நன்றீ நக்கீரன்..பதிவு பலருக்கும் செல்லவேண்டும் என்பதாலேயே காப்பிபேஸ்ட் அடித்து வெளியிடப்படுகிறது
http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=15834
மிதுன ராசிக்கு மாறும் குருப்பெயர்ச்சிப் பலன்கள்
நவ கிரகங்களில் சுப கிரகங்களாக வர்ணிக்கப்படுபவை குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகிய நான்கு கிரகங்கள் மட்டுமே. இதிலும் வளர்பிறைச் சந்திரன் சுபராகவும் தேய்பிறைச் சந்திரன் அசுபராகவும் எடுத்துக் கொள்ளப்படும். அதேபோல புதனும் சுப கிரகத்தோடு சேருகிறபோது சுபத்தன்மை உடையவராகவும்; அசுபரோடு சேருகிற போது பாபத்தன்மை உடையவராகவும் கருதப்படும். ஆகவே முழு சுப கிரகங்களாகச் செயல்படுவது குருவும் சுக்கிரனும் மட்டும்தான். மற்ற ஐந்து கிரகங்களும் (சூரியன், செவ்வாய், சனி, ராகு-கேது) முழு பாப கிரகங்களாக ஜோதிட சாஸ்திரம் நிர்ணயித்திருக்கிறது.
மேற்கண்ட இரண்டு முழு சுப கிரகங்களான குருவை தேவகுரு என்றும்; சுக்கிரனை அசுர குரு என்றும் புராணங்கள் வர்ணிப்பதால், குரு ஒருவரையே முழு சுபகிரகம் எனவும் நல்லதைச் செய்ய வல்லவர் எனவும் பாராட்டலாம். அதனால்தான் "குரு பார்க்க கோடி நன்மை' என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட குரு வருடத்திற்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறுவார். "தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று பொதுவாகச் சொல்வதுபோல் குருப் பெயர்ச்சியினால் விமோசனம் ஏற்படும் என்றும்; குருபார்வையில் நன்மைகள் நடக்கும் என்றும் பொதுவாக எதிர்பார்க்கலாம்; நம்பலாம்.
சுப கிரகங்களில் குருப் பெயர்ச்சியையும் பாப கிரகங்களில் சனிப் பெயர்ச்சியையும் முக்கியமானதாக எடுத்துக் கொண்டு பலன்கள் வெளியிடப்படுகின்றன. குரு வருடத்துக்கு ஒரு முறையும் சனி இரண்டரை வருடத்துக்கு ஒரு முறையும் பெயர்ச்சி அடைவதால் இந்தக் கிரகங்களின் பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் உண்டாகிறது. ராகு-கேது பெயர்ச்சி ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை ஏற்பட்டாலும் மக்களிடையே அவ்வளவு முக்கியத்துவம் வகிப்பதில்லை. மற்ற கிரகங்கள் எல்லாம் குறுகிய காலப் பெயர்ச்சி அடைவதால் அவற்றுக்காக சிறப்புப் பலன்கள்- புத்தகங்கள் எழுதப்படுவதில்லை. சூரியன், சுக்கிரன், புதன் ஒரு மாதத்திலும், செவ்வாய் ஒன்றரை மாதத்திலும், சந்திரன் இரண்டேகால் நாளிலும் ராசி மாறுவார்கள். இவை பஞ்சாயத்து தேர்தல்போல. குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகு-கேதுப் பெயர்ச்சி எல்லாம் சட்டமன்றம், பாராளுமன்றத் தேர்தல்கள்போல பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை. அதனால் குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகு-கேதுப் பெயர்ச்சி போன்றவை மக்கள் மத்தியில் பரபரப்பான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகின்றன.
குரு மாங்கல்ய காரகன்- கணவன் காரகன்(பர்தா காரகன்) என்றும்; சுக்கிரன் களஸ்திர காரகன் (மனைவி காரகன்) என்றும் சொல்லப்பட் டாலும், திருமணமாகாத ஆண்-பெண் இருபாலருக்கும் திருமண யோகத்தைத் தருகிற கிரகம் குருதான். அதனால்தான் குருபலம் வந்துவிட்டதா? வியாழ நோக்கம் வந்துவிட்டதா என்று ஜோதிடம் பார்ப்பார்கள்.
அதேபோல குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் புத்திர யோகத்தைக் கொடுக்கும் கிரகம் குரு பகவான்தான்! இவர் புத்திர காரகன் என்பதோடு, காசு பணம் செல்வத்தைக் கொடுக்கும் தன காரகனும் ஆவார்! வித்தை, ஞானம், புகழ், கீர்த்தி, பெருமை, செல்வாக்கு, பாண்டித்யம், மேன்மை இவற்றையெல்லாம் தருகிற கிரகமும் குருதான்! அவருக்கு குரு, தேவ குரு, வியாழன், பிரகஸ்பதி, பொன்னன் என்று பல பெயர்கள் உண்டு. நவ கிரகங்களில் வடக்கு நோக்கி இருக்கும் கிரகம் குரு. சிவன் கோவிலில், சிவனுக்கு வலது புறம் தெற்கு பார்த்த வண்ணம் இருக்கும் தெய்வம் தட்சிணாமூர்த்தி. அவரையும் குரு என்பார்கள். ஆனால் நவகிரக குரு வேறு; தெய்வ தட்சிணாமூர்த்தி குரு வேறு! நவகிரக குருவுக்கு அதிதேவதை தட்சிணாமூர்த்தி.
இத்தனை சிறப்புக்களை உடைய குரு பகவான் விஜய வருடம், வைகாசி மாதம் 14-ஆம் தேதி (28-5-2013) செவ்வாய்க்கிழமை இரவு 9.18 மணியளவில் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது வாக்கியப் பஞ்சாங்கக் கணக்கு. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வைகாசி- 17 (31-5-2013) குருப்பெயர்ச்சி. இம்முறை ஓரிரு நாட்கள் மட்டுமே வித்தியாசம் உண்டு.
குருப் பெயர்ச்சி தேதி ஒன்றாக இருந்தாலும், பஞ்சாங்கத்துக்குப் பஞ்சாங்கம் நேரம் வித்தியாசம் ஏற்படும். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.
குருவுக்கு உரிய ஸ்தலமாக திருச்செந்தூரும், கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடியும் சிறப்பாகக் கூறப்படுகிறது. மேலும் நெல்லை மாவட்டம் செங்கோட்டை புறநகரில் புளியறையிலும், காரைக்குடி திருப்பத்தூர் அருகில் (9 கி.மீ) பட்டமங்கலத்திலும் தட்சிணாமூர்த்தி சந்நிதி தனிச் சந்நிதியாக (வலம் வரும் அளவு) அமைந்திருக்கிறது. இதேபோல தஞ்சாவூர் அருகில் தென்குடித் திட்டை என்ற ஊரிலும் குரு பகவான் (வியாழன்) தனிச் சந்நிதியில் காட்சியளிக்கிறார். திருச்சி அருகில் பழூர் சிவாலயத்தில் நவ கிரகங்களும் தம்பதி சகிதம் எழுந்தருளியிருக்கிறார்கள். அதில் குருவும் தமது பத்தினி தாராவுடன் அருள் புரிகிறார்.
மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் போகும் பாதையில் (அவுட்டர்) வள்ளலார் கோவில் என்ற இடத்தில் உள்ள சிவாலயத்தில் மேதா தட்சிணாமூர்த்தி நந்தி வாகனத்தில் காட்சியளிக்கிறார். கும்பகோணம், ஆடுதுறை அருகில் சூரியனார் கோவிலில், சூரியனுக்கு எதிரில் குரு எழுந்தருளியுள்ளார். சென்னைக்கு அருகில் தற்போது பாடி என்று அழைக்கப்படும் திருவலிதாயத்திலும், மயிலாடுதுறை பேரளம் பூந்தோட்டம் அருகில் திருவீழிமிழலையிலும், வேலூர் சங்கரன் பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் ஸ்ரீ யோக தட்சிணா மூர்த்தியாகவும், சென்னை-திருப்பதி சாலையில் 40 கி.மீ. தூரம் ஊத்துக்கோட்டை என்ற ஊரில் அம்பாளை மடியில் இருத்தியபடி தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாகவும் அருள்புரிகிறார். புதுக்கோட்டை யிலிருந்து அறந்தாங்கி போகும் பாதையில் ஆலங்குடி என்ற ஊரில் தட்சிணாமூர்த்திக்கு குருப் பெயர்ச்சி ஹோமம், சிறப்பு அபிஷேகம், பூஜை நடத்தப்படுகிறது. மதுரை அருகில் குருவித்துறையிலும் (வைகைக் கரையில் உள்ள பெருமாள் கோவில் அருகில்) குருவுக்கு ஹோமம், அபிஷேகம், பூஜை செய்யப்படுகிறது. தேனி மாவட்டம், சின்னமனூர் அருகில் குச்சனூர் ஆதீனம் ராஜயோகம் தரும் வட குரு பகவான் ஸ்தலத்தில் குரு யானை வாகனத்தில் காட்சியளிக்கிறார். இங்கும் குருப் பெயர்ச்சி விழா நடக்கிறது.
குரு அவரவர் ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் வரும்போது நற்பலனும்; 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் வரும்போது துர்ப்பலனும்; ஜென்மம், 4, 10-ஆம் இடங்களில் வரும்போது சம பலனும் நடக்கும். இது பொது விதிதான். சந்திரா ராசிக்குக் கூறப்படுவதுபோல ஜென்ம லக்னத்துக்கும் குருப் பெயர்ச்சிப் பலன் பொருந்தும். ஜனன ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 2, 5, 7, 9, 11-ல் வரும்போது நற்பலனும்; 3, 6, 8, 12-ல் வரும்போது துர்ப்பலனும் நடக்கும். இது அனுபவப் பூர்வமான உண்மை.
குரு நற்பலன் தரும் பாடல்
பெரு பதினொன்று ஐந்து ஏழு
பேர் ஒன்பதாம் இரண்டில் தேவ குரு
வரின் செல்வம் சீர் குதிரை
வெண்குடை தீவர்த்தி
தருமம் தானமும் உண்டு
தாய் தந்தை துணையுமுண்டு
அருமையும் பெருமையும் உண்டாம்
அரசர் பரிசும் பாராட்டும் உண்டாம்.
குரு துர்ப்பலனை தரும் பாடல்
ஜென்ம ராமர் வனத்திலே சீதையை
சிறை வைத்ததும்
தீதிலா தொரு மூன்றிலே
துரியோதனன் படை மாண்டதும்
இன்மை எட்டினில் வாலி
பட்டமிழந்து போம் படியானதும்
ஈசனார் ஒரு பத்திலே
தலையோட்டிலே யிரந்துண்டதும்
தருமபுத்திரர் நாலிலே
வனவாசம் அப்படிப் போனதும்
சத்திய மாமுனி ஆறிலே
இரு காலிலே தலை பூண்டதும்
வன்மை யற்றிட ராவணன் முடி
பன்னிரெண்டினில் வீழ்ந்ததும்
மன்னு மா குரு சாரி
மாமனை வாழ்விலா துறமென்பவே.
மிதுன ராசிக்கு வந்திருக்கும் குரு பகவான் அங்கு ஒரு வருடம் தங்கி, தான் நின்ற இடத்தில் இருந்து 5-ஆம் பார்வையாக துலா ராசியையும்; 7-ஆம் பார்வையாக தனுசு ராசியையும்; 9-ஆம் பார்வையாக கும்ப ராசியையும் பார்க்கிறார். குருவுக்கு 5, 7, 9-ஆம் பார்வை உண்டு.
குரு உங்களுடைய ராசிக்கு அல்லது லக்கனத்துக்கு எந்த இடத்தில் வந்திருக்கிறார் என்று கணித்துப் பலன் சொல்லுவதுபோல- அவர் பார்க்கும் இடங்கள் உங்கள் ராசிக்கு அல்லது லக்னத்துக்கு எத்தனை யாவது இடம் என்றும்; அதனால் நல்லதா கெட்டதா என்றும் ஆராய்ந்து, பார்வைப் பலன், சேர்க்கைப் பலன், ஸ்தான பலன், சார பலன் இவற்றையும் ஆய்வு செய்து விளக்கமாக இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளேன். குருப் பெயர்ச்சிப் பலன் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் அதை சாதகமாக்கிக் கொள்ள பிரார்த்தனை, ஸ்லோக பாராயணம், பூஜை, பரிகார முறைகளைக் கடைப்பிடித்து ஆறுதல் அடையலாம்.
பரிகாரம் என்பது கிரக பலனையோ, வரும் விதிப் பலனையோ தடுத்து நிறுத்தும் வழியல்ல. மழைக் காலத்தில் குடை பிடித்துச் செல்லுவதால் மழை நீர் தலையில் விழாதபடி பாதுகாப்புத் தருவது போலவும், படிப்பு ஏறாத மாணவனுக்கு "ட்யூஷன்' பயிற்சிபோலவும் தான்! பரிகாரம் என்பது கிரக பலனை ஏற்றுக் கொள்ளுமளவு நமது மனதைப் பக்குவப்படுத்திக் கொள்வதாகும்! நமக்கு ஒரு கவசம் போன்ற தாகும்! இருட்டில் தனிவழி நடக்கும் ஒரு பயந்தாங்கொள்ளிக்கு ஒரு துணை கிடைத்து அழைத்துச் செல்லுவதற்குச் சமம்!
வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்திக்கு அல்லது நவ கிரகத்தில் உள்ள வியாழனுக்கு (குருவுக்கு) சுண்டல் கடலை நைய்வேத் தியம் செய்து அர்ச்சனை செய்யலாம். அபிஷேகம் செய்து மஞ்சள் நிற ஆடை அணிவித்து மஞ்சள் நிற மலர்மாலை அல்லது முல்லை மலர் மாலை சாற்றலாம். தட்சிணாமூர்த்தி நெற்றியில் கஸ்தூரி திலகம் (பொட்டு) வைத்து வழிபடலாம். தட்சிணாமூர்த்திக்கும் நவ கிரகங்களுக்கும் ஹோமம் வளர்க்கலாம். நவ கிரக சந்நிதியில் வியாழ னுக்கு (குரு) அபிஷேகப் பூஜை செய்யலாம். குருவின் அதிதேவதை தட்சிணாமூர்த்தி என்பதால் அவருக்கும் பூஜை, வழிபாடு செய்யலாம்.
நவ கிரகங்களில் குரு கிரகத்துக்குச் செய்த அர்ச்சனைப் பொருட்களை தேங்காய், பழம் ஆகியவற்றை கோவிலிலேயே தானம் செய்து விடவேண்டும்; வீட்டுக்கு எடுத்து வரக் கூடாது. ஆனால் தட்சிணாமூர்த்திக்கு (தென்முகக் கடவுள்) அர்ச்சனை செய்த பிரசாதங் களை வீட்டுக்கு எடுத்து வரலாம். கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயே தட்சிணாமூர்த்தி படத்தின் முன்பாகவோ அல்லது குத்துவிளக்கு தீபம் ஏற்றியோ ஜப பாராயணம் செய்யலாம். திருமுறைப் பாடல்களைப் படிக்கலாம். வீட்டில் நவ கிரகப் படம் வைத்து வழிபடக்கூடாது. ஆனால் தட்சிணாமூர்த்தி படம் வைத்து பூஜை செய்யலாம்.
குரு காயத்ரீ மந்திரம்
ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
ஓம் வ்ருஷபத்வாஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்.
குரு ஸ்லோகம்
தேவனாம்ச ரிஷிணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.
குரு துதிப் பாடல்
மறைமிகு கலை நூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில் நீடுபோகத்தை நல்கும்
இறையருள் குரு வியாழன் இரு மலர்ப் பாதம் போற்றி!
தட்சிணாமூர்த்தி மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹா.
தட்சிணாமூர்த்தி ஸ்லோகம்
குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.
குரவே ஸர்வ லோகாநாம்
பிஷஜே பவ ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யாநாம்
தட்சிணாமூர்த்தயே நமஹா.
அப்ரமே த்வயாதீத நிர்மல ஞான மூர்த்தயே
மநோ இராம் விதூராய தட்சிணாமூர்த்தயே நமஹா.
தட்சிணாமூர்த்தி காயத்ரீ மந்திரம்
ஓம் தட்சிணாமூர்த்தயே ச வித்மஹே
த்யா நஸ்த்தாய தீமஹி
தந்நோ தீச ப்ரசோதயாத்.
தட்சிணாமூர்த்தி துதிப் பாடல்
கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை ஆறு
அங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைத்து பவத் தொடக்கை வெல்லாம்.
தந்தை தாயாவானும் சார்கதியிங் காவானும்
அந்தமிலா இன்பம் நமக்காவானும்- எந்தமுயிர்
தானாகுவானும் சரணாகுவானும் அருட்
கோனாகுவானும் குரு.
Nice
பதிலளிநீக்கு