நம்பர் 1 - ராஜேந்திர சிங்
நம்பர் 1 - மதுர்பாய் சவானிமுகில்
தமிழ்நாட்டில் பொழியும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் வீணாக்காமல், நமக்கு எப்போதும் பயன்படும்படி சேமித்துவைக்க முடிந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்? நினைத்துப்பார்க்கவே குளுகுளுவென இருக்கிறதுதானே!
அது மட்டும் நிகழ்ந்துவிட்டால் காலம்தோறும் கர்நாடகாவின் கருணையையும், ஆந்திராவின் அன்பையும், கேரளாவின் அனுசரணையையும் எதிர்பார்த்துக்கிடக்க வேண்டாம். `என் தண்ணீர் என் உரிமை' என தலை நிமிரலாம். சொல்வதற்குச் சரி. இதெல்லாம் சாத்தியமா? ‘சத்தியமாகச் சாத்தியமே’ என நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள் இருவர். ஒருவர், ராஜேந்திர சிங் - இன்னொருவர், மதுர்பாய். இவர்கள் வெறும் வாயால் குளம் வெட்டவில்லை. தங்களது செயற்கரிய செயல்களால் ராஜஸ்தானையும் குஜராத்தையும் ‘தண்ணி’றைவு பெற்ற பசுமை மாநிலங்களாக மாற்றிக்காட்டியிருக்கிறார்கள்.
யார் இந்த நீர் மனிதர்கள்?
மதுர்பாயின் கதையில் இருந்து தொடங்கலாம்.
1963-ம் ஆண்டில் குஜராத்தின் பவ்நகர் மாவட்டத்தின் கோபலா (Khopala) கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் மதுர்பாய் சவானி. குடும்பத்துக்குச் சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருந்தது. மானாவாரி விவசாயத்தை நம்பியே வாழ்க்கை. மழை பொய்த்துப்போனால் அந்த ஆண்டின் வருமானமே காலி. வறுமைசூழ் வாழ்க்கை. சௌராஷ்டிராவின் படேல் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள், பிழைப்பு இல்லாத மாதங்களில் சூரத் நகரத்துக்குச் செல்வார்கள். அந்த நகரம் இந்தியாவின் வைரத் தொழில் மையம். அங்கே வைரம் பட்டை தீட்டும் பட்டறைகளில் வேலைக்குச் சேர்வார்கள். சம்பளம் மிக மிகக் குறைவு. இருந்தாலும், அவர்களுக்கு வேறு வழி இல்லை.
ஐந்தாம் வகுப்பு வரைதான் மதுர்பாயால் படிக்க முடிந்தது. பிறகு, வயல் வேலை. பஞ்சம் அடிக்கடி பழிப்பு காட்ட, தன் பதின்வயதில் சூரத்தில் தஞ்சம் அடைந்தார். வைரப் பட்டறையில் வேலை. கடும் உழைப்பைக் கொட்டினாலும் கைக்கு வரும் காசு கம்மி. சாலையோரக் கடைகளில் கிடைக்கும் மலிவு உணவை உண்டுவிட்டு, பிளாட்பாரத்திலேயே படுத்துத் தூங்கும் வாழ்க்கை. வைரத் தொழிலின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொண்டு தனியாக வைரப் பட்டறை ஒன்றை ஆரம்பித்தார். துணைக்கு சகோதரர்களைச் சேர்த்துக்கொண்டார். சவானி பிரதர்ஸ் வாழ்க்கை ஜொலிஜொலிக்கத் தொடங்கியது. மதுர்பாய், தனது 40 வயதுக்குள்ளாகவே சூரத்தின் கோடீஸ்வரர்களில் ஒருவராக உயர்ந்தார். இன்றைக்கு இந்தியாவின் முன்னணி வைர வியாபாரிகளில் மதுர்பாயும் ஒருவர். இருக்கட்டும். விஷயம் அது அல்ல.
வைரத்தில் சம்பாதித்தோமா, வளமுடன் வாழ்ந்தோமா என மதுர்பாய் ஒதுங்கிவிடவில்லை. அடிக்கடி தனது கோபலா கிராமத்துக்குச் சென்றுவந்தார். தன் கிராமத்துக்கு தன்னாலான சிறு உதவிகளையும் செய்துவந்தார். 90-களின் மத்தியில் ஊர் மக்களின் தீராத துன்பமாக தண்ணீர்த் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்தது. கோபலாவில் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த சௌராஷ்ட்ராவும் வறண்டு வாடிப்போயிருந்தது. பல ஊர்கள், தண்ணீரைச் சுமந்துவரும் ரயில்களை மட்டுமே நீர் ஆதாரமாக நம்பியிருந்தன. விவசாயம் விக்கித்து நின்றது. ஒரு குடம் நீருக்காக, கோபலா கிராமத்து மக்கள் பல மைல்கள் அலைய வேண்டிய அவலம்.
இது மதுர்பாயின் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. இதற்குத் தீர்வு காண வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால், எங்கிருந்து எப்படித் தொடங்குவது என்பது புரியவில்லை. அப்போதுதான் மதுர்பாய்க்கு ஒரு விஷயம் தெரிய வந்தது. சௌராஷ்ட்ரா கிராமங்களில் ஒன்றான ராஜ்கோட்டின் ராஜ்சம்தியாலா (Rajsamdhiyala) என்ற ஊரும் தண்ணீர்த் தட்டுப்பாட்டுடன்தான் இருந்தது. அந்த ஊர் மக்களின் முயற்சியால் நீர் ஆதாரங்கள் பெருகி, இப்போது ஊர் பசுமையாக மாறிவிட்டது என்பதை அறிந்தார். கோபலா மக்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு ராஜ்சம்தியாலாவுக்குச் சென்றார். அங்கே மதுர்பாய் உணர்ந்துகொண்ட பாடம் இதுதான். இந்தியாவில் குறைந்த மழைப்பொழிவுகொண்ட பிரதேசங்களில் சௌராஷ்ட்ராவும் ஒன்று. ஆனால், மழைநீரில் சுமார் 90 சதவிகிதம் கடலில்தான் கலக்கிறது. ராஜ்சம்தியாலா மக்கள், தங்கள் பகுதியில் பொழியும் மழைநீரைச் சேமிக்கும் வழிகளை முறைப்படி ஏற்படுத்தி, பசுமையை மீட்டெடுத்திருக்கிறார்கள்.
உத்வேகத்துடன் கோபலா கிராமத்துக்குத் திரும்பினார் மதுர்பாய். ஊர் மக்களைக் கூட்டினார். ‘தண்ணீர்ப் பிரச்னையை அரசாங்கம்தான் தீர்க்கணும்னு உட்கார்ந்திருந்தா, காலம் முழுக்க இப்படியே தவிச்சுக்கிட்டு இருக்க வேண்டியதுதான். நம்ம பிரச்னையை நாமதான் தீர்த்தாகணும். அதுக்கு என்கிட்ட வழி இருக்கு’ - மதுர்பாய் தம் மக்கள் மத்தியில் புரியும்படி எடுத்துச் சொன்னார். எதைச் செய்தால் தண்ணீர் கிடைக்கும் என்ற தாகத்தில் இருந்த மக்களும் மதுர்பாயின் குரலுக்குச் செவிசாய்த்தனர். ‘மழைநீரைச் சேகரிக்கிறதுக்கு ஏற்ற மாதிரி நம்ம ஊர்ல பல தடுப்பணைகளைக் கட்டணும். அதுக்காக அரசாங்கத்துக்கிட்ட பணம் எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது. நமக்கு நாமே பணம் போட்டு தடுப்பணைகளைக் கட்டுவோம்’ என்ற மதுர்பாய், அதற்கான தெளிவான திட்டத்தையும் வகுத்துக் கொடுத்தார்.
கோபலா கிராமத்தின் மொத்த விவசாய நிலப்பரப்பு 16,000 பிக்ஹா. (Bigha என்பது ஒரு நில அளவை முறை.) ஒரு பிக்ஹாவுக்கு 200 ரூபாய் என்ற அளவில் 32 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. மதுர்பாயும் குறிப்பிட்ட அளவு பணம் போட்டார். மதுர்பாய் போலவே சூரத், மும்பை, பரோடா என்று பல்வேறு நகரங்களில் வளமுடன் வாழ்ந்த கோபலா வியாபாரிகள் பலரும் பணம் போட்டனர். மொத்தமாக சுமார் 2 கோடி நிதி திரட்டப்பட்டது.
மாதக்கணக்கில் ஆராய்ந்து தெளிவாகத் திட்டமிடப்பட்டது. 1998-ம் ஆண்டின் இறுதியில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஊர் மக்களே வேலைகளில் ஈடுபட வேண்டும்; யாருக்கும் கூலி கிடையாது; குடும்பத்துக்கு ஒருவர் வேலைக்கு வரவேண்டும்; வரத் தவறினால் 50 ரூபாய் அபராதம்... என விதிமுறைகள் வகுக்கப்பட்டன; கடைப்பிடிக்கப் பட்டன. சுமார் ஆறு மாதங்கள் கோபலா கிராமமே சேர்ந்து உழைத்தது. மதுர்பாயும் களத்தில் இறங்கி உழைத்தார். ஒவ்வொருவரையும் அர்ப்பணிப்புடன் உழைக்க ஊக்குவித்தார். 1999-ம் ஆண்டு கோடையின் இறுதியில் ஊரில் பல இடங்களில் 200 தடுப்பணைகள் கட்டப்பட்டிருந்தன. சிறியதும் பெரியதுமாக 10 குளங்கள் வெட்டப்பட்டிருந்தன. இந்த நீர்நிலைகளை எல்லாம் இணைக்கும்விதத்தில் சுமார் 58 கி.மீ தொலைவுக்கு வாய்க்கால்களும் வெட்டப்பட்டிருந்தன. வியர்வை சிந்திய மக்கள் ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஒருவழியாக அந்தப் பருவத்துக்கான மழை ஆரம்பித்தது. சாரலும் தூறலும் பெருமழையுமாக ஒரு வாரம் பெய்தது. வழக்கத்தைவிடக் குறைவான அளவுதான். ஆனால், அதற்குள்ளாகவே புதிய தடுப்பணைகளில் நீர் ததும்ப ஆரம்பித்தது. குளங்கள் நிறைமாதக் கர்ப்பிணியாகப் பொலிவுபெற்றன. வாய்க்கால்களில் சலசல நீரோட்டம். செத்துப்போன கிணறுகளில் 50 அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது. ஆழ்துளைக் கிணறுகளும் மறுபிறவி எடுத்தன. கோபலா கிராமத்து மக்கள் தங்கள் ஆனந்தக் கண்ணீரை மழைக்குப் பரிசாகக் கொடுத்தனர். மதுர்பாய், கோபலா விவசாயிகளிடம் தங்கள் வயல்களில் சொட்டுநீர்ப்பாசனத்துக்கான வசதிகளை ஏற்படுத்தச் சொன்னார். அந்த வருடத்தில் குறைவான மழையால் சௌராஷ்ட்ராவின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் பொய்த்துப்போனது. கோபலா விவசாயிகள் மட்டும் பெருவிளைச்சல் கண்டனர். சுமார் ஐந்தரைக் கோடி அளவுக்கு விளைபொருட்களை விற்று நிமிர்ந்தனர்.
மதுர்பாயின் மனதில் குதூகலம். தம் மண்ணுக்கு மீண்டும் உயிர் கொடுத்த திருப்தி. `ஆனால், சௌராஷ்ட்ரா முழுவதுமே நீர் வளமின்றி நிர்கதியாகத்தான் இருக்கிறது. அதற்கு என்ன செய்யலாம்?’ என்ற கவலை அவரை அரிக்க ஆரம்பித்தது. அந்தச் சமயத்தில்தான் மதுர்பாய், ‘தருண் பாரத் சங் (TBS)’ பற்றி கேள்விப்பட்டார். அதன் நிறுவனரும், இந்தியாவின் ‘ஜல் புருஷ்’ (தண்ணீர் மனிதன்) என அழைக்கப்படும் ராஜேந்திர சிங் பற்றியும் தெரிந்துகொண்டார். இங்கே நாமும் தெரிந்துகொள்வோம்.
உ.பி-யைச் சேர்ந்த ராஜேந்திர சிங், ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர் (1959). ஆயுர்வேதத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். ராஜஸ்தானில் பணியாற்றியவர். ஒரு கட்டத்தில் அரசின் நிர்வாகச் சீர்கேடுகளில் மனம் வெறுத்த ராஜேந்திர சிங், `தருண் பாரத் சங்' என்ற அமைப்பில் இணைந்து சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். 1985-ம் ஆண்டில் தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அல்வார் மாவட்டத்தின் கோபால்புரா என்ற கிராமத்தில் ஆயுர்வேத மருத்துவச் சேவையுடன், கல்வி கற்பிக்கும் வேலையையும் தொடங்கினார். அந்த ஊரில் தண்ணீர்ப் பஞ்சம் உச்சத்தில் இருந்தது. ‘இந்த ஊருக்கு இப்போதைய அவசியத் தேவை கல்வி அல்ல; தண்ணீர். நீ நிஜமாகவே ஏதாவது நல்லது செய்ய நினைத்தால் ஊர்க் குளத்தைத் தூர்வாரிக் கொடு’ என்றார் முதியவர் ஒருவர். ராஜேந்திர சிங்கை அந்த வார்த்தைகள் மிகவும் பாதித்தன. `குளத்தைத் தூர்வாரப்போகிறேன். உதவிக்கு வாருங்கள்' என ஊர் மக்களை அழைத்தார். `யாருடா நீ?' என்பதுபோல விநோதமாகப் பார்த்தார்கள். உடன் வந்த நண்பர்களும் விலகிப்போனார்கள்.
ராஜேந்திர சிங், மனம் தளரவில்லை. தனி ஒருவராக மண்வெட்டி, கடப்பாரையுடன் வறண்ட குளத்தில் இறங்கினார். தினமும் குறைந்தது 10 மணி நேரமாவது உழைத்தார். ‘பாவம், பைத்தியம்...’ என ஊர்க்கண்கள் பரிதாபமாகப் பார்த்தன. வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் ராஜேந்திர சிங் சிந்திய வியர்வையால், குளத்தின் பரப்பளவு நீளமும் ஆழமுமாக விரிந்தது. பின்னர் பெய்த மழையில் குளத்தில் நீர் தங்கியது. அருகில் இருந்த கிணறுகளும் உயிர்த்தன. சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. கோபால்புரா மக்களின் மனதில் ராஜேந்திர சிங்கும் உயர்ந்தார். அப்போது வயதானவர்களும் பெண்களும் நோஞ்சான் குழந்தைகளுமே கோபால்புராவில் மிஞ்சியிருந்தனர். பிழைப்புக்காக வெளியூர் சென்றிருந்த ஆண்கள் பலரும், குளம் புத்துயிர் பெற்றதை அறிந்து மீண்டும் ஊருக்குத் திரும்பி வரத் தொடங்கினர். மக்களும் ராஜேந்திர சிங்குடன் கைகோத்தனர்.
ராஜேந்திர சிங், மனம் தளரவில்லை. தனி ஒருவராக மண்வெட்டி, கடப்பாரையுடன் வறண்ட குளத்தில் இறங்கினார். தினமும் குறைந்தது 10 மணி நேரமாவது உழைத்தார். ‘பாவம், பைத்தியம்...’ என ஊர்க்கண்கள் பரிதாபமாகப் பார்த்தன. வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் ராஜேந்திர சிங் சிந்திய வியர்வையால், குளத்தின் பரப்பளவு நீளமும் ஆழமுமாக விரிந்தது. பின்னர் பெய்த மழையில் குளத்தில் நீர் தங்கியது. அருகில் இருந்த கிணறுகளும் உயிர்த்தன. சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. கோபால்புரா மக்களின் மனதில் ராஜேந்திர சிங்கும் உயர்ந்தார். அப்போது வயதானவர்களும் பெண்களும் நோஞ்சான் குழந்தைகளுமே கோபால்புராவில் மிஞ்சியிருந்தனர். பிழைப்புக்காக வெளியூர் சென்றிருந்த ஆண்கள் பலரும், குளம் புத்துயிர் பெற்றதை அறிந்து மீண்டும் ஊருக்குத் திரும்பி வரத் தொடங்கினர். மக்களும் ராஜேந்திர சிங்குடன் கைகோத்தனர்.
கோபால்புராவில் நிகழ்ந்த மாற்றம் அக்கம் பக்கத்துக் கிராமங்களுக்கும் ஜிலுஜிலுவெனப் பரவியது. அவர்களும் வறட்சியை நீக்குவதற்கான புரட்சிக்குத் தயாராக இருந்தார்கள். ராஜேந்திர சிங், அந்த மக்களுக்கு வழிகாட்டினார். அடுத்த ஒரே ஆண்டில் 36 கிராமங்களில் குளங்கள் வெட்டப்பட்டன / தூர் வாரப்பட்டன. அல்வாரில் கொஞ்சம் கொஞ்சமாக பசுமைப் புரட்சி வேரூன்றத் தொடங்கியது. அங்கு இருந்து ராஜஸ்தானின் பிற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கியது. கிராமம் கிராமமாக பாதயாத்திரை சென்ற ராஜேந்திர சிங், மக்களிடையே மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புஉணர்வைக் கொண்டுவந்தார். அடுத்த கட்டமாக, மக்களின் துணையுடன் பல ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துபோன அர்வாரி நதியை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். ஆற்றுப்படுகைகளில் தடுப்பணைகளைக் கட்டுதல், ஆரவல்லி மலையில் சற்றே பெரிய அணை ஒன்றை எழுப்புதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்... என ராஜேந்திர சிங் மக்களுடன் உழைத்தார். அந்த மழைக்காலத்தில், அணையும் தடுப்பணைகளும் தண்ணீரால் தளும்பின. அர்வாரி பழைய பொலிவுடன் மீண்டும் சலசலத்து ஓட ஆரம்பித்தது. அர்வாரியைப் பாதுகாக்க வேண்டும் அல்லவா? அந்த நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருக்கும் 70 கிராமங்களில் இருந்து, ஊருக்கு 2 பேர் வீதம் தேர்ந்தெடுத்து, 140 பேரைக் கொண்ட அர்வாரி நாடாளுமன்றத்தை அமைத்தார். (இது அங்கீகாரமற்ற அமைப்பு என்றாலும் நதி ஆக்கிரமிப்புகளைத் தடுத்தல், அதிக நீர் உறிஞ்சுதலை, மரம் வெட்டுதலைத் தடுத்தல் என இன்று வரை மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது).
சரிஷ்கா தேசியப் பூங்கா பகுதியில் அமைந்திருந்த ஏராளமான சுரங்கங்கள் அந்தப் பகுதியில் நீர் வளத்துக்குப் பெரும் இடையூறாக இருப்பதை அறிந்தார் ராஜேந்திர சிங். அகிம்சை வழியிலான போராட்டங்கள் மூலமாகவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலமாகவும், மாஃபியாக்களின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல் சுரங்கங்களை மூடவைத்தார். அதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அவரவர் கிராமங்களில் அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கவும் வழிவகை செய்தார். ராஜேந்திர சிங்கின் அயராத முயற்சியால் சர்ஷா, பஹானி, ரூபரேல், ஜஹாஜ்வாலி உள்ளிட்ட வறண்டுபோன ராஜஸ்தானின் பல நதிகளும் புத்துயிர் பெற்றன.
ராஜேந்திர சிங், ராஜஸ்தானின் 11 மாவட்டங்களில் சுமார் 4,500 தடுப்பணைகளைக் கட்டியிருக்கிறார். 1,200 கிராமங்களை தண்ணீர்ப் பிரச்னையற்ற பகுதிகளாக மாற்றியிருக்கிறார். இதனால் நிலத்தடி நீரின்றி கறுப்பு மண்டலங் களாக அறிவிக்கப்பட்ட மாநிலத்தின் பல பகுதிகள், நிலத்தடி நீர் மிகுந்த வெள்ளை மண்டலங்களாக உருமாறியிருக்கின்றன. வனப்பகுதி விரிவடைந்திருக்கிறது. விளைச்சல் பல மடங்கு பெருகியிருக்கிறது. மானாவாரி விவசாயத்தை மட்டுமே நம்பிய ராஜஸ்தான் விவசாயிகள், நீர் அதிகம் தேவைப்படும் கரும்பு பயிரிடும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றனர். இப்படியாக, சத்தமே இல்லாமல் ராஜஸ்தானில் மாபெரும் தண்ணீர்ப் புரட்சி ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் ராஜேந்திர சிங்.
ராஜேந்திர சிங்கை, 1999-ம் ஆண்டில் தேடிச் சென்று சந்தித்தார் மதுர்பாய். அவரிடம் பெற்ற அனுபவத்துடன் குஜராத்துக்குத் திரும்பி `சௌராஷ்ட்ரா ஜல்தாரா டிரஸ்ட்’ (SJT) என்ற அமைப்பை ஆரம்பித்தார். 1999-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மதுர்பாயின் தலைமையில் பலரும் சௌராஷ்ட்ரா கிராமங்களுக்குப் பாதயாத்திரை (325 கி.மீ) மேற்கொண்டனர். ஒவ்வோர் இடத்திலும் கூட்டங்கள் கூட்டி, கிராம மக்களுடன் பேசினர். ‘நமக்கான நீர்த்தேவையை நாமே பூர்த்தி செய்துகொள்ள முடியும். எங்கள் அமைப்பு அதற்கான அத்தனை உதவிகளையும் செய்யும். தேவை உங்கள் ஆதரவும் உழைப்பும் மட்டும்தான்.’ கோபலாவில் சாதித்துக்காட்டிய மதுர்பாய்க்குத் தோள்கொடுக்க ஒவ்வொரு கிராமமுமே தயாராக இருந்தது. கிராம சபை மூலமாக இதற்கான குழு அமைக்கப்பட்டது. மக்கள் கொஞ்சம் பணமும் அதிக உழைப்பும் போட வேண்டும். கட்டுமானத்துக்கான சிமென்ட், பிற பொருள்கள் வழங்குவதை மதுர்பாயின் டிரஸ்ட் பார்த்துக்கொள்ளும். பணிகள் நிறைவேறின. பருவமழையும் பொழிந்தது. அந்தந்தக் கிராமங்களின் குடிநீர்ப் பிரச்னை தீர ஆரம்பித்தது.
1997-ம் ஆண்டிலேயே குஜராத்தின் பல பகுதிகளில் தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை, மாநில அரசும் கையில் எடுத்திருந்தது. அது முழுமையாகச் செயல் வடிவம் பெறவில்லை. கட்டப்பட்ட தடுப்பணைகள் பலவும் தரமற்றதாக இருந்தன. பலன் இல்லை. அதே சமயத்தில் சௌராஷ்ட்ரா ஜல்தாரா டிரஸ்ட்டின் சீரிய செயல்கள் மாநில அரசின் கவனம் ஈர்த்தன. அப்போதைய குஜராத் முதலமைச்சர் கேசுபாய் படேல், `Sardar Patel Participatory Water Conservation Programme’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதாவது அரசும் மதுர்பாயின் டிரஸ்ட்டும் இணைந்து செயல்படும் திட்டம்.
அதில் மதுர்பாய்க்குப் பல சங்கடங்கள் இருந்தன. காரணம், அரசு கட்டுமானப் பணிக்கு என டெண்டர்களை வரவேற்கும். அமைச்சர், எம்.எல்.ஏ முதல் கடைநிலை ப்யூன் வரை பலருக்கும் லஞ்சம் தந்து யாரோ ஓர் ஒப்பந்ததாரர், பணியைக் கையில் எடுப்பார். அவருக்கு லாபம் வரவேண்டும் எனில், கட்டுமானத்தில் கை வைப்பார். தரமற்ற தடுப்பணைகள் தண்ணீரைத் தடுக்க முடியாமல், பின்னர் கண்ணீரையே வரவழைக்கும். ஒட்டுமொத்தத் திட்டமும் பாழாகும். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதில் மதுர்பாய் உறுதியாக நின்றார். அரசிடம் அழுத்தமாகப் பேசினார். `டெண்டர், கான்ட்ராக்ட் உள்ளிட்ட நடைமுறைகள் எதுவும் கூடாது. அரசு இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கியிருக்கும் தன் பங்கு பணத்தை கிராம நிர்வாகத்திடம் அளித்துவிட வேண்டும். ஜல்தாரா டிரஸ்ட்டும், ஊர் மக்களும் மீதித் தொகையைப் போட்டு, தங்கள் உழைப்பால், திட்டமிடலால், தங்களுக்குத் தேவையான தரமான கட்டுமானங்களை உருவாக்கிக் கொள்வார்கள்.’
மாநில அரசு அதற்கு ஒப்புக்கொண்டது.
2001-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்து மோடி முதலமைச்சரான பின்னரும், மதுர்பாய்க்கும் அவரது செயல்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தார். அடுத்த 10 ஆண்டுகளில் ஜல்தாரா டிரஸ்ட்டின், மக்களின் அர்ப்பணிப்புடன்கூடிய அயராத உழைப்பில் சௌராஷ்ட்ராவின் பெரும்பாலான கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான தடுப்பணைகள், குறைந்த செலவில், நிறைந்த தரத்தில் உருவாக்கப்பட்டன. நீர் சுமந்துவந்த ரயில்கள் ஓய்வெடுக்க ஆரம்பித்தன. விவசாயத்தை விட்டு விலகிய பலரும் மீண்டும் டிராக்டரில் ஏறினர். கோடைகாலத்திலும் நிறைகுடங்கள் சிரித்தன. அடிபம்புகள், எப்போதும் நீர் சுரக்கும் காமதேனுக்களாக மாறின. ஆனால், இவற்றைச் செயல்படுத்துவதில் சங்கடமான சவால்களுக்கும் குறைவில்லை.
சாதிச் சண்டைகளும் பரம்பரைப் பகைகளும் பழிவாங்கும் தீரா வெறியும் கிராமங்களில் அதிகம். அத்தனையையும் தாண்டி, மக்களை ஊரின் நலனுக்காக ஒன்றுகூட்டி ஒரு காரியத்தில் ஈடுபட வைப்பது சவால். தன் பேச்சின் மூலமும், சாதுர்யமான நடவடிக்கைகள் மூலமும் அதனைச் சாத்தியப்படுத்தினார் மதுர்பாய். தேஷரா என்ற கிராமத்துக்குள் நுழைந்து பேச படேல்கள் தயங்கினர். காரணம் அவர்களுக்கும் அந்த ஊரின் தர்பார் ராஜ்புத்களுக்கும் இடையே பல காலப் பகை. அந்தச் சமயத்தில் ராஜேந்திர சிங்கை தர்பார் ராஜ்புத்களிடம் பேச அனுப்பினார் மதுர்பாய். விருந்தினரை உபசரிப்பதில், அவர்களது தேவையை நிறைவேற்றுவதில் அந்த ராஜ்புத்கள் அதிக அக்கறைகாட்டுவர். ஆக, ராஜேந்திர சிங் சென்று கேட்கவும், ஊரின் நலனுக்காக இறங்கிவந்தார்கள். பகையை மறந்து படேல்களுடன் கைகோத்தார்கள். கொலை வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டன. தேஷரா கிராமத்தின் நீர்வளம் பேஷாகப் பெருகியது.
பெண்கள் நகையைக் கழற்றிக்கொடுப்பது, அடிமட்ட மனிதர்கள் தங்கள் வசம் இருக்கும் நூறு, இருநூறைத் தயக்கத்துடன் கொடுப்பது, வயதானவர்களும் ஊருக்காகக் களமிறங்கி உழைப்பது என பல நெகிழ்வூட்டும் சம்பவங்கள். `ஊரின் நீர்வளத்தைப் பெருக்குவது மட்டுமே நம் குறிக்கோள்’ என மதுர்பாய் உருவாக்கிய மனமாற்றம், பிற சண்டை, சச்சரவுகள், ஏற்றத்
தாழ்வுகளை எல்லாம் ஏறக்கட்டி ஏற்றத்தைக் கொடுத்தது.
தாழ்வுகளை எல்லாம் ஏறக்கட்டி ஏற்றத்தைக் கொடுத்தது.
தற்போது சௌராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் சுமார் 5,600 கிராமங்கள் நீர்வளத்தில் தன்னிறைவு பெற்று விளங்குகின்றன. 70-க்கும் மேற்பட்ட நதிகள் பெருகி ஓடுகின்றன. `2000-09-ம் ஆண்டுகள் காலகட்டத்தில் குஜராத்தின் விவசாயப் பரப்பளவு 15 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. விவசாய வருமானம், 18,000 கோடி ரூபாயில் இருந்து 49,000 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். இன்றைக்கு நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உள்ள மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. குஜராத் மக்கள் மதுர்பாயை தங்களது ‘நீர்க்கடவுள்’போலத்தான் போற்றுகிறார்கள்.
தமிழ்நாட்டின் கவனத்துக்கு!
‘கடவுள் தமிழ்நாட்டுக்கு அதிக நீரைக் கொடுத்துக் கெடுத்துவைத்திருக்கிறார். ஆண்டுக்கு சராசரியாக 1,000 மி.மீ மழை பொழியும் தமிழ்நாடு, குடிநீர்ப் பஞ்சத்தில் சிக்குவது வாடிக்கை. அதில் பாதி அளவே மழை பெறும் பாலைவன ராஜஸ்தானில் தண்ணீர்ப் பிரச்னை இல்லை. ஏன்? சிந்தியுங்கள்! தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை மிகவும் கீழ்நிலையில் இருக்கிறது. மழைநீர் சேகரிப்பு அடியோடு இல்லை. மழைநீர் சேகரிப்பு என்ற பெயரில் இங்குள்ள திட்டங்கள் பெயர் அளவுக்கே செயல்படுத்தப்படுகின்றன. அண்டை மாநிலங்களுடன் உள்ள நீர் சிக்கல்களை சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தீர்த்துக்கொள்வது ஒரு பக்கம். அதற்கு முன்பாக முதலில் உங்கள் மாநிலத்துக்குள்ளேயே கிடைக்கும் தண்ணீர் வளத்தை முறையாக, முழுமையாகச் சேகரிக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள். அதில் மக்களை ஈடுபடுத்துங்கள். அது பெரிய வெற்றியைத் தரும் என்பது ராஜஸ்தான் அனுபவத்தில் நாங்கள் கண்ட உண்மை’ என்பதே ராஜேந்திர சிங் தமிழ்நாட்டுக்கு வழங்கும் அறிவுரை.
தேவை, பெண் குழந்தைகள்!
குஜராத்தில் பெண் குழந்தைகள் விகிதாசாரம் குறைந்துகொண்டே செல்வதை உணர்ந்த மதுர்பாய், அதுகுறித்த விழிப்புஉணர்வுப் பிரசாரத்தையும் மேற்கொள்ள ஆரம்பித்தார். பெண் குழந்தைகள் பிறப்பிலேயே கொல்லப்படுவதைத் தடுப்பது முதல், பெண் குழந்தைகளை நேசித்து வளர்த்தெடுப்பது வரை ஊர் ஊராகச் சென்று பலவிதமான பிரசாரங்களை மேற்கொண்டார். இந்த முயற்சிகளின் காரணமாக குஜராத்தில் 1,000 ஆணுக்கு 770 பெண் என்று இருந்த பாலின விகிதம், தற்போது 870 ஆக உயர்ந்திருக்கிறது!
நீருக்கான நோபல்
ராஜேந்திர சிங்குக்கு 2001-ம் ஆண்டில் ராமன் மகசேசே விருதும், 2005-ம் ஆண்டில் ஜம்னா லால் பஜாஜ் விருதும் வழங்கப்பட்டிருக்கின்றன. 2015-ம் ஆண்டில், `நீர் மேலாண்மைக்கான நோபல் பரிசு’ என அழைக்கப்படும் Stockholm Water Prize-ஐ ஸ்வீடன் அரசு வழங்கியது.
குஜராத் அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள மதுர்பாய்க்கு, 2014-ம் ஆண்டில் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக