நன்றி: இணையப்பத்திரிக்கைகள்
’தமிழ்நாட்டையே குடிக்க வைத்துக் கெடுத்தார்’ எனக் குற்றம் சாட்டப்படும் மு.கருணாநிதி, ‘தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்’ எனப் பகிரங்கமாக அறிவித்துவிட்டார். தமிழ் மக்களின் நவீன ‘அம்மா’வாக அவதாரம் எடுத்திருக்கும் ஜெயலலிதா இதைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாமல் மௌனம்காப்பது மட்டும் அல்லாமல், இன்னும்… இன்னும் புதுப்புது மதுக் கடைகளைத் திறப்பதில் மும்முரமாக இருக்கிறார். அநேகமாக இவரும் தேர்தலுக்கு முன்னதாக இந்த அஸ்திரத்தை எடுக்கக்கூடும். கருணாநிதி அறிவித்திருப்பதும், ஜெயலலிதா அறிவிக்க இருப்பதும் தமிழ் மக்களுக்கு புதிது அல்ல. ‘பழைய மொந்தையில் புதிய கள்’ அவ்வளவுதான்!
அந்த மழை நாளில்…
தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்துசெய்யப்பட்ட நாள்: 30.8.1971
23 ஆண்டுகளாக அமலில் இருந்த மதுவிலக்கை ரத்து செய்தது அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி… அப்போது ஏக இந்தியாவில் தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் மட்டும்தான் மதுவிலக்கு அமலில் இருந்தது. ‘மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி இழப்பீடு வழங்குவோம்’ என அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்திருந்தார். ‘தமிழ்நாட்டுக்கு நிதி உதவி செய்யுங்கள்’ என கருணாநிதி கேட்டார். ‘இது மதுவிலக்கைப் புதிதாக அமல்படுத்தும் மாநிலங்களுக்குத்தான் தரப்படும்’ எனப் புதிய விளக்கம் சொன்னார் இந்திரா. காங்கிரஸை வீழ்த்திவிட்டுவந்த கருணாநிதிக்கு, நிதி கொடுக்க மறுக்கும் தந்திரமாக அந்தக் காரணத்தை இந்திரா கண்டுபிடித்தார். நிதி தராத மத்திய அரசுக்குப் பாடம் கற்பிக்கவே மதுவிலக்கு ரத்து என அறிவித்தார் கருணாநிதி.
கோவை தி.மு.க பொதுக்குழுவில் கருணாநிதிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு, மதுவிலக்கு ரத்து என அறிவிக்கப்பட்டது. மதுவின் தீமையை நாட்டு மக்களுக்கு விளக்க, அன்றைய தி.மு.க பொருளாளர் எம்.ஜி.ஆர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
சென்னை முழுக்கக் கடுமையான மழை. போக்குவரத்து இல்லை.
93 வயதான ராஜாஜி, மதுவுக்கு எதிரான போராட்டத்தை தனது வாழ்நாளில் இளமை முதல் நடத்திவந்த ராஜாஜி… தனது காரை எடுத்துக் கொண்டு முதலமைச்சர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார். ‘தமிழ்நாட்டில் மதுவிலக்கு தொடர வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். ‘வேறு வழி இல்லை; நிதி நெருக்கடியில் இருக்கிறது அரசு’ என விளக்கம் அளித்தார் கருணாநிதி. ‘மதுவிலக்கை 1937-ம் ஆண்டில் தான் அமல்படுத்தியபோது, நிதி நெருக்கடியைச் சமாளிக்கவே விற்பனை வரியை அமல்படுத்தினேன். அப்படி புது வழி இருக்கிறதா எனப் பாருங்கள்’ என்றார் ராஜாஜி; கருணாநிதி ஏற்கவில்லை. வீடு திரும்பினார் ராஜாஜி; மதுவிலக்கை வழியனுப்பினார் கருணாநிதி.
‘நம்பிக்கையுடன் அல்ல; மனச் சஞ்சலத்துடன்தான் வீடு திரும்பினேன்’ என ராஜாஜி அன்று சொன்னதாக அவரது பேரன் எழுதுகிறார். ராஜாஜி மனதை இது அதிகமாகப் பாதித்தது. ‘உயிர் வாழ வேண்டும் என்கிற மனோபலத்தை நீங்கள் இழந்துவிட்டீர்களா?’ என கல்கி சதாசிவம் கேட்டபோது, ‘இல்லை! ஆனால் ஒருவர் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு ஏதேனும் ஒரு முக்கியமான நோக்கம் இருக்க வேண்டும் அல்லவா?’ எனச் சொன்ன ராஜாஜி, நாடு முழுக்க சாராயக் கள்ளுக்கடைகளைப் பார்த்துவிட்டுத்தான் கண்ணை மூடினார்!
காரணம் கருணாநிதிதானா?
‘கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்?’ -தமிழ்நாடு சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கொடுத்த விளக்கம் இது. தமிழ்நாட்டைச் சுற்றி இருக்கிற மாநிலங்களில் எல்லாம் மது இருக்கும்போது, மது இல்லாமல் தமிழ்நாடு மட்டும் எப்படி இருக்க முடியும் என்பது அவரது கேள்வி. இதைச் சொல்லித்தான் மதுவிலக்கை ரத்துசெய்தார்; பழியைச் சுமக்கிறார்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை கருணாநிதி ரத்துசெய்தார் என்பது உண்மை. ஆனால், தமிழ்நாட்டுக்கு சாராயத்தையே அவர்தான் காட்டினார் என்பது உண்மையா..? இல்லை!
மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, பதிவுசெய்த குற்றங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் உண்மையை உணர முடியும். 1971-ம் ஆண்டில் மதுவிலக்கு ரத்துசெய்யபட்டதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே குடி, திருட்டுத்தனமாகப் பெருகிவிட்டது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் சிக்கி இருக்கிறார்கள்.
1961 – 1,12,889 பேர்
1962 – 1,29,977 பேர்
1963 – 1,23,006 பேர்
1964 – 1,37,714 பேர்
1965 – 1,65,052 பேர்
1966 – 1,89,548 பேர்
1967 – 1,90,713 பேர்
1968 – 2,53,607 பேர்
1969 – 3,06,555 பேர்
1970 – 3,72,472 பேர்
இப்படி ஒரு கணக்கை அன்று வெளியிட்டவர் எம்.ஜி.ஆர். ‘ஆனந்த விகடனில்’ அவர் எழுதி வந்த ‘நான் ஏன் பிறந்தேன்?’ தொடரில்தான் இதை எடுத்துப்போட்டார்.
குடி இருந்தது; குடிகாரர்களும் இருந்தார்கள். கள்ளச் சாராயமாக இருந்ததை நல்ல சாராயமாக மாற்றி, அதில் இருந்தும் அரசுக்கு நிதி திரட்டலாம் என்ற பாதையைக் கண்டுபிடித்த பாவச் செயலை கருணாநிதி செய்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம்!
திரும்பிய திசை எங்கும் மதுக் கடைகள்!
‘ஆண்டுக்கு 26 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்’ என்றார் முதலமைச்சர் கருணாநிதி, 1971-ம் ஆண்டில். தமிழ்நாடு முழுவதும் 7,395 கள்ளுக் கடைகளும் 3,512 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. ஒரு லிட்டர் கள் 1 ரூபாய், 1 லிட்டர் சாராயம் 10 ரூபாய். தாலுகாவுக்கு ஒரு சாராய வியாபாரி என, தமிழ்நாட்டில் 139 மொத்த வியாபாரிகள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து சில்லறை வியாபாரிகள் வாங்குவார்கள்.
அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,304 கள்ளுக் கடைகளும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 643 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. குறைவான கடைகள் இருந்தது சென்னையில்தான். 56 கள்ளுக் கடைகள், 52 சாராயக் கடைகள்.
அன்றைய தமிழ்நாடு அரசுக்கு வரிகள் மூலம் கிடைத்த வருவாய் 210 கோடி ரூபாய். போதையில் இருந்து மட்டும் கிடைத்தது
26 கோடி ரூபாய் என்றால், எவ்வளவு பெரிய தொகை எனப் பாருங்கள்.
ஆனாலும் கருணாநிதி, 1973-ம் ஆண்டில் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்தினார். மதுவிலக்கை அமல்படுத்துவதால் ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, ஆண்டு ஒன்றுக்கு 29 கோடி ரூபாய் தர வேண்டும் என, கருணாநிதி கோரிக்கை வைத்துப் பார்த்தார். பணம் வரவில்லை. மீண்டும் மதுவிலக்கை ரத்துசெய்தார். நிதியைக் காரணம் காட்டியே மதுவிலக்கைத் தவிர்ப்பதும் கொண்டுவருவதும் தொடங்கியது… தொடர்ந்தது. இதை பணமாகவே பார்த்தார்கள். குணமாக அன்றும் பார்க்கவில்லை; இன்றும் பார்க்கவில்லை.
எம்.ஷி.ஆரை வெளியேற்றிய மது!
மது… குடும்பங்களை அல்ல, கட்சிகளையும் உடைக்கும்!
மதுவிலக்கை ரத்துசெய்யும் அதிகாரத்தை கருணாநிதிக்கு வழங்கிய தி.மு.க பொதுக்குழு தீர்மானத்தை ஆதரித்தும், மதுவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் குழுவில் பொறுப்பேற்றும் இருந்த எம்.ஜி.ஆர்., இரண்டு ஆண்டுகள் கழித்து தி.மு.க-வில் இருந்து வெளியேற கண்டுபிடித்த காரணங்களில் மதுவும் ஒன்று. கணக்கு கேட்டு பேசிய கூட்டத்தில், மதுவைப் பற்றியும் கண்டித்தார். அவரை தி.மு.க-வில் இருந்து விலக்கும் கடிதத்தில் உள்ள காரணங்களில் இதுவும் ஒன்று. ‘பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியபோது அதற்கு ஆதரவாகப் பேசிவிட்டு, இப்போது வெளி மேடைகளில் விமர்சித்துப் பேசுவது கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவதாகும்’ என்றுதான் தி.மு.க-வின் அன்றைய பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் குறிப்பிட்டார்.
நாஞ்சில் மனோகரனும் முரசொலி மாறனும் எம்.ஜி.ஆரைத் தனிமையில் சந்தித்துக் கேட்டார்கள். மறுத்தார் எம்.ஜி.ஆர். நிரந்தரமாக நீக்கப்பட்டார். எனவே தி.மு.க உடைந்ததில் மதுவுக்கும் பங்கு உண்டு.
எம்.ஷி.ஆர் போட்ட பல்டிகள்!
சினிமாவில் அடித்த ஸ்டன்ட் களைவிட மதுவிலக்கில் எம்.ஜி.ஆர் அடித்த ஸ்டன்ட்கள்தான் அதிகம்!
‘என் இறுதி மூச்சு இருக்கும் வரை மதுவிலக்குக் கொள்கையை நான் நிறைவேற்றுவேன் என என்னைப் பெற்ற அன்னை மீது உறுதி எடுத்துக் கொள்கிறேன்’ (2.12.1979 ‘அண்ணா’ நாளிதழ்) எனச் சொன்ன அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இரண்டு ஆண்டுகள்கூட அதில் உறுதியாக இருக்க முடியவில்லை.
1.5.1981-ல் தமிழ்நாட்டில் சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் உற்பத்திசெய்கிற தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இல்லை. நான்கு தனி நபர்களுக்கும் கூட்டுறவுத் துறை நிறுவனத்துக்கும் அரசு அனுமதி அளித்தது. சாராயம், கோடிகளைக் கொட்டும் தொழிலாக மாறியது அப்போதுதான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி, இந்தச் சாராய அதிபர்களுக்கு ஆண்டுக்கு 36 கோடி ரூபாய் போகிறது எனப் புள்ளிவிவரங்களை அள்ளி வீசினார். ‘இவை எல்லாம் அந்த ஒன்பது குடும்பங்களுக்குப் போகிறதா அல்லது இவை எல்லாம் பினாமியாக ஒரே குடும்பத்துக்குப் போய்ச் சேருகிறதா?’ எனக் கேள்வியையும் போட்டார்.
மதுவிலக்குக் கொள்கையில் அளவுக்கு அதிகமாக ஐந்து அவசரச் சட்டங்களைப் போட்டதும் எம்.ஜி.ஆர் அரசுதான். ‘மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் ஒருமுறை பிடிபட்டால், 3 ஆண்டுகள் சிறை, இரண்டாவது முறை பிடிபட்டால், 7 ஆண்டுகள் சிறை, மூன்றாவது முறை பிடிபட்டால், நாடு கடத்தப்படுவார்கள்’ என்பதும் ஓர் அவசரச் சட்டம்.
‘சர்வாதிகார நாட்டில்தான் இப்படி ஓர் அவசரச் சட்டம் இருக்கும்’ என கருணாநிதி எதிர்க்கும் அளவுக்குப் போனார் எம்.ஜி.ஆர்.
தாய்மார்களின் கண்ணீரைத் துடைக்க மதுவிலக்கு என்றும், கள்ளச் சாராயத்தால் காசும் உடல்நலமும் பறிபோகிறது எனத் தாய்மார்கள் கண்ணீர் விடுவதால் மதுவிலக்கு ரத்து என்றும், இரண்டுக்கும் தாய்மார்களின் கண்ணீரையே காரணங்களாகக் காட்டித் தப்பிக்க முயற்சித்தார் எம்.ஜி.ஆர்.
கருணாநிதி சொன்னபடி நடந்த ஜெ !
மதுவிற்பனை மூலமாக வருமானம் அதிகமாக வருவதைக் கவனித்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி, மது விற்பனையை அரசே ஏற்று நடத்தினால் நல்ல லாபம் வரும் என யோசனையும் சொன்னார். (தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14.3.1983 அன்று பேசியது) ‘இப்போது அரசே எடுத்து நடத்துவதற்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை’ என லைசென்ஸ் வழங்கினார் கருணாநிதி. அவர் 1983-ம் ஆண்டில் சொன்னதை 2003-ம் ஆண்டில் அமல்படுத்தினார் ஜெயலலிதா.
நல்ல கல்வியை தனியாருக்கும், நல்ல மருத்துவத்தை தனியாருக்கும் தாரைவார்த்துவிட்டு நல்ல மதுவை அரசு வழங்கும் நெறிபிறழ்ந்த செய்கையை ‘அம்மா’ தொடங்கிவைத்தார். மறைவான இடங்களில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனியார் கடை நடத்திக்கொண்டிருந்த நிலைமை மாறி, அரசு அதிகாரிகள் கேட்பதால் பள்ளிகளுக்குப் பக்கத்தில், குடியிருப்புகளுக்கு உள்ளே, கோயிலுக்குப் போகும் வழியில் எல்லாம் கடைகள் திறக்கப்பட்டன. தம்பி தவறு செய்தால் தட்டிக்கேட்டார்கள். ‘அம்மா’வே செய்தால் யாரால் கேட்க முடியும்?
குடியைக் கட்டாயப்படுத்திய அரசு!
இன்று சாராய வருமானம் 30 ஆயிரம் கோடி. இதை 32 ஆயிரம் கோடியாக எப்படி ஆக்குவது? அரசின் கவலை இதுதான். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் அதிகப்படுத்திக் காட்டியாக வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் இலக்கு நிர்ணயித்துவிட்டார்கள். அந்த அளவுக்கு விற்காவிட்டால், விற்பனையாளர்களுக்கு மெமோ தரப்படும். வேலை நீக்கமும் உண்டு.
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் குடிக்க வேண்டும் என அவசரச் சட்டம் போடுவதற்கும், இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்த நிதியை வைத்துத்தான் அரசு நிர்வாகம் செயல்படுவதுபோல போலி பிரமையை உருவாக்குகிறார்கள். இது உண்மை அல்ல. நாய் விற்ற காசு குரைக்காது. ஆனால், சாராயம் விற்ற காசு கொல்லும். தமிழ்நாட்டைக் கொன்றும்வருகிறது.
அதிபர்களை அதிகப்படுத்திய மு.க.!
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது டாஸ்மாக் தொடங்கப்பட்டது. பாலாஜி டிஸ்டீலரீஸ், எம்.பி.டிஸ்டீலரீஸ், மோகன் புரூவரீஸ் அண்ட் டிஸ்டீலரீஸ், சிவாஸ் டிஸ்டீலரீஸ், சாபில் டிஸ்டீலரீஸ் ஆகிய ஐந்து நிறுவனங்களுக்குத்தான் ஆரம்பத்தில் அனுமதி கொடுத்தார்கள். மற்ற நிறுவனங்கள் இதற்குள் நுழைய பல்வேறு தடைகள் இருந்தன. இதை உடைத்து 2001-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மிடாஸ் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தார். அதன் பிறகுதான் டாஸ்மாக் மூலமே மதுபானக் கடைகளை நடத்தவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். எதிர்க்கட்சியாக இருந்தபோது இதைக் கண்டித்த கருணாநிதி, 2006-ம் ஆண்டில், தான் ஆட்சிக்கு வந்ததும் மது விற்பனையை அரசு செய்யும் முடிவைத் தொடர்ந்தார்.
இதைவிட இன்னொரு சாதனையையும் செய்தார் கருணாநிதி. எஸ்.என்.ஜே.டிஸ்டீலரீஸ், கால்ஸ் டிஸ்டீலரீஸ், எலைட் டிஸ்டீலரீஸ், இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் அண்டு ஒயின் (பி) லிட்., கிங் டிஸ்டீலரீஸ் போன்ற புதிய சாராய ஆலைகளை அனுமதித்தார் கருணாநிதி. இதன் பொறுப்பாளர்கள் அவரோடு பல்வேறு மேடைகளில் பங்கேற்றார்கள். கருணாநிதி ஆட்சியில் மிடாஸ் ஆலையில் இருந்து மது தடை இல்லாமல் வாங்கப்படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதியின் நெருக்கங்களின் ஆலையில் இருந்து, மது தடை இல்லாமல் வாங்கப்படுகிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கோபத்தால் ஒதுக்குபவர்கள், மது ஆலைகளை லாபத்தால் அரவணைக்கிறார்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக