வியாழன், ஜனவரி 21, 2016

சிம்ம ராசி


சிம்ம ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்
சிம்ம ராசியில் பிறந்த நீங்கள், குகையில் அமர்ந்து குரல் கொடுக்கும் சிங்கம்போல சுற்றியிருப்பவர்களை விரட்டிக் கொண்டிருப்பீர்கள். அதிகாரத்திற்கும், ஆளுமைக்கும் உரியவரான சூரியனின் ஆதிக்கத்தில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். அதனாலேயே எல்லோர்மீதும் ஆளுமை செலுத்த விரும்புவீர்கள். உங்களால் அடக்கப்படுபவர்களே பிறகு எதிரியாவார்கள். நீங்கள் தட்டிக் கேட்பவரே உங்கள் மீது வழக்கு தொடுப்பார்கள். ‘‘சொல்றவங்க ஏதாவது சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க. நான் கேட்கணும்ங்கற அவசியம் இல்லை’’ என்றுதான் பெரும்பாலும் உங்கள் பேச்சு இருக்கும். இப்படி எல்லோரிடமும் பேசும்போது தானாக எதிரிகள் உருவாகி விடுவார்கள். ஆனால், உங்களோடு நேரடியாக மோதுபவரை விட மறைமுகமாகத் தாக்குபவர்களே அதிகம். நீங்கள் யார் மீதாவது கோபப்படுகிறீர்கள் என்றால், அதிகமாக அவரை நேசிக்கிறீர்கள் என்று பொருள். கீழே விழுந்தும் மண் ஒட்டாத கதையாக, சுய கௌரவத்தை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள்.
உங்களின் ராசிக்கு சத்ரு, நோய், கடன் போன்ற இடங்களுக்கு அதிபதியாக மகரச் சனி வருகிறார். உங்களுக்கு ஜென்மப் பகையே சனிதான். அவரே சத்ரு ஸ்தானாதிபதியாகவும் வருகிறார். அதனால் எங்கு போனாலும், எதைத் தொடங்கினாலும், சனி தொந்தரவுகளை கொடுத்த வண்ணம் இருப்பார். ஒரு விஷயத்தை தொடங்கும்போதே முதலில் எதிர்ப்புதான் வரும். சிறிய வயதிலிருந்தே உறவினர்கள், அக்கம்பக்க வீட்டிலுள்ளோர் உங்களுக்கு ஏதாவது சொன்ன வண்ணம் இருப்பார்கள். வீட்டுக்கு வந்து போவோர் எல்லாம் உங்களுக்கு அறிவுரை மழை பொழிவார்கள். ‘‘நான் ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாமான்னு இருக்கேன்’’ என்றால் அதற்கு முட்டுக்கட்டை போட பலர் வருவார்கள். அவர்களை அப்படியே தள்ளி வைப்பீர்கள்.
அதேபோல, உங்களின் ஆறாம் இடத்திற்குண்டான சனியே, ஏழாம் இடமான வாழ்க்கைத்துணை ஸ்தானத்திற்கு உரியவராகவும் வருகிறார். அதனால் உங்களின் வாழ்க்கைத்துணை திறமையுள்ளவராக இருப்பார். உங்களை மீறி சிந்திப்பவராகவும் இருப்பார். குறைகளை நேருக்கு நேராக சுட்டிக் காட்டித் திருத்துவார். ஆனால் இந்த சனி சத்ரு ஸ்தானாதிபதியாக வருவதால், மனைவியையே நீங்கள் பல சமயங்களில் எதிரியாக நினைப்பீர்கள். நீங்கள் செய்யும் சில காரியங்களுக்கு துணைபோனால் நல்ல வாழ்க்கைத்துணை என்றும், அதைத் தவறு என்றால் ஜென்ம எதிரியாகவும் பார்ப்பீர்கள். ‘‘நான் எது சொன்னாலும் அதுல ஒரு குறை கண்டுபிடிக்கறதையே வேலையா வச்சுருக்கா’’ என்று மனைவியைக் கடிந்து கொள்வீர்கள். பொதுவாகவே நெருங்கிய உறவுகளில் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. பெரும்பாலும் அந்நிய உறவுகள், புது உறவுகளில்தான் உங்களின் வாழ்க்கைத்துணை அமையும். நீங்கள் சார்ந்திருக்கும் சமூகத்தில் வசதியற்றோ, அல்லது ஏதேனும் குறைபாடுள்ள வீட்டிலிருந்தோ திருமணம் புரிந்து கொண்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
வாழ்க்கைத்துணையின் சொந்தங்களாலேயே உங்களுக்கு நிறைய கடன்கள் வரும். திருமண விழாக்களோ, அவசரச் செலவுகளோ, அறுவை சிகிச்சைகளோ... கடன்களை நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டு அடைப்பது என்று பலவிதங்களில் கடன்கள் பெருகும். வாழ்க்கைத்துணை உங்கள் கருத்தோடு மாறுபட்டால், ‘நின்னா குத்தம்... நடந்தா குத்தம்...’ என்று எல்லா நடவடிக்கைகளிலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பீர்கள். புகழ்ச்சிதான் உங்களின் முதல் சத்ரு. உங்களை மிகைப்படுத்திப் பேசுபவர்தான் எதிரியாக உருவெடுக்கிறார். அதை வாழ்க்கைத்துணைதான் முதலில் சுட்டிக் காட்டுவார். வாழ்க்கைத்துணை ஸ்தானமான ஏழாம் இடம்தான் தொழிலில் பங்குதாரர்களைப் பற்றிப் பேசும் இடமாகவும் வருகிறது. எனவே, பங்குதாரர்களால் பண இழப்பு மற்றும் வழக்குகளை சந்திப்பீர்கள். உங்களால் ரகசியங்களைக் காப்பாற்ற முடியாது. ‘‘யார்கிட்டேயும் எதையும் சொல்ல மாட்டேன்’’ என்று தொடங்கி, சற்றுமுன் வரை நடந்த எல்லா விஷயங்களையும் சொல்லி விடுவீர்கள்.
பெருமாள் பெயருள்ளவர்கள் ஆரம்பத்தில் உங்களுக்கு உதவிகரமாக இருந்துவிட்டு, பிறகு உபத்திரவம் செய்யத் தொடங்குவார்கள். முக்கியமாக ராமச்சந்திரன் என்பதுபோல சந்திரனோடு சேர்ந்து வரும் பெருமாள் பெயர் உள்ளவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கை வேண்டும். உங்களுக்கும் கடைநிலை ஊழியர்களுக்குமிடையே எப்போதும் பிரச்னைகள் இருந்து கொண்டே இருக்கும். லேபர் கோர்ட் படியேறுவதைத் தவிர்க்க முடியாது. மேலதிகாரி ஒத்துழைத்தாலும் கீழ்நிலை ஊழியர்களால் அவஸ்தைப்படுவீர்கள். சொந்த ஜாதகத்தில் சனி நன்றாக இருந்தாலும், 3, 11ம் இடத்தில் சனி இருந்தாலும், பிரச்னைகள் அதிகம் வராது. அப்போது மனைவியால் செல்வாக்கு பெறுவீர்கள். வேலையாட்கள் நண்பர்களாக இருப்பார்கள்.
சனி இப்படி ஆறாம் இடத்திற்கு உரியவராக வருவதால், எதிலுமே அவசர முடிவுகளை எடுக்க வைப்பார். எதையுமே எமோஷனலாக பேசவைத்துக் கொண்டே இருப்பார். இயல்பான நிதானத்தைத் தாண்டி, பதற்றத்தைக் கூட்டுவார். சொந்த ஜாதகத்தில் சனி உங்களுக்கு சரியில்லையெனில் உப்புப் பெறாத விஷயத்திற்கெல்லாம் நீதிமன்றம் நாடுவீர்கள். அரை மணி நேரத்தில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயத்திற்கு ஆறு வருடங்களாக அலைய வேண்டி வரும். சூரியன் உங்களின் ராசிக்கு அதிபதியாக இருப்பதால் அரசாங்க அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்றோர் ஆரம்பத்தில் நட்பு பாராட்டுவார்கள். ஆனால், போகப்போக உங்களுக்கு எதிராக மாறுவார்கள். வழக்கு போன்ற விஷயங்களில் அதீத கவனத்தோடு இருத்தல் வேண்டும்.
நீதி, நேர்மை, நாணயம் போன்றவற்றிற்கு உரியவராக சனி வருவதால், கொஞ்சம் பிசகினாலும் சிக்க வைத்து விடுவார். தலைவலி, கண் நோய், முழங்கால் வலி போன்றவை ஏற்படும்போது சட்டென்று மருத்துவரை நாட வேண்டும். சருமத்தில் அரிப்பு ஏற்படும்போதும், உடனடி சிகிச்சை அவசியம். செலவு செய்வதற்கு உங்களைப் போல் ஒருவர் பிறந்து வரவேண்டும். அலுவலகத்தில் குறைந்தது ஒரு நாளைக்கு பத்து பேருக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்து விடுவீர்கள். கடன் வாங்கியாவது அடுத்தவர்களுக்காக செலவு செய்வீர்கள். நாலு பேர் போக வேண்டிய விசேஷத்திற்கு, இருபது பேரை சேர்த்துக் கொண்டு வேன், கார் என்று அலம்பல் செய்வீர்கள். அதேசமயம், பிடிக்கவில்லை எனில் சட்டென்று உறவினர்களையும் நண்பர்களையும் தூக்கிப் போடுவீர்கள்.
அடுத்தவர்களுக்கு பாவம் பார்த்தே பாதி சொத்தை அழித்த சிம்ம ராசிக்காரர்கள் உண்டு. மூன்று மாதத்திற்கு ஒரு மொபைல் தொலைக்கும் சிம்ம ராசியினரை நான் அறிவேன். அடிக்கடி ஏதாவது காரணத்துக்காக அபராதம் கட்டுவீர்கள். உங்களுக்கு கடன் எனில், அது தந்தையாரால் கூட ஏற்படும். எப்போதோ சகோதரிகளின் திருமணத்திற்கு தந்தையார் பட்ட கடன்கள் அவருக்குப் பிறகு உங்கள் மீது விழும். பரம்பரை சொத்து இருந்தால், அதை ஒழுங்காகப் பிரித்துக் கொண்டு விடுதல் நல்லது. இல்லையெனில் உடன்பிறந்தோர்களே வழக்கு தொடுக்கும் அபாயம் உண்டு. சிலசமயம் பெருமைக்காக மற்றவர்களுக்கு கடன் வாங்கிக் கொடுப்பீர்கள். ‘‘நான் சொன்னா அவரு எவ்ளோ வேணாலும் கொடுப்பாரு’’ என்று வாங்கிக் கொடுத்து விட்டு முழி பிதுங்குவீர்கள்.
சிம்ம ராசிக்காரர்களிடம் பிடிவாதம் இருக்குமளவிற்கு அவசரத்தனமும் உண்டு. கூட்டிக் கழித்துப் பார்த்தால் நீங்கள் குறும்புக்காரக் குழந்தைதான். இதனாலேயே, ‘‘அவர்கிட்ட மூணு தடவைக்கு மேல ஒரு விஷயத்தைக் கேட்டா, ‘எடுத்துக்கிட்டு போய்யா’ன்னு தூக்கிப் போட்டுடுவாரு’’ என்று உங்களிடம் பொருளைப் பறிப்பார்கள். இந்த விஷயம் பூமி, மனை, வீடு என்று பல்வேறு இடங்களில் வெளிப்படும். உங்களின் பல பிரச்னைகள் தீர மிக சூட்சுமமான வழியொன்று உள்ளது. அதாவது பிதுர்காரகன் எனப்படும் சனி பகவான் உங்களுக்கு எதிரியாக வருவதால், முன்னோர்கள் செய்த தவறுக்கு நீங்கள் சில விஷயங்களை அனுபவிக்க வேண்டி வரும். அல்லது முன்னோர்களுக்கு உங்கள் தந்தையாரோ அல்லது திதி கொடுக்கும் நிலையில் உள்ளவர்களோ திதி கொடுக்காமல் இருப்பதால், அவர்களின் கோபம் கூட உங்கள் வாழ்வை முடக்கலாம். எனவே பிதுர்க் கடன்களை சரியாகச் செய்து விடுங்கள்.
‘ஆழம் பார்த்துக் காலை விடவேண்டும்’ என்பதுபோல நீங்கள் கோபமாகப் பேசும்போது எதிராளியைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. ‘‘எங்கிட்டதானே அவன் வேலை செய்யறான். இதைவிட வேறெங்க அவனுக்கு நல்ல சம்பளம் கொடுத்துடப் போறாங்க’’ என்று தூக்கியெறிந்து பேசாமல் இருப்பது நல்லது. எதிரி ஸ்தானத்தை நிர்ணயிப்பவராக சனி இருப்பதால், வார்த்தைகளில் கவனம் தேவை. தரக்குறைவாகப் பேசி அதுவே பெரிய பிரச்னையைக் கொண்டுவந்து விடும். பெரிய தொழில் மற்றும் வியாபாரங்களில் கூட்டு வைத்தால் எச்சரிக்கையோடுதான் இருக்க வேண்டும். அதிலும் உங்களுக்குக் கீழ் பணியாற்றுவோர்கள் வழியாக வரும் எந்த விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துத்தான் முடிவெடுக்க வேண்டும்.
வைரம் வாங்கும்போதும் அதை விற்கும்போதும் கவனத்தோடு இருக்க வேண்டும். மேலும் ரத்தினங்கள் பதித்த நகைகளை வாங்கும்போது எச்சரிக்கை தேவை. நகையை அடகு வைத்தல் உங்கள் தொழில் ரீதியான ரொடேஷனுக்கு நல்லது. ஆனால், காசோலை கொடுக்கக் கூடாது. ஒருவரின் போராட்ட குணத்தை தீர்மானிக்கும் இடமாக ஆறாம் இடம் வருகிறது. விடாமல் துரத்துதல் என்பதைவிட, எதையுமே கொஞ்சம் விட்டுப் பிடித்தால் நீங்கள் வெற்றி பெற முடியும். சந்திரன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டுக்கு உரியவராக வருவதால் தீவிர சிந்தனை இருக்கும். ஒரே விஷயத்தை நோண்டித் துருவிக் கொண்டிருப்பீர்கள். எல்லோரையுமே உங்களுக்கு எதிரானவர்களாகவும், உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை என்பது போலவும் நினைக்கும் மனப்பிரமை உங்களுக்கு அதிகம் உண்டு. அதை விலக்கிக் கொள்ளப் பாருங்கள். சொந்த ஜாதகத்தில் சனியோடு சூரியனோ, செவ்வாயோ சேராமல் இருந்தால் பிரச்னைகளை எளிதாக முடிக்கலாம்.
சிம்ம ராசியினர் மேற்கண்ட பிரச்னைகள் தீர வழிபட வேண்டிய தலமே திருலோக்கி ஆகும். இங்கு அருளும் க்ஷீராப்தி சயனப் பெருமாளை தரிசியுங்கள். ஆதிசேஷன் குடையாக கவிழ்ந்திருக்க, திருமுகத்தருகே ஸ்ரீதேவியும், திருவடிப் பகுதியில் பூதேவியும், நாபிக் கமலத்தில் பிரம்மாவும் இருக்கின்றனர். திருமகளை தனது திருமார்பில் ஏற்றுக்கொண்ட தலமாதலால் இத்தல இறைவனை தரிசிப்பது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. ஒற்றுமைக் குறைவால் பிரிந்த தம்பதிகள் இத்தல ஷீராப்தி பெருமாளை தரிசிக்க நிச்சயம் ஒன்று சேர்வர். அதுமட்டுமில்லாது திருமகளே இங்கு நித்திய வாசம் புரிவதால், இங்கு வந்து செல்பவர்களுக்கு மகாலட்சுமியின் பூரண அருள் கிட்டும். கடன் தீர்ந்து வசதி பெருகும். ஷீரநாயகி எனும் திருநாமத்தோடு தனிக் கோயிலில் மிகப்பொலிவோடு பிரகாசிக்கிறாள் திருமகள். கும்பகோணத்திலிருந்து இங்கு செல்ல பேருந்து வசதி உண்டு. அல்லது கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆடுதுறையிலிருந்து சூரியனார்கோயில், கஞ்சனூர் வழியாக தனி வாகனம் வைத்துக் கொண்டும் செல்லலாம்.
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக