(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசி அன்பர்களே!
கடந்த ஓராண்டு காலமாக மேஷ ராசிக்கு 2-ல் இருந்த குரு இப்போது 3-ஆம் இடத்துக்கு மாறுகிறார். "தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்' என்பது பாடல். '2-ஆம் இடத்தில் இருந்தபோது பாக்கியாதிபதி குரு 2-ல் நின்று பாக்கிய ஸ்தானத்தையே பார்த்ததால், பொருளாதாரத்திலும் குடும்பச் சூழ்நிலையிலும் கொடுக்கல்- வாங்கலிலும் குறைவில்லாமல் எல்லாம் நிறைவாக நிகழ்ந்தன. அதேசமயம் தொழில் ஸ்தானாதிபதி சனி துலாத்தில் உச்சம் பெற்று மேஷ ராசியை பார்த்தார். ஆனால் குருவும் சனியும் 6 ஷ் 8 சஷ்டாஷ்டகமாக இருந்ததால் தொழில், குடும்பம், வாழ்க்கை, பதவி, உத்தியோகத்தில் பல பிரச்சினைகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. சிலருக்கு வேண்டாத விவகாரங்களும், வேலையில் இடப்பெயர்ச்சி களும் அல்லது குடியிருப்பு மாற்றங்களும் ஏற்பட்டன.
ரிஷப குரு மேஷ ராசிக்கு 6-ஆம் இடம், 8-ஆம் இடம், 10-ஆம் இடங்களைப் பார்த்தார். 6-ஆம் இடம் கடன், போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறுகளைக் குறிக்கும் இடம் என்பதால், இவற்றை யெல்லாம் சந்தித்தீர்கள். திருமணம் ஆகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நடந்தது. (2-ஆம் இடம் குடும்பத்தைக் குறிக்கும் இடம்). திருமணம் ஆனவர்கள் மனைவி பேரில் புதிய உப தொழில்களை ஆரம்பித்திருப்பார்கள். தொழில் வகைக்காக அல்லது புதிய வாகன வகைக்காக அல்லது புதிய இடம் கிரயம் முடிக்க கடன் வாங்கியிருக்கலாம். நகைகளை வைத்து "ஜுவல் லோன்' போட்டிருக்கலாம். அதற்காக வட்டி செலுத்தி நாணயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கவலைப்பட்டிருக்கலாம்.
8-ஆம் இடம் என்பது சஞ்சலம், ஏமாற்றம், விபத்து, இழப்பு, அபகீர்த்தி, அவதூறு ஆகியவற்றைக் குறிக்கும் இடம். இந்த இடத்தை பாக்கியாதிபதி குரு பார்த்ததால், ரிஷப குரு மேஷ ராசிக்காரர்களுக்கு மேற்கண்ட துர்ப் பலன்களையெல்லாம் கொடுத்தார். குரு இயற்கையில் சுபகிரகம். அவர் எந்தெந்த இடத்தைப் பார்க்கிறாரோ அந்த இடத்துப் பலன்களை அதிகப்படுத்துவார். நல்ல இடத்தைப் பார்த்தால் நன்மைகளை அள்ளித் தருவார் கெட்ட இடங்களைப் பார்த்தால் கெட்ட பலன்களை அள்ளித் தருவார்,. 6-ஆம் இடத்தைப் பார்த்ததால் எதிரி, கடன், நோய், விவகாரங்களை அதிகமாகவே உருவாக்கினார். அதேபோல 8-ஆம் இடத்தைப் பார்த்ததால் உறவினர் பகை, ஏமாற்றம், இழப்பு, உதவி செய்தும் உபத்திரவம், கீழே விழுந்து காயம்படுதல், விபத்து, தேவையற்ற அவதூறு, அபகீர்த்தி, குடும்பக் குழப்பம், கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, விவகாரம் ஆகிய பலன்களையும் சந்தித்தீர்கள். கெட்ட கிரகம் கெட்ட இடத்தைப் பார்த்தால் கெடுதல்களை அழிக்கும். கெட்ட கிரகம் சுப கிரகங்களைப் பார்த்தால் அந்த இடத்து சுபபலன்களை அழிக்கும். இதில் ஒரு சந்தேகம் வரும். "குரு பார்க்கக் கோடி தோஷம் விலகும் என்பார்கள்- அப்படியிருக்க 6, 8, 12-ஆம் இடங்களை குரு பார்ப்பதால் மேற்படி கெடுதல்கள் விலகாதா' என்று கேட்கலாம். கெட்ட இடங்களைப் பார்க்கும் குரு கெட்டதைக் கொடுத்து பிறகு அதன் தோஷத்தைப் போக்கும். உதாரணமாக ஐஸ்கிரீம் கேட்டு அழுது பிடிவாதம்செய்யும் குழந்தையை அடித்து அழவைத்த பிறகு, கடைசியில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்துவது போல!
இவையெல்லாம் கடந்த கால அனுபவங்கள். இப்போது குரு மேஷ ராசிக்கு 3-ல் மிதுன ராசிக்கு மாறியிருக்கிறார். மிதுன குரு 5-ஆம் பார்வையாக மேஷ ராசிக்கு 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத் தடை விலகும். ஆண்களானாலும் பெண்களானாலும் திருமணம் கூடிவிடும். மேஷ ராசிக்கு தற்போது ஏழில் சனியும் ராகுவும் நிற்க, அவர்களை மேஷத்தில் உள்ள கேது பார்ப்பதால் தோஷமுண்டு. அதனால் பருவ வயது வந்தும் பலருக்கு திருமணம் ஆகாமல் தள்ளிப் போகும். அல்லது தடைப்படலாம். பொதுவாக 7-ல் சனி இருந்தால் 30 வயதாகியும் பெண்களுக்குத் திருமணம் நடக்காது. ஆண்களுக்கு 40 வயது வரை திருமணம் நடக்காது. இப்போது ராகுவுக்கும் சனிக்கும் குரு பார்வை கிடைப்பதால் அவர்களுக்கு மேற்கண்ட தோஷம் நிவர்த்தியாகும். குரு பார்க்க கோடி தோஷம் போகுமல்லவா!
இருந்தாலும் திருமணத் தடை விலகவும் நல்ல மனைவி அல்லது நல்ல கணவன் அமையவும் ஹோமம் செய்துகொள்வது நல்லது. பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமம் செய்து அபிஷேகம் செய்துகொண்டால் நல்ல மாப்பிள்ளை அமையும். ஆண்கள் கந்தர்வராஜ ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். இப்படி ஜனன ஜாதகத்தில் சனி, ராகு- கேது தோஷம் உடையவர்களுக்கு இளவயதில் திருமணம் ஆகியிருந்தால் விவாகரத்து அல்லது தம்பதிகளுக்குள் பிரிவு, பிளவு உண்டாகியிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இப்போது குரு பார்வை 7-க்கு கிடைக்கும் காலத்தில் மறுமண யோகம் செயல்பட, புனர்விவாக மந்திர ஜெபம் செய்து மேற்படி ஹோமம் செய்தால் மறுமணம் நடக்கும். இந்த ஹோமங்களை காரைக்குடி நாகநாதசுவாமி கோவிலிலும், பள்ளத்தூர் அருள் நந்தி ஆஸ்ரமத்திலும், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்திலும், இராமநாதபுரம் அருகில் தேவிப்பட்டினத்தில் சக்தி சீனிவாச சாஸ்திரி ஆசிரமத்திலும் முறையாகச் செய்வார்கள்.
சனி, செவ்வாய், ராகு- கேது சம்பந்தம் இருந்தால் (7, 8, 2-ஆம் இடங்களில்) ஆணோ பெண்ணோ ஜாதிவிட்டு ஜாதி திருமணம் செய்துகொள்வார்கள். சில பெண்கள் தன்னிலும் வயது குறைந்த ஆண்களை விரும்பலாம். அல்லது தன்னைவிட படிப்பு குறைந்த பையனை விரும்பலாம். சில ஆண்கள் திருமணமான பெண்களைக்கூட நேசிக்கலாம். குழந்தைகள் பெற்ற வயது மூத்த பெண்ணைக்கூட விரும்பலாம். அப்படிப்பட்டவர்கள் காமோகர்ஷண ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொண்டால், முறையற்ற ஆசை- தவறான காதல்- கூடாத பழக்க வழக்கம் மாறிவிடும். மிதுன ராசியில் குரு இருக்கும் இக்காலகட்டத்தில்- 7-ஆம் இடத்தை 5-ஆம் பார்வையாக பார்க்கும் காலத்தில் இந்தப் பரிகாரங்களைச் செய்தால் உடனடியாக கைமேல் பலன் கிடைக்கும். அதாவது காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும். சுத்த ஜாதகங்களுக்கு இந்த பரிகாரம் தேவையில்லை.
மிதுன குரு 7-ஆம் பார்வையாக மேஷ ராசிக்கு 9-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 9-ஆம் இடம் தகப்பனார், பூர்வ புண்ணியம், பாக்கிய ஸ்தானம். 9-ஆம் இடத்துக்குடையவரே 9-ஆம் இடத்தைப் பார்ப்பது யோகம். அதாவது பாவகாதிபதி பாவகத்தைப் பார்க்க பாவக புஷ்டி. அதனால் குருவருளும் திருவருளும் பரிபூரணமாகத் திகழும். தகப்பனார் வகை பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாகத் தீரும். 9-ஆம் இடத்துக்கு குரு 9, 12-க்குடையவர் என்பதால் (12 விரயம்) சில சொத்துகளை விக்கிரயம் செய்து வேறு புதிய இடம் வாங்கலாம். இதற்கு பரிவர்த்தனை என்று பெயர். ஜாதக ரீதியாக 9-ஆம் இடம், 5-ஆம் இடங்களில் குரு சம்பந்தம் இருந்தால் உபாசனா தீட்சை வாங்கலாம். யோகா, தியானப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும். ராகு- கேது தசாபுக்தி சம்பந்தம் இருந்தால் கோவில் திருப்பணிகளில் ஈடுபடலாம். டிரஸ்டி, திருப்பணி கமிட்டி உறுப்பினர் ஆகலாம். நீண்ட கால தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். ஆன்மிக யாத்திரை போகலாம். சிலர் சீரடி, காசி, கயா, தர்மசாலா, மூகாம்பிகை கோவில், கைலாஸ யாத்திரை, ரிஷிகேஸ் போன்ற புண்ணிய தலங்களுக்குப் போய்வரும் பாக்கியம் உண்டாகும். குரு 9-க்கும் உடையவர், 12-க்கும் உடையவர். 12 என்பது பயணத்தையும் குறிக்கும், விரயத்தையும் (செலவுகளை) குறிக்கும். எனவே சுபவிரயம்- புண்ணிய தலங்களுக்குப் போய்வர சுபச்செலவு உண்டாகும். வீட்டிலும் குடும்பத்திலும் சுபமங்களச் செலவுகள் உண்டாகும்.
சொந்தக்காரர்கள்- சுற்றத்தார்கள் வகையிலும் செலவுகள் ஏற்படலாம். அது சம்பந்தமாக புதிய கடன்கள் வாங்க நேரும். அதற்காக வட்டி கட்டுவதும் செலவுதான்.
1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்
மேஷ ராசிக்கு 9-க்குடைய குரு 3-ல் அஸ்தமனம் என்பதால் தகப்பனார் வகை உறவு முறையில் சில பிரச்சினைகளை புதிய அனுபவமாக சந்திக்க நேரும். அத்துடன் 3-ஆம் இடம் சகோதரர்- பங்காளி வகையையும் நண்பர்களையும் குறிக்கும் இடம். குருவின் அஸ்தமனத்தால் மேற்படி இடங்களில் சங்கடமான சம்பவங்களைச் சந்திக்கக் கூடும். சகோதர- சகோதரி, பங்காளி வகையில் வருத்தமூட்டும் நிகழ்ச்சிகள் நடக்கலாம். அல்லது வீட்டுக்குத் தெரியாமல் உடன் பிறந்தவர்கள் பட்ட கடன்களை அல்லது பொருளாதார நெருக்கடி களைத் தீர்க்க நீங்கள் முயன்று, அதனால் நீங்களும் சுமைகளைச் சுமக்கலாம். அதேபோல நண்பர்களுக்கு உதவி செய்து வம்பில் மாட்டிக் கொள்ளலாம்.
ஒரு உதாரணம்- இரண்டு நண்பர்கள் நகமும் சதையுமாகப் பழகியவர்கள். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவுகளில் கலந்து கொண்டவர்கள். ஒரு கட்டத்தில் ஒரு நண்பரின் மைத்துனர் வீட்டில் விசேஷம். அதற்கு 50 ஆயிரத்துக்குமேல் செய்முறை செய்யவேண்டும். நண்பர் பணம் புரட்ட இயலாத சூழ்நிலை. அவர் மனைவி தன் அண்ணன் வீட்டு விசேஷத்துக்கு அவசியம் செய்தாக வேண்டும் என்று வற்புறுத்த, இருவருக்கும் வாக்குவாதம் உருவானது. இதனூடே அவர் மனைவி தனது நகையை அடமானம் வைத்து, கணவரின் நண்பரிடம் மொய் செய்யப் பணம் கொடுத்து, அவர் கொடுப்பதுபோல கொடுக்கச் சொன்னார். தான் கொடுத்ததாகச் சொன்னால் திருப்பித் தரமாட்டார் என்பதற்காக மறைத்தார். நண்பரும் அப்படியே தான் கொடுத்த மாதிரி பணத்தைக் கொடுத்துவிட்டார். ஆனால் சிறிது நாளில் உண்மை தெரிந்துவிட்டது. மனைவிக்கு உடந்தையாக நண்பரும் பொய் சொல்லிவிட்டார் என்று இருவரும் பகையாகிப் பிரிந்துவிட்டார்கள்.
அஸ்தமன தோஷமுள்ள ஒருமாதப் பொழுதை சுலபமாக சமாளிக்க சித்தர்களின் ஜீவசமாதிகளுக்குச் சென்று வழிபட வேண்டும். தமிழ்நாட்டில் எத்தனையோ ஜீவசமாதிகள் இருக்கின்றன. அதில் ஒன்று நாமக்கல் அருகில் சேந்தமங்கலத்தில் உள்ள தத்தாத்ரேயர் கோவில். (சாமியார்கரடு பஸ் நிறுத்தம்). தத்தாத்ரேயர் சந்நிதிக்குக்கீழ் சுயம் பிரகாச சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது. புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகளின் சீடர். ஸ்கந்தாஸ்ரம சாந்தானந்த சுவாமிகளின் குருநாதர், அவதூதர். அங்கு சென்று தியானம் செய்யலாம். அந்த எல்லையில் ஏழரை அடி உயரத்தில் சனீஸ்வரரும், அவர் எதிரில் ஒன்பது அடி உயரத்தில் பஞ்சமுக ஆஞ்சனேயர் சந்நிதியும் உண்டு. இதுதவிர பஞ்சமுக விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஐயப்பன், கருப்பர், இடும்பன், முருகன் ஆகிய சந்நிதிகள் உண்டு. அர்ச்சகர் பாலசுப்பிரமணியம், அலைபேசி: 93454 38950-ல் தொடர்புகொண்டு போகலாம்.
24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்
குரு அஸ்தமனத்தில் கெடுதல் நடந்தாலும் குரு வக்ரத்தில் நற்பலன்கள் நடக்கும். குறிப்பாக ஜனன கால ஜாதகத்தில் குரு வக்ரமாக இருந்தால் கோட்சாரத்தில் குருவின் வக்ரம் யோகமாக இருக்கும். நற்பலன்கள் நடைபெறும். குரு நின்ற இடம் 3-ஆம் இடம். சகோதர அனுகூலம், நண்பர்கள் நல்லுதவி, உடன்பிறப்புக்களின் ஒத்துழைப்பு, மனதில் நம்பிக்கை, தைரியம், எதிர்காலத்தைப் பற்றிய தெளிவு ஆகிய பலன்களை எதிர்பார்க்கலாம். குரு நின்ற இடத்துப் பலனைப்போலவே அவர் பார்வைபடும் இடங்களும் குருவின் வக்ரகாலத்தில் மிகச் சிறப்பாக அமையும்.
7-ஆம் இடம், 9-ஆம் இடம், 11-ஆம் இடம் ஆகியவை குருவின் பார்வைபடும் இடங்கள். குருவின் வக்ர காலத்தில் இவையெல்லாம் சீரும் சிறப்பும் மேன்மையும் அடையும். திருமணமாகும் பருவத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் நிறைவேறும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு இணைந்து வாழலாம். தனிமையில் தவித்தோர் இணைந்து இனிமை காணலாம்.
அதேபோல 9-ஆம் இடத்துப் பலன்களும் உயர்வாக பலன் தரும். உன்னதமாக இருக்கும். ஆன்மிகத்தில் ஆனந்தமடையலாம். 11-ஆம் இடம் லாப ஸ்தானம், ஜெய ஸ்தானம். முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். கருதிய காரியங்களில் லாபம் பெருகும். வில்லங்கம், விவகாரங்களில் வெற்றியுண்டாகும்.
அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி ஆன்மிக ஈடுபாடும் நாட்டமும் ஏற்படுத்தும். தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையூட்டும். சங்கடங்கள் மலைபோல வந்தாலும் பனிபோல விலகிவிடும். குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். சிலர் ஜோதிடப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்கலாம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபடவும்.
பரணி நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி மகிழ்ச்சியும் மனநிறைவையும் தரும். குடும்பத்தில் மங்கள சுபகாரியங்கள் நடக்கும். சிலருக்கு இடம், வீடு, யோகத்துக்கு பிள்ளையார்சுழி போடும். தேக சுகம் ஏற்படும். கணவர் அல்லது மனைவி வகையில் நற்பலன்கள் உண்டாகும். கும்பகோணம் சூரியனார் கோவில் அருகில் கஞ்சனூர் சென்று வழிபடவும். அது சுக்கிரனுக்குரிய தலம்.
கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த குருப்பெயர்ச்சி உங்கள் நீண்ட காலக் கனவுகளையும் திட்டங்களையும் நிறைவேற்றும். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையுண்டாகும். பிள்ளைகளின் எதிர்காலப் பலன்கள் நல்ல முறையில் செயல்படும். படிப்பு, திருமணம், வாரிசு, வேலை உயர்வு போன்ற அற்புத பலன்களை எதிர்பார்க்கலாம். கும்பகோணம் ஆடுதுறை அருகில் சூரியனார் கோவில் சென்று வழி படலாம். அதன் அருகில் திருமங்கலக்குடி உள்ளது. அங்கு பிராண நாதேஸ்வரர் கோவிலில் மாங்கல்யம் காத்த மங்களாம்பிகை சந்நிதியும் உண்டு. அங்கும் சென்று வழிபடவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக