தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலையோர உணவகங்கள், பஸ் நிலையங்களில் உள்ள உணவகங்கள் பலவற்றில், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்படுகிறது. தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட ஒவ்வொரு பொருளுக்கும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, கூடுதல் விலை வசூலிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும், தொடரும் இந்த அவலத்தை, அதிகாரிகள் கண்டும், காணாமல் இருந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு வசதியாக, அந்தந்த சாலையோரங்களில், "மோட்டல்கள்' என்ற பெயரில், உணவகங்கள் நடத்தப்படுகின்றன. இதர வாகனங்களைக் காட்டிலும், அரசு பஸ் போக்குவரத்து பயணிகளை நம்பியே பெரும்பாலான, "மோட்டல்கள்' இயங்கி வருகின்றன.
அவசர கதியில், அரசு பஸ் பயணம் மேற் கொள்ளும் பயணிகள், தங்களது பசியை, தாகத்தை தீர்த்துக் கொள்ள இந்த, "மோட்டல்'களையே நாட வேண்டியுள்ளது. எந்தளவிற்கு மோசமாக உணவினை தயார் செய்து விற்க முடியுமோ, அந்தளவிற்கு மோசமாக தயார் செய்த உணவுகள் தான் இந்த உணவகங்களில் கிடைக்கின்றன.
இந்த, "பாடாவதி' உணவுக்கு, பெரும் தொகையை தண்டமாக அழ வேண்டிய நிலை, பயணிகளுக்கு ஏற்படுகிறது. இத்தகைய உணவகங்களில், தாங்கள் பயணம் செய்யும் அரசு பஸ்கள் நிறுத்தப்படுவதால், வேறு வழியின்றி, பயணிகள் அங்கு விற்பதை வாங்கி உண்ண வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த உணவகங்களில், பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு மட்டும் விதவிதமான உணவு வகைகள் தயார் செய்து, "ஓசி'யில் வழங்கப்படுகிறது. இவர்கள் உணவருந்த, தனி இடம் ஒதுக்கப்படுகிறது. அங்கு, சைவ, அசைவ உணவுகள் இவர்களுக்கு சூடாக பரிமாறப்படுகிறது.
ஒரு சில இடங்களில், டிரைவர், கண்டக்டர்களுக்கு, "கட்டிங்'கும் கொடுக்கப்படுகிறது. அரசு பஸ்கள் மட்டுமல்லாது, தனியார் ஆம்னி பஸ்களும் இந்த உணவகங்களில், ஆர்வத்தோடு ஒதுங்க இதுவும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. ஒவ்வொரு, "டிரிப்'பின் போதும், "ஓசி'யில் உணவு கிடைத்து விடுகிறது என்ற காரணத்தால், பயணிகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், அரசு பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் இந்த உணவகங்களில் பஸ்களை கொண்டு சென்று நிறுத்தி விடுகின்றனர்.
தனியார் நிறுவனங்கள் நடத்தும் சாலையோர ஓட்டல்கள் தான் இப்படி என்றால், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம், செங்கல்பட்டை அடுத்த மாமண்டூரில் நடத்தும், "மோட்டலின்' நிலையும் மிக மோசமாக இருக்கிறது. இங்கு விற்கப்படும் தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள், பிஸ்கட்கள், பீடி, சிகரெட், புகையிலை, பான்பராக், செய்தித் தாள்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும், அவற்றின் விலையை விட கூடுதல் விலைக்கே விற்கப்படுகின்றன.
ஒரு பக்கம் சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்படும் தரமற்ற உணவு, அதற்கான அதிக விலை என்று இருக்க, மறுபுறம் அதிகபட்ச சில்லரை விலையை விட, கூடுதல் விலை வைத்து விற்கப்படும் பொருட்கள் என மோசடி நீள்கிறது. தமிழகத்தில் சுகாதாரத்துறை என்று, தனியாக ஒரு துறை செயல்படுகிறது. ஒவ்வொரு நகராட்சி, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் சுகாதாரத் துறைக்கென்று, தனியாக அதிகாரிகள், பணியாளர்கள் இருக்கின்றனர்.
அவர்கள் வழக்கம் போல், "மாமூலாக' பணி புரிவதால், இத்தகைய முறைகேடுகளை கண்டு கொள்வதே இல்லை. அதிக விலை வைத்து விற்கப்படும் பொருட்கள் குறித்தும், தரமற்ற உணவுகள் குறித்தும் அந்தந்த மாவட்ட நிர்வாகமோ, அரசு அதிகாரிகளோ கண்டு கொள்வதே இல்லை. நெடுஞ்சாலை ஓட்டல்களில் மட்டும்தான் இத்தகைய அவலம் என்று இல்லை.
தமிழகம் முழுவதும் உள்ள பஸ் நிலையங்கள், பெரும்பாலானவற்றில் இந்த நிலை தான் உள்ளது. தலைநகர் சென்னையில் உள்ள கோயம்பேடு பஸ் நிலையத்திலும், இதே போன்று தரமற்ற உணவு கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இங்கு விற்கப்படும் மற்ற பொருட்களும், எம்.ஆர்.பி.,யை விட அதிக விலைக்கே விற்கப்படுகிறது. அதோடு இங்கு பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளைப் போன்றே தயாரிக்கப்படும், போலி தயாரிப்புகளும் அதிகம் விற்கப்படுகிறது.
இதே நிலைதான், மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, வேலூர், சேலம், புதுச்சேரி, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பெரு நகரங்களிலும், மற்ற சிறிய நகரங்களில் உள்ள பெரும்பாலான பஸ் நிலையங்களிலும், நெடுஞ்சாலை ஓட்டல்களிலும் நீடிக்கிறது. பஸ் பயணிகளின், "பர்சினை' பதம் பார்ப்பதோடு, அவர்களின் உடல் நலத்தை பாதிக்கும் இத்தகைய உணவகங்கள் மற்றும் கடைகளின் மீது அரசின் பார்வை திரும்புமா?
- நமது சிறப்பு நிருபர்-
தினமலர் 30.03.2010
ரூ.7.95 லட்சம் வாடகை பாக்கி தாராபுரம் ஹோட்டலுக்கு 'சீல்'
தாராபுரம்: தாராபுரம் நகராட்சிக்கு ஏழு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள ஹோட்டலை வருவாய் ஆய்வாளர் பூட்டி 'சீல்' வைத்தார். தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் மோகன் என்பவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹோட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். அரசு பஸ்கள் உணவுக்காக பத்து நிமிடம் நின்று சென்றதால், பயணிகள் இந்த ஹோட்டலில் உணவு, டீ, காஃபி, தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட்டனர். ஹோட்டல் மற்றும் அருகிலுள்ள சிறிய கடைகளில் வியாபாரம் நன்றாக நடந்தது. தாராபுரம் - திண்டுக்கல் ரோட்டில் தனியார் மூலம் இரு மோட்டல்கள் திறக்கப்பட்டன. இங்கு அரசு பஸ்களை நிறுத்தும் டிரைவர், கண்டக்டர்களுக்கு உணவு, சிகரெட், 20 ரூபாய் டிப்ஸ், பார்சல் சாப்பாடு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால், பஸ் ஸ்டாண்டில் நிறுத்துவதற்கு பதிலாக மோட்டல்களில் அரசு பஸ்கள் நின்று சென்றன.