வெள்ளி, ஆகஸ்ட் 07, 2015

மந்திரி தந்திரி – 14


அந்த ஆட்டோ சென்று நின்ற இடத்தில் கட்சிக்கொடி தோரணங்கள், மேடை, மைக்செட்… என அ.தி.மு.க பொதுக்கூட்டம் களைகட்டியிருந்தது. வட்டச் செயலாளர் தொடங்கி மாவட்டம் வரை பேசி முடித்த பிறகு, மைக் முன்பாக நாற்காலி ஒன்றைப் போட்டார்கள். அதில் அந்தச் சிறுமியை நிறுத்தினார்கள். மைக்கை தன் உயரத்துக்குச் சரிசெய்துகொண்ட அந்தச் சிறுமி, அதன் பிறகு பேசியது பக்கா அரசியல். அதிலும் தன் பேச்சில்
தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான கருணாநிதியைச் சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்தஅந்தச் சிறுமிக்கு வயது 15. எங்கு தி.மு.க பொதுக்கூட்டம் நடக்கிறதோ, அங்கு மறுநாள் அந்தச் சிறுமியை வைத்துப் பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தது அ.தி.மு.க. எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து, அதை ராகம் போட்டு முழங்கி, ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. 1970-களில் மதுரை சுற்றுவட்டாரத்தில் அ.தி.மு.க மேடைகளில் பொறிபறக்க முழங்கிய அந்தச் சிறுமிதான், இன்று சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் பா.வளர்மதி!
மதுரை சூறாவளி!
வளர்மதிக்குப் பூர்வீகம், மதுரை அச்சம்பத்து. பிறந்து, வளர்ந்து படித்தது எல்லாம் மதுரையில். தி.மு.க உறுப்பினராக இருந்த வளர்மதியின் அப்பா, எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது அ.தி.மு.க-வில் ஐக்கியமானார். அப்போது பள்ளி மாணவியான அவரது மகள் வளர்மதி, பேச்சுப் போட்டிகளில் பரிசுகளைக் குவித்துக் கொண்டிருந்தாள். அவர், மகளின் திறமையை கட்சி மேடையில் காட்சியாக்கினார். அரசியல் மேடைகளில் ஆரவார வரவேற்பு. 10-ம் வகுப்புக்குப் பிறகு வளர்மதி படிக்கவில்லை.
கட்சி தொடங்கிய பிறகு, 1974-ம் ஆண்டு சென்னை திருவான்மியூரில் அ.தி.மு.க-வின் மாநாட்டை நடத்தினார் எம்.ஜி.ஆர். அந்த மாநாட்டில் எம்.ஜி.ஆர் முன்பு முழங்கினார் வளர்மதி. இறுதியாக பேசிய எம்.ஜி.ஆர்., ‘மதுரை வளர்மதி, திருப்பூர் மணிமாறன் ஆகியோரின் பேச்சுக்கள் என்னை ரொம்பவே கவர்ந்தன. இவர்களை கழகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார். அவரது அந்த உத்தரவு, உடனே அமலுக்கு வந்தது. அ.தி.மு.க பொதுக்கூட்டங்களில் பேசும் வாய்ப்பு வளர்மதிக்குக் குவிந்தது. தமிழ்நாடு முழுக்க அ.தி.மு.க மேடைகளில் அனல் கிளப்பினார் வளர்மதி. அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கோலம் போடும் அளவுக்கு ஒருகட்டத்தில் உயர்ந்தார்.
மதுரையில் இருந்து சென்னைக்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்த வளர்மதியை, சென்னை அ.தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகளான கு.க.செல்வம், ‘மயிலை’ ஜெகன், ‘தி.நகர்’ சாமிநாதன் ஆகியோர் கட்சியில் அடுத்தடுத்த படிநிலைகளுக்கு அழைத்துச் சென்றனர். வாய்ப்புகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட வளர்மதி, அடுத்தடுத்து க.ராசாராம், ஆர்.எம்.வீரப்பன் என அப்போதைய அ.தி.மு.க ஜாம்பவான்களின் ‘குட்புக்’கில் இடம்பிடித்தார். ஒருகட்டத்தில் ஆர்.எம்.வீரப்பனின் தீவிர ஆதரவாளராக மாறி, அவரைத் தனது அரசியல் குருவாகவே ஏற்றுக்கொண்டார். கட்சிக்குள் விறுவிறு வளர்ச்சி இருந்தாலும், ‘நட்சத்திர மேடைப் பேச்சாளர்’ என்ற அந்தஸ்தைத் தாண்டி ‘மக்கள் பிரதிநிதி’ என அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியவில்லை வளர்மதியால். காரணம்… அவரது இளம் வயது. அதனாலேயே சீனியர்களைத் தாண்டி அவருக்குத் தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
எம்.ஷி.ஆருக்குத் தெரியாமலேயே எம்.எல்.ஏ.!
உடல்நலக் குறைவு காரணமாக எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவச் சிகிச்சையில் இருந்த 1984-ம் ஆண்டு, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆச்சர்ய அதிசயமாக, தொகுதிக்கு மட்டும் அல்லாமல், சென்னைக்கே சம்பந்தம் இல்லாத வளர்மதி, மயிலாப்பூர் அ.தி.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்டார். எம்.ஜி.ஆர் சிகிச்சையில் இருந்ததால், வேட்பாளர்கள் தேர்வை ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட சீனியர்களே பார்த்துக்கொண்டனர். அதனால் 27 வயதிலேயே பேச்சாளர் வளர்மதிக்கு அடித்தது அதிர்ஷ்டம். தமிழ்நாட்டிலேயே இல்லாமல், எம்.ஜி.ஆர் ஜெயித்த அந்தத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்க, வளர்மதியும் ‘மக்கள் பிரதிநிதி’ ஆனார். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து எம்.ஜி.ஆர் திரும்பிவந்த பிறகுதான், அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. அப்போது அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் எம்.ஜி.ஆரைப் பார்க்க ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றார்கள். ‘என்ன… நீயும் இவங்களோடு வந்திருக்க?’ என அங்கே வளர்மதியைப் பார்த்து எம்.ஜி.ஆர் கேட்க, ‘அண்ணே… நானும் எம்.எல்.ஏ ஆயிட்டேண்ணே!’ என வளர்மதி சொன்னதை ‘ரியாக்ஷன்’ காட்டாமல் ஏற்றுக்கொண்டு சிரித்தாராம் எம்.ஜி.ஆர். அப்படி எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்தான் பா.வளர்மதி.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ‘ஜா’, ‘ஜெ’ என அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. ‘ஜா’ அணியின் ஆணிவேர் ஆர்.எம்.வீரப்பன். அவரது சிஷ்யையான வளர்மதி எங்கே இருப்பார்? ‘ஜா’ அணியில்தானே! 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ‘ஜா’ அணியை வெற்றிபெற வைக்க, தமிழ்நாடு முழுக்கப் பிரசாரம் போனார் வளர்மதி. அப்போது ‘ஜா’ அணியில் இருந்த காளிமுத்து, ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அவர் அப்படிப் பேசியதை, தமிழ்நாடு முழுக்கச் சென்று வழிமொழிந்ததில் வளர்மதிக்கு முக்கியப் பங்கு உண்டு. அதுவும் தி.நகர் பஸ் ஸ்டாண்டு அருகே வளர்மதி பேசிய பேச்சு நாராசம். ‘ஜெயலலிதா எப்போதும் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக முடியாது’ என அப்போது ஜெயலலிதாவை ஏகத்துக்கும் விமர்சித்த அதே வளர்மதிதான் இப்போது, ‘இதயதெய்வம் அம்மாதான்… மற்றவர்கள் எல்லாம் சும்மாதான்…’ என லாலி பாடுகிறார்.
ஆன்மிக வியூகம்!
1991-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தபோதும், வளர்மதிக்கு ஏறுமுகம் இல்லை. ‘ஜெ அணி’யிலேயே இருந்து அ.தி.மு.க-வில் தொடர்ந்த புலவர் இந்திரகுமாரி, அமைச்சர் செல்வாக்கோடு கட்சியில் வலம்வந்துகொண்டிருந்தார். அவரை மீறி வளர்மதியால் வளர முடியவில்லை. ஜெயலலிதாவின் அபிமானம் பெற எப்படி எப்படியோ முட்டி மோதிப்பார்த்த வளர்மதி, இறுதியில் கையில் எடுத்த அஸ்திரம்தான் ஆன்மிகம். திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயிலுக்கு வாராவாரம் சென்று வழிபட்டு, கோயில் பிரசாதத்தை கார்டனுக்குக் கொண்டுவந்து கொடுப்பார். இப்படி பல கோயில் பிரசாதங்களைக் கொண்டுபோய்க் கொடுத்தபோதுதான் சசிகலாவுடன் நெருக்கமானார். அதன் பிறகே கட்சியில் வளர்மதிக்கு லிஃப்ட் கிடைத்தது.
தேனாம்பேட்டை தாமஸ் ரோட்டில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் 180 சதுரஅடி வீட்டில் ஒருகாலத்தில் வாடகைக்கு இருந்த வளர்மதி, அதே குடிசை மாற்று வாரியத்தின் தலைவர் ஆனார்.
1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சியில் இந்திரகுமாரியின் செல்வாக்கு சரிய… அந்த இடத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் வளர்மதி. கட்சி அலுவலகத்துக்கு ஜெயலலிதா வரும்போதெல்லாம், வாசலில் தலைவியின் கண்ணில் படும்படி நிற்பார். ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சி மற்றும் கூட்டங்களில் தன் பேச்சு தவறாமல் இடம்பெறும்படி பார்த்துக்கொண்டார். அப்படி கூட்டங்களில் பேசும்போது, கருணாநிதியை சகட்டுமேனிக்குத் திட்டித்தீர்ப்பார் வளர்மதி. அதை ஜெயலலிதா வெகுவாக ரசித்தார். அ.தி.மு.க பொதுக்குழுக்களில் யார் பேச வேண்டும் என்பதை ஜெயலலிதாதான் முடிவுசெய்வார். அந்தப் பட்டியலில் வளர்மதி பெயரை ஜெயலலிதா தவறாமல் ‘டிக்’ அடிக்கத் தொடங்கினார். ஒருமுறை பொதுக்குழு மேடையிலேயே, ‘சசிகலாவுக்குக் கட்சியில் பதவி தரவேண்டும்’ எனச் சொல்லி சசிகலாவிடமும் ‘ஸ்கோர்’ வாங்கினார். தலைமைக் கழகப் பேச்சாளர், மகளிர் அணிச் செயலாளர், இலக்கிய அணிச் செயலாளர் எனப் படிப்படியாக முன்னேறினார். சசிகலா கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருக்கு அருகில் வளர்மதிதான் இருப்பார். கட்சியில் பெருகிய இந்தச் செல்வாக்கு, 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வளர்மதிக்கு ஸீட் கிடைக்கச் செய்தது. அதில் ஓர் ஆச்சர்யம்… வளர்மதியின் ‘அரசியல் குரு’ ஆர்.எம்.வீரப்பனுக்கு எதிராகவே ஆலந்தூரில் நிறுத்தப்பட்டார்.
அசரவில்லை வளர்மதி. குருவை வீழ்த்தி இரண்டாவது முறை எம்.எல்.ஏ. ஆனவர், முதல்முறையாக அமைச்சரும் ஆனார். அடுத்த ஐந்து வருடங்கள் ‘தாயே’ எனத் தலைவியைப் பாராட்டியும் ‘****’ என தி.மு.க உறுப்பினர்களைத் திட்டியும், அரசியல் பண்ணிக்கொண்டிருந்தார். 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோற்றவர், 2011-ம் ஆண்டு தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் நின்று வென்றார். ஆனால், அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. சசிகலாவின் நெருங்கிய உறவினர் ஒருவரைச் சந்தித்தார். சில மாதங்களுக்குப் பிறகு செல்வி ராமஜெயத்தின் பதவி பறிபோக, அந்த இடத்தை நிரப்பினார் வளர்மதி. அதன் பிறகான அமைச்சரவை மாற்றங்களில் இருந்து தப்பித்துக்கொண்டே இருக்கிறார் பா.வளர்மதி.
‘மக்கள்’ அமைச்சர்!
அரசியலில் எப்படியோ ஆன்மிகத்தில் வளர்மதி ‘மக்கள் அமைச்சர்’தான். மந்திரி என்கிற பந்தா இல்லாமல் கோயில்களுக்குச் சென்று வருவார். மக்களோடு மக்களாக நின்று தரிசனம் செய்வார். வீட்டுக்கு அருகே இருக்கும் சிவன் கோயிலுக்கு தவறாமல் செல்வார். அப்போது யாரிடமும் பேச மாட்டார். ரோபோ போல சென்றுவிட்டு வருவார். தினம் சிவனுக்கு 100 ரூபாய் நோட்டு தட்டில் விழும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சனிக்கிழமைகளில் வருகை தவறாது. அப்படி ஒரு சமயம் போனபோது பார்த்தசாரதியை முன்னே நின்று தரிசித்தார். அப்போது, ‘உயரமானவங்க எல்லாம் முன்னாடி போய் நின்னுக்கிட்டா நாங்க எப்படி சாமியைப் பார்க்கிறது? கொஞ்சம் பின்னாடி வாங்க..’ என்றார் பக்தர். வளர்மதி திரும்பிப் பார்த்தபோதுதான் பக்தருக்கு ‘மந்திரி’ என்பது தெரிந்தது. பக்தர் அமைதியானாலும், வளர்மதி அவருக்குப் பின்னால் போய் நின்றுகொண்டு சாமியை வணங்கிச் சென்றார்.
துறையில் சாதித்தது என்ன?
மாற்றுத்திறனாளிகளின் நலனும் வளர்மதி வசம்தான் இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் இந்த ஆட்சியில் நடத்தப்பட்ட விதம் கடும் கண்டத்தை உண்டாக்கியது. ‘பார்வையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்கள் சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும். நிவாரண உதவித் தொகையை உயர்த்த வேண்டும்’ என ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளிகள் நடத்திய போராட்டத்தை, துளிக் கரிசனம்கூட இல்லாமல், இரும்புக் கரம் கொண்டு அடக்கியது அரசு. நாள்தோறும் உண்ணாவிரதம், சாலை மறியல் எனப் பல கட்டப் போராட்டங்களை மாற்றுத்திறனாளிகள் அரங்கேற்றியபோது, மனிதநேயம்கூட இல்லாமல் நடந்துகொண்டனர் போலீஸார். போராட்டத்தில் பங்கேற்ற பல மாற்றுத்திறனாளிகளை, இரவு நேரங்களில் சென்னைக்கு வெளியே அழைத்துச்சென்று விடுவது, சுடுகாட்டில் இறக்கிவிடுவது என, ‘துறை’யின் உத்தரவை செவ்வனே நிறைவேற்றியது காவல் துறை. ஜெயலலிதாவே விவகாரத்தில் தலையிட்டு ‘வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்’ எனச் சொன்னதால், அப்போது போராட்டத்தைக்
கைவிட்டனர் மாற்றுத்திறனாளிகள். ஆனால், அந்த வாக்குறுதிகள் காற்றோடு போனதுதான் மிச்சம்!
முட்டை முறைகேடுகள்!
தமிழ்நாட்டிலேயே மிக அதிகபட்சப் பயனாளிகளாக 68 லட்சம் பேர் பயனடையும் திட்டம் ‘சத்துணவுத் திட்டம்’. அந்தத் திட்டத்தின் கீழ் முட்டை வழங்க 1989-ம் ஆண்டு கருணாநிதி உத்தரவிட்டார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முட்டை எனத் தொடங்கிய திட்டத்தில் இப்போது, வாரத்துக்கு ஐந்து முட்டைகள் வழங்கப்படுகின்றன. அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் என 97,058 மையங்களில் 68.54 லட்சம் பேருக்கு சத்துணவு வழங்கப்பட்டுவருகிறது. கலப்படம் இல்லாத உணவான முட்டை கொள்முதலில் ஏகப்பட்ட கோல்மால்கள் அரங்கேறின. வாரத்துக்கு மூன்றரைக் கோடி முட்டைகளைக் கொள்முதல் செய்கிறது அரசு. வழக்கமான மாவட்ட அளவிலான டெண்டர் மூலம் நடந்துவந்த முட்டை கொள்முதல் நிறுத்தப்பட்டு, மாநில அளவில் மாற்றப்பட்டன.  ‘ஏழு வருடங்கள் முட்டை அல்லது இதர உணவுப் பொருள் வழங்குவதில் அனுபவம் இருக்க வேண்டும். உணவுப் பொருட்கள் வழங்குவதில் அரசிடம் 90 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்திருக்க வேண்டும்’ என, புதுப்புது விதிமுறைகளை உண்டாக்கினர். இதனால் பல முட்டை உற்பத்தி யாளர்கள் டெண்டரில் கலந்துகொள்ள முடியாத நெருக்கடி, செயற்கையாக உருவாக்கப்பட்டது. ‘குறிப்பிட்ட சில நிறுவனங்கள் பயனடையும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடு இது’ எனப் புகார் எழுந்தது. இதனால் மாவட்ட அளவில் இயங்கிவந்த பல சிறிய கோழிப் பண்ணை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு முட்டையும் 46 கிராம் எடை இருக்க வேண்டும். கெட்டுப்போன முட்டைகளை வழங்குவதைத் தடுக்க, வாரத்துக்கு மூன்று முறை முட்டைகள் சப்ளை செய்ய வேண்டும். முட்டையின் மீது ‘தமிழ்நாடு அரசுக்காக’ என வைக்கப்படும் சீல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் இருக்க வேண்டும் என, முட்டை கொள்முதலில் நிறைய விதிமுறைகள் உண்டு. ஆனால், அவை முறையாகக் கடைப்பிடிக்கப்படுவது இல்லை. குறைவான எடையில் தரம் இல்லாத முட்டைகள் விநியோகிக்கப்படுவதாகப் புகார்கள் குவிகின்றன. சராசரி மார்க்கெட் விலையைவிட சத்துணவு முட்டையின் விலை அதிகம், விலை நிர்ணயத்தில் முரண்பாடுகள், முட்டை உற்பத்தியாளர்களிடம் அரசு நேரடியாகக் கொள்முதல் செய்வது இல்லை, கொள்முதல் விதிமுறை மீறல்கள்… என முட்டை முறைகேடுகளைப் பட்டியலிட்டன எதிர்க்கட்சிகள். ‘கான்ட்ராக்டருக்கு அரசு தரும் தொகையும், கான்ட்ராக்டர் முட்டை உற்பத்தியாளருக்குத் தரும் பணமும் மாறுபட்டிருக்கிறது. சில்லறை விற்பனையில் குறைந்த விலைக்கு முட்டை கிடைக்கும்போது அதிக விலைக்கு டெண்டர் விடுவது ஏன்? முட்டையின் சில்லறை விலையைவிட சத்துணவுத் திட்டத்துக்கு சப்ளையாகும் முட்டை விலை மிக அதிகமாக இருப்பதால், அரசுக்கு ஆண்டுக்கு 80 கோடி ரூபாய் வரை நிதி இழப்பு ஏற்படுகிறது. எடை குறைவான முட்டைகளை வெளி மார்க்கெட்டில் விற்க முடியாது என்பதால், அதைச் சத்துணவு திட்டத்துக்குத் தள்ளிவிடும் கொடுமையும் நடக்கிறது. மாவட்டங்களில் வட்டார வளர்ச்சி அலுவலகக் கிடங்குகளுக்கு முட்டைகள் அனுப்பப்பட்டு, அங்கு இருந்து சத்துணவு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இதற்கு போக்குவரத்துச் செலவாக ஒரு முட்டைக்கு 8 பைசா செலவழிக்கப்படுகிறது. மாவட்ட அளவில் டெண்டர் வழங்கப்பட்டபோது, இந்தப் போக்குவரத்துச் செலவு குறைவுதான். முட்டைகளை ஒப்பந்தப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்யாமல், ஐந்து நாட்களுக்கு உரிய முட்டைகளை ஒரே நேரத்தில் சப்ளை செய்வதால், ஒப்பந்ததாரருக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம் அதிகமாகக் கிடைக்கிறது. கெட்டிக்காரத்தனமாக சத்துணவு அமைப்பாளர்களிடம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை முட்டைகளை சப்ளை செய்வதாகக் கையெழுத்து மட்டும் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த முறைகேட்டில் ஒப்பந்ததாரர்கள், அதிகமான கமிஷன் பார்க்கிறார்கள்’ என முறைகேடுகளை அடுக்கின எதிர்க்கட்சிகள். ஆனால் அரசோ, ‘முட்டை கொள்முதல் செய்வது அரசின் கொள்கை முடிவு. முந்தைய முறையில் நிறையத் தவறுகள் நடந்தன. அவற்றைக் களைய வேண்டும் என்பதற்காகத்தான், புதிய முறை கொண்டுவரப்பட்டது. முட்டை கொள்முதலில் அரசுக்கு இழப்பு இல்லை’ என்கிறது.
இத்தனை பிரச்னைகளுக்கு நடுவில் அமைச்சர் பா.வளர்மதி என்னதான் செய்துகொண்டிருக்கிறார்?
‘கிழிந்த ஜிப்பா, உடைந்த தகர டப்பாவுடன் சென்னைக்கு வந்தவர் கருணாநிதி’ என சட்டமன்றத்தில் முழங்கி, தன் தலைவியை மனம் குளிரவைப்பார். ‘அன்னக் காவடியாக வந்தவரே… மஸ்டர் ரோல், பூச்சி மருந்து, கோதுமை பேரம், வீராணம் குழாய், ஸ்பெக்ட்ரம்… என ஊழல்களால் கோடிகளை உலக அளவு குவித்தவரே… ஆண்டியாகக் களம் புகுந்து, அம்பானியை வென்றவரே! ஆண்டிமுத்து ராசாவைத் தூண்டிவிட்டு அலைவரிசைக் கொள்ளையால் ஆசியப் பணக்காரர் ஆனவரே… நாஞ்சிலார் சொன்ன கருவின் குற்றமே… நாளை உனக்குக் காத்திருக்கு ஸ்பெக்ட்ரமே!’ எனக் கவிதை எழுதுவார். அமைச்சர் பதவிக்கான செயல்பாடுகளைவிட, அமைச்சர் பதவி முக்கியம் அல்லவா!
யார் பெஸ்ட்… போட்டி!
வளர்மதிக்கும் மற்றோர் அமைச்சர் கோகுல இந்திராவுக்கும் இடையே ஜெயலலிதாவிடம் ‘ஷொட்டு’ வாங்க அதகள அக்கப்போரே நடக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றபோது தேம்பித் தேம்பி அழுவதில் ‘யார் பெஸ்ட்?’ என்பதில் தொடங்கி, ஜெயலலிதாவின் விடுதலைக்காக யாகம், பூஜைகள் நடத்துவது வரை ஒருவரை ஒருவர் ‘பீட்’ செய்யப் பார்க்கிறார்கள். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானபோது, அழுதுகொண்டே லட்டு சாப்பிட்டார் வளர்மதி. சளைக்காமல் கோகுல இந்திராவும் மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் நடத்திவந்த ‘சமநீதி’ பத்திரிகையில் வேலை பார்த்த பாலசுப்பிரமணியனைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டார் பா.வளர்மதி.
வளர்மதியின் கணவர் பாலசுப்பிரமணியனும் அமைச்சர் நத்தம் விசுவநாதனும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், வளர்மதி மீது எந்தப் புகார் போனாலும் அது புஸ்வாணம் ஆகிவிடும். கட்சி அலுவலகத்துக்குப் போகும் புகார்களுக்கு, அங்கே இருக்கும் மகாலிங்கம் செக் வைத்துவிடுவாராம்.
‘தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை’ என்கிற புலம்பல்கள் ஆயிரம்விளக்கில் எதிரொலிக்கின்றன. இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் விநியோகம்கூட முழுமை அடையவில்லையாம். ‘தொகுதிக்குள் மாதம் ஒரு முறை விழாவை நடத்த வேண்டும்’ என அங்கே இருக்கிற கவுன்சிலர்களுக்கு உத்தரவு போடப்படுகிறதாம். ‘கைக்காசைப் போட்டு விழா நடத்தவேண்டியிருக்கிறது’ என, கட்சிக்காரர்கள் புலம்புகிறார்கள்.
டிரான்ஸ்ஃபர், டெண்டர் என, கட்சிக்காரர்கள் விண்ணப்பங்களோடு போனால், இனிக்க இனிக்கப் பேசுவார். ஆனால், ‘நான் வெறும் அமைச்சர்தான். அதிகாரம் எல்லாம் கிடையாது’ எனச் சொல்லி மழுப்பி அனுப்பிவிடுவாராம்.
இப்போது யார் யாரோ டாலரிலும் கம்மலிலும் மூக்குத்தியிலும் வளையல்களில் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு போஸ் கொடுக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் முன்னோடி வளர்மதிதான். பெரிய டாலர் செயினில் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு, அதை புடவைக்கு மேலே நன்றாகத் தெரியும்படி முதல்முதலாக அணிந்தது இவரே.
அமைச்சர் பங்களா வேண்டாம் எனச் சொல்லி, கே.கே.நகர் வீட்டிலும் ஈக்காட்டுத்தாங்கல் பங்களாவிலும் வசிக்கிறார்.
அந்த நான்கு மாவட்டங்கள்!
வளர்மதி பிறந்தது மதுரை; அரசியல் செய்வது சென்னை; முதன்முறையாக அமைச்சராக உதவியது காஞ்சிபுரம். வளர்மதியின் கணவர் பாலசுப்பிரமணியனின் சொந்த மாவட்டம் கடலூர். இந்த நான்கு மாவட்டங்களிலும் வளர்மதிக்கு அரசியல் செல்வாக்கு உண்டு.
நிழல்கள்!
ஆயிரம்விளக்கு தொகுதியில் நடைபெறும் அரசியல் நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் கவுன்சிலர் சிவராஜ்தான், அமைச்சருக்கு ஆல் இன் ஆல். அவர் கண் அசைவின் படிதான் வளர்மதி செயல்படுகிறார் எனக் குற்றச்சாட்டு படிக்கிறார்கள் கட்சியினர். நிர்வாகிகள் நியமனம் தொடங்கி தொகுதிக்குள் நடைபெறும் அனைத்து டீலிங்குகளும் சிவராஜ் மூலமே அரங்கேறுகின்றன. தொகுதிக்கு சிவராஜ் என்றால், அரசு நிர்வாகத்துக்கு சங்கர். சீனியர் பி.ஏ-வான இவர், டிரான்ஸ்ஃபர், டெண்டர் போன்ற வேலைகளைப் பார்த்துக்கொள்கிறார். ‘சங்கரைப் பார்த்தால் காரியம் நடக்கும்’ என்கிறார்கள் கோட்டைவாசிகள். இவர்கள் இருவரும் வளர்மதியின் இரு கண்கள்.
‘போட்டோவைத் தூக்கிப் பிடி!’
தான் இருக்கும் இடத்தில் ஜெயலலிதாவின் போட்டோ இருப்பது தெரியாமல், ஒரு புகைப்படம்கூட வெளிவந்துவிடக் கூடாது என்பதில் வளர்மதி ரொம்பவே உஷார். வழிபாடு என்றாலும், அரசு நிகழ்ச்சி என்றாலும் வளர்மதியின் அருகே ஜெயலலிதாவின் பெரிய படத்தை ஒருவர் தூக்கிப் பிடித்துக்கொண்டு நிற்பார். அதற்காகவே சிலரைப் பணியில் அமர்த்தியிருக்கிறார். மாணவர்களுக்கு வளர்மதி லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி. லேப்டாப் ஸ்க்ரீனிலேயே ஜெயலலிதாவின் படம் தெளிவாகத் தெரிந்த நிலையிலும், வழக்கம்போல் ஜெயலலிதாவின் படத்தை ஒருவர் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்தார். ஜெயலலிதா விடுதலைக்காக வளர்மதி நடத்திய ஆன்மிக வைபவங்களிலும் இந்த ‘போட்டோ செஷன்’ இடம்பெற்றது. எத்தனை முணுமுணுப்புகள் கிளம்பினாலும், முகம் சுளிக்காமல் ஜெயலலிதா போட்டோவை கோயில் கோயிலாகத் தூக்கிக்கொண்டு போனார் வளர்மதி!
வரலாறு முக்கியம் அமைச்சரே!
ஜெயலலிதாவின் தெய்வ பக்தியை, தனது அரசியல் முதலீடாகப் பயன்படுத்தித்தான் முன்னுக்கு வந்தார் பா.வளர்மதி. அதனாலேயே சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ஜெயலலிதா ஜாமீனில் இருந்த காலத்தில், வளர்மதியின் ஆன்மிக அவதாரம் உச்சத்துக்குப்போனது. திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் தங்கத்தேர் இழுத்தார். சென்னை நுங்கம்பாக்கம் ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டிச் சென்றார். வடபழநி முருகனுக்கு 1,067 லிட்டர் பாலாபிஷேகம், அசோக் நகர் பிடாரி ஸ்ரீ காளியம்மன் ஆலயத்துக்கு பசுவும் கன்றும் தானம், நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் சனிப் பெயர்ச்சி சிறப்பு யாகம், தேனாம்பேட்டை சாய்பாபா கோயிலில் 108 தேங்காய் உடைப்பு… என, பல ஆன்மிகக் கச்சேரிகளை நிகழ்த்தினார். அந்த ஆன்மிகக் கடமைகளுக்கு நடுவே கிடைக்கும் சைடு கேப்களில்தான் அமைச்சர் வேலை பார்த்தார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக