புதன், நவம்பர் 20, 2013

கண்ணதாசன் கவிதை



கண்ணதாசன் கவிதைகளில் இதுவும் ஒன்று . இந்த மரபுக்கவிதைகளில் நுண் அர்த்தங்களும் ஆழ்பிரதிகளும் இல்லை. நேரடியானவை. இந்தக்கவிதையில் நம் செட்டிநாட்டு மண்ணின் அடையாளம் உள்ளது. கவிஞரின் அபாரமான நகைச்சுவை உணர்ச்சி உள்ளது. அந்த மாமியாரின் மாய்மாலமெல்லாம் சொற்களிலேயே வெளிப்படுகிறது.
கவிமணியின் நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழி மான்மியத்தை முன்னுதாரணமாகக் கொண்டு நம் செட்டிநாட்டுக் கவிஞர் கண்ணதாசன் இயற்றியுள்ளார்
மாமியார் மான்மியக் கவிதை இதோ உங்களுக்குகாக . இதில் நம் பழக்க வழக்கம் ,திருமண நடைமுறை ,இயல்பு வாழ்க்கை குறித்தும் காணமுடிகிறது .


நல்லாத்தான் சொன்னாரு...
நாராயணச் செட்டி!

பொல்லாத பெண்ணாக
பொறுக்கி வந்து வச்சாரு

வல்லூறைக் கொண்டு வந்து
வாசலிலே விட்டாரு

கல்லாப் பொறந்ததையும்
கரும்பாம்புக் குட்டியையும்

செல்லாப் பணத்தையும்
செல்ல வைச்சு போனாரு

ஊரெல்லாம் பெண்ணிருக்கு
உட்கார வச்சிருந்தா

தேரெல்லாம் ஓடிவந்து
திருவிழாக் கோலமிடும்.

எட்டுக் கண் விட்டெரிக்க
எந்தம்பி மகளிருக்க

குத்துக் கல்போலே ஒண்ணெ
கூட்டிவந்தோம் வீடுவரை!

ஆறாயிரம் வரைக்கும்
அள்ளி வச்ச சீதனமும்

ஆறு வண்டி சாமானும்
அடுக்கி வைக்க பாத்திரமும்

சொக்க வெள்ளிப் பால்குடமும்
சோதி மின்னும் ரத்தினமும்

பச்சரிசி மூட்டையுடன்
பருப்பு வகை அத்தனையும்

எட்டுக்கல் மூக்குத்தியும்
ஏழு பவன் சங்கிலியும்

கண்டசரம் தோடு
காப்பு வைர மோதிரமும்

கண்டாங்கிப் பட்டுவகை
காசியிலே நெய்த பட்டு

மெத்தையுமே பத்துவகை
விரிச்சு வைக்க கம்பளமும்

தேக்கு மரம் கடைஞ்சு
செஞ்சு வச்ச பீரோவும்

தந்திருப்பான் எங்க தம்பி
தன் மகளை தந்திருந்தா

வந்தாளே காலியம்மா
வாய்க்கரிசி இல்லாமல்

அப்பன் கொடுத்தா சொத்து
ஆறுநாள் தாங்காது

கப்பலிலே வருகுதூணு
கதையா கதைபடிச்சான்

கண்ணா வளத்த பிள்ளை
காலேசிலே படிக்க வைச்சு

மண்ணாளும் ராசாபோல்
வளர்ந்ததடி என்வீட்டில்

பெண்ணா இவ சனியன்
புத்தி கெட்டு போனேனே

தம்பிமக சமைச்சா
சபையெல்லாம் வாசம் வரும்

அள்ளி இலையிலிட்டா
அடுக்கடுக்கா வெள்ளிவரும்

உண்ணவொரு கையெடுத்தா
உள்நாக்கில் நீர்வடியும்

கத்தரிக்காக் கூட்டுவச்சா
கடவுளுக்கே பசியெடுக்கும்

வெண்டைக்கா பச்சடியும்
வெள்ளரிக்கா தக்காளி

கிண்டி விட்ட கீரைக்கும்
கீழிறங்கும் தெய்வமெல்லாம்!

அப்படி சமைப்பாளே
அள்ளியள்ளி வைப்பாளே

அடுப்படிக்கு நான்போக
அவசியமே இல்லாமே

உட்கார்ந்த பாய்வரைக்கும்
ஓடிவந்து வைப்பாளே

இவளும் சமைச்சாளே
எல்லாந் தலையெழுத்து

முருங்கையிலே கீரை
முளையாய் முளைச்சதடி

விடிஞ்சா எந்திரிச்சா
வேறுகாய் இல்லையடி

குப்பையிலே கீரை
கொத்தாய் கிடைச்சதடி

அப்பா இவ எடுத்து
அகப்பையிலே கிண்டி விட்டு

சப்பாத்திக் கள்ளியை போல்
தையல் இலை போட்டு

வச்சாளே! சாமி இந்த
வலுசாரத் தந்தானே

வந்த நாள் தொட்டு
என் மகனைப் பிரிச்சு வைச்சா

எந்த நாள் பாவமோ
இப்ப வந்து சுத்துதடி

தலைக்காணி மந்திரத்தால்
தாயை மறக்க வச்சா

கொலைக்காரி வந்து எங்க
குடும்பம் பிரிச்சுவைச்சா

மலையரசி காளி எங்க
மாரியம்மா கேக்கோணும்

பலகாரம் தின்பதற்கும்
பசியே எடுக்கலைடி

ராசாக் கிளி போலே
நல்ல பிள்ளை பெத்தெடுத்தேன்

பேசாக் கிளியாச்சு
பெண்டாட்டி நினைவாச்சு

ஊசப் பணியாரம்
உளுந்த வடைக்கு ஊசலடி

பாருடாண்ணு சொன்னா
பாக்காம போறாண்டி

கேளுடாண்ணு சொன்னா
கேக்க மனம் இல்லியடி

எப்பவோ நானும்
இது வரைக்கும் வாழ்ந்தாச்சு

கொப்பாக எங்களைய்யா
கொடுத்தத நான் வச்சிருந்தா

இப்பாவி கையாலே
இழிசோறு திங்கணுமா

ஆத்தா கொடுத்தாளே
ஆறு தலைமுறைக்கு

ஐயா கொடுத்தாரே
ஐநூறு பொன் வரைக்கும்

பூமி கொடுத்தாரே
போட்டாக்க பொன் விளைய

சாமி கொடுத்ததுபோல்
தாய் தகப்பன் தந்ததெல்லாம்

பாவி மகன் வாழ
பகுந்து கொடுத்தேனே

நீட்டி படுக்கும்வரை
நிம்மதியா வாழ்ந்தேனா

ஊட்டி வளத்த பிள்ளை
ஒரு வார்த்தை கேட்டானா

எல்லாம் முடிஞ்சதடி
எமன் வந்தால் போதுமடி

பல்லாக்கு தூக்கி
பரிவாரம் தூக்கி வந்து

பச்சை மரம் வெட்டி
பட்ட விறகடுக்கி

வச்ச பின்னே மீண்டும்
வாழ வரப் போறேனா

கொள்ளி வச்சு தலமாட்டில்
குடமுடைக்க வந்த பிள்ளை

பள்ளி வரை என்னை
பாத்து வச்சு காத்தானா

தேவி விசாலாட்சி
தென்மதுரை மீனாட்சி

காவலுக்கு நீதான்
கடைசி வரை வேணுமடி

ஒரு மகளைப் பெத்தேனா
உதவிக்கு வேணுமின்னு

மருமகளை நம்பி நின்னேன்
மகராசி பேயானா

நல்லாத்தான் சொன்னாரே
நாராயணன் செட்டி!

-கவியரசு கண்ணதாசன்
 — with Santharam Sambandhamoorthy.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக