சனி, ஜூன் 26, 2010

நண்பனின் டைரிக்குறிப்பு

காதல் ... காதல் பற்றி எழுத நானொன்றும் கவிஞன் அல்ல.. வாரணம் ஆயிரம் , விண்ணைத்தாண்டி வருவாயா என படக்கவிதை படைக்க கௌதம் வாசுதேவ் மேனனும் அல்ல...சாந்தாமணியும் காதல் கதைகளும் என எழுத வாமுகோமுவும் அல்ல நம் நாயகன் . இது போலவே நாயகனின் கதையொன்றும் கருவாச்சி காவியமும் அல்ல.

இருப்பினும் இந்த டைரிக்குறிப்பை அவன் எனக்கு தந்த போது இதே போன்றுதானே சேரனும் , இன்னும் சில டைரக்டர்களும் அவன் கதையை போன்றே கதை படைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது.

இருக்கட்டும். வலைப்பதிவு என்ன ? வாராந்திர பத்திரிக்கையா ! அவனது கதையை பிரசுரிக்காமல் திருப்பி அனுப்ப .

டைப் பண்ணுவது மட்டுமே சற்று கடினமான இந்த வலையுலகத்தில் அதற்க்கான தீர்வையும் tamileditor.org அளித்துவிட்டார்கள். பிறகென்ன கவலை .. அச்சிடுவோம்.

விஜய் இது அவனது தோற்றப்பெயர். அவனது அப்பாவும் , அம்மாவும் நியூமராலஜி எல்லாம் பார்க்காமல் அவனது அப்பார் சொன்ன ஒரே காரணத்துக்காக வைத்த பெயர். பிறந்து வளர்ந்தது எல்லாம் ஒரு வரப்பட்டிக்காடுதான். ஒண்ணாவது முதல் மூன்றாவது வரை உள்ளூரில் உள்ள கவர்ன்மெண்ட் பள்ளிக்கூடத்தில் தான் படிப்பு.

அந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியை ஒரு நாளில் அவனிடமும், வகுப்பு மாணவர்களிடமும் கேட்ட கேள்வி " நல்லாப் படிச்சு பின்னாடி என்ன ஆகணுமின்னு ஆசை? என எல்லாரிடமும் கேட்ட போது இவனுடைய பெரியம்மா பொண்ணான அக்கா " தறிக்கு நூல் சுத்தப்போவேனுன்னு " சொல்லியதையும் , தனது ஊர் மாட்டு ஆஸ்பத்திரி டாக்டர் பொண்ணு " இன்ஜினியர் ஆவேன்" என்றும் , இவனிடம் கேட்ட போது "தானொரு விமான ஓட்டியாக போவதாகவும் " சொல்லியதையும் ஞாபகத்தில் வைத்திருந்தவன் , பிற்காலத்தில் வாழ்க்கையில் , கால ஓட்டத்தில் வளைந்து சென்றதும் , தற்போதும் தனது கணவனின் தறிக்குடோனில் தறிக்கு நூல் நூற்றுக்கொண்டு இருக்கும் அவன‌து அக்காவும் , அமெரிக்காவில் இன்ஜினியராக இருக்கும் டாக்டர் பொண்ணும் அவ்வப்போது வியப்புடன் எண்ணிப்பார்ப்பதுண்டு.

விஜய் பிறிதொரு நல்ல நாளில் தனது ஊர்ப் பள்ளிக்கு சென்ற போது அப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பழனிவாத்தியார் , பக்கத்து டவுனில் ஆசிரியராக இருக்கும் தனது அப்பாவை , பள்ளி மாணவர்கள் முன் கேவலமாக திட்டியதன் காரணமாக " இனி அந்தப் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் " என்று ஆர்ப்பாட்டம் செய்து தனது அப்பாவின் அதே பள்ளியில் நான்காம் வகுப்பில் சேர்ந்தான்.

விஜய் டவுன்பள்ளியில் சேர்ந்த போது , அந்த பள்ளிக்கு பஸ்ஸில் வரும் , அதுவும் கோபியில் இருந்து வருகின்ற‌ கூலிங்கிளாஸ் போட்ட பஸ்ஸில் வரும் ஒரே மாணவன் என்னும் தகுதியினைப் பெற்றிருந்தான். அதுவுடன் கூடவே வாத்தியார் மகன் என்ற பெயரும் தன்னுடன் படிக்கும் மாணவர்களிடமும் ,மாணவிகளீடமும் ஒரு வித மரியாதையை தந்திருந்தன. இந்த மரியாதையுடன் கூடவே காலாண்டு மதிப்பெண் ரேங்க் கார்டில் முதல் மாணவனாக வந்ததும் விஜய்க்கு கூடுதல் மரியாதையைத் தந்தன.

இந்த மரியாதையுடன் சற்று மமதையாக இருந்தவனுக்கு விதி தனது பக்கத்து வகுப்பு மாணவர்கள் வழியில் சதி செய்தது. அவர்கள் தனது வகுப்பு குப்பையை தட்டிச் சந்தில் இவனது வகுப்பில் தள்ளி விட , இவனது வகுப்புத்தோழிகள் இவனிடம் முறையிட லீடர் என்றமுறையிலும் , வாத்தியார் மகன் என்ற முறையிலும் , மாணவிகளிடம் தனது செல்வாக்கை நிலை நாட்ட பக்கத்து வகுப்பு மாணவர்களீடம் சண்டைக்குச் சென்று ஒரு மாணவனின் தலையை உடைத்து வகுப்பாசிரியர்களீடம் மிதி வாங்கியது தனிக்கதை.

அதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் போது ஏற்படும் ரேங்க் போட்டியில் எப்போதும் இவனே முதல் ரேங்க் , மாணவிகளில் "மதி"யே இரண்டாவது ரேங்க் என எடுத்துக்கொண்டு இருக்க பொறாமைப்பட்ட மாணவிகளில் சிலர் "மதி" வாத்தியார் மருமகள் அதுனாலதான் அவளே எப்பவும் ரெண்டாவது ரேங்க் வாங்கறாள், என்று சொல்லி வாத்தியார்களிடம் கிள்ளுவாங்கியது ஒரு மலரும் நினைவாகவே விஜய்யிடம் உண்டு, இவனுக்கும் கூட மதியிடமும் , மதியை வாத்தியார் மருமகள் என்று சொல்லிய மீனாவிடமும் ஒரு வித இனம் பிரியா நட்பு ஒன்று இருந்தது. இருவரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் கடலை மிட்டாய் , சாக்லேட் என இவனுக்கு தனியே தந்தது உண்டு.

மதி ஒரு முறை வகுப்புலீடராக இருந்த போது இவன் அருகில் நின்று தோளைத் தட்டிக்கொண்டிருந்தை அருகில் இருந்த நண்பன் கவனித்து "உனக்கு யோகமடா ! மீனா சொல்றது கூட உண்மைதான்டா "என புலம்பியதுண்டு.

மதி பொங்கல் விடுப்பில் தன் தலையை மொட்டை அடித்து வந்த போது இவன் அவளிடம் ஏன் சொல்லவில்லை என வருத்தப்பட , லீவ்வா போச்சு அவளும் என வருத்தப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.

ஆண்டுக்கடைசியில் தமிழ்ப்பாடத்தில் கடைசியாக உள்ள நாடகப்பாடத்தில் மாணவர்களும் , மாணவிகளும் தனித்தனியே நடத்திக்காட்டவேண்டும் என்று வகுப்பாசிரியர் சொல்லியதால் மாணவிகளும் , மாணவர்களும் மேக்கப்போட்டு அசத்திக்கொண்டு இருந்தார்கள். இதில் விஜய்க்கு புலவன் வேட‌ம் , பக்கம் பக்கமாக வசனம் இவனுக்கு மட்டும் , இவன் அந்தக்கவலையில் உருத்தட்டிக்கொண்டிருக்க, கூட வேடம் போடும் மாணவர்கள் இவனுக்கு என வேட்டி எடுத்து வந்திருந்தார்கள்.

மாணவிகள் மேக்கப் போடும் பக்கம் சென்ற மாணவர்கள் இவனிடம் வந்து டேய் மீனாதான்டா அங்கே புலவர் வேஷம் போடறா , அவ உதட்டுல செவச்செவன்னு என்னமோ மேக்கப் போடறா , கேட்டா சொல்ல மாட்டேங்கிறா , நீ போயிப்பாரு என்றார்கள். சரி என்று இவனும் சென்ற போது மீனாதான் என்ன ? என்று கேட்டாள்,

இவன் அவளிடம் அது என்ன உதட்டில் ?என்றான் . அதுவா அது எதுக்கு உனக்கு என்றாள். இல்லை நானும் புலவன் வேசம்தான் போடுகிறேன் , அதனாலதான் கேட்டேன் என்றான் . அதுக்கு மீனா " அப்படியா , கண்டிப்பா வேணுமா என்றாள் , இவனும் ஆம் என்றான்.

சரி கொண்டுவந்தது தீந்து போச்சு , வேணுமின்னா நீயே எடுத்துக்க என்று உதட்டைக் காட்டினாள்.
"இவனும் அப்படியா உதட்டில் இருந்து எப்படி எடுக்க" என்றான். "உன் உதட்டை அப்படியே ஒட்டவை" என்றாள். விளையாடதே வைத்து விடுவேன் என்றான் . அவளும் சற்றும் பயப்படவில்லை. சற்று நெருங்கி அவளின் உதட்டருகில் சென்றான் . அந்த நேரம் பார்த்து கிட்ட இருந்த விஜயின் நண்பன் இவனை தள்ளிவிட விஜய் மீனாவின் மேல் விழுந்ததுமில்லாமல் உதட்டில் இருந்த சாயத்தையும் தன் உதட்டில் ஒட்டிக்கொண்டான்.

மீனாவும் ஒன்றும் சொல்லவில்லை. இவனும் ஒன்றும் சொல்லவில்லை. மதிதான் காச்மூச்சென்று அறிவே இல்லையா என்று திட்டினாள். நாடகத்தில் இவனும் லிப்ஸ்டிக் போட்ட புலவனாகவே நடித்தான். வாத்தியார்கள் கூட இவனிடமும் , மீனாவிடமும் அது எப்படி புலவர்கள் லிப்ஸ்டிக் போட்டுகிட்டு ஒரே மாதிரி நடிக்கறீங்க ! என்று கேட்டார்கள். மாணவர்களும் நமுட்டுச் சிரிப்புடன் இருக்க , இவனின் அடுத்த அத்தியாயம் ஆறாம் வகுப்புச் செல்வதில் ஆரம்பமாகிறது.

...

1 கருத்து: