வெள்ளி, ஆகஸ்ட் 07, 2015

நீங்கள் வாங்குவது ஆர்கானிக் தானா?

நன்றி: இணையப்பத்திரிக்கைகள்

தி.நகரில் உள்ள ஒரு பெரிய கடையில், கருப்பட்டிக் காபிக்கு மிகப் பெரிய க்யூ. விலை அதிகம் என்றாலும், பலரும் காத்திருந்து அதை வாங்கிக் குடித்தனர். ஆர்கானிக் பொருட்களைப் பயன்படுத்துவது ஒரு ஸ்டேட்டஸ் என்ற அளவுக்கு வந்துவிட்டதாலோ என்னவோ, முன்பு கவனிப்பாரின்றிக் கிடந்த கருப்பட்டி விலைகூட பல மடங்கு ஏறிவிட்டது.
பாலீஷ் செய்யப்பட்ட அரிசி, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள், ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் என கவனத்தைச் செலுத்திய நம் மக்கள், இப்போது கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள், பனை வெல்லம், கருப்பட்டி, பூச்சிக்கொல்லி ரசாயனம் கலக்காத ஆர்கானிக் உணவுப் பொருள்கள் என்று தேடித்தேடி வாங்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், தெரு முனைக் கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை ஆர்கானிக், பாரம்பரியப் பொருட்களுக்கு மவுசு அதிகரிக்கிறது.
இப்படி, தெருவுக்குத் தெரு ஆர்கானிக் பொருட்கள் விற்பனை நடப்பதால், எது உண்மையான ஆர்கானிக் என்றே தெரிவதுஇல்லை. ஆர்கானிக் என்றால், செழுமையே இல்லாமல் இருக்கும் என்ற எண்ணமும் உள்ளது. ரசாயனம் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் காய்கறிகள் என்பதால் விலையும் மிக அதிகம் என்று சொல்லி அதிக விலைக்கு விற்கின்றனர். இந்த கடைகளில் விற்கப்படுவது உண்மையான ஆர்கானிக் பொருட்களா, ஆர்கானிக் பொருட்களை வாங்குவது எப்படி என்று பலருக்கும் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.
ஆர்கானிக் பொருட்களை கண்டறிவது எப்படி?
வடிவம்: இயற்கையாக இருக்கும் எதுவும் ஒரே அளவில், ஒரே நிறத்தில் இருக்காது. வடிவத்தில் மாறுபடும். சாக்கில் போட்டு கொண்டுவரும்போது, இடிபட்டு, நசுங்கி, அழுக்காகத்தான் வரும். காய்கறிகள், பறித்து ஒரு நாளுக்குள் சிறிது சுருங்கித்தான் போகும். வெண்டைக்காய், கத்திரிக்காயில் 20 சதவிகிதம் பூச்சிகள் இருக்கும். 10 மாம்பழங்கள் வாங்கினால், இரண்டில், வண்டு இருக்கத்தான் செய்யும். எனவே, இத்தகைய பொருட்களை பார்த்து வாங்கிப் பயன்படுத்தலாம். பூச்சி, புழு எதுவும் இல்லை என்றால், அதில் பூச்சி மருந்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பூச்சி, புழுக்களே பயந்து ஒதுங்கிய காய்கறிகளின் அழகைப் பார்த்து வாங்குவது ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
சுவை: பாலிஷ் செய்யப்பட்ட அரிசியால் செய்யப்பட்ட சாதத்தை மறுநாள் வைத்தால், நொதிந்துபோய், ஒருமாதிரியான வாடை  வரும். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசியில் சமைத்தால், சீக்கிரத்தில் கெடாது. பருப்பில் செய்யும் குழம்பு மணமும் சுவையும் வித்தியாசமாக இருக்கும். எண்ணெய், உப்பு, வெல்லத்தில்கூட வித்தியாசம் தெரியும். ஆர்கானிக் உணவைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களால் இதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். பழைய சோற்றை மறுநாள் சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். எனவே, ஆர்கானிக் என்று சொல்லும் பொருளை ஒருமுறை வாங்கி சமைத்துப் பார்த்து, ருசியின் வேறுபாடு தெரிந்தால் மட்டும் வாங்கலாம். நிறைய  சமையல் நிபுணர்கள் ஆர்கானிக் பொருட்கள் மூலம் சமைக்கப்படும் உணவின் சுவை, நிறம், ஃபிளேவர் நன்றாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். எனவே, சமைத்துப் பார்க்கும்போதுதான் அதன் வித்தியாசத்தை உணர முடியும்.
பழங்கள், காய்கறிகள், கீரைகள் பளிச் நிறத்துடன் இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. அப்படி நம்மை வசீகரிக்கத்தான் ரசாயன உரம் கலக்கப்படுகிறது.
ஆர்கானிக் காய்கறி, பழங்கள் ஒரு சில நாட்கள் மட்டும்தான் வைத்திருக்க முடியும். இதுவே பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள், வெந்தயம், மற்றும் பழங்கள் என 70 சதவிகிதம் காய்கறி, பழங்களை நாமே வீட்டில் பயிரிட முடியும். பயிரிட்ட 21 நாட்களில் கீரைகளைப் பறித்துக் கொள்ளலாம். தோட்டம் போட விரும்புபவர்களுக்கு விதைகளையும் ஆலோசனைகளையும் தமிழக அரசு தோட்டக்கலைத் துறையே தருகிறது.
ஆர்கானிக் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகளைத் தேடிச் சென்று மொத்தமாக வாங்கலாம். தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இயற்கை விவசாயிகளின் பட்டியலை சேகரித்து அவர்களிடம் வாங்கலாம். இயற்கை முறையில் விளைவிக்கும் விவசாயிகள், உள்ளூர்ச் சந்தை மற்றும் விவசாயிகள் சந்தைக்கு சென்று விற்பனை செய்கின்றனர். இவர்களைக் கண்டறிந்து பொருட்களை வாங்கலாம். கிராமங்களில் நடக்கும் வாரச்சந்தைகளுக்குச் சென்றாலே, இயற்கை விவசாயப் பொருட்களை வாங்க முடியும்.
இயற்கையோடும் இயற்கை விவசாயத்தோடும் இணைவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வு வசப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக