வெள்ளி, செப்டம்பர் 09, 2016

பச்சமுத்து கரன்சி தந்தையான கதை-விகடன்


கணக்கு ஆசிரியர், கல்லூரி அதிபர், ஊடக முதலாளி, படத் தயாரிப்பாளர், அரசியல் கட்சியின் தலைவர் என தனக்குத்தானே பல அரிதாரங்களைப் பூசி, ‘சக்சஸ்’ மனிதராக வலம்வந்தவர் `பாரிவேந்தர்’ என்று அழைக்கப்படும் பச்சமுத்து. அவருடைய புதிய அவதாரம், புழல் சிறைக் கைதி!
எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க, 72 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் பச்சமுத்து. ஒவ்வோர் ஆண்டும் பணம் வாங்கிக்கொண்டு ஸீட் கொடுப்பது நடைமுறையில் இருக்க, இந்த ஆண்டு திடீரென மத்திய அரசு நீட் தேர்வு முறையைக் கொண்டுவந்ததுதான் பச்சமுத்துவுக்கு விழுந்த பெரிய அடி.
பச்சமுத்து சார்பில் பணம் வாங்கும் ஏஜென்ட்டான மதன், மாணவர்களிடம் வாங்கிய பணத்தை வேந்தர் மூவீஸ் உள்ளிட்ட வேறு தொழில்களில் முதலீடு செய்வது வழக்கம். ஆனால், இந்த முறை நீட் தேர்வால் பணம் கொடுத்தவர்களில் சிலர் பணத்தைக் திருப்பிக் கேட்க, மதனோ `கங்கையில் கரைகிறேன்’ எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, கடந்த மே மாத இறுதியில் எஸ்கேப் ஆனார். அவரைக் கண்டுபிடித்துத் தரும்படி அவரது தாயார் தொடர்ந்த வழக்கு போலீஸாரால் இழுத்தடிக்கப்பட, உயர் நீதிமன்றத்தின் நெருக்கடியால் இப்போது பச்சமுத்து கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
எஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சொத்து மதிப்பு 15,000 கோடிக்கும் மேல். ஊடகம், டிரான்ஸ்போர்ட், மருத்துவமனை, ஹோட்டல் என 100-க்கும் அதிகமான தொழில்களில் ஈடுபட்டுவருகிறது பச்சமுத்து தலைமையிலான எஸ்.ஆர்.எம் குழுமம்.
யார் இந்தப் பச்சமுத்து?
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் இருக்கிறது தாண்டவராயபுரம். இதுதான் பச்சமுத்து பிறந்த ஊர். தாயார் வள்ளியம்மை; தந்தை ராமசாமி. சிறு வயதிலேயே தந்தை ராமசாமி, காலமானதால் தாயின் அரவணைப்பும் வறுமையும் பச்சமுத்துவை எப்போதும் சூழ்ந்திருந்தன. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, திருச்சியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்றுவிட்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தில், முதுகலைக் கணிதம் முடித்து, ஏ.எம்.ஐ.இ படிப்பையும் முடித்தார்.
மாலை நேரக் கல்லூரியில் படித்ததால், பகல் பொழுது வீணாகக் கழிவதை விரும்பவில்லை பச்சமுத்து. டுட்டோரியல் கல்லூரிகளில் கணிதம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் வேலையில் சேர்ந்தார். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அப்போது கணித ஆசிரியர்களுக்கு கடும் தட்டுப்பாடு. சென்னை மாநகராட்சி, கணித ஆசிரியர்களை வேலைக்கு அழைக்கிறது. அங்கும் விண்ணப்பித்து, வேலைக்குச் சேர்கிறார். காலையில் 6 மணி முதல் 10 மணி வரை டுட்டோரியல் கல்லூரிகளில் கணக்கு வாத்தியார் வேலை. 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாநகராட்சிப் பள்ளியில் கணித ஆசிரியர் வேலை. அதன் பிறகு கல்லூரி மாணவர் என சக்சஸ்ஃபுல் இளைஞனாக மாற ஆரம்பித்தார்.
கல்லூரிப் படிப்புகள் அனைத்தும் முடிந்ததும் சொந்தமாக ‘தமிழ்நாடு டுட்டோரியல் மற்றும் டியூஷன் சென்டர்’ ஆரம்பிக்கிறார்.
திருப்புமுனை தந்த எம்.ஜி.ஆர்
டுட்டோரியல் ஆரம்பித்த பிறகுதான் முறையாக ஆங்கிலக் கல்வி கற்றுத்தர ஒருசில கிறிஸ்துவப் பள்ளிகளைத் தவிர வேறு பள்ளிகள் இல்லை என்பதை உணர்கிறார் பச்சமுத்து. போட்டி இல்லாத சந்தை. அதில் இறங்கி வியாபாரம் செய்தால், நிச்சயம் லாபத்துக்கு மேல் லாபம் பார்க்கலாம் என்பதை உணர்ந்த பச்சமுத்து, சென்னை மேற்கு மாம்பலத்தில், நைட்டிங்கேல் நர்சரி பள்ளியை ஆரம்பித்தார். 25 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அந்தப் பள்ளிக்கூடம், மெள்ள மெள்ள வளர ஆரம்பித்தது. 12 வருடங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்களுடன், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது.
அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சி. முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு, தமிழகத்தில் நிறையக் கல்லூரிகள், தொழிற்கல்விக் கல்லூரிகள் (ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக்) தொடங்க வேண்டும் என ஆசை. ஆனால், அதைச் செய்ய அரசாங்க கஜானாவில் நிதி இல்லை என்பதும் அவருக்குப் புரிந்தது. தனியாரை இந்தக் கல்விச் சேவையில் இறக்கலாம் என நினைத்த அவர், ஏற்கெனவே, சிறிய அளவில் பள்ளிக்கூடங்களை நடத்துபவர்களை அழைத்துப் பேசினார். அங்குதான் பச்சமுத்துவின் வாழ்க்கை திசை மாறியது. பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளைத் திறக்க அனுமதிபெற்றார். இவரோடு சேர்ந்து வளர்ந்தவர்கள்தான், வேலூர் வி.ஐ.டி விஸ்வநாதன், சத்யபாமா கல்லூரி அதிபர் ஜேப்பியார்.
அதன் பிறகு, பச்சமுத்துவின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தது. தொழிலில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொண்டார். அரசு இயந்திரத்துக்கு எங்கே எண்ணெய் ஊற்றினால், அது தொய்வின்றி நமக்காக வேலைபார்க்கும் என்பதைப் புரிந்துகொண்டார். 90-களின் தொடக்கம், பச்சமுத்துவை கோடீஸ்வரர் பாரிவேந்தர் ஆக்கியது. தன் தந்தை ராமசாமியின் பெயரில், ஸ்ரீராமசாமி நினைவு என்பதன் சுருக்கமாக எஸ்.ஆர்.எம் குழுமம் உருவானது.
பொத்தேரி ஆக்கிரமிப்பு
ஏரிகள் சூழ்ந்த பகுதிதான் பொத்தேரி. இங்குதான் முதல்முறையாக அவரது தாயார் பெயரில் வள்ளியம்மை பாலிடெக்னிக்கைத் தொடங்குகிறார் பச்சமுத்து. அப்போது அந்தக் கல்லூரியின் மொத்த நிலப்பரப்பு 8 ஏக்கர் மட்டுமே. கல்லூரிக்குள் நுழைய, பாதையே கிடையாது. ஏரிக்கரையைத்தான் கல்லூரிக்கான பாதையாகப் பயன்படுத்துகிறார்கள். அதன் பிறகு ஏரிக்கரை ஆக்கிரமிக்கப்பட்டு, கல்லூரிக்கான நுழைவுச் சாலையானது. அதே வளாகத்தில் எஸ்.ஆர்.எம் இன்ஜினீயரிங் கல்லூரியாக உருவெடுத்த பிறகு, அருகில் ஆதிதிராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தைக் கைப்பற்றுகிறது எஸ்.ஆர்.எம் நிர்வாகம். `37 ஏக்கர் பஞ்சமி நிலத்தை, பச்சமுத்து ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்’ என, 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சதீஷ் என்பவர் மனு செய்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில் எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாகத்தில் பச்சமுத்து ஆக்கிரமித்துவைத்துள்ள 37 ஏக்கர் நிலம் பஞ்சமி நிலம் என்பது உறுதியானதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 371 கோடி ரூபாய்.
வருடத்துக்கு ஒரு கல்லூரி
90-களுக்குப் பிறகு, வருடத்துக்கு ஒரு கல்லூரி, ஒரு பாலிடெக்னிக் என்பதை லட்சியமாக வைத்துச் செயல்பட்டார் பச்சமுத்து. ஒவ்வோர் ஆண்டும் அவருடைய குழுமத்தில் புதிது புதிதாக கல்லூரிகள் இணைந்தன. ஒரே வருடத்தில் மூன்று கல்லூரிகளைத் தொடங்கி, மற்ற கல்வி அதிபர்களை மிரளவைத்தார். விளைநிலங்களை விலைக்கு வாங்கி, அதில் தனது நிறுவனங்களை உருவாக்கி, அதைக் காட்டியே அந்த இடத்துக்கு அனைத்து வசதிகளையும் கொண்டுவருவது பச்சமுத்து ஸ்டைல். இந்த டெக்னிக்கை தமிழகத்தில் முதலில் அறிமுகம் செய்தவர்களில் பச்சமுத்து முக்கியமானவர்.
