக்கென்று வரும்போது தடுமாற்றம் கொள்வதைத் தவிர்க்க இயலாது. எந்த விஷயத்தையும் தானே முடிவெடுத்துவிட்டு, ஒரு பேச்சுக்காக மற்றவர்களிடம் அபிப்ராயம் கேட்டு வைப்பீர்கள். சிறிய விஷயமாக இருந்தாலும் கூட தன் அனுபவத்திற்குள் வந்தாலொழிய ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். அலட்சியம் உங்களின் மாபெரும் சத்ரு ஆகும். ‘என்ன ஆகிடப் போகுது’ என்கிற எண்ணத்தை நீங்கள் ஒழித்துக் கட்ட வேண்டும்.
நீங்கள் மற்றவர்களின் மனம் புரிந்து பொறுமையாகப் பேசுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் இதை சாதகமாக்கிக் கொண்டு உங்களை ஏமாற்றத் துணிவார்கள். சபைத் துணிச்சல் கொஞ்சம் குறைவுதான். தனியாக விவாதிக்கும் நீங்கள், ‘எதிரியின் மனம் புண்படுமே’ என்று சபையில் அடக்கி வாசித்து வெற்றியைக்கூட விட்டுக் கொடுப்பீர்கள். தனகாரகனான குருவின் ராசியில் பிறந்திருப்பதால், பணத்தை விட மனம்தான் பெரியது என்பீர்கள். இதனால் பண விஷயங்களில் உங்களை ஏமாற்ற ஒரு கூட்டம் தயாராக இருக்கும். ஆனால், தன்மானம் அதிகமுள்ளவர்கள் நீங்கள். யாராவது உங்களை அவமானப்படுத்தினால் வாழ்க்கை முழுவதுமே அவர்களை ஒதுக்கி வைப்பீர்கள். உங்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால், தலைமீது வைத்து அவர்களின் தகுதிக்கு மீறி கொண்டாடுவீர்கள்.
உங்களின் ஆறாம் இடமான நோய், எதிரி, கடன் ஸ்தானத்திற்கு அதிபதியாக, சிம்ம ராசிக்கு அதிபதியாக உள்ள பிதுர்காரகன் என்றழைக்கப்படும் சூரியன் வருகிறார். இதனால் உங்களுக்கும் தந்தையாருக்கும் ஏதேனும் சிறு வாக்குவாதங்கள், கருத்து மோதல்கள் இருந்துகொண்டே இருக்கும். ‘அவர் சொல்வதை செய்யக் கூடாது’ என்பதில் உறுதியாக இருப்பீர்கள். அதிகமாக நீங்கள் அவரை நேசித்தாலும், உள்ளுக்குள் ஒரு பனிப்புகை போன்ற எதிர்ப்புணர்வு இருந்துகொண்டேயிருக்கும். ‘‘அப்பாவுக்கு இந்த கோர்ஸ் பத்தி தெரியாது. எதிர்காலத்துல இதுக்குத்தான் நல்ல வேல்யூ இருக்கும்’’ என்று பள்ளி, கல்லூரி காலங்களிலிருந்தே தந்தைக்கு எதிராகத்தான் முடிவெடுப்பீர்கள்.
பாகப் பிரிவினையின்போது தந்தையார் உங்கள் மீது ஓரவஞ்சனையோடு நடந்து கொள்வதாக நினைத்து வருத்தப்படுவீர்கள். அல்லது அப்படி நடப்பதுபோல ஒரு தோற்றத்தை தந்தையார் வழிச் சொந்தங்கள் உருவாக்குவார்கள். எப்படிப் பார்த்தாலும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப்பிறகு கல்வியின் பொருட்டோ அல்லது வேலைவாய்ப்பின் பொருட்டோ தந்தையாரைப் பிரிந்து செல்வது நல்லது. அது உங்களுக்கும் தந்தையாருக்குமிடையே உள்ள எதிர்ப்புணர்வைக் குறைக்கும். உங்கள் தந்தையாரோடு இருக்கும்போது, அவருக்குக் கீழ்தான் நீங்கள் இருக்க வேண்டியிருக்கும். ஏதோ உங்கள் தந்தை வளர விடவில்லை என்பதுபோல நினைத்துக் கொள்வீர்கள். உங்கள் தந்தையார் பிறவியிலேயே பலவீனமானவராகவோ அல்லது ஏதேனும் நோயுற்றவராக இருந்தாலோ, உங்களின் வளர்ச்சி அபாரமாக இருப்பதை நான் அனுபவபூர்வமாக பார்த்திருக்கிறேன். இந்த ஆறாம் இடத்து சூரியன்தான் இதற்குக் காரணம். ஏனெனில், உங்கள் வாழ்க்கையின் முழு அமைப்புமே ஒன்றை இழந்து ஒன்றைப் பெறுவது போலத்தான் அமையும்.
இப்படியாக ஆறாம் இடத்திற்கு சூரியன் வருவதால், உங்களின் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அதுவும் சமூகத்தில் முக்கிய இடத்தில் உள்ளவர்கள் எல்லாம், உங்களை கண்ணில் எண்ணெயை விட்டுக் கொண்டு பார்ப்பார்கள். எப்போது நீங்கள் சறுக்குகிறீர்கள் என்று கவனிக்கவே ஒரு கூட்டம் இருக்கும். அரசாங்கத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு அவ்வளவு எளிதாக பிரமோஷன் வராது. ஏதேனும் ஒருவிதத்தில் உங்களை மட்டம் தட்டியே வைத்திருப்பார்கள். தனியார் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள், மேலதிகாரிகளோடு பிரச்னை ஏற்பட்டு சமாளிப்பீர்கள். சரசரவென்று பிரமோஷனும் வந்துவிடும். உயரதிகாரிகளோடு நீங்கள் எப்போது பேசினாலும் ஆணையிட்டதுபோல பேசுவதாக நினைத்துக் கொள்வார்கள். உங்கள் கருத்து ஆணித்தரமாக இருக்கும். அதனால், ‘‘ஒரு அபிப்ராயமா சொல்றேங்க...’’ என்று பேசத் தொடங்குவது, உங்கள் ஆலோசனைகளை ஏற்க வைக்கும். எல்லோரும் பேசி முடித்தபிறகு நீங்கள் பேசுங்கள். உங்களின் பேச்சு சபையேறும். நடைமுறைப்படுத்தப்படும். நீங்கள் பொத்தாம் பொதுவாக பேசினாலேயே உயரதிகாரிகள் வியப்பார்கள். குறிப்பிட்டு மேலதிகாரிகளைப் பேசினால் எதிரியாவார்கள்.
நாடாளுபவர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களிடம் நீங்கள் எச்சரிக்கை காட்டுவது மிகவும் அவசியமாகும். அரசாங்க விஷயமென்றால் கூடுதல் ஜாக்கிரதையோடு இருத்தல் வேண்டும். வீட்டு வரி, குடிநீர் வரி, வருமான வரி போன்று எந்தெந்த அரசாங்க வரிகள் உண்டோ, எல்லாவற்றிலும் நீங்கள் முதன்மையானவராக இருந்து கட்டி விடுங்கள். அரசியல்வாதிகள் உங்களோடு நட்பாக இருப்பார்கள். ஏனெனில், உங்கள் ராசியாதிபதியான குருவிற்கு சத்ரு ஸ்தானாதிபதியாக வரும் சூரியன் நட்பு கிரகம் ஆகும். எனவே பிரச்னைகள் இல்லை என்றாலும், அமிர்தம் மிஞ்சினால் நஞ்சாகும் என்பதை நினைவில் வையுங்கள். பெரிய அளவில் அரசாங்கத் தொடர்பு கொண்டவர்களோடு வியாபாரங்களில் ஈடுபடும்போது கவனம் தேவை. சில சதவீதங்கள் லாபத்தில் பங்குகள் குறைந்தால் பரவாயில்லை. ஆனால், சரிநிகருக்கு சமானமாக நீங்கள் எதிர்பார்த்தால் சிக்கல்கள் உருவாகும். அரசாங்க அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்றோர்கள் ஆரம்பத்தில் நட்பு பாராட்டுவார்கள். ஆனால், போகப்போக உங்களுக்கெதிராக மாறுவார்கள். மிக முக்கியமாக வழக்கு போன்ற விஷயங்களில் இறங்கும்போது அதீத கவனத்தோடு இருத்தல் வேண்டும். ஏனெனில், நீதி, நேர்மை, நாணயம் போன்றவற்றிற்கு உரியவராக ராசிக்கு பன்னிரெண்டாம் அதிபதியான சனி வருவதால், கொஞ்சம் பிசகினாலும் சிக்க வைப்பார்.
‘கடன்’ என்கிற வார்த்தையே உங்களுக்கு அலர்ஜிதான். கடனை அடைக்கும் வரை தூக்கமே வராது. கைகட்டி நின்று பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காக கடன் வாங்காமலேயே காலம் கடத்த முயற்சிப்பீர்கள். ‘‘அப்படியென்ன கடன் வாங்கி சொகுசு வேண்டிக் கிடக்கு’’ என்று பரவலாகவே அறிவுரை கூறுவீர்கள். ஆனால், கடன் வாங்குவது உங்களுக்கு நல்லது. ஏதேனும் ஒரு கடனை வாங்கி மாதா மாதம் அடைத்துக் கொண்டேயிருங்கள். இதெல்லாம் உங்களின் ஆரோக்யத்தில் பிரச்னைகள் வராமலும், வேறெந்த விபத்துகளும் நேராமலும் காப்பாற்றும். நேரடியான அரசாங்க வங்கிகளில் கடன் வாங்காதீர்கள். தனியார் வங்கிதான் உங்களுக்கு எப்போதும் நல்லது. தங்கத்தை வைத்து கடன் வாங்குவது இன்னும் உசிதமாகும்.
அதேபோல எப்போதும் புலம்பிக் கொண்டே இருக்காதீர்கள். உங்கள் வாயாலேயே நீங்கள் கெடுவதாக சுற்றியுள்ளோர்கள் சொல்வதை மெய்ப்பித்துக் கொண்டிருக்காதீர்கள். ஏனெனில், சூரியன் வேகமாக நகரும் கிரகம். நீங்கள் பாசிட்டிவ் எண்ணங்களோடு இருந்தால் நல்லது. இல்லையெனில் எதிர்மறையான எண்ணங்களால் நிறைய அவநம்பிக்கையோடு பேசி, நல்ல வாழ்க்கையை இழக்க வேண்டி வரும். உங்களுக்கு கடனெனில் அது தந்தையாரால் கூட ஏற்படும். எப்போதோ சகோதரிகளின் திருமணத்திற்கு தந்தையார் பட்ட கடன்கள் அவருக்குப் பிறகு உங்கள்மீது விழும். சில சமயம் பெருமைக்காக மற்றவர்களுக்கு கடன் வாங்கிக் கொடுத்து அவதிப்படுவீர்கள்.
சிறியதாக உடம்பு படுத்தினாலும் பெரிய அளவில் பயப்படுவீர்கள். உடம்பு கதகதப்பாக இருந்தாலே ‘மலேரியாவா... டைபாய்டா...’ என்ற அளவிற்கு சற்று மிகையாகவே பயப்படுவீர்கள். வீட்டில் மற்றவர்களையும் பயமுறுத்துவீர்கள். வயிறு, தொண்டை, தலையில் ஏதேனும் பிரச்னைகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் உடனே காண்பியுங்கள். சூடாக எதையுமே நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆனால், நீங்கள் அப்படித்தான் விரும்புவீர்கள். இதனால்தான் தொண்டை பாதிக்கப்படும். உங்களுக்கு நிச்சயம் அப்பென்டிசைடிஸ் உண்டு. நோய்க்கு உரிய சூரியனே வழக்கு, பிரச்னைக்குரியவராக வருவதால், சட்டென்று எந்த வழக்கையும் யார்மீதும் போடாதீர்கள். முடிவு உங்களுக்கு சாதகமாக வந்தாலும் அதற்கான நேர விரயத்தையும், அவஸ்தையையும் உங்களால் தாங்க முடியாது. தாமதப்பட்டுத்தான் உங்களுக்கு நீதி கிடைக்கும்.
அவமானத்தை செரித்துக் கொண்டு ஓடும் திறன் உங்களிடம் மிகவும் குறைவு. சுள்ளென்று யாராவது உங்கள்மீது விழுந்தாலே, இரண்டு கிலோ குறைந்து விடுவதுபோல உணர்வீர்கள். சின்னச் சின்ன வார்த்தைகளால் புண்பட்டுப் போவீர்கள். அதேசமயம் நீங்கள் சின்ன வார்த்தைகளால் பேசினால் பெரிய பெரிய இழப்புகள் வரும். ஏனெனில், நீங்கள் கொஞ்சம் அந்தஸ்தில் உள்ளவர்களைத்தான் அப்படிப் பேச வேண்டிய சூழல் வரும்.
புழுவுக்குப் பின்னால் தூண்டில் முள் இருக்கும் என்பதை அறியாத மீன ராசிக்காரர் நீங்கள். உங்களை முன்னிறுத்தி பெரிய திட்டங்கள் தீட்டி பலர் பயனடைவார்கள். இறுதியில் அவர்கள் காரியம் முடிந்ததும் உங்களைத் தூக்கிப் போட்டு விடுவார்கள். நீங்களே அவ்வப்போது, ‘‘நானும் கறிவேப்பிலையும் ஒண்ணு’’ என்று புலம்புவீர்கள்.
பதினோராம் இடமான லாப ஸ்தானத்திற்கும், பன்னிரெண்டாம் இடமான விரய ஸ்தானத்திற்கும் அதிபதியாக சனி பகவானே வருகிறார். கொஞ்ச நாட்களுக்கு செலவே செய்யாமல் இருப்பீர்கள். எடுத்ததற்கெல்லாம் கணக்கு பார்ப்பீர்கள். அடுத்த சில மாதங்களுக்கு ‘நீங்களா இப்படி செலவு செய்கிறீர்கள்’ என்று ஆச்சரியப்படுவதுபோல செலவு செய்வீர்கள். படுத்த உடனேயே தூங்கமாட்டீர்கள். கோழித் தூக்கம்தான் உங்களுக்கு.
பொதுவாகவே சூரியன்தான் உங்களின் எதிரி ஸ்தானத்தை தீர்மானிக்கிறார். சூரியனை கட்டுக்குள் வைக்கும் திறன் செவ்வாய்க்கு மட்டுமே உண்டு. செவ்வாய் எனும் அங்காரகனை இயக்கும் சக்தியான முருகனை வணங்கினால், சூரியனின் எதிர்மறை கதிர்வீச்சுகள் கட்டுக்குள் வரும். எனவே மங்களமான கோலத்தில் முருகன் அருளும் தலமான திருத்தணி செல்லுங்கள். வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானை சென்று தரிசித்து வாருங்கள். திருத்தணிக்கு சென்னை மற்றும் எல்லா ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.
நன்றி

கும்ப ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்

கும்ப ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்
‘நிறை குடம் தளும்பாது; குறை குடம் கூத்தாடும்’ என்கிற பழமொழி முழுமையாக உங்களுக்குத்தான் பொருந்தும். உங்களால் அறிவுஜீவியைப்போல அமைதியாக இருக்கவும் முடியும்; படிப்பறிவில்லாதவர் போல சபையில் பேசியும் சிக்கிக் கொள்வீர்கள். குடத்திற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்தால் தெரியும். அதுபோல உங்களை அறிந்தவர்கள்தான் உங்களின் மறுபக்கத்தையும் அறிவார்கள். ‘‘உங்களுக்குள் இப்படியொரு மனுஷனா’’ என்று எண்ணுமளவிற்கு வியத்தகு மனிதராக தன்னை மறைத்துக் கொண்டு வலம் வருவீர்கள்.
பன்னிரெண்டு ராசிகளுக்குள் கும்பத்தையும், மகரத்தையும் சனிதான் ஆள்கிறது. ஆனாலும் மகரத்தில் பிறந்தவர்களுக்கும், கும்பத்தில் பிறந்தவர்களுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. மகரத்தார் போல கும்பத்தார் வேகமாக இருக்க மாட்டார்கள். ‘இருக்கட்டும்... பார்க்கலாம்’ என்று பாதி வேலையை தள்ளிப் போடுவார்கள். ஆயிரம் விஷயங்களை அறிந்து வைத்திருந்தாலும், சரியான தூண்டுதல் இல்லாமல் எதையுமே வெளிப்படுத்த மாட்டீர்கள்.
நீங்கள் சனி எனும் நீதி கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்திருப்பதால் நியாயத்தை பேச வேண்டும். மாறிப் பேசினால் சிக்கிக் கொள்வீர்கள். உங்களின் கடன், எதிரி, நோய் ஸ்தானத்திற்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். இரண்டரை நாட்களுக்கு ஒருமுறை சந்திரன் மாறிக் கொண்டே இருப்பதால், பௌர்ணமிக்கு முன்பும் பின்புமாகவே உங்களின் மனோநிலை மாறிக் கொண்டேயிருக்கும். கடன் கேட்டால் கூட, ‘‘ரெண்டு நாள்ல திருப்பிக் கொடுத்துடறேன்’’ என்று சொல்லித்தான் கேட்பீர்கள். பிறகு ரெண்டு வாரம், ரெண்டு வருஷம் என்று இரண்டிரண்டாக நீண்டுகொண்டே இருக்கும். உங்களை சீண்டிப் பார்க்கும் வரை எல்லோரும் உங்கள் நண்பர்கள்தான். அதில் கூட தொடர்ந்து யாரையும் எதிரியாகப் பார்க்க மாட்டீர்கள்; பார்க்கவும் தெரியாது. இன்னும் சரியாகக் கூறினால் உங்களின் எதிரியே உங்களின் அதீதமான கற்பனைத்திறன்தான். அதிலும் பகல் கனவைக் காண வைத்தே சந்திரன் உங்களைக் கெடுப்பார். ‘‘இந்த பிசினஸை இப்படி ஆரம்பிச்சு அங்கங்க டெவலப் பண்ணி, சிட்டிக்கு நடுவுல பெரிய பில்டிங் கட்டி...’’ என்று எப்போதும் ஒரு கனவு உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். கனவை நனவாக்க நடைமுறையில் உழைக்க வேண்டும் என்பதையே அவ்வப்போது மறந்து விடுவீர்கள். கனவை விட்டு நிஜ வாழ்க்கைக்கு வரும்போது, அது தரும் வெப்பத்தை தாங்காது ஓடுவீர்கள்.
சந்திரன் மாத்ரு ஸ்தானாதிபதி என்றழைக்கப்படும் தாய் ஸ்தானத்திற்கு உரியவராகவும் வருகிறார். இந்த சந்திரன் உங்களுக்கு பகை ஸ்தானத்திற்குரியவராக வருவதால், தாயார் எதிரியாவாரா என்று யோசிக்கலாம். ஆனால், தாயார் உங்களுக்கு எதிரியாக மாட்டார். ஏனெனில், உங்கள் ராசிக்கு நான்காம் இடமான தாய் ஸ்தானத்தைக் குறிப்பிடும் கிரகமான சுக்கிரன் சனிக்கு நட்பாக வருகிறார். எனவே ஒன்றும் பிரச்னை இருக்காது. என்ன... படிப்பு காரணமாகவோ, அல்லது வேலைக்கு செல்லும் வயதிலோ தாயாரைப் பிரிந்திருப்பீர்கள். தாயாரோடு கருத்துமோதல்கள் வந்து செல்லும்.... அவ்வளவுதான்! சந்திரன் எதிரி ஸ்தானமாக இருப்பதால் மனதைக் குழப்பி அலை பாய வைப்பார். சரியோ, தவறோ... எந்த முடிவை எடுத்தாலும் அதிலிருந்து மாறாதீர்கள். எப்போதுமே சரியாகத்தான் நாம் முடிவெடுக்க வேண்டும் என்றெல்லாம் எந்தவித இறுக்கத்தையும் கொண்டிருக்காதீர்கள். சந்திர கிரகண நாட்களிலெல்லாம் எங்கேனும் புனித தலம் சென்று வாருங்கள்.
எப்போதுமே நீங்கள் நீர்நிலைகளுக்குச் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்பது வாழ்க்கைக்குண்டான பழமொழி மட்டுமல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எப்போதும் கபம் இருந்து கொண்டே இருக்கும். உணவுக் குழலுக்கும் மூச்சுக்குழலுக்கு இடையே தொந்தரவு இருக்கும். அதனால் கும்பகர்ண குறட்டை இருக்கும். அடிக்கடி பார்வையை சரி செய்து கொள்ள வேண்டும். புகழ் போதை, முகஸ்துதி போதை நிறைய இருந்தாலும், மது போதையை மட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள். ‘‘வெறும் பார்லி வாட்டர்தானே’’ என்று தொடங்கினால், மொடாக்குடியனாக வலம் வருவீர்கள்.
கையெழுத்தை மாற்றி மாற்றி போடக் கூடாது. ஏடிஎம் செல்லும்போது பின் நம்பரை மறந்து போவீர்கள். புளியோதரையை அதிகமாக உண்ணாமல் இருந்தால் நல்லது. அது மனதை இன்னும் குழப்பும். பணத்திற்கு எப்போதுமே ஒரே ஆளை நம்பிக் கொண்டு இருக்காமல், பல்வேறு வழிகளைக் கையாள வேண்டும். ‘‘அவருகிட்ட கேட்டிருக்கேன். தலையை அடகு வச்சாவது தந்துடறேன்னு சொல்லியிருக்கார்’’ என்று ஒருவரையே நம்ப வேண்டாம். உங்களின் மாபெரும் திறமையே, பொய்யை பொருந்தச் சொல்வதுதான். சர்வ சகஜமாக சிறிய மற்றும் பெரிய பிரச்னைகளை சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பொய் சொல்லி சமாளிப்பீர்கள். ‘‘அவன் அதுக்குக் காரணமே இல்லை. அவன் எந்த தப்பும் பண்ணலை. அவனைத் தூண்டிவிட்டவன் வேறொருத்தன்’’ என்று சொல்லி, சூழ்நிலையை சமாதானமாக மாற்றுவீர்கள்.
இளைய சகோதர, சகோதரிக்கு நீங்கள் எத்தனைதான் உதவிகள் செய்தாலும் திடீரென்று உறவுகளை முறித்துக் கொள்வீர்கள். செவ்வாய் உங்கள் ராசியாதிபதியான சனிக்கு பகையாக வருவதால் எமோஷனலாக முடிவுகளை எடுக்கத் தூண்டுவார். ஆறாம் இடத்திற்கு அதிபதியான சந்திரனே, அழகு, ஆடை, அலங்காரம் போன்றவற்றிற்கு உரியவராகவும் இருக்கிறார். எனவே, கடன் வாங்கியாவது ஃபேன்சி ஸ்டோருக்குச் சென்று ஒப்பனைப் பொருட்களை வாங்கி வருவீர்கள். வீட்டு பட்ஜெட்டில் இதற்கென்றே குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைப்பீர்கள். சில சமயம் இதுவே ஒவ்வாமையைக் கொண்டு வரும். ஏதோ சில காரணங்களால் தந்தையை பிடிக்காமல் போகும். அதை வெளியில் சொல்லாமல் பூட்டி வைப்பீர்கள். அவர் செய்த தொழிலைத் தட்ட முடியாது தொடர்ந்து வெற்றியும் பெறுவீர்கள். யார் என்ன எதிர்த்தாலும் உங்கள் பாதையில் நீங்கள் பயணிப்பதை யாராலும் தடுக்க முடியாது. உங்கள் ராசியாதிபதியான சனி, பன்னிரெண்டாம் இடமான மகரத்திற்கும் அதிபதியாக வருகிறார். மனசுக்குப் பிடித்தவர்களாக இருந்தால் அள்ளிக் கொடுப்பீர்கள். திடீரென்று நினைத்துக் கொண்டு வெளியூர்களுக்கு பயணப்படுவீர்கள். ராசியாதிபதியே பன்னிரெண்டாம் அதிபதியாக வருவதால் மறுபிறவி இல்லை என்பது ஆன்மிக வாழ்க்கையில் உங்களுக்குப் பொருந்தும். இதனாலேயே, பெரும்பாலும் நேர்மையாகவே சம்பாதிப்பீர்கள். ‘‘நான் என்ன பண்றேன்னு கடவுளுக்குத் தெரியும்’’ என்பீர்கள்.
கும்பம் என்பதே அடக்கி வைத்திருக்கும் சக்தியைக் குறிப்பது. அதை சந்திரன் என்கிற மனோகாரகன் தனது எதிர்மறைக் கதிர்வீச்சுக்களால் மறைத்து வைத்திருப்பான். தீர்மானமாக ஒன்றை செய்ய முற்படும்போது பல்வேறு குழப்ப சிந்தனைகள் உங்களைத் துளைத்தெடுத்துச் செல்லும். காரியத்தை செய்ய விடாமலேயே முடக்கும். ‘‘திடீர்னு எதுக்கு இந்த பிசினஸைப் போய் செய்யணும்? நஷ்டம் வந்தா நம்மால முடியுமா...’’ என்று உங்களை துவளச் செய்யும் எண்ணங்களால் ஆக்கிரமிக்கப்படுவீர்கள். பிரச்னைகள் எனில் அந்த இடத்தில் முதலில் ஆஜராவது நீங்கள்தான். சண்டைக்காரர்களை விட உங்களின் குரல்தான் ஓங்கி ஒலிக்கும். ‘‘உங்களை மாதிரி யாராவது உண்டா’’ என்றால் சொத்தில் ஒரு பங்கை கூட எழுதி வைக்கும் அளவிற்கு புகழுக்கு மயங்குவீர்கள். அதனால், தேன் தடவிய பேச்சுகளுக்கு எப்போதுமே செவி சாய்க்காதீர்கள். எச்சரிக்கையோடு இருங்கள். தேவையில்லாமல் உங்களை யாரும் புகழ மாட்டார்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளாது இருப்பது நல்லது. அதேபோல இரவு நேரப் பயணங்களில் பக்கத்து சீட்காரரோடு தேவையில்லாமல் பேசக் கூடாது. உடைமைகளை கவனத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு சிந்தனை மனதைப் போட்டு உழட்டிக் கொண்டே இருப்பதால் ரத்த அழுத்தம் ஏற்படும். பூமிகாரகனான செவ்வாய் உங்களின் ராசியாதிபதியான சனிக்கு பகையாக இருப்பதால் காலியிடங்களை வாங்குவதை விட கட்டிய வீட்டை வாங்குவது நல்லதாகும். கடன் வாங்கும்போது நகையையோ, வீட்டுப் பத்திரத்தையோ வைத்து கடன் வாங்குங்கள். உடனடியாக திருப்பிக் கொடுப்பதாக உறுதியளிக்காதீர்கள்.
உள்மனதில் உறங்கிக் கிடக்கும் மிருகத்தை உசுப்பிவிடும் இடமே ஆறு ஆகும். உங்களுக்கு ஆறாம் இடமாக சந்திரன் வருவதால் மனம் சொல்வதை விட மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ‘‘எனக்கு என்ன தோணுதோ அதுதான் சரி’’ என்றோ, ‘‘எனக்குத் தோணறதை நான் பேசறேன்’’ என்றெல்லாம் நீங்கள் பேசக் கூடாது. ‘‘பெரியவங்க இப்படி இந்த விஷயத்தை பார்க்கறாங்க... இப்படி சொல்லியிருக்காங்க...’’ என்றெல்லாம் பேசினால் வெற்றி பெறுவீர்கள். எதிராளியின் பலத்தை உயர்வாகப் பேசிவிட்டு உங்களைப் பற்றிப் பேசுங்கள். நீங்கள் எளிதாக வெற்றி பெறுவீர்கள்.
இந்த ஆறாம் இடம் என்பது மறைவு ஸ்தானம் ஆவதால், அதற்கு சந்திரன் அதிபதியாக வருவதால், மிகச் சிறந்த உளவியல் மருத்துவராக உங்களில் பலர் வருவீர்கள். நஞ்சை வைத்துத்தான் நஞ்சை முறியடிக்க முடியும் என்பதுபோல மனிதர்களின் மனங்களை அவர்களோடேயே சென்று மாற்றக் கூடிய நுட்பமான திறனை நீங்கள் பெற்றிருப்பீர்கள். நீங்கள் தொடர்ந்து போராடாமல் விட்டு விட்டு முயற்சித்தால் எளிதாக வெற்றி பெற முடியும். உங்களுக்கு தீர்க்க முடியாத பிரச்னையாக உங்களின் மனம்தான் இருக்கும். உங்களின் வாக்கை உங்களால் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாது. உங்களின் குழப்பம்தான் உங்களை வல்லவனாகவும் மாற்றும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் கியர் இல்லாத வண்டியைத் தேர்ந்தெடுங்கள். கார் வாங்கினால் டிரைவர் வைத்துக் கொள்ளுங்கள். வாகனங்களை இயக்கும்போது மனம் அலைபாய்ந்தபடி இருக்கும். பலவகையான சிந்தனைகள் வந்து மோதியபடி இருக்கும். இதனால் கவனம் சிதறும் அபாயம் அதிகம். பழைய வாகனங்களை வாங்காது புதியதாகவே வாங்குங்கள்.
உங்களின் சொந்த ஜாதகத்தில் ராசி அல்லது லக்னத்திற்கு எட்டிலோ, பன்னிரெண்டிலோ சந்திரன் மறைந்தால் விசேஷமாகும். இதனால் சந்திரனால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். சொந்த ஜாதகத்தில் சந்திரன் செவ்வாயோடு சேர்ந்திருந்தால் வீடு, சொத்து மூலமாக திடீரென்று நன்மைகளைப் பெறுவீர்கள். சந்திரன் ராகு, கேதுவோடு சேர்ந்திருந்தால் கெடு பலன்கள் குறையும். உங்களுக்கு சந்திரன் பகையாக வருவதால் தாயாருக்காக அடிக்கடி மருத்துவச் செலவுகள் செய்ய வேண்டி வரும். மேலே சொன்னதெல்லாம் சொந்த ஜாதகத்தைப் பொறுத்த விஷயமாகும்.
உங்களுக்கு கடன், நோய் மற்றும் எதிரிகள் பிரச்னையைத் தீர்க்கும் தலமே, சென்னையை அடுத்த திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில். இந்த ஆலயத்தில் வழிபட்டால், சந்திரனால் ஏற்படும் எல்லா பாதிப்புகளும் குறையும். வடிவுடையம்மனையும், படம்பக்கநாதரையும் தரிசியுங்கள். உங்கள் பிரச்னைகள் தீர்வதை அனுபவபூர்வமாக உணர்வீர்கள்.
நன்றி

மகர ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்

மகர ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்
பன்னிரெண்டு ராசிகளிலேயே மனிதாபிமானம் அதிகமுள்ள ராசி மகரம்தான். புறங்கூறுதல், மறைத்துப் பேசுதல், மனசாட்சிக்கு எதிராக செயல்படுதல் என்பதெல்லாம் அறவே உங்களுக்குப் பிடிக்காது. ஆரம்ப காலத்தில் அங்குலம் அங்குலமாக அடிபட்டு வெற்றிகளை சந்தித்ததால் பணம், பட்டம், பதவி வந்தாலும் பகட்டுத்தனமாக வாழத் தெரியாது. வியாபாரமாக இருந்தாலும், உத்யோகமாக இருந்தாலும் ஏனோதானோ என்றில்லாமல் அதை ஒரு வேள்வியாக எடுத்து நடத்துவீர்கள். சண்டையிட்டுக் கொள்ளும் பெரிய தலைவர்களுக்கிடையே சமயோசிதமாகப் பேசி சமாதானப் பட்டத்தை பறக்க விடுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை பார்ப்பவரை முன்னுக்கு கொண்டு வருவதில் அதிக மும்முரம் காட்டுவீர்கள். அதுவே எதிர்காலத்தில் உங்களுக்கு தர்மசங்கடமாகவும் மாறும்.
உங்களின் கடன், நோய், எதிரி ஸ்தானத்திற்கு அதிபதியாக மிதுன புதன் வருகிறார். உங்கள் ராசிநாதனான சனிக்கு புதன் நண்பராவார். அதனால் புதன் உங்களுக்கு அவ்வளாக கெடுதல் செய்ய மாட்டார். எதிரிக்குரிய புதன் உங்களின் ஒன்பதாம் இடமான பாக்யாதிபதியாகவும் வருகிறார். அதனால், எதிரி உருவான உடனேதான் வாழ்க்கையே சீரியஸாகும். உங்களிடமிருந்து சக்தி வெளிப்பட வேண்டுமெனில் எதிரி உருவாக வேண்டும். கிட்டத்தட்ட எதிரிதான் உங்களின் உந்து சக்தியாக இருப்பார். நாலு பேர் விமர்சனம் செய்தால்தான் முன்னேறவே ஆசை வரும். மேலும், தந்தையைக் குறிக்கும் ஒன்பதாம் இடத்திற்கும் புதன் வருவதால் தந்தையை விட்டு அவ்வப்போது பிரிந்து வாழும் சூழ்நிலை வரும். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து தந்தையைப் பிரிய வேண்டிய சூழல் தொடங்கும். அப்பாவுக்கும் உங்களுக்கும் அதீதமான பாசமெல்லாம் இருக்கும். அதேசமயம் கருத்து மோதல்களும் வந்துபோகும். அப்பாவாக இருந்தாலும் சரி, அண்ணனாக இருந்தாலும் சரிதான்... உங்களை தாழ்த்திப் பேசினால் பிடிக்காது. இதனால் இந்த ராசியில் பிறந்த பிள்ளைகளின் பெற்றோர், பள்ளிப் பருவத்தில் மற்றவரோடு ஒப்பிட்டுப் பேசாமல் இருத்தல் நல்லது. அது ஆழமான வடுக்களை உண்டாக்கி விடும்.
வித்தைகாரகனான புதன் ஆறாம் இடத்தின் அதிபதியாக வருவதால் விரும்பிய பாடப் பிரிவில் சேர்ந்து படிக்க முடியாமல் போகும். அதேபோல கல்லூரியிலேயே யு.ஜி., பி.ஜி. போன்றவற்றிலேயே சப்ஜெக்ட் மாறிப் படிப்பீர்கள். தாய்மாமனுக்குரிய கிரகமாகவும் புதன் வருவதால் தாய்மாமன் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணுவார். அவர் நண்பனா, எதிரியா, உதவுபவரா என்றே தெரியாது. ஆனாலும், தாய்மாமனிடம் நீங்கள் அன்பு காட்டுவீர்கள். என்ன படித்தாலும் சரிதான் 35 வயது வரை அடுத்தவர்களுக்காக உழைத்துக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். பிறகுதான் உங்களுக்கானதை நீங்கள் பெறுவீர்கள். பல இடங்களில் சொல்லக் கூடாததை சொல்லி மாட்டிக் கொள்வீர்கள். எதைச் சொல்ல வேண்டுமோ அதை மறந்து விடுவீர்கள். பள்ளியில் படிக்கும்போது காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட்டு அரசுத் தேர்வுகளில் கோட்டை விடுவீர்கள்.
போராட்டமெனில் புறமுது கிட்டு ஓட மாட்டீர்கள். பலரின் நலனுக்காக குரல் கொடுக்கும் குணம் இயற்கையாகவே இருக்கும். சில நேரங்களில் அதட்டலாகவும், அலட்டலாகவும் பேசுவீர்கள். உங்களின் ஆறாம் இடம் எனும் கடன், நோய், எதிரிகள் மற்றும் இன்ன பிற விஷயங்களை நிர்ணயிப்பவராக மிதுன புதன் வருகிறார். புதன் புத்திக்குரியவராக இருப்பதால் எல்லா விஷயத்தையும் நீங்களே தீர்மானிப்பவராக இருப்பீர்கள். இதனால் கொஞ்சம் அறிவுச் செருக்கு ஏற்படும். அதைக் கொஞ்சம் அடக்கி வைத்தால் இன்னும் நன்கு முன்னேறலாம். ‘‘அவரை நாலு வார்த்தை பாராட்டிட்டா போதும். மயங்கிடுவாரு’’ என்று எளிதாக உங்களை வளைப்பார்கள். ‘உங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை’ என்று யாராவது சொன்னால் நீங்கள் கொதித்தெழுவீர்கள். எந்த உதவியாக இருந்தாலும், கேட்டதை அழகாக செய்து கொடுப்பீர்கள். இதனாலேயே உங்களை பல பேர் சுற்றிச் சுற்றி வருவார்கள். அதில் நல்லோர் யார், தீயோர் யார் என்று பிரித்தறிந்து விலக்க வேண்டும். ஏனெனில், மிகவும் எமோஷனலாக நீங்கள் உங்களை வெளிப்படுத்துவதால் மறைமுகமாக எதிரிகள் உருவாகிய வண்ணம் இருப்பார்கள். உங்களுக்கு முன்பின் தெரியாதவரை நீங்கள் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள்.
புதன் கையெழுத்துக்குரிய கிரகமாகும். அதாவது சுயகுறியீட்டிற்குரிய கிரகமாக இதைச் சொல்வார்கள். அதனால் யோசிக்காமல் ஜாமீன், கேரண்டர் கையெழுத்தைப் போடாதீர்கள். குறுகிய கால கடன்களுக்கு மட்டும் கேரண்டர் கையெழுத்து போடுங்கள். உதவி செய்ய வேண்டுமென்கிற கட்டாயம் வந்தால் சனிக் கிழமை, புதன் கிழமைகளில் தவிர்த்து விடுங்கள். அல்லது புதன், சனி ஆளும் நட்சத்திரங்கள் உள்ள நாட்களாக வந்தால் தள்ளிப் போடுங்கள். அதேபோல நீங்கள் பிறந்த நட்சத்திரமாக இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் கடன் வாங்கியவர் கட்டாது போய், உங்களை சிக்கலில் சிக்க வைத்துவிடுவார்.
உணவு சார்ந்த விஷயங்களில் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், புதன் சட்டென்று வயிற்றை பதம் பார்ப்பார். எந்த ஊரில் என்ன கிடைக்கும்? எது மிகவும் ருசியான பண்டம்? என்கிற விஷயமெல்லாம் உங்களைத் தவிர வேறு யாருக்கும் அத்தனை விரிவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அதெல்லாம் குறைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல மிகப்பெரிய முடிவையெல்லாம் கோபத்தில் எடுத்து விடக் கூடாது. புதன் சட்டென்று யோசித்து செயல்படும் வேகமான கிரகமாதலால், கோபத்தின்போது தான் விவேகமாக இருக்க வேண்டும். ஏதேனும் மனதைப் போட்டு உழட்டிக் கொண்டே இருப்பதால் ரத்த அழுத்தம் ஏற்பட்டு கண்களுக்குத் தொந்தரவாக மாறும்.
மிக முக்கியமாக நிலம், வீடு என்று வாங்கும்போது எச்சரிக்கை தேவை. ஏனெனில், பூமிகாரகனான செவ்வாய்க்கும் உங்களின் ஆறாம் அதிபதியான புதனுக்கும் பகை உண்டு. அதனாலேயே இந்த விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் ஒரு சொத்தை வாங்கி, கடனைக் கட்ட முடியாமல் விற்று, மீண்டும் மறுசொத்து வாங்கும்படியான நிலைமை வரும். தங்கத்தை வைத்து பணத்தை கடனாகப் பெற்றால் கடனை சீக்கிரம் அடைப்பீர்கள். சொத்துகளும் விருத்தியாகும். காசோலைகளில் கையெழுத்தை முன்னதாக போட்டு வைத்துக் கொண்டிருக்காதீர்கள். நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் வாங்கிக் கொடுத்து விட்டு சிக்காதீர்கள்.
உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்குரியவராக புதன் வருவதால், ‘தான் சொல்வதுதான் சரி’ என்று இருக்காதீர்கள். அடுத்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் வளர முடியும்; அடுத்தவர்களையும் வளர்க்க முடியும். வேலை செய்யும் இடத்தில் அனுசரித்துப் போகமுடியவில்லையெனில் வீண்பழியை சுமத்தி ஓரம் கட்டுவார்கள். எல்லா விஷயத்திற்கும் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்காதீர்கள். புதன் எத்தனை அறிவாளியாக இருந்தாலும், வார்த்தைகளில் கடினமாகப் பேசி அடுத்தவர்களை காயப்படுத்துவார். ‘‘இப்படி பேசலைன்னா சரியா வரமாட்டாங்க’’ என்றும் சொல்ல வைப்பார். மற்றவர்களுக்கு விட்டுக் கொடுங்கள்; அதிகாரங்களையும் பகிர்ந்து கொடுங்கள். ஏனெனில், புதன் தன்னுடைய கண்காணிப்பிலேயே எல்லாமும் நடக்க வேண்டும் என்பார். இது உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு குடைச்சலை உண்டாக்கும்.
நேற்று வரை நண்பர்களாக இருந்தவர்களே நாளைய எதிரிகளாவர். தொழில் மற்றும் வியாபாரங்களில் கூட்டு வைக்கும்போது எச்சரிக்கையோடு இருங்கள். இல்லையெனில் ஏமாற வேண்டியிருக்கும். ஆரம்ப காலங்களில் எங்கேனும் வேலை பார்த்துக் கொண்டே வியாபாரமும் செய்வீர்கள். பிறகு மாபெரும் நிறுவனங்களையே நடத்துவீர்கள். நீங்கள் கிங்மேக்கராக மாறுவீர்கள். முத்திரைத்தாள் விஷயங்களில் எச்சரிக்கையோடு இருங்கள். ஏனெனில், போலி முத்திரைத்தாள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிரிகள் உங்களை ஈடுபடுத்துவார்கள்.
நீங்கள் ஆணாக இருந்தால் பெண் குரல், பெண் சாயலோடு இருக்கும் ஆண்களிடம் எச்சரிக்கையோடும், பெண்ணாக இருந்தால் ஆணின் குரல் மற்றும் சாயலோடு இருக்கும் பெண்களிடம் ஜாக்கிரதையாக நட்பு பாராட்டுங்கள். குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், வருமான வரி போன்றவற்றிலெல்லாம் கவனமாக இருங்கள். இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். உங்களிடமிருந்து ஒரு வார்த்தை வந்துவிட்டால் அது அப்படியே இருக்கட்டும். சரியோ தவறோ மாற்றிச் சொல்லிவிட்டோமோ என்று புதன் குழப்பியபடி இருப்பார். ‘சொன்னது சொன்னதுதான்’ என்று உறுதியாக நில்லுங்கள்.
உள்மனதில் உறங்கிக் கிடக்கும் மிருகத்தை உசுப்பிவிடும் இடமே ஆறு ஆகும். எனவே, உங்களுக்கு ஆறாம் இடமாக புதன் வருவதால், எதிராளியின் பலம் தெரியாது வாதப் பிரதிவாதங்கள் வேண்டாம். புதன் மறைந்திருப்பதால் எங்கு என்ன பேசினாலும் மெதுவாக இடைவெளி விட்டுப் பேசுங்கள். புதனிடமிருந்து காத்துக் கொள்ளுங்கள். ஆழ்மனதில் அடங்கியிருக்கும் அளப்பரிய ஆற்றலை வீர்யப்படுத்தி வெளிப்படுத்தும் இடமும் ஆறாம் இடமே ஆகும். எனவே, மணற்கேணி ஊற்றுபோல விஷயங்கள் வந்து கொண்டேயிருக்கும். எல்லாவற்றையும் பரீட்சார்த்தமாக செய்து கொண்டே இருங்கள். பத்தில் ஐந்து விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். யாரும் தொடாத விஷயங்களைத் தொட்டு சாதனை செய்வீர்கள்.
இந்த ஆறாம் இடம் என்பது மறைவு ஸ்தானம். அந்த இடத்திற்கு புதன் அதிபதியாவதால் எவரும் கண்டுபிடிக்க முடியாத விஷயங்களை நீங்கள் கவனித்து கண்டுபிடிப்பீர்கள். ஒருவரின் போராட்ட குணத்தை தீர்மானிக்கும் இடமாகவும் ஆறாமிடம் அமைவதால் தொடர்ந்து போராடுங்கள். நெருக்கடியான நேரங்களில், பெருமாள் கோயிலுக்கு சென்று வந்து முடிவுகளை எடுங்கள். தீர்க்க முடியாத பிரச்னையாக நீங்கள் ஒன்றை நினைத்தீர்கள் என்றால், ஏழை மாணவனின் கல்விச் செலவுக்கு உதவுங்கள். உங்களின் பிரச்னை தீர்வதை ஆச்சரியமாகப் பார்ப்பீர்கள். நீங்கள் அதிகம் குழம்பினால் அந்த விஷயத்தில் நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அதனால் குழப்பத்தைக் கண்டு பயப்படாதீர்கள்.
உங்களுக்கு டிரைவிங் மிகவும் பிடிக்கும். ஆனால், தொலைதூரப் பயணமெனில் நீங்கள் வண்டியை ஓட்டாமல் இருப்பது நல்லது. ஏனெனில், பல வகையான சிந்தனைகள் வந்து மோதியபடி இருக்கும். இதனால் கவனம் சிதறும். பழைய வாகனங்களை வாங்காதீர்கள். செகண்ட் ஹேண்ட் வண்டியை வாங்கும்போது விபத்துகள் ஏற்படும்.
உங்களின் சொந்த ஜாதகத்தில் ராசிக்கோ அல்லது லக்னத்திற்கு எட்டிலோ, பன்னிரெண்டிலோ புதன் மறைந்தால் நல்லது. இதனால் புதனால் ஏற்படக்கூடுமான மேலே கண்ட பிரச்னைகள் அனைத்தையும் தவிர்க்கலாம். சொந்த ஜாதகத்தில் புதனும் குருவும் சேர்ந்திருந்தால், தந்தைக்கும் பிள்ளைகளுக்குமிடையே எப்போதும் பிரச்னைகள் இருக்கும். யாரும் யாருக்கும் எதிர்பார்த்தபடி இருக்க மாட்டார்கள். பொதுக்காரியங்களில் சட்டென்று ஈடுபடாமல் மறைமுக உதவிகளைச் செய்ய வேண்டும். இதே புதன் சூரியனோடு சேர்ந்திருந்தால் மிகவும் நல்லது. ஆனால், சந்திரனோடு சேர்ந்திருந்தால் அம்மாவின் உடல்நிலை அடிக்கடி பாதிக்கும். மேலே சொன்னதெல்லாம் சொந்த ஜாதகத்தைப் பொறுத்த விஷயமாகும்.
உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் சரிதான், அல்லது வருவதற்கு முன்னரே தடுத்துக்கொள்ள நினைத்தாலும், நீங்கள் செல்ல வேண்டிய தலம் காஞ்சிபுரம் வரதராஜர் ஆலயமாகும். பொதுவாகவே சனி ஆதிக்கமுள்ளவர்கள் பெருமாளை வணங்குவது நல்லது. அதிலும் சனிக்கு நட்பு கிரகமான புதன் உங்களுக்கு பகையாக வருவதால், மகாக்ஷேத்ரமான காஞ்சியில் அருள்பாலிக்கும் வரதராஜரை வணங்குங்கள். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலத்தை ஆழ்வார்கள் பலர் பாடி பரவியுள்ளனர். காஞ்சிபுரத்திற்கு சென்னை மற்றும் எல்லா இடங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.
நன்றி

தனுசு ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்

தனுசு ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்
ஆயுதச் சின்னமான வில்லின் ராசியில் பிறந்த நீங்கள் ஆக்கவும் தெரிந்தவர்கள்; அழிக்கவும் தெரிந்தவர்கள். எதையும் எதிர்க்கவும் துணிந்தவர்கள். நீரோட்டம் போல போராட்டங்கள் தொடர்ந்தாலும், எதிர்நீச்சலில் வெற்றி பெறுபவர்களும் நீங்கள்தான். வளைந்து கொடுக்கத் தெரியாததால் சில வசதி, வாய்ப்புகளை வாழ்க்கையில் இழக்க நேரிடும். புரட்சி பேசத் தெரிந்த உங்களை யாரேனும் புகழ்ந்தால் இறங்கி விடுவீர்கள். தனியாக இருக்கும் நேரத்தில் தனித்துவத்தோடு யோசிக்கும் நீங்கள், நட்பு என்கிற பெயரில் கூட்டத்தோடு சேர்ந்தால் மாறிப்போவீர்கள்.
‘வாழ்க்கையில் எதையாவது சாதித்து விட்டுத்தான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று உறுதியோடு நாட்களை நகர்த்தும் நீங்கள், திடீரென இரக்கப்பட்டு யாரையேனும் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொள்வீர்கள். அறிவுச் சுரங்கமான பிரகஸ்பதியின் ஆளுமைத்திறன் அதிகமுள்ள தனுசு ராசியில் பிறந்த நீங்கள், ஊர்ப் பிரச்னை, உலகப் பிரச்னைகளையெல்லாம் தீர்த்து வைப்பீர்கள். வீட்டுப் பிரச்னை என்று வரும்போது, உங்கள் ஆலோசனைகளை யாரும் ஏற்பதில்லையே என்று வருந்துவீர்கள். புலியைப் பூனைபோல வளர்த்தால் கூட அதன் இயல்பான குணம் மாறாது என்பதைக் காலம் கடந்து, சிலரிடம் சூடுபட்டுத்தான் உணர்வீர்கள்.
உங்களின் ஆறாம் வீட்டிற்கு அதிபதியாக - அதாவது கடன், நோய், எதிரி ஸ்தானத்தைக் குறிக்கும் வீடான ரிஷப ராசிக்கு அதிபதியாக - களத்திரகாரகனான சுக்கிரன் வருகிறார். இந்த சுக்கிரனே லாப வீடான பதினோராம் வீட்டிற்கும் அதிபதியாக வருகிறார். இதனால், உங்களுக்கு எதிரி உருவான பின்புதான் நீங்கள் ஜெயிக்கத் தொடங்குவீர்கள். எதிரியே இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கை சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால், களத்திரகாரகன் என்கிற வாழ்க்கைத்துணை கிரகமான சுக்கிரன் ஆறாம் இடத்திற்குரியவராக இருப்பதால், வாழ்க்கைத்துணையோடு அடிக்கடி மோதல் தொடர்ந்துகொண்டே இருக்கும். ‘‘என்னை அவங்க புரிஞ்சிக்கவே இல்லை. சின்னச் சின்ன விஷயத்துலகூட மூக்கை நுழைக்கறாங்க. சொந்தக்காரங்க மத்தியில என்னை விட்டுக்கொடுத்து பேசறாங்க’’ என்று அடிக்கடி ஆதங்கப்படுவீர்கள்.
பெரிய பெரிய திட்டங்களை உள்மனதில் அசைபோட்டு யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ‘‘சாதாரண பிரச்னையைத் தீர்க்கத் தெரியாத நீங்க பெருசா என்ன சாதிச்சிடப் போறீங்க’ என்று மட்டம் தட்டி வாழ்க்கைத்துணை பேசுவார். தாய் என்கிற இரண்டெழுத்து உங்களுக்கு மந்திரம் போன்றது. ஆனால், வாழ்க்கைத்துணை வந்தவுடன் தாய்க்குப்பின் தாரமா, தாரத்திற்குப்பின் தாயா என்று தடுமாறுவீர்கள்.
பொதுவாகவே உங்களின் சத்ருஸ்தானாதிபதியாக சுக்கிரன் வருவதாலும், இதே சுக்கிரன் மூத்த சகோதர-சகோதரி ஸ்தானாதிபதியாகவும் இருப்பதாலும், பூர்வீக சொத்துகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். கோர்ட், கேஸ் என்று செலவுகளையும் அலைக்கழிப்புகளையும் சந்திக்க நேரிடும். வழக்குகள் நீண்டு கொண்டே செல்லும். ஃபேன்ஸி ஸ்டோர், ஒப்பனைப் பொருட்கள் போன்ற கடைகளைத் தொடங்கும்போது அதிக முதலீடு செய்யக் கூடாது. நான்கு ரூபாய் கையில் வைத்துக் கொண்டு நானூறு ரூபாய் பொருளை விலை பேசக் கூடாது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியத்தில் அதிகமாகக் கடன் வாங்கக் கூடாது. ‘‘சந்தோஷமா இருக்குறதுக்குத்தானே வாழுறோம்... மெதுவா கொடுத்தா போச்சு’’ என்ற அலட்சியம் கூடாது. ஆடம்பரச் செலவுகளுக்காகவே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சம்பாதித்த பாதி பணம் காலியாகும். அதனால் அத்தியாவசிய செலவுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பதவி, பட்டம் என்று உங்களுக்குக் கொடுத்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
பிரபலங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். முன்பின் அறிமுகமில்லாத நபர்களாக இருந்தாலும், நீங்களாகச் சென்று அறிமுகப்படுத்திக் கொள்வீர்கள். பலநாள் பழகியவர்கள் போல நெருக்கம் காட்டுவீர்கள். ரகசியங்களை மறைத்து வைக்கத் தெரியாமல், எங்கேயாவது ஒரு இடத்தில் எல்லாவற்றையும் கொட்டுவீர்கள். அதனாலேயே உங்களைப் பற்றி நன்கு தெரிந்த நபரிடமே நீங்கள் ஏமாறுவீர்கள். சொந்தபந்தங்கள் கூட, உங்களை பார்த்தால் ஒரு பேச்சு... பார்க்காவிட்டால் ஒரு பேச்சு... என்றிருப்பார்கள். உங்களுக்குப் பிடித்தவர்களுக்காக எதையும் செய்யத் துணிவீர்கள். நீங்கள் ஒருவரை எதிரியாக நினைத்து விட்டால், வாழ்நாள் முழுவதும் அவர்கள் செய்த துரோகத்தை மறக்கவும் மன்னிக்கவும் மாட்டீர்கள்.
எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், அவர்கள் செய்த தவறை முகத்துக்கு நேராக சுட்டிக் காட்டவும் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொஞ்சம் குறைவுதான். வாகனத்தில் செல்லும்போது கூட யாரேனும் உங்களை முந்திச் சென்றால் உடனே கோபம் வரும். அக்கம்பக்கம் இருப்பவர்களிடமும் நீங்கள் ஒத்துப் போக மாட்டீர்கள். எப்போதும் ஒரு உரசல் போக்கு இருந்தபடி இருக்கும். சில சமயங்களில் உங்களின் பிடிவாத குணமே உங்களுக்கு எதிரியாகும். எப்போதும் நடுநிலையாகவே இருக்க விரும்புவீர்கள். அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும் உங்களுக்கு யாரேனும் அறிவுரை கூறினால் பிடிக்காது. உங்களின் சுதந்திரத்திலும் மற்றவர்கள் தலையிடுவதை விரும்ப மாட்டீர்கள்.
போராட்டம் என்பது பழகி விடுவதால், வாழ்வில் பல சமயங்களில் சந்தோஷத்தைத் தொலைத்து விட்டு நிற்பீர்கள். ‘‘என்ன சம்பாதிச்சி என்ன... எதுக்காக வாழறோம்...’’ என்றெல்லாம் புலம்பும்படியாக இருக்கும். எல்லாம் இருந்தும் ஒரு வெற்றிடம் இருக்கும். ஜெயித்ததற்கான அர்த்தத்தை உணராது இருப்பீர்கள். எப்போதும் மனம் ரணமாக இருப்பதைப் போல உணர்வீர்கள். எவ்வளவுதான் முன்னேறினாலும் பழைய கசப்பான அனுபவங்கள், சம்பவங்களை நினைத்து வருந்துவீர்கள்.
அலுவலகத்தில் உங்கள் உயரதிகாரி பெண்ணாக இருந்தால், அவர்களோடு வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். பொதுவாகவே உங்கள் ராசிநாதனான குருவிற்கு எதிர்மறை கிரகமாக சுக்கிரன் வருவதால், பெண்கள் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் அத்துமீறி மூக்கை நுழைக்காதீர்கள். சிலருக்காக இரக்கப்பட்டு வம்பில் சிக்கிக் கொள்வீர்கள். அதனாலேயே வாழ்க்கைத்துணையுடன் கூட எப்போதும் ஒரு சின்ன ஈகோ பிரச்னை வந்துகொண்டே இருக்கும்.
உணவுப் பழக்கங்களில் அதீத கவனம் வேண்டும். பெரும்பாலும் வெளி உணவுகளான பீட்சா, பர்கர், துரித உணவுகள், பால் பொருட்கள் சம்பந்தமான உணவுகளையே விரும்பி உண்பவராக இருப்பீர்கள். எனவே அங்கங்கே கொழுப்புக் கட்டிகள் வர வாய்ப்பிருக்கிறது. முதுகுத் தண்டு வடத்தில் திடீரென்று வரும் வலியை சாதாரணமாக விட்டு விடாதீர்கள். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. அதேபோல சிறுநீர்த் தொற்று, பாலியல் தொடர்பாக சிறு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டாலும் கூட மருத்துவரின் ஆலோசனையை நாடுங்கள். பொதுவாக உங்களின் சருமம் கூட சென்சிட்டிவாக இருப்பதால், பிறர் உபயோகித்த ஆடையை நீங்கள் அணிவது கூடாது. உடனே அலர்ஜி வந்து விடும். அதேபோல் சென்ட், பாடி ஸ்பிரே உபயோகிப்பதாக இருந்தாலும், நன்றாக இருக்கிறது என்று அதிக காசு கொடுத்து வாங்குவது பெரிதல்ல; உங்களின் சருமத்திற்கு பாதிப்பு தராமல் இருக்குமா என்று பார்த்து உபயோகிப்பது நல்லது. முகத்தை முறையாகப் பராமரியுங்கள். முகத்திற்கு பொலிவு தரக்கூடிய க்ரீம், ஃபேஸ்வாஷ் என்று கண்டதையும் வாங்கிப் போட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
நீங்கள் கடன் வாங்க வேண்டுமெனில், காலி வீட்டு மனை அல்லது விளைநிலத்தை வங்கியில் அடமானம் வைத்து வாங்குங்கள். கட்டிய வீட்டுப் பத்திரத்தை அடமானமாக வைத்து கடன் வாங்கினால் வீட்டை மீட்பது கஷ்டம். தங்க நகைகளை வைத்தும் கடன் வாங்கலாம்.
வாகனகாரகனான சுக்கிரன் 6ம் இடத்திற்குரியவராக வருவதால், வேகம் கூடவே கூடாது. வாகனம் வாங்கும்போது நல்ல கன்டிஷனில் இருக்கிறதா என்றெல்லாம் பார்த்து வாங்குங்கள். பழைய வாகனம் வாங்குவதைக் கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். உங்கள் பழைய வாகனத்தை விற்பதானாலும், முறைப்படி எல்லா ஆவணங்களையும் வாங்குபவரின் பெயருக்கு உடனே மாற்றிக் கொடுத்து விடுங்கள். லைசென்ஸ், இன்சூரன்ஸ் என்று வாகனத்திற்குரிய எல்லாவற்றையும் முறையாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அபராதம் கட்ட வேண்டி வரும். தூரத்துப் பயணங்கள் செல்லும்போதெல்லாம் சொந்த வாகனத்தில் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
நீங்கள் சினிமா உள்ளிட்ட கலைத்துறையில் அதிக முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. எவரால் லாபம் அதிகரிக்கிறதோ, அவரே உங்களுக்கு எதிரியாகவும் மாறுவார். உங்களின் முதல் எதிரியே உங்களை முன்னேற்றவும் செய்வார். எழுச்சிக்குரிய கிரகமாக சுக்கிரன் வருவதால் பழைய விஷயங்களுக்கு புதிய முலாம் பூசுவீர்கள். எப்பொழுதுமே சிந்தனையில் நவீனத்துவம் இருக்கும். சின்னதாக ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், அதை சரியாகப் பயன்படுத்தி போராடி முன்னேறுவீர்கள். சொந்த வீட்டை பார்த்துப் பார்த்து கட்டுவீர்கள்.
அபார்ட்மென்ட்டில் வீடு வாங்குவதாக இருந்தால், நீங்கள் வாங்கும் தளத்துக்கு முறைப்படியான அரசாங்க அனுமதிகளைப் பெற்று கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்பது நல்லது. உங்கள் சொந்த மனையில், நீங்களே வீடு கட்டுவதாக இருந்தால் முறைப்படி பிளான் அப்ரூவல் பெற்ற பிறகே தொடங்க வேண்டும். வீடு கட்டும் இடத்தில் அழகான மரங்கள் இருந்தால் வெட்டுவதற்கு யோசிப்பீர்கள். நீங்கள் ஆசைப்படும் பொருள், உங்களுக்கு சுலபமாகக் கிடைத்தால் அது நிலைக்காது; உங்களுக்கும் சுவாரஸ்யம் இல்லாதது போல் தோன்றும்.
பால்ய நண்பராக இருந்தாலும் உங்களுக்கு ஒரு கஷ்டம் வரும்போது உதவி கேட்கத் தயங்குவீர்கள். ‘‘நாம கஷ்டத்துல இருக்கறது நண்பனுக்கு சொல்லித் தெரியக் கூடாது. தானா உதவி செய்ய முன் வரணும்’’ என்பீர்கள். சில சமயங்களில் சிலரின் நன்றிகெட்ட தனத்தை நினைத்து வருந்துவீர்கள். அதேபோல் மற்றவர்கள் சொல்லுக்கு இடம் கொடுக்காதபடி உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வேலைகளை சரியாக முடிப்பீர்கள். அரசியலை அறவே வெறுப்பீர்கள். ‘‘யார் ஆட்சிக்கு வந்தாலும் திண்டாடுறது ஜனங்கதான். இதுல இவங்க வந்தா என்ன, அவங்க வந்தா என்ன...’’ என்றெல்லாம் அடித்தட்டு மக்களுக்காக பரிந்து பேசுவீர்கள்.
உங்களுக்கு கடன், நோய், எதிரி என்று எந்தப் பிரச்னை வந்தாலும் திருவையாறு ஐயாரப்பர் கோயிலில் அருளும் ஸ்ரீஹரி குரு சிவயோக தட்சிணாமூர்த்தியை தரிசியுங்கள். உங்கள் துயரம் ஆதவனைக் கண்ட பனியாய் மறைந்து போகும். இந்த தட்சிணாமூர்த்தியின் வலப்பாதத்தில் ஆமையினுடைய உருவம் தென்படும். கூர்ம அவதாரம் எடுத்த மகா விஷ்ணு இத்தலத்தில் இவரை வணங்குவதாக ஐதீகம் நிலவுகிறது. திருவையாறு எனும் இத்தலம், தஞ்சாவூரிலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நன்றி

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்
நெருப்புக் குழம்பை உள்ளடக்கி வைத்திருக்கும் எரிமலைத் தொடர் நீங்கள். சில நேரங்களில் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் சில நேரங்களில் கனல் வார்த்தைகளையும் வீசுவீர்கள். சூரியனுக்குள் உறக்கமின்றி ஓயாமல் உழன்று கொண்டிருக்கும் ஹீலியம் அணு உலைகளைப் போல் சதா சர்வ காலமும் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். நெருங்கிப் பழகும் சிலருக்கு மட்டுமே உங்களின் நேர்மை புரியும். வீட்டையும், வாகனத்தையும் அழகுபடுத்திப் பார்க்கத் தெரிந்த உங்களுக்கு, அருகில் இருப்பவர்களிடம் அன்பாகப் பேசத் தெரியாது. வார்த்தைக்கு வண்ணம் பூசத் தெரியாது. ‘யாரோ, எக்கேடோ கெட்டுப் போகட்டும்’ என்று உங்களால் தவறுகளை தலை சாய்த்துப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தன்மானமும், சுய கௌரவமும்தான் உங்களின் முதல் எதிரிகள். லட்சியப் பாதையில் பயணிக்கும்போது சிலரை அலட்சியப்படுத்துவதாலும் புது எதிரிகள் முளைப்பார்கள். சகோதரரையோ, சகோதரியையோ, அல்லது உறவினர்களால் கைவிடப்பட்ட ஒருவரையோ குடும்பத்தில் வைத்து தாங்குபவரும் நீங்கள்தான்.
மேஷத்திற்கும், விருச்சிகத்திற்கும் செவ்வாய்தான் அதிபதியாக இருந்து ஆட்சி செய்கிறார். ஆனாலும், மேஷச் செவ்வாய்க்கும், விருச்சிக செவ்வாய்க்கும் வித்தியாசங்கள் உண்டு. மேஷ ராசியினர் சரவெடி போல படபடவென்று வெடிப்பார்கள். ஆனால் விருச்சிக ராசியினரான நீங்களோ, வலிகளைப் பொறுத்துக் கொண்டு ‘ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல’ என்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களுக்கு பாலீஷாக பேசத் தெரியாது. நறுக்கென்று பேசுவதால் ஆங்காங்கு எதிரிகள் முளைத்த வண்ணம் இருப்பார்கள். பேசக் கூடாத விஷயங்களையெல்லாம் பேசிவிட்டு, ‘மனசை புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்பீர்கள். உங்களின் ராசியாதிபதியாக செவ்வாய்தான் வருகிறார்.
மேலும், உங்களின் கடன், எதிரிகள் ஸ்தானமான மேஷத்திற்கும் செவ்வாய்தான் வருகிறார். எப்படிப் பார்த்தாலும், நல்லது கெட்டது என்று இரண்டையுமே செவ்வாய்தான் தரப் போகிறார். பேச்சு, செய்கை இரண்டிலுமே காட்டத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். நெருப்பு தெறிக்கப் பேசினால் மீண்டும் உங்களை நோக்கி அக்னிப் பந்துதான் வரும். அதை எதிர்கொள்ளத் தயாராக இருந்தால் பேசலாம். அதனாலேயே உங்களில் பலர் சபையில் பேசிவிட்டு, தனியாகப் பார்த்து மன்னிப்பு கேட்பீர்கள். பத்து வருடங்கள் பழகிய நெருக்கமான நண்பரையும் பத்து நிமிடத்தில் தூக்கிப் போடுவீர்கள்.
எதற்குமே அவசரப்பட மாட்டீர்கள். அதனால் உங்களை சோம்பல் மிகுந்தவர் என்று கருதுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. உங்களின் ஆறாம் இடத்திற்கு செவ்வாய் வருவதால், ‘எது வேண்டுமானாலும் ஆகட்டும்... அத்து மீறிப் பார்’ என்கிற எண்ணம் எப்போதும் வலுத்து இருக்கும். செவ்வாய் என்பது ‘மீறினால் என்ன’ என்று சவால் விட்டு சட்டத்தை உடைக்கும் கிரகமாகும். ‘உங்களுக்கு மட்டும்தான் ரகசியத்தைச் சொல்கிறேன்’ என்று எல்லோருக்கும் சொல்வீர்கள். பெரிய விஷயங்களை அநாயாசமாக எதிர்கொள்ளும் நீங்கள், சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் பெரிய அளவில் மன உளைச்சல்களுக்கு ஆளாவீர்கள். பல வருடங்கள் நல்ல பெயர் எடுத்துவிட்டு திடீரென்று பேசி கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்வீர்கள். இந்த செவ்வாயால் அடிக்கடி எமோஷனல் ஆகிக் கொண்டே இருப்பீர்கள். எப்போதுமே சமூகக் கோபங்கள் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்கும். அதை எங்கேயாவது வெளிப்படுத்திக் கொண்டே இருப்பீர்கள்.
செவ்வாய் ரத்த பந்தங்களுக்கும் உரியவராக இருப்பதால், உடன்பிறந்தோர்களே உங்களுக்கு எதிராக மாறுவார்கள். பூமி, நிலம் சம்பந்தமான எந்த விஷயமாக இருந்தாலும் சரிதான்... சட்டபூர்வமாக அணுகி, பிரச்னைகள் வருவதற்கு முன்பே சரிசெய்து கொள்ளுங்கள். இல்லையெனில் வழக்கு, பஞ்சாயத்து என தொடர்ந்து மோதிக் கொள்ளும் சூழல் வரும். அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, தம்பி எல்லோரின் மீதும் பாசமாக இருப்பீர்கள். பத்து பேருக்கும் வாக்கு கொடுத்துவிட்டு, அதை செயல்படுத்த முடியாமல் தவிப்பீர்கள். உங்கள் வாழ்வில் பாதி காலம் தர்மசங்கடமான சூழ் நிலைகளை எதிர்கொண்டபடி இருப்பீர்கள். அதனால் சரியோ, தவறோ... உங்கள் நிலையைச் சொல்லிவிடுவது நல்லது. இதனாலேயே நண்பர்களில் பலர் எதிரிகளாக மாறுவர். பூமிகாரகனாக செவ்வாய் வருவதால், நிலம் வாங்குவதை விட, கட்டிய வீடாக வாங்குவது நல்லது. அல்லது வெறும் நிலமாக வாங்க ஆசைப்படுபவர்கள், வாழ்க்கைத்துணையின் பெயரில் பதிவு செய்து கொள்வது நல்லது. அப்படி வாங்கிவிட்டீர்கள் எனில், பேருக்காவது கடக்கால் போட்டு மூன்றடி உயரத்திற்கு சுவர் எழுப்புங்கள்.
காவல்துறை, மின்சாரம், ராணுவம், செக்யூரிட்டி, ரத்தப் பரிசோதனை நிலையம் போன்ற இடங்களில் நீங்கள் பணியாற்றினால் நல்லது. அதேசமயம் உங்களுக்கு அதுவே எதிரான பலன்களையும் கொடுக்கும். ஃபிப்ட்டி ஃபிப்ட்டி என்பார்களே... அதுபோலத்தான் மேற்கண்ட துறைகளில் வளைய வர முடியும். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் குமார், செல்வம், பழனிவேல் போன்ற பெயருள்ளவர்களோடு பிரச்னைகள் வந்து நீங்கியபடி இருக்கும். மேலதிகாரியை நேரடியாகக் கேள்விகள் கேட்பதால், அவர் மூலம் நீங்கள் முடக்கப்படுவீர்கள். ஆனாலும், உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். நீங்கள் எந்த வேலையையுமே யாராவது சொன்னால்தான் செய்ய வேண்டும் என்று உட்கார்ந்து கொண்டிருப்பீர்கள். தானே ஒரு செயலை உருவாக்கிக் கொண்டு செயல்பட இயலாமல் முடங்கியபடி கிடப்பீர்கள். ஆனால், கொடுக்கும் வேலையை நூறு சதவீதம் அர்ப்பணிப்பு புத்தியோடு செய்து தருவீர்கள். யாராவது குச்சி எடுத்து உங்களை அதட்டிக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் யாருக்கு அபிப்ராயமோ, அறிவுரையோ சொல்கிறீர்களோ... அவரே உங்களை எதிர்த்துப் பேசுவார். அல்லது உங்களை எதிரியாகவே நினைத்துக் கொள்வார்.
உங்களுக்கு பெரிய கடன்கள் இருந்தால் பரவாயில்லை... ஆனால், சிறுசிறு கடன்களை மட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள். அதையும் தவிர, ‘‘இவரு தெரிஞ்சவரு...’’, ‘‘அவரு உடனே கொடுப்பாரு...’’ என்று யாருக்கும் சிபாரிசின் பேரில் எதையும் வாங்கிக் கொடுக்காதீர்கள். கடைசியில் உங்கள் கைக்காசை செலவழித்து பாக்கியை அடைக்க வேண்டி வரும். சிறிய அவமானத்திற்குக் கூட பெரிய அளவில் அவஸ்தைப்படுவீர்கள். சொத்து வாங்க, வீடு கட்ட என்றால் தைரியமாகக் கடன் வாங்குங்கள். மேலும், ஏழைகளுக்கு மருத்துவச் செலவோ அல்லது ரத்த தானமோ செய்யுங்கள். செவ்வாய் ரத்தத்திற்கு உரியவர் என்பதால், அதுவே பரிகாரமாக மாறும் வாய்ப்பு உண்டு. இரு சக்கர வாகனங்களை இயக்கும்போது ‘வேகம் விவேகமல்ல’ என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், மூவிங் தாட்ஸ் என்று சொல்வார்களே... அதுபோல பயணத்தில் இருக்கும்போது உங்களுக்கு யோசனைகள் அதிகமாகும். அதற்குத் தகுந்தாற்போல நீங்கள் இயக்கும் வண்டியின் வேகமும் வேறுபடும்.
திடீரென்று எல்லாவற்றையும் மூர்க்கத்தனமாக எதிர்க்கும் குணம் இருக்கும். தனக்குப் பிடித்ததே எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்கிற திணிப்பு இருக்கும். இதனால் சில சமயங்களில் நீங்கள் பேசும்போது, நண்பர்கள் தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்து விடுவார்கள். அதேசமயம் திடீரென்று எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் குணமும் வந்து விடும். இந்த முரண்பட்ட உணர்வுகளை என்ன செய்வது என்று தெரியாமல் அல்லாடுவீர்கள். வீட்டையோ, இடத்தையோ அடகு வைத்து கடன் வாங்குவதை விட தங்கத்தை வைத்துக் கடன் வாங்குங்கள். பூமிகாரகனாக செவ்வாய் இருப்பதால், இடத்தை அடகு வைத்தால் அந்த இடமே கைவிட்டுப் போகச் செய்து விடுவார்.
சமூகப் புரட்சி செய்யும் அமைப்பினரோடு கவனமாக இருக்க வேண்டும். நாளைக்கு ஏதேனும் பிரச்னை எனில், நீங்கள் யாரை நம்பி இறங்கினீர்களோ, அவரே உங்களை நோக்கி கையையும் காட்டிவிட்டு தப்பித்துக் கொள்வார். தவறான பாதையில் சென்று சிக்கிக் கொள்ளாதீர்கள். ‘‘அவருக்கு நீங்க ரைட் ஹேண்டாக இருந்தீங்களாமே’’ என்று உங்களைப் பிடித்து விசாரிப்பார்கள். எப்போதுமே சமூக அந்தஸ்து உள்ள வேலையிலேயே நீங்கள் அமர்வீர்கள். நான்கு பேர் மதிக்கும் உத்யோகத்தில்தான் இருப்பீர்கள். அதனால் மதிப்பு மிக்கவர்களாலேயே எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொள்வீர்கள். மின்சாரத்தைக் கையாளும்போதும், நெருப்பிற்கு அருகே இருக்கும்போதும் மற்றவர்களை விட நீங்கள் பன்மடங்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களின் அடிப்படை நோயே உஷ்ணம்தான். இது மெதுவாக வயிறு, கண், ரத்த அழுத்தம், தூக்கமின்மை என்று ஒவ்வொரு இடமாகப் பரவும். இதனால் உடலிலுள்ள உஷ்ணத்தை குறைத்துக் கொண்டால் நோய்களின் எண்ணிக்கையும் குறையும்.
யார் உங்களை ஆள்கிறார்களோ அவரே உங்களை அடக்கவும் செய்கிறார். அதாவது செவ்வாய்தான் உங்களை ஆட்சி செய்கிறார். அவரே எதிரிகளையும் கொண்டு வந்து சேர்க்கிறார். எனவே, யாராவது நன்மை செய்தால் அவருக்கு நன்மை செய்து விட்டு ஒதுங்கி விடவேண்டும். சந்தோஷத்தையும் ஆக்ரோஷத்தையும் சரிசமமாக பார்க்கும் திறன் பெற்றவர்களாக நீங்கள் இருத்தல் வேண்டும். மனிதர்கள் எப்போதும் இருவிதங்களிலும் இயங்கக் கூடியவர்கள் என்பதை ஆழமாக நெஞ்சில் பதித்துக் கொள்ளுங்கள். எதையுமே பழிக்குப் பழி என்று எதிர்கொண்டால் பிரச்னைகளில் சீக்கிரம் சிக்கிக் கொள்வீர்கள். சபதம், சவால் என்றெல்லாம் பேசக் கூடாது. காரியத்தில் கண் வைத்து முன்னேறிக் கொண்டிருங்கள். ஆளுமையிலும், அதிகாரத்திலும் செவ்வாய் திருப்தி காணுமெனில், அதிலும் அளவு வேண்டும் என்பதே செவ்வாய் உங்களுக்குத் தரும் பாடமாகும். எவ்வளவு பெரிய அதிகாரம் கிடைத்தாலும் சரிதான்... அமைதியாக இருங்கள். இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது ஆட்டுக் கிடா குறுக்காக வந்தால் எச்சரிக்கையாக இருங்கள். பெரும்பாலும் விபத்து அப்படித்தான் ஏற்படும். ராணுவப் பகுதி, காவல்துறை சார்ந்த சில பகுதிகளில் அத்துமீறி நுழையாதீர்கள்.
உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் சரி, நீங்கள் செல்ல வேண்டிய தலமே கீழசூரியமூலை ஆகும். ஏனெனில் சூரியனும் செவ்வாயும் நண்பர்களாக இருப்பதால், சூரியனின் நிதானமான ஆளுமையும், அதிகாரமும் உங்களுக்குக் கைகொடுக்கும். இது பாஸ்கர கோ ஷோடசப் பிரதோஷம் எனும் பெரிய பூஜை நிகழ்ந்தேறிய தலம். அனைத்து சூர்ய சக்திகளையும் இங்கு குழுமச் செய்து, யாக்ஞவல்கியர் முன்னிலையில் ஸ்ரீவித்ருமாகர்ஷண பைரவர் எனும் பைரவரின் அம்சமானவர் இதைச் செய்வித்தார். நாம் பார்க்கும் ஒரு சூரிய மண்டலத்து சூரியன் மட்டுமல்லாது, பல கோடி சூரிய மண்டலத்திலுள்ள சூரியர்களும் இத்தலத்து ஈசனை வழிபட்டதாலேயே ‘சூர்யகோடி பிரகாசர்’ (சூர்யகோடீஸ்வரர்) எனும் திருப்பெயர் அவருக்கு வந்ததாக சொல்கிறார்கள். இந்த இறைவனை வணங்கினால் உங்களது கடன், நோய், எதிரிகள் பிரச்னை எளிதில் தீரும். அம்பாளின் திருநாமம் பவழக்கொடி. அவளின் கடைக்கண் பார்வை பட, வாழ்வில் ஒளி கூடும்.
இத்தலம் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சூரியனார்கோவிலைத் தாண்டி கஞ்சனூர், திருலோக்கி கிராமங்களை அடுத்து உள்ளது கீழசூரியமூலை. சற்று உள்ளடங்கிய கிராமம். சூரியனார்கோவிலிலிருந்தோ அல்லது கஞ்சனூரிலிருந்தோ வழி கேட்டால் சொல்லி விடுவார்கள். தனி வாகனத்தில் செல்வது சிறந்தது.
நன்றி

துலாம் ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்

துலாம் ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்
உங்கள் ராசியின் சின்னமே தராசாக இருப்பதாலேயோ என்னவோ, எல்லா விஷயத்திலும் நடுநிலையாக இருப்பதையே விரும்புவீர்கள். ‘‘அவரு சொன்னா சரியாத்தான் இருக்கும்’’ என்று பலரும் உங்களிடம் ஆலோசனை கேட்க வருவார்கள். சுகமான சுக்கிரன் துலாத்தை ஆட்சி செய்கிறது. உங்களின் கடன், எதிரிகள், நோய் ஸ்தானத்திற்கு அதிபதியாக மீன குரு வருகிறார். பொதுவாகவே சுக்கிரனும் குருவும் பகைவர்கள்தான். அதேசமயம் இங்கு எதிரி ஸ்தானத்தையும் அவரே நிர்ணயிப்பதால், எவர் மூலமாக வித்தையை கற்றுக் கொண்டீர்களோ, அவரே துரோணாச்சாரி போல கட்டை விரலையும் கேட்பார். அதேபோல உங்களிடம் கற்றுக் கொண்டவர்களும் உங்களை எதிர்க்கத் துணிவார்கள். கற்கும்போதும், கற்பிக்கும்போதும் ஒரு இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். குரு எதிரியாவார் என்றால், கற்ற வித்தை தாமதமாக நினைவுக்கு வரும் என்றும் பொருளுண்டு.
ஆறாம் வீடு என்றழைக்கப்படும் கடன், வழக்கு, எதிரி ஸ்தானத்தின் அதிபதி, மீன குரு. நீங்களும் தனுசு குரு போல சட்டென்று கோபப்படுவீர்கள். வார்த்தைகளை வகைதொகையில்லாமல் இரைப்பீர்கள். இதே குருதான் உங்கள் இளைய சகோதர, சகோதரி ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருகிறார். எனவே நீங்கள் அவர்களுக்காக எவ்வளவு செய்தாலும் கெட்ட பெயர்தான் மிஞ்சும்; அல்லது அவ்வளவு எளிதில் திருப்தியடைய மாட்டார்கள். மேலும் குரு என்றாலே புத்திராதிபதி எனும் ஆண் குழந்தைகளை அருள்பவர் என்றும் சொல்வார்கள். இப்படிப்பட்ட குருவே சத்ரு ஸ்தானாதிபதியாக இருப்பதால், உங்களுக்கு ஆண் குழந்தைகளால்தான் பிரச்னைகள் வரும். நீங்கள் என்ன சொன்னாலும் அதற்கு எதிர்மறையான காரியங்களைத்தான் செய்வார்கள். உங்களுக்கு ஆண் குழந்தைகளைப் பற்றிய கவலைகள்தான் எப்போதும் அதிகம் இருக்கும். ரோஷக்காரர் நீங்கள்; ஆனால், ஒன்றுமேயில்லாத சின்னச்சின்ன விஷயங்களில் அதைக் காண்பித்துக் கொண்டிருப்பீர்கள். இதனால் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிக்கத் தெரியாத அசடராக இருப்பீர்கள். ‘‘இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் முகத்தை தூக்கி வச்சுக்கறீங்களே’’ என்பார்கள் நண்பர்கள்.
பள்ளிக்கூடத்தில் இந்த ராசிப் பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏதாவது பிரச்னை வந்தபடி இருக்கும். அடிக்கடி தலைமை ஆசிரியர் பெற்றோரை அழைத்து வரச் சொல்வது வாடிக்கையாகிப் போகும். உங்களுடைய முயற்சி ஸ்தானமான மூன்றாம் இடத்திற்குரியவராக தனுசு குரு வருகிறார். அவரே ஆறாம் இடமான எதிரி ஸ்தானத்திற்கும் வருவதால், நீங்கள் எந்த முயற்சி செய்தாலும் அதைத் தடுக்க ஒரு கூட்டமே காத்திருக்கும். உங்களை எவர் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல நினைக்கிறாரோ, அவரே முட்டுக்கட்டை போடவும் தயங்க மாட்டார். உங்களின் உடன்பிறந்த இளைய சகோதரரே ஆனாலும் சரிதான்... வியாபாரம், சொத்துப் பங்கீடு போன்ற விஷயங்களில் ஜாக்கிரதை வேண்டும். சகோதரர்களோடு கூட்டுத் தொழிலைத் தவிர்ப்பது நல்லது. அப்படிச் செய்ய நேர்ந்தால், வாழ்க்கைத்துணையின் பெயரில் தொடங்கி, சகோதரரை பங்குதாரராக சேர்த்துக் கொள்ளலாம். சகோதரர்கள் ஆளுக்கொரு ஊரில் இருந்தால் எந்தப் பிரச்னையுமே இல்லை.
உங்களில் பலருக்கு சிம்மக் குரல் இருக்கும். அதனால் அவ்வப்போது கர்ஜித்தபடி இருப்பீர்கள். பிடித்தால் ரொம்பவும் உயர்த்திப் பேசுவீர்கள்; பிடிக்கவில்லையெனில் தரையில் போட்டுத் தேய்ப்பீர்கள். அவரின் நிழலைக் கூட நெருங்க மாட்டீர்கள். ஆரம்பகால வாழ்க்கையில் நொந்து நூலாகி ஏமாந்த அனுபவத்தால், யாரையுமே எதற்குமே சிபாரிசு செய்வதைத் தவிர்ப்பீர்கள். பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். தொலைந்து போகும் ஆபத்து அதிகமுண்டு. அதேபோல சொத்துப் பத்திரம், காசோலை, கடன் பத்திரம், சேமிப்பு பத்திரங்கள், வீடு மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் போன்றவற்றையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் பொது வாழ்வில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஏனெனில், எப்போதுமே தந்திரத்தோடும் கணக்கோடும் உங்களால் இருக்க முடியாது. ஆழம் தெரியாமல் காலை வைத்து அவதிப்படக் கூடாது. அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மீது காரணமில்லாமல் கோபப்படும் குணம் உங்களிடத்தில் இருக்கும். ‘‘யாருமே சரி கிடையாது’’ என்று எப்போதும் புலம்பியபடி இருப்பீர்கள். அரசியலில் அனுசரித்து போகத் தெரியாமல், அங்கு இருப்போரை விமர்சிப்பீர்கள். எப்படிப் பார்த்தாலும் குரு உங்களுக்கு பாதகமான விஷயங்களைச் செய்வதால், கல்வி நிலையங்கள், டியூஷன் சென்டர், டுடோரியல் காலேஜ் போன்றவற்றைத் தொடங்கினால், எல்லாவற்றையும் சிஸ்டமேடிக்காக செய்யுங்கள். ஆசிரியர்களோடு பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சமயம் சார்ந்த அமைப்புகளை விமர்சிக்கும்போதும் எச்சரிக்கை தேவை. கோயில் கும்பாபிஷேகம் வரை உதவி செய்வீர்கள். முடிந்தவுடன் உங்களைக் கழற்றி விட்டுவிடுவார்கள். உங்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எறிந்தவர்கள்தான் அதிகம். நூறு சதவீதம் யாரை நம்பியிருந்தீர்களோ, அவர்களே எதிரி ஆவார்கள். உங்களின் எதிரியின் எதிரி யார் என்று தேடிப் பார்த்து அவரை நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். அதற்குப் பிறகு பழி வாங்குவீர்கள்.
தங்கத்திற்கும் உங்களுக்கு வெகு தூரம். சிறிய வயதிலிருந்தே நிறைய நகைகளைத் தொலைப்பீர்கள்; அல்லது அடகுக் கடைக்கு சென்ற வண்ணம் இருக்கும். எனவே, வெள்ளி மற்றும் பிளாட்டினத்தை வாங்கிப் போடுங்கள். கையில் நிறைய பணத்தை வைத்து செலவு செய்யுங்கள். அவசரப்பட்டு காசோலை கொடுத்துக் கொண்டிருக்காதீர்கள். கடன்களை பணமாகவே கொடுத்துத் தீர்க்கப் பாருங்கள். எப்போதுமே தனியார் வங்கியில் கடன்களை வாங்கிக் கொண்டிருங்கள். வேர்க்கடலை, கொண்டைக் கடலை போன்றவை உங்களுக்கு ஆகாது. வயிற்றுக்கு ஏதாவது பிரச்னையை தந்த வண்ணம் இருக்கும். அதேபோல மஞ்சள் காமாலை, சிறுநீர்ப்பாதை தொற்று போன்றவற்றிற்குரிய அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள். பள்ளிக்கு அருகே உங்களுக்கு வீடு இருந்தாலோ, அல்லது எதிர்வீட்டில் ஆசிரியர் இருந்தாலோ, பிரச்னைகளும் வீண் தகராறுகளும் வரக்கூடும்.
நீங்களாக தட்டுத் தடுமாறி மேலே வருவதுதான் உங்கள் வாழ்க்கைக்கு நல்லது. ‘அவர் உதவுவார்... இவர் இருக்கிறார்...’ என்று நீங்கள் ஒருபோதும் கனவு காணக் கூடாது. உதவி என்றால் நீங்கள் பிறருக்கு செய்யலாமே தவிர, மற்றோர்கள் செய்தால் அப்படிச் செய்தவர்களே கெடுதலையும் செய்யத் துணிவார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நேரடியாகக் களத்தில் நின்று யாரோடும் மோத மாட்டீர்கள். உங்களின் தாக்குதல் எப்போதுமே மறைமுகமாகத்தான் இருக்கும். ஏழாம் இடத்திற்குரிய செவ்வாயானது உங்களின் ஆறாம் இடத்திற்குரிய குருவிற்கு நண்பராக இருக்கிறார். எனவே, ‘‘உங்களுக்கு ஒன்றும் தெரியாது’’ என்றோ, ‘‘நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது’’ என்றோ அவ்வப்போது வாழ்க்கைத்துணை அறிவுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.
தனாதிபதி குரு ஆறாம் இடத்திற்குரியவராக இருப்பதால், எவ்வளவு பணம் வந்தாலும் போதாது. இருந்தாலும் தங்காது. எனவே, கூடுதல் வருமானம் வந்தால், உடனே ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்திருங்கள். நீங்கள் கடன் கொடுத்தால் திரும்ப வாங்குவதற்கு நிறைய சிரமப்பட வேண்டியிருக்கும். மிக முக்கியமாக நகைக் கடன்களுக்கு போகாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் மீட்பதற்குள் ‘போதும்... போதும்...’ என்றாகி விடும். ‘கேட்டுக் கெட்டது உறவு, கேளாமல் கெட்டது கடன்’ என்பது உங்களுக்கும் பொருந்தும்.
மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் தருவீர்கள். பொட்டில் அடித்தாற்போல் நியாயம் பேசுவதால் திடீர் எதிரிகள் முளைப்பார்கள். துலா ராசிக்காரரான நீங்கள் எதற்குமே அவசரப்படக் கூடாது. அது உங்களின் இயல்பும் அல்ல. அனுபவமில்லாமல் எதையும் செய்யத் துணியாதீர்கள். குருட்டு தைரியம் உங்களுக்கு வெற்றியைத் தராது. ஏனோ தெரியவில்லை... சைக்கிள்காரர்கள் உங்களை எப்போதும் இடித்து விட்டுப் போவார்கள். அதனால் உங்களுக்குக் காயங்கள் வரும். அதேபோல அரசாங்க அதிகாரிகளுடன்தான் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் வரும்.
துலாம் ராசியில் நீதி கிரகமான சனி உச்சமாவதால், நீதி, நேர்மைக்குக் கட்டுப்படுவீர்கள். சூரியன் நீசமாவதால், நாட்டு நிர்வாகம் செய்வீர்கள்; ஆனால், வீட்டு நிர்வாகம் தெரியாது. குடும்பத்திலுள்ள உள்நிர்வாகங்களில் ஈடுபாடு காட்ட மாட்டீர்கள். எழுத்தாலும், எமோஷனலாகப் பேசியும் கூட்டத்தைத் திரட்டுவீர்கள். அதனால் சிறைகூட சென்று வருவீர்கள்.
சுக்கிராச்சார்யார் உங்களின் ராசியாதிபதிக்கு குருவாக இருப்பதால், திருடனுக்கும் அறிவுரை கூறுவீர்கள். அரசாங்க விஷயங்களைக் கையாளும்போது சரியான ஆலோசகரை பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மூத்த சகோதரருடன் இணக்கமாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு கடன் பிரச்னை இருந்தால், அது வாகனக் கடனாக இருந்தால் நல்லது என்று விட்டுவிடுங்கள். வீட்டுக் கடன் இருந்தால் அது நல்லது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
ஆறாம் இடத்திற்கு உரியவராக குரு வருகிறார். மேலும் நீங்கள் கொஞ்சம் உக்கிரமான தெய்வங்களை வழிபட வேண்டும் என்பதால், நரசிம்மரை வணங்குதல் நல்லது. அதிலும், சிங்கப் பெருமாள் கோயில் எனும் தலத்தில் அருளும் பாடலாத்ரி நரசிம்மரை வணங்குங்கள். உங்கள் கடன், நோய் பிரச்னைகள் தீரும்; எதிரிகள் சக்தியிழப்பார்கள். இத்தலத்தில் இவருக்கு நெற்றியில் ஈசன் போல நெற்றிக் கண் இருக்கும். பார்க்கும்போதே சிலிர்த்துப் போகும். இதுவொரு குடைவரைக் கோயிலாகும். பௌர்ணமியன்று கிரிவலம் இங்கு மிகவும் விசேஷமானது. இத்தலம் செங்கல்பட்டுக்கு அருகே உள்ளது.
நன்றி

கன்னி ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்

கன்னி ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்
புத்தியை பிரதானமாக்கும் புதன் என்கிற கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவர் நீங்கள். எப்போதுமே ஒரு ஈர்ப்பு சக்தியோடு, அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மையைப் பெற்றிருப்பீர்கள். நீங்கள் நடமாடும் நூலகம் எனில் அது மிகையில்லை. பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்களைக் கண்டால் பிடிக்காது. சுரீரென்று விளாசுவீர்கள். ‘‘அவனா பார்த்து திருந்தட்டும்’’ என்கிற சொல்லே உங்களுக்குப் பிடிக்காது. ‘‘தப்புன்னா தப்புதான். அதைச் சொன்னாதான் உறைக்கும்’’ என்பதுதான் உங்களின் பாலிஸி. பிறகு அதற்காக உள்ளுக்குள் வருத்தப்படுவீர்கள். இப்படி பாதிக்கப்பட்டவர்கள், நீங்கள் எப்போது ஏமாறுவீர்கள் என்று காத்திருப்பார்கள். நீங்கள் கொஞ்சம் தவறு செய்தாலும் அதைப் பெரிதாக்கவே முயற்சிப்பார்கள்.
உங்களின் கடன், நோய், எதிரிக்குரிய இடமாக கும்பச் சனி வருகிறது. உங்களின் எதிரிகள் வெகு வருடங்களாக காத்திருந்துதான் தாக்குவார்கள். நீங்கள் எதிரிகளைக் கையாளும் விதமே வித்தியாசமானது. உள்ளுக்குள்ளே ஒரு லிஸ்ட் போட்டுக் கொண்டே வருவீர்கள். ‘‘இவன் அங்க நம்மள பத்தி சொல்றான்...’’, ‘‘இவன் இந்த இடத்துல நம்ம காலை வாரி விடறான்...’’ என்று பொறுமையாக யோசித்துக் கொண்டே வருவீர்கள். சரியான சந்தர்ப்பம் வரும்போது வைத்து விளாசி விடுவீர்கள்.
எந்த விஷயமாக இருந்தாலும் சரிதான்... உள்மனதோடு ஒருமுறை உரையாடிவிட்டுத்தான் வெளிப்படுத்துவீர்கள்.
நெருப்பு கிரகமான சூரியன் முதல் ஐந்து பாகைக்குள்ளேயே உங்கள் ராசிநாதனான புதனோடு நெருக்கமாக இருக்கிறது. அதனால் கோபமென்றால் கொந்தளிப்பீர்கள். நரம்புகள் புடைக்க சத்தமிடுவீர்கள். ‘‘இதுக்குப் போய் இவ்ளோ கோவமா’’ என்பதுபோல எல்லோரும் உங்களை பார்ப்பார்கள். அதுவே கொண்டாட்டம் எனில் குழந்தையாகி விடுவீர்கள். இவ்வாறு கணத்திற்கு கணம் உங்கள் உருவம் மாறிக் கொண்டேயிருக்கும். எந்த உணர்வாயினும் சரிதான்... வெகுநேரம் உங்களிடம் நீடிக்காது. புதனின் வேகத்தால் வெவ்வேறு விஷயங்களுக்கு மனம் ஓடிக் கொண்டேயிருக்கும். மூளையை மட்டும் வைத்துக் கொண்டு யோசிக்க மாட்டீர்கள். தலைமுடியிலிருந்து கால் நகம் வரை உங்களுக்காக யோசிக்க வைப்பீர்கள். ஏனெனில், அத்தனை உணர்வு பூர்வமாக புதன் உங்களை மாற்றுவார்.
எதையுமே கொஞ்சம் மிகையாகத்தான் பார்ப்பீர்கள். சிறிய தலைவலியாக இருந்தாலும் அதை அலட்சியமாக விடமாட்டீர்கள். ஏதோ பெரிய தொந்தரவு போல் பெரிதாக்கிப் பார்க்கும் குணம் இருக்கும். ஒருவர் உங்களின் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டால் அவரைப் பற்றி மரம், மட்டை, செடி, கொடி என்று எல்லோரிடமும் சொல்வீர்கள். துரோகம் இழைத்து விட்டாலோ, ‘‘அவரைப் போல கேவலமானவரு யாரும் இல்லை’’ என்று சொல்லத் தயங்க மாட்டீர்கள். மனதிற்குப் பிடித்தவர்களுக்கு கணக்கு வழக்கு பார்க்காமல் செலவு செய்வீர்கள். ‘நீரா... பணமா...’ என்று தெரியாமல் அள்ளி வீசி செலவு செய்வீர்கள்.
மனதில் பட்ட விஷயத்தை உடனே செயல் வடிவத்துக்கு மாற்ற இறங்குவதால், சுற்றியிருப்போர் கொஞ்சம் அதிர்ந்து போவார்கள். மாறி மாறி அறிவுரை வழங்குவார்கள். இவர்களெல்லாம் தோழர்களா எதிரிகளா என்று ஆரம்பத்தில் கொஞ்சம் குழம்பிப் போவீர்கள். இவர்களை எந்த இடத்தில் வைப்பது என்று தெரியாமல் தவிப்பீர்கள். ஆனால், வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால் யார் சொன்னாலும் கேட்க மாட்டீர்கள். பெரும்பாலும் உங்களுக்கு எதிரிகளே, நீங்கள் மதிக்கும் நபராகத்தான் இருப்பார்கள். உங்களால் போற்றப்பட்டவர்களே உங்களை இழித்தும் பேசுவார்கள். எனவே, அவர்களை நீங்கள் எதிர்மறையாக நினைக்கும் சூழ்நிலையும் உருவாகும். உங்களிடம் ஒருவர் எப்படி நடந்து கொள்வார்களோ, அப்படித்தான் நீங்களும் நடந்து கொள்வீர்கள். உங்களுக்கு மரியாதை கொடுத்தால் நீங்கள் பதிலுக்கு மாலையே போடுவீர்கள். மரியாதையாக நடத்துவதுபோல நடிப்பது புரிந்தால், தூக்கி குப்பைத் தொட்டியில் போடவும் தயங்க மாட்டீர்கள்.
புதனுக்கு சனிக்கும் ஒரு நட்புறவு இருப்பதால் எதிரிகள் நியாயமானவர்களாக இருந்தால் சட்டென்று நண்பர்களாக மாற்றிக் கொள்ளவே முயற்சிப்பீர்கள். புகழ்ந்தால் பிடிக்கும். அதுவே அதிகமாகப் புகழ்ந்தால் ஜாக்கிரதையாகி விடுவீர்கள். மெல்ல அலட்சியப்படுத்தி ஒதுக்குவீர்கள். உங்களின் ஒவ்வொரு விஷயமும் அக்கம்பக்கம், உறவினர்கள் என்று பல்வேறு விதங்களில் பிரதிபலித்த வண்ணம் இருக்கும்.
உங்களின் ஆறாம் இடத்திற்குண்டான சனியே, ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருகிறது. எனவே அடுத்த தலைமுறை மற்றும் குழந்தைகளைப் பற்றி கவனமாக இருப்பீர்கள். அடுத்த தலைமுறை மிகவும் பிரகாசமாக இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். இதனாலேயே பழைய விஷயங்களை நவீனமான முறைகளோடு கலவையாக்கி அவர்களுக்குத் தருவீர்கள்.
பொதுவாகவே புதனுக்கு செவ்வாய் எதிரியாக வருவதால், ரத்த பந்தங்களோடு தீராப் பகை இருந்து கொண்டேயிருக்கும். ஏனோ ரத்த பந்தங்களைவிட நண்பர்கள்தான் உங்களுக்கு அதிகமாக உதவுவார்கள். நீங்கள் வீடு வாங்கினால் எந்தப் பிரச்னையும் வராது. அதே, காலி மனையாக வாங்கினால் பிரச்னை வரும். அப்படி காலி மனை வரும்போதே பத்திரங்களில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என்று பார்த்துவிட்டு வாங்குங்கள். எதிலுமே ஓவர் பட்ஜெட் போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள்.
புதன் அமைதியாகவே கருத்துகளை வெளியிடச் செய்வார். ஆனால், சனி அவ்வப்போது சமூகத்தையே புரட்டிப் போடும் பிரச்னைகளைக் கையாளுவார். நீதி, நேர்மைக்குரிய கிரகமாக சனி வருவதால், நீங்கள் நேர்மையான வழியில் செல்லும்போது வெற்றி உங்கள் வசம் வரும். மாற்று வழிகளைக் கையாளும்போது சனி உங்களை சட்டச் சிக்கலில் சிக்க வைத்து விடுவார். புதனின் வேகமும், சனியின் மந்தத் தன்மையும் உங்களை சில முரண்பாடான மனிதர்களை சந்திக்க வைக்கும். உங்களின் வேகத்தோடு ஒத்துப் போகாத நண்பர்களிடத்தில் சென்று சூழ்நிலைக் கைதியாக இருக்க வேண்டி வரும்.
இதே சனிதான் உங்கள் பிள்ளைகள் ஸ்தானத்தை நிர்ணயிப்பதால், உங்களைப் போன்றே அவர்களும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களை விட்டுப் பிடித்தால், உங்கள் வழிக்கே அவர்கள் திரும்புவார்கள்; எதிர்த்தால் உங்களை வெறுக்கவும் செய்யலாம். உங்களின் ராசியாதிபதியான புதனுக்கும் செவ்வாய்க்கும் பகையென்று முன்னரே பார்த்தோம். எனவே, திருமணத்திற்கு முன்னரே சகோதரர்களுக்குள் சொத்துக்களைப் பிரித்துக் கொள்ள வேண்டும். பெற்றோர் இதை சரியாகப் புரிந்து கொண்டு செய்ய வேண்டும். உங்களில் சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட உடன்பிறப்பெல்லாம் கூட உண்டு.
நன்றி

சிம்ம ராசி


சிம்ம ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்
சிம்ம ராசியில் பிறந்த நீங்கள், குகையில் அமர்ந்து குரல் கொடுக்கும் சிங்கம்போல சுற்றியிருப்பவர்களை விரட்டிக் கொண்டிருப்பீர்கள். அதிகாரத்திற்கும், ஆளுமைக்கும் உரியவரான சூரியனின் ஆதிக்கத்தில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். அதனாலேயே எல்லோர்மீதும் ஆளுமை செலுத்த விரும்புவீர்கள். உங்களால் அடக்கப்படுபவர்களே பிறகு எதிரியாவார்கள். நீங்கள் தட்டிக் கேட்பவரே உங்கள் மீது வழக்கு தொடுப்பார்கள். ‘‘சொல்றவங்க ஏதாவது சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க. நான் கேட்கணும்ங்கற அவசியம் இல்லை’’ என்றுதான் பெரும்பாலும் உங்கள் பேச்சு இருக்கும். இப்படி எல்லோரிடமும் பேசும்போது தானாக எதிரிகள் உருவாகி விடுவார்கள். ஆனால், உங்களோடு நேரடியாக மோதுபவரை விட மறைமுகமாகத் தாக்குபவர்களே அதிகம். நீங்கள் யார் மீதாவது கோபப்படுகிறீர்கள் என்றால், அதிகமாக அவரை நேசிக்கிறீர்கள் என்று பொருள். கீழே விழுந்தும் மண் ஒட்டாத கதையாக, சுய கௌரவத்தை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள்.
உங்களின் ராசிக்கு சத்ரு, நோய், கடன் போன்ற இடங்களுக்கு அதிபதியாக மகரச் சனி வருகிறார். உங்களுக்கு ஜென்மப் பகையே சனிதான். அவரே சத்ரு ஸ்தானாதிபதியாகவும் வருகிறார். அதனால் எங்கு போனாலும், எதைத் தொடங்கினாலும், சனி தொந்தரவுகளை கொடுத்த வண்ணம் இருப்பார். ஒரு விஷயத்தை தொடங்கும்போதே முதலில் எதிர்ப்புதான் வரும். சிறிய வயதிலிருந்தே உறவினர்கள், அக்கம்பக்க வீட்டிலுள்ளோர் உங்களுக்கு ஏதாவது சொன்ன வண்ணம் இருப்பார்கள். வீட்டுக்கு வந்து போவோர் எல்லாம் உங்களுக்கு அறிவுரை மழை பொழிவார்கள். ‘‘நான் ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாமான்னு இருக்கேன்’’ என்றால் அதற்கு முட்டுக்கட்டை போட பலர் வருவார்கள். அவர்களை அப்படியே தள்ளி வைப்பீர்கள்.
அதேபோல, உங்களின் ஆறாம் இடத்திற்குண்டான சனியே, ஏழாம் இடமான வாழ்க்கைத்துணை ஸ்தானத்திற்கு உரியவராகவும் வருகிறார். அதனால் உங்களின் வாழ்க்கைத்துணை திறமையுள்ளவராக இருப்பார். உங்களை மீறி சிந்திப்பவராகவும் இருப்பார். குறைகளை நேருக்கு நேராக சுட்டிக் காட்டித் திருத்துவார். ஆனால் இந்த சனி சத்ரு ஸ்தானாதிபதியாக வருவதால், மனைவியையே நீங்கள் பல சமயங்களில் எதிரியாக நினைப்பீர்கள். நீங்கள் செய்யும் சில காரியங்களுக்கு துணைபோனால் நல்ல வாழ்க்கைத்துணை என்றும், அதைத் தவறு என்றால் ஜென்ம எதிரியாகவும் பார்ப்பீர்கள். ‘‘நான் எது சொன்னாலும் அதுல ஒரு குறை கண்டுபிடிக்கறதையே வேலையா வச்சுருக்கா’’ என்று மனைவியைக் கடிந்து கொள்வீர்கள். பொதுவாகவே நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. பெரும்பாலும் அந்நிய உறவுகள், புது உறவுகளில்தான் உங்களின் வாழ்க்கைத்துணை அமையும். நீங்கள் சார்ந்திருக்கும் சமூகத்தில் வசதியற்றோ, அல்லது ஏதேனும் குறைபாடுள்ள வீட்டிலிருந்தோ திருமணம் புரிந்து கொண்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
வாழ்க்கைத்துணையின் சொந்தங்களாலேயே உங்களுக்கு நிறைய கடன்கள் வரும். திருமண விழாக்களோ, அவசரச் செலவுகளோ, அறுவை சிகிச்சைகளோ... கடன்களை நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டு அடைப்பது என்று பலவிதங்களில் கடன்கள் பெருகும். வாழ்க்கைத்துணை உங்கள் கருத்தோடு மாறுபட்டால், ‘நின்னா குத்தம்... நடந்தா குத்தம்...’ என்று எல்லா நடவடிக்கைகளிலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பீர்கள். புகழ்ச்சிதான் உங்களின் முதல் சத்ரு. உங்களை மிகைப்படுத்திப் பேசுபவர்தான் எதிரியாக உருவெடுக்கிறார். அதை வாழ்க்கைத்துணைதான் முதலில் சுட்டிக் காட்டுவார். வாழ்க்கைத்துணை ஸ்தானமான ஏழாம் இடம்தான் தொழிலில் பங்குதாரர்களைப் பற்றிப் பேசும் இடமாகவும் வருகிறது. எனவே, பங்குதாரர்களால் பண இழப்பு மற்றும் வழக்குகளை சந்திப்பீர்கள். உங்களால் ரகசியங்களைக் காப்பாற்ற முடியாது. ‘‘யார்கிட்டேயும் எதையும் சொல்ல மாட்டேன்’’ என்று தொடங்கி, சற்றுமுன் வரை நடந்த எல்லா விஷயங்களையும் சொல்லி விடுவீர்கள்.
பெருமாள் பெயருள்ளவர்கள் ஆரம்பத்தில் உங்களுக்கு உதவிகரமாக இருந்துவிட்டு, பிறகு உபத்திரவம் செய்யத் தொடங்குவார்கள். முக்கியமாக ராமச்சந்திரன் என்பதுபோல சந்திரனோடு சேர்ந்து வரும் பெருமாள் பெயர் உள்ளவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கை வேண்டும். உங்களுக்கும் கடைநிலை ஊழியர்களுக்குமிடையே எப்போதும் பிரச்னைகள் இருந்து கொண்டே இருக்கும். லேபர் கோர்ட் படியேறுவதைத் தவிர்க்க முடியாது. மேலதிகாரி ஒத்துழைத்தாலும் கீழ்நிலை ஊழியர்களால் அவஸ்தைப்படுவீர்கள். சொந்த ஜாதகத்தில் சனி நன்றாக இருந்தாலும், 3, 11ம் இடத்தில் சனி இருந்தாலும், பிரச்னைகள் அதிகம் வராது. அப்போது மனைவியால் செல்வாக்கு பெறுவீர்கள். வேலையாட்கள் நண்பர்களாக இருப்பார்கள்.
சனி இப்படி ஆறாம் இடத்திற்கு உரியவராக வருவதால், எதிலுமே அவசர முடிவுகளை எடுக்க வைப்பார். எதையுமே எமோஷனலாக பேசவைத்துக் கொண்டே இருப்பார். இயல்பான நிதானத்தைத் தாண்டி, பதற்றத்தைக் கூட்டுவார். சொந்த ஜாதகத்தில் சனி உங்களுக்கு சரியில்லையெனில் உப்புப் பெறாத விஷயத்திற்கெல்லாம் நீதிமன்றம் நாடுவீர்கள். அரை மணி நேரத்தில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயத்திற்கு ஆறு வருடங்களாக அலைய வேண்டி வரும். சூரியன் உங்களின் ராசிக்கு அதிபதியாக இருப்பதால் அரசாங்க அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்றோர் ஆரம்பத்தில் நட்பு பாராட்டுவார்கள். ஆனால், போகப்போக உங்களுக்கு எதிராக மாறுவார்கள். வழக்கு போன்ற விஷயங்களில் அதீத கவனத்தோடு இருத்தல் வேண்டும்.
நீதி, நேர்மை, நாணயம் போன்றவற்றிற்கு உரியவராக சனி வருவதால், கொஞ்சம் பிசகினாலும் சிக்க வைத்து விடுவார். தலைவலி, கண் நோய், முழங்கால் வலி போன்றவை ஏற்படும்போது சட்டென்று மருத்துவரை நாட வேண்டும். சருமத்தில் அரிப்பு ஏற்படும்போதும், உடனடி சிகிச்சை அவசியம். செலவு செய்வதற்கு உங்களைப் போல் ஒருவர் பிறந்து வரவேண்டும். அலுவலகத்தில் குறைந்தது ஒரு நாளைக்கு பத்து பேருக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்து விடுவீர்கள். கடன் வாங்கியாவது அடுத்தவர்களுக்காக செலவு செய்வீர்கள். நாலு பேர் போக வேண்டிய விசேஷத்திற்கு, இருபது பேரை சேர்த்துக் கொண்டு வேன், கார் என்று அலம்பல் செய்வீர்கள். அதேசமயம், பிடிக்கவில்லை எனில் சட்டென்று உறவினர்களையும் நண்பர்களையும் தூக்கிப் போடுவீர்கள்.
அடுத்தவர்களுக்கு பாவம் பார்த்தே பாதி சொத்தை அழித்த சிம்ம ராசிக்காரர்கள் உண்டு. மூன்று மாதத்திற்கு ஒரு மொபைல் தொலைக்கும் சிம்ம ராசியினரை நான் அறிவேன். அடிக்கடி ஏதாவது காரணத்துக்காக அபராதம் கட்டுவீர்கள். உங்களுக்கு கடன் எனில், அது தந்தையாரால் கூட ஏற்படும். எப்போதோ சகோதரிகளின் திருமணத்திற்கு தந்தையார் பட்ட கடன்கள் அவருக்குப் பிறகு உங்கள் மீது விழும். பரம்பரை சொத்து இருந்தால், அதை ஒழுங்காகப் பிரித்துக் கொண்டு விடுதல் நல்லது. இல்லையெனில் உடன்பிறந்தோர்களே வழக்கு தொடுக்கும் அபாயம் உண்டு. சிலசமயம் பெருமைக்காக மற்றவர்களுக்கு கடன் வாங்கிக் கொடுப்பீர்கள். ‘‘நான் சொன்னா அவரு எவ்ளோ வேணாலும் கொடுப்பாரு’’ என்று வாங்கிக் கொடுத்து விட்டு முழி பிதுங்குவீர்கள்.
சிம்ம ராசிக்காரர்களிடம் பிடிவாதம் இருக்குமளவிற்கு அவசரத்தனமும் உண்டு. கூட்டிக் கழித்துப் பார்த்தால் நீங்கள் குறும்புக்காரக் குழந்தைதான். இதனாலேயே, ‘‘அவர்கிட்ட மூணு தடவைக்கு மேல ஒரு விஷயத்தைக் கேட்டா, ‘எடுத்துக்கிட்டு போய்யா’ன்னு தூக்கிப் போட்டுடுவாரு’’ என்று உங்களிடம் பொருளைப் பறிப்பார்கள். இந்த விஷயம் பூமி, மனை, வீடு என்று பல்வேறு இடங்களில் வெளிப்படும். உங்களின் பல பிரச்னைகள் தீர மிக சூட்சுமமான வழியொன்று உள்ளது. அதாவது பிதுர்காரகன் எனப்படும் சனி பகவான் உங்களுக்கு எதிரியாக வருவதால், முன்னோர்கள் செய்த தவறுக்கு நீங்கள் சில விஷயங்களை அனுபவிக்க வேண்டி வரும். அல்லது முன்னோர்களுக்கு உங்கள் தந்தையாரோ அல்லது திதி கொடுக்கும் நிலையில் உள்ளவர்களோ திதி கொடுக்காமல் இருப்பதால், அவர்களின் கோபம் கூட உங்கள் வாழ்வை முடக்கலாம். எனவே பிதுர்க் கடன்களை சரியாகச் செய்து விடுங்கள்.
‘ஆழம் பார்த்துக் காலை விடவேண்டும்’ என்பதுபோல நீங்கள் கோபமாகப் பேசும்போது எதிராளியைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. ‘‘எங்கிட்டதானே அவன் வேலை செய்யறான். இதைவிட வேறெங்க அவனுக்கு நல்ல சம்பளம் கொடுத்துடப் போறாங்க’’ என்று தூக்கியெறிந்து பேசாமல் இருப்பது நல்லது. எதிரி ஸ்தானத்தை நிர்ணயிப்பவராக சனி இருப்பதால், வார்த்தைகளில் கவனம் தேவை. தரக்குறைவாகப் பேசி அதுவே பெரிய பிரச்னையைக் கொண்டுவந்து விடும். பெரிய தொழில் மற்றும் வியாபாரங்களில் கூட்டு வைத்தால் எச்சரிக்கையோடுதான் இருக்க வேண்டும். அதிலும் உங்களுக்குக் கீழ் பணியாற்றுவோர்கள் வழியாக வரும் எந்த விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துத்தான் முடிவெடுக்க வேண்டும்.
வைரம் வாங்கும்போதும் அதை விற்கும்போதும் கவனத்தோடு இருக்க வேண்டும். மேலும் ரத்தினங்கள் பதித்த நகைகளை வாங்கும்போது எச்சரிக்கை தேவை. நகையை அடகு வைத்தல் உங்கள் தொழில் ரீதியான ரொடேஷனுக்கு நல்லது. ஆனால், காசோலை கொடுக்கக் கூடாது. ஒருவரின் போராட்ட குணத்தை தீர்மானிக்கும் இடமாக ஆறாம் இடம் வருகிறது. விடாமல் துரத்துதல் என்பதைவிட, எதையுமே கொஞ்சம் விட்டுப் பிடித்தால் நீங்கள் வெற்றி பெற முடியும். சந்திரன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டுக்கு உரியவராக வருவதால் தீவிர சிந்தனை இருக்கும். ஒரே விஷயத்தை நோண்டித் துருவிக் கொண்டிருப்பீர்கள். எல்லோரையுமே உங்களுக்கு எதிரானவர்களாகவும், உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை என்பது போலவும் நினைக்கும் மனப்பிரமை உங்களுக்கு அதிகம் உண்டு. அதை விலக்கிக் கொள்ளப் பாருங்கள். சொந்த ஜாதகத்தில் சனியோடு சூரியனோ, செவ்வாயோ சேராமல் இருந்தால் பிரச்னைகளை எளிதாக முடிக்கலாம்.
சிம்ம ராசியினர் மேற்கண்ட பிரச்னைகள் தீர வழிபட வேண்டிய தலமே திருலோக்கி ஆகும். இங்கு அருளும் க்ஷீராப்தி சயனப் பெருமாளை தரிசியுங்கள். ஆதிசேஷன் குடையாக கவிழ்ந்திருக்க, திருமுகத்தருகே ஸ்ரீதேவியும், திருவடிப் பகுதியில் பூதேவியும், நாபிக் கமலத்தில் பிரம்மாவும் இருக்கின்றனர். திருமகளை தனது திருமார்பில் ஏற்றுக்கொண்ட தலமாதலால் இத்தல இறைவனை தரிசிப்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. ஒற்றுமைக் குறைவால் பிரிந்த தம்பதிகள் இத்தல ஷீராப்தி பெருமாளை தரிசிக்க நிச்சயம் ஒன்று சேர்வர். அதுமட்டுமில்லாது திருமகளே இங்கு நித்திய வாசம் புரிவதால், இங்கு வந்து செல்பவர்களுக்கு மகாலட்சுமியின் பூரண அருள் கிட்டும். கடன் தீர்ந்து வசதி பெருகும். ஷீரநாயகி எனும் திருநாமத்தோடு தனிக் கோயிலில் மிகப்பொலிவோடு பிரகாசிக்கிறாள் திருமகள். கும்பகோணத்திலிருந்து இங்கு செல்ல பேருந்து வசதி உண்டு. அல்லது கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆடுதுறையிலிருந்து சூரியனார்கோயில், கஞ்சனூர் வழியாக தனி வாகனம் வைத்துக் கொண்டும் செல்லலாம்.
நன்றி

கடக ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன


கடக ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன
மென்மை, தன்மை, கனவுகள் என்று எப்போதும் இதமாகவே மனதை வைத்துக் கொள்ள விரும்பும் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். சாதுர்ய பேச்சால் சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல வளைந்து கொடுத்து எல்லாவற்றிலும் வாகை சூடுவீர்கள். புள்ளி விவரங்களுடன் கருத்துக்களை அள்ளி வீசிப் பேசுவதெல்லாம் மிகவும் பிடிக்கும். வீடு, மனை வாங்குவதற்கு முன்பு முதலில் வானவில்லையே வர்ணமாக தீட்ட முடியுமா என கனவு காணுவீர்கள். வரும் முன் காப்போம் என்கிற பழமொழிக்கும் உங்களுக்கும் வெகுதூரம். ‘‘வரும்போது பார்த்துக்கலாம்’’ என்பதுதான் உங்களின் மனோநிலையாகும். காற்று வீசும் பக்கம் நகரும் பாய்மரப் படகுபோல வாழ்க்கை செலுத்தும் வழியில் செல்வீர்கள். வாழ்க்கையை வளைக்காமல் அதன் போக்கில் சென்று வாழ ஆசைப்படுவீர்கள். கிடைக்கும் சுகங்களையும் சந்தர்ப்பங்களையும் ஒத்திப் போடாமல் உடனே அனுபவிப்பீர்கள்.
இப்படிப்பட்ட உங்களுக்கு ஆறாம் வீடு என்றழைக்கப்படும் கடன், வழக்கு, எதிரி ஸ்தானத்திற்கு அதிபதியாக தனுசு குரு வருகிறார். இது போர்க் கருவி வீடான கோதண்டம் எனும் வில்லாக வருவதால், கோபப்பட்டால் பொல்லாதவர்களாகி விடுவீர்கள். தேவைப்பட்டால் பழிவாங்கவும் தயங்க மாட்டீர்கள். உங்களின் கடன், எதிரி, நோய் ஸ்தானத்திற்கு அதிபதியான அதே குருவே, தந்தையார் ஸ்தானமான ஒன்பதாம் இடத்திற்கும் அதிபதி. எனவே உங்களின் முதல் ஹீரோவும் அப்பாதான்; வில்லனும் அப்பாதான். குரு ஒரு நல்ல வீட்டிற்கும் கெட்ட வீட்டிற்கும் உரியவராக வருவதால், எதிரிகள் உருவாக ஆரம்பித்தவுடன்தான் உங்களின் வளர்ச்சியும் அசுரத்தனமாக இருக்கும். ‘‘அன்னைக்கு அவன் அவமானப்படுத்தலைன்னா நான் இன்னைக்கு இவ்ளோ தூரம் வளர்ந்து இருக்கவே மாட்டேன்’’ என்பீர்கள். யார் எதிர்த்தாலும், அவர்களின் பலவீனத்தை வைத்து அவர்களை வீழ்த்துவீர்கள்.
ஆறாம் இடத்திற்கு அதிபதியாக குரு வருகிறார். ‘‘எவ்வளவு வந்தாலும் கையில தங்க மாட்டேங்குது. சரியான ஓட்டை கையா இருக்குப்பா’’ என்பீர்கள். தர்ம காரியங்களுக்கு அந்தப் பணம் சென்றால் நல்லது. ஆறாம் இடத்திற்கு குரு அதிபதியாக வருவதால், இப்படி நல்லவிதமாக செலவு செய்வதே பரிகாரமாகவும் மாறிவிடும். நோய், நொடி வந்தால் படுத்த படுக்கையாக இருப்பது பிடிக்காது. கல்லீரல், பல், கால் வலி என்று அடிக்கடி வந்து நீங்கிக் கொண்டே இருக்கும். எவர் உங்கள் கொள்கைகளை ஆதரிக்கிறாரோ, அவரே எதிர்ப்பாளராகவும் மாறுவார். யாரேனும் உங்களை மிகையாகப் புகழ்ந்தால் எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் உங்களுக்கு குழி தோண்டுகிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.
எதிரியின் புத்திசாலித்தனத்தையும் விமர்சனங்களையும் உள்ளூர ரசிப்பீர்கள். உங்களின் எதிரி ஸ்தானத்திற்கு உரியவராக தனகாரகனான குருவே வருவதால், பணம் கொடுக்கல்-வாங்கலால்தான் எல்லா பிரச்னையும் வரும். ‘கேட்டுக் கெட்டது உறவு. கேளாமல் கெட்டது கடன்’ என்பது உங்களுக்குத்தான் பொருந்தும். தந்தையை மிஞ்ச வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்கும். அப்பாவை கொஞ்சம் எதிரியாக நினைத்தாலும், உங்களின் ரோல்மாடலே அவர்தான். நீங்கள் நகைக் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. தனியார் வங்கிகளில் கடன் வாங்குங்கள். அதிலும் இன்டர்நேஷனல் வங்கியாக இருந்தால் மிகவும் நல்லது.
ஆறாம் இடத்திற்குரியவராக குரு வருவதால் பொதுவாகவே ஒரு விஷயத்தை உபதேசமாகவும் அறிவுரையாகவும் கூறுபவராக குரு இருக்கிறார். ஆனால், இங்கு உங்களால் கற்றுக் கொண்டவரே உங்களுக்கு எதிரியாவார்கள். அலுவலகத்தில் எல்லா விஷயங்களிலும் எதிர்ப்பு காட்டிக் கொண்டிருக்கக் கூடாது. எல்லோருக்கும் எல்லாமும் தெரியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், ‘‘அவர்கிட்ட ஏதாவது கேட்டா உடனே குச்சி எடுத்துக்கிட்டு பாடம் நடத்த ஆரம்பிச்சிடுவாரு’’ என்பார்கள். ‘‘இவரு யாரு எனக்கு சொல்லிக் கொடுக்கறதுக்கு’’ என்கிற மனோநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். உங்கள் அலுவலகத்தில் உங்களை யார் வேலைக்கு சேர்த்து விட்டாரோ, அவரே உங்களுக்கு எதிராகவும் மாறுவார்.
அதாவது உங்களின் நலன் விரும்பி என்று யாரை இத்தனை வருடங்கள் நினைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவரே உங்களின் நலனை விரும்பாதவராகவும் மாறுவார். இந்த ராசியைச் சேர்ந்த பலர் சிறுவயதில் தன்னுடைய ஆசிரியரைப் பற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் கூறும் சூழ்நிலை வரும். பள்ளியில் சப்ஜெக்ட்டை விட அதை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்தான் முக்கியம் என நினைப்பீர்கள். சந்திரசேகரன், மனோகரன் போன்ற பெயருள்ள நபர்கள் உங்களுக்கு ராசியாக இருப்பார்கள்.
பெரிய தொழில் மற்றும் வியாபாரங்களில் கூட்டு வைத்தால் எச்சரிக்கையோடுதான் இருக்க வேண்டும். அதிலும் உங்கள் தந்தையார் வழியாக சேரும் நண்பர்கள் எனில் கொஞ்சம் கூடுதல் ஜாக்கிரதை உணர்வு தேவை. தந்தையின் தொழிலை ஏற்று நடத்தும்போதும் பிரச்னைகள் வந்து நீங்கியபடி இருக்கும். ‘‘அப்பா மாதிரி இவரு இல்லை’’ என்று சொல்வார்கள். ஜுவல்லரி, பைனான்ஸ் கம்பெனி, வேர்க்கடலை மண்டி என்று தொழில் செய்பவர்கள் இந்த ராசியில் இருந்தால், உங்கள் வாழ்க்கைத்துணை பெயரில் வியாபாரத்தை நடத்துவது நல்லதாகும். ஆனாலும் உங்களின் தலையீடு இல்லாமல் எதுவும் நடக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருங்கள்.
தங்கம் வாங்கும்போதும் அதை விற்கும்போதும் கவனத்தோடு இருக்க வேண்டும். இல்லையெனில் நஷ்டத்தை சந்திப்பீர்கள். யாரேனும் ‘பழைய நகைகளை வைத்துக் கொண்டு பணம் தாருங்கள்’ என்றால் ஒப்புக் கொள்ளாதீர்கள். ஏனெனில், போலீஸ், கேஸ் என்று வேறுமாதிரியாகப் போகும். இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்க நகைகளை அடிக்கடி தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருப்பார்கள். யோகாதிபதியான குருவே சத்ரு ஸ்தானாதிபதியாக வருகிறார். நண்பனே எதிரியாவதெல்லாம் அரசியலில் சகஜமோ இல்லையோ... உங்கள் வாழ்க்கையில் சகஜமாகிப் போகும். மூத்த அதிகாரியாக இருந்தாலும், மேலதிகாரியாகவே இருந்தாலும், யாரோடும் அதீத நெருக்கம் காட்டாமல் இருப்பது நல்லது.
உழைப்புக்கேற்ற பதவி உயர்வு எப்போதுமே உங்களுக்குக் கிடைக்காது. சாதாரண பதவி உயர்வுகளைக் கூட நீதிமன்றம் வரை சென்று ஜெயித்துத்தான் பெறுவீர்கள். உங்களுக்குப் பின்னால் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கெல்லாம் பதவி உயர்வு வருவதை பார்த்து வருத்தப்பட்டு போராடிப் பெறுவீர்கள். அதேபோல அரசியல்வாதிகள், அரசாங்க உயர் அதிகாரிகள் உங்களைப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வார்கள். அவர்களை முழுவதும் நம்பி காரியங்களில் இறங்குவது அவ்வளவு உகந்ததல்ல. ஏனெனில், எப்போதுமே பொதுக் காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அப்படி நல்லது செய்யப்போய் பொல்லாப்புதான் தேடிவரும். எனவே, ‘அவர் சொன்னார்...’, ‘இவர் சொன்னார்...’, ‘நிச்சயம் செய்து தருகிறேன்’ என்றெல்லாம் வாக்குறுதி தராதீர்கள். தேர்தல் நேரத்தில் உங்களை பயன்படுத்திக் கொண்டு விட்டுவிடலாம். அதேபோல எங்கேனும் ஒரு நோட்டுக்கு இரண்டு நோட்டு என்று பணப்பட்டுவாடா நடந்து உங்களை ஈடுபடுத்தத் துணிந்தால் உடனே விலகி விடுங்கள். ஏனெனில், அதுபோன்ற நபர்கள் யதேச்சையாக உங்களிடம் வரக்கூடும்.
வாகனங்களில் உள்ள டயர் மற்றும் பிரேக் சமாசாரங்களை அவ்வப்போது செக் செய்துகொள்ளுங்கள். பயணங்களில் பழம் நறுக்குவதற்குக் கூட கூர்மையான ஆயுதங்களை எடுத்துச் செல்லாதீர்கள். ஆயுதங்கள் உங்களை ஏதேனும் சிக்கலில் மாட்டிவிடும். உங்களின் ராசியாதிபதியாக சந்திரன் வருகிறார். எதிலுமே சமச்சீரற்ற மனோநிலைதான் இருக்கும். திடீரென்று நண்பர்களோடு இழைவீர்கள். குழைவீர்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் அவர்கள் கேட்காமலேயே தலையிடுவீர்கள். இதனால் நெருங்கிய நண்பர்களை இழப்பீர்கள். ‘‘எனக்குப் பிடிக்கலைன்னா அவங்க நிழல் கிட்டக்கூட நான் நிக்க மாட்டேன்’’ என்பீர்கள். நீங்கள் ஜலராசி என்கிற கடகத்தில் பிறந்திருப்பதால், நீர் சம்பந்தப்பட்ட ஒவ்வாமை இருந்து கொண்டே இருக்கும். வீசிங் அவ்வப்போது வந்துபோகும். மஞ்சள் காமாலை அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரைப் பாருங்கள். சருமத்தில் ஏற்படும் அலர்ஜியால் தோல் பாதிக்கப்படும். கந்தகம், இரும்பு போன்றவை நீரில் கலந்திருந்தால் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. சிறுநீரகக் கல் இருக்கிறதா என்று டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
எந்த விஷயத்தையுமே கடைசி நேரத்தில் முடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். குழந்தைகளின் கல்விக் கட்டணம், குடிநீர் வரி போன்றவற்றை முன்னரே கட்டிவிடுவது நல்லது. ‘‘என்னை நம்பி அவரு இறங்கிட்டாரு’’ என்றெல்லாம் நீங்களாக உங்களை பெரிய அளவில் மதிப்பிட்டுக் கொண்டு உதவி என்கிற பெயரில் சிக்கிக் கொள்ளாதீர்கள். ‘நான் கௌரவமான ஆளு’ என்று பெயரெடுப்பதற்காக பல விஷயங்களை இழப்பீர்கள். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பது உங்களுக்கான பழமொழி யாகும். அதனால் திட்டமிட்டு பொய் சொல்ல முயற்சியுங்கள்; வரவில்லையென்றால் விட்டு விடுங்கள். இல்லையெனில் ஆப்பசைத்த குரங்கைப் போல சில விஷயங்களில் சிக்கிக் கொள்வீர்கள். முத்திரைத்தாள் விஷயங்களில் இன்னும் எச்சரிக்கையோடு இருங்கள். ஏனெனில், போலி முத்திரைத்தாள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிரிகள் உங்களை ஈடுபடுத்துவார்கள்.
உள்மனதில் உறங்கிக் கிடக்கும் மிருகத்தை உசுப்பிவிடும் இடமே ஆறு ஆகும். எனவே, உங்களுக்கு ஆறாம் இடமாக குரு வருவதால், எதையெல்லாம் இந்த சமூகத்தில் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆராய்ந்து கொண்டே இருப்பீர்கள். அமானுஷ்யமான, தெய்வீகமான தேடலில் மனதை அதிகம் ஈடுபடுத்துவீர்கள். அதனுடைய நம்பகத்தன்மையை நீங்கள் முதலில் ஆராய்ந்து தெரிந்துகொண்டுதான் பிறருக்கு சொல்வீர்கள். ‘‘இவர்கிட்ட இவ்ளோ விஷயம் இருக்கா? பார்த்தா தெரியவே இல்லையே. பூனை மாதிரி இருக்காரு’’ என்று உங்களைப் புகழ்வார்கள். தரமான மரபு சார்ந்த கலைகளோடு கல்வியை வழங்க முயற்சி செய்வீர்கள்; வெற்றியும் காண்பீர்கள். ஆறாம் இடத்தில் மறைந்திருக்கும் குரு, இப்படி உதவிகளையும் செய்வார்.
ஒருவரின் போராட்ட குணத்தை தீர்மானிக்கும் இடமாகவும் ஆறாமிடம் அமைவதால், அதற்கு குருவே அதிபதியாக வருகிறார். பெரியோர்கள், முன்னோர்கள் என்ன விஷயத்தை காப்பாற்ற போராடினார்கள் என்று ஆராய்வீர்கள். பெரியோர்களின் அடிச்சுவடுகளைத் தொடர்ந்து நடந்து சாதிக்கத் துணிவீர்கள். ஆனால், இதுபோல விஷயங்களை நீங்கள் தொடும்போதே எதிர்ப்பும் தானாக வரத்தான் செய்யும். பல நேரங்களில் பட்டறிவை விட அனுபவ அறிவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பிறரின் அனுபவங்களை வைத்தே பிரச்னைகளைக் கையாளும் தன்மையைப் பெற்றிருப்பீர்கள்.
கடக ராசி அன்பர்கள் கடன் மற்றும் எதிரிகள் சம்பந்தமான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு செல்ல வேண்டிய தலமே காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் ஆலயமாகும். இங்கு எட்டு புஜங்களிலும் ஆயுதங்களோடு பெருமாள் சேவை சாதிக்கிறார். இவரை எண்புயக்கரத்தான் என்று அழைப்பர். புஷ்பவல்லித் தாயாரையும் தரிசித்து வாருங்கள். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாகும். இத்தலம் சின்ன காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு அருகேயே உள்ளது.
நன்றி