புதன், ஏப்ரல் 03, 2013

ரிஷபம்


ரிஷபம்(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி,
மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

           ரிஷபம் ராசி அன்பர்களே!

கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ஜென்ம ராசியான ரிஷபத்தில் இருக்கும் குரு இப்போது 2-ஆம் இடமான மிதுன ராசிக்கு மாறுகிறார். குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் யோகமான இடங்கள். இந்த குருப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் நன்மை களையும் அடையப்போகும் ராசிக்காரர்கள் ஐந்து பேர். ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்கள் ஆவார்கள். அவர்களுள் நீங்களும் ஒருவர்.

ரிஷப ராசிக்கு 8, 11-க்குடையவர் குரு. வாக்கு காரகன்; தன காரகன். அவர் 2-ஆம் இடமான தன ஸ்தானத்தில் அமர்ந்து பலன் தரவிருப்பதால், வாக்கு, நாணயம் காப்பாற்றப்படும். வித்தை மேன்மை யடையும். குடும்பத்தில் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல் படலாம். தாராளமான பணப்புழக்கம் இருக்கும். அதனால் பணக் கஷ்டமும் பணநெருக்கடியும் விலகும். வரவேண்டிய பணமும் கைக்கு வந்துசேரும்; கொடுக்க வேண்டியதையும் கொடுத்து நல்ல பேர் எடுக்கலாம்.

8-ஆம் இடம் ஆயுளையும் குறிக்கும்; அதிர்ஷ்டத்தையும் குறிக்கும். அதை "நிரத ஸ்தானம்' என்பார்கள். நிரத ஸ்தானம் என்றால் அதிர்ஷ்ட ஸ்தானம் எனப்படும். (அ- திருஷ்டம்). திருஷ்டம் என்றால் கண்ணுக்குத் தெரிவது. அ- திருஷ்டம் என்றால் கண்ணுக்குத் தெரியாதது.. மரணம் கண்ணுக்குத் தெரியாது. யோகமும் கண்ணுக்குத் தெரியாது. (அதிர்ஷ்டம் கண்ணுக்குத் தெரியாமல் வருவது. அதிர்ஷ்டம்- அது இஷ்டமாக வரும்.)

8-க்குடையவர் 11-ஆம் இடம், 2-ஆம் இடம், 9-ஆம் இடத்தோடு சம்பந்தப்படும்போது 8-ஆம் இடம் அதிர்ஷ்டமாகச் செயல்படும். 8-க்குடையவர் 6, 12-ஆம் இடத்தோடு சம்பந்தப்படும்போது விபத்து, மரணம், இழப்பு ஆகிய பலனைச் செயல்படுத்தும்.

இங்கு 8, 11-க்குடைய குரு 2-ல் நிற்கிறார். ரிஷப ராசிக்கு 9, 10-க்குடைய ராஜயோகாதிபதியான சனியை 5-ஆம் பார்வை பார்க்கிறார். ஒரே கிரகம் இன்னொரு கிரகத்தைப் பார்க்கும்போது அந்த கிரகங்களுக்குள் சம்பந்தம் உண்டாகும். அதனால் எதிர்பாராத தன லாபம் கிடைக்கும். திடீர் தனப்ராப்தி அல்லது புதையல் யோகம் உண்டாகும். லாட்டரி பரிசு யோகம் உண்டாகும். தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டாலும் வேறு மாநில லாட்டரி யோகம் உண்டாகலாம். அல்லது இங்கிருந்தபடியே மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டில், அங்குள்ள நண்பர்கள் மூலமாக லாட்டரி சீட்டு வாங்கலாம். அந்த நண்பர்கள் உண்மையானவர்களாகவும்- நல்லவர்களாகவும் இருந்தால் உங்கள் பங்குத் தொகையைத் தந்துவிடுவார்கள். உங்கள் ஜாதகத்திலும் 2, 9, 11-க்குடைய தசாபுக்திகள் சம்பந்தப்பட வேண்டும். அப்படியிருந்தால் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது எப்படியும் கிடைத்துவிடும். அப்படியில்லாமல் 6, 8, 12-க்குடைய தசாபுக்திகள் சம்பந்தப்பட்டால் ஏமாற்றமும் இழப்பும் ஏற்படலாம். பரிசு விழுந்தாலும் சொல்லமாட்டார்கள். அதாவது கிடைக்காது என்று இருந்தால் கிடைக்காமல் போய்விடும்.

8, 11-க்குடையவர் 2, 9-க்கு சம்பந்தப்படும்போது யோகம்! அதிர்ஷ்டம்! 6, 12 சம்பந்தப்பட்டால் இழப்பு. ரிஷப ராசிக்கு ராசிநாதனே 6-க்குடையவராகவும் செவ்வாய் 7, 12-க்குடையவராகவும் வருகிறார்கள். ஒரு பெரிய கோடீஸ்வரர் லாட்டரி விற்பனையாளர். ஏராளமான சொத்துகள்- கருப்புப்பணமும் ஏராளம். ஆனால் அக்கவுண்டில் வெள்ளைப்பணம் இல்லை. அரசுக்கு செலுத்தவேண்டிய சேல்ஸ்டாக்ஸ் வரி கட்டாமல், சில அதிகாரிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கீழ்கோர்ட், மேல் கோர்ட் என்று சுப்ரீம் கோர்ட்டு வரை போனார். வரியைக் கட்டவில்லை. முடிவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அவருக்கு எதிராக முடிந்துவிட்டது. கோடிக்கணக்கான வரி பாக்கிக்காக அவருடைய பங்களாவில் உள்ள சொத்துகளையெல்லாம் ஜப்தி செய்துவிட்டார்கள். அந்த நேரம் அவருக்கு ஏழரைச் சனியும் சந்திர தசை சந்திப்பும் நடந்தது.

மிதுன ராசியில் நிற்கும் குரு ரிஷப ராசிக்கு 6-ஆம் இடம், 8-ஆம் இடம், 10-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் கடன் உருவாகும். போட்டி, பொறாமைகளும் எதிர்ப்பு, இடையூறுகளும் வளரும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் வைத்தியச் செலவுகளும் நோய் நொடிகளும் தொடரும். பாப கிரகம் ஒரு இடத்தைப் பார்த்தால் அந்த இடத்துப் பலன் கெட்டுப்போகும்; சுபகிரகம் ஒரு இடத்தைப் பார்த்தால் அதன் பலன் வளரும். குரு சுபகிரகம் என்பதால் 6-ஆம் இடம் பாப ஸ்தானத்தைப் பார்ப்பதால் கடன், எதிரி, நோய் அதிகரிக்கும். ஆனால் 6-ல் பாபகிரகம் சனியும் ராகுவும் நிற்பதால் 6-ஆம் இடத்துப் பலன் கெட்டுப்போகும். அதனால் பாப இடத்தின் பலன்கள் உங்களுக்கு இன்னொரு வகையில் நன்மையாக மாறும்.

போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவும், எதிர்கால வளர்ச்சிக்காகவும், ஏற்றத்துக் காகவும் அஸ்திவாரமாகிவிடும். கடன்கள், சுபக்கடன்களாகிவிடும். விரயமும் செலவும் மங்களச் செலவுகளாக மாறும். திருமணம், கிரகப்பிரவேசம், மகப்பேறு, புத்திர பாக்கியம், பூமி, வீடு, வாகன சுகபோகத்துக்காக கடன் வாங்கும் சூழ்நிலையாகும். அது சுபக் கடனாகும்.

வசிஷ்டரிடமிருந்து காமதேனு பசுவைப் பெற முடியவில்லையே என்ற தோல்வித் துயரத்தால்தான், கௌசிக மன்னன் அரசு பதவியைத் துறந்து தவம் செய்து பிரம்மரிஷி விசுவாமித்திரராகி சாதனை புரிந்தார். எனவே நம்முடைய வளர்ச்சிக்கு முன்னேற்றத்துக்கும் போட்டியும் எதிர்ப்பும் அவசியம். தோல்வியும் வெற்றிக்குப் படிக்கல்.

8-க்குடைய குரு 8-ஆமிடத்தையே பார்ப்பதால் ஆயுள்விருத்தி. விபத்துகள் விலகும். பாவகாதிபதி பாவகத்தைப் பார்ப்பது பாவக புஷ்டி என்பது பலதீபிகை விதி! அதுமட்டுமல்ல; ஆயுள்காரகன் சனியும் உச்சம் பெற்று 8-ஆம் இடத்தைப் பார்ப்பது சிறப்பு. 90 வயது, 100 வயது என்று ஆயுள் நீடிக்கும். அவருடன் ராகு- கேது சம்பந்தப் படுவதால் செயல் தன்மை பாதிக்கும். நோய் நொடி இருக்கும். கலைஞர் நீண்ட ஆயுளோடு திடகாத்திரமாக இருந்தாலும் நடக்க முடியாமல் வீல்சேரில் இருக்கிறார் அல்லவா! ஆபத்துகளும் விபத்துகளும் வைத்திய சிகிச்சை போன்றவையும் வந்தாலும் உயிர்ச்சேதம் வராது. வைத்தியச் செலவும் ராஜவைத்தியச் செலவு. அப்படிப்பட்டவர்கள் ஆரோக்கிய விருத்திக்கு தன்வந்திரி சம்புடித மிருத்யுஞ்சய ஆயுஷ் ஹோமம் செய்துகொள்ளலாம்.

சென்னை- வேலூர் பாதையில் உள்ள வாலாஜாபேட்டையிலிருந்து சோளிங்கர் போகும் பாதையில் தன்வந்திரி ஆரோக்கிய பீடம் உள்ளது. லட்சுமி பணத்துக்கு அதிபதி. சரசுவதி கல்விக்கு அதிபதி. பராசக்தி வீரத்துக்கு அதிபதி. ஆரோக்கியத்துக்கு அதிபதி தன்வந்திரி. ஆரோக்கியத்துக்குரிய கடவுள் தன்வந்திரிதான். அதற்கு தனிக்கோவில் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தில், ரெங்கநாதர் கோவிலில் தாயார் சந்நிதி போகும் வழியில் தன்வந்திரி பகவானுக்கு தனிச்சந்நிதி உண்டு. திண்டுக்கல் அருகில் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலிலும் தன்வந்திரி பகவானுக்கு தனிச்சந்நிதி உள்ளது. கோவையில் தன்வந்திரி மருத்துவமனையிலும் தன்வந்திரி பகவானை பிரதிஷ்டை செய்து தன்வந்திரி ஹோமம், பூஜை, அர்ச்சனை செய்கிறார்கள். வசதியுள்ளவர்கள் மேற்கண்ட இடங்கள் சென்று ஹோமம் செய்யலாம். வசதியில்லாதவர்கள் "ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அமிருதகலச ஹஸ்தாய ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஆரோக்கிய லட்சுமி சமேத தன்வந்த்தரயே மஹா விஷ்ணவே நமஹா!' ஜெப பாராயணம் என்ற தன்வந்திரி மூல மந்திரத்தை தினசரி காலையும் மாலையும் செய்யலாம்.

கடன்கள் அதிகம் இருந்து அதனால் கஷ்டப்படுகிறவர்கள்- வட்டி கட்ட முடியாதவர்கள், கடன்காரர்களின் தொல்லையால் அவமானப் படுகிறவர்கள் திருச்சேறை சென்று சாரபரமேஸ்வரரை வழிபடலாம். கும்பகோணத்திலிருந்து திருவாரூர் போகும் பாதையில் குடவாசலுக்கு முன்பு திருச்சேறை இருக்கிறது. அவ்வூரில் சாரநாத பெருமாள் கோவிலும் அதற்கு கிழக்கே சாரபரமேஸ்வரர் கோவிலும் இருக்கிறது. சாரபரமேஸ்வரர் திருக்கோவிலில் 11 திங்கட்கிழமை வசிஷ்டர் இயற்றிய தாரித்ரிய துக்க தஹன சிவ ஸ்தோத்ரத்தை (11 பால்களை) சொல்லி, எல்லாவிதமான அபிஷேகம், அர்ச்சனை செய்யப்படுகிறது. சுந்தர மூர்த்தி குருக்களும் சுப்ரமணிய குருக்களும் (சகோதரர்கள்) முறையாக ஆன்மார்த்தமாக பூஜை செய்கிறார்கள். 11 திங்கட்கிழமை நேரிலும் போகலாம் அல்லது பணம் அனுப்பி பிரசாதத்தை தபாலில் பெற்றுக் கொள்ளலாம். அந்தப் பாடல்களை அச்சிட்டு அவர்களே அனை வருக்கும் கொடுக்கிறார்கள். அதையும் தினசரி படிக்கலாம். பாராயணம் செய்யலாம். உடனே கடன் முழுவதும் அடையா விட்டாலும் கடன்காரர்கள் நீங்கள் சொல்லும் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு சண்டை போடாமல் போய்விடுவார்கள். அனுபவப்பூர்வமான உண்மை. அலைபேசி: 94437 37759, 94426 37759. எஸ். சுந்தரமூர்த்தி குருக்கள், தெற்கு வீதி, திருச்சேறை- 612 605. (கும்பகோணம் தாலுகா).

6-ல் சனியோடு ராகு- கேது சம்பந்தப்படுவதால், திருச்சேறைக்கு முன்னால் நாச்சியார் கோவில் என்று ஒரு ஸ்தலம் இருக்கிறது. சீனிவாசப் பெருமாள் கோவில். அந்தப் பெருமாளுக்கு இரண்டு கைகள். (மற்ற ஆலயங்களில் நான்கு கைகள். சங்கு, சக்கரம் மற்ற ஆயுதங்களை ஏந்தியிருக்கும்). முனிவர் வளர்த்த மகளை (லட்சுமியை) திருமணம் செய்ய பெருமாள் வந்ததாக ஐதீகம். மூலஸ்தானம் அருகில் தனிச் சந்தியில் கல் கருடன் சந்நிதி உண்டு. சுமார் நான்கு அடி உயரத்தில் கருங்கல்லாலான விக்கிரகம். கோவில் அமைப்பு மூன்று நிலையாக உயரமான மண்டபமாக இருக்கும். வருடத்தில் ஒருநாள் பங்குனி மாதம் கல்கருடனை மூலஸ்தானத்திலிருந்து வெளியே எடுத்து வருவார்கள். நான்கு பேர் மட்டும் கல்கருடனை தூக்கி வருவார்கள். அடுத்த மண்டபத்துக்கு கொண்டு போகும்போது எட்டு பேர் தூக்குவார்கள். அதற்கு அடுத்த மண்டபத்துக்குக் கொண்டுவரும்போது பதினாறு பேர் தூக்கவேண்டும். அதற்கு கீழ் மண்டபம் வரும்போது 32 பேராகிவிடுவார்கள். ஒவ்வொரு மண்டபத்துக்கு வரும்போதும் கல்கருடனுக்கு எடை கூடிக்கொண்டே வரும். கீழ்த்தளம் வந்ததும் உற்சவமூர்த்தியை கல்கருடனில் வைத்து அலங்கரித்து சகடையில் வைத்து ஊரை வலம் வருவார்கள். அதேபோல கல்கருடனை கீழ் தளத்தில் இருந்து மூலஸ்தான சந்நிதிக்கு கொண்டு போகும்போது 32-16-8-4 என்று எண்ணிக்கையும் குறையும், எடையும் குறையும். சில வருடங்களுக்கு முன்பு அக்கோவிலில் இரண்டு கருடன்கள் வாழ்ந்தன. அதில் ஒரு பெண் கருடன் கோவிலில் வெளிப்பிராகாரத்தில் உயிரை விட்டுவிட்டது. பெண் கருடன் பிரிவைத் தாங்காமல்  ஆண் கருடனும் இறந்துவிட்டது. இரண்டு கருடன்களையும் கோவில் பிராகாரத்தில் சமாதி வைத்து மண்டபம் எழுப்பி பூஜை நடக்கிறது. கல்கருடன் விக்கிரகத்தில் ஒன்பது இடங்களில் நாகர் உருவம் இருக்கும். வெள்ளி அங்கி சாத்தியிருக்கும்போது நவநாகர்கள் நன்றாகத் தெரியும். ஏழு வியாழக்கிழமை கல்கருடனுக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் கொடுப்பார்கள். நேரில் போக முடியாதவர்கள் தேவஸ்தானத்தில் பணம் கட்டினால் வீட்டு விலாசத்துக்கு பிரசாதம் அனுப்பி விடுவார்கள். ராகு- கேது தோஷம் விலகும். புத்திர தோஷம் நீங்கும். திருமணத் தடை போகும். உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும். ராகு தசை, ராகு புக்தி நடப்பவர்கள், காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் அவசியம் போகவேண்டிய தலம். கும்பகோணத்திலிருந்து 7 கிலோ மீட்டர். குடவாசல்- திருச்சேறை போகும் பாதை.

திருச்சேறையிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் குடவாசல் உள்ளது. அங்குள்ள சிவன் கோவில் பழயையான பாடல் பெற்ற ஸ்தலம். கோவில் அமைப்பே வித்தியாசமாக இருக்கும். கீழே அம்பாள் சந்நிதி. மண்டபத்தின் மேல் சுவாமி வீற்றிருப்பார். படியேறிப் போய் தரிசிக்க வேண்டும். மேற்கு நோக்கிய சந்நிதி. கருடபகவான் இந்த சிவ பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற அற்புத ஸ்தலம். ராகு- கேது தோஷம் விலக இங்கும் சென்று வழிபட வேண்டும்.

குடவாசலில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் சேங்காலிபுரம் என்று ஒரு சின்ன கிராமம். அங்கு தத்தாத்ரேயர் கோவில் இருக்கிறது. அவர் சந்நிதியில் கார்த்தவீர்யார்ஜுன யந்திரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அந்த சந்நிதியை பிரதிஷ்டை செய்த மகான் நேபாளில் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி, வேலையை ராஜினாமா செய்து விட்டு காசியில் குருநாதரிடம் உபதேசம் வாங்கி, சேங்காலிபுரம் வந்து தங்கி, தத்தாத்ரேயர் பஞ்சலோகமூர்த்தியையும் கார்த்தவீர்யார்ஜுன யந்திரத்தையும் ஸ்தாபிதம் செய்து பூஜை செய்து வந்தார். சந்நிதி எதிரில் அவர் ஜீவசமாதி விளங்குகிறது. அதன்மேல் துளசி மாடம் உள்ளது. கார்த்திகை மாதம் மிருகசீரிட நட்சத்திரன்று தத்தஜெயந்தி நடக்கும். (ஒரு வாரம்). கடைசி நாளில் தொட்டில் உற்சவம், பாலூட்டும் உற்சவம், நடக்கும். பத்துப்பதினைந்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத சுமங்கலிப் பெண்கள் மேற்கண்ட தொட்டில் உற்சவத்தில் கலந்து கொண்டால் வாரிசு கிடைக்கும் என்பது அனுபவபூர்வமான உண்மை. தை மாதம் குருநாதர் குரு பூஜை நடக்கும். மேனேஜிங் டிரஸ்டி நாக கிருஷ்ணன் மகன் சுப்பிரமணி, செல்: 94872 92481-ல் தொடர்புகொண்டு போகலாம்.

கல்கருடன், திருச்சேறை கடன் நிவர்த்தீஸ்வரர் கோவில், குடவாசல் சிவன் கோவில், சேங்காலிபுரம் தத்தாத்ரேயர் கோவில் எல்லாம் வரிசையாக அடுத்தடுத்து உள்ளன.

மிதுன குரு 9-ஆம் பார்வையாக 10-ஆம் இடம் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால்- 10-ஆம் இடம் கும்பத்துக்கு குரு 2, 11-க்குடையவர்; அவர் 10-ஆம் இடத்துக்கு 5-ல் திரிகோணத்தில் நிற்பதாலும், குரு ரிஷப ராசிக்கு 11-க்குடையவர் என்பதாலும் உங்களுடைய முயற்சியில் வெற்றியும் செய்தொழில் வகையில் லாபமும் உண்டாகும். சேமிப்பும் உண்டாகும்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

குருவின் அஸ்தமனம் ஒரு மாதம் உங்களுடைய செயல்களிலும் காரியங்களிலும் முயற்சிகளிலும் தடை, தாமதம், குறுக்கீடு முதலிய பலன்களைச் சந்திக்கக் கூடும். குரு 8, 11-க்குடையவர். மற்ற நேரங்களில் 11-ஆம் இடத்து நற்பலனும், 2-ல் நிற்கும் பலனும் அற்புதமாக இருக்கும். குருவின் வக்ரத்தில் 8-ஆம் இடத்துப் பலன் உக்ரமாக நடக்கும். சஞ்சலம், கவலை, ஏமாற்றம், நம்பிக்கைத் துரோகம் முதலிய பலன்களையும் சந்திக்க நேரலாம். இக்காலம் குருப் பிரீதியாக ராஜபாளையம்- தென்காசி பாதையில் வாசுதேவநல்லூரிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தாருகாபுரம் என்ற ஊரில் மத்தியஸ்த நாதர் சிவன் கோவிலும் அகிலாண்டேஸ்வரியம்மாள் சந்நிதியும் உள்ளது. மிகமிகப் பழமையான கோவில். சிவன் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி சந்நிதி உண்டு. தட்சிணாமூர்த்தி சிலையில் நவகிரகங் களும், சனகாதி முனிவர்களும் இருப்பார்கள். இவரை வழிபடுவதால் நவகிரகங்களும் அனுக்கிரகங்களாக விளங்குவர்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

இக்காலம் வக்ரத்தில் உக்ரபலம் என்பதால் குரு இருத்த இடத்துப் பலனும், குரு பார்த்த இடத்துப் பலனும் யோக பலனாக அமையும். அதிலும் ஜனன காலத்தில் குரு வக்ரமாக இருக்கும் ஜாதகர்களுக்கு, இப்போது கோட்சாரத்தில் வக்ரமாக இருக்கும் சமயம் அற்புத பலன்களாக நடக்கும். எதிர்பாராத லாபம், வெற்றி, சேமிப்பு, குடும்பத்தில் மங்களகாரியம், தனவரவு ஆகிய பலன்கள் நடக்கும்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி உங்கள் நீண்டகாலக் கனவுகளையும் திட்டங்களையும் நிறைவேற்றும். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிள்ளைகளின் எதிர்காலப் பலன்கள் நல்ல முறையில் செயல்படும். படிப்பு, திருமணம், வாரிசு, வேலை உயர்வு போன்ற அற்புத பலன்களை எதிர்பார்க்கலாம். கும்பகோணம் ஆடுதுறை அருகில் சூரியனார் கோவில் சென்று வழிபடலாம். அதன் அருகில் திருமங்கலக்குடி உள்ளது. அங்கு பிராணநாதேஸ்வரர் கோவிலில் மாங்கல்யம் காத்த மங்களாம்பிகை சந்நிதியும் உண்டு. அங்கும் சென்று வழிபடலாம்.

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி வாழ்க்கையில் புதிய திருப்பத்தையும் முன்னேற்றத்தையும் உண்டாக்கும். கடந்த சில ஆண்டுகளாக கஷ்டத்தையும் நஷ்டத்தையும் போராட்டத்தையும் கடன் தொல்லை களையும் சந்தித்தவர்களுக்கு இனிமேல் விடிவு காலம்! வீழ்ச்சி யடைந்தவர்களுக்கு இனி தாழ்ச்சியில்லை. தன்னம்பிக்கையும் தைரிய மும் உங்களைத் தலைநிமிரச் செய்யும். புதுவாழ்வும் புனர்வாழ்வும் உண்டாகும். செல்வாக்கும் சிறப்பும் உண்டாகும்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:

கடந்த காலத்தில் (ரிஷபத்தில் குரு இருந்த காலம்) கஷ்ட நஷ்டம், இழப்பு, ஏமாற்றம் போன்றவற்றைச் சந்தித்தவர்களுக்கு இனிமேல் யோகம், தனவரவு, செல்வாக்கு, பதவியோகம் உண்டாகும். திருமணம், புதிய தொழில் முயற்சி, வாரிசு யோகங்களைத் தரும். வீடு, மனை, வாகன யோகம் அமையும். குடும்பத்தில் சுபமங்களச் செலவுகள் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக