கும்ப ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்
‘நிறை குடம் தளும்பாது; குறை குடம் கூத்தாடும்’ என்கிற பழமொழி முழுமையாக உங்களுக்குத்தான் பொருந்தும். உங்களால் அறிவுஜீவியைப்போல அமைதியாக இருக்கவும் முடியும்; படிப்பறிவில்லாதவர் போல சபையில் பேசியும் சிக்கிக் கொள்வீர்கள். குடத்திற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்தால் தெரியும். அதுபோல உங்களை அறிந்தவர்கள்தான் உங்களின் மறுபக்கத்தையும் அறிவார்கள். ‘‘உங்களுக்குள் இப்படியொரு மனுஷனா’’ என்று எண்ணுமளவிற்கு வியத்தகு மனிதராக தன்னை மறைத்துக் கொண்டு வலம் வருவீர்கள்.
பன்னிரெண்டு ராசிகளுக்குள் கும்பத்தையும், மகரத்தையும் சனிதான் ஆள்கிறது. ஆனாலும் மகரத்தில் பிறந்தவர்களுக்கும், கும்பத்தில் பிறந்தவர்களுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. மகரத்தார் போல கும்பத்தார் வேகமாக இருக்க மாட்டார்கள். ‘இருக்கட்டும்... பார்க்கலாம்’ என்று பாதி வேலையை தள்ளிப் போடுவார்கள். ஆயிரம் விஷயங்களை அறிந்து வைத்திருந்தாலும், சரியான தூண்டுதல் இல்லாமல் எதையுமே வெளிப்படுத்த மாட்டீர்கள்.
நீங்கள் சனி எனும் நீதி கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்திருப்பதால் நியாயத்தை பேச வேண்டும். மாறிப் பேசினால் சிக்கிக் கொள்வீர்கள். உங்களின் கடன், எதிரி, நோய் ஸ்தானத்திற்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். இரண்டரை நாட்களுக்கு ஒருமுறை சந்திரன் மாறிக் கொண்டே இருப்பதால், பௌர்ணமிக்கு முன்பும் பின்புமாகவே உங்களின் மனோநிலை மாறிக் கொண்டேயிருக்கும். கடன் கேட்டால் கூட, ‘‘ரெண்டு நாள்ல திருப்பிக் கொடுத்துடறேன்’’ என்று சொல்லித்தான் கேட்பீர்கள். பிறகு ரெண்டு வாரம், ரெண்டு வருஷம் என்று இரண்டிரண்டாக நீண்டுகொண்டே இருக்கும். உங்களை சீண்டிப் பார்க்கும் வரை எல்லோரும் உங்கள் நண்பர்கள்தான். அதில் கூட தொடர்ந்து யாரையும் எதிரியாகப் பார்க்க மாட்டீர்கள்; பார்க்கவும் தெரியாது. இன்னும் சரியாகக் கூறினால் உங்களின் எதிரியே உங்களின் அதீதமான கற்பனைத்திறன்தான். அதிலும் பகல் கனவைக் காண வைத்தே சந்திரன் உங்களைக் கெடுப்பார். ‘‘இந்த பிசினஸை இப்படி ஆரம்பிச்சு அங்கங்க டெவலப் பண்ணி, சிட்டிக்கு நடுவுல பெரிய பில்டிங் கட்டி...’’ என்று எப்போதும் ஒரு கனவு உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். கனவை நனவாக்க நடைமுறையில் உழைக்க வேண்டும் என்பதையே அவ்வப்போது மறந்து விடுவீர்கள். கனவை விட்டு நிஜ வாழ்க்கைக்கு வரும்போது, அது தரும் வெப்பத்தை தாங்காது ஓடுவீர்கள்.
சந்திரன் மாத்ரு ஸ்தானாதிபதி என்றழைக்கப்படும் தாய் ஸ்தானத்திற்கு உரியவராகவும் வருகிறார். இந்த சந்திரன் உங்களுக்கு பகை ஸ்தானத்திற்குரியவராக வருவதால், தாயார் எதிரியாவாரா என்று யோசிக்கலாம். ஆனால், தாயார் உங்களுக்கு எதிரியாக மாட்டார். ஏனெனில், உங்கள் ராசிக்கு நான்காம் இடமான தாய் ஸ்தானத்தைக் குறிப்பிடும் கிரகமான சுக்கிரன் சனிக்கு நட்பாக வருகிறார். எனவே ஒன்றும் பிரச்னை இருக்காது. என்ன... படிப்பு காரணமாகவோ, அல்லது வேலைக்கு செல்லும் வயதிலோ தாயாரைப் பிரிந்திருப்பீர்கள். தாயாரோடு கருத்துமோதல்கள் வந்து செல்லும்.... அவ்வளவுதான்! சந்திரன் எதிரி ஸ்தானமாக இருப்பதால் மனதைக் குழப்பி அலை பாய வைப்பார். சரியோ, தவறோ... எந்த முடிவை எடுத்தாலும் அதிலிருந்து மாறாதீர்கள். எப்போதுமே சரியாகத்தான் நாம் முடிவெடுக்க வேண்டும் என்றெல்லாம் எந்தவித இறுக்கத்தையும் கொண்டிருக்காதீர்கள். சந்திர கிரகண நாட்களிலெல்லாம் எங்கேனும் புனித தலம் சென்று வாருங்கள்.
எப்போதுமே நீங்கள் நீர்நிலைகளுக்குச் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்பது வாழ்க்கைக்குண்டான பழமொழி மட்டுமல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எப்போதும் கபம் இருந்து கொண்டே இருக்கும். உணவுக் குழலுக்கும் மூச்சுக்குழலுக்கு இடையே தொந்தரவு இருக்கும். அதனால் கும்பகர்ண குறட்டை இருக்கும். அடிக்கடி பார்வையை சரி செய்து கொள்ள வேண்டும். புகழ் போதை, முகஸ்துதி போதை நிறைய இருந்தாலும், மது போதையை மட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள். ‘‘வெறும் பார்லி வாட்டர்தானே’’ என்று தொடங்கினால், மொடாக்குடியனாக வலம் வருவீர்கள்.
கையெழுத்தை மாற்றி மாற்றி போடக் கூடாது. ஏடிஎம் செல்லும்போது பின் நம்பரை மறந்து போவீர்கள். புளியோதரையை அதிகமாக உண்ணாமல் இருந்தால் நல்லது. அது மனதை இன்னும் குழப்பும். பணத்திற்கு எப்போதுமே ஒரே ஆளை நம்பிக் கொண்டு இருக்காமல், பல்வேறு வழிகளைக் கையாள வேண்டும். ‘‘அவருகிட்ட கேட்டிருக்கேன். தலையை அடகு வச்சாவது தந்துடறேன்னு சொல்லியிருக்கார்’’ என்று ஒருவரையே நம்ப வேண்டாம். உங்களின் மாபெரும் திறமையே, பொய்யை பொருந்தச் சொல்வதுதான். சர்வ சகஜமாக சிறிய மற்றும் பெரிய பிரச்னைகளை சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பொய் சொல்லி சமாளிப்பீர்கள். ‘‘அவன் அதுக்குக் காரணமே இல்லை. அவன் எந்த தப்பும் பண்ணலை. அவனைத் தூண்டிவிட்டவன் வேறொருத்தன்’’ என்று சொல்லி, சூழ்நிலையை சமாதானமாக மாற்றுவீர்கள்.
இளைய சகோதர, சகோதரிக்கு நீங்கள் எத்தனைதான் உதவிகள் செய்தாலும் திடீரென்று உறவுகளை முறித்துக் கொள்வீர்கள். செவ்வாய் உங்கள் ராசியாதிபதியான சனிக்கு பகையாக வருவதால் எமோஷனலாக முடிவுகளை எடுக்கத் தூண்டுவார். ஆறாம் இடத்திற்கு அதிபதியான சந்திரனே, அழகு, ஆடை, அலங்காரம் போன்றவற்றிற்கு உரியவராகவும் இருக்கிறார். எனவே, கடன் வாங்கியாவது ஃபேன்சி ஸ்டோருக்குச் சென்று ஒப்பனைப் பொருட்களை வாங்கி வருவீர்கள். வீட்டு பட்ஜெட்டில் இதற்கென்றே குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைப்பீர்கள். சில சமயம் இதுவே ஒவ்வாமையைக் கொண்டு வரும். ஏதோ சில காரணங்களால் தந்தையை பிடிக்காமல் போகும். அதை வெளியில் சொல்லாமல் பூட்டி வைப்பீர்கள். அவர் செய்த தொழிலைத் தட்ட முடியாது தொடர்ந்து வெற்றியும் பெறுவீர்கள். யார் என்ன எதிர்த்தாலும் உங்கள் பாதையில் நீங்கள் பயணிப்பதை யாராலும் தடுக்க முடியாது. உங்கள் ராசியாதிபதியான சனி, பன்னிரெண்டாம் இடமான மகரத்திற்கும் அதிபதியாக வருகிறார். மனசுக்குப் பிடித்தவர்களாக இருந்தால் அள்ளிக் கொடுப்பீர்கள். திடீரென்று நினைத்துக் கொண்டு வெளியூர்களுக்கு பயணப்படுவீர்கள். ராசியாதிபதியே பன்னிரெண்டாம் அதிபதியாக வருவதால் மறுபிறவி இல்லை என்பது ஆன்மிக வாழ்க்கையில் உங்களுக்குப் பொருந்தும். இதனாலேயே, பெரும்பாலும் நேர்மையாகவே சம்பாதிப்பீர்கள். ‘‘நான் என்ன பண்றேன்னு கடவுளுக்குத் தெரியும்’’ என்பீர்கள்.
கும்பம் என்பதே அடக்கி வைத்திருக்கும் சக்தியைக் குறிப்பது. அதை சந்திரன் என்கிற மனோகாரகன் தனது எதிர்மறைக் கதிர்வீச்சுக்களால் மறைத்து வைத்திருப்பான். தீர்மானமாக ஒன்றை செய்ய முற்படும்போது பல்வேறு குழப்ப சிந்தனைகள் உங்களைத் துளைத்தெடுத்துச் செல்லும். காரியத்தை செய்ய விடாமலேயே முடக்கும். ‘‘திடீர்னு எதுக்கு இந்த பிசினஸைப் போய் செய்யணும்? நஷ்டம் வந்தா நம்மால முடியுமா...’’ என்று உங்களை துவளச் செய்யும் எண்ணங்களால் ஆக்கிரமிக்கப்படுவீர்கள். பிரச்னைகள் எனில் அந்த இடத்தில் முதலில் ஆஜராவது நீங்கள்தான். சண்டைக்காரர்களை விட உங்களின் குரல்தான் ஓங்கி ஒலிக்கும். ‘‘உங்களை மாதிரி யாராவது உண்டா’’ என்றால் சொத்தில் ஒரு பங்கை கூட எழுதி வைக்கும் அளவிற்கு புகழுக்கு மயங்குவீர்கள். அதனால், தேன் தடவிய பேச்சுகளுக்கு எப்போதுமே செவி சாய்க்காதீர்கள். எச்சரிக்கையோடு இருங்கள். தேவையில்லாமல் உங்களை யாரும் புகழ மாட்டார்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளாது இருப்பது நல்லது. அதேபோல இரவு நேரப் பயணங்களில் பக்கத்து சீட்காரரோடு தேவையில்லாமல் பேசக் கூடாது. உடைமைகளை கவனத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு சிந்தனை மனதைப் போட்டு உழட்டிக் கொண்டே இருப்பதால் ரத்த அழுத்தம் ஏற்படும். பூமிகாரகனான செவ்வாய் உங்களின் ராசியாதிபதியான சனிக்கு பகையாக இருப்பதால் காலியிடங்களை வாங்குவதை விட கட்டிய வீட்டை வாங்குவது நல்லதாகும். கடன் வாங்கும்போது நகையையோ, வீட்டுப் பத்திரத்தையோ வைத்து கடன் வாங்குங்கள். உடனடியாக திருப்பிக் கொடுப்பதாக உறுதியளிக்காதீர்கள்.
திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளாது இருப்பது நல்லது. அதேபோல இரவு நேரப் பயணங்களில் பக்கத்து சீட்காரரோடு தேவையில்லாமல் பேசக் கூடாது. உடைமைகளை கவனத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு சிந்தனை மனதைப் போட்டு உழட்டிக் கொண்டே இருப்பதால் ரத்த அழுத்தம் ஏற்படும். பூமிகாரகனான செவ்வாய் உங்களின் ராசியாதிபதியான சனிக்கு பகையாக இருப்பதால் காலியிடங்களை வாங்குவதை விட கட்டிய வீட்டை வாங்குவது நல்லதாகும். கடன் வாங்கும்போது நகையையோ, வீட்டுப் பத்திரத்தையோ வைத்து கடன் வாங்குங்கள். உடனடியாக திருப்பிக் கொடுப்பதாக உறுதியளிக்காதீர்கள்.
உள்மனதில் உறங்கிக் கிடக்கும் மிருகத்தை உசுப்பிவிடும் இடமே ஆறு ஆகும். உங்களுக்கு ஆறாம் இடமாக சந்திரன் வருவதால் மனம் சொல்வதை விட மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ‘‘எனக்கு என்ன தோணுதோ அதுதான் சரி’’ என்றோ, ‘‘எனக்குத் தோணறதை நான் பேசறேன்’’ என்றெல்லாம் நீங்கள் பேசக் கூடாது. ‘‘பெரியவங்க இப்படி இந்த விஷயத்தை பார்க்கறாங்க... இப்படி சொல்லியிருக்காங்க...’’ என்றெல்லாம் பேசினால் வெற்றி பெறுவீர்கள். எதிராளியின் பலத்தை உயர்வாகப் பேசிவிட்டு உங்களைப் பற்றிப் பேசுங்கள். நீங்கள் எளிதாக வெற்றி பெறுவீர்கள்.
இந்த ஆறாம் இடம் என்பது மறைவு ஸ்தானம் ஆவதால், அதற்கு சந்திரன் அதிபதியாக வருவதால், மிகச் சிறந்த உளவியல் மருத்துவராக உங்களில் பலர் வருவீர்கள். நஞ்சை வைத்துத்தான் நஞ்சை முறியடிக்க முடியும் என்பதுபோல மனிதர்களின் மனங்களை அவர்களோடேயே சென்று மாற்றக் கூடிய நுட்பமான திறனை நீங்கள் பெற்றிருப்பீர்கள். நீங்கள் தொடர்ந்து போராடாமல் விட்டு விட்டு முயற்சித்தால் எளிதாக வெற்றி பெற முடியும். உங்களுக்கு தீர்க்க முடியாத பிரச்னையாக உங்களின் மனம்தான் இருக்கும். உங்களின் வாக்கை உங்களால் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாது. உங்களின் குழப்பம்தான் உங்களை வல்லவனாகவும் மாற்றும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் கியர் இல்லாத வண்டியைத் தேர்ந்தெடுங்கள். கார் வாங்கினால் டிரைவர் வைத்துக் கொள்ளுங்கள். வாகனங்களை இயக்கும்போது மனம் அலைபாய்ந்தபடி இருக்கும். பலவகையான சிந்தனைகள் வந்து மோதியபடி இருக்கும். இதனால் கவனம் சிதறும் அபாயம் அதிகம். பழைய வாகனங்களை வாங்காது புதியதாகவே வாங்குங்கள்.
உங்களின் சொந்த ஜாதகத்தில் ராசி அல்லது லக்னத்திற்கு எட்டிலோ, பன்னிரெண்டிலோ சந்திரன் மறைந்தால் விசேஷமாகும். இதனால் சந்திரனால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். சொந்த ஜாதகத்தில் சந்திரன் செவ்வாயோடு சேர்ந்திருந்தால் வீடு, சொத்து மூலமாக திடீரென்று நன்மைகளைப் பெறுவீர்கள். சந்திரன் ராகு, கேதுவோடு சேர்ந்திருந்தால் கெடு பலன்கள் குறையும். உங்களுக்கு சந்திரன் பகையாக வருவதால் தாயாருக்காக அடிக்கடி மருத்துவச் செலவுகள் செய்ய வேண்டி வரும். மேலே சொன்னதெல்லாம் சொந்த ஜாதகத்தைப் பொறுத்த விஷயமாகும்.
உங்களுக்கு கடன், நோய் மற்றும் எதிரிகள் பிரச்னையைத் தீர்க்கும் தலமே, சென்னையை அடுத்த திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில். இந்த ஆலயத்தில் வழிபட்டால், சந்திரனால் ஏற்படும் எல்லா பாதிப்புகளும் குறையும். வடிவுடையம்மனையும், படம்பக்கநாதரையும் தரிசியுங்கள். உங்கள் பிரச்னைகள் தீர்வதை அனுபவபூர்வமாக உணர்வீர்கள்.
நன்றி
ஜோதிடர் சுக்கிரன்
+919003808206
+919003808206
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக