வெள்ளி, ஆகஸ்ட் 07, 2015

மந்திரி தந்திரி – 14


அந்த ஆட்டோ சென்று நின்ற இடத்தில் கட்சிக்கொடி தோரணங்கள், மேடை, மைக்செட்… என அ.தி.மு.க பொதுக்கூட்டம் களைகட்டியிருந்தது. வட்டச் செயலாளர் தொடங்கி மாவட்டம் வரை பேசி முடித்த பிறகு, மைக் முன்பாக நாற்காலி ஒன்றைப் போட்டார்கள். அதில் அந்தச் சிறுமியை நிறுத்தினார்கள். மைக்கை தன் உயரத்துக்குச் சரிசெய்துகொண்ட அந்தச் சிறுமி, அதன் பிறகு பேசியது பக்கா அரசியல். அதிலும் தன் பேச்சில்
தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான கருணாநிதியைச் சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்தஅந்தச் சிறுமிக்கு வயது 15. எங்கு தி.மு.க பொதுக்கூட்டம் நடக்கிறதோ, அங்கு மறுநாள் அந்தச் சிறுமியை வைத்துப் பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தது அ.தி.மு.க. எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து, அதை ராகம் போட்டு முழங்கி, ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. 1970-களில் மதுரை சுற்றுவட்டாரத்தில் அ.தி.மு.க மேடைகளில் பொறிபறக்க முழங்கிய அந்தச் சிறுமிதான், இன்று சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் பா.வளர்மதி!
மதுரை சூறாவளி!
வளர்மதிக்குப் பூர்வீகம், மதுரை அச்சம்பத்து. பிறந்து, வளர்ந்து படித்தது எல்லாம் மதுரையில். தி.மு.க உறுப்பினராக இருந்த வளர்மதியின் அப்பா, எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது அ.தி.மு.க-வில் ஐக்கியமானார். அப்போது பள்ளி மாணவியான அவரது மகள் வளர்மதி, பேச்சுப் போட்டிகளில் பரிசுகளைக் குவித்துக் கொண்டிருந்தாள். அவர், மகளின் திறமையை கட்சி மேடையில் காட்சியாக்கினார். அரசியல் மேடைகளில் ஆரவார வரவேற்பு. 10-ம் வகுப்புக்குப் பிறகு வளர்மதி படிக்கவில்லை.
கட்சி தொடங்கிய பிறகு, 1974-ம் ஆண்டு சென்னை திருவான்மியூரில் அ.தி.மு.க-வின் மாநாட்டை நடத்தினார் எம்.ஜி.ஆர். அந்த மாநாட்டில் எம்.ஜி.ஆர் முன்பு முழங்கினார் வளர்மதி. இறுதியாக பேசிய எம்.ஜி.ஆர்., ‘மதுரை வளர்மதி, திருப்பூர் மணிமாறன் ஆகியோரின் பேச்சுக்கள் என்னை ரொம்பவே கவர்ந்தன. இவர்களை கழகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார். அவரது அந்த உத்தரவு, உடனே அமலுக்கு வந்தது. அ.தி.மு.க பொதுக்கூட்டங்களில் பேசும் வாய்ப்பு வளர்மதிக்குக் குவிந்தது. தமிழ்நாடு முழுக்க அ.தி.மு.க மேடைகளில் அனல் கிளப்பினார் வளர்மதி. அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கோலம் போடும் அளவுக்கு ஒருகட்டத்தில் உயர்ந்தார்.
மதுரையில் இருந்து சென்னைக்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்த வளர்மதியை, சென்னை அ.தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகளான கு.க.செல்வம், ‘மயிலை’ ஜெகன், ‘தி.நகர்’ சாமிநாதன் ஆகியோர் கட்சியில் அடுத்தடுத்த படிநிலைகளுக்கு அழைத்துச் சென்றனர். வாய்ப்புகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட வளர்மதி, அடுத்தடுத்து க.ராசாராம், ஆர்.எம்.வீரப்பன் என அப்போதைய அ.தி.மு.க ஜாம்பவான்களின் ‘குட்புக்’கில் இடம்பிடித்தார். ஒருகட்டத்தில் ஆர்.எம்.வீரப்பனின் தீவிர ஆதரவாளராக மாறி, அவரைத் தனது அரசியல் குருவாகவே ஏற்றுக்கொண்டார். கட்சிக்குள் விறுவிறு வளர்ச்சி இருந்தாலும், ‘நட்சத்திர மேடைப் பேச்சாளர்’ என்ற அந்தஸ்தைத் தாண்டி ‘மக்கள் பிரதிநிதி’ என அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியவில்லை வளர்மதியால். காரணம்… அவரது இளம் வயது. அதனாலேயே சீனியர்களைத் தாண்டி அவருக்குத் தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
எம்.ஷி.ஆருக்குத் தெரியாமலேயே எம்.எல்.ஏ.!
உடல்நலக் குறைவு காரணமாக எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவச் சிகிச்சையில் இருந்த 1984-ம் ஆண்டு, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆச்சர்ய அதிசயமாக, தொகுதிக்கு மட்டும் அல்லாமல், சென்னைக்கே சம்பந்தம் இல்லாத வளர்மதி, மயிலாப்பூர் அ.தி.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்டார். எம்.ஜி.ஆர் சிகிச்சையில் இருந்ததால், வேட்பாளர்கள் தேர்வை ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட சீனியர்களே பார்த்துக்கொண்டனர். அதனால் 27 வயதிலேயே பேச்சாளர் வளர்மதிக்கு அடித்தது அதிர்ஷ்டம். தமிழ்நாட்டிலேயே இல்லாமல், எம்.ஜி.ஆர் ஜெயித்த அந்தத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்க, வளர்மதியும் ‘மக்கள் பிரதிநிதி’ ஆனார். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து எம்.ஜி.ஆர் திரும்பிவந்த பிறகுதான், அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. அப்போது அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் எம்.ஜி.ஆரைப் பார்க்க ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றார்கள். ‘என்ன… நீயும் இவங்களோடு வந்திருக்க?’ என அங்கே வளர்மதியைப் பார்த்து எம்.ஜி.ஆர் கேட்க, ‘அண்ணே… நானும் எம்.எல்.ஏ ஆயிட்டேண்ணே!’ என வளர்மதி சொன்னதை ‘ரியாக்ஷன்’ காட்டாமல் ஏற்றுக்கொண்டு சிரித்தாராம் எம்.ஜி.ஆர். அப்படி எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்தான் பா.வளர்மதி.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ‘ஜா’, ‘ஜெ’ என அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. ‘ஜா’ அணியின் ஆணிவேர் ஆர்.எம்.வீரப்பன். அவரது சிஷ்யையான வளர்மதி எங்கே இருப்பார்? ‘ஜா’ அணியில்தானே! 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ‘ஜா’ அணியை வெற்றிபெற வைக்க, தமிழ்நாடு முழுக்கப் பிரசாரம் போனார் வளர்மதி. அப்போது ‘ஜா’ அணியில் இருந்த காளிமுத்து, ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அவர் அப்படிப் பேசியதை, தமிழ்நாடு முழுக்கச் சென்று வழிமொழிந்ததில் வளர்மதிக்கு முக்கியப் பங்கு உண்டு. அதுவும் தி.நகர் பஸ் ஸ்டாண்டு அருகே வளர்மதி பேசிய பேச்சு நாராசம். ‘ஜெயலலிதா எப்போதும் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக முடியாது’ என அப்போது ஜெயலலிதாவை ஏகத்துக்கும் விமர்சித்த அதே வளர்மதிதான் இப்போது, ‘இதயதெய்வம் அம்மாதான்… மற்றவர்கள் எல்லாம் சும்மாதான்…’ என லாலி பாடுகிறார்.
ஆன்மிக வியூகம்!
1991-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தபோதும், வளர்மதிக்கு ஏறுமுகம் இல்லை. ‘ஜெ அணி’யிலேயே இருந்து அ.தி.மு.க-வில் தொடர்ந்த புலவர் இந்திரகுமாரி, அமைச்சர் செல்வாக்கோடு கட்சியில் வலம்வந்துகொண்டிருந்தார். அவரை மீறி வளர்மதியால் வளர முடியவில்லை. ஜெயலலிதாவின் அபிமானம் பெற எப்படி எப்படியோ முட்டி மோதிப்பார்த்த வளர்மதி, இறுதியில் கையில் எடுத்த அஸ்திரம்தான் ஆன்மிகம். திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயிலுக்கு வாராவாரம் சென்று வழிபட்டு, கோயில் பிரசாதத்தை கார்டனுக்குக் கொண்டுவந்து கொடுப்பார். இப்படி பல கோயில் பிரசாதங்களைக் கொண்டுபோய்க் கொடுத்தபோதுதான் சசிகலாவுடன் நெருக்கமானார். அதன் பிறகே கட்சியில் வளர்மதிக்கு லிஃப்ட் கிடைத்தது.
தேனாம்பேட்டை தாமஸ் ரோட்டில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் 180 சதுரஅடி வீட்டில் ஒருகாலத்தில் வாடகைக்கு இருந்த வளர்மதி, அதே குடிசை மாற்று வாரியத்தின் தலைவர் ஆனார்.
1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சியில் இந்திரகுமாரியின் செல்வாக்கு சரிய… அந்த இடத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் வளர்மதி. கட்சி அலுவலகத்துக்கு ஜெயலலிதா வரும்போதெல்லாம், வாசலில் தலைவியின் கண்ணில் படும்படி நிற்பார். ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சி மற்றும் கூட்டங்களில் தன் பேச்சு தவறாமல் இடம்பெறும்படி பார்த்துக்கொண்டார். அப்படி கூட்டங்களில் பேசும்போது, கருணாநிதியை சகட்டுமேனிக்குத் திட்டித்தீர்ப்பார் வளர்மதி. அதை ஜெயலலிதா வெகுவாக ரசித்தார். அ.தி.மு.க பொதுக்குழுக்களில் யார் பேச வேண்டும் என்பதை ஜெயலலிதாதான் முடிவுசெய்வார். அந்தப் பட்டியலில் வளர்மதி பெயரை ஜெயலலிதா தவறாமல் ‘டிக்’ அடிக்கத் தொடங்கினார். ஒருமுறை பொதுக்குழு மேடையிலேயே, ‘சசிகலாவுக்குக் கட்சியில் பதவி தரவேண்டும்’ எனச் சொல்லி சசிகலாவிடமும் ‘ஸ்கோர்’ வாங்கினார். தலைமைக் கழகப் பேச்சாளர், மகளிர் அணிச் செயலாளர், இலக்கிய அணிச் செயலாளர் எனப் படிப்படியாக முன்னேறினார். சசிகலா கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருக்கு அருகில் வளர்மதிதான் இருப்பார். கட்சியில் பெருகிய இந்தச் செல்வாக்கு, 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வளர்மதிக்கு ஸீட் கிடைக்கச் செய்தது. அதில் ஓர் ஆச்சர்யம்… வளர்மதியின் ‘அரசியல் குரு’ ஆர்.எம்.வீரப்பனுக்கு எதிராகவே ஆலந்தூரில் நிறுத்தப்பட்டார்.
அசரவில்லை வளர்மதி. குருவை வீழ்த்தி இரண்டாவது முறை எம்.எல்.ஏ. ஆனவர், முதல்முறையாக அமைச்சரும் ஆனார். அடுத்த ஐந்து வருடங்கள் ‘தாயே’ எனத் தலைவியைப் பாராட்டியும் ‘****’ என தி.மு.க உறுப்பினர்களைத் திட்டியும், அரசியல் பண்ணிக்கொண்டிருந்தார். 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோற்றவர், 2011-ம் ஆண்டு தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் நின்று வென்றார். ஆனால், அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. சசிகலாவின் நெருங்கிய உறவினர் ஒருவரைச் சந்தித்தார். சில மாதங்களுக்குப் பிறகு செல்வி ராமஜெயத்தின் பதவி பறிபோக, அந்த இடத்தை நிரப்பினார் வளர்மதி. அதன் பிறகான அமைச்சரவை மாற்றங்களில் இருந்து தப்பித்துக்கொண்டே இருக்கிறார் பா.வளர்மதி.
‘மக்கள்’ அமைச்சர்!
அரசியலில் எப்படியோ ஆன்மிகத்தில் வளர்மதி ‘மக்கள் அமைச்சர்’தான். மந்திரி என்கிற பந்தா இல்லாமல் கோயில்களுக்குச் சென்று வருவார். மக்களோடு மக்களாக நின்று தரிசனம் செய்வார். வீட்டுக்கு அருகே இருக்கும் சிவன் கோயிலுக்கு தவறாமல் செல்வார். அப்போது யாரிடமும் பேச மாட்டார். ரோபோ போல சென்றுவிட்டு வருவார். தினம் சிவனுக்கு 100 ரூபாய் நோட்டு தட்டில் விழும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சனிக்கிழமைகளில் வருகை தவறாது. அப்படி ஒரு சமயம் போனபோது பார்த்தசாரதியை முன்னே நின்று தரிசித்தார். அப்போது, ‘உயரமானவங்க எல்லாம் முன்னாடி போய் நின்னுக்கிட்டா நாங்க எப்படி சாமியைப் பார்க்கிறது? கொஞ்சம் பின்னாடி வாங்க..’ என்றார் பக்தர். வளர்மதி திரும்பிப் பார்த்தபோதுதான் பக்தருக்கு ‘மந்திரி’ என்பது தெரிந்தது. பக்தர் அமைதியானாலும், வளர்மதி அவருக்குப் பின்னால் போய் நின்றுகொண்டு சாமியை வணங்கிச் சென்றார்.
துறையில் சாதித்தது என்ன?
மாற்றுத்திறனாளிகளின் நலனும் வளர்மதி வசம்தான் இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் இந்த ஆட்சியில் நடத்தப்பட்ட விதம் கடும் கண்டத்தை உண்டாக்கியது. ‘பார்வையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்கள் சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும். நிவாரண உதவித் தொகையை உயர்த்த வேண்டும்’ என ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளிகள் நடத்திய போராட்டத்தை, துளிக் கரிசனம்கூட இல்லாமல், இரும்புக் கரம் கொண்டு அடக்கியது அரசு. நாள்தோறும் உண்ணாவிரதம், சாலை மறியல் எனப் பல கட்டப் போராட்டங்களை மாற்றுத்திறனாளிகள் அரங்கேற்றியபோது, மனிதநேயம்கூட இல்லாமல் நடந்துகொண்டனர் போலீஸார். போராட்டத்தில் பங்கேற்ற பல மாற்றுத்திறனாளிகளை, இரவு நேரங்களில் சென்னைக்கு வெளியே அழைத்துச்சென்று விடுவது, சுடுகாட்டில் இறக்கிவிடுவது என, ‘துறை’யின் உத்தரவை செவ்வனே நிறைவேற்றியது காவல் துறை. ஜெயலலிதாவே விவகாரத்தில் தலையிட்டு ‘வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்’ எனச் சொன்னதால், அப்போது போராட்டத்தைக்
கைவிட்டனர் மாற்றுத்திறனாளிகள். ஆனால், அந்த வாக்குறுதிகள் காற்றோடு போனதுதான் மிச்சம்!
முட்டை முறைகேடுகள்!
தமிழ்நாட்டிலேயே மிக அதிகபட்சப் பயனாளிகளாக 68 லட்சம் பேர் பயனடையும் திட்டம் ‘சத்துணவுத் திட்டம்’. அந்தத் திட்டத்தின் கீழ் முட்டை வழங்க 1989-ம் ஆண்டு கருணாநிதி உத்தரவிட்டார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முட்டை எனத் தொடங்கிய திட்டத்தில் இப்போது, வாரத்துக்கு ஐந்து முட்டைகள் வழங்கப்படுகின்றன. அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் என 97,058 மையங்களில் 68.54 லட்சம் பேருக்கு சத்துணவு வழங்கப்பட்டுவருகிறது. கலப்படம் இல்லாத உணவான முட்டை கொள்முதலில் ஏகப்பட்ட கோல்மால்கள் அரங்கேறின. வாரத்துக்கு மூன்றரைக் கோடி முட்டைகளைக் கொள்முதல் செய்கிறது அரசு. வழக்கமான மாவட்ட அளவிலான டெண்டர் மூலம் நடந்துவந்த முட்டை கொள்முதல் நிறுத்தப்பட்டு, மாநில அளவில் மாற்றப்பட்டன.  ‘ஏழு வருடங்கள் முட்டை அல்லது இதர உணவுப் பொருள் வழங்குவதில் அனுபவம் இருக்க வேண்டும். உணவுப் பொருட்கள் வழங்குவதில் அரசிடம் 90 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்திருக்க வேண்டும்’ என, புதுப்புது விதிமுறைகளை உண்டாக்கினர். இதனால் பல முட்டை உற்பத்தி யாளர்கள் டெண்டரில் கலந்துகொள்ள முடியாத நெருக்கடி, செயற்கையாக உருவாக்கப்பட்டது. ‘குறிப்பிட்ட சில நிறுவனங்கள் பயனடையும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடு இது’ எனப் புகார் எழுந்தது. இதனால் மாவட்ட அளவில் இயங்கிவந்த பல சிறிய கோழிப் பண்ணை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு முட்டையும் 46 கிராம் எடை இருக்க வேண்டும். கெட்டுப்போன முட்டைகளை வழங்குவதைத் தடுக்க, வாரத்துக்கு மூன்று முறை முட்டைகள் சப்ளை செய்ய வேண்டும். முட்டையின் மீது ‘தமிழ்நாடு அரசுக்காக’ என வைக்கப்படும் சீல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் இருக்க வேண்டும் என, முட்டை கொள்முதலில் நிறைய விதிமுறைகள் உண்டு. ஆனால், அவை முறையாகக் கடைப்பிடிக்கப்படுவது இல்லை. குறைவான எடையில் தரம் இல்லாத முட்டைகள் விநியோகிக்கப்படுவதாகப் புகார்கள் குவிகின்றன. சராசரி மார்க்கெட் விலையைவிட சத்துணவு முட்டையின் விலை அதிகம், விலை நிர்ணயத்தில் முரண்பாடுகள், முட்டை உற்பத்தியாளர்களிடம் அரசு நேரடியாகக் கொள்முதல் செய்வது இல்லை, கொள்முதல் விதிமுறை மீறல்கள்… என முட்டை முறைகேடுகளைப் பட்டியலிட்டன எதிர்க்கட்சிகள். ‘கான்ட்ராக்டருக்கு அரசு தரும் தொகையும், கான்ட்ராக்டர் முட்டை உற்பத்தியாளருக்குத் தரும் பணமும் மாறுபட்டிருக்கிறது. சில்லறை விற்பனையில் குறைந்த விலைக்கு முட்டை கிடைக்கும்போது அதிக விலைக்கு டெண்டர் விடுவது ஏன்? முட்டையின் சில்லறை விலையைவிட சத்துணவுத் திட்டத்துக்கு சப்ளையாகும் முட்டை விலை மிக அதிகமாக இருப்பதால், அரசுக்கு ஆண்டுக்கு 80 கோடி ரூபாய் வரை நிதி இழப்பு ஏற்படுகிறது. எடை குறைவான முட்டைகளை வெளி மார்க்கெட்டில் விற்க முடியாது என்பதால், அதைச் சத்துணவு திட்டத்துக்குத் தள்ளிவிடும் கொடுமையும் நடக்கிறது. மாவட்டங்களில் வட்டார வளர்ச்சி அலுவலகக் கிடங்குகளுக்கு முட்டைகள் அனுப்பப்பட்டு, அங்கு இருந்து சத்துணவு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இதற்கு போக்குவரத்துச் செலவாக ஒரு முட்டைக்கு 8 பைசா செலவழிக்கப்படுகிறது. மாவட்ட அளவில் டெண்டர் வழங்கப்பட்டபோது, இந்தப் போக்குவரத்துச் செலவு குறைவுதான். முட்டைகளை ஒப்பந்தப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்யாமல், ஐந்து நாட்களுக்கு உரிய முட்டைகளை ஒரே நேரத்தில் சப்ளை செய்வதால், ஒப்பந்ததாரருக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம் அதிகமாகக் கிடைக்கிறது. கெட்டிக்காரத்தனமாக சத்துணவு அமைப்பாளர்களிடம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை முட்டைகளை சப்ளை செய்வதாகக் கையெழுத்து மட்டும் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த முறைகேட்டில் ஒப்பந்ததாரர்கள், அதிகமான கமிஷன் பார்க்கிறார்கள்’ என முறைகேடுகளை அடுக்கின எதிர்க்கட்சிகள். ஆனால் அரசோ, ‘முட்டை கொள்முதல் செய்வது அரசின் கொள்கை முடிவு. முந்தைய முறையில் நிறையத் தவறுகள் நடந்தன. அவற்றைக் களைய வேண்டும் என்பதற்காகத்தான், புதிய முறை கொண்டுவரப்பட்டது. முட்டை கொள்முதலில் அரசுக்கு இழப்பு இல்லை’ என்கிறது.
இத்தனை பிரச்னைகளுக்கு நடுவில் அமைச்சர் பா.வளர்மதி என்னதான் செய்துகொண்டிருக்கிறார்?
‘கிழிந்த ஜிப்பா, உடைந்த தகர டப்பாவுடன் சென்னைக்கு வந்தவர் கருணாநிதி’ என சட்டமன்றத்தில் முழங்கி, தன் தலைவியை மனம் குளிரவைப்பார். ‘அன்னக் காவடியாக வந்தவரே… மஸ்டர் ரோல், பூச்சி மருந்து, கோதுமை பேரம், வீராணம் குழாய், ஸ்பெக்ட்ரம்… என ஊழல்களால் கோடிகளை உலக அளவு குவித்தவரே… ஆண்டியாகக் களம் புகுந்து, அம்பானியை வென்றவரே! ஆண்டிமுத்து ராசாவைத் தூண்டிவிட்டு அலைவரிசைக் கொள்ளையால் ஆசியப் பணக்காரர் ஆனவரே… நாஞ்சிலார் சொன்ன கருவின் குற்றமே… நாளை உனக்குக் காத்திருக்கு ஸ்பெக்ட்ரமே!’ எனக் கவிதை எழுதுவார். அமைச்சர் பதவிக்கான செயல்பாடுகளைவிட, அமைச்சர் பதவி முக்கியம் அல்லவா!
யார் பெஸ்ட்… போட்டி!
வளர்மதிக்கும் மற்றோர் அமைச்சர் கோகுல இந்திராவுக்கும் இடையே ஜெயலலிதாவிடம் ‘ஷொட்டு’ வாங்க அதகள அக்கப்போரே நடக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றபோது தேம்பித் தேம்பி அழுவதில் ‘யார் பெஸ்ட்?’ என்பதில் தொடங்கி, ஜெயலலிதாவின் விடுதலைக்காக யாகம், பூஜைகள் நடத்துவது வரை ஒருவரை ஒருவர் ‘பீட்’ செய்யப் பார்க்கிறார்கள். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானபோது, அழுதுகொண்டே லட்டு சாப்பிட்டார் வளர்மதி. சளைக்காமல் கோகுல இந்திராவும் மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் நடத்திவந்த ‘சமநீதி’ பத்திரிகையில் வேலை பார்த்த பாலசுப்பிரமணியனைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டார் பா.வளர்மதி.
வளர்மதியின் கணவர் பாலசுப்பிரமணியனும் அமைச்சர் நத்தம் விசுவநாதனும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், வளர்மதி மீது எந்தப் புகார் போனாலும் அது புஸ்வாணம் ஆகிவிடும். கட்சி அலுவலகத்துக்குப் போகும் புகார்களுக்கு, அங்கே இருக்கும் மகாலிங்கம் செக் வைத்துவிடுவாராம்.
‘தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை’ என்கிற புலம்பல்கள் ஆயிரம்விளக்கில் எதிரொலிக்கின்றன. இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் விநியோகம்கூட முழுமை அடையவில்லையாம். ‘தொகுதிக்குள் மாதம் ஒரு முறை விழாவை நடத்த வேண்டும்’ என அங்கே இருக்கிற கவுன்சிலர்களுக்கு உத்தரவு போடப்படுகிறதாம். ‘கைக்காசைப் போட்டு விழா நடத்தவேண்டியிருக்கிறது’ என, கட்சிக்காரர்கள் புலம்புகிறார்கள்.
டிரான்ஸ்ஃபர், டெண்டர் என, கட்சிக்காரர்கள் விண்ணப்பங்களோடு போனால், இனிக்க இனிக்கப் பேசுவார். ஆனால், ‘நான் வெறும் அமைச்சர்தான். அதிகாரம் எல்லாம் கிடையாது’ எனச் சொல்லி மழுப்பி அனுப்பிவிடுவாராம்.
இப்போது யார் யாரோ டாலரிலும் கம்மலிலும் மூக்குத்தியிலும் வளையல்களில் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு போஸ் கொடுக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் முன்னோடி வளர்மதிதான். பெரிய டாலர் செயினில் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு, அதை புடவைக்கு மேலே நன்றாகத் தெரியும்படி முதல்முதலாக அணிந்தது இவரே.
அமைச்சர் பங்களா வேண்டாம் எனச் சொல்லி, கே.கே.நகர் வீட்டிலும் ஈக்காட்டுத்தாங்கல் பங்களாவிலும் வசிக்கிறார்.
அந்த நான்கு மாவட்டங்கள்!
வளர்மதி பிறந்தது மதுரை; அரசியல் செய்வது சென்னை; முதன்முறையாக அமைச்சராக உதவியது காஞ்சிபுரம். வளர்மதியின் கணவர் பாலசுப்பிரமணியனின் சொந்த மாவட்டம் கடலூர். இந்த நான்கு மாவட்டங்களிலும் வளர்மதிக்கு அரசியல் செல்வாக்கு உண்டு.
நிழல்கள்!
ஆயிரம்விளக்கு தொகுதியில் நடைபெறும் அரசியல் நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் கவுன்சிலர் சிவராஜ்தான், அமைச்சருக்கு ஆல் இன் ஆல். அவர் கண் அசைவின் படிதான் வளர்மதி செயல்படுகிறார் எனக் குற்றச்சாட்டு படிக்கிறார்கள் கட்சியினர். நிர்வாகிகள் நியமனம் தொடங்கி தொகுதிக்குள் நடைபெறும் அனைத்து டீலிங்குகளும் சிவராஜ் மூலமே அரங்கேறுகின்றன. தொகுதிக்கு சிவராஜ் என்றால், அரசு நிர்வாகத்துக்கு சங்கர். சீனியர் பி.ஏ-வான இவர், டிரான்ஸ்ஃபர், டெண்டர் போன்ற வேலைகளைப் பார்த்துக்கொள்கிறார். ‘சங்கரைப் பார்த்தால் காரியம் நடக்கும்’ என்கிறார்கள் கோட்டைவாசிகள். இவர்கள் இருவரும் வளர்மதியின் இரு கண்கள்.
‘போட்டோவைத் தூக்கிப் பிடி!’
தான் இருக்கும் இடத்தில் ஜெயலலிதாவின் போட்டோ இருப்பது தெரியாமல், ஒரு புகைப்படம்கூட வெளிவந்துவிடக் கூடாது என்பதில் வளர்மதி ரொம்பவே உஷார். வழிபாடு என்றாலும், அரசு நிகழ்ச்சி என்றாலும் வளர்மதியின் அருகே ஜெயலலிதாவின் பெரிய படத்தை ஒருவர் தூக்கிப் பிடித்துக்கொண்டு நிற்பார். அதற்காகவே சிலரைப் பணியில் அமர்த்தியிருக்கிறார். மாணவர்களுக்கு வளர்மதி லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி. லேப்டாப் ஸ்க்ரீனிலேயே ஜெயலலிதாவின் படம் தெளிவாகத் தெரிந்த நிலையிலும், வழக்கம்போல் ஜெயலலிதாவின் படத்தை ஒருவர் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்தார். ஜெயலலிதா விடுதலைக்காக வளர்மதி நடத்திய ஆன்மிக வைபவங்களிலும் இந்த ‘போட்டோ செஷன்’ இடம்பெற்றது. எத்தனை முணுமுணுப்புகள் கிளம்பினாலும், முகம் சுளிக்காமல் ஜெயலலிதா போட்டோவை கோயில் கோயிலாகத் தூக்கிக்கொண்டு போனார் வளர்மதி!
வரலாறு முக்கியம் அமைச்சரே!
ஜெயலலிதாவின் தெய்வ பக்தியை, தனது அரசியல் முதலீடாகப் பயன்படுத்தித்தான் முன்னுக்கு வந்தார் பா.வளர்மதி. அதனாலேயே சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ஜெயலலிதா ஜாமீனில் இருந்த காலத்தில், வளர்மதியின் ஆன்மிக அவதாரம் உச்சத்துக்குப்போனது. திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் தங்கத்தேர் இழுத்தார். சென்னை நுங்கம்பாக்கம் ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டிச் சென்றார். வடபழநி முருகனுக்கு 1,067 லிட்டர் பாலாபிஷேகம், அசோக் நகர் பிடாரி ஸ்ரீ காளியம்மன் ஆலயத்துக்கு பசுவும் கன்றும் தானம், நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் சனிப் பெயர்ச்சி சிறப்பு யாகம், தேனாம்பேட்டை சாய்பாபா கோயிலில் 108 தேங்காய் உடைப்பு… என, பல ஆன்மிகக் கச்சேரிகளை நிகழ்த்தினார். அந்த ஆன்மிகக் கடமைகளுக்கு நடுவே கிடைக்கும் சைடு கேப்களில்தான் அமைச்சர் வேலை பார்த்தார்!

நீங்கள் வாங்குவது ஆர்கானிக் தானா?

நன்றி: இணையப்பத்திரிக்கைகள்

தி.நகரில் உள்ள ஒரு பெரிய கடையில், கருப்பட்டிக் காபிக்கு மிகப் பெரிய க்யூ. விலை அதிகம் என்றாலும், பலரும் காத்திருந்து அதை வாங்கிக் குடித்தனர். ஆர்கானிக் பொருட்களைப் பயன்படுத்துவது ஒரு ஸ்டேட்டஸ் என்ற அளவுக்கு வந்துவிட்டதாலோ என்னவோ, முன்பு கவனிப்பாரின்றிக் கிடந்த கருப்பட்டி விலைகூட பல மடங்கு ஏறிவிட்டது.
பாலீஷ் செய்யப்பட்ட அரிசி, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள், ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் என கவனத்தைச் செலுத்திய நம் மக்கள், இப்போது கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள், பனை வெல்லம், கருப்பட்டி, பூச்சிக்கொல்லி ரசாயனம் கலக்காத ஆர்கானிக் உணவுப் பொருள்கள் என்று தேடித்தேடி வாங்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், தெரு முனைக் கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை ஆர்கானிக், பாரம்பரியப் பொருட்களுக்கு மவுசு அதிகரிக்கிறது.
இப்படி, தெருவுக்குத் தெரு ஆர்கானிக் பொருட்கள் விற்பனை நடப்பதால், எது உண்மையான ஆர்கானிக் என்றே தெரிவதுஇல்லை. ஆர்கானிக் என்றால், செழுமையே இல்லாமல் இருக்கும் என்ற எண்ணமும் உள்ளது. ரசாயனம் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் காய்கறிகள் என்பதால் விலையும் மிக அதிகம் என்று சொல்லி அதிக விலைக்கு விற்கின்றனர். இந்த கடைகளில் விற்கப்படுவது உண்மையான ஆர்கானிக் பொருட்களா, ஆர்கானிக் பொருட்களை வாங்குவது எப்படி என்று பலருக்கும் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.
ஆர்கானிக் பொருட்களை கண்டறிவது எப்படி?
வடிவம்: இயற்கையாக இருக்கும் எதுவும் ஒரே அளவில், ஒரே நிறத்தில் இருக்காது. வடிவத்தில் மாறுபடும். சாக்கில் போட்டு கொண்டுவரும்போது, இடிபட்டு, நசுங்கி, அழுக்காகத்தான் வரும். காய்கறிகள், பறித்து ஒரு நாளுக்குள் சிறிது சுருங்கித்தான் போகும். வெண்டைக்காய், கத்திரிக்காயில் 20 சதவிகிதம் பூச்சிகள் இருக்கும். 10 மாம்பழங்கள் வாங்கினால், இரண்டில், வண்டு இருக்கத்தான் செய்யும். எனவே, இத்தகைய பொருட்களை பார்த்து வாங்கிப் பயன்படுத்தலாம். பூச்சி, புழு எதுவும் இல்லை என்றால், அதில் பூச்சி மருந்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பூச்சி, புழுக்களே பயந்து ஒதுங்கிய காய்கறிகளின் அழகைப் பார்த்து வாங்குவது ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
சுவை: பாலிஷ் செய்யப்பட்ட அரிசியால் செய்யப்பட்ட சாதத்தை மறுநாள் வைத்தால், நொதிந்துபோய், ஒருமாதிரியான வாடை  வரும். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசியில் சமைத்தால், சீக்கிரத்தில் கெடாது. பருப்பில் செய்யும் குழம்பு மணமும் சுவையும் வித்தியாசமாக இருக்கும். எண்ணெய், உப்பு, வெல்லத்தில்கூட வித்தியாசம் தெரியும். ஆர்கானிக் உணவைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களால் இதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். பழைய சோற்றை மறுநாள் சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். எனவே, ஆர்கானிக் என்று சொல்லும் பொருளை ஒருமுறை வாங்கி சமைத்துப் பார்த்து, ருசியின் வேறுபாடு தெரிந்தால் மட்டும் வாங்கலாம். நிறைய  சமையல் நிபுணர்கள் ஆர்கானிக் பொருட்கள் மூலம் சமைக்கப்படும் உணவின் சுவை, நிறம், ஃபிளேவர் நன்றாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். எனவே, சமைத்துப் பார்க்கும்போதுதான் அதன் வித்தியாசத்தை உணர முடியும்.
பழங்கள், காய்கறிகள், கீரைகள் பளிச் நிறத்துடன் இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. அப்படி நம்மை வசீகரிக்கத்தான் ரசாயன உரம் கலக்கப்படுகிறது.
ஆர்கானிக் காய்கறி, பழங்கள் ஒரு சில நாட்கள் மட்டும்தான் வைத்திருக்க முடியும். இதுவே பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள், வெந்தயம், மற்றும் பழங்கள் என 70 சதவிகிதம் காய்கறி, பழங்களை நாமே வீட்டில் பயிரிட முடியும். பயிரிட்ட 21 நாட்களில் கீரைகளைப் பறித்துக் கொள்ளலாம். தோட்டம் போட விரும்புபவர்களுக்கு விதைகளையும் ஆலோசனைகளையும் தமிழக அரசு தோட்டக்கலைத் துறையே தருகிறது.
ஆர்கானிக் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகளைத் தேடிச் சென்று மொத்தமாக வாங்கலாம். தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இயற்கை விவசாயிகளின் பட்டியலை சேகரித்து அவர்களிடம் வாங்கலாம். இயற்கை முறையில் விளைவிக்கும் விவசாயிகள், உள்ளூர்ச் சந்தை மற்றும் விவசாயிகள் சந்தைக்கு சென்று விற்பனை செய்கின்றனர். இவர்களைக் கண்டறிந்து பொருட்களை வாங்கலாம். கிராமங்களில் நடக்கும் வாரச்சந்தைகளுக்குச் சென்றாலே, இயற்கை விவசாயப் பொருட்களை வாங்க முடியும்.
இயற்கையோடும் இயற்கை விவசாயத்தோடும் இணைவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வு வசப்படும்.

கருணாநிதி எம்.ஜி.ஆர். மதுவிலக்கு மன்னன் யார் ?

நன்றி: இணையப்பத்திரிக்கைகள்


’தமிழ்நாட்டையே குடிக்க வைத்துக் கெடுத்தார்’ எனக் குற்றம் சாட்டப்படும் மு.கருணாநிதி, ‘தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்’ எனப் பகிரங்கமாக அறிவித்துவிட்டார். தமிழ் மக்களின் நவீன ‘அம்மா’வாக அவதாரம் எடுத்திருக்கும் ஜெயலலிதா இதைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாமல் மௌனம்காப்பது மட்டும் அல்லாமல், இன்னும்… இன்னும் புதுப்புது மதுக் கடைகளைத் திறப்பதில் மும்முரமாக இருக்கிறார். அநேகமாக இவரும் தேர்தலுக்கு முன்னதாக இந்த அஸ்திரத்தை எடுக்கக்கூடும். கருணாநிதி அறிவித்திருப்பதும், ஜெயலலிதா அறிவிக்க இருப்பதும் தமிழ் மக்களுக்கு புதிது அல்ல. ‘பழைய மொந்தையில் புதிய கள்’ அவ்வளவுதான்!

அந்த மழை நாளில்…
தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்துசெய்யப்பட்ட நாள்: 30.8.1971
23 ஆண்டுகளாக அமலில் இருந்த மதுவிலக்கை ரத்து செய்தது அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி… அப்போது ஏக இந்தியாவில் தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் மட்டும்தான் மதுவிலக்கு அமலில் இருந்தது. ‘மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி இழப்பீடு வழங்குவோம்’ என அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்திருந்தார். ‘தமிழ்நாட்டுக்கு நிதி உதவி செய்யுங்கள்’ என கருணாநிதி கேட்டார். ‘இது மதுவிலக்கைப் புதிதாக அமல்படுத்தும் மாநிலங்களுக்குத்தான் தரப்படும்’ எனப் புதிய விளக்கம் சொன்னார் இந்திரா. காங்கிரஸை வீழ்த்திவிட்டுவந்த கருணாநிதிக்கு, நிதி கொடுக்க மறுக்கும் தந்திரமாக அந்தக் காரணத்தை இந்திரா கண்டுபிடித்தார். நிதி தராத மத்திய அரசுக்குப் பாடம் கற்பிக்கவே மதுவிலக்கு ரத்து என அறிவித்தார் கருணாநிதி.
கோவை தி.மு.க பொதுக்குழுவில் கருணாநிதிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு, மதுவிலக்கு ரத்து என அறிவிக்கப்பட்டது. மதுவின் தீமையை நாட்டு மக்களுக்கு விளக்க, அன்றைய தி.மு.க பொருளாளர் எம்.ஜி.ஆர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
சென்னை முழுக்கக் கடுமையான மழை. போக்குவரத்து இல்லை.
93 வயதான ராஜாஜி, மதுவுக்கு எதிரான போராட்டத்தை தனது வாழ்நாளில் இளமை முதல் நடத்திவந்த ராஜாஜி… தனது காரை எடுத்துக் கொண்டு முதலமைச்சர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார். ‘தமிழ்நாட்டில் மதுவிலக்கு தொடர வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். ‘வேறு வழி இல்லை; நிதி நெருக்கடியில் இருக்கிறது அரசு’ என விளக்கம் அளித்தார் கருணாநிதி. ‘மதுவிலக்கை 1937-ம் ஆண்டில் தான் அமல்படுத்தியபோது, நிதி நெருக்கடியைச் சமாளிக்கவே விற்பனை வரியை அமல்படுத்தினேன். அப்படி புது வழி இருக்கிறதா எனப் பாருங்கள்’ என்றார் ராஜாஜி; கருணாநிதி ஏற்கவில்லை. வீடு திரும்பினார் ராஜாஜி; மதுவிலக்கை வழியனுப்பினார் கருணாநிதி.
‘நம்பிக்கையுடன் அல்ல; மனச் சஞ்சலத்துடன்தான் வீடு திரும்பினேன்’ என ராஜாஜி அன்று சொன்னதாக அவரது பேரன் எழுதுகிறார். ராஜாஜி மனதை இது அதிகமாகப் பாதித்தது. ‘உயிர் வாழ வேண்டும் என்கிற மனோபலத்தை நீங்கள் இழந்துவிட்டீர்களா?’ என கல்கி சதாசிவம் கேட்டபோது, ‘இல்லை! ஆனால் ஒருவர் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு ஏதேனும் ஒரு முக்கியமான நோக்கம் இருக்க வேண்டும் அல்லவா?’ எனச் சொன்ன ராஜாஜி, நாடு முழுக்க சாராயக் கள்ளுக்கடைகளைப் பார்த்துவிட்டுத்தான் கண்ணை மூடினார்!
காரணம் கருணாநிதிதானா?
‘கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்?’ -தமிழ்நாடு சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கொடுத்த விளக்கம் இது. தமிழ்நாட்டைச் சுற்றி இருக்கிற மாநிலங்களில் எல்லாம் மது இருக்கும்போது, மது இல்லாமல் தமிழ்நாடு மட்டும் எப்படி இருக்க முடியும் என்பது அவரது கேள்வி. இதைச் சொல்லித்தான் மதுவிலக்கை ரத்துசெய்தார்; பழியைச் சுமக்கிறார்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை கருணாநிதி ரத்துசெய்தார் என்பது உண்மை. ஆனால், தமிழ்நாட்டுக்கு சாராயத்தையே அவர்தான் காட்டினார் என்பது உண்மையா..? இல்லை!
மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, பதிவுசெய்த குற்றங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் உண்மையை உணர முடியும். 1971-ம் ஆண்டில் மதுவிலக்கு ரத்துசெய்யபட்டதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே குடி, திருட்டுத்தனமாகப் பெருகிவிட்டது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் சிக்கி இருக்கிறார்கள்.
1961 – 1,12,889 பேர்
1962 – 1,29,977 பேர்
1963 – 1,23,006 பேர்
1964 – 1,37,714 பேர்
1965 – 1,65,052 பேர்
1966 – 1,89,548 பேர்
1967 – 1,90,713 பேர்
1968 – 2,53,607 பேர்
1969 – 3,06,555 பேர்
1970 – 3,72,472 பேர்
இப்படி ஒரு கணக்கை அன்று வெளியிட்டவர் எம்.ஜி.ஆர். ‘ஆனந்த விகடனில்’ அவர் எழுதி வந்த ‘நான் ஏன் பிறந்தேன்?’ தொடரில்தான் இதை எடுத்துப்போட்டார்.
குடி இருந்தது; குடிகாரர்களும் இருந்தார்கள். கள்ளச் சாராயமாக இருந்ததை நல்ல சாராயமாக மாற்றி, அதில் இருந்தும் அரசுக்கு நிதி திரட்டலாம் என்ற பாதையைக் கண்டுபிடித்த பாவச் செயலை கருணாநிதி செய்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம்!
திரும்பிய திசை எங்கும் மதுக் கடைகள்!
‘ஆண்டுக்கு 26 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்’ என்றார் முதலமைச்சர் கருணாநிதி, 1971-ம் ஆண்டில். தமிழ்நாடு முழுவதும் 7,395 கள்ளுக் கடைகளும் 3,512 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. ஒரு லிட்டர் கள் 1 ரூபாய், 1 லிட்டர் சாராயம் 10 ரூபாய். தாலுகாவுக்கு ஒரு சாராய வியாபாரி என, தமிழ்நாட்டில் 139 மொத்த வியாபாரிகள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து சில்லறை வியாபாரிகள் வாங்குவார்கள்.
அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,304 கள்ளுக் கடைகளும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 643 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. குறைவான கடைகள் இருந்தது சென்னையில்தான். 56 கள்ளுக் கடைகள், 52 சாராயக் கடைகள்.
அன்றைய தமிழ்நாடு அரசுக்கு வரிகள் மூலம் கிடைத்த வருவாய் 210 கோடி ரூபாய். போதையில் இருந்து மட்டும் கிடைத்தது
26 கோடி ரூபாய் என்றால், எவ்வளவு பெரிய தொகை எனப் பாருங்கள்.
ஆனாலும் கருணாநிதி, 1973-ம் ஆண்டில் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்தினார். மதுவிலக்கை அமல்படுத்துவதால் ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, ஆண்டு ஒன்றுக்கு 29 கோடி ரூபாய் தர வேண்டும் என, கருணாநிதி கோரிக்கை வைத்துப் பார்த்தார். பணம் வரவில்லை. மீண்டும் மதுவிலக்கை ரத்துசெய்தார். நிதியைக் காரணம் காட்டியே மதுவிலக்கைத் தவிர்ப்பதும் கொண்டுவருவதும் தொடங்கியது… தொடர்ந்தது. இதை பணமாகவே பார்த்தார்கள். குணமாக அன்றும் பார்க்கவில்லை; இன்றும் பார்க்கவில்லை.
எம்.ஷி.ஆரை வெளியேற்றிய மது!
மது… குடும்பங்களை அல்ல, கட்சிகளையும் உடைக்கும்!
மதுவிலக்கை ரத்துசெய்யும் அதிகாரத்தை கருணாநிதிக்கு வழங்கிய தி.மு.க பொதுக்குழு தீர்மானத்தை ஆதரித்தும், மதுவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் குழுவில் பொறுப்பேற்றும் இருந்த எம்.ஜி.ஆர்., இரண்டு ஆண்டுகள் கழித்து தி.மு.க-வில் இருந்து வெளியேற கண்டுபிடித்த காரணங்களில் மதுவும் ஒன்று. கணக்கு கேட்டு பேசிய கூட்டத்தில், மதுவைப் பற்றியும் கண்டித்தார். அவரை தி.மு.க-வில் இருந்து விலக்கும் கடிதத்தில் உள்ள காரணங்களில் இதுவும் ஒன்று. ‘பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியபோது அதற்கு ஆதரவாகப் பேசிவிட்டு, இப்போது வெளி மேடைகளில் விமர்சித்துப் பேசுவது கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவதாகும்’ என்றுதான் தி.மு.க-வின் அன்றைய பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் குறிப்பிட்டார்.
நாஞ்சில் மனோகரனும் முரசொலி மாறனும் எம்.ஜி.ஆரைத் தனிமையில் சந்தித்துக் கேட்டார்கள். மறுத்தார் எம்.ஜி.ஆர். நிரந்தரமாக நீக்கப்பட்டார். எனவே தி.மு.க உடைந்ததில் மதுவுக்கும் பங்கு உண்டு.
எம்.ஷி.ஆர் போட்ட பல்டிகள்!
சினிமாவில் அடித்த ஸ்டன்ட் களைவிட மதுவிலக்கில் எம்.ஜி.ஆர் அடித்த ஸ்டன்ட்கள்தான் அதிகம்!
‘என் இறுதி மூச்சு இருக்கும் வரை மதுவிலக்குக் கொள்கையை நான் நிறைவேற்றுவேன் என என்னைப் பெற்ற அன்னை மீது உறுதி எடுத்துக் கொள்கிறேன்’ (2.12.1979 ‘அண்ணா’ நாளிதழ்) எனச் சொன்ன அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இரண்டு ஆண்டுகள்கூட அதில் உறுதியாக இருக்க முடியவில்லை.
1.5.1981-ல் தமிழ்நாட்டில் சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் உற்பத்திசெய்கிற தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இல்லை. நான்கு தனி நபர்களுக்கும் கூட்டுறவுத் துறை நிறுவனத்துக்கும் அரசு அனுமதி அளித்தது. சாராயம், கோடிகளைக் கொட்டும் தொழிலாக மாறியது அப்போதுதான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி, இந்தச் சாராய அதிபர்களுக்கு ஆண்டுக்கு 36 கோடி ரூபாய் போகிறது எனப் புள்ளிவிவரங்களை அள்ளி வீசினார். ‘இவை எல்லாம் அந்த ஒன்பது குடும்பங்களுக்குப் போகிறதா அல்லது இவை எல்லாம் பினாமியாக ஒரே குடும்பத்துக்குப் போய்ச் சேருகிறதா?’ எனக் கேள்வியையும் போட்டார்.
மதுவிலக்குக் கொள்கையில் அளவுக்கு அதிகமாக ஐந்து அவசரச் சட்டங்களைப் போட்டதும் எம்.ஜி.ஆர் அரசுதான். ‘மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் ஒருமுறை பிடிபட்டால், 3 ஆண்டுகள் சிறை,  இரண்டாவது முறை பிடிபட்டால், 7 ஆண்டுகள் சிறை, மூன்றாவது முறை பிடிபட்டால், நாடு கடத்தப்படுவார்கள்’ என்பதும் ஓர் அவசரச் சட்டம்.
‘சர்வாதிகார நாட்டில்தான் இப்படி ஓர் அவசரச் சட்டம் இருக்கும்’ என கருணாநிதி எதிர்க்கும் அளவுக்குப் போனார் எம்.ஜி.ஆர்.
தாய்மார்களின் கண்ணீரைத் துடைக்க மதுவிலக்கு என்றும், கள்ளச் சாராயத்தால் காசும் உடல்நலமும் பறிபோகிறது எனத் தாய்மார்கள் கண்ணீர் விடுவதால் மதுவிலக்கு ரத்து என்றும், இரண்டுக்கும் தாய்மார்களின் கண்ணீரையே காரணங்களாகக் காட்டித் தப்பிக்க முயற்சித்தார் எம்.ஜி.ஆர்.
கருணாநிதி சொன்னபடி நடந்த ஜெ !
மதுவிற்பனை மூலமாக வருமானம் அதிகமாக வருவதைக் கவனித்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி, மது விற்பனையை அரசே ஏற்று நடத்தினால் நல்ல லாபம் வரும் என யோசனையும் சொன்னார். (தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14.3.1983 அன்று பேசியது) ‘இப்போது அரசே எடுத்து நடத்துவதற்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை’ என லைசென்ஸ் வழங்கினார் கருணாநிதி. அவர் 1983-ம் ஆண்டில் சொன்னதை 2003-ம் ஆண்டில் அமல்படுத்தினார் ஜெயலலிதா.
நல்ல கல்வியை தனியாருக்கும், நல்ல மருத்துவத்தை தனியாருக்கும் தாரைவார்த்துவிட்டு நல்ல மதுவை அரசு வழங்கும் நெறிபிறழ்ந்த செய்கையை ‘அம்மா’ தொடங்கிவைத்தார். மறைவான இடங்களில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனியார் கடை நடத்திக்கொண்டிருந்த நிலைமை மாறி, அரசு அதிகாரிகள் கேட்பதால் பள்ளிகளுக்குப் பக்கத்தில், குடியிருப்புகளுக்கு உள்ளே, கோயிலுக்குப் போகும் வழியில் எல்லாம் கடைகள் திறக்கப்பட்டன. தம்பி தவறு செய்தால் தட்டிக்கேட்டார்கள். ‘அம்மா’வே செய்தால் யாரால் கேட்க முடியும்?
குடியைக் கட்டாயப்படுத்திய அரசு!
இன்று சாராய வருமானம் 30 ஆயிரம் கோடி. இதை 32 ஆயிரம் கோடியாக எப்படி ஆக்குவது? அரசின் கவலை இதுதான். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் அதிகப்படுத்திக் காட்டியாக வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் இலக்கு நிர்ணயித்துவிட்டார்கள். அந்த அளவுக்கு விற்காவிட்டால், விற்பனையாளர்களுக்கு மெமோ தரப்படும். வேலை நீக்கமும் உண்டு.
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் குடிக்க வேண்டும் என அவசரச் சட்டம் போடுவதற்கும், இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்த நிதியை வைத்துத்தான் அரசு நிர்வாகம் செயல்படுவதுபோல போலி பிரமையை உருவாக்குகிறார்கள். இது உண்மை அல்ல. நாய் விற்ற காசு குரைக்காது. ஆனால், சாராயம் விற்ற காசு கொல்லும். தமிழ்நாட்டைக் கொன்றும்வருகிறது.
அதிபர்களை அதிகப்படுத்திய மு.க.!
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது டாஸ்மாக் தொடங்கப்பட்டது. பாலாஜி டிஸ்டீலரீஸ், எம்.பி.டிஸ்டீலரீஸ், மோகன் புரூவரீஸ் அண்ட் டிஸ்டீலரீஸ், சிவாஸ் டிஸ்டீலரீஸ், சாபில் டிஸ்டீலரீஸ் ஆகிய ஐந்து நிறுவனங்களுக்குத்தான் ஆரம்பத்தில் அனுமதி கொடுத்தார்கள். மற்ற நிறுவனங்கள் இதற்குள் நுழைய பல்வேறு தடைகள் இருந்தன. இதை உடைத்து 2001-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மிடாஸ் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தார். அதன் பிறகுதான் டாஸ்மாக் மூலமே மதுபானக் கடைகளை நடத்தவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். எதிர்க்கட்சியாக இருந்தபோது இதைக் கண்டித்த கருணாநிதி, 2006-ம் ஆண்டில், தான் ஆட்சிக்கு வந்ததும் மது விற்பனையை அரசு செய்யும் முடிவைத் தொடர்ந்தார்.
இதைவிட இன்னொரு சாதனையையும் செய்தார் கருணாநிதி. எஸ்.என்.ஜே.டிஸ்டீலரீஸ், கால்ஸ் டிஸ்டீலரீஸ், எலைட் டிஸ்டீலரீஸ், இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் அண்டு ஒயின் (பி) லிட்., கிங் டிஸ்டீலரீஸ் போன்ற புதிய சாராய ஆலைகளை அனுமதித்தார் கருணாநிதி. இதன் பொறுப்பாளர்கள் அவரோடு பல்வேறு மேடைகளில் பங்கேற்றார்கள். கருணாநிதி ஆட்சியில் மிடாஸ் ஆலையில் இருந்து மது தடை இல்லாமல் வாங்கப்படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதியின் நெருக்கங்களின் ஆலையில் இருந்து, மது தடை இல்லாமல் வாங்கப்படுகிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கோபத்தால் ஒதுக்குபவர்கள், மது ஆலைகளை லாபத்தால் அரவணைக்கிறார்கள்!

திங்கள், ஜூலை 20, 2015

மந்திரி தந்திரி - 10 !

மந்திரி தந்திரி - 10 ! கேபினெட் கேமராவிகடன் டீம், ஓவியங்கள்: ஹாசிப்கான், கண்ணா
மயிலை மாங்கொல்லை திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் புரட்டுகளை அடுக்கலாம். ஏ.சி காற்று தாலாட்டும் காமராஜர் அரங்கத்தில் கப்சாக்களைக் கட்டவிழ்க்கலாம். அ.தி.மு.க மேடைகளில் பொய் மாளிகை கட்டலாம். ஆனால், தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படியெல்லாம் இஷ்டத்துக்குப் பேசிவிட முடியாது. அங்கே என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதற்கு நிறைய வரையறைகள் வகுத்துவைத்திருக்கிறார்கள். ஆனால், 'அதனால் எனக்கு என்ன?’ என அவற்றைக் கண்டுகொள்ளாமல் சட்டமன்றத்திலேயே தவறான தகவல்களை அடுக்கியவர் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கோகோ-கோலா நிறுவனம் ஆலை அமைக்க முயற்சித்த விவகாரம் தமிழ்நாடு முழுக்க தகித்துக்கொண்டிருந்தபோது, 'ஆலை அமைக்க அனுமதி கேட்டு கோகோ-கோலா இதுவரை விண்ணப்பிக்கவில்லை. அப்படி எந்தக் கோரிக்கையும் இதுவரை அரசுக்கு வரவில்லை’ என சட்டசபையில் ஆவேசமாக முழங்கினார் தோப்பு வெங்கடாச்சலம். ஆனால், மறுநாளே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோகோ-கோலா நிறுவனத்துக்கு நிலம் வழங்கும் அனுமதி தொடர்பான ஆவணங்களை அள்ளிப் போட்டதும்தான், சட்டமன்றத்திலேயே உண்மையை மறைத்திருக்கிறார் அமைச்சர் எனத் தெரிந்தது. இது ஒரு சாம்பிள் சம்பவம்தான். அமைச்சரின் அரசியல் வாழ்க்கை, இதைவிட பல அதிரடி அத்தியாயங்களைக் கடந்தது!
சக்தி முருகன் ரோடுவேஸ் டு அம்மா விசுவாசி!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தோப்புப்பாளையம் சொந்த ஊர் என்பதால் பெயரில் 'தோப்பு’ ஒட்டிக்கொண்டது வெங்கடாச்சலத்துக்கு. விவசாயம், கூலி வேலைகள் செய்து பெற்றோர் கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டுத்தான் வெங்கடாச்சலத்தை கல்லூரியில் சேர்த்தார்கள். பி.ஏ வரலாறு படிக்கப் போனவருக்கு, வரலாற்றைவிட அரசியல் மீதுதான் அதிக ஆர்வம். ''கல்லூரி இறுதி ஆண்டில் மாணவர் தலைவர் தேர்தலில் ஜெயித்தார். கல்லூரி இறுதியில் 'ஃபேர்வெல்’ நடத்த மாணவர்களிடம் பணம் திரட்டினார். கணிசமான கரன்சி சேர்ந்தது. சில நாட்களுக்குப் பிறகு புது லாரி ஒன்று வெங்கடாச்சலம் பெயரில் பதிவானது'' என்கிறார்கள் அவருடன் படித்த முன்னாள் மாணவர்கள். 'லாரி வாங்கலாம்... மணல் அள்ளலாம்... அரசியலில் நுழையலாம்’ எனத் திட்டமிட்டார் தோப்பு. அதுதான் அரசியல் பகடையாட்டத்தில் வெங்கடாச்சலத்தின் தாயம்!
'சக்தி முருகன் ரோடுவேஸ்’ என்ற பெயரில் லாரியில் மண் லோடு அடிக்கத் தொடங்கினார். 'மணல்’ அள்ளி 'கரன்சி’ பார்த்துக் கொண்டிருந்தவரின் லாரி, திடீரென ஒருநாள் தீ விபத்தில் சிக்க... வியாபாரம் முடங்கியது.
அது வெங்கடாச்சலத்தின் காதல் வரை காவு வாங்கியது. வெங்கடாச்சலத்துக்குக் கல்லூரியில் முளைத்த காதலுக்கு இரு வீட்டினரும் பச்சைக்கொடி காட்டிவிட்ட நிலையில், லாரி விபத்து காரணமாக வியாபாரம் நொடிந்தது. வெங்கடாச்சலத்தின் காதலியை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டனர் பெண் வீட்டார். விரக்தியின் விளிம்புக்குச் சென்ற வெங்கடாச்சலம், அப்போது பெருந்துறை எம்.எல்.ஏ-வாக இருந்த வி.என்.சுப்பிரமணியனிடம் தஞ்சம் அடைந்தார். ஒருவகையில் வெங்கடாச்சலத்துக்கு உறவினரான சுப்பிரமணியன், 'எனக்கு உதவியா இரு’ எனச் சொல்லிவிட்டார். அதுதான் அ.தி.மு.க-வோடு வெங்கடாச்சலத்துக்கு ஒரு பந்தத்தை உண்டாக்கியது!
'அம்மா’வையே சீண்டிய தோப்பு!
வி.என்.சுப்பிரமணியன் மூலம் வெங்கடாச்சலம் அரசியலில் நுழைந்தாலும், அரசியல் பாலபாடத்தைக் கற்றுக்கொண்டது செங்கோட்டையனிடம். அப்போது அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்த செங்கோட்டையனுக்கு தீவிர விசுவாசியாக மாறினார் வெங்கடாச்சலம். அவர் பெருந்துறை வந்தால், அவரின் தேவைகளைப் பார்த்துப் பார்த்துப் பூர்த்திசெய்வார் வெங்கடாச்சலம். அதன் பரிசாகத் தொடர்ந்தன தோப்புப்பாளையம் கிளைச் செயலாளர், பெருந்துறை பேரூராட்சி செயலாளர் பதவிகள். ஆனால், அதன் பின்னர் அரசியலில் வளர்ச்சி இல்லை. அந்தச் சலிப்பு வெங்கடாச்சலம் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.
2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, கட்சியை ஒழுங்குபடுத்த நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தினார் ஜெயலலிதா. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வெங்கடாச்சலம் ஜெயலலிதாவையே அதிரவைத்தார். 'தலைமைப் பதவியில் இருப்பவர்கள் பணம் வாங்கிக்கொண்டுதான் பதவியே தருகிறார்கள்’ என அந்தக் கூட்டத்தில் வெங்கடாச்சலம் சொல்ல, 'அப்படின்னா... என் மீதும் குற்றம் சுமத்துகிறீர்களா... என் மீது தவறு என்கிறீர்களா?’ என ஜெயலலிதா சிடுசிடுக்க, பயத்துடன் ஊர் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்வதற்குள் அவருடைய பெருந்துறை பேரூராட்சி செயலாளர் பதவி பறிபோயிருந்தது.
அன்று அம்மாவையே சீண்டிய வெங்கடாச்சலம், இன்று அம்மா கேபினெட்டில் அசைக்க முடியாத அமைச்சர். காரணம், வெங்கடாச்சலத்தின் 'அரசியல் கபடி’ அப்படி!
கோட்டையைச் சாய்த்த மன்னார்குடி லாபி!
அம்மாவின் கோபத்துக்கு ஆளாகி பதவி இழந்த பிறகு, அரசியல் ஆர்வத்துக்கு 'பிரேக்’ விட்டு, மணல், ரியல் எஸ்டேட், டிரான்ஸ்போர்ட், ஆட்டோ கல்சல்ட்டிங்... வியாபாரங்களில் தீவிரமானார் வெங்கடாச்சலம். கரன்சி கல்லாவைச் செழுமைப்படுத்திக்கொண்ட பிறகு, மீண்டும் அரசியல் ஆர்வம் துளிர்த்தது. ஈரோட்டில் இயங்கும் மிகப் பெரிய ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை முடித்துக் கொடுத்த வகையில், அதன் உரிமையாளருக்கு செம தோஸ்த் ஆனார் வெங்கடாச்சலம். கோவையில் வசிக்கும் மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த ராவணன், அந்த உரிமையாளருக்கு வேண்டப்பட்டவர். போதாதா..? அரசியலில் மீண்டும் சுக்ர தசை ஆரம்பித்தது வெங்கடாச்சலத் துக்கு. அதோடு இரண்டு 'சாமி’களும் அவருக்கு உதவினார்கள். ஒருவர், 'மணல்’ ஆறுமுகசாமி. இன்னொருவர், முன்னாள் அமைச்சர் செ.மா.வேலுசாமி. இருவரும் ராவணனுக்கு நெருக்கமானவர்கள்.
அ.தி.மு.க-வில் செல்வாக்குடன் இருந்த செங்கோட்டையன், ஈரோடு மட்டும் அல்ல கொங்கு மண்டலத்தையே கட்டுக்குள் வைத்திருந்தார். ஆனால், சசிகலா குடும்பத்துக்கு உறுத்தலாகவே இருந்தார். மன்னார்குடிக்கு வேண்டாதவராகிவிட்ட செங்கோட்டையனின் வளர்ச்சியைத் தடுக்க, வெங்கடாச்சலத்துக்குக் கொம்பு சீவினார்கள். 'செங்கோட்டையன் தன் குருதான். ஆனால், அவரைக் காலி செய்தால்தான், தனக்கு அரசியலில் ஏற்றம் கிடைக்கும்’ எனக் கணக்குப் போட்ட வெங்கடாச்சலம் 'மன்னார்குடி’க்குக் காவடி தூக்க முடிவெடுத்தார். தக்க தருணத்துக்காகக் காத்திருந்தார்.
2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் வெற்றி பெற்றார் வெங்கடாச்சலம். சட்டமன்றத்தில் நுழைந்தவருக்கு கேபினெட்டில் இடம் கிடைக்கவில்லை. காரணம், செங்கோட்டையன் அமைச்சரானதுதான். அவரால் அந்தப் பதவியில் ஒரு வருடம்கூட நீடிக்க முடியவில்லை. அவரிடம் இருந்து வருவாய்த் துறை பறிக்கப்பட்டு, அந்தத் துறைக்கு அமைச்சராக தோப்பு வெங்கடாச்சலம் அமர்த்தப்பட்டார். உபயம்... மன்னார்குடி லாபி. 'நான் தனிமரம் அல்ல... தோப்பு’ என அப்போது நெருக்கமானவர்களிடம் சொல்லிச் சிரித்தாராம் அமைச்சர்.
ஆடாத ஆட்டமெல்லாம்...
காத்திருந்து காத்திருந்து கிடைத்த பதவி என்பதால், கண்மண் தெரியாமல் ஆடிவிட்டார் வெங்கடாச்சலம். விளைவு, வருவாய்த் துறையில் இருந்து சுற்றுச்சூழல் துறைக்கு மாற்றப்பட்டார். அங்கும் அமைச்சரின் அலம்பல்கள் தொடர்கின்றன. ஆனாலும், அவரை அசைக்க முடியவில்லை. சின்னச் சின்னப்
பஞ்சாயத்துகளில் சிக்கியவர்கள்கூட அமைச்சரவையில் இருந்து கழற்றிவிடப்படும்போது, 'மாநிலம் தழுவிய பரபரப்பு’களில் சிக்கிய வெங்கடாச்சலத்தை, மன்னார்குடி லாபி தொடர்ந்து காப்பாற்றிவருகிறது.
அமைச்சரின் அடாவடி நடவடிக்கைகளுக்கு ஒரே நச் உதாரணம்... கோகோ-கோலா கோல்மால். பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கோகோ-கோலா நிறுவனம் தங்கள் ஆலையை அமைக்க, 71.30 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு காலக் குத்தகைக்கு எடுத்தது. குத்தகை தொகை எவ்வளவு தெரியுமா? ஏக்கருக்கு 1 ரூபாய்!
ஒரு ஏக்கருக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு ரூபாய் குத்தகை என்றால், 71 ஏக்கருக்கு ஒரு வருடக் குத்தகை 71 ரூபாய். அதை 99 ஆண்டுகளுக்குக் கணக்கிட்டால், மொத்தம் குத்தகை தொகை 7,000 ரூபாய்தான். ஆனால், கோகோ-கோலா நிறுவனத்தின் அந்த ஆலைக்கான திட்ட மதிப்பீடு... 500 கோடி ரூபாய். நிலம் மட்டும் அல்ல... காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து கோகோ-கோலா நிறுவனத்துக்கு தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க ஒப்பந்தமிடப்பட்டது.
கோகோ-கோலா ஆலை தொடங்கப்பட்டால், பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்; நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்; தண்ணீர் இல்லாமல் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும்; சுமார் 85 கிராமங்கள் பாலைவனம் ஆகும்; ஆலையின் கழிவுநீரைச் சுத்திகரிக்க மாட்டார்கள்... எனச் சொல்லி, ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடினார்கள் ஈரோடு மக்கள். அவர்களோடு பல்வேறு அமைப்புகளும் சில கட்சிகளும் கைகோக்க, போராட்டம் உக்கிரமானது. கடை அடைப்பு, ஊர்வலம், ஆர்ப்பாட்டம்... எனப் பல்வேறு ரூபங்களில் சர்ச்சை எழ, அதை முடக்க அரசு இயந்திரம் பல விதங்களில் முயற்சித்தது. ஆனால், நீதிமன்றப் படி ஏறி, போராட்டம் நடத்த உத்தரவு வாங்கி வந்தனர் போராட்டக் குழுவினர். 'அரசாங்கத்தின் அத்தனை முட்டுக்கட்டைகளுக்கும் பின்னணியில் இருந்தது அமைச்சர்தான்’ என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.
ஆலை நிர்மாணம் தொடர்பாக அரசு நடத்திய கருத்துக்கேட்பு கூட்டத்தில் 99 சதவிகிதத்தினர் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், 'கோகோ-கோலா ஆலைப் பிரச்னையில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன’ எனக் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் சொன்னார் வெங்கடாச்சலம். 'இனி அமைச்சரை நம்பிப் பயன் இல்லை’ என்ற முடிவுக்கு வந்தனர் போராட்டக்காரர்கள். இந்த விவகாரம் தொடர்பாக, சம்பிரதாய அறிக்கையோடு நின்றுவிட்டது கோகோ-கோலா நிறுவனம். ஆனால், அந்த ஆலையின் பி.ஆர்.ஓ போல வெங்கடாச்சலம் ஆலைக்கு ஆதரவாக மறைமுகக் கருத்துக்களைப் பேசப் பேச, போராட்டக் களத்தில் வறுத்தெடுக்கப்பட்டார்.
இதே விவகாரத்துக்காக, சட்டமன்றத்திலும் அசிங்கப்பட்டார். 'கோகோ-கோலா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கவில்லை’ எனச் சட்டசபையில் அவர் சொல்ல, சிப்காட்டுக்கும் கோகோ-கோலா வுக்கும் இடையே 23.1.2014 அன்று கையெழுத்தான ஒப்பந்தத்தை மீடியா மக்களிடம் காட்டினார்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். வேறு வழியின்றி, 'கோகோ-கோலாவுக்காக நிலம் வழங்கப்பட்டது உண்மைதான். ஆனால், பணிகள் தொடங்கப்படவில்லை’ என ப(தி)ல் இ(அ)ளித்தார் வெங்கடாச்சலம். விவகாரம் அதீதக் கவனம் ஈர்த்ததும், கோகோ-கோலா தொழிற்சாலை செயல்படத் தடை விதித்தது தமிழ்நாடு அரசு.
ஊரே எதிர்த்துப் போராடி அரசிடம் இருந்து, சொந்த மண்ணின் வளங்களைப் பாதுகாத்துக்கொண்டது. ஆனால், அப்போதும் சரிந்த தன் இமேஜ் பற்றி கவலைப்படாமல், 'குளிர்பான நிறுவனத்துக்குத் தடை விதித்த அம்மாவுக்கு நன்றி’ எனப் பொதுக்கூட்டம் போட்டார் வெங்கடாச்சலம்.
துறைரீதியான சாதனை என்ன?
வெங்கடாச்சலம் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தபோது, நிவாரண முறைகேடு, அம்மா திட்ட முகாம் குளறுபடிகள், உதவித்தொகைகளை வாரி வழங்கி அரசுக்கு நிதிச் சுமை ஏற்படுத்தியது, தகுதியற்றவர்களுக்கு உதவித்தொகை... என, தொடர் புகார்கள் வெடித்தன.
''ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிபாளையம், பவானி, அந்தியூர்... ஆகிய ஆறு தொகுதிகளுக்கும் சேர்த்து சுமார் 43 லட்சம் மட்டுமே வறட்சி நிவாரணமாக வழங்கப்பட்டது. ஆனால், அமைச்சரின் சொந்தத் தொகுதியான பெருந்துறைக்கு 18 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இத்தனைக்கும் தொகுதியின் விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை. தகுதியற்ற நபர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. அந்த வறட்சி நிவாரண விநியோக முறைகேட்டில் பலர் கொழுத்த கடாக்களாக மாறினார்கள். வருவாய்த் துறை அமைச்சராக வெங்கடாச்சலம் இருந்தபோதுதான் இந்த மோசடி நடந்தது'' என்றார்கள் விவசாயிகள்.
இதற்கு பிறகும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க முடியவில்லை. வருவாயில் இருந்து சுற்றுச்சூழல் என, துறையை மட்டுமே மாற்ற முடிந்தது.
சுற்றுச்சூழல் துறையின் கீழ்தான் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் வரும்.
சாயப் பட்டறைகள் ஈரோட்டில்தான் அதிகம். அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர். இப்படி சாயப் பட்டறை, ஈரோடு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்தும் என்ன பயன்? ஈரோட்டில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை. அமைச்சரின் சொந்தத் தொகுதியான பெருந்துறையில் உள்ள சிப்காட் வளாகத்தில் செயல்படும் நிறுவனங்களுக்கு எந்தத் தடையும் இல்லாமல் 'தடையில்லாச் சான்றிழ்கள்’ கிடைக்கின்றன எனக் குமுறுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
நீர்நிலைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு சுற்றுச்சூழல் துறை வசம்தான். ஆனால், அதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதுவுமே நடைபெறவில்லை. தமிழ்நாடு எங்கும் அழிக்க முடியாத அளவுக்கு ப்ளாஸ்டிக் கழிவுகள் நிரம்பிக்கிடக்கின்றன. தீங்கு விளைவிக்கும் திடக்கழிவு, மருத்துவக் கழிவு, மின்னணுக் கழிவு... என தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையும் அபாய மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. 3,833 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூவம் நதியைச் சீரமைத்து மீட்டெடுக்கும் திட்டம் அறிவிப்பாக மட்டுமே தேங்கியிருக்கிறது.
ஆனால், கட்சித் தலைவிக்கு ஐஸ் வைப்பதற்காகச் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கையின்போது, 'அமெரிக்காவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன். தென் ஆப்பிரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர் நெல்சன் மண்டேலா. கியூபாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர் மகாத்மா காந்தி. மைனாரிட்டி தி.மு.க கூட்டாட்சியில் இருந்து விடுதலை பெற்றுத் தந்தவர் புரட்சித் தலைவி அம்மா மட்டுமே!’ என முழங்கிக்கொண்டிருக்கிறார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வெங்கடாச்சலம்.
என்னத்த சொல்ல?!
தோப்பு வெச்ச ஆப்பு!:
செங்கோட்டையனின் அமைச்சர் பதவியைக் காலி செய்ய மன்னார்குடி சர்க்கிள் காய் நகர்த்தியபோதும், ஜெயலலிதா அவரை விட்டுக்கொடுக்கவில்லை. காலம் கனியக் காத்திருந்தார்கள். செங்கோட்டையனுக்கு நெருக்கமான திருப்பூர் தொழில் அதிபர் ஒருவர், சென்னை திருவான்மியூர் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புக்கு ஓர் இடம் வாங்கினார். நிலத்தை வாங்குவதில் ஏற்பட்ட சில வில்லங்கத்தை அப்போது வருவாய்த் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் தீர்க்க முயன்றார். தகவல் வெங்கடாச்சலத்துக்குத் தெரியவர, அதை மன்னார்குடி மக்களுக்கு பாஸ் செய்தார். மறுநாளே செங்கோட்டையனிடம் இருந்து வருவாய்த் துறை பறிக்கப்பட்டு, தோப்பு வசம் வந்தது. அதன் பிறகும் செங்கோட்டையனை லைம் லைட்டுக்குள் வரவிடாமல் புகார்க் கணைகளைத் தொடுத்துக்கொண்டே இருக்கிறார் வெங்கி!
காக்கிச் சட்டை நண்பா..!:
காக்கிச் சட்டை நண்பர் ஒருவர்தான் தோப்புவுக்குப் பலவிதங்களிலும் உதவிவருகிறார். இப்போது ஈரோடு மதுவிலக்குப் பிரிவு ஏ.டி.எஸ்.பி-யாக இருக்கும் குணசேகரனும் தோப்பு வெங்கடாச்சலமும் இளமைப் பருவம் முதல் நண்பர்கள். கல்லூரித் தோழர்கள். வெங்கடாச்சலம் அமைச்சரானபோது பெருந்துறை டி.எஸ்.பி-யாக இருந்தார் குணசேகரன். அனைத்து வகையிலும் அமைச்சருக்கு உதவியாக இருந்த குணசேகரன் மீது புகார் கிளம்ப, அவரை நாகர்கோவிலுக்கு மாற்றினார்கள். ஆனால், அந்த இடமாற்ற உத்தரவைக் கையில்கூட வாங்கவில்லையாம் குணசேகரன். அமைச்சர் மீண்டும் குணசேகரனை ஈரோடு மாவட்டத்திலேயே இருக்கவைத்தாராம்!
ஈமு வில்லங்கம்!:
ஈமு கோழி மோசடிப் புள்ளிகளுடன் தோப்பு வெங்கடாச்சலத்தின் ஆதரவாளர்களுக்குத் தொடர்பு இருந்ததாகப் புகார் கிளம்பியது. ஈமு கோழிப் பண்ணைத் திறக்க நமீதாவை அழைத்துவந்தபோது தோப்புவின் ஆதரவாளர்கள் அந்த விழாவில் முந்திக்கொண்டு பங்கேற்றனர். அந்தத் தகிடுதத்தங்களுக்கு உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் துணையாக இருந்தனர் என கார்டனுக்கு புகார்கள் தட்டிவிட்டும் பயன் இல்லை. பெருந்துறை ஓம் சக்தி நகரைச் சேர்ந்த ஒருவர் ஈமு கோழிப் பண்ணை நடத்தினார். 'முதலீட்டாளர்களை மோசடி செய்துவிட்டார்’ என போலீஸும் அவரைக் கைது செய்தது. ஆனால், ஜாமீனில் வெளிவந்த அந்த நபர், இப்போது தொகுதிக்குள் தோப்பு வெங்கடாச்சலத்துடன் அடிக்கடி தலை காட்டுகிறார்.
சுயநலமே பிரதானம்!:
தனக்கு வேண்டாதவர்கள் சொந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும் வளரவிட மாட்டாராம் தோப்பு. பெருந்துறை பேரூராட்சி 10-வது வார்டில், தோப்பு வெங்கடாச்சலத்தின் வீடு இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலின்போது அங்கே இரட்டை இலை சார்பில் யாரும் போட்டியிடவில்லை. 'பொது வேட்பாளர்’ எனச் சாக்கு சொல்லி, தன் சொந்த வார்டில்கூட கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் பார்த்துக்கொண்டார் வெங்கடாச்சலம். காரணம், சொந்தக் கட்சி ஆளாக இருந்தாலும், தன் சொந்த கோட்டைக்குள் இன்னொருவருக்குச் செல்வாக்குக் கிடைப்பதை தோப்பு விரும்பவில்லையாம். சொந்த எதிரி, அரசியல் எதிரி யாராக இருந்தாலும் அவர்களிடம் நேரடியாக மோத மாட்டார். காக்கிகள் துணையுடன் பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளுவது வெங்கடாச்சலம் ஸ்டைல்.
'சாமி’கள் ராஜ்ஜியம்!:
அரசியலில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியிருந்த காலகட்டத்தில் மணல் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தார் வெங்கடாச்சலம். அப்போது சேனாதிபதி, 'பல்கி’ மணி ஆகிய இருவரும்தான் வெங்கடாச்சலத்தின் தொழில் பார்ட்னர்கள்.
பெருந்துறை நிலவள வங்கித் தலைவராக இருக்கும் சேனாதிபதி இல்லாமல் தோப்பின் ஓர் இலைகூட அசையாது. மணல் சமாசாரங்களை 'பல்கி’ மணி பார்த்துக்கொள்வார். 'திங்களூர்’ கந்தசாமி, பெரியசாமி, ராமசாமி, குப்புசாமி ஆகிய நான்கு 'சாமி’கள்தான் வெங்கடாச்சலத்தைச் சுற்றியிருக்கிறார்கள். கட்சிப் பதவி முதல் உள்ளாட்சி மன்றப் பதவி வரை இந்தச் சாமிகள் மனது வைத்தால் மட்டுமே கிடைக்கும். சொந்தக் கட்சிக்காரர்களுக்குக்கூட எதுவும் செய்யாதவர்கள் இவர்கள். இப்படி அமைச்சருக்கு ஆதரவானவர்கள் என்ற பட்டத்துடன் வளைய வரும் பல பட்டாளங்கள் மீது, மணல் கடத்தல் புகார்கள் மலை மலையாகக் குவிகின்றன.
ஆலமரத்தையே உலுக்கும் வெங்கடாச்சலம்!
சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தி வீட்டையும் நாட்டையும் பாதுகாக்கவேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஊழல் புகாரில் திளைத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு நேரடி சாட்சி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கார்த்திகேயன். இவர் பதவிக் காலத்தில் ஏராளமான முறைகேடுகளும்
லஞ்சப் புகார்களும் வெடித்துக் கிளம்ப, நடவடிக்கைகளுக்குப் பயந்து விடுமுறையில் சென்றார். அப்படிப் போனவரை மீண்டும் அழைத்து அதே பதவியைக் கொடுத்தது சுற்றுச்சூழல் துறை. அவரை அந்தப் பதவியில் மீண்டும் நியமிக்க கையெழுத்து போட்டு முதலமைச்சருக்குப் பரிந்துரை செய்தவர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம். கார்த்திகேயனின் நியமனத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்தபோதே, வழக்கு விவரங்களை மறைத்துவிட்டு கார்த்திகேயனை அந்தப் பதவியில் நியமித்தார்கள். 'தவறு செய்யாதவர்களைப் பொறுப்புக்குக் கொண்டுவருவதை விட்டுவிட்டு, பொறுப்புக்குக் கொண்டுவந்தவர்களின் மீதான கறையைக் கழுவும் வேலையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஏன் செய்ய வேண்டும்? கார்த்திகேயன் நியமனம் எந்த வகையிலும் சரியான நியமனம் அல்ல. எனவே, அவரை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் பதவியில் நியமித்தது செல்லாது’ எனக் கடுமையாகக் கண்டித்தது நீதிமன்றம்.
இத்தனைக்குப் பிறகும் கார்த்திகேயனை விட்டுத்தரவில்லை வெங்கடாச்சலம். கார்த்திகேயனை அந்தப் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்தார்கள். அந்த பெஞ்சும் 'கார்த்திகேயன் நியமனம் செல்லாது’ என்றது. 'தனி மனிதர்கள் பறவைகளைப் போன்றவர்கள். வருவார்கள், போவார்கள். ஆனால், நிறுவனம் என்பது ஆலமரம் போன்றது. என்றும் நிலைத்து இருக்கக் கூடியது. அதனால், தனி மனிதர்களுக்காக நிறுவனத்தின் விதிகளை மாற்றக் கூடாது’ எனத் தீர்ப்பில் கூறியது நீதிமன்றம்.
சமீபத்தில் ராணிப்பேட்டை சிப்காட்டில் தோல் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் நிலையத்தில் சேகரிக்கப்பட்டிருந்த கழிவுநீர்த் தொட்டி இடிந்து விழுந்து பக்கத்து தொழிற்சாலையில் தூங்கிக்கொண்டிருந்த
10 தொழிலாளர்கள் கழிவு நீரில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தனர். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் செயல்படும் லட்சணத்துக்கு இந்த அலட்சியம்
ஒரு சாம்பிள்!

அன்னதானம் !!!


சிவசாமி சிவகாமி தம்பதியரின் புதல்வன் கந்தன். பணக்காரரான சிவசாமி தினமும் அன்னதானம் செய்து வந்தார். கணவருக்கு உதவியாக சிவசாமி இருந்தான். சிறுவனான கந்தனுக்கு பெற்றோர் தினமும் இப்படி தானம் செய்கிறார்களே இது எதற்காக என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. தந்தையிடம் இதுபற்றி கேட்டான்.
மகனே ஒரு பங்குனி உத்திரத்தன்று என் தாத்தா எந்த தானத்தை ஆரம்பிக்க அதை உன் தாத்தாவும் கடைப்பிடித்தார். நானும் அதையே பின்பற்றுகிறேன். முன்னோர் செயலுக்கு காரணம் இருக்கும். ஆனால் நான் எந்த பலனையும் எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை என்பதால் அதை அறிய முயற்சிக்கவில்லை. வேண்டுமானால் நீ முயற்சித்துப்பார் என்றார்.
அப்பா நான் காட்டிற்குப் போய் தவமிருந்து அன்னதானத்தின் பலன் பற்றி அறிந்து வருகிறேன் நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்றான். சிவசாமியும் அனுமதி தர கந்தன் காட்டுக்கு புறப்பட்டான். அவனது அம்மா கட்டுச்சோறு கட்டிக் கொடுத்தாள். வழியில் ஒரு துறவி அவனைச் சந்தித்து பசிக்கிறது என்றார். கட்டுச்சோற்றை அவரிடம் கொடுத்துவிட்டு கந்தன் நடந்தான். காட்டை அடைந்த வேளையில் இருள் சூழ ஆரம்பித்தது. அவனைக் கண்ட ஒரு வேடன் தம்பி காட்டில் இருளில் நடமாடுவது நல்லதல்ல மிருகங்கள் உன்னைக் கொன்றுவிட வாய்ப்புள்ளது. நீ எனது வீட்டுக்கு வா என்னோடு தங்கி விட்டு காலையில் செல் என்றான்
கந்தனும் உடன் சென்றான் வேடன் தன் மனைவியிடம் இருவருக்கும் உணவு கொடு என்றான். அவள் ஒரு கொடுமைக்காரி நீயே தண்டச்சோறு கூட ஒருவனை கூட்டி வந்திருக்கிறாயா? என்று திட்டினாள். நீ அவனுக்கு தனியாக எதுவும் கொடுக்க வேண்டாம் எனக்கு தரும் சோற்றை தா அதை நான் பகிர்ந்து கொள்கிறேன் என்றான். அதன்படியே கந்தனுக்கு உணவு அளித்தான்.
இரவில் அவர்கள் பரணில் ஏறி படுத்தனர். தனக்குரிய இடத்தை சிறுவனுக்குக் கொடுத்துவிட்டு வேடன் விழித்திருந்தான். ஒரு கட்டத்தில் கண் அசந்தான். அங்கு வந்த புலி அவனைக் கொன்றது. மறு நாள் வேடனின் மனைவி அந்த அதிர்ச்சியில் இறந்துவிட்டாள்.
வருத்தமடைந்த கந்தன் தவம் செய்ய காட்டுக்கு சென்றான். அப்போது ஒரு ஆண் குழந்தையின் அழுகுரல் கேட்டது. தவமுயற்சியை விட்டுவிட்டு அரண்மனையில் ஒப்படைத்தான். அது அந்த நாட்டு ராஜாவின் குழந்தை ராஜாவுக்கு வேண்டாத சிலர் அது பிறந்தவுடன் காட்டில் போட்டிருந்தனர். குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் ராஜா கந்தனைப் பாராட்டினார். அப்போது குழந்தை பேசியது.
நான் நேற்று இரவு இறந்து போன வேடன் தான் இந்த சிறுவனுக்கு உணவளித்ததால் ராஜா வீட்டு குழந்தையாகப் பிறந்தேன். இவனுக்கு உணவளிக்க மறுத்த என் மனைவி காட்டில் பன்றியாகப் பிறந்திருக்கிறாள். அன்னதானத்தின் பலன் பற்றி அறிய இந்தச் சிறுவன் காட்டுக்கு வந்தான். அவனுக்கு அதை உணர்த்தவே இறைவன் மூலம் இந்த நாடகம் நடந்தது. என்றது. தானத்தின் பெருமை உணர்ந்த கந்தன் வீட்டுக்கு வந்து பெற்றோர்களிடம் சொல்ல அவர்கள் தானத்தைத் தொடர்ந்தனர்,
https://chinnuadhithya.wordpress.com/

பஞ்சபூத எண் கணிதம்(தமிழ் முறை எண் கணிதம்}

Siddhayogi Sivadasanravi's photo.
ல் 'அ ' என்ற உயிர் எழுத்தை மட்டும் எடுத்துக்கொள்கிறார். எழுத்துக்களுக்கு அவர் கொடுத்திருக்கும் எண் மதிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
அ-1
ஆ-2
இ-2
ஈ-3
உ-3
ஊ-4
எ-4
ஏ-5
ஒ-5
ஓ-6
ஐ-1
ஔ-1
புள்ளி வைத்த எழுத்துக்கள் -2
பஞ்ச பூத எண்கள்
நிலம்-1
நீர்-2
நெருப்பு-3
காற்று-4
ஆகாயம்-5
பலன்கள்
1-அரசியல் ஆர்வம், பூமிலாபம்
2-பணம்
3-அழிவு
4-வியாபாரம்,உலகப்புகழ்
5-ஞானம்
உதாரணம்
சிவா
ச்+இ- 2
வ்+ஆ-2
சிவா என்ற பெயரின் கூட்டு எண் 2+2=4 இதன் பலன் வியாபாரம்,உலகப்புகழ்
கூட்டு எண் 5க்கு மேல் வந்தால் 5ன் மடங்குகளை கழித்துவிட்டு மிச்சமுள்ள எண்ணுக்கு பலன் பார்க்கவேண்டும்.

செவ்வாய், ஜூலை 07, 2015

திருமணத்திற்கு

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்
1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.
- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.