புதிய இளவரசர்கள்! மிடாஸ் முதல் ஃபீனிக்ஸ் வரை
பூனை சூடுபட்டால் மறுபடி அந்தப் பக்கம் போகாது. ஆனால், மனிதரின் பணத்து ஆசை போகுமா?
போகாது என்பதற்கு உதாரணம் இவை.
வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் மீது 1997-ம் ஆண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அதில் 18 ஆண்டுகள் சட்டப் போராட்டங்கள் நடந்து… நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று.. அதன்பிறகு கர்நாடக உயர் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. ஆனாலும் விவகாரம் முற்றுப் பெற்றுவிடவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பாக இதன் மேல்முறையீடு மனு விசாரணை நடக்க இருக்கும் நிலையில்… இப்போது வெளியில் கசிந்திருக்கும் ஆவணங்கள் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளன.
யார் யார்?
சசிகலா, இளவரசியின் குடும்பத்தினர் பெயர்களைத் தாங்கித் தொடங்கப்பட்டு இருக்கும் பல்வேறு நிறுவனங்கள், அதில் செய்யப்பட்ட முதலீடுகள் பற்றிய ஆவணங்களை மொத்தமாக மத்திய உளவுத் துறை அள்ளிச் சென்று உள்ளது.
சசிகலாவின் மூத்த அண்ணன் பெயர் சுந்தரவதனன். அவருக்கு அனுராதா, டாக்டர் வெங்கடேஷ், பிரபாவதி ஆகிய மூன்று வாரிசுகள் உண்டு. இதில் பிரபாவதியின் கணவரான டாக்டர் சிவக்குமார் பெயர், இந்த ஆவணங்களில் அதிகமாக வலம் வருகிறது. டாக்டர் வெங்கடேஷ், அவரது மனைவி ஹேமா வெங்கடேஷ் ஆகியோர் பெயர்களும் இடம்பெறுகின்றன.
இளவரசிக்கு கிருஷ்ணப்பிரியா, சகீலா ஆகிய இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில், கிருஷ்ணப்பிரியாவின் கணவரான கார்த்திகேயனின் பெயர் அதிகமாக இடம்பெற்று உள்ளது. திருச்சியைச் சேர்ந்த கலியபெருமாளின் மகன் இந்த கார்த்திகேயன்.
ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் பெயரும் அதிகம் உள்ளது.
எம்.நடராசனின் சகோதரியான ஆண்டாள் என்பவரின் மகனான குலோத்துங்கன் பெயர், சில நிறுவனங்களில் இடம்பெற்று உள்ளது.
2015-ம் ஆண்டு வெளியான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, ஜெயலலிதாவோடு ஒரே வீட்டில் வசிக்கும் சசிகலா, இளவரசி மற்றும் அவர்களுடைய உறவினர்கள்தான் இந்தப் புதிய சொத்துக்களை நிர்வகித்து வருபவர்களாகவும், அவற்றை இயக்கும் சக்திகளாகவும் இருந்து வருகின்றனர்.
ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங்
2005-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. 2011 டிசம்பரில் ‘ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குநர்களாக இரண்டு பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் ‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி. மற்றொருவர், பூங்குன்றன்.
அதாவது இந்தக் காலகட்டத்தில் தான் சசிகலா குடும்பத்தினர் அ.தி.மு.க-வை விட்டு நீக்கப் படுகிறார்கள். அப்போது, ‘சோ’ ராமசாமி இதனுள் சேர்க்கப்படுகிறார். பூங்குன்றன் போயஸ் கார்டன் ஊழியர். போயஸ் கார்டன் இல்லத்துக்கு வரும் கடிதங்கள், பத்திரிகைச் செய்திகளை ஜெயலலிதாவின் பார்வைக்குக்கொண்டு செல்பவர். இவருடைய தந்தை பெயர் புலவர் மகாலிங்கம். ‘நமது எம்.ஜி.ஆர்.’ பத்திரிகையில் பணியாற்றியவர். பூங்குன்றனும், சோ ராமசாமியும்தான் ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் இயக்குநர்களாக இருந்தனர். நவம்பர் 2012-ல் சோ ராமசாமி இந்த நிறுவனத்தில் இருந்து விலகிவிடுகிறார். அதாவது சசிகலா, மீண்டும் உள்ளே வந்த பிறகு சோ விலகிவிடுகிறார். அதன்பிறகு, டாக்டர் கே.எஸ்.சிவக்குமார், கார்த்திகேயன் என்ற இருவரும் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக ஆகின்றனர்.
இந்த ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் நிறுவனத்தின் சேர்மன் சசிகலா. 2014-ம் ஆண்டு, சேர்மன் சசிகலாவின் முன்னிலையில், இளவரசியை மற்றொரு ‘சேர் பெர்சன்’ என்று அறிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதோடு, இளவரசி எந்த நாளில் சசிகலா முன்னிலையில் ‘சேர் பெர்சன்’ என்று நியமிக்கப்படுகிறாரோ அன்றுதான் ‘ஹாட் வீல்ஸ்’ நிறுவனத்தின் பெயர், ‘ஜாஸ் சினிமாஸ்’ என்று மாற்றப்பட்டது. அதுதான் தற்போது வேளச்சேரி ‘ஃபீனிக்ஸ்’ மாலில் உள்ள நவீன வசதி படைத்த தியேட்டர்கள். (இதற்கான ஆதாரம் 7ம் பக்கத்தில் காட்டப்பட்டு உள்ளது.) இளவரசியின் மகன் விவேக் ஜாஸ் சினிமாவின் சி.இ.ஓ. என காட்டப்பட்டிருக்கிறார்.
சந்தனா எஸ்டேட்ஸ்
1995-ல் சுதபத்துலு பாஸ்கர ராவ், அடப்பல வீர வெங்கடபாஸ்கர ராவ், அடப்பா நரசிம்ம ராவ், சுதபத்துலு வெங்கட ராம ராவ் என்பவர்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி நடத்திய நிறுவனம்தான், ‘சந்தனா எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட்.’ அதன்பிறகு இந்த நிறுவனம் அவர்களிடம் இருந்து கைமாறி உள்ளது. ஒரு காலத்தில் போயஸ் தோட்டத்தையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த ராவணன், இந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்துள்ளார். பிறகு, அவர் வெளியேறி உள்ளார். அவர் வெளியேறியதும் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி இந்த நிறுவனத்தின் இயக்குநராக உள்ளே வந்துள்ளார். (ஹாட் வீல்ஸ் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டது மாதிரியே சோ சேர்க்கப்பட்டு பின்னர் விலகி உள்ளார்.) பிறகு, மீண்டும் ஒருகட்டத்தில், சோ ராமசாமி வெளியேறுகிறார். பூங்குன்றன் இயக்குநர் ஆகிறார். இடைப்பட்ட காலத்தில் சில நாட்கள் தமிழ்மணி என்பவர் இயக்குநராக இருந்துள்ளார். போயஸ் கார்டனில் இருந்து சசிகலா, ராவணன் ஆகியோர் வெளியேற்றப்பட்டபோது இந்த தமிழ்மணி, நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி நடைபெற்ற, ‘மியூஸிக்கல் சேர்’ போட்டியில், கடைசியில் இப்போது கார்த்திகேயன் மற்றும் டாக்டர் வி.எஸ்.சிவக்குமார் ஆகியோர் இயக்குநர்களாக அமர்ந்து இருக்கிறார்கள்.
ரெயின்போ ஏர்
ஆகஸ்ட் 1, 2009-ல் 5 கோடி ரூபாய் முதலீட்டில் ‘ரெயின்போ ஏர்’ நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் பங்குதாரர்கள் வி.ஆர்.குலோத்துங்கன், சவுந்தரபாலன், கார்த்திகேயன். இது 38-16, ஜியான் அபார்ட்மென்ட்ஸ், 38, வெங்கட்ராமன் தெரு, தியாகராய நகர் சென்னை- 17 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. (இதே முகவரி 18 நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது) நாம் நேரில் போய்ப் பார்த்தபோது, அங்கு எந்த நிறுவனமும் இல்லை. ஆனால், குலோத்துங்கன் என்பவர் அங்கு வசிக்கிறார். ஒரு பெரிய அபார்ட்மென்டில் உள்ள ஒரு வீடு அது. குலோத்துங்கனின் செக்யூரிட்டி மட்டும் இருக்கிறார்.
லைஃப் மெட்
கோபாலபுரத்தில் ‘லைஃப் மெட்’ என்ற மருத்துவமனை உள்ளது. இதன் முகவரி, பழைய எண் 32. புதிய எண் 12. கான்ரான் ஸ்மித் சாலை, கோபாலபுரம், சென்னை-86. ஜனவரி 2011-ல் ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இதன் இயக்குநர்கள் திருநாராயணன் அருண்குமார், ஹேமா வெங்கடேஷ், டாக்டர் கே.எஸ்.சிவக்குமார் ஆகியோர்.
மேவிஸ் சாட்காம்
1998-ம் ஆண்டு மேவிஸ் சாட்காம் நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனின் மகன் டாக்டர் வெங்கடேஷ், பிரபாவதி சிவக்குமார், சசிகலாவின் மற்றொரு அண்ணன் விநோதகனின் மகன் கே.வி.மகாதேவன் ஆகியோர் ஆரம்பத்தில் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்துள்ளனர். தொடக்கத்தில் இதன் முதலீடு ரூ.21.20 கோடி. அதன்பிறகு, டாக்டர். வெங்கடேஷ் (அ.தி.மு.க இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையை தமிழகம் முழுவதும் ஒரு காலத்தில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்) இந்த நிறுவனத்தின் இயக்குநராக சிறிது காலம் இருந்துள்ளார். அதன்பிறகு, டி.டி.வி.தினகரனின் மனைவி அனுராதா தினகரன், மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு, அ.தி.மு.க.
எம்.பி-யாக இருந்த பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் சிறிது காலம் இந்த நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு, பூங்குன்றன், பிரபாவதி சிவக்குமார், மனோஜ் பாண்டியன், பழனிவேலு ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். இவர்களில் பழனிவேலு என்பவர் சசிகலாவின் கணவர் ம.நடராஜனின் சகோதரர்.
இந்த நிறுவனத்தின் கீழ்தான், ‘ஜெயா’ தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அவற்றின் குழுமச் சேனல்களையும் இந்த நிறுவனம்தான் ஒளிபரப்புகிறது. மேவிஸ் சாட்காம் என்பது நிறுவனத்தைப் பதிவு செய்வதற்காக கம்பெனி பதிவாளரிடம் கொடுக்கப்பட்ட பெயர்.
கியூரியோ ஆட்டோ மார்க்ஸ்
2002-ம் ஆண்டு, ராஜ் ஹெச்.ஈஸ்வரன், ஹரி ஈஸ்வரன் ஆகியோர் தொடங்கிய நிறுவனம் இந்த ‘கியூரியோ ஆட்டோ மார்க்ஸ்.’ இதன் முதலீடு தொடக்கத்தில் 5 லட்ச ரூபாய்.
பத்திரிகை, செய்தித்தாள், வார இதழ், புத்தகம் அல்லது இதர வடிவிலான ஊடகம் தொடங்கும் நோக்கத்தில் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2004-ல் இந்த நிறுவனத்துக்குப் புதிதாக வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன், அவருடைய சகோதரர் ஜெகதீசன், டாக்டர் சிவக்குமார் ஆகியோர் இயக்குநர்களாக பொறுப்பேற்று உள்ளனர். இதையடுத்து, 29 மார்ச் 2008-ல் வைகுண்டராஜனும், நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ராஜ் ஹெச்.ஈஸ்வரனும் ராஜினாமா செய்துள்ளனர். அதன்பிறகு வைகுண்டராஜனின் சகோதரர் ஜெகதீசன் மற்றும் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்தனர். அதன்பிறகு, பூங்குன்றன் இந்த நிறுவனத்துக்கு இயக்குநராகி உள்ளார். 2012-ம் வருடம், கார்த்திகேயன் மற்றும் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாகி இன்னும் தொடர்கின்றனர்.
மிடாஸ் கோல்டன் ப்ரூவரிஸ்
எம்.நடராஜனின் தங்கை மகன் குலோத்துங்கனும், டாக்டர் சிவக்குமாரும் சேர்ந்து தொடங்கிய நிறுவனம்தான் மிடாஸ் கோல்டன் ப்ரூவரிஸ் நிறுவனம். 2008, பிப்ரவரி மாதம் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களைத் தயாரிக்கும் நிறுவனம்தான் இது.
ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ்
ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம், 1994-ம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூரில் நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் இது சேர்க்கப்படவில்லை. எப்படியோ அப்போது இந்த நிறுவனம் தப்பி உள்ளது. இதன் ஆரம்ப முதலீடு 50 லட்ச ரூபாய். நிறுவனத்தின் தொழில் நோக்கம், அசையும் அசையாச் சொத்துக்களின் பேரில் நிதி வழங்குவது, கடன் வழங்குவது. அதன்பிறகு, 2002-ம் ஆண்டு, தங்கம், முத்து, பவளம், வைரம் வைடூரியம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு கடன் வழங்கலாம் என்று தொழில் நோக்கம் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன்பிறகு, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 2001-ல், இந்த நிறுவனத்தில் இருந்து விலகி, இரண்டு பேர் புதிய இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் டாக்டர் சிவக்குமார். மற்றொருவர் அனந்தராமன். 2008-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் முதலீடு 6 கோடியே ஆறரை லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருப்பவர்கள், கார்த்திகேயன், டாக்டர் சிவக்குமார் மற்றும் பூங்குன்றன் ஆகியோர். இந்த நிறுவனத்தின் சார்பில் ஜெயலலிதாவுக்கு ஒரு கோடி ரூபாய் கடன் கொடுத்து உள்ளனர்.
மேலும் சில நிறுவனங்கள்!
1. காட்டேஜ் ஃபீல்டு ரிஸார்ட்ஸ் லிமிடெட்
இதில் டாக்டர் சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோர் இந்த நிறுவனத்தில் தொடர்பு உடையவர்களாக உள்ளார்கள்.
15.06.2012-ம் தேதியில் இருந்து இவர்களுக்கு இந்த நிறுவனத்துடன் தொடர்பு உள்ளது.
2. வேர்ல்ட் ராக் பிரைவேட் லிமிடெட்
வைகுண்டராஜன் சுப்பிரமணியன், சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு 23.04.2012 முதல் தொடர்பு உள்ளது.
3. சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு 15.06.2012 முதல் தொடர்பு உள்ளது.
4. மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரிஸ் பிரைவேட் லிமிடெட்
சிவக்குமார் பெயர் 14.06.2004 தேதியில் இருந்தும் கார்த்திகேயன் பெயர் 23.01.2012-ம் தேதியில் இருந்தும் இருக்கிறது.
5. அவிரி ப்ராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்
சிவக்குமார், கார்த்திகேயன் ஆகிய இருவரது பெயர்களும் 15.06.2012 முதல் உள்ளன.
6. ஃபேன்ஸி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட்
வெங்கடாச்சலம், சங்கர்ராமன் ஆகிய இருவரும் 02.12.2013-ம் தேதியில் இருந்தும் கே.எஸ்.சிவக்குமார், கார்த்திகேயன் ஆகிய இருவரும் 15.06.2012-ம் தேதியில் இருந்தும் தொடர்பில் உள்ளனர்.
விசாரணை வளையம்?
சில மாதங்களுக்கு முன் டெல்லியில் வைத்து, சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்தபோது, ‘‘சொத்துக்குவிப்பு வழக்கு என்பது 1991 முதல் 1996-ம் ஆண்டு வரையிலான முறைகேடுகளுக்காக மட்டுமே போடப்பட்டது. இந்தக் காலகட்டத்துக்குப் பிறகு பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. அது சம்பந்தமாகத் தகவல்களைத் திரட்டி வருகிறேன். புது வழக்கை தாக்கல் செய்வேன்” என்று கூறினார். அப்போது முதலே அவர் தகவலைத் திரட்ட ஆரம்பித்து மத்திய அரசிடம் அந்த ஆவணங்களை ஒப்படைத்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கப்பிரிவு போன்ற துறைகள் கண்கொத்திப் பாம்பாக இதனைக் கவனிக்க ஆரம்பித்து உள்ளன. தேர்தல் அஸ்திரங்களில் இதுவும் ஒன்றாக மாறலாம்.
– ஜூ.வி. டீம்
எந்தெந்த நிறுவனங்கள்?
18 ஆண்டு தலைவலிக்குப் பிறகு மீண்டு வந்து, (உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வராவிட்டாலும்!) மீண்டும் பிரச்னை தரக்கூடிய நிறுவனங்களாக எழுந்து நிற்பவற்றில் சில…
1. ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட்
2. சந்தனா எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட்
3. ரெயின்போ ஏர் நிறுவனம்
4. லைஃப்மெட்
5. மேவிஸ் சாட்காம்
6. கியூரியோ ஆட்டோ மார்க்ஸ்
7. மிடாஸ் கோல்டன் ப்ரூவரிஸ்
8. ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்
9. காட்டேஜ் பீல்டு ரிஸார்ட்ஸ் லிமிடெட்
10. வேர்ல்ட் ராக் பிரைவேட் லிமிடெட்
11. சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
12. மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரிஸ்
பிரைவேட் லிமிடெட்
13. அவிரி ப்ராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்
14. ஃபேன்ஸி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட்
15. ஜாஸ் சினிமாஸ்
2. சந்தனா எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட்
3. ரெயின்போ ஏர் நிறுவனம்
4. லைஃப்மெட்
5. மேவிஸ் சாட்காம்
6. கியூரியோ ஆட்டோ மார்க்ஸ்
7. மிடாஸ் கோல்டன் ப்ரூவரிஸ்
8. ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்
9. காட்டேஜ் பீல்டு ரிஸார்ட்ஸ் லிமிடெட்
10. வேர்ல்ட் ராக் பிரைவேட் லிமிடெட்
11. சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
12. மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரிஸ்
பிரைவேட் லிமிடெட்
13. அவிரி ப்ராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்
14. ஃபேன்ஸி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட்
15. ஜாஸ் சினிமாஸ்
– இவற்றுக்குக் கீழே கிளை நிறுவனங்களாகப் பல உள்ளன.
கடன் பெற்றுள்ள நிறுவனங்கள்!
ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் மற்றொரு நிறுவனம், ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ். இதில், ஜெயா பிரின்டர்ஸ் என்ற நிறுவனம் 76 லட்சமும், ஜெ. ஃபார்ம் ஹவுஸ் என்ற நிறுவனம் 58 லட்சமும், மகாலெட்சுமி என்ற நிறுவனமும் மகாலெட்சுமி திருமண மண்டபமும் 28 லட்சமும் முதலீடு செய்துள்ளன. இந்த நிறுவனங்கள் எல்லாம் பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் என்று நிரூபிக்கப்பட்டவை. அதாவது, அவர்களுடைய நிறுவனங்கள் அவர்களுடைய மற்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, விற்று, அவர்களுக்கே கடன் கொடுக்கும் தொழில் செய்துவருகின்றன. அது எப்படி என்பதற்கு ஆதாரமாக ஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளவர்களையும் முதலீடு செய்தவர்களையும் பார்த்தால் புரியும்.
1.ஜெயலலிதா, 2.வி.கே.சசிகலா, 3.இளவரசி, 4.ஸ்ரீஹரி சந்தானா ரியல் எஸ்டேட்ஸ், 5.ஃபேன்சி டிரான்ஸ்போர்ட்ஸ், 6.க்ரீன் ஃபார்ம் ஹவுஸ், 7.ஜெயா பிரின்டர்ஸ், 8.ஜெயா ரியல் எஸ்டேட்ஸ், 9.லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் அண்டு டெவலப்பர்ஸ், 10.ஸ்ரீஹரி சந்தானா ரியல் எஸ்டேட்ஸ், 11.ராயல் வேலி ஃப்ளிடெக் எக்ஸ்போர்ட்ஸ், 12.அவிக்னா அக்ரோ, 13.காட்டேஜ் ஃபீல்ட் ரிசார்ட்ஸ், 14.அவிரி ப்ராப்பர்ட்டிஸ், 15.பரணி ரிசார்ட்ஸ், 16.காட்டேஜ் ஃபீல்ட் ரிசார்ட்ஸ், 17.கோவிந்தராஜன், 18.ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங், 19.ஜெயா இன்வெஸ்ட்மென்ட் ஏஜென்சி, 20.வி.ஆர்.குலோத்துங்கன்
சத்யம் அதிபர் மீது நில அபகரிப்புப் புகார்
சென்னை, நுங்கம்பாக்கம், காசி கார்டன், குமரப்பா தெருவில், அடிபள்ளி கந்தசாமி செட்டி அண்டு செஞ்சு வெங்கடசுப்பு குருவஜம்மா அறக்கட்டளை இயங்கி வருகிறது. இதன் பொருளாளர் எதிஸ் குப்தா.
இவர் 2013-ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், தங்கள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 16 கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு இன்றைய தேதியில் பல கோடி ரூபாய். ஆனால், அதை தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் சம்பந்தியான உமா மகேஸ்வரி எங்களிடம் இருந்து மிகக் குறைந்த விலையைக் கொடுத்து அபகரித்துக்கொண்டார். அப்படி அபகரித்துக்கொண்ட நிலத்தில், 2.5 கிரவுண்டை சூசய் ஆனந்த் ரெட்டி என்பவருக்கு விற்றுவிட்டார். அதை சூசய் ஆனந்த் ரெட்டி அவருடைய உறவினரான ஸ்வரூப் ரெட்டிக்கு விற்றுவிட்டார். ஸ்வரூப் ரெட்டி என்பவர் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் இயக்குநர்.
இப்போது, அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு எங்களை மிரட்டவும் செய்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, உமா மகேஸ்வரியும் சூசய் ஆனந்த் ரெட்டியும் கைதுசெய்யப்பட்டனர். சத்யம் சினிமாஸ் இயக்குநர் ஸ்வரூப் ரெட்டி கைதுசெய்யப்படவில்லை. ஆனால், செப்டம்பர் 2013 – அன்று அவருடைய பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக