நேத்து வேலை கம்மிங்கறதுனால் 6 மணிக்கே பஸ்ஸ பிடிச்சு ஊருக்கு போலாமுன்னு பஸ் ஸ்டாண்ட் போனா எல்லாப் பஸ்ஸும் கூட்டம்,சரி ஒரு பிரைவேட் பஸ்ஸூல கடைசி சீட்டுல நடுவாண்ட உட்கார்ந்துட்டேன்,பக்கத்துல இருந்தவரு கொஞ்சம் இளமையா,கண்ணாடி அழகா போட்டுட்டு பாத்தா டிகிரி ஹோல்டர் மாதிரி இருந்தாரு.அவரு கண்டக்டரிடம் பேசுன நாட்டு நடப்புகளில் திருப்பூரின் எதிர்காலம் பத்தியும்,இன்னும் பல விசயங்கள் பத்தியும் நிறைய தெரிந்த தெரியாத விசயங்கள தெரிஞ்சுகிட்டேன்,
இதை அப்படியே உரைநடையில்,
கண்டக்டர்: நான் வந்து சேர்ந்த 6 மாதத்தில் இன்னைக்குதான் பஸ் இந்த டிரிப் லோடாகிப் பாத்துருக்கேன்.
கண்ணாடிக்காரர்: ஆமாங்க காலைல கூட சரியான கூட்டம்,ஊத்துக்குளியில் இருந்த நான் 5 பஸ்ஸு விட்டு 6வது பஸ்ஸுலதான் வந்தேன்ங்க.
கண்டக்டர்: அதுனாலதான் திங்கள்கிழமை டூட்டிக்கே நான் வரமாட்டேன்,13 ஆயிரம் கலெக்சன் ஆகும் ,ஆனா பேட்டா 100தான் தருவாங்க.
கண்ணாடி: அப்படியா ,கவலையே படாதீங்க, இன்னும் 6 மாதம்தான் திருப்பூர் பஸ்ஸு எல்லாம் காத்து வாங்கும்.
கண்டக்டர்:ஏங்க என்னாச்சு?
கண்ணாடி: மேட்டர் தெரியாதா? பிரிண்டிங் பட்டறை எல்லாம் இழுத்து மூடிட்டாங்க,எல்லாரும் வேலை இல்லாததால் ஊருக்கு போயிருவாங்க,கம்பெனிங்க எல்லாம் காத்து வாங்கும்,
பக்கத்தில் இருப்பவர்: அட அது சாயப்பட்டறைங்க.
கண்ணாடி: ஏதோ ஒண்ணு 750 கம்பெனியில கம்பெனிக்கு ஒண்ணுனா 750 பேர் குறைவாங்க,இதே மாதிரி பத்துபேரு போனா 7500 பேர் ஆச்சுல்ல,அப்புறம் பஸ்ஸுக்கு எங்க கூட்டம் வரும்,போகட்டும் போனாத்தான்
வீட்டு வாடகை எல்லாம் குறையும்.பத்துக்கு பத்து ரூம் எல்லாம் வாடகை 1500 வாங்கறாங்க.
கண்டக்டர்: ஏங்க கம்பெனி எல்லாம் மூடறாங்க.
கண்ணாடி: அதுதாங்க சாயத்தண்ணிய சுத்தம் பண்ணாம அப்படியே நொய்யல்ல உடறதால நொய்யல்காரன் ஆறு கெட்டுப்போச்சுன்னு கேசு போட்டுட்டான்.கோர்ட் மூடிட்டாங்க.
கண்டக்டர்:அதாருங்க நொய்யல்காரன்?
கண்ணாடி: அட அதுதாங்க வளம் ,எத்தனையோ கோடி செலவு பண்ணி நொய்யல் ஆத்த சுத்தம் பண்ணி வச்சிருக்காங்க,இன்னும் 6 மாசத்துல நொய்யல்ல சுத்தமான தண்ணி ஓடும்,வந்தமுன்னா அப்படியே ஆத்துல முங்கி எந்திருச்சு சுகமா வீட்டுக்கு போயிறலாம்.
(வளம் அமைப்புக்கு ஆறு சொந்தமுன்னு இப்பத்தான் எனக்குத் தெரியும், அவங்களே அறிந்திராத விசயம்,இது மட்டும் மிமுருகன் ரியல் எஸ்டேட் காரங்களுக்கு தெரிஞ்சா லோக்கல் டிவியில கூவிக்கூவியே வித்துப்போடுவாங்க)
கண்டக்டர்: அது சரிங்க,தொழில் இல்லாம ஆத்துல நல்ல தண்ணி போயி என்ன செய்ய? கம்பெனிஎல்லாம் எப்படி ஓடும்?
கண்ணாடி:எல்லாக் கம்பெனியும் மூட மாட்டாங்க.சாயத்தண்ணிய சுத்தம் பண்ணிற கம்பெனியெல்லாம் ஓடுமுங்க.
கண்டக்டர் : அப்படியா,ரொம்ப செலவாமே?..
கண்ணாடி: ரெண்டு தொட்டிதானுங்க,பத்துக்கு பத்து இருந்தா போதுங்க,ஒண்ணுல தண்ணி வரும் ,இன்னொன்னுல பில்டர் ஆகவேண்டியதுதாங்க. இத செய்ய முடியாம தண்ணீய ஆத்துல உட்டுத்தாங்க,விவசாயமே போச்சுங்க.
கண்டக்டர்: பில்டர் பண்ணுன தண்ணீய என்ன செய்யறதுங்க?
கண்ணாடிக்காரர்: அதைப்பாத்திங்கன்னா டாங்கர் லாரி வெச்சு எடுத்துட்டு போறதுதாங்க.
கண்டக்டர்: எடுத்துட்டு எங்க கொண்டுபோறது/
கண்ணாடிக்காரர்:உங்க கூட பெரிய சக்காத்தமா இருக்குதுங்க. அதை கொண்டு போயி கரண்ட் எடுக்கலாமுங்க.அதுக்கு கவர்ன்மென்ட் மானியம் கொடுக்குதுங்க.
(அடங்கொக்கமக்கா இப்படி ஒரு அறியமேட்டர் இருக்கறது திருப்பூர் காரங்களுக்கு ஏனுங்க தெரிய மாட்டேங்குது. கழிவுதண்ணிய கொண்டு போயி ஆத்துல உட்டு ,விவசாயம் போயி,இன்னைக்கு சாயப்பட்டறை எல்லாம் மூடி,தொழில் இல்லாமல் எல்லாரும் வீட்டுக்கு போயி....கண்ணாடிக்காரர் சொல்ற ஐடியாப்பாத்தா ..தமிழ்நாடு பூரா கரண்ட் கொடுக்கலாம் ஏந்தான் இவங்க இப்படி இருக்காங்களோ)
இப்ப இன்னொருத்தர் பஸ்ஸுல அடுத்த ஸ்டாப்புல ஏறிவருகிறார்.
புதியவர் கண்ணாடிக்காரரிடம்
புதியவர்: ஏங்க போன் பண்ணுனா எடுக்க மாட்டீங்களா?
கண்ணாடிக்காரர் போனை எடுத்துபார்த்து,
"ஓ மிஸ்டு காலுங்களா? பொதுவா மிஸ்டுகாலுங்களை அட்டெண்ட் பண்ணுவதில்லை நான்,ரொம்ப முக்கியமான மிஸ்டுகாலுன்னா மட்டும் அட்டென்ட் பண்ணுவேன்.
(மிஸ்டுகாலுங்களை அட்டென்ட் பண்ணும் முதல் ஆள் இவர்தான்
என்பதை அறிந்ததும் நமக்கு லைட்டா தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.)
இந்த நேரம் பாத்து ஒரு பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண் செல்போனில் கடலை போட்டுக்கொண்டே ஏற ,
கண்ணாடிக்காரர்: இந்த போனில என்னதான் இருக்குமோ தெரியல,என்னேரமும் கடலைதான். இது போக செவுட்டு மெசின் வேற வெச்சுகிட்டு மண்டைய மண்டைய ஆட்டிட்டு பேசிட்டு போறாங்க.
புதியவர் : செவுட்டு மிசினா? அதென்னங்க.
கண்ணாடி:அதுதான் இயர்போனுங்க, நான் 1400 போட்டு வாங்கி தூக்கி வீசிட்டேன்.
புதியவர் : அப்படி எல்லாம் கேவலப்படுத்தாதீங்க, நான் வேற இப்பத்தான் வாங்கினேன்.
கண்ணாடி:இன்னோரு விசயங்க.செல்போன் அதிகம் பேசினா நுரையீரல் பாதிப்பு வந்திரும். கெட்டெ போயிரும் தெரியுமா?அப்புறம் சங்குதான்...
புதியவர் ஷாக்காகிறார்
( சட்டுனு பஸ்ஸ உட்டு எட்டிக்குதிச்சிறலாமுன்னு யோசனை நமக்கு ஒரு கணம் வந்து எட்டிப்பாத்திருச்சு)
கண்ணாடி:இதே மாதிரிதாங்க,பொண்ணுங்க கூட ஜீன்ஸ்பேண்ட் போட்டுட்டு இருக்கு, ஆனா ஜீன்ஸ் பேண்ட்ட மெக்கானிக்,லேபர் வொர்க்,இந்த மாதிரி வேலை பாக்குறதுக்குதாங்க, கண்டு பிடிச்சாங்க.
கண்டுபுடிச்சவங்க இப்ப அதை போடறதில்ல,பிளைட் ஏறி வந்து பட்டுப்புடவை வாங்கிட்டு போறாங்க.
புதியவர்: ஆமாமா பசங்க கூட இப்ப அதைப்போடறதில்ல.இன்னொரு ஒரு முக்கியமான டவுட்டு நமக்கு வெகு நாளா இருக்குதுங்க.
கண்டக்டர்: அதென்னங்க டவுட்டு?
புதியவர்: இப்படி பொண்ணூங்க இவ்வளவு டைட்டாகாலை இறுக்கி ஜீன்ஸ்போட்டா அவசரமா உச்சா போறதுன்னா எப்படிங்க ?
அவரு என்ன சொல்லறாருன்னு ஆவலோட ஒரு 4 நாலு பேருஅவரைப்பாக்க அவர்
(கண்ணாடிக்காரர்): அது எப்படிங்கறத விடுங்க. ஜீன்ஸ் போட்டா கிட்னி கெட்டுப்போயிறும் தெரியுமா?.........
(அட சாமி கொன்னே போட்டிங்கடா)....
பஸ் எதொ ஒரு ஸ்டாப்பில் நிற்க நான் எட்டிக்குதித்தே விட்டேன்.
..
திருப்பூர் காலியாக மாறாமல் இருக்க ஏதேனும் ஒரு சுமூகத்தீர்வு உண்டாகும் என்று நம்புவோம்.
பதிலளிநீக்குதிருப்பூர் காலியாக வேண்டாம் என்றால் திருப்பூரே நச்சால் காலியாகி வேண்டி வரும் !!! இதற்கு எல்லாம் காரணம் அரசும், மக்களுமே !!! ஆரம்பத்திலேயே இதனை சரி செய்து இருக்க வேண்டும். இல்லை என்றால் சாயப்பட்டறை எல்லாம் குஜராத்துக்கு போய்விடும், தொழிலாளர்கள் எல்லாம் பெங்களூருவுக்கு கூலிக்கு போக வேண்டி வரும் !!!
பதிலளிநீக்குநல்லதொரு தீர்வு வரும் என நம்புவோமாக!