வெள்ளி, செப்டம்பர் 09, 2016

பச்சமுத்து கரன்சி தந்தையான கதை-விகடன்


கணக்கு ஆசிரியர், கல்லூரி அதிபர், ஊடக முதலாளி, படத் தயாரிப்பாளர், அரசியல் கட்சியின் தலைவர் என தனக்குத்தானே பல அரிதாரங்களைப் பூசி, ‘சக்சஸ்’ மனிதராக வலம்வந்தவர் `பாரிவேந்தர்’ என்று அழைக்கப்படும் பச்சமுத்து. அவருடைய புதிய அவதாரம், புழல் சிறைக் கைதி!
எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க, 72 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் பச்சமுத்து. ஒவ்வோர் ஆண்டும் பணம் வாங்கிக்கொண்டு ஸீட் கொடுப்பது நடைமுறையில் இருக்க, இந்த ஆண்டு திடீரென மத்திய அரசு நீட் தேர்வு முறையைக் கொண்டுவந்ததுதான் பச்சமுத்துவுக்கு விழுந்த பெரிய அடி.
பச்சமுத்து சார்பில் பணம் வாங்கும் ஏஜென்ட்டான மதன், மாணவர்களிடம் வாங்கிய பணத்தை வேந்தர் மூவீஸ் உள்ளிட்ட வேறு தொழில்களில் முதலீடு செய்வது வழக்கம். ஆனால், இந்த முறை நீட் தேர்வால் பணம் கொடுத்தவர்களில் சிலர் பணத்தைக் திருப்பிக் கேட்க, மதனோ `கங்கையில் கரைகிறேன்’ எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, கடந்த மே மாத இறுதியில் எஸ்கேப் ஆனார். அவரைக் கண்டுபிடித்துத் தரும்படி அவரது தாயார் தொடர்ந்த வழக்கு போலீஸாரால் இழுத்தடிக்கப்பட, உயர் நீதிமன்றத்தின் நெருக்கடியால் இப்போது பச்சமுத்து கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
எஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சொத்து மதிப்பு 15,000 கோடிக்கும் மேல். ஊடகம், டிரான்ஸ்போர்ட், மருத்துவமனை, ஹோட்டல் என 100-க்கும் அதிகமான தொழில்களில் ஈடுபட்டுவருகிறது பச்சமுத்து தலைமையிலான எஸ்.ஆர்.எம் குழுமம்.
யார் இந்தப் பச்சமுத்து?
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் இருக்கிறது தாண்டவராயபுரம். இதுதான் பச்சமுத்து பிறந்த ஊர். தாயார் வள்ளியம்மை; தந்தை ராமசாமி. சிறு வயதிலேயே தந்தை ராமசாமி, காலமானதால் தாயின் அரவணைப்பும் வறுமையும் பச்சமுத்துவை எப்போதும் சூழ்ந்திருந்தன. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, திருச்சியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்றுவிட்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தில், முதுகலைக் கணிதம் முடித்து, ஏ.எம்.ஐ.இ படிப்பையும் முடித்தார்.
மாலை நேரக் கல்லூரியில் படித்ததால், பகல் பொழுது வீணாகக் கழிவதை விரும்பவில்லை பச்சமுத்து. டுட்டோரியல் கல்லூரிகளில் கணிதம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் வேலையில் சேர்ந்தார். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அப்போது கணித ஆசிரியர்களுக்கு கடும் தட்டுப்பாடு. சென்னை மாநகராட்சி, கணித ஆசிரியர்களை வேலைக்கு அழைக்கிறது. அங்கும் விண்ணப்பித்து, வேலைக்குச் சேர்கிறார். காலையில் 6 மணி முதல் 10 மணி வரை டுட்டோரியல் கல்லூரிகளில் கணக்கு வாத்தியார் வேலை. 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாநகராட்சிப் பள்ளியில் கணித ஆசிரியர் வேலை. அதன் பிறகு கல்லூரி மாணவர் என சக்சஸ்ஃபுல் இளைஞனாக மாற ஆரம்பித்தார்.
கல்லூரிப் படிப்புகள் அனைத்தும் முடிந்ததும் சொந்தமாக ‘தமிழ்நாடு டுட்டோரியல் மற்றும் டியூஷன் சென்டர்’ ஆரம்பிக்கிறார்.
திருப்புமுனை தந்த எம்.ஜி.ஆர்
டுட்டோரியல் ஆரம்பித்த பிறகுதான் முறையாக ஆங்கிலக் கல்வி கற்றுத்தர ஒருசில கிறிஸ்துவப் பள்ளிகளைத் தவிர வேறு பள்ளிகள் இல்லை என்பதை உணர்கிறார் பச்சமுத்து. போட்டி இல்லாத சந்தை. அதில் இறங்கி வியாபாரம் செய்தால், நிச்சயம் லாபத்துக்கு மேல் லாபம் பார்க்கலாம் என்பதை உணர்ந்த பச்சமுத்து, சென்னை மேற்கு மாம்பலத்தில், நைட்டிங்கேல் நர்சரி பள்ளியை ஆரம்பித்தார். 25 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அந்தப் பள்ளிக்கூடம், மெள்ள மெள்ள வளர ஆரம்பித்தது. 12 வருடங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்களுடன், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது.
அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சி. முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு, தமிழகத்தில் நிறையக் கல்லூரிகள், தொழிற்கல்விக் கல்லூரிகள் (ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக்) தொடங்க வேண்டும் என ஆசை. ஆனால், அதைச் செய்ய அரசாங்க கஜானாவில் நிதி இல்லை என்பதும் அவருக்குப் புரிந்தது. தனியாரை இந்தக் கல்விச் சேவையில் இறக்கலாம் என நினைத்த அவர், ஏற்கெனவே, சிறிய அளவில் பள்ளிக்கூடங்களை நடத்துபவர்களை அழைத்துப் பேசினார். அங்குதான் பச்சமுத்துவின் வாழ்க்கை திசை மாறியது. பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளைத் திறக்க அனுமதிபெற்றார். இவரோடு சேர்ந்து வளர்ந்தவர்கள்தான், வேலூர் வி.ஐ.டி விஸ்வநாதன், சத்யபாமா கல்லூரி அதிபர் ஜேப்பியார்.
அதன் பிறகு, பச்சமுத்துவின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தது. தொழிலில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொண்டார். அரசு இயந்திரத்துக்கு எங்கே எண்ணெய் ஊற்றினால், அது தொய்வின்றி நமக்காக வேலைபார்க்கும் என்பதைப் புரிந்துகொண்டார். 90-களின் தொடக்கம், பச்சமுத்துவை கோடீஸ்வரர் பாரிவேந்தர் ஆக்கியது. தன் தந்தை ராமசாமியின் பெயரில், ஸ்ரீராமசாமி நினைவு என்பதன் சுருக்கமாக எஸ்.ஆர்.எம் குழுமம் உருவானது.
பொத்தேரி ஆக்கிரமிப்பு
ஏரிகள் சூழ்ந்த பகுதிதான் பொத்தேரி. இங்குதான் முதல்முறையாக அவரது தாயார் பெயரில் வள்ளியம்மை பாலிடெக்னிக்கைத் தொடங்குகிறார் பச்சமுத்து. அப்போது அந்தக் கல்லூரியின் மொத்த நிலப்பரப்பு 8 ஏக்கர் மட்டுமே. கல்லூரிக்குள் நுழைய, பாதையே கிடையாது. ஏரிக்கரையைத்தான் கல்லூரிக்கான பாதையாகப் பயன்படுத்துகிறார்கள். அதன் பிறகு ஏரிக்கரை ஆக்கிரமிக்கப்பட்டு, கல்லூரிக்கான நுழைவுச் சாலையானது. அதே வளாகத்தில் எஸ்.ஆர்.எம் இன்ஜினீயரிங் கல்லூரியாக உருவெடுத்த பிறகு, அருகில் ஆதிதிராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தைக் கைப்பற்றுகிறது எஸ்.ஆர்.எம் நிர்வாகம். `37 ஏக்கர் பஞ்சமி நிலத்தை, பச்சமுத்து ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்’ என, 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சதீஷ் என்பவர் மனு செய்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில் எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாகத்தில் பச்சமுத்து ஆக்கிரமித்துவைத்துள்ள 37 ஏக்கர் நிலம் பஞ்சமி நிலம் என்பது உறுதியானதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 371 கோடி ரூபாய்.
வருடத்துக்கு ஒரு கல்லூரி
90-களுக்குப் பிறகு, வருடத்துக்கு ஒரு கல்லூரி, ஒரு பாலிடெக்னிக் என்பதை லட்சியமாக வைத்துச் செயல்பட்டார் பச்சமுத்து. ஒவ்வோர் ஆண்டும் அவருடைய குழுமத்தில் புதிது புதிதாக கல்லூரிகள் இணைந்தன. ஒரே வருடத்தில் மூன்று கல்லூரிகளைத் தொடங்கி, மற்ற கல்வி அதிபர்களை மிரளவைத்தார். விளைநிலங்களை விலைக்கு வாங்கி, அதில் தனது நிறுவனங்களை உருவாக்கி, அதைக் காட்டியே அந்த இடத்துக்கு அனைத்து வசதிகளையும் கொண்டுவருவது பச்சமுத்து ஸ்டைல். இந்த டெக்னிக்கை தமிழகத்தில் முதலில் அறிமுகம் செய்தவர்களில் பச்சமுத்து முக்கியமானவர்.
குடும்பம்
பச்சமுத்துவின் மனைவி ஈஸ்வரியம்மாள். மூத்த மகன் ரவி பச்சமுத்து. இளைய மகன் சத்தியநாராயணன். மகள் கீதா. இதுதான் பச்சமுத்துவின் குடும்பம். மூத்த மகன் ரவி, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருக்கிறார். அத்துடன் கட்டுமானம், டிரான்ஸ்போர்ட், ஹோட்டல்கள் ஆகியவற்றை நிர்வகித்துவருகிறார். சத்தியநாராயணன், `புதிய தலைமுறை தொலைக்காட்சி’ என ஊடகப் பிரிவை கவனித்துவருகிறார். மகள் கீதா மற்றும் அவரது கணவர் சிவக்குமாரிடமோ, திருச்சி டி.ஆர்.பி இன்ஜினீயரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மற்றும் ராமாபுரம் ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் பொறுப்பு.
கட்சி தொடங்கியது எதற்காக?
பச்சமுத்து கோடீஸ்வரர் ஆனதும், அவருக்கு பல திசைகளில் சில சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்தன. 2006-ம் ஆண்டு காலகட்டத்தில் அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் மூலம் கடும் நெருக்கடி ஏற்பட்டது. பச்சமுத்துவின் கல்லூரிகளைக் குறிவைத்து சிலர் அடிமாட்டு விலைக்குக் கேட்க ஆரம்பித்தனர். அந்த நேரத்தில்தான் ‘புதிய தலைமுறை’ என்ற வார இதழைத் தொடங்கினார். ஜாதி அஸ்திரத்தையும் கையில் எடுத்தார் பச்சமுத்து. பார்க்கவ குல மாநாடுகள் கூட்டப்பட்டன. அதையே ஒன்றிணைத்து இந்திய ஜனநாயகக் கட்சியைத் தொடங்கினார். 2011-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அந்தக் கட்சி, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து, ஒரு நாடாளுமன்றத் தேர்தல், ஒரு சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்துவிட்டது.
ஒரு ஸீட் 60 லட்சம்!
கல்லூரிகளை நிர்வகிப்பதில் தனி பாணியைப் பின்பற்றுகிறார் பச்சமுத்து. கல்லூரிக்குள் ஆடைக் கட்டுப்பாடு இருக்காது. தேவையற்ற விதிமுறைகள் எதுவும் கிடையாது. மாணவர்கள் கட்டும் கட்டணங்களுக்கும் முறையான ரசீதுகள் இருக்காது. ஆவணங்கள் இருக்காது. ஐந்து லட்சத்தில் ஆரம்பித்து அறுபது லட்சம் வரை கட்டணம் வாங்குவார்கள். அதற்கு ஒரு துண்டுச்சீட்டுதான் கொடுப்பார்கள். அதில் எந்த விவரமும் இருக்காது. அதைக் கொடுத்தால், கல்லூரியில் ஸீட் உறுதி. அவ்வளவுதான். இந்த வேலையை வெளியில் இருந்து செய்வதற்கு வந்தவர்தான் மதன். அவருடைய வருகை பச்சமுத்துவின் வாழ்க்கையை வேறு திசைக்குக் கொண்டுசென்றது.
ஏஜென்ட் மதன்
குமரி மாவட்டம் சுசீந்திரத்தைச் சேர்ந்தவர் மதன். கல்லூரிக் காலத்தில் மோட்டார் பைக் திருட்டு வழக்கு ஒன்றில் மதன் பெயர் சேர்க்கப் பட்டது. அதில் இருந்து தப்பிக்க மும்பைக்கு ஓடிப்போய் தலைமறைவானார். அதன் பிறகு சென்னை வந்தார். தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் ‘ஸீட்’ வாங்கிக் கொடுக்கும் புரோக்கருடன் நட்பானார். அதன் பிறகு
எஸ்.ஆர்.எம் பச்சமுத்துவுடன் ஏற்பட்ட பழக்கம், விசுவாசம் எல்லாம், அந்தக் கல்லூரியின் ஒட்டுமொத்த மருத்துவ ஸீட்களையும் மதன் மூலமே விற்கும் அளவுக்குப் போனது.
மாணவர்களே புரோக்கர்ஸ்!
கல்லூரிக்கு ஸீட் வாங்கிக் கொடுப்பதில் மதனுக்கு கோடிகள் கொட்டின. மதன் உள்ளூர் மாணவர்களைக் குறிவைத்ததைக் காட்டிலும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேச மாணவர்களைக் குறிவைத்தார். அதற்காக, இங்கு படிக்கும் அந்த மாநில மாணவர்களைத் தன்னுடைய புரோக்கர்களாக்கினார். அவர்கள் அந்தந்த மாநிலங்களில் கேன்வாஸ் செய்து, அங்கு இருந்து ஆள்பிடித்துக் கொடுப்பார்கள். மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு, 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு நடக்கும்போதே புக்கிங் தொடங்கிவிடும். அப்போது ஸீட் வாங்கினால், 10 லட்சம் குறைவு என மதன் அறிவிப்பார். அப்படி வசூலிக்கும் தொகையை வேறு தொழிலில் முதலீடு செய்வார்.
வேந்தர் மூவீஸின் எழுச்சி
மருத்துவ ஸீட் பேரங்களின்வழி கிடைத்த பணத்தைக்கொண்டு மதன், வேந்தர் மூவீஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். ரஜினி நடித்த ‘லிங்கா’, விஜய் நடித்த ‘தலைவா’ உள்பட 20-க்கும் மேற்பட்ட படங்களை வாங்கி, விற்பனை செய்தார். சொந்தமாகவும் படம் தயாரித்தார். ஆனால், தயாரித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தின. சினிமா தயாரிப்புகளுக்கு செலவழித்த பணம் எல்லாம், மாணவர்களிடம் ஸீட் வாங்கி தருவதாகச் சொல்லி வாங்கிய பணம். இப்போது மாணவர்களுக்கு கல்லூரியில் ஸீட் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயம். பச்சமுத்துவுக்கும் மதனுக்கும் இடையில் கடந்த ஆறு மாதங்களாக விரிசல் விழுந்தது. தொழிலில் நஷ்டம் ஏற்படத் தொடங்கியதை பச்சமுத்துவின் மகன்கள் ரவியும் சத்தியநாராயணனும் விரும்பவில்லை. அவர்கள் மதனைக் கண்டித்ததுடன், தொடர்பைத் துண்டித்துக் கொள்ளவும் வற்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், கடிதம் எழுதி வைத்துவிட்டு மதன் தலைமறைவானார்.
ஜம்பாலா டைரிக் குறிப்பு
சென்னை விமான நிலைய ஓய்வு சுங்கத்துறை அதிகாரி ஜம்பாலாவின் வீட்டில், சி.பி.ஐ கடந்த ஆண்டு சோதனை நடத்தியது. அப்போது சிக்கிய வரவு-செலவு டைரியில் தன் மகள் மானஷாவை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காக 40 லட்ச ரூபாயை நன்கொடையாகக் கொடுத்ததாக ஜம்பாலா குறிப்பிட்டிருந்தார். அந்த டைரி ஆதார அடிப்படையில் பச்சமுத்துவிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியது சி.பி.ஐ. அந்த வழக்கு கிடப்பில் இருக்கிறது.
முடிவு என்ன?
பல ஆயிரம் கோடி சொத்துக்கள் இருந்தாலும் வெறும் 72 கோடி ரூபாய் மோசடி பச்சமுத்துவின் இமேஜை வீழ்த்தியிருக்கிறது. `மாயமான மதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டால், பச்சமுத்துவுக்கு மேலும் சிக்கல்’ என்கிறது போலீஸ். இதனால் மதனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் களம் இறக்கப்பட்டுள்ளனர் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார். மதன் திரும்பி வந்தால் இன்னும் பல ஊழல் பூதங்கள் வெளிவரலாம்.
ஆண்டுதோறும் கோடிகளில் வியாபாரமான மருத்துவக் கல்வியின் உண்மை நிலவரம் இந்த வழக்கின் மூலம் வெளி உலகுக்குத் தெரிய வந்துள்ளது. மருத்துவ கவுன்சில் உடனடியாகத் தலையிட்டு, குதிரை பேரம்போல நடந்த மெடிக்கல் ஸீட் வியாபாரம் குறித்து விசாரணை நடத்தி, இந்த இடைத்தரகர்களின் கல்வி பிசினஸை முடக்க வேண்டும். அப்போதுதான் வியாபாரிகளின் கைகளில் சிக்கிக்கிடக்கும் மருத்துவக் கல்வி முற்றிலுமாக விடுவிக்கப்படும்!