புதன், நவம்பர் 20, 2013

வானொலி உலகில் விளம்பரத்தின் இருப்பு

வானொலி உலகில் விளம்பரத்தின் இருப்பு
"பூக்கடைக்கும் விளம்பரம் தேவை தானே" என்பவர்கள் சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியின் "ஜோதி ஸ்டோர்ஸ்" புஷ்பக்கடை விளம்பரத்தைக் கைகாட்டுவார்கள். இன்று நேற்றல்ல வானொலி ஊடகம் ஆரம்பித்த காலம் தொட்டே விளம்பரதாரர்கள் இந்த ஒலி ஊடகத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். இன்றைக்குப் பெரும்பாலான வானொலிகளில் முக்கியமான பாடல் நிகழ்ச்சிகளில் கூட விளம்பரத்தின் ஆக்கிரமிப்பில் பாடல்கள் துண்டாடப்படும்.

அகில இந்திய வானொலி நிலையத்தை விட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விளம்பரத்தின் செல்வாக்கு மிகையாக இருந்ததற்கு முக்கிய காரணியாக இந்த இலங்கை வானொலியில் உருவாக்கப்பட்ட வர்த்தக சேவை எனலாம். பாடல், களியாட்ட நிகழ்ச்சிகளுக்கு பெரும் விளம்பரதாரர்களின் விளம்பரங்களே முதுகெலும்பாய் அமைந்தன. நாடகங்களுக்கும் (குறிப்பாக
தணியாத தாகம்), பாட்டுக்குப் பாட்டுப் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணையாக அமைந்த விளம்பரங்கள் குறித்த நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே பெற்ற அபிமானத்துக்கு நிகரான புகழைப் பெற்றன. இவை மூலம் குறித்த வர்த்தக ஸ்தாபனங்களுக்குக் கிடைத்த நன்மதிப்பு பலமடங்காயிற்று என்றால் மிகையாகாது. குறிப்பாக லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு சிறந்ததோர் உதாரணம்.

இந்திய வானொலியில் எஸ்.வி.ரமணன் குரல், இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியின் சகோதரி (பெயர் நினைவிலில்லை) ஆகியவை எவ்வளவு தூரம் விளம்பரங்களுக்கு எடுப்பாக அமைந்து விட்டன என்பதற்கு நிஜாம் பாக்கு, கோபால் பற்பொடி விளம்பரங்களைச் சுட்டமுடியும். அதே போன்று இந்திய வானொலியில் இரவு நேர விவசாய நிகழ்ச்சி ஒன்றில் இருபது வருஷங்களுக்கு முன்னர் பயன்பட்ட ஒரு பாடல்
"என் அத்தானின் வயல் தனிலே அருவி போல் தண்ணீரு பாயுதே" (பெண் குரல்)
"பினலெக்ஸ் பைப்பின் ஜாலமே தங்கமே தங்கமிது" (ஆண் குரல்)
மேற்குறித்த விளம்பரப் பாடல் இன்று வரை சினிமாப்பாடல்களுக்கு நிகராக என் நினைவில் தங்கியிருப்பதற்கும் குறித்த விளம்பரத்தைத் தயாரித்தவர்களையே சாரும்.

இலங்கை வானொலியை எடுத்துக் கொண்டால் பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசனின் வானொலிப் பங்கில் விளம்பரத்தின் அவர் கையாண்ட புதுமை பதியப்பட வேண்டியது. ஈரடி வெண்பா பாணியில் விளம்பரங்களை உருவாக்கி அதைப் பொருத்தமான ஆண் பெண் குரலில் பாடவைத்துக் குறித்த விளம்பரங்களைப் பாடல்களாய் முணுமுணுக்க வைத்ததற்கு ஓர் உதாரணம் இலங்கை வானொலிச் சரித்திரத்தில் மிகப்பெரும் புகழ் பெற்ற நாடகமான "தணியாத தாகம்" நாடகத்தில் வரும்
"அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே" என்ற பாடல். சில்லையூர் செல்வராசன், எஸ்.கே.பரராஜசிங்கம் போன்ற ஆளுமைகள் தம் செழுமையான இலக்கிய அறிவை வானொலி ஊடகத்துக்குத் தகுந்தாற் போல இவ்வகையை மெல்லிசை விளம்பரப்பாடல்களாக ஆக்கியளித்தார்கள் என்றால் மறுபுறம் அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா ஆகியோரின் திறன் சினிமாப்பாடல்களை வைத்து விளம்பர வல்லமை படைத்தது. அதாவது ஏதாவது சினிமாப்பாடலின் முதல் அடியை எடுத்து அதைச் சுவை கலந்த உரையாடலோடு நுட்பமான வகையில் செதுக்கி விளம்பரப்படுத்தி விடுவார்கள். உதாரணமாக என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் பாடிய "தங்கமே தங்கமே" என்ற காதல் பாடல் நகைக்கடை விளம்பரமாகியது. கே.எஸ்.ராஜாவின் தனித்துவமான குரலில் மிளிர்ந்த "திரைவிருந்து"என்ற நிகழ்ச்சி ஒரு விளம்பர நிகழ்ச்சி என்பதையே மறக்கடிக்கச் செய்து சுவாரஸ்யமான வர்த்தக நிகழ்ச்சியானதற்கும் இந்தக் கலைஞனின் திறமையே குறிப்பிடத்தக்கதாகும். முன்பெல்லாம் தியேட்டர்களுக்குச் சென்று படத்தைத் திரையிட்டு முன்வரிசையில் இருந்தவாறே ரேப் ரெக்கோடரில் அதைப் பதிவு செய்து பின்னர் வானொலிக் கலையகத்தில் வந்து முன்னர் பதிவு செய்யப்பட்ட குறித்த திரைப்படத்தின் வசனங்களைத் திரைப்படத்திற்கான விளம்பரத்தோடு இணைத்தார்களாம். முன் சொன்ன அறிவிப்பாளர்களோடு வானொலி விளம்பரத்துறையின் பங்காளிகளாக மயில்வாகனம் சர்வானந்தா, நடராஜசிவம், கமலினி செல்வராஜன் என்று ஒரு பெரும் பட்டியல் நீளும். இலங்கை வானொலியின் விளம்பரங்களின் தோற்றம், அவற்றின் பரிணாணம் இவையெல்லாம் பற்றிப் பேசவேண்டுமென்றால் ஒரு ஆய்வுக்கு ஒப்பானது. இந்தப் பணியை இலங்கை வானொலியின் பொற்காலமாக இருந்து விட்ட எழுபதுகளில் இருந்து எண்பதுகளின் முற்பகுதி வரை பணியாற்றியோர் மட்டுமே ஆழ அகலமாகச் செய்ய முடியும். என் வானொலி கேட்டல் அனுபவங்கள், அவதானிப்புக்கள், வானொலியாளர்களோடு பழகியபோது அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களையே முன் சொன்ன பத்திகளில் நான் குறிப்பிட்டிருக்கின்றேன்.

தமிழ் வானொலிகளின் எண்ணிக்கை பரவலாக உலகெங்கும் வியாபித்த போது விளம்பரங்களின் தேவையும் பன்மடங்காக வளர்ந்துள்ளமை இந்தத் துறையோடு நேரடி அனுபவம் மிக்கவர்களுக்கு மிக நெருக்கமான உண்மை. 1996 ஆம் ஆண்டில் முதல் 24 மணி நேர தமிழ் வானொலியாக கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கின்றது. அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் ஒன்று இரண்டாக வானொலிகள் முளைக்கின்றன. இதற்கு முன்பெல்லாம் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் அல்லது அரைமணி நேரம் மட்டுமே வானொலிச் சேவை புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்திருக்கின்றது. சிங்கப்பூர், மலேசியா விதிவிலக்காக சற்று அதிகப்படியான நேரங்களோடு நாளாந்த சேவையில் ஈடுபட்டிருக்கின்றன. புலம்பெயர்ந்த சூழலில் சிங்கப்பூர், மலேசிய வானொலிகள், பிபிசி தமிழ்சேவை தவிர்ந்த மற்றைய வானொலிகள் ஈழத்தமிழ் சமூகத்தால் உருவாக்கி நடாத்தப்பட்டு வந்தன, வருகின்றன. சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியும் மலேசிய தமிழ் வானொலியும் மெல்ல 24 மணி நேரத்திற்குத் தம் சேவையை விரிவுபடுத்துகின்றன. இலங்கையிலும் தனியார் வானொலிகள் புதிதாக முளைக்கின்றன. சக்தி, சூரியன், சுவர்ணஒலி (இப்போது இல்லை), வெற்றி என்று அவை 24 மணி நேர வானொலிகளாக மாறும் போது அங்கேயும் முதுகெலும்பாய் இருப்பது விளம்பரதாரர்களது சேவை என்பது தவிர்க்கமுடியாதது. வானொலிகளின் வருகையைப் பற்றிய அறிமுகத்தை இங்கே நான் குறிப்பிட்டதற்குப் பின்னால் வர இருக்கும் பத்திகளுக்கான தேவையாக அமைந்திருக்கின்றது. மற்றப்படி தமிழ் வானொலிகளின் தோற்றம் குறித்தும் இன்னொரு விரிவான பதிவு தேவையாக அமைகின்றது.

சிங்கப்பூர் வானொலி போன்ற ஊடகங்களில் அந்த நாட்டில் இருக்கும் பல நூறு தமிழ்வர்த்தக ஸ்தாபனங்களோடு ஒப்பிடும் போது விளம்பரங்கள் என்று பார்த்தால் ஒரு சில நிறுவனங்களே பயன்பட்டால் இருக்கின்றன. அதற்கு வானொலியின் சில கட்டுப்பாடுகள். விளம்பர விதிமுறைகள், கட்டணங்கள் காரணியாக இருக்கலாம். இதற்கு நேர்மாறாக மலேசியாவின் THR ராகா என்ற தனியார் வானொலியில் மணிக்கொரு தடவை 15 நிமிடத்துக்கு மேலாக குறித்த சில வர்த்தக ஸ்தாபனக்களின் சிறப்பு விளம்பரதார் நேரம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த THR ராகா வானொலியில் வரும் விளம்பரங்களில் ஆனந்தாவும் சங்கராவும் இணைந்து நடத்தும் ஶ்ரீ மீனாட்சி நிறுவனத்தின் ஊறுகாய், மசாலாப்பொடி விளம்பர நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்த்து இன்று வரை நான் கேட்டு ரசிக்கின்றேன். அதில் அவர்கள் இருவரும் கற்பனைத் திறனோடு நகைச்சுவை கலந்து உருவாகிய இந்த விளம்பரப்படைப்பின் வெற்றி விளம்பரம் செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் உற்பத்திகள் மலேசியாவில் இருந்து சிட்னிக் கடைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட போது கடல் கடந்த நாட்டில் வாழும் என்னைப் போன்ற நுகர்வோனையும் எட்டியிருக்கின்றது.

அந்த ஒலிப்பதிவுகளை இங்கே தருகின்றேன்

தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட விளம்பரம் பின்னர் வானொலியிலும் ஒலிவடிவில் பயன்படுத்தப்படும் கூத்தும் இருக்கின்றது. குறிப்பாக சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய் என்ற பழைய விளம்பரம் இந்திய வானொலியில் இருந்து உதாரணம் காட்டும் அதே வேளை இன்று சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியின் காலை நிகழ்ச்சியான ஆனந்தம் ஆரம்பம் நிகழ்ச்சிக்குப் பயன்படும் "ப்ரூ காபி" விளம்பரமும் இத்தகையதே".

