வியாழன், நவம்பர் 30, 2017

ஆளுநர்கள் ஆடும் கூத்து! -பழ.கருப்பையா

Thanks nakeeran nov 26-28

ஆளுநர் புரோகித், அண்மையில் கோயம்புத்தூரில் காவல்துறை உட்பட அனைத்துத்துறை அதிகாரிகளையும் அழைத்து தமிழ்நாடு அரசின் ஆட்சிப் போக்கு குறித்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.
எகிறியிருக்க வேண்டும் அ.இ.அ.தி.மு.க.வின் எடப்பாடி அரசு.
ஒரு கணவன், மனைவியின் குடுமியைப் பற்றி இழுத்துப் போட்டு அடிக்கும்போது, எகிறிப் பாய வேண்டிய மனைவி, “அவருக்கில்லாத உரிமையா?’ என்று அடிபட்ட இரத்தத்தைத் துடைத்துக்கொண்டு, அவிழ்ந்த கூந்தலை அமைதியாக அள்ளி முடிந்துகொள்கிறாள் என்றால்… “அவனிடமும், இவனிடமும் உனக்கென்னடி இளிப்பு’ என்றெல்லாம் தோண்டாமல் இத்துடன் விட்டானே’ என்னும் மகிழ்ச்சி அவளுக்கு. அதே நிலைதான் நம்முடைய எடப்பாடி அரசுக்கும்.
சசிகலா குடும்பத்தில் மைய அரசால் நடத்தப்படும் அலங்கோலங்களையெல்லாம் பார்த்து அரண்டு போயிருக்கும் எடப்பாடிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் மாநில உரிமைகள் பற்றிக் கவலைப்பட நேரம் எங்கே இருக்கிறது?
ஒரு விபத்தினால் ஆட்சிக்கு வந்தவர்கள்; “அரித்தது வரை மிச்சம்’ என்னும் அரிய கொள்கையை ஆட்சிக் கொள்கையாகக் கொண்டவர்கள்; அவர்கள் வேறெப்படி நடந்துகொள்ள முடியும்?
தமிழ்நாட்டின் தலையாய எதிர்க்கட்சியான தி.மு.க.வும் பிற கட்சிகளும் “எங்கள் வீட்டில் உனக்கென்ன வேலை?’ என்று மைய அரசின் மீது பாய்கின்றன.
அவர்களின் பாய்ச்சலுக்குக் காரணம், கேவலமான எடப்பாடி அரசு குறித்த கவலை அல்ல; “இன்றைக்கு நடப்பதுதானே நாளைக்கும் நடக்கும்’ என்னும் மாநில நலன்கள் சார்ந்த கவலையால்!
ஆளுநர், அதிகாரிகளை அதிகாரபூர்வமாக அழைத்து ஆட்சி முறை குறித்து விசாரணை செய்வது, ஆய்வு மேற்கொள்வது என்பன போன்ற அதிகாரங்கள் ஆளுநருக்கு அரசியல் நிருணயச் சட்டத்தில் இல்லை. இந்த மீறலை ‘Constitutional impropriety’  என்று சட்ட வல்லுனர் கூறுவார்கள்.
தன்னுடைய எல்லையை, வரம்பை மீறி நடந்துகொள்கிறார் ஆளுநர் புரோகித்.
இந்தச் சட்டமீறலை இத்துடன் முடித்துக்கொள்ளப் போவதில்லை; அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த அத்துமீறல் விரியும் என்று ஆணவத்தோடு பேசியிருக்கிறார் ஆளுநர்.
ஆளுநர் பதவி என்பது அலங்காரப் பதவி; அவருக்கென்று தனி அதிகாரம் எதுவுமில்லை.
ஆளுநர் உரை என்று சட்டமன்றத்தில் அவர் படிக்கின்ற உரை அந்தந்த அரசுகளால் எழுதிக் கொடுக்கப்படும் உரைதான். அவர் “என்னுடைய அரசு’ என்று குறிப்பிடுவது நிகழ்கால மாநில அரசைத்தான்.
“என்னுடைய அரசு “கழுதை விட்டையை’ வியாபாரம் செய்வதாக முடிவெடுத்திருக்கிறது’ என்று ஆளுநர் தன்னுடைய உரையில் படித்தால், அது அந்த அரசின் கொள்கை என்பது அதன் பொருள். கழுதை விட்டை வியாபாரம்  இலாபமானதா?, நட்டகரமானதா என்று கேள்வி கேட்க ஆளுநருக்கு  உரிமையில்லை.
அப்படியிருக்கும்போது அரசின் அன்றாடச் செயல்களை ஆராய்வதற்கு இவர் யார்? இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா? தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் பெருமையும் சிறுமையும். நியமனம் செய்யப்படும் ஆளுநருக்கு வேடிக்கை பார்க்கத்தான் உரிமையுண்டு.
ஆயினும் நெருக்கடியில் ஓர் ஆளுநர் செயல்பட முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்று தன்னுடைய பெரும்பான்மையை இழந்துவிடும்போது… “மாற்று அரசுக்கு வழிவகுப்பதா? இருக்கும் அரசைக் கலைத்துவிடுவதா?’ என முதன்மையான முடிவுகளை எடுக்கும் மாபெரும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு.
அவற்றையெல்லாம் விட்டு விட்டு,  நம்முடைய ஆளுநர் புரோகித், “தாசில்தார் பட்டா கொடுத்தாரா? கிராம முன்சீப் நிலத்தை ஒழுங்காய் அளந்து கணக்கு வைத்திருக்கிறாரா?’ என்றெல்லாம் ஆகாத வேலைகளையெல்லாம் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்.
இப்போது உள்ள அ.இ.அ.தி.மு.க.வின் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. ஏற்கெனவே மெலிதான பெரும்பான்மையைக் கொண்டுள்ள எடப்பாடி அரசு, தன்னுடைய சொந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பதினெட்டு பேர், “எங்களுக்கு எடப்பாடி அரசின் மீது நம்பிக்கை இல்லை’ என்று ஆளுநரையே நேரில் கண்டு, தங்கள் நம்பிக்கையின்மையை கையெழுத்திட்டு எழுதிக் கொடுத்த பின்னரும், ஆளுநர் என்ன நடவடிக்கை எடுத்தார்? அவர் செய்யவேண்டிய வேலையை அவர் செய்தாரா?
பெரும்பான்மையை இழந்துவிட்ட ஓர் அரசு தொடர்ந்து ஆண்டுகொண்டிருக்கிறது! அதை ஆளுநர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்!
ஆளுநர் செயலற்றுப்போன காரணத்தினால், எடப்பாடியின் விருப்பத்திற்குச் செயல்படும் சட்டப்பேரவைத் தலைவர் தனபால், அரசின் மீது நம்பிக்கையின்மை தெரிவித்த ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பதினெட்டுப் பேரையும் பதவியிலிருந்தே நீக்கம் செய்துவிடுகிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை ஒரு பேனாவின் கீறலால் ஒன்றுமில்லாமல் ஆக்கமுடியும் என்றால், இது தேர்வு செய்த மக்களைக் கோமாளிகளாக்கும் செயல்தானே?
ஆளுநர்களைச் சொல்லி ஆகப்போவதென்ன? அவர்கள் வெறும் இரப்பர் முத்திரைகள்தாமே! இந்த இரப்பர் முத்திரைகளை மையில் தோய்த்துக் குத்துவது மைய அரசுதானே!
புதுச்சேரி ஆளுநராக இருப்பவர் கிரண்பெடி. புதுச்சேரியில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுபவர் இவர். முதல்வர் நாராயணசாமி பரிந்துரையின் பேரில் சட்டப்பேரவைக்கு நியமனம் வேண்டிய மூன்றுபேரை தன்னுடைய விருப்பப்படி பாரதிய சனதா கட்சியிலிருந்து நியமனம் செய்துவிட்டார். இவரென்ன பாரதிய சனதா கட்சியின் பகுதிச் செயலாளரா? ஆனால் அந்த நியமனம் செல்லாதென்று சட்டப்பேரவைத் தலைவர் சட்டமன்றத்திற்குள் நுழைய அவர்களை அனுமதிக்கவில்லை என்பது வேறு.
மக்களிடம் பெரும்  செல்வாக்குப் பெற்ற டில்லி முதல்வர் கெசரிவாலின் கதையும் இதுதான். “முதல்வரை ஆளுநர் ஓர் எடுபிடி போல் நடத்துகிறார்; செயல்முடக்கம் செய்கிறார்’ என்று கெசரிவால் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்.
இப்படியெல்லாம் அத்துமீறிச் செயல்படுவதற்கும், நியாயமான நாராயணசாமி ஆட்சியையும், கெசரிவால் ஆட்சியையும் செயல்முடக்கம் செய்வதற்கும் பெரும்பான்மையை இழந்துவிட்ட, ஊழலிலே புழுத்த புழுவான எடப்பாடி ஆட்சியை முட்டுக்கொடுத்துக் காப்பாற்றி வைப்பதற்கும் காரணம் ஆளுநர்கள்தானா? இல்லை, அவர்களைப் பொம்மலாட்டப் பொம்மைகளைப் போல் ஆட்டி வைக்கும் மோடியா?
“யாமறியோம் பராபரமே; எல்லாமே மோடியின் உத்தரவுப்படிதான்’ என்று வெளிப்படையாகவே போட்டு உடைத்துவிட்டார் புதுச்சேரி ஆளுநர் கிரண்பெடி.
‘Whatever we are doing is what has been reiterated by Prime Minister Narendra Modi’  என்கிறார் கிரண்பேடி. (Express 18-11-2017)
இத்தோடு கிரண்பேடி விட்டிருந்தால்  குற்றமில்லை;  “ஏதோ கூலிக்கு மாரடிக்கிறவர்கள்’ என்று விட்டுவிடலாம்.
புரோகித் போன்றவரில்லை கிரண்பேடி; அவர் இரண்டு ஆண்களுக்குச் சமமானவர்;  வெடிப்பானவர்.
அந்தப் பாங்கில் பேசுகிறார் கிரண்பேடி. “மோடி ஆட்டுவிக்கிறார்; நான் ஆடுகிறேன்’ என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்ட பிறகும், சுயமரியாதை உறுத்துகிறது.
‘What is otherwise the Governor for?’  “தலையிடக் கூடாதென்றால், வேறு எதற்கு ஆளுநர்?’ என்று கிரண்பேடி கேட்கிறார்.
தலையிடக்கூடாதென்று நாங்கள் சொல்லவில்லை. பெரும்பான்மையை இழந்துவிட்ட எடப்பாடி அரசுக்கு எதிராக ஆளுநர் ஏன் தலையிடவில்லை என்றுதான் கேட்கிறோம்.
பெரும்பான்மையோடு ஒழுங்காக நடக்கும் புதுச்சேரி  நாராயணசாமி ஆட்சியில் ஏன் தலையிடுகிறீர்கள் என்றும் கேட்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக