புதன், ஏப்ரல் 03, 2013

மிதுனம்


மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை,
புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

           மிதுன ராசி அன்பர்களே!

இதுவரை மிதுன ராசிக்கு 12-ல் இருந்த குரு இப்போது ஜென்ம ராசிக்கு மாறியிருக்கிறார். ஏற்கெனவே குரு இருந்த இடமும் கெட்ட இடம்தான்; இப்போது மாறியுள்ள இடமும் கெட்ட இடம்தான். மிதுன ராசிக்கு 7, 10-க்குடைய குரு பாதகாதிபதி என்பது மட்டுமல்ல; சுப கிரகமாகிய குரு கேந்திராதிபத்தியம் பெற்று- கேந்திராதிபத்திய தோஷம் அடைந்து ஜென்ம ராசியில் நிற்பது நல்லதல்ல. "ஜென்ம ராமர் சீதையை வனத்திலே சிறைவைத்தது' என்பது பாடல்.

ஆனால் தோஷம் பெற்ற குரு தோஷமான இடத்திலே இருப்பதால், டபுள் மைனஸ் ஒரு பிளஸ் ஆவதுபோல- டபுள் நெகட்டிவ் ஒரு பாசிட்டிவ் ஆவதுபோல தோஷம் ஷ் தோஷம் = தோஷ நிவர்த்தியாகிறது. அதனால் ஜென்ம வியாழன் என்ற கெடுதல் விலகி விடுகிறது!

ஜென்ம ராசி- 1-ஆம் இடம் என்பது கௌரவம், புகழ், கீர்த்தி, செல்வாக்கு, ஆற்றல், திறமை, பெருமை, ஆயுள் இவற்றை குறிக்கும் இடம். அங்கு குரு இருப்பது பெருமைதான். அதேசமயம் 11-ல் உள்ள கேது குருவைப் பார்ப்பதோடு, 5-ல் சனியும் ராகுவும் நிற்க, அவர்களை குரு பார்ப்பதால்- குருவுக்கும் சனிக்கும் ராகுவுக்கும் சம்பந்தம் ஏற்படும். அதனால் குடத்துக்குள் வைத்த விளக்குபோல பிரகாசம் இல்லாமல் செயல்படும். ஒவ்வொரு காரியத்தையும் செயல்படுத்தும்போது குறுக்கீடுகளும் இடையூறுகளும் தடைகளும் அதிகமாக இருக்கும். போட்டியும் பொறாமைகளும் கண்திருஷ்டிகளும் அதிகமாகவே காணப்படும்.

உங்களிடம் வாங்கிச் சாப்பிட்டவர்களும்- உங்களால் உதவியும் நன்மைகளும் அடைந்தவர்களும்- உங்களால் உருவானர்களுமே உங்களை புறம்பேசித் திரிவார்கள். உங்களைப்பற்றி தவறாக விமர்சிப்பார்கள். தோளில் ஏற்றிவைத்தவர்களே காதைக் கடிப்பார்கள். அதனால் 5-ல் சனியும் ராகுவும் இருப்பதால் மனம் மிகவும் துடிக்கும். "என்ன உலகமடா இது நன்றி கெட்ட உலகம்' என்று எண்ணவைக்கும். "நெஞ்சு பொறுக்குதில்லையே- இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே' என்று மகாகவி பாரதியார் பாடியதைத்தான் நினைக்கத் தோன்றும்.

கடந்த காலத்தில் மிதுன ராசிக்கு 4-ல் சனி நின்று உங்கள் ஜென்ம ராசியைப் பார்த்ததும் ஒருவகையில் கெடுதல்தான். அது அர்த்தாஷ்டமச் சனி எனப்படும். அதனால் வாகன நஷ்டம், சுகக்குறைவு, தாய்வழி உறவினர்களுடன் மனவருத்தம், கல்வித் தடை- இப்படி 4-ஆம் பாவம் சம்பந்தப்பட்ட பலன்களில் எல்லாம் சங்கடம், சஞ்சலம் போன்றவற்றை சந்தித்தீர்கள். 8-க்குடைய சனி 4-ல் அமர்ந்த விளைவு கடன் உடன் வாங்கி சிலர் இடத்தில் முதலீடு செய்தார்கள். சிலர் ஈமு கோழிப் பண்ணையிலும், சிலர் மரம் வளர்ப்பு தொழில் முதலீடாகவும் செய்து எல்லாவற்றிலும் ஏமாற்றம், நஷ்டங்களைச் சந்தித்த நிலை. ஜாதக  தசாபுக்தி பாதகமாக இருந்தவர்கள் வாகன விபத்து- வாகன நஷ்டங் களையும் சந்தித்தார்கள். சிலர் கடனுக்கு பயந்து மானத்துக்கு அஞ்சி ஊர்விட்டு ஊர் தலைமறைவாகப் போனதுண்டு. 

மிதுன குரு இருக்கும் இடம் சரியில்லையென்றாலும், அவர் பார்க்கும் இடம் அற்புத இடங்கள். குரு நிற்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்துக்கே பவர் அதிகம். மிதுன குரு 5-ஆம் பார்வையாக ராசிக்கு 5-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 7-ஆம் இடத்தையும், 9-ஆம் இடத்தை 9-ஆம் பார்வையாகவும் பார்க்கிறார். குருவுக்கு 5, 7, 9-ஆம் பார்வை உண்டு.

5-ஆம் இடம் என்பது புத்திர ஸ்தானம்; பூர்வ புண்ய ஸ்தானம்; மாமன், திட்டம், மகிழ்ச்சி, இதயம், எண்ணம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். அந்த 5-ஆம் இடமான துலா ராசிக்கு குரு 3, 6-க்குடைய ஆதிபத்தியம்பெற்று, 5-ஆம் இடத்துக்கு 9-ல் இருக்கிறார்; 5-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 5-ல் சனியும் ராகுவும் இருக்கிறார்கள். பொதுவாக 5-ல் சனியும் ராகுவும் இருப்பது புத்திர தோஷம் ஆகும். அதை குரு பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. குரு பார்க்க கோடி தோஷம் போகும் என்பது ஜோதிட விதியல்லவா!

புத்திர பாக்கியம் வேண்டி தவம் இருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் அல்லது புத்திரயோகம் உண்டாகும். பிள்ளை களைப் பெற்றவர்களுக்கு தகப்பனார் ஸ்தானத்தில் இருந்து செய்ய வேண்டிய கடமைகளை இனிமேல்தான் செய்யமுடியும். அதாவது பிள்ளைகளின் படிப்பு, வேலைவாய்ப்பு, திருமணம், அவர்களின் எதிர்கால இன்ப வாழ்வுக்குத் தேவையான வசதிகளைச் செய்துக் கொடுக்கலாம். தசாபுத்தி கோளாறுகளினால் பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு விலகி இருந்தால், இனி- இந்த குருப்பெயர்ச்சிக்குப் பிறகு ஒன்றுசேரும் வாய்ப்பு உண்டாகும். சொந்த வாரிசு இல்லாதவர்களுக்கு சுவீகார புத்திரயோகம்- தத்துபுத்திர யோகம் ஏற்படும். 

வாரிசு யோகம் கிடைக்க கும்பகோணம் அருகில் குடவாசல் சென்று அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரம் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயருக்கு அபிஷேகம் செய்யலாம். நேர்த்திக் கடன் நேர்ந்து கொள்ளலாம். மேனேஜிங் டிரஸ்டி நாக கிருஷ்ணன் மகன் என். சுப்பிரமணி, செல்: 94872 92481-ல் தொடர்பு கொள்ளலாம். 5-ல் உள்ள ராகு, சனி தோஷம் விலக ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தேவிபட்டினம் சென்று மொட்டையர் மகன் சக்தி சீனிவாச சாஸ்திரியை தொடர்பு கொண்டு நாகதோஷ நிவர்த்தி, சனி தோஷ நிவர்த்தி, சனி சாந்தி ஹோமம், வாஞ்சா கல்பகணபதி ஹோமத்தில் புத்திர ப்ராப்தி ஹோமம்- சந்தான பரமேசுவர ஹோமம், சந்தான கோபால கிருஷ்ணஹோமம் செய்யலாம். செல்: 99435 46667, தொலைபேசி 04567 264530-ல் தொடர்புகொண்டு போகலாம். அல்லது உங்களுக்கு அறிமுகமான இடமென்றாலும் போகலாம்.

7-ஆம் இடம் மனைவி ஸ்தானம், திருமண ஸ்தானம், கூட்டுத் தொழில், உபதொழில் ஸ்தானம். அதை குரு பார்க்கிறார். அந்த வீட்டுக் குடையவரே அவர்தான். அதனால் திருமண யோகத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் கன்னியர்க்கும் காளையர்க்கும் கல்யாணம் கைகூடிவிடும். 7-ஆம் இடத்தை சனியும் ராகுவும் பார்ப்பதால், ஏற்கெனவே திருமணத் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டிருக்கலாம். இப்போது குரு பார்வையால் அவை விலகிவிடும். சனி, ராகு சம்பந்தத்தால் ஒருசிலர் கலப்புத் திருமணம் அல்லது காதல் திருமண ஆசையால் முறை தவறி நடக்கலாம். அவர்கள் ஜாதகத்தில் செவ்வாய், சனி சேர்க்கையோ பார்வையோ இருந்தால் அதுதான் அவர்கள் தலைவிதி. அதைத் தடுக்கவேண்டாம். "பூக்களைப் பறிக்காதீர்கள்- காதலர்களைப் பிரிக்காதீர்கள்' என்ற வாசகப்படி பெற்றோர்கள் அதற்கு பச்சைக் கொடி காட்டிவிடலாம். குடும்ப கௌரவம், அது இது என்று ஏற்றுக்கொள்ள மனம் இல்லையென்றால்- காமோகர்ஷண ஹோமம் செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு கலச அபிஷேகம் செய்தால் மனம் மாறலாம். அப்படி அமையவேண்டுமானால் அவர்கள் ஜாதகத்தில் குருபார்வை இருந்தால்தான் செயல்படும். இல்லாவிட்டால் நீங்கள் என்னதான் பரிகாரம் செய்தாலும் அவர்கள் காதலைத் தடுக்க முடியாது.
எனக்குத் தெரிந்த குடும்ப நண்பரின் மகள் டாக்டருக்கு படிக்கும் போதே வேறு இனப்பையனை (அவனும் டாக்டர்) விரும்பி விட்டாள். பெண்ணின் குடும்பம் கூட்டுக்குடும்பம் என்பதால் கௌரவப் பிரச்சினை எழுந்தது. காமோகர்ஷண ஹோமம் ஏற்பாடு செய்தார்கள். பெண் சம்மதிக்கவில்லை. ஹோமத்துக்கு வரமாட்டேன் என்று சாதித்து விட்டது. வேறு காரணம் சொல்லி, அப்பா அம்மாவுக்கு நேரம் சரியில்லையென்று பொய் சொல்லி பெண்ணை சரிக்கட்டி அழைத்துப் போய் ஹோமம் செய்தார்கள். அப்படியும் அந்தப் பெண் அந்தப் பையனோடு ஓடிப்போய் கல்யாணம் செய்துகொண்டது. ஹோமம் செய்து பலன் இல்லையா என்று கேட்பீர்கள். ஒரு குழந்தை பிறந்தபிறகு அந்தக் கணவனைப் பிடிக்காமல் குழந்தையோடு தாய் வீட்டுக்கு வந்துவிட்டது. அதாவது குடிப்பவர் குடியை நிறுத்த வேண்டு மானால் அவராக மனம் திருந்தி குடிப்பதை நிறுத்தவேண்டும் என்பது போல் முறையற்று காதல் புரிகிறவர்கள் மனம் திருந்தி மாறவேண்டும். 

ஏற்கெனவே திருமணம் ஆனவர்களுக்கு நெருக்கமும் இணக்கமும் ஏற்பட குரு பார்வை வேலை செய்யும். கணவருக்கு மனைவியாலும் மனைவிக்கு கணவராலும் யோகம் உண்டாகும். மனைவிபெயரில் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். அல்லது மனைவிக்கு நல்ல வேலை அமையும். நோயின் தொல்லையால் வாடிவதங்கிய தம்பதிகளுக்கு இனிமேல் பூரண ஆரோக்கியம் உண்டாகும். கடந்த காலத்தில் அர்த்தாஷ்டமச் சனியால் ஏற்பட்ட நோய்க் கோளாறு, பேய்க் கோளாறு எல்லாம் இனி அடியோடு விலகிவிடும். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்ளவும்.

9-ஆம் இடம் என்பது பாக்ய ஸ்தானம்; தந்தை, பூர்வீக ஸ்தானம். முன்னோர் ஆஸ்தி, குலதெய்வம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். அந்த 9-க்குடையவர் சனி 5-ல் உச்சம் பெற்று குரு பார்வையைப் பெறுவதோடு, 9-ஆம் இடத்தை குருவும் பார்க்கிறார். குரு 7, 10-க்குடையவர். 10-க்குடையவர் 9-ஆம் இடத்தைப் பார்ப்பதும் 9-க்குடைய சனியைப் பார்ப்பதும் தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். அதனால் உங்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாக அமையும். இழந்து விட்ட பூர்வீகச்சொத்துகள் கிடைக்கும். அப்பாவழி, அம்மாவழி, தாத்தா- பாட்டி வகையில் இருந்து உங்களுக்கு வரவேண்டியவை வந்து சேரும்.

பூர்வீக சொத்துகள் இல்லாதவர்களுக்கு தகப்பனார் ஆசியினால் சொத்து சுகங்களும் பாக்கியமும் உண்டாகும். 

நீண்டகாலமாக நிறைவேற்றாமல் இருந்த அல்லது தடைப்பட்ட தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். குலதெய்வமும் அதன் எல்லையும் தெரியாமல் ஏதோ மனதுக்குப் பிடித்த தெய்வத்துக்கும் கோவிலுக்கும்போய் சாமி கும்பிட்டு வந்தவர்களுக்கு குடும்ப குலதெய்வத்தை வழிபடாத குறையொன்று இருக்கிறது என்று குறி சொல்லியிருப்பார்கள்; ஜோதிடம் கூறியிருப்பார்கள். அதனால் குழம்பித் தவித்தவர்களுக்கு இப்போது குரு பார்வையால் எல்லையும் தெரியும்; தெய்வமும் தெரியும். அங்கு சென்று தனிப்பட்ட முறையிலோ அல்லது பங்காளிகளுடனோ வழிபட்டு வரலாம். நடைமுறையில் அது திருப்திகரமாக அமைந்துவிட்டால் வசூல் செய்து கோவில் கட்டலாம். திருப்பணி செய்யலாம். சிலர் காசி, ராமேஸ்வரம், கேதாரநாத், பத்ரிநாத் என்று புனிதப் பயணம் சென்று வரலாம்.

இப்படி ஜென்ம குருவாக இருந்தாலும் அவர் பார்வையின் பலத்தால் நன்மைகள் நடக்கும்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

மேற்கண்ட ஒருமாதம் குரு ஜென்மராசியில் அஸ்தமானமாக இருப்பார். அஸ்தமன காலத்தில் எந்த நன்மைகளும் நடக்காது. எதிர் மறைப் பலன்களாக நடக்கும். அஸ்தமனம் என்றால் இருட்டு. இருட்டில் எதைத் தேடுவது? எதைப் பார்ப்பது? ஆகவே இக்காலம் உங்களுக்கு கௌரவப் பிரச்சினைகள் எழலாம். ஏற்கெனவே குரு மிதுன ராசிக்கு 7, 10-க்குடைய பாதகாதிபதியாவார். அந்த பாதகாதிபத்திய பலன் அஸ்தமன காலத்தில் கெடுதலாக இருக்கும். திருமணத் தடை, திருமண தாமதம், திருமண வாழ்க்கையில் குழப்பம், திருப்பம், நிம்மதிக் குறைவு, சஞ்சலம் ஆகிய பலனும்; தொழில் வகையிலும் தொய்வுகள், துயரங்கள், துன்பங்களும் உண்டாகும். சிலர் வெளிநாட்டு  வேலைக்கு பணம் கொடுத்து ஏமாறலாம். அல்லது வெளிநாடு போய் அங்கு உடல்நலம் குறைந்து தொடர்ந்து வெளிநாட்டில் வேலை செய்யாமல் திரும்பி வரலாம். இந்தக் கெடுதல்களைச் சமாளிக்க மாயாண்டிச் சித்தரை வழிபடவேண்டும். மேலூர் சிவகங்கை ரோட்டில், (மேலூரிலிருந்து 18 கிலோமீட்டர்- சிவகங்கையிலிருந்து 8 கிலோமீட்டர்) மாயாண்டிச் சித்தர் ஜீவசமாதி இருக்கிறது. அங்கு சென்று வழிபட்டால் குரு கிரகத்தின் தோஷம் விலகிவிடும்.
24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

அஸ்தமனம் கெடுதலைச் செய்யும். வக்ரம் நற்பலன்களை வேக மாகவும் துர்ப்பலன்களையும் துரிதமாகவும் செய்யும். பொதுவாக குரு வக்ரத்தில் கஷ்டப்படுத்தமாட்டார். 7, 10-க்குடையவர் என்பதால் திருமணம், மணவாழ்க்கை, தொழில், வேலை, உத்தியோகம் ஆகிய வற்றில் நல்ல திருப்பத்தையும் யோகத்தையும் எதிர்பார்க்கலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் யோகமான பலன்களாகவே நடக்கும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் கோட்சார பலன்கள் எதிர்மறைப் பலனாகி நடக்கும். பொதுவாக குருவின் அஸ்த மன தோஷத்துக்குத்தான் பரிகார பூஜை தேவைப்படும். குருவின் வக்ர கதிக்கு பரிகாரம் அவசியமில்லை. என்றாலும் நோய்க்கு மாத்திரை, மருந்து, ஊசி தேவைப்படும். வியாதி இல்லையென்றால் மருந்து, ஊசி தேவையில்லை. ஆனால் சத்துமாத்திரை, வைட்டமின் எடுத்துக் கொள்ளலாம். அல்லவா! அதுமாதிரி குருவின் வக்ரம் அனுகூலமாகத் திகழ தஞ்சை அருகில் தென்குடித் திட்டை சென்று குருவை வழிபடலாம். 

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:

குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். புதிய தொழில் முயற்சி கைகூடும். மனைவி அல்லது கணவன் பேரில் இடம், பூமி, மனை, வாகனம் வாங்கலாம். அது சம்பந்தமான கடன் வாங்கலாம். சிலர் தவணைக்கடன் வாங்கி பொருள்களைச் சேர்க்கலாம். கடன் அடைந்தவுடன் பொருள் சொந்தமாகிவிடும். சிலர் நகைகளை அடகு வைத்து சில பொருள்களை வாங்கலாம்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு:

குருப்பெயர்ச்சி உங்கள் கனவுகளை நனவுகளாக்கும். எந்தக் காரியத்தை எடுத்தாலும் டென்ஷன் இருக்கும். விடாமுயற்சியும் நம்பிக்கையும் வைராக்கியமும் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பாட்டனார் அல்லது விதவைப் பெண்களால் ஆதாயமும் அனுகூலமும் எதிர்பார்க்கலாம். சிலருக்கு தொழில் மாற்றம் ஏற்படலாம். குடியிருப்பு இடப்பெயர்ச்சிக்கும் இடமுண்டு.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:

குருவின் சொந்த நட்சத்திரம் புனர்பூசம். குரு 7, 10-க்குடையவர். பெருமை, திறமை, செல்வாக்கு முதலியவை இந்த குருப்பெயர்ச்சியால் ஏற்படும். மனைவியால் அல்லது மனைவி வர்க்கத்தால் நன்மைகளை எதிர்பார்க்கலாம். பெண்கள் ஜாதகமானால் கணவராலும் கணவன் வர்க்கத்தாலும் நன்மைகள் ஏற்படலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக