வியாழன், ஜனவரி 21, 2016

மிதுன ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்


மிதுன ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்
உங்களின் மிதுன ராசிக்குரிய அதிபதி புதன் ஆவார். மிதுன புதன் என்பது சாத்வீகமானதாகும். எதற்கும் சட்டென்று அவசரப்பட மாட்டீர்கள். முதலில் தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக் கொண்டு, பதில்களை நோக்கி நகர்கின்ற தன்மையை உங்களுக்குக் கொடுப்பார் புதன். அதனாலேயே உங்களில் படைப்பாளிகள் அதிகம் பேர் உண்டு. நேரடியான விமர்சனங்களாக இல்லாமல், ‘இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்’ என நாசூக்கான ஆலோசனையும் அறிவுரையுமாகப் பேசுவீர்கள்.
இப்படிப்பட்ட உங்களுக்கு ஆறாம் இடம் என்றழைக்கப்படும் கடன், நோய், எதிரிகள் ஸ்தானத்திற்கு அதிபதியாக செவ்வாய் வருகிறார். ஏற்கனவே, புதனும் செவ்வாயும் பகையாவார்கள். புதன் என்பது, அத்துமீறாமல் அமைதியாகவே கருத்துகளை வெளியிடும் கிரகமாகும். ஆனால் செவ்வாய் என்பது, ‘மீறினால் என்ன’ என்று சவால் விட்டு சட்டத்தை உடைக்கும் கிரகமாகும். இப்படிப்பட்ட செவ்வாய் உங்களின் ஆறாமிடத்திற்கு அதிபதியாக வருவதால், எங்கேயாவது வாயை விட்டு சிக்கிக் கொள்வீர்கள். பேச வேண்டிய இடத்தில் பேசாமல், பேசக் கூடாத இடத்திற்குப்போய் பேசி சிக்கிக் கொள்வீர்கள்.
செவ்வாய் உணர்ச்சிகரமாகவும் கோபத்தோடும் பேசி சிக்க வைத்து விடுவார். சின்ன விஷயத்திற்குப் போய் சடாரென்று பேசி பெரிய பிரச்னையில் மாட்டிக் கொள்வீர்கள். ‘‘அப்படியெல்லாம் அவரு பேசவே மாட்டாரு. என்னன்னு தெரியலை’’ என்பார்கள். உங்கள் ராசியாதிபதியான புதன் சாத்வீகமும் சௌம்யமும் நிறைந்தது. ஆனால் இந்த செவ்வாய், அடிக்கடி எமோஷனலாகி ஆணவத்தோடு செயல்பட வைத்து விடுவார். இந்த முரண்பாட்டை சமமாக்க முடியாமல் எப்போதும் தவிப்பீர்கள். ‘‘நான் என்ன சொல்ல வர்றேன் தெரியுமா’’ என்று கேட்டுவிட்டு அதீத கோபத்தோடும் கடுமையாகவும் செவ்வாய் பேச வைத்து விடுவார்.
செவ்வாய் ரத்த பந்தங்களுக்கு உரியவராக இருப்பதால், உங்களுக்கு உடன்பிறந்தோர்களுடன் பிரச்னை ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு. மேலும், செவ்வாய் பூமிக்குரியவராக இருப்பதால் மிதுன ராசியில் பிறந்த சகோதரர்களுக்குள் திருமணம் செய்வதற்கு முன்னரே சொத்துக்களை பிரித்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தை பெற்றோர் சரியாகச் செய்து விடவேண்டும். இல்லையெனில் சர்வ சாதாரணமாக அண்ணன் தம்பிகளுக்குள் ஒருவருக்கொருவர் வழக்கு தொடர்ந்து மோதிக் கொள்வார்கள். மிதுன ராசியில் பிறந்தாலேயே, ‘உடன்பிறந்தவர்கள் ஏதாவது செய்தால் செய்யட்டும். இல்லையெனில் விட்டுவிடுவோம்’ என்கிற மனோநிலைக்கு வந்து விடவேண்டும். ஆனாலும், என்னதான் நீங்கள் ஏமாற்றப்பட்டாலும் அண்ணன், தங்கை, அக்கா, தம்பி என்று அவர்கள் நினைவாகத்தான் இருப்பீர்கள். உங்களில் சிலருக்கு உடல்நலம் குன்றிய உடன்பிறப்பெல்லாம் உண்டு.
பூமிகாரகனாக செவ்வாய் வருவதால் நிலம் வாங்குவதை விட, கட்டிய வீடாக வாங்குவது நல்லது. இதையும் மீறி, வெறும் நிலமாக வாங்க ஆசைப்படுபவர்கள், வாழ்க்கைத்துணையின் பெயரில் பதிவு செய்து கொள்வது நல்லது. அப்படி வாங்கிவிட்டீர்கள் எனில், பேருக்காவது அஸ்திவாரம் போட்டு மூன்றடி உயரத்திற்கு சுவர் எழுப்புங்கள். இல்லையெனில், ‘‘இந்த இடத்தை வாங்கினதுலேர்ந்து பிசினஸே மந்தமாயிடுச்சி’’ என்பீர்கள். அதேபோல தாய்ப் பத்திரங்கள் சரியாக உள்ளனவா என்று பார்த்துத்தான் வாங்க வேண்டும். பிரச்னைக்குரிய சொத்துக்களை வாங்கி வைத்துவிட்டு அவஸ்தைப்படாதீர்கள்.
நீங்கள் காவல்துறை, மின்சாரத்துறை, நில அளவை போன்ற துறை சார்ந்த இடங்களில் வேலை செய்தால் அடிக்கடி எதிர்ப்புகள் வந்தபடி இருக்கும். இடமாற்றத்தைத் தவிர்க்க முடியாது. ஆறாமிடத்து செவ்வாய் இப்படி ஏதாவது பிரச்னைகளைக் கொடுத்து, அவற்றைப் பெரிதாக்கி, ஒரு படிப்பினையையும் தருவார். பலவித வேண்டாத நட்பைக் கொடுத்தெல்லாம் வாழ்க்கை அனுபவங்களை கூட்டுபவராகவும் செவ்வாய் செயல்படுவார். வேகமாகப் பேசுபவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், கோபக்காரர்களிடம் எப்படி ஒதுங்கியிருக்க வேண்டும் என்றெல்லாமும் செவ்வாய் சொல்லித் தருவார். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் குமார், செல்வம், பழனிவேல் என்பது போன்ற பெயருள்ளவர்களிடம் அவ்வப்போது உரசல் வந்து நீங்கும். காரணமற்ற பகை வளரும். ‘‘என்னமோ அவரைப் பார்த்தா புடிக்கலை’’ என்று சொல்பவர்களும் உங்களில் சிலர் உண்டு.
அலுவலகத்தில் மேலதிகாரியின் தவறை நேரடியாக தலைமை அதிகாரியிடம் கொண்டு செல்வீர்கள். நீங்கள் சொல்வதில் தவறில்லை. ஆனால் அவர்களாகக் கூப்பிட்டு அபிப்ராயம் கேட்கும்போது, அவர் என்ன செய்தால் நல்லது என விளக்குவது போலப் பேசுங்கள். இல்லையெனில், உங்களை சம்பந்தப்பட்டவர் எந்தக் காரணமும் இல்லாமல் முதல் எதிரியாகப் பாவித்து விடுவார். இதனால் மறைமுகப் பகை வளர்ந்து, தேவையற்ற வம்புகள், வழக்குகள் வரை நீளும். ‘‘எப்போடாப்பா என் மேல பழி சுமத்தறதுன்னு காத்துக்கிட்டிருக்கானுங்க’’ என்று அடிக்கடி நீங்களே நொந்து கொள்ளும்படியாகும்.
கைமாற்றாக அடிக்கடி கடன் வாங்க வேண்டாம். நீங்கள் பெரிய கடன்களைக்கூட அடைத்து விடுவீர்கள். ஆனால், சிறிய கடன்களை அடைக்க மறப்பீர்கள். இதனால் வெளியிடங்களிலும் அலுவலகத்திலும் நட்பை இழக்க வேண்டியது வரும். சிறிய பெட்டிக் கடைக்காரன் கூட, ‘‘முதல்ல காசைக் கொடுங்க ஸார். இதோட நூறு ரூபா நீங்க தரணும்’’ என்று அவமானப்படுத்தி விடுவான். இதேபோல சேமிப்புகளை அடிக்கடிக் கரைத்து விடுவீர்கள். தொடர்ச்சியாக உங்களால் சிறிய அளவிலான தொகையைக் கூட சேமிக்க முடியாமல் போய்விடும்.
நீங்கள் சொத்துக் கடன் வாங்கலாம்; வீட்டையோ இடத்தையோ அடகு வைத்துக்கூட கடன் எடுக்கலாம். ஆனால், தங்க நகையை மட்டும் அடகு வைக்கக் கூடாது. ஏனெனில், தங்கத்திற்குரிய குருவானவர் உங்களுக்கு பாதகாதிபதியாக வருகிறார். நகை மூழ்கிப் போய் வீட்டுக்கே திரும்ப வராமல் போய்விடும் அபாயம் உண்டு.
சமூகப் புரட்சி என்று திடீரென்று தோன்றும் அமைப்புகளில் சென்று சேரும்போது எச்சரிக்கை வேண்டும். ஏனெனில், நாட்டில் நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்பதிலும், அரசுக்கு பெட்டிஷன் எழுதுவதிலும் வல்லவர்கள் நீங்கள். உங்களின் மூளை பலத்தை நன்கு உபயோகித்துக் கொண்டு, பிரச்னை வரும்போது உங்களைத் தனியாகக் கழற்றி விட்டு விடுவார்கள். சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்கிற சூழலுக்கு ஆளாவீர்கள். தூது கிரகமாக புதன் இருப்பதால், செவ்வாய் எமோஷனலாக உங்களைப் பேச வைத்து நண்பர்களைக் கூட எதிரியாக்குவார். உங்களின் சொந்த ஜாதகத்தில் குருவும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடுவீர்கள். மேலும், குரு பாதகாதிபதியாக இருப்பதால் பதவியையும் பறிகொடுத்து பதவியில் இருக்கும்போது தண்டனையையும் அனுபவிக்கும்படி சிலருக்கு நேரிடும்.
இருசக்கர வாகனங்களிலுள்ள சைலன்சரில் அடிக்கடி சுட்டுக் கொள்வீர்கள். கவனமாக இருங்கள். மின்சாரத்தைக் கையாளும்போது மற்றவர்களை விட நீங்கள் பன்மடங்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரவே தீராதா என்று அடிக்கடி நொந்து கொள்வீர்கள். அடிக்கடி எண்டோஸ்கோபி எடுக்கும் ராசிக்காரரும் நீங்கள்தான். இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது ஆட்டுக் கிடா குறுக்காக வந்தால் எச்சரிக்கையாக இருங்கள். பெரும்பாலும் விபத்து அப்படித்தான் ஏற்படும்.
பக்கத்து தெருவுக்கு வண்டி எடுத்துக்கொண்டு போகும்போது கூட ஹெல்மட் போட்டுக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில், கடந்த கால நினைவுகளை மறந்துபோதல் போன்ற மூளை சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் வயதான காலத்தில் பெரும்பாலும் வரும். ஆனால், உங்களுக்கு விபத்து ஏற்படும்போது மிக முக்கியமாக தலையில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜனன இந்திரியங்களுக்கு உரியதாகவும் செவ்வாய் வருவதால் ஆண்களுக்கு விதைப்பை வீக்கம் போன்ற தொந்தரவுகள் வந்து நீங்கும். ரத்தம் உறைதலில் பாதிப்பு ஏற்படும்.
புதனின் யோசனைத் திறனையும் செவ்வாயின் ஆக்ரோஷத்தையும் சரிசமமாகக் கலக்கும் திறன் பெற்றவர்களாக நீங்கள் இருந்தால் பிரச்னையில்லை. இல்லையெனில் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும். கோபத்தில் புதன் தாறுமாறான சிந்தனைகளைத் தந்துவிடுவார். ஆரம்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவேண்டும். எதிலுமே பழிக்குப் பழி என்று நீங்கள் இறங்கினால், உங்கள் இயல்பிலிருந்து வேறுபட்டால், பிரச்னைகளில் எளிதாக சிக்கிக் கொள்வீர்கள். சபதம், சவால் என்றெல்லாம் பேசாமல், வாயை விடாமல், உறுதியை உள்ளத்தில் வைத்து உழைப்பை வெளியில் கொட்டி முன்னேறுங்கள். நீங்கள் சவால் விட்ட காரியங்கள் தோல்வியுறும் வாய்ப்பு உள்ளது.
மறியல், கண்டனம் ஆர்ப்பாட்டங்களுக்கு ஸ்லோகன்களையும், புரட்சிகரமான வசனங்களையும் எழுதித் தாருங்கள். ஆலோசனை கேட்டால் சொல்லுங்கள். ஆனால், கொடிபிடித்து நரம்பு புடைக்க கத்தாதீர்கள். ஏனெனில், கண்டனம், மறியல் போன்ற போராட்டமான விஷயங்கள் கூட ஆறாம் இடத்திற்கு உரியவை ஆகும். ஆளுமையிலும், அதிகாரத்திலும் செவ்வாய் திருப்தி காணுமெனில், புதன் ஆலோசனையிலும், திட்டம் தீட்டுவதிலும் திருப்தி காணும். எனவே, இந்த அலைவரிசை மாறும்போது பிரச்னைகள் தோன்றும். துவர்ப்பு ருசி அதிகமுள்ள பாக்கு போடாதீர்கள். உங்களின் செவ்வாய் தன்மையை அது அதிகப்படுத்தும்.
‘‘கூடப் பிறந்தவங்க ஏதாவது சொல்லிட்டுப் போனா போகட்டும்’’ என்று நீங்கள் வந்துவிட்டால் பரவாயில்லை. ஏனெனில், அவர்களால் வரும் சிறு மன உளைச்சலைக் கூட தாங்க முடியாமல் தவிப்பீர்கள். அலுவலகத்தில் எங்கோ, யாரோ செய்த தவறுக்கெல்லாம் தன்னையும் ஏதேனும் செய்து விடுவார்களா என்றெல்லாம் மனோபயம் உங்களை பீடிக்கும். நண்பர்களே உங்களுக்கு எதிரியாகும் சூழ்நிலையை சகோதர உறவுகள் உருவாக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அபராதம் செலுத்துகிறீர்களோ இல்லையோ, உங்கள் சகோதர, சகோதரிகள் செய்யும் தவறுகளுக்குத்தான் அபராதம் செலுத்துவீர்கள்.
நவகிரகங்களில் சூரியன் மற்றும் குருவிற்கு அடுத்தபடியான முழுமையான ஆண் கிரகம் செவ்வாய்தான். அங்காரகன் என்று இவரை ஆசையோடு அழைப்பர். ஆயுதம் ஏந்தும் காவலும் ராணுவமும் இவரின் இரு கண்கள். எனவே, ‘ராணுவப் பகுதி... உள்ளே நுழையாதீர்கள்’ என்ற தகவல் பலகையை மீறி உள்ளே செல்ல முயற்சிக்காதீர்கள். உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் சரி... அல்லது பிரச்னையை எதிர்கொள்ளும் திறன் வேண்டும் என்று கேட்டாலும் சரிதான்... நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் முருகப் பெருமான். மேலும், அத்தலத்தில் அங்காரகனுக்கு சிறப்பு வழிபாடோ அல்லது அங்காரகன் வழிபட்ட தலமாகவோ இருந்தால் நல்லது. அப்படிப்பட்ட தலமே வைத்தீஸ்வரன்கோயில் ஆகும்.
இங்கு ஈசன் வைத்தியநாதர் என்றும், அம்பாள் தையல்நாயகி எனும் திருப்பெயரோடும் அருள்பாலிக்கிறார்கள். அதேசமயம் முத்துக்குமாரசுவாமிக்கும் அங்காரகனுக்கும் பிரதான அம்சம் கொடுத்து பக்தர்கள் வழிபடுகிறார்கள். பொதுவாகவே ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இங்கு சென்று வழிபட்டு வருவார்கள். எனவே, நீங்களும் செவ்வாயால் ஏற்படும் எல்லா பாதிப்புகளிலிருந்தும் விடுபட நிச்சயம் வைத்தீஸ்வரன்கோயில் முருகனையும், அங்காரகன் என்கிற செவ்வாய் பகவானையும் தரிசியுங்கள். கடனையும் நோய்களையும் விரட்டுங்கள்.
நன்றி

ரிஷப ராசி

ரிஷப ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன
கனவுத் தொழிற்சாலையின் அதிபரான சுக்கிரனின் ராசியில் பிறந்த நீங்கள், கற்பனையாகப் பேசுவதோடு மட்டுமல்லாமல் அதை நிஜமாக்குவதிலும் வல்லவர்கள். அறிமுகமான அடுத்த நாளிலிருந்தே, அதிக நாள் பழகியது போல நட்புறவாடுவீர்கள். இதுதான் உங்களின் பலமும் பலவீனமும். உங்கள் ராசிக்கு அதிபதிதான் துலாத்திற்கும் அதிபதியாவார். அவரே உங்களின் கடன், நோய், எதிரி ஸ்தானமான ஆறாம் இடத்திற்கும் அதிபதியாக வருகிறார். எனவே, உங்களுக்கு நீங்களே எதிரியாவீர்கள்.
உங்கள் வாயைப் பிடுங்கி, நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை வைத்து பேசுவதற்காகவே ஒரு கூட்டம் இருக்கும். யாரோ சிலருக்காக சொல்கிற வார்த்தைகள் எல்லோருக்கும் உண்டானதாக மாறிவிடுவதுண்டு. அதேபோல நீங்கள் ஒருவரை எதிரியாக நினைத்து விட்டால், அவரோடு உறவாடிக் கெடுக்கவும் செய்வீர்கள். சுக்கிரன் உங்களின் எதிரி ஸ்தானத்திற்கு அதிபதியாக இருப்பதால், இதமாகவே பழி வாங்குவீர்கள். ஒருபோதும் மூர்க்கம் காட்ட மாட்டீர்கள். அதேபோல, ‘இவரால் ஆபத்து’ என்று தெரிந்தாலும் வெளியிலிருந்து பார்ப்போருக்கு நெருங்கிய நண்பர்கள்போல ஒரு தோற்றத்தை காட்டிக் கொண்டே இருப்பீர்கள்.
நண்பர்களைத் தரம் பிரிப்பதில் அறிவுபூர்வமாக சில நேரம் நடந்துகொண்டாலும், சிறுபிள்ளைத்தனமாகப் பேசி சிக்கிக் கொள்வீர்கள். பலவீனங்களை மறைக்கத் தெரியாது. நட்புக்காக ரொம்பவும் வளைந்து கொடுப்பீர்கள். அப்படி இறங்கிப்போவதை சிலர் தங்களுக்கு சாதகமாகவும் எடுத்துக் கொண்டு உங்களை எளிதாக வீழ்த்துவார்கள். ‘‘பத்து வருஷமா பழகறோம். ஜாமீன் கையெழுத்து கூட போடமாட்டேன்றியே. எப்படி பேங்க்ல லோன் கொடுப்பான்’’ என்று பேசினால் மாட்டிக் கொள்வீர்கள். பொலபொலவென்று யாரேனும் கண்ணீர் விட்டுப் பேசினால் நீங்களும் அழுது பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எண்ணிப் பார்க்காமல் கொடுப்பீர்கள். தாமதமாகத்தான் மனிதர்களைப் புரிந்து கொள்வீர்கள். நாற்பதுக்கு மேல்தான் உள்ளர்த்தத்தோடு பேசும் திறனே வரும். நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளும்போது புறந்தள்ளப்படுவீர்கள்.
யாராவது குற்றம் சுமத்தும் முன்பேயே, ‘அப்படி நினைச்சுப்பாங்களோ... இப்படி நினைச்சுப்பாங்களோ...’ என மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். உங்களுக்கு உடலால் ஏற்படும் நோயை விட, மனதால் உடலுக்கு நீங்களாக உண்டாக்கிக் கொள்ளும் நோய்கள்தான் அதிகம். வெளியூருக்கு செல்லும்போது பர்ஸை மறந்தாலும் மறப்பீர்களே தவிர, தலைவலி மாத்திரையை ஒருபோதும் மறக்க மாட்டீர்கள். அந்த அளவுக்கு தலைவலியால் அவதிப்படுவீர்கள். ஆனாலும், தண்ணீரைக் கண்டால் பாய்ந்து விடுவீர்கள். சொந்த ஜாதகத்தில் சுக்கிரனோடு குரு, ராகு, செவ்வாய் இருந்தால் பால்வினை நோய்கள் வருவதற்கு வாய்ப்புண்டு. எனவே, தாம்பத்ய விஷயங்களில் கவனம் வேண்டும். அதேபோல உடல் பருமனாகும்போதே கவனம் காட்ட வேண்டும். ரிஷப ராசியினருக்கு பெரும் தொந்தரவு ஏற்படுவதற்கு முன்பு உடற்பருமன் சட்டென்று கூடும். உங்களில் பலர் உடற்பருமனை குறைப்பதற்காக அறுவை சிகிச்சைகள் செய்து கொள்வீர்கள். அதேபோல பெண்கள் ஆபரேஷன் செய்துகொள்ளும்போது நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பின்னாளில் பிரச்னை வேறுமாதிரி பெரிதாகக் கூடும்.
‘வளர்த்த கடா மார்பில் பாய்கிறது’ என்பது உங்களுக்குத்தான் பொருந்தும். உங்களுக்கு எதிரிகள் வெளியிலிருந்து யாரும் வரமாட்டார்கள் என்று பார்த்தோமல்லவா? ‘என் புள்ளை மாதிரி வளர்த்தேன். அவனே எனக்கெதிரா விளையாடறானா’ என்று நீங்கள் பேசும் அளவுக்கு எதிரிகள் வெளிவருவார்கள். உங்கள் பட்டறையிலிருந்து வெளியேறியவர்கள்தான் உங்களுக்கு எதிராக மாறுவார்கள். உங்களின் நிழல்போல இருப்பவரிடம்தான் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே, ஒரே நபரிடம் எல்லாவற்றையும் ஒப்படைக்காமல், பிரித்துக் கொடுத்து வேலை வாங்கினால் நல்லது. பெரும்பாலும் நீங்கள் நல்லது செய்யப் போய், அது தீங்கானதாக மாறுவதுதான் அதிகம். ‘‘உன் உதவியே வேணாம். எனக்கு என் வாழ்க்கையை பார்த்துக்கத் தெரியும்’ என்று வார்த்தைகளால் சூடுபட்ட பிறகே நீங்கள் மாறுவீர்கள். அதுவரை கொஞ்சம் வெகுளியாகத்தான் வலம் வருவீர்கள்.
உங்களைப் பொறுத்தவரையில் வழக்கு என்றால் அது வீடு, மனை குறித்த வழக்குகள்தான் வரும். புது வீட்டை வாங்கினால் கூட வழித் தகராறு வரும். நீங்கள் கிராமத்தில் இருந்தால் வாய்க்கால், வரப்பு சண்டை வரும். நகரத்தில் இருந்தால் உங்கள் வீட்டு பால்கனியிலிருந்து வெளியேறும் நீர் அடுத்த வீட்டில் கொட்டுவதால் சண்டை மூளும். பொதுவாகவே ரிஷப ராசியினர் அக்கம்பக்கத்தினரிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கூட்டுப் பட்டாவிலுள்ள நிலங்களை வாங்கும்போது விரைவிலேயே தனிப் பட்டாவாக உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்வது நல்லது. இல்லையெனில் பொதுச் சொத்தில் இருப்பவர்கள் ஏதேனும் வழக்குகள் போடும்போது நீங்களும் சிக்கிக் கொள்வீர்கள். மறந்துபோய்க்கூட கோயிலுக்கு அருகேயுள்ள வீடுகளையோ, நிலங்களையோ வாங்காதீர்கள். அப்படி வாங்க நேர்ந்தால், எல்லாம் சரியாக இருக்கிறதா என கண்கொத்திப் பாம்பாக பாருங்கள்.
வாகன விபத்துகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை எதிர்கொள்ள நேரும். பழைய வண்டியை வாங்கவே வேண்டாம். வேறு வழியின்றி வாங்கினால், வில்லங்கம் ஏதும் இருக்கிறதா எனப் பாருங்கள். கண்டெய்னர், லாரி போன்ற பெரிய வாகனங்களுக்கு அருகே செல்லும்போது கவனமாக வாகனத்தைச் செலுத்த வேண்டும். பள்ளி வளாகங்களுக்கு அருகே கவனமாக வாகனம் ஓட்டுங்கள்.
உங்களுக்கு கடன் பிரச்னை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அது வாகனக் கடனாக இருந்தால் நல்லது. ஏனெனில், உங்கள் ராசிநாதனாக வாகனகாரகன் சுக்கிரன் வருவதால், அப்படியே விட்டுவிடலாம். இதைத்தவிர தனகாரகனான குரு அஷ்டமாதிபதியாக வருவதால், திடீர் செலவுகள் வரும். ஆறு மாதங்களில் செலுத்த வேண்டிய கடனை ஒரே மாதத்தில் தரச் சொல்லி கடன் கொடுப்பவர் கழுத்தை பிடிப்பார். வாழ்க்கைத்துணை வழி சொந்தங்களால் உங்களில் பலர் கடனாளியாவீர்கள். ‘‘நல்லது, கெட்டதுக்கு செய்முறை பண்ணியே போண்டியாகிட்டேன்’’ என்று உங்களில் பலர் கூறுவதுண்டு. காலத்திற்குத் தகுந்தாற்போல எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று யோசித்துச் செய்ய வேண்டும்.
எப்போதுமே வீட்டுப் பத்திரங்களை வைத்து கடன் வாங்கக் கூடாது. தங்கத்தை வைத்து வாங்குங்கள். பாசம் வைத்து ஏமாறுவது தனியென்றால், பணம் கொடுத்து ஏமாறுவதுதான்
அதிகமிருக்கும். யாராவது பத்து ரூபாய் கேட்டால், ‘‘எங்கிட்ட ரெண்டு ரூபாதான் இருக்கு’’ என்று சொல்லப் பழகுவது நல்லது. இப்படி சொல்லிக் கொடுத்தால் நீங்கள் கேட்க மாட்டீர்கள் என்று தெரியும். எனவே, கடன் கொடுக்கும்போது ‘கொடுத்தால் வருமா’ என்று மட்டும் நன்கு யோசித்துவிட்டு அப்புறம் கொடுங்கள். நீங்கள் கல் பதித்த தங்க நகைகளாக வாங்கிப் போடுவது நல்லது. வெறும் தங்கமாக வாங்கினால் உங்களிடம் தங்காது. இல்லையெனில் அடகுக் கடைக்கு அடிக்கடி படையெடுத்தபடி இருக்கும்.
நீங்கள் அரசியலில் இருந்தால், யார் ஆட்சிக்கு வந்தாலும் எதிர்ப்பீர்கள். ஆளுங்கட்சியினரின் குற்றங் குறைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். குற்றங்கள் மட்டும்தான் உங்களுக்கு முதலில் தெரியும். இளைஞராக இருக்கும்போதே அடிக்கடி உண்ணாவிரதம், ஊர்வலம் என்று போராட்டக் களத்தில் இருப்பீர்கள். மிக முக்கியமாக பெண்களுக்கான பிரச்னைகளை முன்னின்று தீர்ப்பீர்கள். பாலியல் வன்முறை, பெண்கள் வன்கொடுமை போன்றவற்றிற்கு எதிராகக் கடுமையாகக் கொதித்தெழுவீர்கள். தண்டனை வாங்கித் தராமல் தூங்க மாட்டீர்கள். மத்திம வயதில்தான் எல்லோரையும் புரிந்து கொள்வீர்கள். ‘‘நீ குதிரையா இருந்தாலும் இருந்துக்க. கழுதையா இருந்தாலும் இருந்துக்க. ஆனா, கழுதையா இருந்துக்கிட்டு குதிரை மாதிரி நடிக்காத. நீ நீயாகவே இரு’’ என்று சூட்சுமமாகப் பேசுவீர்கள்.
உங்கள் ராசிக்குரியவரே ஆறாம் இடத்திற்கு உரியவராக வருவதால், அதுவும் சுக்கிரனே உங்களுக்கு நன்மையும் தீமையும் சமமாகச் செய்வதால், பெருமாளை வழிபடுவது நல்லது. அதிலும் வைணவ குரு மக்களுக்கோ அல்லது சீடப் பரம்பரைக்கோ உபதேசித்த தலமெனில் உங்களுக்கு இன்னும் சிறப்பாகும். அப்படிப்பட்ட தலமே திருக்கோஷ்டியூர் ஆகும். இங்குதான் ராமானுஜர் தன்னுடைய குருவின் வார்த்தையை மீறி, ‘ஓம் நமோ நாராயணா’ எனும் நாமத்தை மக்களுக்கு உபதேசித்தார். எந்த குரு தனக்கு தீட்சை வழங்கினாரோ, அவரே யாருக்கும் அவ்வளவு எளிதாக உபதேசம் செய்யக் கூடாது என்றும் தடுத்தார்.
ஆனால், ‘தான் உபதேசம் செய்து நரகத்திற்கே சென்றாலும் மக்களுக்கு நன்மை ஏற்படட்டும்’ என்று ராமானுஜர் மக்களுக்கு உபதேசித்தார். இத்தலத்தில் அருளும் உற்சவ மூர்த்தியான சௌமிய நாராயணப் பெருமாளையும், உரக மெல்லணையான் எனும் திருப்பெயரோடு விளங்கும் பள்ளிகொண்ட பெருமாளையும் தரிசித்து வாருங்கள். எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும், வருவதற்கு முன்னரே தடுத்துக்கொள்ள நினைத்தாலும், நீங்கள் செல்ல வேண்டிய தலம் திருக்கோஷ்டியூர் ஆகும். காரைக்குடியிலிருந்து மதுரை செல்லும் வழியில் 24 கி.மீ. தொலைவிலும், காரைக்குடி-சிவகங்கை பாதையில் திருப்பத்தூரி லிருந்து 5 கி.மீட்டரில் உள்ள அரியக்குடி சென்றும் இத்தலத்தை அடையலாம்.
நன்றி

மேஷ ராசிக்கு நோய் தீர்க்கும் இறைவன்

மேஷ ராசிக்கு நோய் தீர்க்கும் இறைவன்
மேஷ ராசியை உணர்ச்சி மற்றும் தன்மானக் கிரகமான செவ்வாய் ஆள்கிறது. போராட்டம் எனில் புறமுதுகிட்டு ஓட மாட்டீர்கள். உங்களின் ஆறாம் இடம் எனும் கடன், நோய், எதிரிகள் மற்றும் இன்ன பிற விஷயங்களை நிர்ணயிப்பவராக கன்னி புதன் வருகிறார். புதன் புத்திக்குரியவராக இருப்பதால், அறிவுச் செருக்கைக் கொடுத்து வீழ்த்த நினைப்பார். உங்கள் புத்தியின் திறனை ஒன்றுமேயில்லை என்று சொன்னாலே நீங்கள் பலம் குன்றியவர்போல நினைத்து வருந்துவீர்கள். அதனால், கற்றது கைமண் அளவு எனும் மகாவாக்கியத்தை மனதில் நிறுத்துங்கள். சட்டென்று முடிவெடுக்க வேண்டிய நேரங்களில், புதன் உங்களை அல்லாட வைத்துக் கொண்டிருப்பார்.
எல்லோருக்கும் அறிவுரை கூறுவீர்கள். கேட்ட உதவிகளை செய்து கொடுப்பீர்கள். ஆனால், உங்கள் விஷயமென்று வரும்போது கோட்டை விடுவீர்கள். குடும்ப விஷயங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டியது முக்கியம் என்பதை உணர வேண்டும். தூது, சாட்சி, சிபாரிசு போன்ற விஷயங்களுக்கு உரியவராக புதன் இருப்பதால், இது சம்பந்தமான விஷயங்களை ஜாக்கிரதையாக எதிர்கொள்ள வேண்டும். அடுத்தவருக்கு சிபாரிசு செய்யும்போது எச்சரிக்கையாக இருங்கள்.
புதன் கையெழுத்துக்குரிய கிரகமாகும். அதனால் யோசிக்காமல் ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போடாதீர்கள். ‘அப்போ உதவியே செய்யக் கூடாதா’ என்று கேட்கிறீர்களா? உதவி செய்யுங்கள். சனிக்கிழமை, புதன்கிழமை, புதன் மற்றும் சனி ஆளும் நட்சத்திரங்கள் உள்ள நாட்களைத் தவிர்த்து விடுங்கள். அதேபோல நீங்கள் பிறந்த நட்சத்திரமாக இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு எப்போதுமே ஹெல்த் கான்ஷியஸ் இருக்காது. ஆனாலும், செவ்வாய் உங்கள் ராசியாதிபதியாக இருப்பதால், மறக்காமல் தண்ணீர் அருந்திக் கொண்டே இருங்கள். இல்லையெனில் சிறுநீரகத் தொந்தரவு வரும். ஏதேனும் மனதைப் போட்டு உழட்டிக் கொண்டே இருப்பதால் ரத்த அழுத்தம் உங்கள் கண்களுக்கு தொந்தரவு கொடுக்கும். அதிக காரம் கூடாது. தொண்டைப் புகைச்சல், வயிற்றுத் தொந்தரவு இருக்கும்.
கடன் வாங்கினால் கட்ட முடியுமா என்று பார்த்து வாங்குங்கள். மிக முக்கியமாக நிலம், வீடு என்று வாங்கும்போது எச்சரிக்கை தேவை. ஏனெனில், பூமிகாரகனான செவ்வாய்க்கும் உங்களின் ஆறாம் அதிபதியான புதனுக்கும் பகை உண்டு. அதனாலேயே இந்த விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் ஒரு சொத்தை வாங்கிக் கட்ட முடியாமல் விற்று, மீண்டும் மறுசொத்து வாங்கும் நிலைமை வரும். தடாலடியாக இதுபோன்ற விஷயங்களில் முடிவெடுக்காதீர்கள். உங்களின் பாக்யாதிபதியாக குரு வருவதால், தங்கத்தை வைத்து கடன் பெற்றால், கடனை சீக்கிரம் அடைப்பீர்கள். சொத்துகளும் விருத்தியாகும். ஆபத்து நேரத்தில் கூட அநியாய வட்டிக்கெல்லாம் பணம் வாங்காதீர்கள். காசோலைகளில் கையெழுத்தை முன்னதாக போட்டு வைத்துக் கொண்டிருக்காதீர்கள். மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்து விட்டு சிக்காதீர்கள். கையை காண்பித்து விட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள்.
உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்குரியவராக புதன் வருவதால் தன் கருத்தை நிலைநிறுத்துபவராக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் அனுசரித்துப் போவது நல்லது. ‘‘என் போக்குல எல்லாத்தையும் விட்டா பெரியளவில கம்பெனியை கொண்டு போவேன்’’ என்று நினைப்பீர்கள். எல்லாவற்றிற்கும் மாற்றுக் கருத்து கொண்டிருந்தீர்கள் என்றால் யாரும் ஒத்துழைக்க மாட்டார்கள். புதன் ஒரு விஷயத்தை அழகாக சொல்லக் கூடிய திறனைக் கொடுப்பார். அவரே ஆறாம் இடத்திற்கு வரும்போது எத்தனை திறமைகள் இருந்தாலும், மாற்றுக் கருத்தைக் கூறி எதிர்ப்புணர்வைக் கூட்டுவார். அலுவலகங்களில் நூறு முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டிய சூழல் வந்தாலும்கூட, முப்பது முடிவுகளை சக அலுவலர்களிடம் கொடுத்துப் பழகுங்கள். அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுங்கள். ஆனால், கழுகுபோல மேற்பார்வையிடுங்கள். ஏனெனில், புதன் தன்னை மீறி எதுவும் நடந்து விடக் கூடாது என்று உங்களைத் தூண்டியே தனிமைப்படுத்துவார்.
உங்களைப் பொறுத்தவரையில் இன்றைய நண்பர்களே நாளைய எதிரிகளாகும் சூழல் உருவாகும். பெரிய தொழில் மற்றும் வியாபாரங்களில் கூட்டு வைத்தால் எச்சரிக்கையோடுதான் இருக்க வேண்டும். இல்லையெனில் உங்களின் கூட்டாளியே உங்கள் மேல் வழக்கு தொடுப்பார். அத்தனை உழைப்பும் வீணாகப் போகும். அது உடன்பிறந்தவர்களே ஆனாலும், ஜாக்கிரதையோடுதான் அணுக வேண்டும்.
முத்திரைத்தாள் விஷயங்களில் எச்சரிக்கையோடு இருங்கள். ஏனெனில், போலி முத்திரைத்தாள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிரிகள் உங்களை ஈடு படுத்துவார்கள். அதேபோல ஆவணங்களை நகல் எடுக்கும்போது கவனம் வேண்டும். அது ஒரிஜினல்தானா என்பதைப் பார்த்துத்தான் செய்ய வேண்டும். சிலர் உங்களை மோசடிகளில் சிக்க வைக்க முயற்சிப்பார்கள். சபலம் எழுந்தால், சிறை செல்ல நேரிடும். நீங்கள் ஆணாக இருந்தால் பெண் குரல், பெண் சாயலோடு இருப்பவர்களிடம் எச்சரிக்கையோடும், பெண்ணாக இருந்தால் ஆணின் குரல் மற்றும் சாயலோடு இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாக நட்பு பாராட்டுங்கள், அல்லது ஒதுங்கியே இருங்கள். அவர்கள்தான் உங்களை பிரச்னைகளில் சிக்க வைப்பார்கள்.
எந்த விஷயத்தையுமே கடைசி நிமிஷத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்காதீர்கள். மிக முக்கியமாக, குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், வருமான வரி போன்றவற்றில் எல்லாம் கவனமாக இருங்கள். இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அத்தியாவசியத் தேவைகளை விட்டுவிட்டு அநாவசியமான விஷயங்களை வாங்கிப் போடுவீர்கள்.
உள்மனதில் உறங்கிக் கிடக்கும் மிருகத்தை உசுப்பிவிடும் இடமே ஆறு ஆகும். உங்களுக்கு ஆறாம் இடமாக புதன் வருவதால், எதிராளியின் பலம் தெரியாமல் வாதப் பிரதி
வாதங்கள் வேண்டாம். புதன் மறைந்திருப்பதால் எங்கு என்ன பேசினாலும், வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டுப் பேசி புதனிடமிருந்து காத்துக் கொள்ளுங்கள். அதேசமயம் ஆழ்மனதில் அடங்கியிருக்கும் அளப்பரிய ஆற்றலை வீர்யப்படுத்தி வெளிப்படுத்தும் இடமும் ஆறாம் இடமே ஆகும். எனவே, எத்தனை சந்தேகங்கள் வந்தாலும் பரவாயில்லை... விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை நிறுத்தாதீர்கள். சமூகத்தில் யாரும் அக்கறை காட்டாத விஷயங்களில் ஆராய்ச்சி புத்தியோடு ஈடுபடுங்கள். பள்ளிக் காலங்களில்கூட எவரும் அவ்வளவு எளிதாக தேர்ந்தெடுக்காத படிப்பைத் தேர்ந்தெடுங்கள். வெற்றி பெறுவீர்கள்.
இந்த ஆறாம் இடம் என்பது மறைவு ஸ்தானம் ஆவதால், அந்த இடத்திற்கு புதன் அதிபதியாவதால் எவரும் கண்டுபிடிக்க முடியாத விஷயங்களை நீங்கள் கவனித்து கண்டுபிடிப்பீர்கள். ஒருவரின் போராட்ட குணத்தை தீர்மானிக்கும் இடமாகவும் ஆறாமிடம் அமைவதால் தொடர்ந்து போராடுவீர்கள். ஆனால், அதை விவேகத்தோடு செய்யுங்கள். நெருக்கடி நேரங்களில் சொந்த முடிவுகளை விட உங்களின் உண்மையான நலன் விரும்பிகளின் ஆலோசனைப்படி நடங்கள். புத்திக்குரிய புதன், உங்களின் அவசரத்துக்கு உதவ மாட்டார். பல புத்தகங்கள் படித்தும் பெறமுடியாத அறிவையும் அனுபவத்தையும் உங்கள் வாழ்வில் ஒரே பிரச்னையால் அனுபவப்பட்டு தெரிந்து கொள்வீர்கள். அதுவும் பொருளோ பணமோ சம்பந்தப்பட்ட பிரச்னையாக அது இல்லாமல், மன உளைச்சலை அதிகப்படுத்தும் பிரச்னைகளிலிருந்தே அதிக பாடம் படிப்பீர்கள்.
உங்களுக்கு டிரைவிங் மிகவும் பிடிக்கும். ஆனால், தொலை தூரப் பயணமெனில் நீங்கள் வண்டியை ஓட்டாமல் இருப்பது நல்லது. அதீத சிந்தனை வயப்பட்டவராக நீங்கள் இருப்பதால், கவனம் சிதறும் வாய்ப்பு அதிகம். கியர் இல்லாத வண்டியை வைத்துக் கொள்ளுங்கள். ஒருபோதும் பழைய வாகனங்களை விலை கொடுத்து வாங்காதீர்கள். இப்படி செகண்ட் ஹேண்ட் வண்டியை வாங்கும்போது விபத்துகள் ஏற்படும்.
உங்களின் சொந்த ஜாதகத்தில் ராசி அல்லது லக்னத்திற்கு எட்டிலோ, பன்னிரெண்டிலோ புதன் மறைந்தால் நல்லது. புதனால் ஏற்படக்கூடிய மேலே கண்ட பிரச்னைகள் அனைத்தையும் தவிர்க்கலாம். சொந்த ஜாதகத்தில் புதனும் குருவும் சேர்ந்திருந்தால், தந்தைக்கும் பிள்ளைகளுக்குமிடையே எப்போதும் பிரச்னைகள் இருந்தபடி இருக்கும். யாரும் யாருக்கும் எதிர்பார்த்தபடி இருக்க மாட்டார்கள்.
பாதகாதிபதியாக சனி வருகிறது; எனவே புதனோடு சனி சேர்ந்திருந்தால் பொதுக் காரியங்களில் சட்டென்று ஈடுபடாமல் மறைமுக உதவிகளை செய்ய வேண்டும். இதே புதன் சூரியனோடு சேர்ந்திருந்தால் மிகவும் நல்லது. ஆனால், சந்திரனோடு சேர்ந்திருந்தால் அம்மாவின் உடல்நிலை அடிக்கடி பாதிக்கும். எப்போதும் மருந்தும் கையுமாகவே தான் இருப்பார். மேலே சொன்னதெல்லாம் சொந்த ஜாதகத்தைப் பொறுத்த விஷயமாகும்.
உங்களுக்கு நடப்பது எந்த தசையாக இருந்தாலும் சரிதான்... புதன் மற்றும் சனி புக்தி நடைபெறும் காலத்தில் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். உதாரணமாக செவ்வாய் தசை நடக்கும்போதே புதன் புக்திக்கான காலமும் வரும். அப்போது எடுக்கும் முடிவுகளில் கவனத்தோடு இருக்க வேண்டும்.
எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் சரிதான்; அல்லது வருவதற்கு முன்னரே தடுத்துக்கொள்ள நீங்கள் செல்ல வேண்டிய தலமே செம்பனார்கோயில் ஆகும். இங்குள்ள சொர்ணபுரீஸ்வரரையும் அம்பாளையும் வழிபட, பிரச்னைகள் தீர்ந்து போகும். தட்ச யாகத்தின்போது இத்தலத்திலிருந்துதான் வீரபத்திரர் சென்றார் என்கிறது தலபுராணம். மேலும், உங்களின் பிரச்னைகளை தீர்க்கும் கிரகமாக சூரியன்தான் விளங்குகிறார். எனவே, சூரியன் வழிபட்ட கோயில்கள் எதுவாக இருந்தாலும் சென்று தரிசிக்கலாம். அப்படித்தான் இத்தலத்தில் துவாதச ஆதித்யர்கள் எனும் பன்னிரெண்டு சூரியர்கள் தீர்த்தத்தை உருவாக்கி, அதில் நீராடி இத்தல ஈசனை வழிபட்டார்கள். எனவே, சூரியர்களின் முழு சாந்நித்திய சக்தி இலங்கும் இத்தலத்திற்குச் செல்லுங்கள். கடன், நோய் மற்றும் எதிரிகள் தொல்லை உங்களுக்கு இருக்காது. இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
(தீர்வுகளைத் தேடுவோம்...)
நன்றி

கடகம் - 2016 புத்தாண்டு பலன்கள்.

கடகம்
2016 புத்தாண்டு பலன்கள்.
உங்கள் ராசிக்கு சந்திரன் 2 ல் சஞ்சரிபத்தால் எதிர்பாரத வரவு வரும்.. உங்களின் யோகாதிபதி செவ்வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் சாதிப்பீர்கள்..உங்களின் புகழ் உயரும்.வீடு வாங்குவீர்கள். வாக்கு மீற மாட்டீர்கள் சகோதர, சகோதரிகளுக்குள் நிலவிவந்த போட்டி விலகும். உங்களுக்கு 2வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் உங்கள் பேச்சு இனி நன்றாக இருக்கும். எதிர்பார்த்திருந்த தொகை வந்துசேரும். எப்போது பார்த்தாலும் ஏதோ ஒரு வலியை சொல்லிக் கொண்டிருந்தீர்களே, இனி உடல் வலி நீங்கி மனவலிமை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.
சூரியன் வலுவடைந்ததால் அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். போட்டி, விவாதங்களில் வெற்றி கிட்டும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். ஆனால் வருடம் பிறக்கும்போது புதன் 6ல் மறைந்திருப்பதால் வீண் குழப்பங்கள், எதிர்பாராத செலவுகள், உறவினர்களுடன் பகைமை என வந்துசெல்லும். பிப்ரவரி 7 வரை உங்களின் சஷ்டமபாக்யாதிபதியான குருபகவான் வக்ரமாகி ராசிக்கு 3ம் வீட்டில் மறைந்திருப்பதால் வீண் டென்ஷன், மனஉளைச்சல், வேலைச்சுமை, வீண்பழி தவீர்ப்பது நல்லது... பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை குரு ராசிக்கு 2ம் வீட்டில் அமர்வதால் சோர்ந்திருந்த நீங்கள் சுறுசுறுப்பாவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.
செப்டம்பர் முதல் வருடம் முடியும் வரை குரு, ராசிக்கு மூன்றாம் வீட்டில் மறைவதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். எந்த வேலையையும் முதல் முயற்சியில் முடியாமல் அதிக முறை போராடி முடிக்க வேண்டியிருக்கும். அசைவ மற்றும் கொழுப்புச் சத்து உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். மூச்சுத் திணறல், வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வந்துபோகும். அக்கம்பக்க வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். சிலர் உங்களை நேரில் பார்க்கும்போது பாராட்டுவதும், பின்னால் விமர்சிப்பதுமாக இருப்பார்கள். ஜனவரி 8 அன்று ராகுபகவான் ராசிக்கு இரண்டாம் வீடான தனஸ்தானத்தில் வந்து அமர்கிறார். ஒருபக்கம் பணம் வந்தாலும் மற்றொரு பக்கம் அதற்கு தகுந்த செலவுகளும் இருந்து கொண்டேயிருக்கும். சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும்.
ஒரு விஷயம் முடியாவிட்டால் அடுத்தது என்ன செய்யலாம் என்று முன்னரே யோசிப்பது நல்லது. கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சிலர் மூக்குக் கண்ணாடி அணியக் கூடும். ஈறு வீக்கம், கணுக்கால், காது, மூக்கு வலி வந்துபோகும். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால் முடிந்தவரை அநாவசியப் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. இடம், பொருள் ஏவல் அறிந்து பேசுங்கள். குடும்பத்திலும், கணவன்-மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வரும். சில நேரங்களில் சில இடங்களில் வாக்குத் தவற வேண்டிவரும். கேது 8ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது மறவாமல் தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள்.
தன்னம்பிக்கை குறையும். உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதை சரியாக பின்பற்றாமல் விட்டு விட்டோமே என்று வருத்தப்படுவீர்கள். இந்தாண்டு முழுக்க உங்களின் பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் வீட்டிலேயே சனிபகவான் தொடர்வதால் சிந்திக்கும் ஆற்றல் குறையும். சில நேரங்களில் உள்மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம் மூலம் நேராக்குங்கள். பிள்ளைகள் கொஞ்சம் முரண்டு பிடிப்பார்கள். அதிக அறிவுரை சொல்லி அவர்களை நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவர்களை வழிக்குக் கொண்டு வர வேண்டும். அதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டிவரும். மகனின் அடிப்படை நடத்தை மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சில கூடா நட்புகள் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே, அவர் நடவடிக்கைகளை கண்காணியுங்கள்.கர்பிணி பெண்கள் எச்சரிக்கையா இருக்க வேண்டும். பூர்வீகச் சொத்து பிரச்னையில் மூக்கை நுழைக்காதீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பொதுவாக எல்லோரையும் சந்தேகக் கண்ணுடன்தான் பார்ப்பீர்கள். முடிவு எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்துபோகும். எந்த சூழ்நிலையிலும் மற்றவர்கள் முன்னிலையில் மனைவியை மரியாதைக் குறைவாக பேசவேண்டாம். சொந்தபந்தங்களில் யார் உண்மையானவர்கள், யார் போலியானவர்கள் என்பதை கண்டுபிடிப்பதில் தடுமாற்றம் இருக்கும்.
வியாபாரத்தில் அனுபவ அறிவைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவீர்கள்.பணக்காரர்கள் வாடிக்கையாளர்களாவார்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். வேலையாட்களின் குறை, நிறைகளை அன்பாக சுட்டிக் காட்டி திருத்துங்கள். பழைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். ஜனவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். பழைய பங்குதாரர் விலகுவார். உணவு, எலக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ்,, பப்ளிகேஷன், கட்டிட பாகங்களால் ஆதாயமடைவீர்கள்.
உத்யோகத்தில் அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். ஆகஸ்ட் மாதம் முதல் குரு 3ல் மறைவதால் அடிக்கடி விடுப்பில் செல்வோரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டிவரும். சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். அலுவலக ரகசியங்களை பாதுகாப்பது நல்லது.. உங்களின் உரிமையையும், சலுகையையும் தக்க வைத்துக் கொள்ள வழக்கு தொடுக்க வேண்டிவரும். ஜனவரி, ஏப்ரல், ஜூன் மாதங்களில் உங்களின் வாழ்க்கை மேம்படும்.

திங்கள், ஜனவரி 11, 2016

இன்னோவாவுக்கு பின்னால் இருக்கிற வலி யாருக்கும் தெரியாது!- விகடன்


மனம் திறக்கிறார் நாஞ்சில் சம்பத்
.தி.மு.க-வின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் நாஞ்சில் சம்பத்தை சந்தித்தோம். எந்தவித சலனமும் அவரிடம் இல்லை. அதே இயல்பான பேச்சு… அதே உற்சாகம். ஆனால், அவரது பேச்சில் கூடுதல் நிதானம் இருந்ததைக் கவனிக்க முடிந்தது.
‘‘சமீபத்திய நிகழ்வுகளை எப்படி பார்க்கிறீர்கள்?’’
‘‘என்னை கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பதவியில் இருந்துவிடுவிக்க மட்டும்தான் செய்திருக்கிறார்கள். அது நீக்கம் கிடையாது. இன்னமும் கழகச் சொற்பொழி வாளராகவும் ஊடகத் தொடர்பாளராகவும் இருக்கிறேன். இது ஒரு சிறிய விஷயம். ஊடக வெளியில்தான் இதனைத் தேவையின்றி பெரிதுபடுத்துகிறார்கள். சில நாளேடுகள்தான் தங்கள் விற்பனைக்காக அதைத் திரும்பத்திரும்ப சொல்லி வருகின்றன. வைகோவோடு ஏற்பட்ட மனக்கசப்பில் அரசியலில் ஈடுபடவே வேண்டாம் என்று இருந்தேன். தமிழின மீட்புக்காக, கொள்கையை மக்களிடம் கொண்டு சேர்க்க என்னை அரசியலில் ஈடுபட வைத்தவர் அம்மா. இப்போது தலைமையைச் சந்தித்து அதற்கான விளக்கத்தையும் அளித்து இருக்கிறேன். அந்திமக் காலத்தில் இருந்த என்னை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் அம்மா. இதைவிட பல சஞ்சலங்களைச் சந்தித்து இருக்கிறேன். நாஞ்சில் சம்பத் எதற்கும் தயாரானவன். தேர்தல் களத்தில் பணியாற்ற ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன்.’’
‘‘இணையத்தில் உங்களை ‘இன்னோவா’ சம்பத் என்று கிண்டல் அடிப்பதைக் கவனித்தீர்களா?’’
‘‘நான் சாதாரண 2,000 ரூபாய் மதிப்புள்ள தொலைபேசிதான் வைத்திருக்கிறேன். இன்றைய நவீன யுகத்துக்கு ஏற்ற மனிதனாக நான் மாறவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இருந்தாலும் எனக்கு இந்த விஷயங்கள் காதுக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன. பேசப்படுகிற இடத்தில் இருக்கிறேன் என்று எனக்கு மகிழ்ச்சிதான். விமர்சனங்கள் என் வாழ்வில் புதிது அல்ல. இணையம் என்பது பொதுவெளி. அங்கு இப்படித்தான் பேசவேண்டும் என்று எந்த விதியும் இல்லை. ஆனால், இன்னோவா காருக்குப்பின் இருக்கும் வலியை, என்னைக் கிண்டல் அடிக்கும் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஒரு சில சமயங்களில் தொடர்ந்து கூட்டங்கள் இருக்கும். புத்தகங்கள், உடைகள் என பெரிய மூட்டையைத் தூக்கிக்கொண்டு பேருந்தில் ஊர்ஊராக அலைந்து கொண்டிருப்பேன். இத்தனை ஆண்டுகால பொதுவாழ்வில், தமிழுக்கு உழைத்ததில் ஒரு கார்கூட வாங்கக் கூடிய நிலை ஏற்படாமல் போனது ஏன் என்று தெரியவில்லை. என் மீது எத்தனை முறை தாக்குதல்கள் நடந்திருக்கின்றன என்று தெரியுமா அவர்களுக்கு? பொழிச்சலூர், தாம்பரம், குளித்தலை, வத்தலகுண்டு போன்ற இடங்களில் நடந்த கொலைவெறித் தாக்குதல்களில் எத்தனை முறை காயம்பட்டிருக்கிறேன் தெரியுமா? ஆனால், என்னுடைய சிரமங்களை அறிந்த அம்மா, காரை ஓர் உதவியாக வழங்கினார். அது ஒன்றும் அன்பளிப்பு இல்லை; வலி நிவாரணம்.’’

‘‘உங்களுக்கு முன் ஊடகங்களில் பேசிக்கொண்டிருந்த ஆவடி குமார் உங்கள் வருகைக்குப்பின் கவனிக்கப்படவில்லை. அவருக்கு உங்கள் மீது மனவருத்தமா? அ.தி.மு.க-வில் சுதந்திரமாக இயங்க முடிகிறதா?’’
‘‘எனக்கு முன்பே கழகப் பேச்சாளராக இருந்தவர் ஆவடி குமார். அப்படி எல்லாம் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆவடி குமார், பண்ருட்டி ராமச்சந்திரன், சி.ஆர்.சரஸ்வதி, பேராசிரியர் தீரன், டாக்டர் சமரசம் ஆகியோரை ஊடக விவாதங்களில் கலந்துகொள்ள அம்மா ஆணையிட்டு இருக்கிறார். சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறோம். நீங்கள் சொல்கிற கொடுமை எல்லாம் தி.மு.க-வில்தான் நடக்கிறது. கோவை ராமநாதன், புள்ளிவிவரங்களைத் தெறிக்கவிடும் திருச்சி செல்வேந்திரன், ஆங்கிலப் புலமைப் பெற்ற விடுதலைவிரும்பி, நவரசப் பேச்சாளர் துரைமுருகன் ஆகியோர் எல்லாம் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை.  அங்குதான் சுதந்திரமற்ற போக்கு நடக்கிறது. இங்கு சொற்பொழிவாளர்கள் மனநிறைவோடு இருக்க முதல்வர் எல்லாவித ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார்.’’

‘‘ம.தி.மு.க-வில் இருந்தபோதும், இப்போதும் தேர்தல் அரசியலில் நீங்கள் ஈடுபாடு காட்டவில்லையே?’’
‘‘கல்லூரிப் பருவத்திலேயே அரசியலுக்குள் வந்தவன் நான். திராவிடப் பிடிப்புள்ள குடும்பத்தில் இருந்து வந்ததால், இயற்கையாகவே திராவிடக் குருதி என்னுள் இருப்பதால்தான் இன்றுவரை திராவிட இயக்கங்களின் கொள்கையை மக்களின் மனதில் விதைத்து வருகிறேன். இத்தனை ஆண்டுகால அரசியலில் இருந்தும் எனக்கு தேர்தல் அரசியல் மீது ஈடுபாடு இல்லை. என் கண் முன்னே அரசியலில் நுழைந்து, தேர்தலில் வெற்றி பெற்று வளர்ந்தவர்கள் பலர். அதைக்கண்டு வெதும்ப, நான் அரசியல்வாதியும் கிடையாது. நான் ஒரு சொற்பொழிவாளன். மக்களின் மாற்றங்களுக்காக மக்களிடம் பேசுபவன். அதுதான் எனக்குப் பிடித்திருந்தது. மக்களிடம் அரசியல் பார்வையை ஏற்படுத்துவதே எனது நோக்கம். இன்னமும் அதற்கான பயணம் போய்க்கொண்டே இருக்கிறது. அதனால், என்றும் தேர்தல் அரசியல் ஆகாது எனக்கு. என்னுடைய சுதந்திர வாழ்வுக்கு நானே பூட்டுப் போட்டுக் கொள்ள விரும்பவில்லை.’’
‘‘ தேர்தலைச் சந்திக்க அ.தி.மு.க என்ன வியூகம் வைத்திருக்கிறது?’’
‘‘எதிர்வரும் தேர்தல் என்பது அம்மாவின் முதல்வர் பதவியைப் புதுப்பித்துக்கொள்ளும் நேரமே. அதில் என்ன வியூகம் வைத்திருக்கிறார் என்பது எங்கள் தலைமை, எங்களுக்குத் தேவைப் படுகிற நேரத்தில் தெரிவிக்கும். வேண்டுமென்றால், சூழ்நிலையைப் பொறுத்து, கூட்டணி தேவைப்பட்டால் தெரிவிப்பேன் என்று சொல்லி இருக்கிறார். அவரின் கட்டளைக்காகக் காத்திருக்கிறோம், தேர்தல் பணியாற்ற

கூட்டணிக்கு ஜே? குழப்பத்தில் ஜெ!-விகடன்


ஜெயலலிதா சலனப்பட்டுப்போய் இருக்கிறார். சென்னை திருவான்மியூரில் பொதுக்குழு என்ற பெயரால் கூட்டப்பட்ட அ.தி.மு.க திருவிழாவில் அவர் பேசியிருக்கும் பேச்சு, அவர் பெரிய குழப்பத்தில் இருக்கிறார் என்பதை பட்டவர்த்தனமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது!
‘நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டி’ என ஒருகாலத்தில் அறிவித்த ஜெயலலிதா அல்ல இவர்.
‘எனக்கு முன்னால் பார்க்கிறேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளையே காணோம்’ என கர்ஜித்த ஜெயலலிதாவைக் காணவில்லை.
`எந்தக் கட்சியையும் கூட்டுச்சேர்க்காமல் தனித்து நிற்க அ.தி.மு.க தயார்;  கருணாநிதி தயாரா?’ என ஜெயலலிதா வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை.
‘எங்களுக்கு எவர் தயவும் தேவை இல்லை’ என்ற பிரகடனத்தைப் பார்க்க முடியவில்லை.
பழைய ஜெயலலிதாவின் இந்தப் போர்ப்பிரகடனங்கள் எல்லாம் வெள்ளம்போல வடிந்துவிட்டன. வரப்போகும் தேர்தல் அவரைப் பயமுறுத்தத் தொடங்கியிருப்பது அவரது வார்த்தைகளிலேயே தெரிகிறது.
`இந்தப் பொதுக்குழுத் தீர்மானத்தின்படி, வரும் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கு, எனக்கு நீங்கள் முழு அதிகாரம் அளித்துள்ளீர்கள். ஒவ்வொரு தேர்தலிலும் அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்தல் வியூகங்களை நான் அமைத்துவருகிறேன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
தேர்தல் களத்தில் வெற்றிபெற நாம் பல்வேறு உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் விதமாக நாம் உத்திகளை வகுக்க வேண்டும். தேர்தலைச் சந்திப்பதற்கு எந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய உத்தி என எதுவும் கிடையாது. இந்த அடிப்படையில்தான் 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடளுமன்றத் தேர்தலை, ஒருசில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்கொண்டோம். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒருசில கட்சி களுடன் கூட்டணி அமைத்து எதிர்கொண்டோம். 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தனித்தே போட்டியிட்டு 37 இடங்களை வென்று, இன்று மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெயரைப் பெற்றுள்ளோம். அதேபோன்று, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப நான் சரியான முடிவை எடுப்பேன்’ – இதுதான் ஜெயலலிதாவின் திருவான்மியூர் வியூகம்!
கூட்டணி வைத்தும் போட்டியிட்டுள்ளோம்; தனித்தும் போட்டியிட்டுள்ளோம். எப்படியும் போட்டியிடுவோம் என்பதுதான் ஜெயலலிதா பேச்சின் உட்கருத்து.
2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நீங்கலாக, ஜெயலலிதா தனது அரசியல் வாழ்க்கையில் எதிர்கொண்ட அனைத்து சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களிலும், கூட்டணி அமைத்தே அதை எதிர்கொண்டார் என்பதே வரலாறு. 1991-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் ஆட்சியைப் பிடித்தார். அப்போது காங்கிரஸுடன் கூட்டணி. 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தார். அப்போது மூப்பனார் உள்ளிட்ட ஏராளமான கட்சிகளுடன் கூட்டணி. 2011-ம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்தார். ஒரே ஒரு எம்.எல்.ஏ வைத்திருந்த விஜயகாந்துக்கு, 41 தொகுதிகளைத் தூக்கிக்கொடுத்து அவரை கூட்டணியில் சேர்த்துக் கொண்டார். மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் கூட்டணி அமைத்து, கூட்டணியின் மூலமாகவே வென்று முதலமைச்சர் ஆனவர் ஜெயலலிதா. தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர் அல்ல. இந்த நடைமுறை உண்மைதான், ‘சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்தல் வியூகம்’ என்ற வார்த்தைகளை அவரை வழிமொழியவைக்கிறது.
2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 44 சதவிகித வாக்குகளைப் பெற்று, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் கன்னியாகுமரி, தருமபுரி நீங்கலாக 37 தொகுதிகளை ஜெயலலிதா கைப்பற்றினார். இது ஒரு மகத்தான சாதனை. இதற்கு முன்னர் இத்தனை தொகுதிகளை ஒரே கட்சியோ, இத்தனை சதவிகிதத்தை ஒரே கட்சியோ பெறவில்லை என்பதும் உண்மைதான். 44 சதவிகித வாக்குகளை நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற ஜெயலலிதா, இரண்டே ஆண்டுகளுக்குள் நடக்கும் தேர்தலைத் துணிச்சலாக, தனித்தே எதிர்கொள்ளலாம். ஏனென்றால், 44 சதவிகித ஆதரவை தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க., காங்கிரஸ், ம.தி.மு.க., த.மா.கா., இரண்டு கம்யூனிஸ்ட்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய அனைத்துக் கட்சிகளும் சேர்ந்தால்கூட எட்டுவது சிரமம். எனவே, ஜெயலலிதா தயங்கத் தேவை இல்லை. ஆனாலும் ஏன் தயங்குகிறார்?
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகள் இரண்டாக உடைந்துவிட்டன. ஆளும் ஆட்சியின் எதிர்ப்பு வாக்குகள் பா.ஜ.க. – தே.மு.தி.க – பா.ம.க – ம.தி.மு.க ஆகிய கட்சிகள் கொண்ட கூட்டணிக்குப் போய்விட்டன. சுமார் 74 லட்சம் வாக்குகளை இந்தக் கூட்டணி பெற்றது. தமிழ்நாடு அரசியலில் தி.மு.க., அ.தி.மு.க அல்லாத கூட்டணி இத்தனை லட்சம் வாக்குகள் பெற்றது கடந்த தேர்தலில்தான். இப்படி ஒரு கூட்டணி அமையாமல் போயிருந்தாலோ அல்லது இவர்கள் தி.மு.க-வுடன் இணைந்திருந்தாலோ, ஜெயலலிதாவின் மாபெரும் வெற்றி சாத்தியமாகி யிருக்காது. இது மற்றவர்களைவிட ஜெயலலிதா வுக்கு நன்கு தெரியும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்கத் தவறிய தி.மு.க., இந்தச் சட்டமன்றத் தேர்தலில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பதை ஜெயலலிதா உணர்ந்துவிட்டார். தே.மு.தி.க., காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே தி.மு.க கூட்டணியில் இடம்பெறும் என ஜெயலலிதா நினைக்கிறார். கடைசி நேரம் வரை போக்குக்காட்டி முடிந்தவரை கறக்கும் தந்திரம்கொண்டவர் விஜயகாந்த் என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியும். கடந்த தேர்தலின் போது போயஸ் கார்டன் வீட்டுக்கு 7 மணிக்குப் போவதற்கு முன்னர் வரை, ‘தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே ஆட்சிக்கு வரக் கூடாது’ எனச் சொல்லிவந்தவர்தான் விஜயகாந்த். ‘41 ஸீட்டுக்கு மேல் கூட்ட முடியாது. இப்போது வந்து கையெழுத்து போடாவிட்டால், அதற்கும் சேர்த்து அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுவிடுவார்கள்’ என பண்ருட்டி ராமச்சந்திரன் மூலமாகச் சொன்ன பிறகுதான், விஜயகாந்த் கிளம்பினார். இப்போதும் அப்படித்தான் கோபாலபுரம் போவார் என நினைக்கிறார் ஜெயலலிதா.
தி.மு.க – தே.மு.தி.க கூட்டு சேர்ந்தால் அதில் காங்கிரஸும் இடம்பெறும் என்பதும் ஜெயலலிதாவின் முடிவு. காங்கிரஸ் கட்சிக்குப் பகிரங்க அழைப்பை கருணாநிதி விடுத்துள்ளார். கேரளாவில் வைத்து இது தொடர்பாக சோனியாவிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியுள்ளார். ‘கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம். என்றாலும் தி.மு.க-வுடன் இணக்கமாகச் செல்லுங்கள்’ என அப்போது சோனியா கூறியுள்ளார். இப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அது தி.மு.க-வுக்கு வலுசேர்ப்பதாக அமையும் என ஜெயலலிதா நினைக்கிறார்.
மழைக்கு முந்தைய நிலவரப்படி தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க – தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க., த.மா.கா  ஆகிய ஏழு  அணிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலைமை இப்போது மாறிக்கொண்டி ருக்கிறது. தி.மு.க எல்லா கட்சிகளுடனும் பேசி வருகிறது. தே.மு.தி.க., காங்கிரஸ், த.மா.கா., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சித் தலைவர்களிடம் தனது எண்ணங்களை வெளிப்படுத்திவருகிறது தி.மு.க. யார் வருவார்கள், யார் வர மாட்டார்கள் என்ற தெளிவு கிடைக்காவிட்டாலும் கருணாநிதியின் மெகா கூட்டணி முயற்சிகளை ஜெயலலிதா அறிந்தே உள்ளார். இந்த நிலையில் தனித்துப் போட்டி என்ற முடிவு சரியானதாக இருக்காது என்ற முடிவுக்கு ஜெயலலிதா வந்துவிட்டதையே அவரது பேச்சு வெளிப்படுத்துகிறது.
தி.மு.க அணியில் எந்தெந்தக் கட்சிகள் சேருகிறது என்பதைப் பொறுத்து, சில கட்சிகளைச் சேர்க்க நினைக்கிறார் ஜெயலலிதா. மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளை, தன்னோடு சேர்க்க ஜெயலலிதா முயற்சிக்கலாம். த.மா.கா-வை தனக்கு அனுசரணையான கட்சிகளில் ஒன்றாக ஜெயலலிதா நினைக்கிறார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன், ஏற்கெனவே அ.தி.மு.க கூட்டணியில்தான் இருக்கிறார்.
தங்களை இணைத்துக்கொள்வார் என பா.ஜ.க-வும் நம்புகிறது. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு இரண்டு தயக்கங்கள் உள்ளன. அந்தக் கட்சியைச் சேர்த்துக்கொண்டால், சிறுபான்மையினர் வாக்குகள் மொத்தமாக தி.மு.க-வுக்குப் போய்விடும் என்பது ஒன்று. இரண்டாவது, பா.ஜ.க., அ.தி.மு.க அணியில் இடம்பெற்றால் தே.மு.தி.க நிச்சயம் தி.மு.க-வுடன் போய்விடும் என்பது. ‘பா.ஜ.க – தே.மு.தி.க அணி அமைவதே அ.தி.மு.க-வுக்கு நல்லது’ என நினைக்கிறார் ஜெயலலிதா.
இந்தக் கூட்டணிக் கணக்குகள்தான் நாஞ்சில் சம்பத்தின் பதவிப் பறிப்புக்குமே பின்னணிக் காரணம். ‘யானை நடந்து வந்தால் எறும்பு சாகத்தான் செய்யும்’, ‘ஒரு வீட்டில் இழவு என்றால், இன்னொரு வீட்டில் திருமணம் நடக்கக் கூடாதா?’ என்றெல்லாம் கேட்டதற்காக நாஞ்சில் சம்பத் பதவி பறிக்கப்படவில்லை. கூட்டணியில் யாரை எல்லாம் சேர்க்கலாம் என  ஜெயலலிதா மனக்கணக்கு போட்டுக் கொண்டிருக்க… மொத்தக் கட்சிகளையும் ஒரே பேட்டியில் நாஞ்சில் சம்பத் கழுவிக் கொட்டி விட்டார்.
`புதுவரவே இல்லாத கட்சி ம.தி.மு.க.’ `கம்யூனிஸ்ட்கள் இருக்கும் நாகப்பட்டினமும் திருத்துறைப்பூண்டியும்தான் தமிழ்நாடா?’, `விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காட்டுமன்னார் குடியை விட்டால் கீழவளவில்தான் இருக்கிறது’, `கன்னியாகுமரியில் ஜெயித்தது பா.ஜ.க அல்ல… மதம்’, `தருமபுரியில் ஜெயித்தது பா.ம.க அல்ல… சாதி’, `காங்கிரஸ் கட்சியை நாங்க சேர்த்துக்க மாட்டோம்’ என்ற வார்த்தை வெட்டுக்கள் எல்லாம் நாஞ்சில் சம்பத் பேட்டியில் இருந்தன. ‘சூழ்நிலைக்கு ஏற்ப தேர்தல் வியூகங்களை நான் அமைத்துவருகிறேன்’ என ஜெயலலிதா பேசிய இரண்டாவது நாளே, சூழ்நிலையை சூனியம் ஆக்கினார் நாஞ்சில் சம்பத்.
ஏதோ ஒரு வார்த்தை சொன்னதற்காக நட்ராஜை (அதைச் சொன்னவர் வேறு நட்ராஜாக இருந்தாலும்!) கட்சியைவிட்டே நீக்கிய ஜெயலலிதா, நாஞ்சில் சம்பத்தை அப்படி கட்சி்யை விட்டே நீக்கவில்லை; பதவியை மட்டும்தான் பறித்திருக் கிறார். ஏனென்றால், இப்போதைய சூழ்நிலையில்  எந்த ஒருவரையும் அவர் இழக்க விரும்பவில்லை. எந்தவொரு கட்சியையும்தான்!

வியாழன், டிசம்பர் 10, 2015

வானொலியின் அருமை



வானொலியின் அருமை, பெருமை பற்றி சென்னைவாசிகள் மறுபடியும் உணர ஒரு வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.

நகரின் பல பகுதிகளில் 3 நாட்களுக்கு மேல் மின்சாரம் இல்லாமலிருந்தது. அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் பழைய வானொலிப் பெட்டிகளைத் தேடியெடுத்து ஒலிபரப்புகளைக் கேட்டனர்.
வானொலி நிலையங்களும் நிலைமைக்கு ஏற்ப செயற்பட்டன. அவதிக்குள்ளானவர்கள் வானொலி நிலையங்களை அழைத்து தங்கள் நிலை பற்றிக் கூறினார்கள். உணவு, குடிநீர், மீட்புப்படை உதவிகளைக் கோரினார்கள்.

பல பண்பலை வானொலி நிலையங்கள் தங்கள் வழமையான நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு, 24 மணி நேரமும் வெள்ள நிலைமை பற்றி தகவல்களை ஒலிபரப்பின.

ஆலந்தூரைச் சேர்ந்த தேவி என்ற பெண்மணி தான் வழமையாக சமையல் செய்யும்போது வானொலியில் பாடல்கள் கேட்பதாகவும் ஆனால் தனது ஃப்ரிட்ஜ்க்கு மேல் இருக்கும் அந்த சிறிய பெட்டி எவ்வளவு அற்புதமானது என்பதை தான் முன்னர் உணரவில்லை என்றும் கூறினார்.

நேயர்கள் நிலையங்களைத் தொடர்பு கொண்டு தங்கள் பகுதி நிலைமைகளை உடனுக்குடன் நேரடியாக தகவல் கொடுத்தார்கள். வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கும் இத் தகவல்கள் பயனளித்தன. வெள்ளிக்கிழமை (4/12) நண்பகல் வெள்ளத்தில் மூழ்கியிருந்த சைதாப்பேட்டை பாலம் மீண்டும் திறக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதும் மக்கள் ஆரவாரம் செய்து அத்தகவலை வரவேற்றனர். 
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் இந்த முக்கிய இணைப்புப்பாலம் புதன்கிழமை தொடக்கம் பல அடி வெள்ள நீரில் மூழ்கியிருந்தது.

தொலைபேசி இல்லாமல் இருந்தவர்களுக்கு வானொலி நிலையங்கள் தகவல் பரிமாற்ற நிலையங்களாகவும் செயற்பட்டன. குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பற்றிய தகவல்களை அறிந்து அவர்களைப்பற்றிக் கேட்டவர்களுக்கு எடுத்துச் சொல்லின.

பல அறிவிப்பாளர்கள் நீண்ட நேரம் பணியாற்றினார்கள். அறிவிப்புகள் சரியான ஆட்களுக்கு, சரியான முறையில் கிடைப்பதை உறுதிப்படுத்தினார்கள்.

வானொலி நிலையங்கள் மூலமாக உதவித்தொகைகளும் வந்து சேர்ந்தன. சிக்காகோவில் உள்ள எஸ். ராஜேஷ் என்ற சென்னைவாசி வெள்ள நிவாரண நிதியாக தன் நண்பர்களிடம் பணம் திரட்டி 4,000 டாலரை ஒரு பண்பலை வானொலி நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்.

வானொலி நிலையங்களும் தங்கள் ஊழியரை அனுப்பி வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் விநியோகம் செய்தன.
(தகவல்: டைம்ஸ் ஆஃப் இந்தியா http://bit.ly/1OJ6UEo)
நன்றி: திரு. உமாகாந்தன்