வியாழன், செப்டம்பர் 10, 2009

பூவாடைக் காற்று... ஜன்னலைச் சாத்து!




தம், தூள், கில்லி, டமால், டூமீல் என்று தலைப்புகள் திரைப்படங்களுக்கு வைக்கப்பட்டு கூட்டம் கூட்டமாகத் தெருவில் நடனம் ஆடுகிறார்கள். அடிதடி பொறி பறக்கிறது. தலைப்பின் நீளத்தைக் குறைத்த மாதிரி பஞ்ச் டயலாக்குகளையும் குறைத்தால் தேவலை என்று நினைக்கும் வண்ணம், ஆளாளுக்கு ஷூவின் அடிப்பாகத்தையோ ஆள்காட்டி விரலையோ காமிராவுக்குக் க்ளோசப்பில் காட்டி நம்மை எச்சரிக்கிறார்கள்.

அபூர்வமாகச் சில தலைப்புகளே கவிதை போன்று இனிமையாக இருக்கும். அப்படி வைக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்று "ஒரு ஓடை நதியாகிறது" Well. Reality is the other way around! நாமெல்லாம் கடலையே ஓடையாக்கிவிடும் வல்லமை பெற்ற மகானுபாவர்கள் அல்லவா?

பின்னணிப் பாடகிகளின் அதீத இனிமைக் குரல் எதுவும் கிடையாது. நம் வீட்டுப் பெண்ணில் ஒருவர் சாதாரணமாகப் பாடுவது போன்ற மிக மிக அந்நியோன்யமான குரல். ஆனால் வசீகரமான குரல். ராஜேஸ்வரி பாலுவுடன் பாடியிருக்கிறார் (நான் இத்தனை நாள் உமா ரமணன் என்றே நினைத்திருந்தேன்).

இன்றுவரை இப்பாடலை எப்படிப் படமாக்கியிருக்கிறார்கள் என்பது தெரியாது. ஒளிவடிவத்தில் பார்த்ததில்லை. ஆனால் பாடலைக் கேட்டாலே போதும்; பார்க்கத் தேவையே இல்லாதபடியான ஒரு பாட்டு. கேட்கும்போதே மொத்தச் சூழ்நிலை, நாயகன், நாயகியின் மனநிலை, நிலவரம், என்று அனைத்தையும் மனமே எழுப்பிக்கொண்டுவிடும். அவ்வளவு அருமையான இசை; குரல்; பாடல் வரிகள். மயங்கிப் போகச் செய்த மிகச் சில பாடல்களில் இதுவும் ஒன்று. வெறும் பாடலாக இல்லாமல் செவியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் பாடல்!

புதிதாக மணமான ஆணும், பெண்ணும், அதீத வெட்கத்துடனும், பரபரப்புடன், இனம்புரியாத பயத்துடன், ஆர்வத்துடன், காதலுடன், காமத்துடன், புதிய வாழ்க்கையொன்றைத் துவங்குவதற்காக, ஏகமான கற்பனைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும், முதலிரவன்று அறைக்குள் காத்திருக்கும் நாயகனை, நாணத்துடன் தலைகுனிந்து வரும் நாயகி சந்திப்பதும், தாம்பத்யம் தொடங்குவதையும், முடிவில் ஆசுவாசப்படுத்திக் கொள்வதையும் - ஆனந்தமாக மனதில் காட்சிகளாக விரித்து, உணரச் செய்கிறது இந்தப் பாடல்.

இந்த இனிய கற்பனைகளும், உணர்வுகளும் சோப்புக் குமிழ் போலக் கலைந்துவிடக் கூடாது என்ற பயத்தாலேயே இப்பாடலை இதுவரை ஒளிவடிவமாகப் பார்க்கும் தைரியம் எனக்குக் கிடையாது. அருமையான பாடல்களைப் படத்தில் கொத்துப் புரோட்டா போட்டிருப்பார்கள் சில கிறுக்கர்கள். அந்தமாதிரி இப்பாடலுக்கும் செய்திருந்தார்களென்றால் அதை என்னால் தாங்க முடியாது என்பதால் கேட்கும் சுகமே போதும் என்று சமாதானப் படுத்திக்கொண்டேன்.

திருமணத்தைக் குறிக்க (அலறாத) மங்கல வாத்திய இசையுடன் துவங்கி, வீணையின் நாதம் எழுப்பும் நெகிழ்வான உணர்வுடன் (Bachelor பசங்களெல்லாம் ஒத்துங்க. உங்களுக்கு இந்த மொழி புரியாது ;) !) ராஜாவின் பலமான வாத்தியமான வயலினும், பின்பு புல்லாங்குழலும் சேர்ந்தொலிக்க, பாடல் முழுவதிலும் குழைத்துக் குழைத்துப் பாடியிருப்பார்கள் பாலுவும், ராஜேஸ்வரியும்.

கணவன்:

"தலையைக் குனியும் தாமரையே
உன்னை எதிர்பார்த்து வந்தபின்பு வேர்த்து
தலையைக் குனியும் தாமரையே

நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்"

மனைவி:

"பாற்கடலின் ஓரம், பந்தி வைக்கும் நேரம்"

க:

"அமுதம் வழியும் இதழைச் சுவைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து"

ம:


"தலையைக் குனியும் தாமரையே"

"காத்திருந்தேன் அன்பே - இனி
காமனின் வீதியில் தேர் வருமோ?"


:

"பூ மகள் கன்னங்கள் - இனி
மாதுளம் போல்நிறம் மாறிடுமோ?"


:

"ஆயிரம் நாணங்கள் - இந்த
ஊமையின் வீணையில் இசை வருமா?"


:

"நீயொரு பொன்வீணை - அதை
நுனிவிரல் தொடுகையில் பல சுரமா?"


:

"பூவை நுகர்ந்தது முதல் முறையா?"

:

"வேதனை வேளையில் சோதனையா?"

:

"புதுமுறையா?"

:

"இது சரியா?"

:

"சரிசரி.. பூவாடைக் காற்று ஜன்னலைச் சாத்து"

:

"உத்தரவு தேவி... தத்தளிக்கும் ஆவி"

:

"இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்"

: பெருமூச்சுடன்

"தலையை....க் குனியும்....தாமரையே "

மஞ்சமும், மலர்களும், படுக்கையும், இரவின் குளிர்ச்சியும், நிசப்தமும், அதில் கேட்கும் இதயங்களின் துடிப்பையும் உணரமுடிகிறது!

படம் : ஒரு ஓடை நதியாகிறது
இசை: இசைஞானி இளையராஜா


நன்றி :




http://video.google.com/videoplay?docid=-2674086247281555859#

http://www.musicplug.in/blog.php?blogid=1195
...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக