புதன், டிசம்பர் 22, 2010

நக்கீரன்-‍ புதிய ஜோசியகதை.

இந்த வாரம் 18‍-21 தேதியிட்ட நக்கீரன் இதழில் அரசியலில் நடிகர்கள் அதிகம் வந்தாலும் குறிப்பிடத்தக்க வகையில் யாராலும் ஜொலிக்க முடியவில்லை என்பதைக் கூறி தற்போதைய டிரண்டில் விஜய், விஜயகாந்த், ரஜினி யார் ஜொலிக்க முடியும் என்று மக்கள் கருத்தை கேட்டாலும் ஒன்றும் விளங்காது என்பதால் மாயவரம் சாமி ஜோசியரிடம் கேட்டு எழுதி உள்ளார்கள்.

உன்னிப்பாக படித்தால் விஜயகாந்த் துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம், லக்கினம் அப்படின்னு சொல்லிட்டு அவருக்கு களத்திர ஸ்தானப்படி மனைவி ராசியாலதான் சீட்டுப்பிடிக்க முடியும் , என்னைக்கும் முதல்வராக முடியாது அப்படின்னும்

விஜய் கடக இராசி , பூச நட்சத்திரம், இன்ன லக்கினம் அப்படின்னு சொல்லிப்பிட்டு அவருக்கு 17 வருசம் புதன் நல்ல படியா இருந்ததால் இத்தனை ஆண்டுகளில் படம் நல்லா இருந்தது,ஆனா இப்ப புதன் நல்லபடியா இல்லாததால் படங்கள் பிளாப்புனும் சொல்லிட்டு மூணு வருடம் கழித்து அரசியலுக்கு வந்தால் நல்லதுன்னு சொல்கிறார்.

ஆனா ரஜினிக்கு உத்திராட நட்சத்திரம் , கடக ராசி , சிம்ம லக்கினம் அப்படின்னு சொல்லிட்டு அவர் அரசியலுக்கு வரவே மாட்டார்.அப்படின்னும் சொல்கிறார், இங்கேதான் ஒரு நெருடல் கடக ராசியில் உத்திராட நட்சத்திரம் கிடையாது. பிரிண்டிங் மிஸ்டேக்கா அல்லது ஜோசியர் மிஸ்டேக்கான்னு தெரியலை.

வெகுஜன ஊடகமான நக்கீரன் இப்படித்தான் ஜெகத் கஸ்பாரை வெச்சு வெகு நாள் மறக்கமுடியுமா அப்படின்னு எழுதிட்டு இருந்தாங்க. இன்னைக்கு பாத்தா அதே ஜெகத் கஸ்பார் பத்தி ஜூவியில் வேற மாதிரி இருக்கு. நிறைய பேர் படிக்கிற பத்திரிக்கைகள் இந்த மாதிரி சின்ன மிஸ்டேக் களைந்து வெளியிடுவது படிப்பவர்களுக்கு நம்பகத்தன்மையை உருவாக்கும் . இல்லையெனில் என்ன தெரிஞ்சவங்க வாங்கறதுக்கு யோசிப்பாங்க.

..

திங்கள், டிசம்பர் 06, 2010


இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் வாமுகோவின் படைப்பாக வரும் புத்தகம் ‘ஆயிரம் சிறகுள்ள காமம்’.

வா.மு.கோமு ”இது ஒரு வித்தியாசமான ஆகச்சிறந்த பாலியல் படைப்பாக இருக்கும்” என்கிறார். இந்த மாசக் கடைசியில் வெளியீடு இருக்குமாம். உயிர்மை வெளியிடுகிறது. சென்ற வருடம் ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’ விற்பனையில் சாதனை படைத்தது, பரவலான வாசகர்களையும் சென்றடைந்தது. போலவே இந்த நாவலும் வெற்றியடைய வாழ்த்துக்கள். அல்லாரும் இருநூற்று இருபது ரூபாய் தனியா எடுத்து வெச்சுக்குங்க :)

வாமுகோமுவின் இந்த புத்தகவெளியீட்டுக்குப் பிறகு வாமுகோமுவை நீங்கள் வெள்ளித்திரையிலும் இரசிக்கலாம் என்பதும் ஒரு கூடுதல் தகவல்

..

புதன், நவம்பர் 10, 2010

மறக்கப்பட்ட மரணம்-‍ தவமணி



தவமணி :

கோவை குழந்தைகள் கடத்திக்கொள்ளப்பட்ட அடுத்த நாளில் கோவை மாவட்டத்திலேயே ஏழாவது படிக்கும் ஒரு பெண் துர்மரணமடைந்துள்ளாள். காரணம் முந்தைய நாள் போல அல்ல , இது ஒரு விபத்து, ஆனால் தெரிந்தே நடத்தப்பட்ட கொலை.

ஆம் ,பொள்ளாச்சியை ஒட்டிய ஆனைமலை ஆழியாறுவால்பாறை ரோட்டில் ரமண முதலிப்புதூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தை ஒட்டிய தென்னந்தோப்பின் இரும்புக்கம்பி வேலிக்கு மின்சாரம் கொக்கி மூலமாக தோட்டத்தைப்பார்த்துக்கொள்பவர்கள் பாய்ச்சியிருக்கிறார்கள், . பள்ளியின் சுவற்றை ஒட்டியே அந்த இரும்புக்கம்பி வேலி உள்ளதால் காலையில் குப்பை கொட்டச் சென்ற அந்தப்பெண் மழை ஈரத்தின் காரணமாக கால் வழுக்கி கம்பியின் மீதே விழுந்ததால் அந்த இடத்திலேயே மரணமடைந்து விட்டாள்.

இது எப்படி கொலை ஆகும் ?

கம்பிவேலியின் அருகிலேயே குழந்தைகள் விளையாடும் பள்ளி என்பதை அறிந்தும் , எந்த வித அறிவிப்பும் இல்லாமல் கொடுக்கப்பட்ட மின் இணைப்பின் காரணமாக குழந்தை இறந்தது கொலைதானே அன்றி வேறென்ன?

மக்கள் இதன் காரணமாக ஆனைமலை , வால்பாறை ரோடுகளில் நான்கு மணீ நேர போராட்டம் நடத்தியும் தோட்டத்தின் ஓனர் வரவேயில்லை. தோட்டக்காரர் ஒரு மெத்தைக்கம்பெனி முதலாளி.

ஞாயிறன்று அந்த ஊர் சென்ற போது ஊர் முழுக்கு அஞ்சலி போஸ்டர்களை காணமுடிந்தது.

கோவை கொடூரத்தால் மக்கள் மனதளவில் அதிகமாக‌ பாதிக்கப்பட்டதாலும், சென்னைச் சம்பவமும் அதனை ஒட்டியே நடந்ததாலும் இந்த விசயம் மக்கள் மனதை அவ்வளவாக எட்ட வில்லை. அரசாங்கமும் ரூ 1 இலட்சம் அறிவித்து விட்டதுடன் வேறு முயற்சி எடுத்ததாக தெரியவில்லை.

தத்துப்பிள்ளை;

குழந்தை இல்லாத காரணத்தால் தத்து எடுத்து வளர்த்தப்பட்ட தவமணீ எவனோ ஒருவனின் விளையாட்டால் காலனிடம் சென்று விட்டாள், சொந்த குழந்தைக்கு மனம் பதைபதைத்த கோவைக்காரர்களுக்கு இந்த குழந்தை தத்துப்பிள்ளை என்று தெரிந்தால் என்ன நடக்குமோ? வளர்ப்புப் பெற்றோர்களுக்கு எப்படி இந்த இழப்பை !?

குழந்தையின் ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனை வணங்குவோம்.

..

சனி, அக்டோபர் 09, 2010

திருப்பூர் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க ஏழு காரணங்கள்

1.எனக்கு ரெஸ்ட் எடுக்கப் பிடிக்காது.

2.நான் என்னோட குழந்தைப்பருவத்திலேயே வாழ்க்கையை போதுமான அளவு அனுபவித்து விட்டேன்

3.எனக்கு டென்சன் ரொம்ப பிடிக்கும்.

4.பேமிலியுடன் டைம் செலவழிப்பது எனக்குப் பிடிக்காது

5.அதே மாதிரி ஞாயிற்றுக்கிழமைகளிலும்,விடுமுறை நாட்களிலும் வேலை பார்ப்பது எனக்குப் பிடிக்கும்

6.என்னை அடிமைப்படுத்திக் கொள்வது எனக்கு விருப்பமான ஒன்று.

7. மரியாதையே இல்லாமலும் இந்த உலகத்தில் வாழமுடியுமா? அப்படின்னு வாழ்க்கையை ஒரு ஸ்டடி செய்வதற்க்காகவும் இந்த லைப்ப நான் தேர்ந்தெடுத்து இருக்கிறேன்

இந்த ஏழு காரணங்களை திருப்பூர் வாழ்க்கை அப்படிங்கறத விட டெக்ஸ்டைல் லைப் அப்படின்னு வச்சுப் படிச்சீங்கன்னா இன்னும் நல்லாருக்கும்.

..

திங்கள், செப்டம்பர் 27, 2010

வியாழன், செப்டம்பர் 23, 2010

திருப்பூர் 24,25 பந்த்.

திருப்பூர் டீமா எனப்படும் எக்ஸ்போர்ட் அசோஷியேசன்,உற்பத்தியாளர் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் சேர்ந்து நடத்தும் இரண்டு நாள் 48 மணீ நேர வேலை நிறுத்தப் போராட்டம் , அதிகரித்து வரும் பஞ்சு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தக் கோரி நடைபெறுகிறது.

ஆனால் இதை தீபாவளி ஆர்டர்களை காரணம் காட்டி டீ எனப்படும் திருப்பூர் எக்ஸ்போர்ட் சங்கம் "தற்போதைய நிலையில் இந்த போராட்டம் திருப்பூருக்கு உகந்ததல்ல " எனவே எங்கள் சங்கத்தின் கம்பெனிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவித்துள்ளது.

வரும் 27 ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை வைத்து பிற்பாடு ஒரு போராட்டம் அல்லது ஏதேனும் மாற்று வழியினை மேற்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.

முதல் குழுவான டீமாவுக்கு ஆதரவு தெரிவித்து பேப்பரில் வந்திருக்கும் விளம்பரத்தில் திருப்பூரில் இத்தனை சங்கங்களா ? என தோன்றுகிறது.

இரண்டாவது குழுவான "டீ"க்கு 5 சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதிலும் சாயப்பட்டறை சங்கம் " வெள்ளீ, சனிக்கிழமைகளில் " எப்போதும் இயங்குவதில்லை. இருந்தாலும் "டீ"க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சில விஷயங்களில் எத்தனை சங்கங்கள் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் ,இல்லையெனில் எந்தவிதமான முன்னேற்றமோ, நல்ல விஷயங்களோ கண்டிப்பாக நடைபெறாது என்பது கடந்த கால அனுபவங்களிலிருந்தே திருப்பூருக்கு நன்றாகத் தெரியும் , இருப்பினும் இந்த முரண்பாடு ஏன் என்பது நமக்கு விளங்கவில்லை.

..

புதன், செப்டம்பர் 22, 2010

நாதஸ்வரம்‍ -சன்டீவி சீரியல்விமர்சனம்

ஹீரோ டெய்லர், கூட அந்த 7 நாட்கள் மாதிரி ஒரு காஜாப்பையன். சில நேரங்களில் தான் ஓனரா? அவன் ஓனரா ? அப்படிங்கற பீலிங் ஹீரோவுக்கே வந்துருது. ஹீரோ மூணு தங்கச்சிங்க. அதுல ஒண்ணுக்கு கல்யாணம். அட அதுல பல சிக்கல். பொண்ணு குடுக்கறது ஒரு பிராடு குடும்பத்துக்கு. வாடகை வீட்ட சொந்தவீடுன்னு சொல்லிட்டு இருக்கறவங்க அவங்க.

போட்ட நகையில ஒண்ணை பெரியப்பா பையன் கவரிங்கா மாத்திப்போட , அதை அடகு வைக்க கல்யாணபொண்ணோட நாத்தனார் ஊட்டுக்காரர் அடகுக்கடைக்கு போக, அவன் போலீஸுக்கு போக , பொண்ணை திருப்பி பொறந்த ஊட்டுக்கே அவனுங்க தொரத்த, ஹீரோவும் அவன் அப்பாவும் உடனே அடிச்சு பிடிச்சு உன்னோர் நகையை வாங்கி போட்டு திரும்ப புகுந்த ஊட்டுக்கு அனுப்ப ,

அப்பப்பாத்து ஊட்டுக்காரன் வந்து ஊட்டை காலிபண்ணூ இல்லைன்னா நல்லால்லைன்னு சொல்ல ,இது பொண்ணுக்கு தெரிய நாத்தனாருக்கு பேயறைஞ்ச மாதிரி ஆகி ,

இதுக்குள்ள இன்னோரு டிராக் :

ஹீரோவுக்கு மாமன் புள்ள மகா வேற லைன் போட்டுட்டு இருக்குது. மாமனுக்கு இது புடிக்காது. மாமன் பையனும், மாமனும் ஹீரோவப் போட்டுத்தள்ள ரெடி பண்றாஙக். மாமன் பையன் ஒரு காமெடியன்.

இது பத்தாதுன்னு மின்சார வாரிய என்ஜினியர் மேடம் ஒருத்தர் ஹீரோவ லவ் பண்றாங்க,தலைவருக்கு தெரியும்,இருந்தாலும் "மேடம்" "மேடம்" அப்படின்னு கூப்பிடுகிறார்.

மலர் மேடத்துக்கு ஒரு தங்கச்சி , அது வேற ஒருத்தன லவ் பண்ணுது. அக்கா லைன் கிளியருன்னா நம்ம லைன் கிளியருன்னு ஊட்டுப் பொறக்கடை வழியா ஒருத்தன வரவெச்சு பேசிட்டு ,

அக்கா காதலுக்கு இவளே தூது போறா, தலைவருக்கு அங்க தலை போற வேல. பொறகு பேசலாமுன்னு கெளம்பீறாரு.

இப்படி ஒரு கொழுந்தியா இருக்குமுன்னா அப்பவே பேச வேண்டியதுதானே ? (இவரு பெரிய ஜில்லா கலெக்டரு ! கையெழுத்துபோட நேரமாயிருச்சுன்னு கிளம்பறாரு.)

அம்மணி உடனே அக்காகாரிகிட்ட போயி "இந்த லவ்வெல்லாம் அந்த ஆளுக்கு ஆகாது , என்னைவே மதிக்கமாட்டேங்கிறாரு. உன்னோட அந்தஸ்துக்கு அவனப்போயி லவ் பண்ணீட்டு" அப்படின்னு உசுப்பேத்த அக்காக்கு கோபம் பொசுக்குன்னு வந்து அப்பன்கிட்ட போயி " ஏற்கனவே சொன்ன கோயமுத்தூர் மாப்பிள்ளைய வரச்சொல்லி " நிச்சயம் பேசி முடிக்க ரெடியாகிறா!

இப்ப போயி ஹீரோவுக்கு நைட் தூங்கற நேரத்துல "அம்மிணி" நெனப்பு வர கூடப்பொறந்த தங்கச்சிங்க நெலமை தெரியாம "மகாவா? மலரா? யாரை கட்டிக்க போறீங்கன்னு"கிண்டலை உதிர்க்கிறாங்க.

அட சாமி , மூணு நாள் பாத்ததுக்கே இத்தனை கூத்தா? எப்படித்தான் திங்கள் முதல் வெள்ளிவரை இடையிடையே வர்ற‌ வெளம்பரத்தையும் சகிச்சுகிட்டு சீரியலைப் பாக்குறாங்களோ?

இந்த சீரியலுதான் இன்னைக்கு ரேஞ்சுல ஹிட்டாம் ! நெசமாலுமா? ஆன் லைன்ல வேற ஓடிட்டு இருக்குது.

நியதி ; லவ் பண்ண போறீங்களா , பொண்ணோட தங்கச்சியையும் அப்பப்ப மதிச்சு ஒரு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுங்க, அப்பத்தான் நம்ம லவ் ஸ்ட்ராங் ஆகும். இல்லை நம்ம ஹீரோ கதைதான்.

..

திங்கள், செப்டம்பர் 20, 2010

கவர்ன்மெண்ட் பஸ்ஸூம் , காலக்கொடுமையும்.

அண்மையில் ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் வரை கோவிலுக்கு செல்லலாம் என்று ஈரோட்டில் இருந்து இருக்கும் பஸ்ஸுக்கு ஒரு வாரம் முன்பே புக் செய்து டிக்கட்டும் பெற்றாகி விட்டது.

கிளம்ப வேண்டிய தினத்தன்று எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு ஆடியோ, வீடீயொ சாங்க் காசட்டுகளையும் எடுத்து வைத்திருந்தேன். பஸ் இரவு 7.40 மணீக்கெல்லாம் கிளம்பியது. படம் எதுவும் போடாமல் இருந்த நிலையில் டிக்கட் கொடுத்து முடித்த பின்பு கண்டக்டர் "மாயாவி" படத்தை போட்டார்,

வீடியோ நன்றாக இருந்தாலும் ஆடியோ ஏதோ திருவிழாவுக்காக கட்டிய குடை ஸ்பீக்கரில் வரும் ஒலியைப் போன்று நாரசமாக இருந்தது.கொஞ்சதூரம்தான் படத்தை நிறுத்திவிட்டு கரூர் தாண்டும்வரை படம் எதுவும் இல்லாமல் வந்தது.

கரூர் தாண்டியவுடன் கண்டக்டர் எழுந்து எம் ஜி ஆர் படப்பாடல்களை போட்டு விட்டார்.

சவுண்ட் ?

அய்யோ ! காதுகளை ரணமாக்கி விட்டார். எத்தனையோ எம் ஜிஆர் பாடல்கள் இருந்தாலும் " நான் ஏன் பிறந்தேன் " டைப் பாடல்களை போட்டு குழந்தை குட்டிகளை தூங்கவிடாமலும் , நம்மையும் தூங்கவிடாமலும் செய்துவிட்டார்.

சிறிது தூரத்தில் ஒரு டீக்கடையில் நிறுத்திவைத்தனர். அப்போது கண்டக்டரிடம் நாம் "சார் புதுப்பாடல்கள் , மீடியம் சாங்க் கேசட் இருக்கிறது .போடுகிறீர்களா ? " என்று கேட்டதிற்கு " இன்னும் சிறீது தூரம் சென்றதும் நானே உங்களிடம் கேட்டு வாங்கி போட்டுவிடுகிறேன்" என்று கூறி விட்டார்.

சவுண்ட்டையாவது குறைக்கலாமே என்று கேட்டதிற்கு சற்றும் குறைக்கவில்லை.

அவரும் கேசட்டை கேட்பார் என்று பார்த்தால் , எம்ஜிஆர் படப்பாடல் முடிந்தது சிவாஜி படப்பாடல்களை போட்டு விட்டார். இப்படியே கொடுமையினும் கொடுமையாக காலை 4.30 மணீக்கு திருச்செந்தூர் கொண்டு போய் விட்டே விட்டார்.

இப்பத்தான் தெரியுது, ஏன் பிரைவேட் ஆம்னி பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று .

எல்லாமே புக்கிங் டிக்கெட்தான் , நிம்மதியா தூங்கிட்டு காலையில போயி முருகனை தரிசிக்கலாமுன்னு நினைச்சா இவனுங்க கொடுமை ரொம்பத்தான் இருக்குது. லாங் ரூட் வண்டியில எல்லாம் வீடியோ வைக்கல அப்படின்னு எவனாவது இவங்ககிட்ட கேட்டாங்களா ?

என்ன செய்ய ! எல்லாம் நம்ம தலையெழுத்து!

இதைப்பற்றி இன்னும் தெளீவா ஒரு கம்ளெயிண்ட் அனுப்ப‌ இருக்கேன் ,நீங்க என்ன சொல்லறீங்க ?

..

வியாழன், செப்டம்பர் 16, 2010

இப்படியும் சொருகலாமோ?




கவனக்குறைவு , ஓவர் ஸ்பீட் இவற்றைப் பற்றி நாம் எழுதிய இரண்டு வாரங்களில் மற்றுமொரு நிகழ்வு.

பனியன் நகரத்தின் பரபரப்பான ஒரு மதிய நேர இடைவேளையில் நகரின் பிரதான கோயில் முன்னால் நடந்த நிகழ்வு.

ஒரு தடுப்பு வெச்சிருக்கறாங்கன்னா அது எதுக்கு? அதுக்குள்ள நம்ம வண்டி போகுமா ! போகாதா ? இப்படி பாக்கணுமா ? வேண்டாமா ?

இல்லை ரொம்ப பசியானதால பசி கண்ணை அடைச்சிருச்சோ?

ஏதோ ஒண்ணு படத்தை பாருங்க, சிக்கின வண்டியோட நிலைமையை.

கடைசியா செய்கூலி சேதாரத்தோடதான் வண்டிய எடுக்க முடிஞ்சுது.

புதன், செப்டம்பர் 15, 2010

மாவுப்பூச்சி அல்லது கள்ளிப்பூச்சி

தற்போது தமிழகத்தில் , ஈரோடு, திருப்பூர்,கோவை மாவட்டங்களில் பப்பாளிப்பழங்களை தாக்கிக்கொண்டிருந்த மாவுப்பூச்சி , கொய்யா மரங்களையும் , திராட்சை , சீதாப்பழ, சப்போட்டா மரங்களையும் தாக்கத் தொடங்கியுள்ளது.
இந்த இந்தப் பூச்சிகள் தற்போது அதிகாலை நேரஙகளில் அதிகமாக படையெடுக்கத் தொடங்கியுள்ளது.

வேளாண் விஞ்ஞானிகள் ஏதேதோ மருந்துகளை சொன்னாலும் அவைகள் அதற்கு கட்டுப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் இதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை என்றே தோன்றுகிறது .

இதைப் படிக்கும் அன்பர்கள் தெரிந்தவர்களிடம் , விஞ்ஞானிகளிடம் சொல்லுங்கள் அல்லது இதை ஒழிக்க ஏதேனும் ஒரு முயற்சி எடுங்கள் , மேலும் இந்த பூச்சிகள் இங்கு மட்டும்தானா அல்லது அயல் நாடுகளிலும் உண்டா ? என்று நமக்கு சொல்லுங்கள் .

..

கருத்துரைகளை அனைவரும் படிப்பீர்களா என்று தெரியவில்லை. தற்போது நமது தென் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு மிகவும் அவசியமான இந்த பதிவு அனைவருக்கும் சென்று சேரும் விதமாக இருக்கவேண்டும் என்பதால் கருத்துரைகளை நமது இடுகையிலே இணைத்து விடுகிறோம்.

நன்றி.



மதுரை சரவணன் சொன்னது

ஆமாம்மில்ல... பார்த்திருக்கேன். பகிர்வுக்கு நன்றீ.
15 செப்டெம்ப்ர், 2010 11:02 pm

DrPKandaswamyPhD சொன்னது

கவன ஈர்ப்புக்கு நன்றி. மேலதிக தகவல்களை சேகரிக்க நான் முயலுகிறேன்.

இந்தப்பூச்சிகள் நம் ஊரிலுள்ள சப்பாத்திக்கள்ளிகளை அழிப்பதற்காக வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. சப்பாத்திக்கள்ளி ஒழிந்து விட்டது. ஆனால் இந்தப்பூச்சிகள் ஒழியவில்லை.

அவைகள் சாப்பிடுவதற்கு சப்பாத்திக்கள்ளிகள் இல்லாததால் எல்லாவற்றையும் சாப்பிட ஆரம்பித்துவிட்டன. இது ஒரு முக்கியமான பிரச்சினை.

நான் சம்பந்தப்பட்ட துறையினருடன் பேசி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த தளத்தில் கருத்துரையாகப் பதிகிறேன்.
16 செப்டெம்ப்ர், 2010 4:17 am


நன்றிகள் திரு கந்தசாமி அய்யா அவர்களே,

காலை நேரங்களில் மிக அதிகமாக பறக்க ஆரம்பித்துள்ளன. வெளியில் நடந்தால் கண்கள் , காதுகள் , தலைமுடிகளில் எல்லாம் விழுந்து சிக்கிக் கொண்டு விடுகிறது. அதுவில்லாமல் கண்களில் விழுந்தால் ஏதேனும் தீங்கு ஏற்படுமா என்பதையும் அறியதரவும்.

..

புதன், செப்டம்பர் 01, 2010

வாழ்க்கை இவ்வளவுதானா !

ரெண்டு நாளுக்கு முன்னாடி திங்கள்கிழமை காலையில் திருப்பூர் பரபரப்பு தொற்றிக்கொண்ட அதிகாலை மணி 8.20 க்கு வீட்டிலிருந்து கிளம்பி ஈரோடு ‍திருப்பூர் சாலையை மேட்டுக்கடையில் தொட்டு திருப்பூரை நோக்கி பயணித்தோம் . உடன் வழக்கம்போல எனது நண்பரொருவரும் வர சற்று தூரத்திலேயே ஒரு கூட்டம் சாலையின் அருகில் காணப்பட நாமும் அங்கு வண்டியை நிறுத்தினோம். என்னவென்று பார்க்கும் போது ஒரு ஆண் வயது 40 இருக்கும், ஸ்பெலண்டர் பைக்கை நிறுத்திவிட்டு அருகில் படுத்தவாக்கில் இறந்து கிடந்தார். விசாரித்தபோது மனிதர் இரவே அதிக மப்பில் வண்டி ஓட்ட முடியாததால் வண்டியை நிறுத்திவிட்டு தூங்கியவர் தூங்கியே விட்டார்.

இதைப்பார்த்து விட்டு நாம் நமது பயணத்தை சற்று கவலையுடன் ஆரம்பித்தோம். ஊத்துக்குளியை நெருங்கும் போது ரோட்டில் ஸ்கூல் பிள்ளைகளை பஸ்ஸில் ஏற்றிய மக்கள் சற்றே பரபரப்புடன் "மேட்டுக்கடை பக்கத்தில்" என்று பேசிக்கொண்டனர்.

சரி , நாம் பார்த்த நிகழ்வைத்தான் பேசுகிறார்கள் என்று வண்டியை ஸ்லோ செய்தபோது அவர்கள் பேசுவது அதுவல்ல, மற்றொரு விபத்தைப்பற்றி என்று தெரிந்தது.

அதுவும் மேற்க்கூறிய நிகழ்வுக்கு மிக அருகாமையில் 8.30 க்கு நடந்தது. எப்படி ?

டூவீலர் பைக்கில் பவானி குமாரபாளையத்தில் இருந்து திருப்பூர் வேலைக்கு இரண்டு நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் பைக்கின் முன்சக்கரம் திடீரென பஞ்சர் ஆகிவிட , ஓவர்ஸ்பீடு வண்டி கன்ட்ரோல் ஆகவில்லை. வழுக்கிவிட அந்த நேரம் பார்த்து எதிரில் ஒரு ஸ்விப்ட் வர , அவர்கள் அதில் மோத இருவரும் ஸ்பாட் அவுட்.

ஹெல்மெட் தெறித்து ஓடிவிட்டது. இருவரும் நண்பர்கள், ஒரே கம்பெனியில் மெர்ச்சண்டைசர்களாப் பணீபுரிபவர்கள்.

இருவரும் நான் படித்த அதே ஜவுளித்தொழில் நுட்பப் பயலகத்தில் 2004 ஆம் ஆண்டு படித்தவர்கள் என்பது கூடுதலான ஒரு வருத்தம் .

எப்படி, எப்படி எல்லாம் வாழ்க்கை எளிதாக முடிந்து விடுகிறது . இதற்குள் எத்தனை கலகங்கள் , வருத்தங்கள், மகிழ்ச்சிகள்!

இன்னுமொரு கூடுதல் வருத்தம் என்னவெனில் இந்த ஒரு பத்து மாதங்களில் இந்த பாதையில் இதே இடங்களில் குறைந்தது பதினைந்து பேர்கள் விபத்துகளில் மரணமடைந்துள்ளனர்.

ஏன் ? ரோடு மோசமா? கவனக்குறைவா? ஓவர் ஸ்பீடா? எதுவென இதுவரை தெரியவில்லை . எனக்கு தெரிந்து ஓவர் ஸ்பீட் என்றுதான் தெரிகிறது.

வியாழன், ஆகஸ்ட் 26, 2010

மரங்களை வெட்டுங்கள்

பதிவு யாருடையது என்பது தெரியவில்லை. ஆனால் எனக்கு மெயிலில் நண்பர் சதீஷ் தாய்லாந்து நாட்டில் இருந்து அனுப்பியிருந்தார்.(இப்படிக்கூட காப்பி அடிக்கலாமோ?) அதனை நான் நம் வலையில் பதிவிடுகிறோம்.

மரங்களை வெட்டுங்கள்

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்

இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.


உடம்பு முழுதும் விஷம்

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.


அறியாமை

நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!

(பதிவு யாருடையது என்பதையும் , பதிவு பற்றிய லிங்க்கும் நண்பர் சௌந்தர் அவர்கள் அனுப்பியுள்ளார். நன்றிகள் கௌசல்யா அவர்களுக்கு.)


வியாழன், ஆகஸ்ட் 05, 2010

வெள்ளியங்கிரியும் ஈஷா யோகமும்










ஆடிப் பதினெட்டை முன்னிட்டு ஒரு சிறிய பயணமாக வெள்ளியங்கிரிக்கும் அருகிருக்கும் ஈஷா மையத்துக்கும் செல்லலாம் என கிளம்பி பேமிலியாக சென்றோம். கோவையின் போக்குவரத்து நெருக்கடி பேரூர் வரை தொடர்கிறது.
பேரூர் பட்டீஸ்வரர் கோயில் அருகில் இன்னும் அதிக நெருக்கடி . அரைமணீ நேரமாகிறது கோயிலைக்கடக்க.

கடந்து செம்மேடு அடையும் போதே சற்றுக்குளிர் எடுக்க ஆரம்பிக்கிறது. வெள்ளியங்கிரியை அடிவாரம் எட்டும் போது சற்றே மழைச்சாரல் பொழிய ஆரம்பமாகியது. மழைச்சாரலின் குழுமையுடன் கோயிலில் வெள்ளியங்கிரி ஆண்டவரின் தரிசனம் மிக அருமை. சுற்றிலும் பசுமை.

சிறிது காற்று அடிக்கும் போது கூட வானுயர்ந்து நிற்கும் மரங்களின் இலைகளில் இருந்து விழும் மழைத்துளி மிகவும் குளுமையுடன் நம்மீது படுகிறது.

மலை ஏறும் படிக்கட்டை அண்ணாந்து பார்க்கும் போதே சற்று பிரமிப்பு நமக்கு. இந்த படிக்கட்டில் எப்படி ஏறி மலை உச்சி வரை கடந்த இருவருடங்களாக சென்றோம். ஒரு வேளை இரவு நேரங்களில் ஏறத்துவங்குவதால் ஒன்றும் தெரிவதில்லையோ?

அன்னதான மண்டபத்தில் இருந்து அனைவரையும் அழைத்து சாப்பாடு போடுகின்றனர். கூட்டமும் சற்றே குறைவுதான். கோயிலுக்கு வரும் அரசுப்பஸ்கள் அனைத்தும் சொகுசுப்பேருந்துதான். அதனால் பயணமும் அலுப்படையச் செய்யாது. அப்படியே செய்தாலும் கோயில் அமைந்திருக்கும் இடத்தின் அமைதி நம்மை அப்படியே ரிலாக்ஸ் செய்துவிடும்.

இங்கு இருந்து 1 கிமீக்கு அருகில்தான் ஈஷா யோகமையமும் உள்ளது. இங்கு இருக்கும் தியான‌லிங்கம் மிகவும் பெரியது. அமைதிதான் இங்கும் . அதனால் பெண்களை கொலுசுகளைக் கழட்டிவரச் சொல்கிறார்கள். மேலும் குழந்தைகளை தியான லிங்க மண்டபத்தினுள் அனுமதிப்பதில்லை.

இங்கும் அதே மழைச்சாரல்தான் . அதுவுமில்லாமல் குளிர் காற்று மலைஅடிவாரத்திலிருந்து வந்து செல்கிறது. ஆனால் இங்கும் ஏசி வைத்த குடில்களை காணமுடிகிறது. கேண்டீன் ஒன்றும் இங்கு உள்ளது .விலைகள் வழக்கமான சரவணபவன் தான்.

இந்த யோகமையம் சார்பாக பல ஊர்களில் மரங்களை நட்டு வைத்து பராமரித்து வருகிறார்கள். திருப்பூரிலும் நட்டுவைத்துள்ளனர். அவற்றில் சில நல்ல நிலையில் உள்ளது.

ஆனால் இவர்கள் மையம் அருகே மற்றும் செல்லும் வழியில் எங்கும் பார்த்தால் வேலிமுள் மரம்தான் அதிகம் காணப்படுகிறது. புளியமரங்களும் காணப்பட்டாலும் மிகுதி வேலிமுள்தான். இவை சூடும் கூட.

அதுவல்லாமல் வெள்ளியங்கிரி பாதையில் இருந்து இவர்கள் மையத்திற்க்கு செல்லும் பாதை மண்பாதைதான். இவர்களுக்கு இருக்கும் வசதிக்கு வந்து செல்லும் பார்வையாளர்களுக்காக நல்லதரமான சாலையை கோவையிலிருந்தே சொந்தமாகச் செய்யலாம்.

அதேபோல வேலிமுள்களை வெட்டிவிட்டு அல்லது ஊடாக நல்ல தரமான மரங்களை நட்டு பராமரிக்கலாம். வனத்துறை இடமாக இருந்தாலும் மையம் அருகே இருப்பதால் அவர்கள் உதவியுடனே இதைச் செய்யலாம்.

வேலிமுட்களையும்,பாதையையும் பார்த்தவுடன் நம்மனம் சற்றே உள்ளே செல்ல யோசித்தது. இன்னும் சற்று அவர்கள் முயற்சித்தால் யோக மையம் இன்னும் சிறப்படையலாம்.

..

புதன், ஆகஸ்ட் 04, 2010

இந்தக் கொடுமைக்கு கோர்ட்க்கே போயிருக்கலாம்

கோர்ட் நடவடிக்கைகளை மதிக்காமல் நடக்கும் ஜெயலலிதாவைக் கண்டித்து மாவட்டந்தோறும் நடைபெறும் திமுக இளைஞர் அணியினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களால் திருப்பூர் காலை 10 மணீ முதல் போக்குவரத்து நெருக்கடியால் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

இவர்கள் ஆர்ப்பாட்டம் மாநகராட்சிக் கட்டிடம் அருகே நடைபெறுவதாலும் , மாநகராட்சி நகரின் மையப்பகுதியில் இருப்பதாலும் திருப்பூர் ரோடுகள் அனைத்தும் நகரின் மையப்பகுதியினூடாகவே அமைந்திருப்பதாலும் , வாகன ஓட்டிகள் அனைவரும் மிகுந்த சிரமத்தினூடாகவே பயணிக்க வேண்டியுள்ளது.

இவ்வளவு போக்குவரத்து நெருக்கடியில் அம்மையாரை ரெயில்வே ஸ்டேசனில் இருந்து ரமணா ஓட்டல் வரை , காரில் பயணிக்க வைத்தால் போதும் , இந்தக் கொடுமைக்கு கோர்ட்க்கே போயிருக்கலாம் என்று நினைத்து விடுவார்.

அடிக்கடி ஆர்ப்பாட்டங்களை நடத்திய கட்சிக்கே , நாமும் சளைத்தவரல்ல என்று திராவிட முன்னேற்றக் கழகம் பதிலளித்துக் கொண்டிருக்கிறது.

..

புதன், ஜூலை 14, 2010

பிறந்த நாளைச் சொல்லுங்கள்

உங்கள் பிறந்த நாளைச் சொல்லுங்கள்.உங்கள் எதிர்காலம் கணிக்கமுடியும். ஆனால் உங்களுக்கு தெரிந்த ஒருவரின் பிறந்த நாளை முடிந்தால் சொல்லுங்கள். தமிழ் கூறும் நல்லுலகுக்கு நம் நண்பர் ஒருவர் நல்லதைச் சொல்வார்.

ஏற்கனவே இதே மாதிரி ஒரு நண்பரின் கேள்வியை எனது வலைப்பதிவில் கேட்டதுதான். ஆனால் பலனில்லை. ஆனால் இந்த முறை தயவு செய்து இவர்
கேட்கும் பிறந்த நாளை முடிந்தால் கொடுங்கள்.

முகவரி : சித்தூர் முருகேசன்.

இணைப்பு :

செவ்வாய், ஜூலை 13, 2010

நித்தியானந்தாவும், சன் தொலைக்காட்சியும்


ஒரு விசயத்தை எப்படி வேண்டுமானாலும் திரிக்கலாம் , அதுக்கு உதாரணமாத்தான் ஒரு மேட்டரை நான் இப்ப திரிக்கப்போறேன்.

பொதுவா நம்ம ஊருல ஒரு வழக்கு மொழி உண்டு, அது என்னன்னா நல்லதனமாகவோ , கள்ளத்தனமாகவோ ஒரு ஜோடி இணைந்து இருக்கும்போது அவங்கள டிஸ்டர்ப் செய்யக்கூடாது , செஞ்சா செஞ்சவனுக்கு கொஞ்ச நாளுக்கு நடக்கறதெல்லாம் கொஞ்சம் மோசமாகத் தானிருக்கும். அது மாதிரித்தான் நம்ம சன் டிவிக்கதையும்.

நித்தியானந்தாவைப்போட்டு ஒரு நாள்ப்பூராவும் திருப்பித்திருப்பி காட்டி , நித்தியோட சாபத்தையும் , கூட இருந்த அம்மிணியோட சாபத்தையும் நல்லா வாங்கிக் கட்டிக்கிச்சு சன் டிவி. சாமியாருங்க‌ எல்லாருமே அந்தக் காலத்திலிருந்து இந்தக்காலம் வரைக்கும் ஒரே மாதிரித்தான். கோபப்பட்டா சாபம்தான்.

அப்புறம் அதோட கொஞ்சம் மக்கள் கோபம் வேற.

அதாவது சன் டைரக்ட் அப்படிங்கற டீடிஹெச் சேவையை ஆரம்பிச்சது முதல்
ரூ 500 க்கு 300 சேனல் அப்படின்னு சொல்லி சரி வாங்கலாமுன்னு கேட்டா கூட ரூ 1200 நிர்மாணக்கட்டணம் அப்படின்னு கொள்ளை லாபம் அடிக்கிறது. 300 சேனல் வந்தாலும் நமக்கு கெடைக்கிறது சன் சேனல் , கலைஞர் சேனல், விஜய் சேனல், மட்டுமே, இதில இசை அருவி, ஜெயா மேக்ஸ், சிரிப்பொலி கிடையாது. ஏன்னா அது வந்தா இவங்க சன் மியூசிக் படுத்துக்கும் . ஆனா ஜெயா நியூஸ் , கலைஞர் நியூஸ் வரும் .

இதெ ஏர்டெல்,ரிலையன்ஸ் , டிஸ் டிவி , டாடா ஸ்கை இவங்க இதெல்லாம் கொடுப்பாங்க. அவங்களுக்கு இவங்க கொடுக்கற சன்டிவி குருப் சேனல் ஆடியொ எல்லாம் ஒரு நார்மல் லெவல்லதான் வரும் , கேபிள் டிவியில் கூட நல்லா வரும்.

புதுசா வந்த வீடியோகான் மாசம் ரூ 150 க்கு தமிழ்ல் எல்லா சேனலும் , கூடவே டிஸ்கவரி , அனிமல் பிளானட், நேசனல் ஜியோ, நியோ, ஸ்டார், ஈஎஸ்பின், ஜீ, என 7 ஸ்போட்ஸ் , எம்ஜிஎம் உட்பட சில ஹிந்தி திரைப்பட சேனல்களையும் கொடுக்கும். இது மட்டுமல்லாமல் எந்த சேனல் தமிழ்ல் டிராண்ஸ்லேட் பண்ணீ வந்தாலும் ஆட்டோமேடிக்கா வரமாதிரியும், தமிழ் மெனுவையும் கூட வச்சுக்கற மாதிரி ஆப்சன் தந்திருப்பது இன்னும் விசேசம்.

இதானால் மட்டுமல்லாமல் அதிக விலைக்கு குறைந்த சேனல்களை அளிப்பதால் மக்களுக்கு சற்றே சன்னின் மீது கோபம் இருந்தது.

இந்த இரண்டு விசயங்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது , விண்ணீல்
இருந்த இன்சாட் 4பி சேட்டிலைட்டில் இருந்த சூரியசக்தி தகடு ஒண்ணு பொகைஞ்சு போச்சு , கூடவே வந்திட்டு இருந்த தூர்தர்சன் தப்பிச்சுகிருச்சு. சன் டைரக்ட் ஊத்திக்கிச்சு. இன்னும் ரெடியாகலை.

எப்பவுமே குவாலிட்டியிலதான் ஜெயிக்கணும் , அடுத்தவனப்போட்டு அமுக்கறதுல இல்லைன்னு எப்பத்தான் சன் புரிஞ்சுக்குமோ ?

நல்லா யோசனை பண்ணிப்பாருங்க. தூர்தர்சனும் , சன்னும் ஒரே சேட்டிலைட்டில வந்திட்டு இருந்தது. சன் மட்டும்தான் ஊத்திகிருச்சு . இப்ப தெரியுதுங்களா !

ஆண்பாவம் பொல்லாது அப்படிங்கறதை !


..