புதன், ஏப்ரல் 11, 2012

இன்னுமொரு சூர்யவம்சம்



வாழ்க்கையில் எத்தனையோ பேர் மோசமான நிலையில் இருபாங்க,என்ன பண்ணறாங்கனே தெரியாது,சட சடன்னு முன்னேறிருவாங்க..வெள்ளை வேட்டிதான்,சர்ட்தான்,கையில் மோதிரம்,கழுத்துல செயின்னு வலம் வருவாங்க.

நமக்கும் அப்படி சான்ஸ் வரதா? நாமளும் சூர்யவம்சம் சரத் மாதிரி ஒரு பாட்டுல டர்னிங் கிடைக்காதான்னு மண்டையபிச்சுகிட்டு மார்கெட்டிங் வந்த நேரத்துலதான் நண்பரொருவர் நல்ல ஐடியா நாந்தாரேன்,நாளும்தினமும் நாம முன்னேறலாமுன்னு சொன்னார்.

கரெக்டா தீபாவளி நெருங்க 2மாதம்தான்,இதுதான் கரெக்ட்டான டைம்,எவ்வளவு பணம் போடுவேன்னு கேட்டார்,50000தான் முடியுமுன்னு சொல்ல,அப்படியா அப்ப ஓகே நான் ஒரு 2இலட்சம் போடறேன்,என்னோட பிரண்டுக 4பேர் ஆளுக்கு 1இலட்சம் போடுவாங்க,தீபாவளிக்கு பட்டாசு கடை போடலாமுன்னு ஐடியா கொடுத்தார்,

ஆனா ஒண்ணு நீதான் பொறுப்பான ஆளு,கடைக்கு உண்டான ஐடியா எல்லாம் என்னது,பொறுப்பா பாத்துக வேண்டியது நீதான்னும் சொன்னார்,சரிங்கன்னு சொல்லிகிட்டு முதல்ல நண்பர்கள் எல்லாம் மீட் பண்ணுவோம்முன்னு சொல்லிட்டு ஒரு மாலை நேரத்துல பஸ் ஸ்டேண்டு பக்கம் இருக்கற பார்க்லதான் மீட்டிங்,.

அத்தனை பேர் வந்ததும் எங்க தலை (டீம் ஹெட்) எந்திரிச்சு எல்லாரையும் அறிமுகம் செய்துகிட்டு , நாம ஆரம்பிக்கப்போற இந்த கடைக்கு இப்ப பர்ச்ஸேஸ் எல்லாமே சிவகாசிதான்,இப்பவே கொஞ்சம் லேட்,இருந்தாலும் எனக்கு அங்க நிறைய நண்பர்கள் இருப்பதால கையில பணத்தோட போணோமின்னா குறைஞ்ச விலைக்கு பட்டாசு வாங்கிரலாம்,அதை கொண்டு வந்து இங்க 3 பக்கம் கடை பிராஞ்ச்சோட போட்டோமின்னா கைல காச அள்ளலாம்,

இப்படி ஆரம்பிச்ச கடைக்கு முதல்ல பேர் சூட்டனுமில்ல,அதுக்கு ஒரு ஐடியா நம்ம எல்லார் இன்சியலையும் முன்னாடி போட்டு ஆர் கே ஜீஎஸ்'ன்னு போட்டோம்.ஆகா அருமையான ஆர்கேஜீஎஸ் பட்டாசு மார்ட்'ன்னு சொல்லியும் பார்த்தேன்.,நைஸ் அருமையான பெயர்ன்னு தோணுச்சு,

அடுத்த மீட்டிங்ல டீம் ஹெட் 'தம்பிகளா முதல்ல இந்த பேரை ரிஜிஸ்ட்ரர் பண்ணனும்,டிரேட்மார்க் வாங்கிகனும்,அதுக்கப்புறம் இந்த வருடம் வரும் லாபத்துல முழுசா எடுத்து இப்பவே அட்வாண்ஸ் அமௌன்டா கொண்டு போயி சிவகாசி பேக்டரில கட்டிட்டா அடுத்த வருடம் பட்டாசு ரெடி.ஆமாம் 1இலட்சத்துக்கு பணம் இப்பவே கட்டுனா அடுத்தவருடம் தீபாவளிக்கு அதை 3இலட்சத்துக்கு வித்து லாபம் பாக்கலாம்,அந்த லாபக்காசை வைத்து எங்கயாவது ஒரு நல்ல இடமா பாத்து வாங்கியும் வச்சுகலாம்,கொஞ்சம் பணத்தில் அடுத்த தீபாவளிக்கு அட்வான்ஸ் பண்ணிக்கலாம்.அடுத்த தீவாளி வரும்போது அந்த இடத்த வித்து தமிழ்நாடு முழுக்க ஆர்கேஜீஎஸ் பட்டாசு மார்ட் ஓப்பன் பண்ணிடலாமுன்னு சொல்ல சொல்ல நமக்கு மனத்துக்குள்ள சூர்யவம்சம் படம் ஓட ஆரம்பிச்சுகிச்சு,எல்லாம் கொஞ்ச நேரம்தான்.

தலைவர் என்னைத்தான் தம்பி நீதான் கடை போடறத்துக்கு இடம் பாக்க்கனும்,பிளக்ஸ் அடிக்கணும்,நாம போடற கடை எல்லாமே மெயின் ரோடு ,டிபார்ட்மெண்டல் ஸ்டோர் பக்கமும் இருக்கனும்,அப்பத்தான் நல்ல சேல்ஸ் ஆகும்,நல்ல இலாபம் கிடைக்கும்,அப்பத்தான் அடுத்த ரெண்டு வருடத்துக்குள்ள தமிழ் நாடு முழுக்க கடை போட முடியுமுன்னு சொன்னார்.

மார்க்கெட்டிங்கல எப்படி விவரமா பேசணும்,எப்படி ஆர்டர் பிடிக்கனுமின்னு  எங்க ஓனர் முன்னாடி ஒரு டைம்  சொன்னார்,'தம்பி போனா போனவுடனே எவனும் வாங்கிறமாட்டான்,நீதான் எல்லாப்பக்கமும் போயி இந்தமாதிரி இந்தமாதிரி பாரின்ல இப்படிதான் பொருள் வேணுமின்னு கேக்கறான்,அதுக்கு உண்டான எல்லாச்சாமானமும் எங்கிட்ட இருக்குனு சொன்னாத்தான் , அப்படியான்ன்னு காதுல கேப்பானுங்க,பொறகுதான் யாவாரம் ஆகுமின்னு'சொன்னார்.அந்தக் கதைதான் ரிபீட் போலன்னு நினைச்சுகிட்டேன்.

சரி பணத்தை வேற கொடுத்தாச்சு,இனி வேற வழி ,சொல்லறத எல்லாம் செஞ்சுதானே ஆகனும்,ஒருவழியா அலைஞ்சு கடைய பிடிச்சாச்சு..அடுத்து பயர் சர்வீஸ் ஸ்டேன்சலயும்,ஆர்டிஓ ஆபிசலயும் அப்ரூவல் வாங்கனும்..

வாழ்க்கயில எங்க வேணாலும் போயி அப்ரூவல வாங்கிரலாம்,இங்க வாங்கறதுதான் சிரமம் போல..
அங்க போயி அவருகிட்டே நின்னா 'என்னா வேணும் ?' 
லைசன்ஸ் வேணும் சார்..எதுக்கு? கடை போட..
அப்படியா என்ன கடை ? டீக்கடையா ,போண்டாக்கடையா?

சார்ர்ர்,பட்டாசுக்கடை சார்..அப்படிச்சொல்லு..லைசன்ஸ் கொடுத்தா எனக்கு என்ன தருவே?
பட்டாசு தாரேன் சார். ம் அதை வெச்சு .நானென்ன குழந்தையா? சுத்தி சுத்தி வெடிச்சு விளையாட,அமௌண்ட் வேணுமய்யா? 
அய்யோ நம்ம தலை இந்த மேட்டர சொல்லவேயில்லையே,நாம பாட்டுக்கு தாரென்னு சொல்லி அவரு மாட்டேன்னு சொன்னா வம்பாகிருமேன்னு 
ஒரு நிமிசம் சார்,பார்ட்னர்கிட்ட கேட்டுகரேன் சார்'னு சொல்ல‌
அவர் அதுக்கு இந்த் விவரமே தெரியல'நீயெல்லாம் கடை வெச்சு எத்தன பேரக் கொல்லப்போறியோனு சொல்ல நமக்கு மனசுக்குள்ள கருக்..

தலைக்கு போனப்போட்டு சொல்ல அவர் அதுக்கு 'அடத்தம்பி அதெல்லாம் கேப்பாங்க,கொடுத்துத்தான் ஆகனும்,அப்பத்தான் லைசன்ஸ் கொடுப்பாங்க,சும்ம எப்படி? ந்னு கேக்க அடக் கருமமே நாமதான் இந்தன நாள் ஒண்ணும்தெரியாத பயல இருக்கோமாட்ட இருக்குனு நினைச்சுகிட்டி உள்ள போயி ஆர்டிஓ கிட்ட பேச'சரி தம்பி நாளைக்கு வா' போயி பாக்கலாம்,கார் எடுத்துகிட்டு வந்துருன்னு சொல்ல, மறுநாள் போயி நின்னேன் ,ஏந்தம்பி கார் எடுத்து வந்தியான்னு கேக்க நான்  மண்டைய சொரிய..அட உனக்கு இதெல்லாம் சரிப்படாது ந்னு சொல்லி கிளம்பிட்டார் ,ஊருக்கு போறேன் நாளைக்கு வா'ன்னு சொல்லிட்டார்.

4 நாள் இப்படியே தொடர 5 வது நாள் 'சரி பைக் வச்சுருக்கியா'ன்னு கேட்டுகிட்டு வந்தார் கடைய பாக்க..அவரு வந்து உக்காந்ததும் நான் பைக் ஸ்டார்ட் பண்ணீ டவுன்ஹால் ரோட்டுல நம்ம கடைக்கு வண்டிய துரத்த அவர் 'தம்பி இரு இரு எங்க போற ? நீ பாட்டுக்கு கிளம்பிட்ட? எங்க போறன்னு கேக்க நான் நம்ம கடைக்குன்னு சொல்ல 'தொலைஞ்சது போ, நீ ஒரு மார்க்கமான ஆளுப்பா,வண்டிய திருப்புன்னு சொல்லி அவினாசி ரோட்டுல விடுன்னு சொன்னார்.

அதுக்குள்ள அவருக்கு போன் வேற,அட இரும்மா வந்திட்டே இருக்கேன் கோவப்படாதே,5 நிமிசம் இருன்னு சொல்லிட்டு ஒரு பூக்கடை கிராஸ் ஆக 'தம்பி தம்பி நிறுத்து நிறுத்துனு சொல்லி, அந்த கடையில போயி நல்ல ரோஸ் ஒரு 5 வாங்கிக்க'அப்படின்னு சொன்னத்தும் அதே மாதிரி செஞ்சேன்,மறுபடியும் வண்டிய கிளப்பி அவர் சொன்ன ரோட்டுல பயணிச்சு ஒரு 6 கிமீ வந்ததும் அவர் 'தம்பி இதுதான் நம்ம வீடு..நாளைக்கு காலைல 8 மணிக்கு இங்க வந்திரு,நான் ரெடியா இருப்பென்,போயிரலாமுன்னு சொன்னார்..

அடப்பாவத்தே..இது என்ன கூத்து..இவர் வர்றாருன்னு அங்க நம்ம பார்ட்னர்கள கூல்டிரிங்கஸ் வாங்கி வைக்க சொல்லிருந்தனே,இனி போனா கடிப்பாங்களேன்னு போன் போட்டு வரலைன்னு சொன்னா நம்ம ஹெட் என்ன ஆளுடா நீயினு கடிச்ச கடிய பாத்தா நாளைக்கு அவரே போயி கூட்டி வந்துருவாருன்னு நினைச்சா 'சரி தம்பி நாளைக்கு காலைல போயி கூட்டிகிட்டு வந்துரு'ன்னு சொல்லிட்டார்..

அடப்பாவத்தேன்னு நைட் பூராவும் தூக்கமேயில்லை,தலை சுத்துது.என் ஒருவனால இவங்க எல்லாரும் பட்டாசுக்கடை அதிபராவது தடைபட்டுவிடக்கூடாதுன்னு ஒரே முடிவா மறு நாள் காலையில ஆர்டிஓ வீட்டுக்கு போனேன்.முன்னாடி பேப்பர் படிச்சுட்டு இருந்தவர்' அட கரெக்டா வந்திட்ட்யேன்னு சொல்லிட்டு 'தம்பி ,அந்த தெரு முனையில் ஒரு பேக்கரி இருக்கும் போயி ஒரு டீ சாப்பிட்டுட்டு பேப்பர் படிச்சுடு வந்துரு,நான் அதுக்குள்ள குளிச்சுட்டு வந்தறேன்னு' சொன்னார்.

அவரு சொன்னதெல்லாம் செஞ்சுட்டு நான் அவரு வீட்டுக்கு போகவும்,அவர் கிளம்பி வெளியே வரவும் சரியா இருந்துச்சு..பைக்கில் உக்காந்தவர் 'தம்பி பேப்பர் படிச்சியான்னு கேட்டார்,படிச்சேன் சார் நு சொல்ல என்ன ஹெட்டிங் போட்டுருந்தான் சொல்லு பாக்கலாமுன்னு கேக்க..அய்யய்யோ எங்க்ப்பாக்கு பிறகு இந்த கேள்வியா நீதான் கேக்கறேன்னு நினைச்சுகிட்டு மண்டை காய கூடங்குளம் பத்தி போட்டுருந்தான் சார்ன்னு சொன்னேன்.

நேர் அவினாசி ரோட்டுல சரவணபவன் இருக்கும்,அங்க வண்டிய உடுன்னு சொல்ல அதேமாதிரி அங்கே செல்ல என்னையும் சாப்பிட சொல்ல நான் பாக்கெட்டை தொட்டுப் பார்த்துக்கொள்ள 'தம்பி சாப்பிடு கூச்சப்படாதே'ன்னு சொன்னவர் பில் காசை அவரேதான் கட்டினார்.

அட நல்ல மனுசன் போல ந்னு நினைச்சு வண்டிய எடுக்க மழை பொழிய ஆரம்பித்தது..ஆஹா சாப்பாடு வாங்கிக் கொடுத்தவர் நனையறாரேன்னு என் ஹெல்மெட்டைக் கொடுக்க,வாங்கிப்போட்டவர் வரிசையாக பார்க்க வேண்டிய கடைகளையும்,10,15 கடைகளை பாத்தவர்,கடைசியாக நம்ம கடைக்கு வந்தார்,ஆனா அதற்க்குள் ஹெல்மெட்டுக்கு அச் அச் அச்சுனு ஒரு ஜலக்கிரிடையே நடத்தி விட்டார்..இனி அந்த ஹெல்மெட் வேலைக்கு ஆகாது,சாப்பாட்டு பில் 200தான் ,ஆனா அந்த ஹெல்மெட் 1150,அதை நான் போட்டால் அந்த சளி எனக்கு பிடித்து அதற்கு 2000 நான் செலவு பண்ணனும்..ஒருவழியாய் லைசன்ஸ் வாங்கிக் கொண்டு நிமிர்ந்து காலண்டரை பார்த்தால் தீபாவளிக்கு 3 நாள்தான்!!!!!!!!!

ஆஹா இனி கடைக்கு மாநகர் முழுதும் வீதி விளம்பர ரேடியோவில் கொடுக்க வேண்டுமென பஸ் ஸ்டேண்டுக்குள் இருக்கும் அட்வர்டைசிங் கடைக்குள் சென்று புக்கிங் செய்ய அந்த நிமிடம் முதல் நமது விளம்பரம் ";தீபாவளிக்கு துணி வாங்கியாச்சு,இனிப்பு வாங்கியாச்சு,அப்ப ப்ட்டாசு ? நம்ம ஆர்கேஜீஎஸ் இருக்க கவலை எதற்கு?ஆர்கேஜீஎஸ் பட்டாசுக்கடை அல்ல கடல்.."அஹா அருமை விளம்பரத்த கேட்டதும் அந்த காலத்து திருச்சி ரேடியோவுல தைலா சில்க்ஸ் விளம்பரம் கேட்ட மாதிரியே இருந்துச்சு...

இத்தனையையும் செஞ்சாச்சு..இனி என்ன? யாவாரத்த பாக்க வேண்டியதுதானே? அப்படின்னு கேக்கறீங்களா.கடை நாங்க போட்ட ஏரியா எது தெரியுமா? நகரிலேயே நல்லதும் சேல்ஸ் அதிகமுள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் பக்கம்தான்.அவங்க கூட கடைக்கு பின்னாடிதான் போட்டுருந்தாங்க..நாங்க அவங்க கடையை ஒட்டியே போட்டுருந்தோம்.இன்னொரு கடை அதுவும் மெயின்ரோடு ஒட்டி பழமுதிர் நிலையம் ஒட்டித்தான்..

இன்னும் முதல் சேல்ஸ் ஆரம்பிக்கல,சரி என்ன பண்ணலாமுன்னு தெரிஞ்சவங்க ரெண்டு பேர கூப்பிட அவங்க வந்து கட்டு ஒடைக்காம பட்டாசு வாங்கிப்போணாங்க,,அதுக்கபுறம் குறிப்பிடும்படியான யாவாரம் இல்ல..நம்ம தலைவர் நைட்டு மீட்டிங்க கட்டிங்க்கு அப்புறம் போட்டுட்டாரு..

தம்பி நல்லா கவனிச்சுக்க,இந்த தீபாவளி நம்ம எல்லாருக்குமே டர்னிங் பாய்ண்ட்..விட்டோமுன்னா அவ்வளவுதான்..இத வச்சுதான் நிறைய ஐடியா பண்ணிருக்கேன்,உடனே நாளைக்காலைல இந்த ஊரின் எல்லா பக்கமும் 2500க்கு மேல பட்டாசு வாங்கறவங்களுக்கு தங்கக்காசு இலவசமுன்ன்னு போர்டு வைன்னு சொல்லிட்டாரு..

இன்னும் ஒரு நாள்தான் விடிஞ்சா தீபாவளி.இந்த நேரத்துல இந்தாள் ஏன் கொல்லறாருன்னு யோசிச்சா ,

தம்பி யோசிக்காதே ..சொன்னத செய்,செய்வதை சொல்லுன்னு கலைஞர் மாதிரி சொல்லிப்போட்டார்..சரின்னு அதையும் செஞ்சாச்சு,

கூட்டம் வந்தபாடில்லை..ஆனா வாங்கிட்டு போனவங்க ஒன்றிரண்டு பேர் திரும்ப வந்து சில பட்டாசுக வெடிக்க மாட்டேங்குதுன்னு சொல்ல நமக்கு தூக்கிவாரிப்போட்டது..என்ன இது ஏதாவது நமுத்துருக்கும் மழைக்குன்னு அவங்களுக்கு பதில சொல்லி முடிச்சா தீபாவளி இனிதே முடியுது,ஆனா பட்டாசு வித்த பாடில்ல..

சரி போனது போகட்டுமுன்னு நைட்டு கடைய சாத்தும்போது இருக்கறதுல பெரிய வெடிகளான இலட்சுமி வெடிய கட்டோட வைக்கலாமுன்னு பத்த வச்ச "நோ சவுண்ட்" ஒன்லி புஸ்..அடுத்து 1000 வெடி ஒன்ண பத்த வைச்சா அதுவும் ..என்ன கொடுமை இதுன்னு நினைச்சு அடுத்தடுத்த பட்டாசு எல்லாமே அப்படித்தான்..நல்ல வேளை ஐஎஸ்ரோக்கு சக்ஸஸோ இல்லையோ ..எங்க ராக்கெட்கள்தான் கிளம்பி சர் சர்ன்னு போச்சு..அப்பாடானு ஒரு நிம்மதி..கடைசியா மிச்சமிருந்த பட்டாசுகளை அப்பவே மூட்டைகட்டிட்டு கொஞ்சம் வெடிப்பட்டாசுகளை பெட்ரோல் ஊத்தி கொளுத்திட்டு அப்பவும் வெடிக்கல அது வேற விசயம், நைட்டோட நைட்டா கடைய காலி பண்ணீட்டமுல்ல..

இந்த சூரியவம்சம் மறுபடியும் உதிச்சுது..ஆனா வேற ஊர்ல ..வேற வடிவுல..

ஆனா கதைப்படி எனக்கு சூரியன் மறுபடியும் உதிக்கவேயில்ல..போட்டகாசுக்கும் மேலே ,பட்டாசக்கொழுத்தப் போட்ட பெட்ரோல் என் பைக்கில் பிடிச்சது..

இதுவரைக்கும் ரூபாய்100 க்கு மேலே பட்டாசு வெடித்து பழக்கமில்லாத எனக்கு இந்த தீபாவளி கொஞ்சம் படாபட் தான்.....

..................சரி விடுங்க ..எப்பத்தான் ஒரே பாட்டுல நாமளும் ஹீரோவாகிறது..........

1 கருத்து: