சனி, செப்டம்பர் 16, 2017

புதியதோர் வானொலி உலகம்

drm_30
தொண்ணூற்றி ரெண்டில். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தேன்.”காமாட்சி அக்கா ஊர்லேர்ந்து வந்திருக்காங்க” என்றான் முத்துமாரி.”நேத்துதான் பாத்தேன். நீ எங்கிட்டு இருக்கன்னு கேட்டாங்க”
“பாக்கணுமே, வரியாடே? போவம்” என்றவாறே அவன் ஸ்கூட்டரில் தொத்திக் கொண்டேன். அக்கா கொஞ்சம் பூசியிருப்பதாகப் பட்டது. தமிழ் தவிர வேறொன்றும் அறிந்திராத அவள், வார்த்தைக்கு வார்த்தை “ சல்த்தாஹை, டீக் ஹை” என்றது ,வீட்டிலிருந்தவர்களுக்கு விசித்திரமாகப் பட்டிருக்க வேண்டும். என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நானும் கிட்டத்தட்ட அதே நிலைதான். பொதுவாக என்ன பேசிப் பழகுகிறோமோ, அது அனிச்சையாக வேறு தளங்களிலும் ப்ரதிபலித்து விடுகிறது.
“ஒரு குறைதான் அங்கிட்டு.. கேட்டியா?” என்றாள் அக்கா, முறுக்கும், வெங்காய வடையும் ஒரு தட்டில் நீட்டியபடி. “ நம்மூர் மாரி இலங்கை ரேடியோ கேக்க மாட்டேக்கி. அப்துல் ஹமீது குரல் கேட்டு நாளாச்சி. ’இரவின் மடியில்’ ப்ரோக்ராமை விவித் பாரதில எதாச்சும் ஒண்ணு, அடிக்க முடியுமால? அதான் நாலு கேசட்டுல பழய பாட்டு பதிஞ்சு கொடுக்கச் சொல்லியிருக்கேன். சோனி சி-90 நல்ல கேசட்டுதானடே?”
மனம் விரும்பிய ரேடியோ நிகழ்ச்சிகள் பொன் சங்கிலிகளாகக் கால்களைக் கட்டிப்போட்ட தினங்கள் அவை. அருமையான பழைய பாடல்களை ஒரு லிஸ்ட்டில் எழுதி, கேஸட்டில் பதிந்து வாங்கிச்செல்வது , வெளி மாநிலங்களில் உள்ளவர்களின் பொழுதுபோக்காவும் இருந்தது. பண்பலை என்பது பெரும் நகரங்களில் சில மணிகள் மட்டும் கேட்ட ஒன்று. ஏ.எம் எனப்படும் பரப்பலைகள் ஏதோ கொஞ்ச தூரம் போகும். அவ்வளவுதான்., வானொலி நிலையங்கள் தொலைபேசித் தொடர்பு, இணையங்களை நம்பியிருந்தன. இதன் மூலமே திருச்சி , திருநெல்வேலி, கோயமுத்தூர் வானொலி நிலையங்கள் சென்னையுடன், தேசியச் செய்திக்காக தில்லியுடன் இணைந்தன. இத்தனை தொலைவுக்கு , வானொலியின் பரப்பலை துல்லியமாக வந்துவிடாது.
இன்றும் இதன் நிலை அப்படித்தான். புற்றீசல்களாக பண்பலை நிலையங்கள் தொடங்கப்பட்டு விட்டனவே அன்றி, சென்னை பண்பலை நிகழ்ச்சியை மும்பையில் நேராக வானொலிப்பெட்டியில் கேட்டுவிட முடியாது. இணைய தளம் மூலம் அது பரப்பப்பட்டு, கேபிள் அல்லது வயர்லெஸ் பரப்பான் மூலமே கேட்க வேண்டியிருக்கிறது. இதற்கு பேண்ட்வித் தேவைப்படுகிறது. வானொலியின் பரப்பாற்றல் சிற்றலைகளில் அதிகமென்றாலும், அதில் ஒலி தெளிவாகக் கேட்பதில்லை. பின்புல ஓசை அதிகமிருக்கும். வளிமண்டல பாதிப்புகள் செய்தியைத் தாக்கும்.
நாம் இன்று கேட்கும் வானொலி, சிற்றலைகள் (short wave), நடுத்தர அலைநீள அலைகள் ( medium wave) நீளலைகள் (long wave) பண்பலை ( Frequency Modulation) அதிக அதிர்வெண் அலைகள் ( Very High Frequency) என பல பட்டைகளாகப் பிரிக்கப்பட்டு வகுக்கப்பட்டு , பரப்பப்படுகின்ற அலைகளின் தொகுப்பு. குறுகிய அலைகள் நீண்ட தொலைவு வரை கேட்கும். இதனால்தான் 70, 80களில் நம்மால் லார்ட்ஸ் மைதானத்தில் கவாஸ்கர் நூறு அடித்ததை நள்ளிரவில் ரேடியோ ஸ்பீக்கரில் காது வைத்துக் கேட்டு , உற்சாகமாக கத்த முடிந்தது. ஆனால் ஸ்பீக்கரில் உன்னிப்பாக காது வைத்துக் கேட்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது. பலரும் கேட்டதாக பாவனை செய்ததாகவே எனக்கு நினைவு., அடிப்படையில் , அதிர்வெண் பரப்பு எல்லைகளை வானொலியின் தொழில் நுட்பம் இன்றுவரை கடக்கவில்லை. இதைத் தாண்டிய உலகளாவிய ட்ஜிட்டல் வானொலி என்ற அமைப்பு, அடிப்படை தொழில் நுட்பத்தை அசைக்க முயன்றுகொண்டிருக்கிறது.
நாம் தொலைதூர தேசத்து வானொலியைக் கேட்க வேண்டுமானால், சிற்றலைப் பட்டை (short wave band)யைப் பிடித்து, ட்யூனிங் செய்து அலைவரிசையைப் பிடிக்கவேண்டும். டிஜிட்டல் வானொலி, இந்த பட்டைகளை விலக்கி, ஒரே பட்டையில் அனைத்து வீச்சு மாற்ற அலையேற்றி தொழில் நுட்ப ( amplitude modulation) ஒலிபரப்புகளையும் ஒருங்கிணைத்து ஒலிபரப்பும். இதன்மூலம், தூத்துக்குடியில் கேட்டுக்கொண்டிருந்த இலங்கை வானொலியை, காமாட்சி அக்கா, ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கியவுடன், தெளிவாகக் கேட்கலாம்.
1989ல் ஜெர்மெனியில் பெர்லின் சுவர் வீழ்ந்ததோடு, வானொலி, தகவல் தொழில்நுட்பத்தில் சில மாறுதல்கள் நிகழ்ந்தன. அதுவரை சில நாடுகள் மட்டுமே பயன்படுத்தியிருந்த சில அதிர்வெண் பட்டைகள், இராணுவத்திற்கு என ஒதுக்கப்பட்டிருந்த பெருமளவிலான அதிர்வெண் அலைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன. இந்நிலையில் , பல பட்டைகளாக வானொலி தகவல் தொழிநுட்பத்தை துண்டாடாமல், ஒரே பட்டையாக பயன்படுத்தினால் என்ன? என்ற சிந்தனை வளர்ந்தது,. பழக்கத்தில் இருந்த இயற்பண்பு சார்ந்த தகவல் ( analog signal ) அலைவரிசையில் , வீச்சு மாற்ற தகவல் அலை (amplitude modulation)வரிசையை, டிஜிட்டல் முறையில் மாற்றும் திட்டமாக அச்சிந்தனை உருவெடுத்தது.
இதன் முதற்கூட்டம் பாரீஸ் நகரில் 1996ல் நடந்தது. அதில் டிஜிட்டல் அலைவரிசை, எல்லையற்ற தகவல் பரிமாற்றத்தை வானொலிமூலம் கொண்டுவர உத்திகள் செய்யப்படவேண்டுமென நிறுவப்பட்டது.1997ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 40 பேர் கொண்ட கூட்டம் அதிகாரபூர்வமாகக் கூடி, மேற்கொண்டு வளர்க்கும் திட்டத்தை விவாதித்தது. 1998ல் உலகளாவிய டிஜிட்டல் ரேடியோ என்ற அர்த்தத்தில் Digital Radio Mondiale என்ற பெயரும், குழுவின் அடிப்படை நோக்கமும் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. குவாங்ஷூ மாநாடு இதன்பின் நடத்தப்பட்டு, பல வானொலி நிலையங்கள், கம்பெனிகள் ஆதரவளித்தது. பன்னாட்டு ரேடியோ தொலைதொடர்பு நிறுவனம் டி.ஆர்.எம் என்பதை அதிகாரபூர்வமாக, 30 மெகாஹெர்ட்ஸ்க்குக் கீழான அதிர்வெண் அலைவரிசையை டிஜிட்டலாக இணைக்கும் தொழில்நுட்பனென அறிவீத்தது.
இத்திட்டத்தின் அடிப்படைக் கொள்கை ஒலிபரப்பை, ஒலிநீள, அதிர்வெண் அடிப்படையான பாகுபாடில்லாது, ஒரே பட்டையில், டிஜிட்டல் உருவாக தருவதென்பதாக இருந்தது. முப்பது மெகாஹெர்ட்ஸ் அதிர்வெண் வரையான அலைகளை ஒரே பட்டையில் கொண்டுவரும் வகையில் DRM30 என்று ஒரு திட்டத்தைத் தொடங்கியது. 2001ல் “ மிகத் துல்லியமான ஒலி பரப்பை, உலகெங்கும், பண்பலையின் ஒலித் தரத்துக்கு இணையாக அளிப்பது, செய்திகளை, தகவல் நிலைகளை தொலைக்காட்சிக் கட்டுமானமின்றி வானொலி மூலம் அளிப்பது, இடர்நிலைக் காலச் செய்திகளை, உடனுக்குடன் உலகெங்கும் துல்லியமாக, இடையூறுகளின்றி பரப்புவது” என்பன அதில் சேர்ந்தன. 2005ல் மிக அதிக அதிர்வெண் அலைகளை(Very High Frequency -VHF ) DRM+ என இதில் இணைத்தார்கள். இதன்மூலம் பண்பலைகள், டிஜிட்டல் ஒலிபரப்பில் சேர்ந்தன. பதினைந்து வருடங்களாகிவிட்டது, இன்னமும் இத்தொழில் நுட்பம் , சோதனைக் கட்டம் தாண்டி மக்களுக்கு பெருமளவில் பயன்படுமளவில் வந்து சேரவில்லை. மன்னிக்கவும், வந்துகொண்டிருக்கிறது.
குவாங்ஷூ கூட்டத்தின் முடிவில் உலகளாவிய வானொலி ப்ராஜெக்ட், பீட்டர் செங்கர் என்ற ஜெர்மானியரின் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. கிட்டத்தட்ட அது அவரது வீட்டிலேயே இருந்தது எனலாம். அடிப்படையான தொழில்நுட்ப அளவிலான மாற்றம் அத்தனை எளிதல்ல. பரப்புமானிகளும்( ட்ரான்ஸ்மிட்டர்), வாங்குமானிகளும் (ரிசீவர்) உருவாக்கப்பட வேண்டும். அதோடு, நடைமுறையில் இருக்கும் வானொலி பரப்பு சேவையினை இது சிதைக்காமல், இது நடைமுறைப்படுத்தப் படவேண்டும். உலகெங்கிலும் இருக்கும் லட்சக்கணக்கான வானொலி நிலையங்களும், கோடிக்கணக்கில் இருக்கும் வானொலி வாங்குமானிகளும் மாற்றப்பட வேண்டும். இப்போது வானொலி , மொபைல் போனில் கேட்கிறது. மாற்றக்கூடிய விகிதாசாரமா, நாம் பேசுவது?
பீட்டர் செங்கர் பொறுமையாக முன்னேறினார். வழியில் பல தடங்கல்கள். எதெல்லாம் சேர்க்கப்படவேண்டும் என்ற ஒரு பட்டியல், தொலைக்காட்சியில் வரும் மாமியார் மருமகள் சீரியல்களும் இடம் பெற் வேண்டும் என்ற ரேஞ்சில் நீளவே, அவற்றை வெட்டிச் சுருக்கி, இன்றைய, நாளைய தேவைகளை மட்டும் எடுத்துச் செல்வது அத்தனை எளிதாக இருக்கவில்லை. தொழில்நுட்பம் பத்து வருடங்களில் பல விகிதங்களில் மாறிவிட்டது. அதனை ஒருங்கிணைத்துச் செல்வது ஒரு தலைவலி.
செங்கர், அறிவியல், தொழில்நுட்பத்தில் ஜாம்பவானாக இருந்தாலும், அதில் மட்டுமே கவனம் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டு இன்றும் இருக்கிறது. கம்பெனிகளுக்கு அவர் இந்த தொழில்நுட்பத்தை போதிய அளவில் விளம்பரப்படுத்தவில்லை என்பது உண்மை. இதனால் , தொழில் நுட்பம், அவரது வீட்டின் ஹாலைத் தாண்டி வெளி வரவில்லை. இருவருடங்களுக்கு முன், ஜெர்மானிய சட்டத்தின்படி, அவர் ஓய்வு பெற்றேயாக வேண்டிய சூழ்நிலை வர, இத்திட்டம் பி.பி.ஸி ஆதரவுடன் இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டது. புதிய தலைவர் சந்தைப்படுத்துவதில் தீவிரமாக முனைய, மெல்ல மெல்ல , உலகத்தின் கவனம் டி.ஆர் எம் மின் மீது திரும்பியது. பல தனியார் வானொலி நிலையங்கள், அரசு நிலையங்கள் டி.ஆர்.எம் குறித்து சிந்திக்கத் தொடங்கின. ஆல் இந்திய ரேடியோவும் அதில் ஒன்று.
குவாங்ஷூவில் இத்திட்டத்திற்கு ஆதரவாக கையெழுத்திட்ட பல நிறுவனங்கள், இதற்குத்தேவையான கருவிகளை பெருமளவில் உருவாக்கவோ, சந்தைப்படுத்தவோ முயலவில்லை. சோனி, பானஸானிக் போன்ற நிறுவனங்கள் இத்தொழில் நுட்பத்தை முதலில் இருந்தே கவனித்து வளர்த்து வந்தாலும், பொதுமக்கள் அளவில் கொண்டு செல்ல மலிவான கருவிகளை உருவாக்கவில்லை. இத்திட்டம் பெருமளவில் மக்களிடம் சென்று சேராததற்கு இது ஒரு முக்கிய காரணம்.
air
வானொலி நிலையங்களை இயக்கிவரும் நாடுகள், பெரும் கம்பெனிகள், தன்னார்வல நிறுவனங்கள் போன்றவை இன்றும் இயற்பண்பு சார்ந்த முறையிலேயே செயல்படுகின்றன. விதிகள் மாற்றப்படாத நிலையில் அவை முன்னேற்பாடாக ஒரு நிலைப்பாட்டையும் எடுக்க இயலாத நிலையில் நிற்கின்றன. மேலும் டி.ஆர்.எம் ஒலிபரப்பு பற்றி பல எதிர்மறையான விவாதங்களும், கருத்துக்கணிப்புகளும் வெளியிடப்பட்ட நிலையில் அவர்களின் தயக்கத்தில் ஒரு நியாயத்தைக் காண முடிகிறது.
மோடி அரசில், ஆல் இந்திய ரேடியோ , டி.ஆர்.எம் தொழில்நுட்பத்தை, மாறி வரும் சமுதாயத்தின் தேவையாகக் கண்டு, தீவிரமாக அதனை சோதனை செய்து, செயல்படுத்த முயன்று வருகிறது. 2017ல் , டி.ஆர்.எம் தொழில் நுட்பத்தை ஆல் இந்திய ரேடியோ முழுதுமாக செயல்படுத்தும். தற்போது பழக்கத்தில் இருக்கும் அனலாக் முறை ஒலிபரப்பும் தொடர்ந்து செயல்படும். டி.ஆர்.எம் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் கருவிகளைக் கொண்டிருப்போர் சோதனை நிகழ்ச்சிகளைக் கேட்டு, பின்னூட்டத்தை ஏ.ஐ.ஆர் நிறுவனத்திற்குத் தெரிவிக்கலாம்.
சென்னை, தில்லி வானொலி நிலையங்கள், டி.ஆர்.எம் சேவைக்கெனவே குறிப்பிட்ட அலைவரிசைகளை வைத்திருக்கின்றன. இவை தவிர 23 வானொலி நிலையங்களில் டி.ஆர்.எம் சேவை, சோதனைக் கட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் பட்டியலை உசாத்துணையில் இருக்கும் நிரலியில் கண்டு தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தற்போது, நம்மால் சோதனை செய்துவிடமுடியுமா? என்றால், ரிசீவர் கருவிகள் கிடைப்பது மிக அரிதாக இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் அதன் விலை பயமுறுத்துகிறது. க்ரோமா-வின் கடையொன்றில் டி.ஆர்.எம் ரிசீவர் இருக்கிறதா? என்றேன். “ அவரெல்லாம் பாக்க முடியாதுங்க. வாடிக்கையாளர் சேவைப்பிரிவுக்கு எழுதுங்க.” என்றார், ஏதோ பெரிய மேனேஜரை அழைக்கிறேன் என்று நினைத்து. சரி, ஆன்லைன் கடைகளில் வாங்கலாமென்றால், ஒரே இந்திய டி.ஆர்.எம் கருவித் தயாரிப்பான ஏவிட்ட்ரானிக்ஸ் ரூ 14999 என்றது அமேசான். “ரைட்டு விடு’
இன்னும் ஓரிரு வருடங்களில் மலிவான சீனத்தயாரிப்புகள் மார்க்கெட்டில் வந்துவிடும் என்கிறார்கள். எப்படியும் ஒரு ரிசீவரின் விலை, ரூ 3000க்குக் கீழே சிலகாலம் குறையப்போவதில்லை. சேடிலைட் ரேடியோ என மோட்டோரோலா தொடங்கி, பி.பி.எல் (BPL) , சந்தைப்படுத்திய சேவை மூடிக்கொண்டுவிட்டதில், பலருக்கு இதில் முதலீடு செய்வதில் தயக்கம் இருக்கும். எனினும், அரசாங்கம் இதில் மும்முரமாக ஈடுபடுவதால், பொதுமக்கள் துணிவுடன் சில வருடங்களில் டி.ஆர் எம் கருவிகளை வாங்குவார்கள் என நம்பிக்கை வருகிறது.
அருகிய எதிர்காலத்தில், காமாட்சி அக்கா, நரைத்த முடியைக் கோதிவிட்டவாறே ”இரவின் மடியில்” கேட்டபடி நிம்மதியாக உறங்குவாள்.