வானொலி ஊடகத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக என் பங்களிப்பும் இருக்கின்ற காரணத்தினால் உள் வீட்டு விவகாரங்கள் சிலவற்றையும் இங்கே சொல்லி வைக்க வேண்டும். புலம்பெயர்ந்த நாடுகளில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல்லின வானொலிச் சேவைகள் ஒருபக்கம் (பிபிசி தமிழ் சேவை) இருக்க முழுமையான தனியார் தமிழ் வானொலிகள் என்று அமையும் பட்சத்திலே அங்கே ஒரு சிலரின் முதலீடும் விளம்பரங்களின் அனுசரணையுமே பெரும் தேவையாக அமைகின்றது. அரச அனுசரணையோடு இயங்கும் வானொலிகளில் வர்த்தக விளம்பரங்களுக்கே ஏகப்பட்ட கட்டுப்பாடும் விதிமுறைகளும் உண்டு. குறிப்பாக சில நொடிகள் மட்டுமே இருத்தல் வேண்டும், ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பயன்படுத்தலாகாது ஆகியவை சில உதாரணங்கள்.
தனியார் வானொலிகளின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் விளம்பரதாரர்களின் தேவையும் அவசியமும் கணிசமான அளவு பங்கை வகிக்கக் காரணம் வானொலி இயங்குவதற்கான உரிமம், இயங்கு கருவிகள், தொழில் நுட்ப மேம்படுத்தல்கள், தொலைபேசிக் கட்டணங்கள் (குறிப்பாக இன்னொரு நாட்டுக்கு அழைத்துப் பேட்டி, செய்திச் சேவையைப் பெறுவதற்காக) இவையெல்லாம் தவிர தமிழில் எந்தெந்தப் படங்கள் நேற்றிலிருந்து இன்று வரை வெளியாகியிருக்கின்றனவோ அவற்றின் பாடல் இசைத்தட்டுக்களை வாங்கி வைத்திருக்கின்ற தேவையும் இருக்கின்றது. நொள்ளை சொள்ளை நல்லது கெட்டது என்றில்லாமல் எல்லாப் படங்களது பாடல் இசைத்தட்டுக்களையும் வாங்கி வைத்திருக்கும் தேவை ஏற்படுகின்றது. என் சிற்றறிவுக்கு எட்டியவரை அவுஸ்திரேலியாவில் இயங்கும் வானொலிகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமே ஊதியமற்ற சேவையை வழங்குகின்றார்கள். மற்றைய எல்லா நாடுகளில் இருக்கும் வானொலிச் சேவையாளர்களுக்கு சேவை நேரத்தைப் பொறுத்து ஊதியமும் வழங்கப்படுகின்றது. இங்கேயும் விளம்பரவருவாயே இதைத் தீர்மானிக்கின்றது.

விளம்பரம் என்று எடுக்கும் போது கூட வானொலியில் அவற்றைப் பல்வேறு வகையினதாகக் கையாளுவார்கள். சமூக அறிவித்தல்கள் என்ற பிரிவின் கீழ் தொண்டு ஸ்தாபனங்கள், பல்வேறு நல அமைப்புக்களின் அறிவித்தல்கள் அடக்கப்பட்டு அவை பிரதான செய்திகளுக்குப் பின் இலவசமாக வாசிக்கப்படும். இவற்றுக்குக் கட்டணம் அறவிடப்படுவதில்லை. மரண அறிவித்தல் போன்றவற்றுக்கு ஒவ்வொரு சொற்களுக்கும் இத்தனை பைசா என்று அறவிடப்படும். (நான் பணியுரியும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மரண அறிவித்தல்களுக்குப் பணம் அறவிடப்படுவது தவிர்க்கப்பட்டிருக்கின்றது).

அடுத்தது வர்த்தக விளம்பரங்கள் இவற்றில் குறுகிய கால நோக்கினதான விளம்பரங்களும் , நீண்டகால ஒப்பந்த அடிப்படையிலான விளம்பரங்களும் அடங்கும். குறுகிய கால விளம்பரங்களுக்குச் சிறந்த உதாரணமாக தென்னிந்தியக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், திரைப்படக் காட்சிகள் அடங்கும். நீண்டகால நோக்கிலான விளம்பரங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதம், ஒரு வருஷம் என அமையும். இங்கே சில விபரீதமான செயற்பாடுகளையும் சொல்லி வைக்க வேண்டும். வானொலிகளுக்கிடையிலான கழுத்தறுப்புப் போட்டிகள் காரணமாக ஒரு வானொலி இன்னொரு வானொலியில் விளம்பரம் செய்வதைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தும் மீறினால் இரட்டிப்பான கட்டணம் தரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படும். குறித்த வானொலி சமூகத்தில் தான் செல்வாக்கானதொரு வானொலியாக ஏற்படுத்தும் பிரமையில் மயங்கிப் பின்னால் போய்விடும் வர்த்தகர்களும் உண்டு. இது ஒருபுறம் இருக்க இன்னொரு வகையான விபரீதம் என்னவென்றால் விளம்பரம் செய்யும் வர்த்தகர்கள் செய்யும் ஏய்ப்பு. புலம்பெயர்ந்த சமூகத்தில் வானொலியைத் தேடி விளம்பரம் செய்ய வேண்டும் என்று வரும் வர்த்தக ஸ்தாபனங்கள் மிகச் சொற்பமே. வானொலிகளே வர்த்தகர்களைத் தேடிப் போய் விளம்பரங்களைப் பெறவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்ற காரணத்தினால் வர்த்தகர்களின் நிபந்தனைகளுக்குள் கட்டுப்படவேண்டிய நிலை உருவாகின்றது. உதாரணமாக விளம்பரத்துக்காக முற்கூட்டியே பணம் தரப்படமாட்டாது, விளம்பரம் செய்தும் எனக்கு வியாபாரம் இல்லையென்றால் பணம் தரமாட்டேன் இப்படியான நிபந்தனைகள் ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் குறித்த கடை விளம்பரம் ஒரு வருடம் ஓடிக்கொண்டிருக்கின்றதால் 12 வது மாதம் கடையையும் காணோம், கடைக்காரரையும் காணோம் என்ற நிலை பல சந்தர்ப்பங்களில் இருக்கின்றது.

புலம்பெயர்ந்த சமூகத்தில் வானொலிகளின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு, அவை சார்ந்த வர்த்தக நிறுவனங்கள் இலங்கை இந்திய தமிழ் வர்த்தக நிறுவனங்கள் என்ற மட்டுப்படுத்தப்பட்ட எல்லையில் இருப்பதால் கடை கடையாகத் தேடிப் போய் எட்டிப் பிடிக்கும் விளம்பரங்களைத் தயாரிப்பதில் எவ்வளவு தூரம் கரிசனை காட்டப்படுகின்றது என்பதற்கு இணையமூலம் வரும் வானொலிகளை நீங்கள் கேட்டாலே நல்ல உதாரணக்களைப் பிடிக்க முடியும். இந்த விஷயத்தில் 24 மணி நேர வானொலிகளின் முன்னோடியான கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்யும் விளம்பரங்களில் ஈழத்தவரின் குணாதிசியங்களை எள்ளல் பாணியில் காட்டிச் செய்யும் நகைச்சுவை கலந்த வர்த்தக விளம்பரங்களின் உருவாக்கம் அலாதியானது. கனேடியத் தமிழ் வானொலியில் இளம் அறிவிப்பாளர்கள் தயாரித்து ஒலிபரப்பாகும் விளம்பரங்களும் சளைத்தவை அல்ல. ஐரோப்பிய வானொலிகளில் ஐபிசி வானொலி போன்ற குறிப்பிட்ட சில ஊடகங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களைத் தயாரிப்பதில் முனைப்பு இருக்கின்றது. சிங்கப்பூர் வானொலியில் ஏற்கனவே இந்திய ஊடகங்களில் இடம்பெறும் விளம்பரங்கள் சில மீளப் பெறப்பட்டு ஒலிபரப்பாகக் காரணம் இறக்குமதிச் சந்தை நோக்கிய விளம்பரங்களாக அவை அமைந்து காணப்படுகின்றன. இலங்கையில் தனியார் வானொலிகள் ஒவ்வொன்றுமே போட்டி போட்டுக் கொண்டு அவரவர் பாணியில் தனித்துவமாக விளம்பரங்களைச் செய்கின்றார்கள். புலம்பெயர்ந்த வானொலி ஊடகங்களில் பரவலாக ஒப்பு நோக்கினால் வானொலி விளம்பரங்களைச் செய்ய எடுக்கும் முனைப்பும், கற்பனைத் திறனும் மிகவும் சொற்பமாக அமைந்து அவை அற்பமாக மாறி விடுகின்றன. ஏனோ தானோ என்று ஏண்டா எடுப்பாகச் செய்யப்படும் சில வானொலி விளம்பரங்களைக் கேட்கும் போது வானொலியின் காதைத் திருகத் தோன்றும். விளம்பரம் என்பதே கலை அதுவும் வானொலி விளம்பரம் என்னும் போது அதற்கான ஈர்ப்பு இன்னும் ஒரு படி மேல். எனவே பொருத்தமான வானொலிக் கலைஞர்கள், படைப்பாளிகளை வைத்து இவற்றை உருவாக்கி மெருகேற்றுவது இருக்கும் விளம்பரதாரரை தக்கவைக்கும் என்பது மட்டுமல்ல இனி வரப்போகும் விளம்பரதாரர்களுக்கும் இவற்றினை உதாரணங் காட்டி இழுக்க முடியும் என்பதே உண்மை.

ஒருமுறை இணையமூலம் குறித்த வானொலி ஒன்றைக் கேட்ட போது எனக்குப் பெரும் அதிர்ச்சி. அந்த வானொலி விளம்பரம் இப்படிப் போகின்றது. "போகாதே போகாதே" என்று ஒரு பெண் கூக்குரல் இடுவார். பின்னால் ".....அந்த உணவகத்தைத் தவிர வேறு உணவகம் போகாதே" என்று விளம்பரம் போகும். இங்கே சொல்லப்படும் செய்தி என்னவென்றால் குறித்த இந்திய உணவகம் தவிர வேறு இந்திய உணவகம் போகாதே என்பதே. இப்படியொரு விளம்பரம் செய்து விட்டு அதே வானொலி இன்னொரு இந்திய உணவகத்தைப் பற்றி விளம்பரம் செய்தால் எப்படியானதொரு கேலிக்கூத்தாக அமையும் என்பதை உங்களிடமே விட்டு விடுகின்றேன். குறித்த சில நாட்களுக்குப் பின் அந்த வானொலி விளம்பரம் தூக்கப்பட்டு விட்டது நிச்சயமாக இதே போன்ற ஒரு கண்டனத்தை அவர்கள் பெற்றதன் வெளிப்பாடாகத் தான் சொல்ல வேண்டும்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். வானொலி உலகின் காவலனாக இருக்கும் விளம்பரத்தின் தேவையை விளம்பரதாரர்கள் உணர்ந்து ஆதரவுக்கரம் கொடுக்கின்ற அதேவேளை இந்த விளம்பரத்தைச் செம்மையாக்கி ஒரு கலைப்பண்டமாகக் கொடுக்கும் தேவை வானொலிப் படைப்பாளிகளுக்கு உண்டு என்பதை மறத்தலாகாது.

இந்தப் பதிவு முடியும் தறுவாயில் ஒரு விஷயத்தைச் சொல்லி வைக்கின்றேன். ஈழத்தின் படைப்பாளி, பிரபல வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் காவலூர் ராசதுரை அவர்களின் "விளம்பரத்துறை - தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்" என்ற நூல் குறித்த ஒரு பகிர்வை வழங்குவதற்கான அறிமுகமாகத் தான் இந்தப் பதிவின் ஆரம்பப் பகிர்வுகளை வழங்க ஆரம்பித்தேன். ஆனால் மேலே சில விஷயங்களை விலக்காமல் தொடரவேண்டிய தேவை ஏற்பட்டதால் பதிவின் திசை மாறி விட்டது. இருப்பினும் காவலூர் ராசதுரை அவர்களின் "விளம்பரத்துறை - தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்" என்ற நூல் குறித்த என் பகிர்வை அடுத்த பதிவில் தருகின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக