வியாழன், ஜனவரி 21, 2016

கடக ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன


கடக ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன
மென்மை, தன்மை, கனவுகள் என்று எப்போதும் இதமாகவே மனதை வைத்துக் கொள்ள விரும்பும் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். சாதுர்ய பேச்சால் சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல வளைந்து கொடுத்து எல்லாவற்றிலும் வாகை சூடுவீர்கள். புள்ளி விவரங்களுடன் கருத்துக்களை அள்ளி வீசிப் பேசுவதெல்லாம் மிகவும் பிடிக்கும். வீடு, மனை வாங்குவதற்கு முன்பு முதலில் வானவில்லையே வர்ணமாக தீட்ட முடியுமா என கனவு காணுவீர்கள். வரும் முன் காப்போம் என்கிற பழமொழிக்கும் உங்களுக்கும் வெகுதூரம். ‘‘வரும்போது பார்த்துக்கலாம்’’ என்பதுதான் உங்களின் மனோநிலையாகும். காற்று வீசும் பக்கம் நகரும் பாய்மரப் படகுபோல வாழ்க்கை செலுத்தும் வழியில் செல்வீர்கள். வாழ்க்கையை வளைக்காமல் அதன் போக்கில் சென்று வாழ ஆசைப்படுவீர்கள். கிடைக்கும் சுகங்களையும் சந்தர்ப்பங்களையும் ஒத்திப் போடாமல் உடனே அனுபவிப்பீர்கள்.
இப்படிப்பட்ட உங்களுக்கு ஆறாம் வீடு என்றழைக்கப்படும் கடன், வழக்கு, எதிரி ஸ்தானத்திற்கு அதிபதியாக தனுசு குரு வருகிறார். இது போர்க் கருவி வீடான கோதண்டம் எனும் வில்லாக வருவதால், கோபப்பட்டால் பொல்லாதவர்களாகி விடுவீர்கள். தேவைப்பட்டால் பழிவாங்கவும் தயங்க மாட்டீர்கள். உங்களின் கடன், எதிரி, நோய் ஸ்தானத்திற்கு அதிபதியான அதே குருவே, தந்தையார் ஸ்தானமான ஒன்பதாம் இடத்திற்கும் அதிபதி. எனவே உங்களின் முதல் ஹீரோவும் அப்பாதான்; வில்லனும் அப்பாதான். குரு ஒரு நல்ல வீட்டிற்கும் கெட்ட வீட்டிற்கும் உரியவராக வருவதால், எதிரிகள் உருவாக ஆரம்பித்தவுடன்தான் உங்களின் வளர்ச்சியும் அசுரத்தனமாக இருக்கும். ‘‘அன்னைக்கு அவன் அவமானப்படுத்தலைன்னா நான் இன்னைக்கு இவ்ளோ தூரம் வளர்ந்து இருக்கவே மாட்டேன்’’ என்பீர்கள். யார் எதிர்த்தாலும், அவர்களின் பலவீனத்தை வைத்து அவர்களை வீழ்த்துவீர்கள்.
ஆறாம் இடத்திற்கு அதிபதியாக குரு வருகிறார். ‘‘எவ்வளவு வந்தாலும் கையில தங்க மாட்டேங்குது. சரியான ஓட்டை கையா இருக்குப்பா’’ என்பீர்கள். தர்ம காரியங்களுக்கு அந்தப் பணம் சென்றால் நல்லது. ஆறாம் இடத்திற்கு குரு அதிபதியாக வருவதால், இப்படி நல்லவிதமாக செலவு செய்வதே பரிகாரமாகவும் மாறிவிடும். நோய், நொடி வந்தால் படுத்த படுக்கையாக இருப்பது பிடிக்காது. கல்லீரல், பல், கால் வலி என்று அடிக்கடி வந்து நீங்கிக் கொண்டே இருக்கும். எவர் உங்கள் கொள்கைகளை ஆதரிக்கிறாரோ, அவரே எதிர்ப்பாளராகவும் மாறுவார். யாரேனும் உங்களை மிகையாகப் புகழ்ந்தால் எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் உங்களுக்கு குழி தோண்டுகிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.
எதிரியின் புத்திசாலித்தனத்தையும் விமர்சனங்களையும் உள்ளூர ரசிப்பீர்கள். உங்களின் எதிரி ஸ்தானத்திற்கு உரியவராக தனகாரகனான குருவே வருவதால், பணம் கொடுக்கல்-வாங்கலால்தான் எல்லா பிரச்னையும் வரும். ‘கேட்டுக் கெட்டது உறவு. கேளாமல் கெட்டது கடன்’ என்பது உங்களுக்குத்தான் பொருந்தும். தந்தையை மிஞ்ச வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்கும். அப்பாவை கொஞ்சம் எதிரியாக நினைத்தாலும், உங்களின் ரோல்மாடலே அவர்தான். நீங்கள் நகைக் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. தனியார் வங்கிகளில் கடன் வாங்குங்கள். அதிலும் இன்டர்நேஷனல் வங்கியாக இருந்தால் மிகவும் நல்லது.
ஆறாம் இடத்திற்குரியவராக குரு வருவதால் பொதுவாகவே ஒரு விஷயத்தை உபதேசமாகவும் அறிவுரையாகவும் கூறுபவராக குரு இருக்கிறார். ஆனால், இங்கு உங்களால் கற்றுக் கொண்டவரே உங்களுக்கு எதிரியாவார்கள். அலுவலகத்தில் எல்லா விஷயங்களிலும் எதிர்ப்பு காட்டிக் கொண்டிருக்கக் கூடாது. எல்லோருக்கும் எல்லாமும் தெரியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், ‘‘அவர்கிட்ட ஏதாவது கேட்டா உடனே குச்சி எடுத்துக்கிட்டு பாடம் நடத்த ஆரம்பிச்சிடுவாரு’’ என்பார்கள். ‘‘இவரு யாரு எனக்கு சொல்லிக் கொடுக்கறதுக்கு’’ என்கிற மனோநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். உங்கள் அலுவலகத்தில் உங்களை யார் வேலைக்கு சேர்த்து விட்டாரோ, அவரே உங்களுக்கு எதிராகவும் மாறுவார்.
அதாவது உங்களின் நலன் விரும்பி என்று யாரை இத்தனை வருடங்கள் நினைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவரே உங்களின் நலனை விரும்பாதவராகவும் மாறுவார். இந்த ராசியைச் சேர்ந்த பலர் சிறுவயதில் தன்னுடைய ஆசிரியரைப் பற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் கூறும் சூழ்நிலை வரும். பள்ளியில் சப்ஜெக்ட்டை விட அதை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்தான் முக்கியம் என நினைப்பீர்கள். சந்திரசேகரன், மனோகரன் போன்ற பெயருள்ள நபர்கள் உங்களுக்கு ராசியாக இருப்பார்கள்.
பெரிய தொழில் மற்றும் வியாபாரங்களில் கூட்டு வைத்தால் எச்சரிக்கையோடுதான் இருக்க வேண்டும். அதிலும் உங்கள் தந்தையார் வழியாக சேரும் நண்பர்கள் எனில் கொஞ்சம் கூடுதல் ஜாக்கிரதை உணர்வு தேவை. தந்தையின் தொழிலை ஏற்று நடத்தும்போதும் பிரச்னைகள் வந்து நீங்கியபடி இருக்கும். ‘‘அப்பா மாதிரி இவரு இல்லை’’ என்று சொல்வார்கள். ஜுவல்லரி, பைனான்ஸ் கம்பெனி, வேர்க்கடலை மண்டி என்று தொழில் செய்பவர்கள் இந்த ராசியில் இருந்தால், உங்கள் வாழ்க்கைத்துணை பெயரில் வியாபாரத்தை நடத்துவது நல்லதாகும். ஆனாலும் உங்களின் தலையீடு இல்லாமல் எதுவும் நடக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருங்கள்.
தங்கம் வாங்கும்போதும் அதை விற்கும்போதும் கவனத்தோடு இருக்க வேண்டும். இல்லையெனில் நஷ்டத்தை சந்திப்பீர்கள். யாரேனும் ‘பழைய நகைகளை வைத்துக் கொண்டு பணம் தாருங்கள்’ என்றால் ஒப்புக் கொள்ளாதீர்கள். ஏனெனில், போலீஸ், கேஸ் என்று வேறுமாதிரியாகப் போகும். இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்க நகைகளை அடிக்கடி தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருப்பார்கள். யோகாதிபதியான குருவே சத்ரு ஸ்தானாதிபதியாக வருகிறார். நண்பனே எதிரியாவதெல்லாம் அரசியலில் சகஜமோ இல்லையோ... உங்கள் வாழ்க்கையில் சகஜமாகிப் போகும். மூத்த அதிகாரியாக இருந்தாலும், மேலதிகாரியாகவே இருந்தாலும், யாரோடும் அதீத நெருக்கம் காட்டாமல் இருப்பது நல்லது.
உழைப்புக்கேற்ற பதவி உயர்வு எப்போதுமே உங்களுக்குக் கிடைக்காது. சாதாரண பதவி உயர்வுகளைக் கூட நீதிமன்றம் வரை சென்று ஜெயித்துத்தான் பெறுவீர்கள். உங்களுக்குப் பின்னால் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கெல்லாம் பதவி உயர்வு வருவதை பார்த்து வருத்தப்பட்டு போராடிப் பெறுவீர்கள். அதேபோல அரசியல்வாதிகள், அரசாங்க உயர் அதிகாரிகள் உங்களைப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வார்கள். அவர்களை முழுவதும் நம்பி காரியங்களில் இறங்குவது அவ்வளவு உகந்ததல்ல. ஏனெனில், எப்போதுமே பொதுக் காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அப்படி நல்லது செய்யப்போய் பொல்லாப்புதான் தேடிவரும். எனவே, ‘அவர் சொன்னார்...’, ‘இவர் சொன்னார்...’, ‘நிச்சயம் செய்து தருகிறேன்’ என்றெல்லாம் வாக்குறுதி தராதீர்கள். தேர்தல் நேரத்தில் உங்களை பயன்படுத்திக் கொண்டு விட்டுவிடலாம். அதேபோல எங்கேனும் ஒரு நோட்டுக்கு இரண்டு நோட்டு என்று பணப்பட்டுவாடா நடந்து உங்களை ஈடுபடுத்தத் துணிந்தால் உடனே விலகி விடுங்கள். ஏனெனில், அதுபோன்ற நபர்கள் யதேச்சையாக உங்களிடம் வரக்கூடும்.
வாகனங்களில் உள்ள டயர் மற்றும் பிரேக் சமாசாரங்களை அவ்வப்போது செக் செய்துகொள்ளுங்கள். பயணங்களில் பழம் நறுக்குவதற்குக் கூட கூர்மையான ஆயுதங்களை எடுத்துச் செல்லாதீர்கள். ஆயுதங்கள் உங்களை ஏதேனும் சிக்கலில் மாட்டிவிடும். உங்களின் ராசியாதிபதியாக சந்திரன் வருகிறார். எதிலுமே சமச்சீரற்ற மனோநிலைதான் இருக்கும். திடீரென்று நண்பர்களோடு இழைவீர்கள். குழைவீர்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் அவர்கள் கேட்காமலேயே தலையிடுவீர்கள். இதனால் நெருங்கிய நண்பர்களை இழப்பீர்கள். ‘‘எனக்குப் பிடிக்கலைன்னா அவங்க நிழல் கிட்டக்கூட நான் நிக்க மாட்டேன்’’ என்பீர்கள். நீங்கள் ஜலராசி என்கிற கடகத்தில் பிறந்திருப்பதால், நீர் சம்பந்தப்பட்ட ஒவ்வாமை இருந்து கொண்டே இருக்கும். வீசிங் அவ்வப்போது வந்துபோகும். மஞ்சள் காமாலை அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரைப் பாருங்கள். சருமத்தில் ஏற்படும் அலர்ஜியால் தோல் பாதிக்கப்படும். கந்தகம், இரும்பு போன்றவை நீரில் கலந்திருந்தால் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. சிறுநீரகக் கல் இருக்கிறதா என்று டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
எந்த விஷயத்தையுமே கடைசி நேரத்தில் முடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். குழந்தைகளின் கல்விக் கட்டணம், குடிநீர் வரி போன்றவற்றை முன்னரே கட்டிவிடுவது நல்லது. ‘‘என்னை நம்பி அவரு இறங்கிட்டாரு’’ என்றெல்லாம் நீங்களாக உங்களை பெரிய அளவில் மதிப்பிட்டுக் கொண்டு உதவி என்கிற பெயரில் சிக்கிக் கொள்ளாதீர்கள். ‘நான் கௌரவமான ஆளு’ என்று பெயரெடுப்பதற்காக பல விஷயங்களை இழப்பீர்கள். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பது உங்களுக்கான பழமொழி யாகும். அதனால் திட்டமிட்டு பொய் சொல்ல முயற்சியுங்கள்; வரவில்லையென்றால் விட்டு விடுங்கள். இல்லையெனில் ஆப்பசைத்த குரங்கைப் போல சில விஷயங்களில் சிக்கிக் கொள்வீர்கள். முத்திரைத்தாள் விஷயங்களில் இன்னும் எச்சரிக்கையோடு இருங்கள். ஏனெனில், போலி முத்திரைத்தாள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிரிகள் உங்களை ஈடுபடுத்துவார்கள்.
உள்மனதில் உறங்கிக் கிடக்கும் மிருகத்தை உசுப்பிவிடும் இடமே ஆறு ஆகும். எனவே, உங்களுக்கு ஆறாம் இடமாக குரு வருவதால், எதையெல்லாம் இந்த சமூகத்தில் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆராய்ந்து கொண்டே இருப்பீர்கள். அமானுஷ்யமான, தெய்வீகமான தேடலில் மனதை அதிகம் ஈடுபடுத்துவீர்கள். அதனுடைய நம்பகத்தன்மையை நீங்கள் முதலில் ஆராய்ந்து தெரிந்துகொண்டுதான் பிறருக்கு சொல்வீர்கள். ‘‘இவர்கிட்ட இவ்ளோ விஷயம் இருக்கா? பார்த்தா தெரியவே இல்லையே. பூனை மாதிரி இருக்காரு’’ என்று உங்களைப் புகழ்வார்கள். தரமான மரபு சார்ந்த கலைகளோடு கல்வியை வழங்க முயற்சி செய்வீர்கள்; வெற்றியும் காண்பீர்கள். ஆறாம் இடத்தில் மறைந்திருக்கும் குரு, இப்படி உதவிகளையும் செய்வார்.
ஒருவரின் போராட்ட குணத்தை தீர்மானிக்கும் இடமாகவும் ஆறாமிடம் அமைவதால், அதற்கு குருவே அதிபதியாக வருகிறார். பெரியோர்கள், முன்னோர்கள் என்ன விஷயத்தை காப்பாற்ற போராடினார்கள் என்று ஆராய்வீர்கள். பெரியோர்களின் அடிச்சுவடுகளைத் தொடர்ந்து நடந்து சாதிக்கத் துணிவீர்கள். ஆனால், இதுபோல விஷயங்களை நீங்கள் தொடும்போதே எதிர்ப்பும் தானாக வரத்தான் செய்யும். பல நேரங்களில் பட்டறிவை விட அனுபவ அறிவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பிறரின் அனுபவங்களை வைத்தே பிரச்னைகளைக் கையாளும் தன்மையைப் பெற்றிருப்பீர்கள்.
கடக ராசி அன்பர்கள் கடன் மற்றும் எதிரிகள் சம்பந்தமான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு செல்ல வேண்டிய தலமே காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் ஆலயமாகும். இங்கு எட்டு புஜங்களிலும் ஆயுதங்களோடு பெருமாள் சேவை சாதிக்கிறார். இவரை எண்புயக்கரத்தான் என்று அழைப்பர். புஷ்பவல்லித் தாயாரையும் தரிசித்து வாருங்கள். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாகும். இத்தலம் சின்ன காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு அருகேயே உள்ளது.
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக