வானொலியின் அருமை, பெருமை பற்றி சென்னைவாசிகள் மறுபடியும் உணர ஒரு வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.
நகரின் பல பகுதிகளில் 3 நாட்களுக்கு மேல் மின்சாரம் இல்லாமலிருந்தது. அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் பழைய வானொலிப் பெட்டிகளைத் தேடியெடுத்து ஒலிபரப்புகளைக் கேட்டனர்.
வானொலி நிலையங்களும் நிலைமைக்கு ஏற்ப செயற்பட்டன. அவதிக்குள்ளானவர்கள் வானொலி நிலையங்களை அழைத்து தங்கள் நிலை பற்றிக் கூறினார்கள். உணவு, குடிநீர், மீட்புப்படை உதவிகளைக் கோரினார்கள்.
பல பண்பலை வானொலி நிலையங்கள் தங்கள் வழமையான நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு, 24 மணி நேரமும் வெள்ள நிலைமை பற்றி தகவல்களை ஒலிபரப்பின.
ஆலந்தூரைச் சேர்ந்த தேவி என்ற பெண்மணி தான் வழமையாக சமையல் செய்யும்போது வானொலியில் பாடல்கள் கேட்பதாகவும் ஆனால் தனது ஃப்ரிட்ஜ்க்கு மேல் இருக்கும் அந்த சிறிய பெட்டி எவ்வளவு அற்புதமானது என்பதை தான் முன்னர் உணரவில்லை என்றும் கூறினார்.
நேயர்கள் நிலையங்களைத் தொடர்பு கொண்டு தங்கள் பகுதி நிலைமைகளை உடனுக்குடன் நேரடியாக தகவல் கொடுத்தார்கள். வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கும் இத் தகவல்கள் பயனளித்தன. வெள்ளிக்கிழமை (4/12) நண்பகல் வெள்ளத்தில் மூழ்கியிருந்த சைதாப்பேட்டை பாலம் மீண்டும் திறக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதும் மக்கள் ஆரவாரம் செய்து அத்தகவலை வரவேற்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் இந்த முக்கிய இணைப்புப்பாலம் புதன்கிழமை தொடக்கம் பல அடி வெள்ள நீரில் மூழ்கியிருந்தது.
தொலைபேசி இல்லாமல் இருந்தவர்களுக்கு வானொலி நிலையங்கள் தகவல் பரிமாற்ற நிலையங்களாகவும் செயற்பட்டன. குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பற்றிய தகவல்களை அறிந்து அவர்களைப்பற்றிக் கேட்டவர்களுக்கு எடுத்துச் சொல்லின.
பல அறிவிப்பாளர்கள் நீண்ட நேரம் பணியாற்றினார்கள். அறிவிப்புகள் சரியான ஆட்களுக்கு, சரியான முறையில் கிடைப்பதை உறுதிப்படுத்தினார்கள்.
வானொலி நிலையங்கள் மூலமாக உதவித்தொகைகளும் வந்து சேர்ந்தன. சிக்காகோவில் உள்ள எஸ். ராஜேஷ் என்ற சென்னைவாசி வெள்ள நிவாரண நிதியாக தன் நண்பர்களிடம் பணம் திரட்டி 4,000 டாலரை ஒரு பண்பலை வானொலி நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்.
வானொலி நிலையங்களும் தங்கள் ஊழியரை அனுப்பி வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் விநியோகம் செய்தன.
(தகவல்: டைம்ஸ் ஆஃப் இந்தியா http://bit.ly/1OJ6UEo)
நன்றி: திரு. உமாகாந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக