திங்கள், மார்ச் 28, 2016

ஆண்டாள் கோவில்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம்…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது எனக்கு விளையாட்டு மைதானம் போன்றது…
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் என்பதை விட நேரத்தை ஏற்படுத்தி ஆண்டாள் கோவில் செல்வதை இன்றளவும் வழக்கமாக வைத்திருக்கின்றேன்… ஒவ்வொரு முறை செல்லும்போதும் எத்தனையோ விஷயங்களை அந்த கோவிலில் இருந்து கற்று கொண்டு இருந்தாலும் சில நெருடல்களும் அவ்வப்போது அனுபவமாக கிடைத்து கொண்டு தான் இருக்கின்றது.
நெருடல் 1:-
கர்ப்ப கிரகத்திற்குள் பூஜை செய்பவர்கள் மட்டும் தான் போக வேண்டும் என்பது விதி… ஆனால் பணம் கிடைக்கின்றதே என்பதற்காக பெரும் செல்வந்தர்களையும், பெரும் புள்ளிகளையும் கர்ப்ப கிரகத்தினுள் அனுமதிப்பது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை…
நெருடல் 2:-
சமீபத்தில் தமிழ் நாட்டின் மிக முக்கியமான பெண் அமைச்சர் ஒருவருடன் ஆண்டாள் கோவில் போயிருந்தேன். 15 வருடமாக எனக்கு தெரிந்த அர்ச்சகர்கள் எங்களை நன்கு கவனித்தார்கள். முடிவில் நான் எதிர்பாராத தருணத்தில் வடபத்ரசாயி சன்னதியின் மூலஸ்தானத்தை திறந்து அம்மா, பெருமாளை நன்கு தொட்டு சேவித்து கொள்ளுங்கள், பெருமாளின் காலையும், கையையும் தொட்டு தடவி அமுக்கி விடுங்கள் என்று சொல்லி செய்தும் காண்பித்தார்.
அதன் பின் அவர் சொன்னது:-
ஆண்டாள் சார் நீங்களும், அமைச்சரும், அமைச்சரின் கணவரும் பயங்கர புண்ணியம் செய்து இருக்க வேண்டும் காரணம் மூலஸ்தான பெருமாளை தொடுவது என்பது சாமானியனுக்கு கிடைக்கும் வாய்ப்பில்லை… கும்பாபிஷேகம் நடக்க இருப்பதற்கு சில நாள் முன் வரை பெருமாளை தொட்டு சேவிக்காலாம் அதன் பிறகு முடியாது. இன்று நீங்கள் தொட்டு சேவித்ததால் பெரும் பாக்கியசாலிகள் என்று சொல்லிவிட்டு நாங்கள் தொட்டு சேவித்த பிறகு நடையை சாத்தி விட்டு எங்களை வழி அனுப்பி வைத்தார்கள்…
ஆடி Car – ல் பயணம் என்றாலும் ஆடி தான் போய் விட்டேன்…
என்ன அயோக்கிய தனம்…. 15 வருடம் தெரிந்த அர்ச்சகரே மந்திரியுடன் வந்து இருக்கின்றேன் என்ற உடன் எப்படி உருமாறி, எவ்வளவு தரம் தாழ்ந்து இப்படி ஒவ்வாத விஷயத்தை செய்கிறார் என்று என்னை நானே நொந்து கொண்டேன்…
தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில் அந்தந்த கோவில்களின் அர்ச்சகர்களை தவிர வேறு யாரும் கர்ப்பகிரகத்திற்குள் போக கூடாது (அல்லது) எல்லோரும் எல்லா இடத்திற்கும் போகலாம். இரண்டில் ஒன்று குறித்து சரியான நேரத்தில் சரியான வகையில் முடிவெடுக்கப்படும்; அந்த முடிவிற்கு காரணமாக நான் இருப்பேன் என்பதை உறுதியாக கூறி கொள்கின்றேன்.
அதிக பணம், பெரும் தலைவர் என்றால் ஒரு வகையான அதிகப்படி சலுகை ஒருவனுக்கு கிடைக்கும் என்றால் இது சமூக அநீதி… பணம் படைத்தவனுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தான் கோவில் என்றால் இல்லாதவனுக்கு எதுவும் இல்லையா என்ற இரண்டாம் கேள்விக்கு பதிலாக இரண்டு முடிவெடுத்தேன்.
  1. சாமானியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று சமுதாயத்தால் வர்ணிக்கப்படுகிறவர்கள், கஷ்டப்படுகிறவர்கள் (உடலாலும் / மனதாலும் / பணத்தாலும்) என 100 பேரை திரட்டி மூலவர் வடபத்ரசாயியை ஒரு அமைச்சர் எப்படி தரிசனம் செய்தாரோ அதுபோல் தரிசனம் செய்ய வைப்பது என்றும்
  2. அரசியல் அதிகாரம் நம் வசம் வரும்போது கட்டணம் இன்றி, எந்த பிரிவும், பாகுபாடும் இன்றி அனைவருக்கும் சம தரிசனம் என்ற நிலைப்பாட்டை உருவாக்குவது என்றும் முடிவெடுத்தேன்.
முதல் முடிவின் படி ஏறத்தாழ சாமானியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று சமுதாயத்தால் வர்ணிக்கப்படுகிறவர்கள், கஷ்டப்படுகிறவர்கள் (உடலாலும் / மனதாலும் / பணத்தாலும்) என 100 பேரை திரட்டி மூலவர் வடபத்ரசாயியை தொட்டு தரிசனம் செய்ய வைத்து விட்டேன்.
இரண்டாம் முடிவும் நிறைவேற ரொம்ப நாள் ஆகாது என்பதையும் கூறிக் கொள்கின்றேன்…
ஆக பிரச்சினையும், தீர்வும் சொல்லியாகிவிட்டது விஷயம் முடிந்ததா என்றால் கண்டிப்பாக முடியாது; முடிவடையாது. மூலம் தெரியாமல் – புரியாமல்.
மூலம் என்ன:-
ஆண்டாள் சன்னதியில் வேலை செய்ய கொடுத்து வைத்து இருக்க வேண்டும். அதை மறந்து பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையின் இலக்கு என்று என்னும் மாக்கள் திருந்தாவிட்டால் இது போன்று புது, புது விஷயங்களை பணத்திற்காக உண்டு பண்ணி கொண்டு தான் இருப்பார்கள்.
செத்து போன மீனுக்கு கூட குறிக்கோள் இருக்கின்றது – செத்தபிறகு கரை ஒதுங்க வேண்டும் என்று….
ஆனால் இது போன்ற மாக்களுக்கு தான் பிறப்பு முதல் இறப்பு வரை குறிக்கோள் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலை….
இதை ஒட்டுமொத்தமாக சரி செய்ய வேண்டும் என்றால் நம் அனைவருக்கும் குறிக்கோள் இருக்க வேண்டும்
-    “தவறு / தப்பு நடக்கும்போது தட்டி கேட்க வேண்டும்” என்பது தான் அந்த குறிக்கோள்.
நீங்கள் கோவிலுக்கு போவது மன அமைதிக்காக என்று கோவிலில் நடக்கும் அநீதிகளை பார்த்தும், பார்க்காமல் வந்தால் அதைவிட சமூக அநீதி வேறு எதுவும் கிடையாது.
கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர்…
கோவில் எல்லோருக்கும் பொதுவானது….
கோவிலில் எல்லோருக்கும் சம உரிமை உண்டு….
என்பதை நினைவில் நிறுத்தி கொண்டு
இறந்த மீன் போன்று குறிக்கோளுடன் வாழப் போகிறீர்களா? (அல்லது)
உயிருள்ள மாக்களாக வாழப் போகிறீர்களா என்பதை உங்கள் முடிவிற்கே விட்டு விடுகின்றேன்.

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக