வியாழன், ஜனவரி 21, 2016

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்
நெருப்புக் குழம்பை உள்ளடக்கி வைத்திருக்கும் எரிமலைத் தொடர் நீங்கள். சில நேரங்களில் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் சில நேரங்களில் கனல் வார்த்தைகளையும் வீசுவீர்கள். சூரியனுக்குள் உறக்கமின்றி ஓயாமல் உழன்று கொண்டிருக்கும் ஹீலியம் அணு உலைகளைப் போல் சதா சர்வ காலமும் உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். நெருங்கிப் பழகும் சிலருக்கு மட்டுமே உங்களின் நேர்மை புரியும். வீட்டையும், வாகனத்தையும் அழகுபடுத்திப் பார்க்கத் தெரிந்த உங்களுக்கு, அருகில் இருப்பவர்களிடம் அன்பாகப் பேசத் தெரியாது. வார்த்தைக்கு வண்ணம் பூசத் தெரியாது. ‘யாரோ, எக்கேடோ கெட்டுப் போகட்டும்’ என்று உங்களால் தவறுகளை தலை சாய்த்துப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தன்மானமும், சுய கௌரவமும்தான் உங்களின் முதல் எதிரிகள். லட்சியப் பாதையில் பயணிக்கும்போது சிலரை அலட்சியப்படுத்துவதாலும் புது எதிரிகள் முளைப்பார்கள். சகோதரரையோ, சகோதரியையோ, அல்லது உறவினர்களால் கைவிடப்பட்ட ஒருவரையோ குடும்பத்தில் வைத்து தாங்குபவரும் நீங்கள்தான்.
மேஷத்திற்கும், விருச்சிகத்திற்கும் செவ்வாய்தான் அதிபதியாக இருந்து ஆட்சி செய்கிறார். ஆனாலும், மேஷச் செவ்வாய்க்கும், விருச்சிக செவ்வாய்க்கும் வித்தியாசங்கள் உண்டு. மேஷ ராசியினர் சரவெடி போல படபடவென்று வெடிப்பார்கள். ஆனால் விருச்சிக ராசியினரான நீங்களோ, வலிகளைப் பொறுத்துக் கொண்டு ‘ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல’ என்பீர்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களுக்கு பாலீஷாக பேசத் தெரியாது. நறுக்கென்று பேசுவதால் ஆங்காங்கு எதிரிகள் முளைத்த வண்ணம் இருப்பார்கள். பேசக் கூடாத விஷயங்களையெல்லாம் பேசிவிட்டு, ‘மனசை புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்பீர்கள். உங்களின் ராசியாதிபதியாக செவ்வாய்தான் வருகிறார்.
மேலும், உங்களின் கடன், எதிரிகள் ஸ்தானமான மேஷத்திற்கும் செவ்வாய்தான் வருகிறார். எப்படிப் பார்த்தாலும், நல்லது கெட்டது என்று இரண்டையுமே செவ்வாய்தான் தரப் போகிறார். பேச்சு, செய்கை இரண்டிலுமே காட்டத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். நெருப்பு தெறிக்கப் பேசினால் மீண்டும் உங்களை நோக்கி அக்னிப் பந்துதான் வரும். அதை எதிர்கொள்ளத் தயாராக இருந்தால் பேசலாம். அதனாலேயே உங்களில் பலர் சபையில் பேசிவிட்டு, தனியாகப் பார்த்து மன்னிப்பு கேட்பீர்கள். பத்து வருடங்கள் பழகிய நெருக்கமான நண்பரையும் பத்து நிமிடத்தில் தூக்கிப் போடுவீர்கள்.
எதற்குமே அவசரப்பட மாட்டீர்கள். அதனால் உங்களை சோம்பல் மிகுந்தவர் என்று கருதுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. உங்களின் ஆறாம் இடத்திற்கு செவ்வாய் வருவதால், ‘எது வேண்டுமானாலும் ஆகட்டும்... அத்து மீறிப் பார்’ என்கிற எண்ணம் எப்போதும் வலுத்து இருக்கும். செவ்வாய் என்பது ‘மீறினால் என்ன’ என்று சவால் விட்டு சட்டத்தை உடைக்கும் கிரகமாகும். ‘உங்களுக்கு மட்டும்தான் ரகசியத்தைச் சொல்கிறேன்’ என்று எல்லோருக்கும் சொல்வீர்கள். பெரிய விஷயங்களை அநாயாசமாக எதிர்கொள்ளும் நீங்கள், சிறுசிறு விஷயங்களுக்கெல்லாம் பெரிய அளவில் மன உளைச்சல்களுக்கு ஆளாவீர்கள். பல வருடங்கள் நல்ல பெயர் எடுத்துவிட்டு திடீரென்று பேசி கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்வீர்கள். இந்த செவ்வாயால் அடிக்கடி எமோஷனல் ஆகிக் கொண்டே இருப்பீர்கள். எப்போதுமே சமூகக் கோபங்கள் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்கும். அதை எங்கேயாவது வெளிப்படுத்திக் கொண்டே இருப்பீர்கள்.
செவ்வாய் ரத்த பந்தங்களுக்கும் உரியவராக இருப்பதால், உடன்பிறந்தோர்களே உங்களுக்கு எதிராக மாறுவார்கள். பூமி, நிலம் சம்பந்தமான எந்த விஷயமாக இருந்தாலும் சரிதான்... சட்டபூர்வமாக அணுகி, பிரச்னைகள் வருவதற்கு முன்பே சரிசெய்து கொள்ளுங்கள். இல்லையெனில் வழக்கு, பஞ்சாயத்து என தொடர்ந்து மோதிக் கொள்ளும் சூழல் வரும். அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, தம்பி எல்லோரின் மீதும் பாசமாக இருப்பீர்கள். பத்து பேருக்கும் வாக்கு கொடுத்துவிட்டு, அதை செயல்படுத்த முடியாமல் தவிப்பீர்கள். உங்கள் வாழ்வில் பாதி காலம் தர்மசங்கடமான சூழ் நிலைகளை எதிர்கொண்டபடி இருப்பீர்கள். அதனால் சரியோ, தவறோ... உங்கள் நிலையைச் சொல்லிவிடுவது நல்லது. இதனாலேயே நண்பர்களில் பலர் எதிரிகளாக மாறுவர். பூமிகாரகனாக செவ்வாய் வருவதால், நிலம் வாங்குவதை விட, கட்டிய வீடாக வாங்குவது நல்லது. அல்லது வெறும் நிலமாக வாங்க ஆசைப்படுபவர்கள், வாழ்க்கைத்துணையின் பெயரில் பதிவு செய்து கொள்வது நல்லது. அப்படி வாங்கிவிட்டீர்கள் எனில், பேருக்காவது கடக்கால் போட்டு மூன்றடி உயரத்திற்கு சுவர் எழுப்புங்கள்.
காவல்துறை, மின்சாரம், ராணுவம், செக்யூரிட்டி, ரத்தப் பரிசோதனை நிலையம் போன்ற இடங்களில் நீங்கள் பணியாற்றினால் நல்லது. அதேசமயம் உங்களுக்கு அதுவே எதிரான பலன்களையும் கொடுக்கும். ஃபிப்ட்டி ஃபிப்ட்டி என்பார்களே... அதுபோலத்தான் மேற்கண்ட துறைகளில் வளைய வர முடியும். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் குமார், செல்வம், பழனிவேல் போன்ற பெயருள்ளவர்களோடு பிரச்னைகள் வந்து நீங்கியபடி இருக்கும். மேலதிகாரியை நேரடியாகக் கேள்விகள் கேட்பதால், அவர் மூலம் நீங்கள் முடக்கப்படுவீர்கள். ஆனாலும், உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். நீங்கள் எந்த வேலையையுமே யாராவது சொன்னால்தான் செய்ய வேண்டும் என்று உட்கார்ந்து கொண்டிருப்பீர்கள். தானே ஒரு செயலை உருவாக்கிக் கொண்டு செயல்பட இயலாமல் முடங்கியபடி கிடப்பீர்கள். ஆனால், கொடுக்கும் வேலையை நூறு சதவீதம் அர்ப்பணிப்பு புத்தியோடு செய்து தருவீர்கள். யாராவது குச்சி எடுத்து உங்களை அதட்டிக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் யாருக்கு அபிப்ராயமோ, அறிவுரையோ சொல்கிறீர்களோ... அவரே உங்களை எதிர்த்துப் பேசுவார். அல்லது உங்களை எதிரியாகவே நினைத்துக் கொள்வார்.
உங்களுக்கு பெரிய கடன்கள் இருந்தால் பரவாயில்லை... ஆனால், சிறுசிறு கடன்களை மட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள். அதையும் தவிர, ‘‘இவரு தெரிஞ்சவரு...’’, ‘‘அவரு உடனே கொடுப்பாரு...’’ என்று யாருக்கும் சிபாரிசின் பேரில் எதையும் வாங்கிக் கொடுக்காதீர்கள். கடைசியில் உங்கள் கைக்காசை செலவழித்து பாக்கியை அடைக்க வேண்டி வரும். சிறிய அவமானத்திற்குக் கூட பெரிய அளவில் அவஸ்தைப்படுவீர்கள். சொத்து வாங்க, வீடு கட்ட என்றால் தைரியமாகக் கடன் வாங்குங்கள். மேலும், ஏழைகளுக்கு மருத்துவச் செலவோ அல்லது ரத்த தானமோ செய்யுங்கள். செவ்வாய் ரத்தத்திற்கு உரியவர் என்பதால், அதுவே பரிகாரமாக மாறும் வாய்ப்பு உண்டு. இரு சக்கர வாகனங்களை இயக்கும்போது ‘வேகம் விவேகமல்ல’ என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில், மூவிங் தாட்ஸ் என்று சொல்வார்களே... அதுபோல பயணத்தில் இருக்கும்போது உங்களுக்கு யோசனைகள் அதிகமாகும். அதற்குத் தகுந்தாற்போல நீங்கள் இயக்கும் வண்டியின் வேகமும் வேறுபடும்.
திடீரென்று எல்லாவற்றையும் மூர்க்கத்தனமாக எதிர்க்கும் குணம் இருக்கும். தனக்குப் பிடித்ததே எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்கிற திணிப்பு இருக்கும். இதனால் சில சமயங்களில் நீங்கள் பேசும்போது, நண்பர்கள் தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்து விடுவார்கள். அதேசமயம் திடீரென்று எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் குணமும் வந்து விடும். இந்த முரண்பட்ட உணர்வுகளை என்ன செய்வது என்று தெரியாமல் அல்லாடுவீர்கள். வீட்டையோ, இடத்தையோ அடகு வைத்து கடன் வாங்குவதை விட தங்கத்தை வைத்துக் கடன் வாங்குங்கள். பூமிகாரகனாக செவ்வாய் இருப்பதால், இடத்தை அடகு வைத்தால் அந்த இடமே கைவிட்டுப் போகச் செய்து விடுவார்.
சமூகப் புரட்சி செய்யும் அமைப்பினரோடு கவனமாக இருக்க வேண்டும். நாளைக்கு ஏதேனும் பிரச்னை எனில், நீங்கள் யாரை நம்பி இறங்கினீர்களோ, அவரே உங்களை நோக்கி கையையும் காட்டிவிட்டு தப்பித்துக் கொள்வார். தவறான பாதையில் சென்று சிக்கிக் கொள்ளாதீர்கள். ‘‘அவருக்கு நீங்க ரைட் ஹேண்டாக இருந்தீங்களாமே’’ என்று உங்களைப் பிடித்து விசாரிப்பார்கள். எப்போதுமே சமூக அந்தஸ்து உள்ள வேலையிலேயே நீங்கள் அமர்வீர்கள். நான்கு பேர் மதிக்கும் உத்யோகத்தில்தான் இருப்பீர்கள். அதனால் மதிப்பு மிக்கவர்களாலேயே எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொள்வீர்கள். மின்சாரத்தைக் கையாளும்போதும், நெருப்பிற்கு அருகே இருக்கும்போதும் மற்றவர்களை விட நீங்கள் பன்மடங்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களின் அடிப்படை நோயே உஷ்ணம்தான். இது மெதுவாக வயிறு, கண், ரத்த அழுத்தம், தூக்கமின்மை என்று ஒவ்வொரு இடமாகப் பரவும். இதனால் உடலிலுள்ள உஷ்ணத்தை குறைத்துக் கொண்டால் நோய்களின் எண்ணிக்கையும் குறையும்.
யார் உங்களை ஆள்கிறார்களோ அவரே உங்களை அடக்கவும் செய்கிறார். அதாவது செவ்வாய்தான் உங்களை ஆட்சி செய்கிறார். அவரே எதிரிகளையும் கொண்டு வந்து சேர்க்கிறார். எனவே, யாராவது நன்மை செய்தால் அவருக்கு நன்மை செய்து விட்டு ஒதுங்கி விடவேண்டும். சந்தோஷத்தையும் ஆக்ரோஷத்தையும் சரிசமமாக பார்க்கும் திறன் பெற்றவர்களாக நீங்கள் இருத்தல் வேண்டும். மனிதர்கள் எப்போதும் இருவிதங்களிலும் இயங்கக் கூடியவர்கள் என்பதை ஆழமாக நெஞ்சில் பதித்துக் கொள்ளுங்கள். எதையுமே பழிக்குப் பழி என்று எதிர்கொண்டால் பிரச்னைகளில் சீக்கிரம் சிக்கிக் கொள்வீர்கள். சபதம், சவால் என்றெல்லாம் பேசக் கூடாது. காரியத்தில் கண் வைத்து முன்னேறிக் கொண்டிருங்கள். ஆளுமையிலும், அதிகாரத்திலும் செவ்வாய் திருப்தி காணுமெனில், அதிலும் அளவு வேண்டும் என்பதே செவ்வாய் உங்களுக்குத் தரும் பாடமாகும். எவ்வளவு பெரிய அதிகாரம் கிடைத்தாலும் சரிதான்... அமைதியாக இருங்கள். இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது ஆட்டுக் கிடா குறுக்காக வந்தால் எச்சரிக்கையாக இருங்கள். பெரும்பாலும் விபத்து அப்படித்தான் ஏற்படும். ராணுவப் பகுதி, காவல்துறை சார்ந்த சில பகுதிகளில் அத்துமீறி நுழையாதீர்கள்.
உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் சரி, நீங்கள் செல்ல வேண்டிய தலமே கீழசூரியமூலை ஆகும். ஏனெனில் சூரியனும் செவ்வாயும் நண்பர்களாக இருப்பதால், சூரியனின் நிதானமான ஆளுமையும், அதிகாரமும் உங்களுக்குக் கைகொடுக்கும். இது பாஸ்கர கோ ஷோடசப் பிரதோஷம் எனும் பெரிய பூஜை நிகழ்ந்தேறிய தலம். அனைத்து சூர்ய சக்திகளையும் இங்கு குழுமச் செய்து, யாக்ஞவல்கியர் முன்னிலையில் ஸ்ரீவித்ருமாகர்ஷண பைரவர் எனும் பைரவரின் அம்சமானவர் இதைச் செய்வித்தார். நாம் பார்க்கும் ஒரு சூரிய மண்டலத்து சூரியன் மட்டுமல்லாது, பல கோடி சூரிய மண்டலத்திலுள்ள சூரியர்களும் இத்தலத்து ஈசனை வழிபட்டதாலேயே ‘சூர்யகோடி பிரகாசர்’ (சூர்யகோடீஸ்வரர்) எனும் திருப்பெயர் அவருக்கு வந்ததாக சொல்கிறார்கள். இந்த இறைவனை வணங்கினால் உங்களது கடன், நோய், எதிரிகள் பிரச்னை எளிதில் தீரும். அம்பாளின் திருநாமம் பவழக்கொடி. அவளின் கடைக்கண் பார்வை பட, வாழ்வில் ஒளி கூடும்.
இத்தலம் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சூரியனார்கோவிலைத் தாண்டி கஞ்சனூர், திருலோக்கி கிராமங்களை அடுத்து உள்ளது கீழசூரியமூலை. சற்று உள்ளடங்கிய கிராமம். சூரியனார்கோவிலிலிருந்தோ அல்லது கஞ்சனூரிலிருந்தோ வழி கேட்டால் சொல்லி விடுவார்கள். தனி வாகனத்தில் செல்வது சிறந்தது.
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக