வட்டப்பாறை அம்மன்
சில வருடங்களுக்கு முன் முதன் முறையாக நான் திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திற்கு என் மனைவி மக்களுடன் சென்றிருந்தேன். ஆலய தரிசனம் முடித்துவிட்டு வெளியே வரும்பொழுது பதினொரு மணி இருக்கும். அன்று நன்றாக வெயிலடித்துக்கொண்டிருந்தது.நல்ல தாகமாய் இருந்தது. பக்கத்துக்கடையில் குடிநீர் குப்பி ஒன்றை வாங்கி அதன் மூடியை திறந்து குடிப்பதற்காக எத்தனித்தேன்.பின்னாலிருந்து ஒரு குரல் " எப்பா தம்பி கொஞ்சம் தண்ணீர் கொடப்பா" என்றது.ஒரு வயதான மூதாட்டி பிரசாதம் சாப்பிட்ட கையை கழுவுவதற்க்காக என் கையில் உள்ள தாண்ணீரை கேட்டார்.15 ரூபாய் கொடுத்து வாங்கிய தண்ணீரை கை கழுவ கேட்கிறாரே என்று எனக்குள் கொஞ்சம் தயக்கம். என் மனைவியோ கொடுங்கள் என வற்புறுத்தினாள். நானும் அவரிடம் கொடுத்துவிட்டு திரும்பிப்பார்த்தால் பக்கத்திலே தண்ணீர் தொட்டி இருந்தது. இவர் ஏன் தண்ணீர் தொட்டியை பயன்படுத்தாமல் என்னிடம் தண்ணீர் கேட்டார் என்று புரியவில்லை. அந்த மூதாட்டி நான் கொடுத்த தண்ணீரில் கை கழுவிய பின். முக்கால் வாசி நீரை குடித்துமுடித்து, மிச்சத்தை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்,இந்த செய்கை கொஞ்சம் வினோதமாகப்பட்டது.வீட்டிற்கு வந்த பின் விசயத்தை பக்கத்து வீட்டினருடன் பகிந்துகொண்டபோது,அவர்கள் திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திற்குள் அமைந்துள்ள வட்டப்பாறை அம்மன் பற்றிய கதையை கூறி வட்டாப்பாறை அம்மன் தான் உங்களிடம் தண்ணீர் கேட்டிருக்கிறாள் என்று கூறினார்கள்.ஆலய தரிசனத்தின்போது வட்டப்பாறை அம்மனை மட்டும் நாங்கள் நின்று வணங்காமல் வந்துவிட்டோம்.மறுமுறை நான் அங்கு சென்றபோது வட்டப்பாறை அம்மனுக்கு பூஜை செய்பவர் எங்களை பிரத்யேகமாக கவனித்தார். தாகம் தேராமல் வீடு வீடாக சென்று தண்ணீர் கேட்டவளை கிணற்றிற்குள் இறங்கி தண்ணீர் குடிக்குமாறு கூறிவிட்டு அவள் கீழே இறங்கியவுடன் பெரிய பாரங்கல்லை வைத்து கிணறை மூவிட்டதாக அந்த அம்மன் பற்றி ஒரு கதை சொல்லபடுகிறது. அது உண்மையாக இருக்குமோ என தோன்றுகிறது. அந்த ஆலயத்திற்கு சென்று வந்த பின் தான் இந்த கதை எனக்கு சொல்லப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக