தனுசு ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்
ஆயுதச் சின்னமான வில்லின் ராசியில் பிறந்த நீங்கள் ஆக்கவும் தெரிந்தவர்கள்; அழிக்கவும் தெரிந்தவர்கள். எதையும் எதிர்க்கவும் துணிந்தவர்கள். நீரோட்டம் போல போராட்டங்கள் தொடர்ந்தாலும், எதிர்நீச்சலில் வெற்றி பெறுபவர்களும் நீங்கள்தான். வளைந்து கொடுக்கத் தெரியாததால் சில வசதி, வாய்ப்புகளை வாழ்க்கையில் இழக்க நேரிடும். புரட்சி பேசத் தெரிந்த உங்களை யாரேனும் புகழ்ந்தால் இறங்கி விடுவீர்கள். தனியாக இருக்கும் நேரத்தில் தனித்துவத்தோடு யோசிக்கும் நீங்கள், நட்பு என்கிற பெயரில் கூட்டத்தோடு சேர்ந்தால் மாறிப்போவீர்கள்.
‘வாழ்க்கையில் எதையாவது சாதித்து விட்டுத்தான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று உறுதியோடு நாட்களை நகர்த்தும் நீங்கள், திடீரென இரக்கப்பட்டு யாரையேனும் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொள்வீர்கள். அறிவுச் சுரங்கமான பிரகஸ்பதியின் ஆளுமைத்திறன் அதிகமுள்ள தனுசு ராசியில் பிறந்த நீங்கள், ஊர்ப் பிரச்னை, உலகப் பிரச்னைகளையெல்லாம் தீர்த்து வைப்பீர்கள். வீட்டுப் பிரச்னை என்று வரும்போது, உங்கள் ஆலோசனைகளை யாரும் ஏற்பதில்லையே என்று வருந்துவீர்கள். புலியைப் பூனைபோல வளர்த்தால் கூட அதன் இயல்பான குணம் மாறாது என்பதைக் காலம் கடந்து, சிலரிடம் சூடுபட்டுத்தான் உணர்வீர்கள்.
உங்களின் ஆறாம் வீட்டிற்கு அதிபதியாக - அதாவது கடன், நோய், எதிரி ஸ்தானத்தைக் குறிக்கும் வீடான ரிஷப ராசிக்கு அதிபதியாக - களத்திரகாரகனான சுக்கிரன் வருகிறார். இந்த சுக்கிரனே லாப வீடான பதினோராம் வீட்டிற்கும் அதிபதியாக வருகிறார். இதனால், உங்களுக்கு எதிரி உருவான பின்புதான் நீங்கள் ஜெயிக்கத் தொடங்குவீர்கள். எதிரியே இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கை சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால், களத்திரகாரகன் என்கிற வாழ்க்கைத்துணை கிரகமான சுக்கிரன் ஆறாம் இடத்திற்குரியவராக இருப்பதால், வாழ்க்கைத்துணையோடு அடிக்கடி மோதல் தொடர்ந்துகொண்டே இருக்கும். ‘‘என்னை அவங்க புரிஞ்சிக்கவே இல்லை. சின்னச் சின்ன விஷயத்துலகூட மூக்கை நுழைக்கறாங்க. சொந்தக்காரங்க மத்தியில என்னை விட்டுக்கொடுத்து பேசறாங்க’’ என்று அடிக்கடி ஆதங்கப்படுவீர்கள்.
பெரிய பெரிய திட்டங்களை உள்மனதில் அசைபோட்டு யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ‘‘சாதாரண பிரச்னையைத் தீர்க்கத் தெரியாத நீங்க பெருசா என்ன சாதிச்சிடப் போறீங்க’ என்று மட்டம் தட்டி வாழ்க்கைத்துணை பேசுவார். தாய் என்கிற இரண்டெழுத்து உங்களுக்கு மந்திரம் போன்றது. ஆனால், வாழ்க்கைத்துணை வந்தவுடன் தாய்க்குப்பின் தாரமா, தாரத்திற்குப்பின் தாயா என்று தடுமாறுவீர்கள்.
பொதுவாகவே உங்களின் சத்ருஸ்தானாதிபதியாக சுக்கிரன் வருவதாலும், இதே சுக்கிரன் மூத்த சகோதர-சகோதரி ஸ்தானாதிபதியாகவும் இருப்பதாலும், பூர்வீக சொத்துகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். கோர்ட், கேஸ் என்று செலவுகளையும் அலைக்கழிப்புகளையும் சந்திக்க நேரிடும். வழக்குகள் நீண்டு கொண்டே செல்லும். ஃபேன்ஸி ஸ்டோர், ஒப்பனைப் பொருட்கள் போன்ற கடைகளைத் தொடங்கும்போது அதிக முதலீடு செய்யக் கூடாது. நான்கு ரூபாய் கையில் வைத்துக் கொண்டு நானூறு ரூபாய் பொருளை விலை பேசக் கூடாது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியத்தில் அதிகமாகக் கடன் வாங்கக் கூடாது. ‘‘சந்தோஷமா இருக்குறதுக்குத்தானே வாழுறோம்... மெதுவா கொடுத்தா போச்சு’’ என்ற அலட்சியம் கூடாது. ஆடம்பரச் செலவுகளுக்காகவே உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சம்பாதித்த பாதி பணம் காலியாகும். அதனால் அத்தியாவசிய செலவுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பதவி, பட்டம் என்று உங்களுக்குக் கொடுத்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
பிரபலங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். முன்பின் அறிமுகமில்லாத நபர்களாக இருந்தாலும், நீங்களாகச் சென்று அறிமுகப்படுத்திக் கொள்வீர்கள். பலநாள் பழகியவர்கள் போல நெருக்கம் காட்டுவீர்கள். ரகசியங்களை மறைத்து வைக்கத் தெரியாமல், எங்கேயாவது ஒரு இடத்தில் எல்லாவற்றையும் கொட்டுவீர்கள். அதனாலேயே உங்களைப் பற்றி நன்கு தெரிந்த நபரிடமே நீங்கள் ஏமாறுவீர்கள். சொந்தபந்தங்கள் கூட, உங்களை பார்த்தால் ஒரு பேச்சு... பார்க்காவிட்டால் ஒரு பேச்சு... என்றிருப்பார்கள். உங்களுக்குப் பிடித்தவர்களுக்காக எதையும் செய்யத் துணிவீர்கள். நீங்கள் ஒருவரை எதிரியாக நினைத்து விட்டால், வாழ்நாள் முழுவதும் அவர்கள் செய்த துரோகத்தை மறக்கவும் மன்னிக்கவும் மாட்டீர்கள்.
எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், அவர்கள் செய்த தவறை முகத்துக்கு நேராக சுட்டிக் காட்டவும் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொஞ்சம் குறைவுதான். வாகனத்தில் செல்லும்போது கூட யாரேனும் உங்களை முந்திச் சென்றால் உடனே கோபம் வரும். அக்கம்பக்கம் இருப்பவர்களிடமும் நீங்கள் ஒத்துப் போக மாட்டீர்கள். எப்போதும் ஒரு உரசல் போக்கு இருந்தபடி இருக்கும். சில சமயங்களில் உங்களின் பிடிவாத குணமே உங்களுக்கு எதிரியாகும். எப்போதும் நடுநிலையாகவே இருக்க விரும்புவீர்கள். அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும் உங்களுக்கு யாரேனும் அறிவுரை கூறினால் பிடிக்காது. உங்களின் சுதந்திரத்திலும் மற்றவர்கள் தலையிடுவதை விரும்ப மாட்டீர்கள்.
போராட்டம் என்பது பழகி விடுவதால், வாழ்வில் பல சமயங்களில் சந்தோஷத்தைத் தொலைத்து விட்டு நிற்பீர்கள். ‘‘என்ன சம்பாதிச்சி என்ன... எதுக்காக வாழறோம்...’’ என்றெல்லாம் புலம்பும்படியாக இருக்கும். எல்லாம் இருந்தும் ஒரு வெற்றிடம் இருக்கும். ஜெயித்ததற்கான அர்த்தத்தை உணராது இருப்பீர்கள். எப்போதும் மனம் ரணமாக இருப்பதைப் போல உணர்வீர்கள். எவ்வளவுதான் முன்னேறினாலும் பழைய கசப்பான அனுபவங்கள், சம்பவங்களை நினைத்து வருந்துவீர்கள்.
அலுவலகத்தில் உங்கள் உயரதிகாரி பெண்ணாக இருந்தால், அவர்களோடு வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். பொதுவாகவே உங்கள் ராசிநாதனான குருவிற்கு எதிர்மறை கிரகமாக சுக்கிரன் வருவதால், பெண்கள் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் அத்துமீறி மூக்கை நுழைக்காதீர்கள். சிலருக்காக இரக்கப்பட்டு வம்பில் சிக்கிக் கொள்வீர்கள். அதனாலேயே வாழ்க்கைத்துணையுடன் கூட எப்போதும் ஒரு சின்ன ஈகோ பிரச்னை வந்துகொண்டே இருக்கும்.
உணவுப் பழக்கங்களில் அதீத கவனம் வேண்டும். பெரும்பாலும் வெளி உணவுகளான பீட்சா, பர்கர், துரித உணவுகள், பால் பொருட்கள் சம்பந்தமான உணவுகளையே விரும்பி உண்பவராக இருப்பீர்கள். எனவே அங்கங்கே கொழுப்புக் கட்டிகள் வர வாய்ப்பிருக்கிறது. முதுகுத் தண்டு வடத்தில் திடீரென்று வரும் வலியை சாதாரணமாக விட்டு விடாதீர்கள். உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. அதேபோல சிறுநீர்த் தொற்று, பாலியல் தொடர்பாக சிறு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டாலும் கூட மருத்துவரின் ஆலோசனையை நாடுங்கள். பொதுவாக உங்களின் சருமம் கூட சென்சிட்டிவாக இருப்பதால், பிறர் உபயோகித்த ஆடையை நீங்கள் அணிவது கூடாது. உடனே அலர்ஜி வந்து விடும். அதேபோல் சென்ட், பாடி ஸ்பிரே உபயோகிப்பதாக இருந்தாலும், நன்றாக இருக்கிறது என்று அதிக காசு கொடுத்து வாங்குவது பெரிதல்ல; உங்களின் சருமத்திற்கு பாதிப்பு தராமல் இருக்குமா என்று பார்த்து உபயோகிப்பது நல்லது. முகத்தை முறையாகப் பராமரியுங்கள். முகத்திற்கு பொலிவு தரக்கூடிய க்ரீம், ஃபேஸ்வாஷ் என்று கண்டதையும் வாங்கிப் போட்டுக் கொண்டிருக்காதீர்கள்.
நீங்கள் கடன் வாங்க வேண்டுமெனில், காலி வீட்டு மனை அல்லது விளைநிலத்தை வங்கியில் அடமானம் வைத்து வாங்குங்கள். கட்டிய வீட்டுப் பத்திரத்தை அடமானமாக வைத்து கடன் வாங்கினால் வீட்டை மீட்பது கஷ்டம். தங்க நகைகளை வைத்தும் கடன் வாங்கலாம்.
வாகனகாரகனான சுக்கிரன் 6ம் இடத்திற்குரியவராக வருவதால், வேகம் கூடவே கூடாது. வாகனம் வாங்கும்போது நல்ல கன்டிஷனில் இருக்கிறதா என்றெல்லாம் பார்த்து வாங்குங்கள். பழைய வாகனம் வாங்குவதைக் கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். உங்கள் பழைய வாகனத்தை விற்பதானாலும், முறைப்படி எல்லா ஆவணங்களையும் வாங்குபவரின் பெயருக்கு உடனே மாற்றிக் கொடுத்து விடுங்கள். லைசென்ஸ், இன்சூரன்ஸ் என்று வாகனத்திற்குரிய எல்லாவற்றையும் முறையாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அபராதம் கட்ட வேண்டி வரும். தூரத்துப் பயணங்கள் செல்லும்போதெல்லாம் சொந்த வாகனத்தில் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
நீங்கள் சினிமா உள்ளிட்ட கலைத்துறையில் அதிக முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. எவரால் லாபம் அதிகரிக்கிறதோ, அவரே உங்களுக்கு எதிரியாகவும் மாறுவார். உங்களின் முதல் எதிரியே உங்களை முன்னேற்றவும் செய்வார். எழுச்சிக்குரிய கிரகமாக சுக்கிரன் வருவதால் பழைய விஷயங்களுக்கு புதிய முலாம் பூசுவீர்கள். எப்பொழுதுமே சிந்தனையில் நவீனத்துவம் இருக்கும். சின்னதாக ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், அதை சரியாகப் பயன்படுத்தி போராடி முன்னேறுவீர்கள். சொந்த வீட்டை பார்த்துப் பார்த்து கட்டுவீர்கள்.
அபார்ட்மென்ட்டில் வீடு வாங்குவதாக இருந்தால், நீங்கள் வாங்கும் தளத்துக்கு முறைப்படியான அரசாங்க அனுமதிகளைப் பெற்று கட்டிடம் கட்டப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்பது நல்லது. உங்கள் சொந்த மனையில், நீங்களே வீடு கட்டுவதாக இருந்தால் முறைப்படி பிளான் அப்ரூவல் பெற்ற பிறகே தொடங்க வேண்டும். வீடு கட்டும் இடத்தில் அழகான மரங்கள் இருந்தால் வெட்டுவதற்கு யோசிப்பீர்கள். நீங்கள் ஆசைப்படும் பொருள், உங்களுக்கு சுலபமாகக் கிடைத்தால் அது நிலைக்காது; உங்களுக்கும் சுவாரஸ்யம் இல்லாதது போல் தோன்றும்.
பால்ய நண்பராக இருந்தாலும் உங்களுக்கு ஒரு கஷ்டம் வரும்போது உதவி கேட்கத் தயங்குவீர்கள். ‘‘நாம கஷ்டத்துல இருக்கறது நண்பனுக்கு சொல்லித் தெரியக் கூடாது. தானா உதவி செய்ய முன் வரணும்’’ என்பீர்கள். சில சமயங்களில் சிலரின் நன்றிகெட்ட தனத்தை நினைத்து வருந்துவீர்கள். அதேபோல் மற்றவர்கள் சொல்லுக்கு இடம் கொடுக்காதபடி உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வேலைகளை சரியாக முடிப்பீர்கள். அரசியலை அறவே வெறுப்பீர்கள். ‘‘யார் ஆட்சிக்கு வந்தாலும் திண்டாடுறது ஜனங்கதான். இதுல இவங்க வந்தா என்ன, அவங்க வந்தா என்ன...’’ என்றெல்லாம் அடித்தட்டு மக்களுக்காக பரிந்து பேசுவீர்கள்.
உங்களுக்கு கடன், நோய், எதிரி என்று எந்தப் பிரச்னை வந்தாலும் திருவையாறு ஐயாரப்பர் கோயிலில் அருளும் ஸ்ரீஹரி குரு சிவயோக தட்சிணாமூர்த்தியை தரிசியுங்கள். உங்கள் துயரம் ஆதவனைக் கண்ட பனியாய் மறைந்து போகும். இந்த தட்சிணாமூர்த்தியின் வலப்பாதத்தில் ஆமையினுடைய உருவம் தென்படும். கூர்ம அவதாரம் எடுத்த மகா விஷ்ணு இத்தலத்தில் இவரை வணங்குவதாக ஐதீகம் நிலவுகிறது. திருவையாறு எனும் இத்தலம், தஞ்சாவூரிலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நன்றி
ஜோதிடர் சுக்கிரன்
+919003808206
+919003808206
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக