>> 17 AUGUST 2011
பத்தாண்டு சென்னை வாழ்க்கையில் பெற்றதைவிடவும் இழந்தது அதிகம். அதில் குறிப்பிடத்தக்கது கொங்குதமிழ் பேச்சு. ஏனோ நாட்பட நாட்பட என் கொங்குதமிழும் நீர்த்துப்போய் இன்னாமச்சி கோட்டர்தமிழாக மாறிவிட்டது. பேச்சுவழக்கெல்லாம் மறந்துபோகுமா என்ன? என என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்டிருந்தாலும்..மறந்துவிட்டது விட்டதுதான்.
மறந்துபோன கொங்குத்தமிழை அதன் சுவையை மீட்டெடுக்கிற சீரிய முயற்சியை அண்மைக்காலங்களில் மேற்கொண்டு வருகிறேன். அதைப்பற்றி எப்போதோ நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கையில் வாமுகோமுவின் கள்ளி குறித்து குறிப்பிட்டார். கொங்குத்தமிழை அட்டகாசமாக கையாளுகிற சமகால எழுத்தாளர்களில் வாமுகோமு முக்கியமானவர் என்பதை அவருடைய சில சிறுகதைகளின் வாயிலாக அறிந்திருந்தேன்.
உயிர்மையில் அவருடைய சில சிறுகதைகள் படித்திருந்தாலும் நாவல் என்கிற வகையில் சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும் குறித்த பல்வேறுபட்ட எதிர்மறை விமர்சனங்களின் அடிப்படையில் அதை படிக்கவேண்டும் என்கிற ஆவல் நிறையவேயிருந்தது. அதுவும் போக சரோஜா தேவி காலந்தொட்டே படிக்கும்போது கிடைக்கிற பாலியல் இன்பம் அண்மைக்காலங்களில் குறைந்துபோனதும், அது வாமுகோமுவின் எழுத்துகளில் ஏகத்திற்கும் கிடைப்பதாக நண்பர்கள் சொன்னதும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் அதிகமாக்கியது.
அஜால்குஜால் கதை படிக்க போகிறோம் என்கிற ஆர்வத்தோடு புத்தகத்தை விரித்து வைத்து படிக்க ஆரம்பித்தேன். எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்கிறது நாவல். புத்தகத்தின் எந்தப்பக்கத்தை திறந்தாலும் சாராய போதையும் புணர்ச்சியும் மலிந்து காணப்பட்டது. ஆனால் அதற்காக இந்த நாவலை வெறும் பாலியல் கதையென்கிற என்கிற ஒற்றை பரிமாணத்தின் அடிப்படையில் சுருக்கிவிட இயலாது. வட்டார வழக்கு, தலித் அரசியல், பாசங்கில்லாத அப்பட்டமான கிராமத்து மனிதர்கள் அவர்களுடைய வாழ்க்கை முறை.. கொஞ்சமாய் ஆங்காங்கே தொட்டுக்கொள்ள ஊறுகாயாட்டம் செக்ஸ்!
இதை கிட்டத்தட்ட பத்து சிறுகதைகளின் தொகுப்பு என்றும் கொள்ளலாம். ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு விதமான கிராமத்து சூழல்,மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பேசுகின்றன. அதையே தன் முன்னுரையில் நாவலாசிரியராகப்பட்டவரான வாமுகோமுவும் தெரிவிக்கிறார். வாய்ப்பாடி என்னும் ஊரைச்சேர்ந்த மல்லி என்னும் தலித் கூலியாளின் ஒரு மாலைப்பொழுதிலிருந்து கதை துவங்குகிறது. பின் ஒவ்வொரு கதாபாத்திரங்களாக உள்ளே நுழைய தலித்துகளுக்கும் ஆதிக்கசாதி இந்துகளுக்குமான ஒரு போட்டி தொடங்குகிறது.
போக்கிடமில்லாமல் பிழைப்புக்கு வழியில்லாமல் கவுண்டர் சாதி முதலாளிகளிடம் கைகட்டி வாய்பொத்தி அவர்களிம் ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு ஆண்டாண்டு காலம் வாழ்ந்த ஒரு சமூகம் , அருகாமை நகரத்தில் உருவாகும் தொழிற்புரட்சியால் கிடைத்த வாய்ப்பின் அடிப்படையில் முதல்முறையாக ஆதிக்கசாதிக்காரர்களிடம் எதிர்த்து நின்று கேள்வி கேட்கிறது. அது அந்த ஊரிலும் வாழ்க்கை முறைகளிலும் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணுகிறது.
வீடுவீடாக போய் சவரம் செய்துகொண்டிருந்த நாசுவன் தனியாக கடைபோடுகிறான். ஏன்டா உன்ரா எடத்துக்கு நாங்க வந்து முடிவெட்டிக்கோணுமா என கவுண்டர்கள் கொதிக்கிறார்கள். தலித் பையன் சின்ன கவுண்டச்சியை காதலித்து ஊரைவிட்டே ஓடுகிறான். பத்தாவது வரை படித்த தலித் பையன் வெள்ளையும் சொள்ளையுமாக சேரில் உட்கார்ந்து கணக்கெழுதுவதை கண்டு சகிக்க முடியாமல் வயிறெரிகிறது ஆதிக்கசாதிக்கு! இறுதியில் தன் வீட்டு வேலைக்கு தலித்திடம் கெஞ்சி கூத்தாடுவதாக கவுண்டனின் கதை முடிகிறது! ஆதிக்கசாதியின் அடுத்த தலைமுறை தலித்துகளை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு தன் அப்பன் பிணத்தை புதைக்க அதுவே குழிதோண்டுகிறது. கல்வியும் வேலைவாய்ப்பும் தலித்திய சமூகத்தில் பெரிய மாற்றங்களை உண்டுபண்ணுகிறது. அது அவர்களை எதிர்த்து கேள்விகேட்கவும் தூண்டுகிறது.முதல்முறையாக திருப்பூர் பனியன் பாக்டரிகள் வாய்பாடியில் தலித்துகளின் புரட்சிக்கு வித்திடுகிறது.
ஆதிக்க சாதியின் பாலியல் வாழ்க்கையும் தலித்துகளின் பாலியல் வாழ்க்கையும் ஒரு ஊரில் எப்படி இருவேறாக கூர்நோக்கப்படுகிறது என்கிற பார்வையும் இக்கதையினூடாக சொல்லப்பட்டிருக்கிறது. கதையில் முதலில் ஒரு விஷயம் மிகவும் நெருடலாக இருந்தது. கதையின் பாத்திரமான பழனிச்சாமியோடு உறவு வைத்துக்கொள்ள கதையில் வருகிற மற்ற எல்லா பெண்களும் துடிக்கின்றனர். அவனோடு எல்லா கிட்டத்தட்ட எல்லா பெண்களும் படுத்துக்கொள்கின்றனர். அவன் காடு மேடு கரடு வீடு என எங்கும் யாரையாவது புணர்ந்தபடியே அலைகிறான். (கதைக்குள் பழனிச்சாமி வரும்போதெல்லாம் படிக்கும் நமக்கு மனம் குதூகலிக்கிறது! ஷகிலா படங்களில் ஷகிலா வருவார் முன்னே பிட்டு வரும் பின்னே என்பதற்கிணங்க). ஆனால் ஒவ்வொரு பெண்ணும் பழனிச்சாமியோடு உறவுக்கு ஒப்புக்கொள்வதற்கு பின்னாலிருக்கிற உளவியல் பிரச்சனைகளையும் சமூக காரணங்களையும் போகிற போக்கில் வசனங்களினூடாகவும் நிகழ்வுகளினூடகவும் தந்துவிடுகிறார்.
அறுப்புக்கு வந்த ரெகார்ட் டேன்ஸ் பெண்ணை கவரும் முத்தா கவுண்டர். அவளை உறவுக்கு அழைத்து உறவின் உச்சநிலையில் கைமேல காசுவெச்சாதான் அடுத்து என சொல்வதிலாகட்டும், இருட்டுக்குள் மாதாரி பெண்ணை புணர்ந்தபடியிருக்கும்போது மாதாரிகளிடம் மாட்டிக்கொள்ளும் ஆதிக்கசாதி சுரேந்திரன் கால்மேல் கால் போட்டுக்கொண்டு தெனாவெட்டாக இருப்பதாகட்டும், அறுப்பு கூலியை ஏமாற்ற முனையும் கவுண்டனை மிரட்டி பணியவைக்கும் வெளியூர் கூலிகளால் தெம்பாகி தானும் முரண்டு பிடிக்கும் மல்லியின் பாத்திரமாகட்டும் முகத்தில் அறைகின்றன.
குழந்தைகள் இருவர் செக்ஸ் என்பது என்னவென்று தெரியாத காலத்தில் எடக்கு மடக்காக ஏதோ செய்து பார்க்கின்றனர். அதை பார்க்கிற பெண்குழந்தையின் தாய் பையனை அடிக்க.. பையனின் அம்மாவும் பெண்ணின் அம்மாவும் போட்டுக்கொள்கிற சண்டை பிரமாதமானது. அதுமாதிரி ஊர்பக்கம் நிறைய பார்த்திருக்கிறேன். அப்படியே அச்சு அசல் வார்த்தைகளின் கோர்வையாக அந்த அத்தியாயம் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு பாத்திரமும் வெவ்வேறு மனநிலையில் சித்தரிக்கப்பட்டிருப்பது சிறப்பு.
பழனிச்சாமியும்,மல்லியும்,சுரேந்திரனும்,முத்தா கவுண்டரும்,சுந்தரியும்,வெள்ளைசீலைக்காரியும் நாவலை மூடிவைக்கும்போது மனசெல்லாம் நிறைந்துவிடுகின்றனர்.
கொங்கு மண்ணின் அசல்மனிதர்களையும் வட்டார வழக்கின் சுவையையும் கடந்த ஆண்டுகளில் அங்கே நிகழ்ந்த சமூக மாற்றங்களையும் எந்த வித பாசாங்குமில்லாமல் அச்சு அசலாக பதிவு செய்திருக்கிறார் வாமுகோமு.
(உயிர்மை பதிப்பகம் வெளியீடு)
(புத்தகம் தந்து உதவிய ரோமியோவிற்கு நன்றி)
நன்றி
...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக