சனி, செப்டம்பர் 14, 2013

ரத்தினாயகாவின் வருகை


நன்றி: இனிய உதயம் இந்த மாத இதழில் 01/09/2013 வெளிவந்துள்ள சிறுகதை ..

          யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா செல்லும் குறுக்குப் பாதையில் தனிமையான சிறுகுன்றின்மீது நானிருந்தேன். எனக்கென்று தோழர்கள் சுருட்டிக் கொள்ளும் கூடாரம் ஒன்றினையும், ஒரு மிஷின்கன்னையும், உணவு சமைக்க இரண்டு மூன்று பாத்திரங்களையும் விட்டுப் போயிருந்தார்கள். இயக்கத்தில் தீவிரமாய் இருந்தபோது சிவந்த நிறத்தில் நான் அணிந்திருந்த சீருடைகள் இரண்டையும் தீயிட்டுக் கொளுத்தி ஆறுமாதம் போலாகிவிட்டது.

கூடாரத்தினுள் தங்கி வாழும் வாழ்க்கை எனக்கு இன்று நேற்றல்ல... ஆறு ஏழு வருடங்களாகவே பழகிப் போயிருந்தது! இப்போது போன்ற தனிமை இதற்குமுன் எனக்குஇருந்ததேயில்லை. வருடக்கணக்காய் கேட்டுக் கொண்டிருந்த வெடிச்சப்தங்களும், அலறல் சப்தங்களும் என் காதுகளை மந்தமடையச் செய்திருந்தன. யாரும் உரக்கப் பேசினால்தான் எனக்கு விளங்கும். ஒருமுறை திடீரென விழுந்த ஒரு "ஷெல்'லில் களத்தில் முப்பது பேர் இறந்துபோனார்கள். ஒரு ஷெல் துண்டு என் தொடையை சிராய்த்துக்கொண்டு பறந்ததில் வலது தொடையில் பெரிய தழும்பு இருக்கிறது. தவிர எனது இடதுகை கோணல்கை! பூஸா தடுப்பு முகாமில் ஆறுமாத காலம் கிடந்தபொழுது சிங்கள அதிகாரி துவக்குச் சோங்காலே அடிச்சு முறித்தான். 

ஆறு வருடங்களுக்கு முன்பாக யாழ்ப்பாணத்தை ஆர்மி பிடித்துக்கொண்டு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைப் போட்டிருந்தது. மாலையில் ஆறு மணிக்குமேல் வீட்டைவிட்டு வீடுகூட செல்லக்கூடாது! ஆர்மிக்காரர்கள் எந்த நேரமும் கையில் தூக்கிப்பிடித்த துவக்குகளோடு வீதியில் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் எனக்கு சோலிசுறட்டு ஏதுமில்லை என்றிருந்ததால் எதிர்வீட்டு காஞ்சனாவை லவ் அட்டாக் செய்துகொண்டு சலூன் கடையே கதியாய் கிடந்தேன். யாழ்ப்பாணத்தை ஆர்மி பிடிக்கும் முன்பாகவே என் அண்ணன் காஞ்சனாவை கல்யாணம் செய்து பிரான்சுக்கு கோப்பை கழுவப் போய்விட்டான். காஞ்சனா எனக்கு அண்ணியாகிப் போனாள்.

அண்ணன் எப்படியும் என்னையும் பிரான்சுக்கு கூப்பிட்டுக் கொள்வான் என்று அம்மாநம்பினாள். என்னையும் ஒரு கல்யாணம் செய்துகொள்ளும்படி அம்மா நச்சிக் கொண்டிருந்தாள். அவளுக்கு தூக்கிக்கொஞ்ச பேரனும், பேத்தியும் அட்டன்டைமில் வேணுமாம். இதை கட்டன் ரைட்டாய் சொல்லிப்போட்டாள். நான் இயக்கத்திற்கு ஆள் சேர்த்துக்கொண்டிருந்த தமிழ்மணியோடு ஒட்டிக்கொண்டு கிளம்பி விட்டேன். காஞ்சனாவைத் தவிர யாரையும் என் மனது நேசிக்க மறுத்துவிட்டது! அவள் ஏமாற்றிப் போட்டு போனதால் சிலகாலம் சோகப்பாடல்களைக்கூட பாடிக்கொண்டிருந்தேன். ஆறுமாதம் கழித்து அம்மாவை விசாரித்து ஒரு கடிதம் அனுப்பியிருந்தாள் காஞ்சனா. அதில், இயக்கம் கியக்கமெல்லாம் தலைமுடி பிடுங்கும் வேலை... இயக்கத்திற்கு நீ சீட்டு குடுத்துட்டுவா... உங்க அண்ணன் இங்கொரு வேலை ஏற்பாடு செய்து தருவார், என்று எனக்கும் குறிப்பெழுதி இருந்தாள்.

இயக்கப் பணியில் தீவிரமாய் இருக்கையில் நான் என் குடும்பத்தையே மறந்துபோனேன். 

விடுதலைப் போராட்டத்திற்கு முழுதாக ஒப்புக்கொடுத்து விட்டேன் என்றுதான் சொல்லவேணும். ரத்தம் எந்த நேரமும் அது என் கண்முன் ஆறாய் ஓடிக்கொண்டேதான் இருந்தது! ஆறுமாதம் முன்பாக அப்படி ஒரு காட்சியை பார்ப்பேன் என்று நான் நினைக்கவேயில்லை. புத்த விகாரைக்கு பக்கத்தில் நடந்த கண்ணிவெடி தாக்குதலுக்கு பிற்பாடு ஆர்மிக்காரர்கள் துப்பாக்கி இலக்கு என்றேதுமில்லாமல் சுட்டுத்தள்ளினர். அதை வெறியாட்டம் என்றுதான் சொல்லவேணும். கடை கண்ணிகளை தீயிட்டுவிட்டு சென்றனர். ராணுவத்தினர் ஊரையே தீக்காடாக்கி விட்டுச் சென்றபிறகு நாங்கள் நுழைந்தோம். தெருவில் காயம்பட்டுக் கிடந்த சனங்களை மருத்துவமனைக்குத் தூக்கி ஓடினோம். 

அப்போதுதான் வயிற்றில் துளைக்கப்பட்டு குடல்சரிந்து கிடந்த பெண்ணின் அருகில் ""அம்மா''என்று முகத்தைத் கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்த மிலனா பாப்பாவை தூக்கிக் கொண்டேன். அங்கு நிற்கப் பிடிக்காமல் ஆறுவயதுக் குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு ஓடைக் கரைக்கு வந்தேன். ஓடையில் அவள் உடையை துவைத்து, குளிப்பாட்டிய நேரம் நான் சுத்தமாய் மாறிப்போனேன். இயக்கத்தலைவர் என் மன மாற்றத்திற்கு காரணம் எதுவும் கேட்கவில்லை. சிலகாலம் உன் விருப்பப்படி இருந்துகொள் என்று அனுமதி தந்துவிட்டார்.

முயல், அணில், எலி என்று கண்ணுக்கு எதிரே தென்படுவனவற்றை வேட்டையாடினேன். பகுதி நேரத்தில் மிலனாவிற்கு தமிழும் ஆங்கிலமும் கற்றுக்கொடுத்தேன். மிலனா என்னை "டாடி' என்று அழைத்தபோதுதான் இந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வந்துவிட்டதாக உணர்ந்தேன்.

தூரத்தில் புள்ளியாய் மூன்றுபேர் வந்துகொண்டிருப்பதை நான் குன்றிலிருந்து பார்த்தேன். பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சற்று குள்ளமான உருவத்துடன் இருந்தவன் ஒற்றையடிப் பாதையில் முன்னேவர, அவன் பின்னால் சிவப்புச் சீருடை அணிந்த இருவர் வந்து கொண்டிருந்தார்கள். நான் என் இருப்பிடத்திற்குள் நுழைந்து மேல் அங்கியை எடுத்து அணிந்துகொண்டேன். மிலனா எப்போதும் மாலை நேரத்தில் உறங்குவது வழக்கமாகையால் அவள் தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். இருந்தாலும் இது அவள் எழும் நேரம்தான். ஏற்கெனவே பழக்கமான பாதையில் வருவதுபோன்றே சீக்கிரமே அவர்கள் வந்து விட்டார்கள்.

""எப்படி சவுக்கியம் குணசீலன்?'' கேட்டபடி வந்தவன் பிரபு. ஏழு வருடகாலமாக இயக்கத்தில் இருப்பவன். அவன் கூடவே வந்த இருவரையும் எனக்கு யாரெனத் தெரியவில்லை. பின்புறம் கைகள் கட்டப்பட்டிருந்தவன் தாடையில் ரத்தக்கறை படிந்திருந்தது! மற்றொருவன் இயக்கத்தில் புதிதாய்ச் சேர்ந்த பொடியன் போலும்... பூனை ரோமங்கள் அவன் மூக்கிற்கும் கீழ் எட்டிப் பார்த்திருந்தன. 

""தோழர் பிரபு... உங்கள் வரவு நல்வரவாகுக!'' என்றேன். ஏற்றுக்கொண்டவன்போல் பசும் புற்கள் நிறைந்த தரையில் அமர்ந்தான் பிரபு. கூடவே புதிய இயக்கப் பொடியனும் அமர்ந்து கொண்டான். கூன் விழுந்து மாநிறத்தில் இருந்தவன் என்னையும், அவர்களையும் பார்த்துவிட்டு, நிலம் பார்த்து நின்றுகொண்டான். அவனுக்கு வயது முப்பதிற்கும் மேலே இருக்கும் போலிருந்தது.

""இப்படியான வாழ்வு உங்களுக்கு மகிழ்வளிக்கிறதா தோழர்?'' ஆம் என்று பதில் சொன்னபோது மிலனா ""டாடி'' என்று அழைத்தபடி கண்களைக் கசக்கிக்கொண்டு வந்தாள். அவளை சிறிது நேரம் அமைதியாய் இருக்கும்படி சொன்னேன். இருப்பிடத்திற்குள் சென்றவள் தட்டில் பழங்கள் சில வைத்துக்கொண்டு வந்து அமர்ந்திருந்தவர்கள் முன்பாக வைத்தாள். பிரபு அதற்காக அவளை பாராட்டினான். கூன் விழுந்தவனின் கைக்கட்டுகளை அவிழ்க்கச் செய்தேன் நான். அவனையும் இரண்டு பழங்கள் சாப்பிடச் சொன்னேன். மிலனா அவனுக்கு எடுத்து நீட்ட, எங்காவது கால்முளைத்து பழம் ஓடிவிடுமோ என்ற அவசரத்தில் பிடுங்கி தோலுடனேயே சாப்பிட்டான்.

""யார் இவன்?'' என்று தோழரிடம் விசாரித்தேன்.

""பாசிச அரசு ஏற்படுத்திய கஜபா ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த ராணுவக் கூலிப்படைக்காரன் இவன். எத்தனை அடிபோட்டாலும் ஒரு வார்த்தை பேசவே மாட்டேன் என்கிறான். ஓலம் மட்டுமே பெரிதாய்ப் போடுகிறான்?''

""இவனை எதற்காக இங்கே கொண்டுவந்தீர்கள்?''

""தோழர் ழ இடம் ஒப்படைக்குமாறு கேப்டன் அனுப்பியிருக்கிறார்''

""பின் ஒப்படைக்க வேண்டியதுதானே!''

""எங்களுக்கு இடப்பட்ட வேலை உங்களுடன் முடிகிறது தோழர். அவரிடம் இவனைச் சேர்ப்பது உங்கள் பணி. நீங்கள் மறுத்தாலும் எங்களுடன் இவனை நாங்கள் கூட்டிப் போகப்போவதில்லை. அடுத்த உத்தரவு வரும்வரை இவன் இங்கேயே இருக்கட்டும். கொஞ்சம் ஆபத்தானவன்போல் தோன்றுகிறது. தோழர் கவனமாய் இருங்கள்'' என்று சொல்லி விடைபெற்று அவர்கள் இருவரும் சரிவில் இறங்கிப் போனார்கள். கூனன் நிலத்தின்மீது வைத்த கண் வாங்காமல் குனிந்து நின்றிருந்தான். அவனை அமரும்படி சைகையால் சொன்னேன். கட்டுப்பட்டவன்போல அமர்ந்தவனிடம், ""சாப்பிடுகிறாயா? முயல்கறி'' என்றேன். வேண்டாமெனத் தலையாட்டினான்.

அவர்கள் சொல்லிப்போனதுபோல் ஆபத்தானவன்தானா? என்ற கேள்வி என்னுள் இருந்தது. ""நீ கூலிப்படைக்காரன் தானா?'' என்றேன். "இல்லை' என்று தலையை இருபுறமும் ஆட்டினான்.

""இயக்க ஆட்கள் யாரையாவது கொல்ல முயற்சி செய்தாயா?'' என்றதற்கும் தலையை ஆட்டினான்.

""நீ என்னிடம் பேசவேணும். நான் உன்னைத் துன்புறுத்த மாட்டேன். உன் பெயரைச் சொல்லலாம் நீ!'' என்றேன். என்மீது நம்பிக்கை கொண்டு தொண்டையை கனைத்துக்கொண்டு பேசினான். பெயர் ரத்தினாயகாவாம். கூலிக்கு பனை தறிக்கப் போவதுதான் வேலை என்றான். தமிழ் அரைகுறையாய்ப் பேசினான்.

சூரியன் மறைந்து இருள் கவியத்துவங்கிற்று! மிலனா கூடாரத்தினுள் விளக்கு ஏற்றியிருந்தாள். ரத்தினாயகாவை கூடாரத்தினுள் அழைத்துச் சென்றேன். நாங்கள் உணவு எடுத்துக்கொள்கையில் கூடவே அமர்ந்து சாப்பிட்டான். அவன் சாப்பாட்டு அளவு மிலனாவின்சாப்பாட்டு அளவையே ஒத்திருந்தது. சாப்பிட்ட இலையை அவனாக வெளியே எடுத்துப் போனான். இரவு அவன் உறங்க படுத்துக்கொண்டதும், ""தப்பிப் போகும் எண்ணம் இருந்தால் காலையில் போய்விடு... இரவில் போகாதே'' என்று சொல்லிவிட்டு படுக்கையில் விழுந்தேன்.

நான் தூங்கி விழித்த சமயம் சூரியன் கிளம்பி யிருந்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு இருப்பிடத்தை நோட்டமிட்டேன். மிலனாவும், ரத்தினாயகாவும் இல்லை. மிலனா என்று சப்தமிட்டேன். ""டாடி... ஐ.ஆம் இன் ஹியர்'' வெளியிலிருந்து அவள் குரல் வந்தது. நான் எழுந்து வெளிவந்து பார்க்கையில் கூனன் முதுகில் ஏறி சவாரி செய்து கொண்டிருந்தாள். ""ரத்தினாயகா... மூட்டையை வீட்டுல இறக்கு'' என்றாள். நான் என் உடைகளை அணிந்துகொண்டு, மிலனாவிடம் சீக்கிரம் வந்துவிடுவதாய்க் கூறிவிட்டு அவனைக் கூட்டிக்கொண்டு சரிவில் இறங்கினேன். அவன் மௌனமாகவே வந்தான். அவனிடம் தெரிந்துகொள்ள எனக்கு எதுவுமில்லை.

அரைமணிநேர நடையில் நாங்கள் பிரதான சாலை ஒன்றை அடைந்தோம்.  நான் யோசித்திருந்தபடி அவனிடம் விடைபெறுவதற்கான இடம் இதுதான். ழ ன் இருப்பிடத்திற்குச் செல்லும் பாதையையும், அவரிடம் இவன் நடந்துகொள்ளவேண்டிய முறைகளையும் சொல்லிவிட்டு நான் வந்த வழியில் திரும்பினேன். குறிப்பிட்ட தூரம் வந்து திரும்பிப் பார்த்தபோது அவன் அதே இடத்தில்தான் நின்றுகொண்டிருந்தான்.

மிலனா என்னிடம் ரத்தினாயகா எங்கே? என்று கேட்டு அழத்துவங்கினாள். ""அவன் நம்கூடவா இருக்க வந்தான்? அவனை காணோம்னு அவன் அம்மா தேடுவாங்கதான!'' என்றேன். சிறிது நேரம் அழுதால் சரியாகி விடுவாள் என்று நினைத்து காலை உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டேன். மிலனாவின் அழுகை தொடர்ந்தபடிதான் இருந்தது! விளையாட்டுக் காட்டிய பொம்மை காணாமல் போய்விட்டதுபோல தேம்பி அழுதாள். அழுகை ஓயாதுபோல தோன்றிய சமயத்தில் சட்டென அழுகைக் குரல் நின்று போயிற்று.

""டாடி... ரத்தினாயகா வந்துட்டான்... என்னை விட்டுட்டு எங்க போனே நீ? உப்பு மூட்டை தூக்கு'' என்றாள். நான் முகம் திருப்பி வெளியே பார்த்தேன். ""எனக்கு அங்க போகணும்னு இஷ்டம் இல்ல சார்'' நிலத்தை வெறித்தபடி நின்றிருந்தான் ரத்தினாயகா!