குடும்பம்
பச்சமுத்துவின் மனைவி ஈஸ்வரியம்மாள். மூத்த மகன் ரவி பச்சமுத்து. இளைய மகன் சத்தியநாராயணன். மகள் கீதா. இதுதான் பச்சமுத்துவின் குடும்பம். மூத்த மகன் ரவி, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருக்கிறார். அத்துடன் கட்டுமானம், டிரான்ஸ்போர்ட், ஹோட்டல்கள் ஆகியவற்றை நிர்வகித்துவருகிறார். சத்தியநாராயணன், `புதிய தலைமுறை தொலைக்காட்சி’ என ஊடகப் பிரிவை கவனித்துவருகிறார். மகள் கீதா மற்றும் அவரது கணவர் சிவக்குமாரிடமோ, திருச்சி டி.ஆர்.பி இன்ஜினீயரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மற்றும் ராமாபுரம் ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் பொறுப்பு.
கட்சி தொடங்கியது எதற்காக?
பச்சமுத்து கோடீஸ்வரர் ஆனதும், அவருக்கு பல திசைகளில் சில சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்தன. 2006-ம் ஆண்டு காலகட்டத்தில் அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் மூலம் கடும் நெருக்கடி ஏற்பட்டது. பச்சமுத்துவின் கல்லூரிகளைக் குறிவைத்து சிலர் அடிமாட்டு விலைக்குக் கேட்க ஆரம்பித்தனர். அந்த நேரத்தில்தான் ‘புதிய தலைமுறை’ என்ற வார இதழைத் தொடங்கினார். ஜாதி அஸ்திரத்தையும் கையில் எடுத்தார் பச்சமுத்து. பார்க்கவ குல மாநாடுகள் கூட்டப்பட்டன. அதையே ஒன்றிணைத்து இந்திய ஜனநாயகக் கட்சியைத் தொடங்கினார். 2011-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அந்தக் கட்சி, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து, ஒரு நாடாளுமன்றத் தேர்தல், ஒரு சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்துவிட்டது.
ஒரு ஸீட் 60 லட்சம்!
கல்லூரிகளை நிர்வகிப்பதில் தனி பாணியைப் பின்பற்றுகிறார் பச்சமுத்து. கல்லூரிக்குள் ஆடைக் கட்டுப்பாடு இருக்காது. தேவையற்ற விதிமுறைகள் எதுவும் கிடையாது. மாணவர்கள் கட்டும் கட்டணங்களுக்கும் முறையான ரசீதுகள் இருக்காது. ஆவணங்கள் இருக்காது. ஐந்து லட்சத்தில் ஆரம்பித்து அறுபது லட்சம் வரை கட்டணம் வாங்குவார்கள். அதற்கு ஒரு துண்டுச்சீட்டுதான் கொடுப்பார்கள். அதில் எந்த விவரமும் இருக்காது. அதைக் கொடுத்தால், கல்லூரியில் ஸீட் உறுதி. அவ்வளவுதான். இந்த வேலையை வெளியில் இருந்து செய்வதற்கு வந்தவர்தான் மதன். அவருடைய வருகை பச்சமுத்துவின் வாழ்க்கையை வேறு திசைக்குக் கொண்டுசென்றது.
ஏஜென்ட் மதன்
குமரி மாவட்டம் சுசீந்திரத்தைச் சேர்ந்தவர் மதன். கல்லூரிக் காலத்தில் மோட்டார் பைக் திருட்டு வழக்கு ஒன்றில் மதன் பெயர் சேர்க்கப் பட்டது. அதில் இருந்து தப்பிக்க மும்பைக்கு ஓடிப்போய் தலைமறைவானார். அதன் பிறகு சென்னை வந்தார். தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் ‘ஸீட்’ வாங்கிக் கொடுக்கும் புரோக்கருடன் நட்பானார். அதன் பிறகு
எஸ்.ஆர்.எம் பச்சமுத்துவுடன் ஏற்பட்ட பழக்கம், விசுவாசம் எல்லாம், அந்தக் கல்லூரியின் ஒட்டுமொத்த மருத்துவ ஸீட்களையும் மதன் மூலமே விற்கும் அளவுக்குப் போனது.
மாணவர்களே புரோக்கர்ஸ்!
கல்லூரிக்கு ஸீட் வாங்கிக் கொடுப்பதில் மதனுக்கு கோடிகள் கொட்டின. மதன் உள்ளூர் மாணவர்களைக் குறிவைத்ததைக் காட்டிலும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேச மாணவர்களைக் குறிவைத்தார். அதற்காக, இங்கு படிக்கும் அந்த மாநில மாணவர்களைத் தன்னுடைய புரோக்கர்களாக்கினார். அவர்கள் அந்தந்த மாநிலங்களில் கேன்வாஸ் செய்து, அங்கு இருந்து ஆள்பிடித்துக் கொடுப்பார்கள். மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு, 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு நடக்கும்போதே புக்கிங் தொடங்கிவிடும். அப்போது ஸீட் வாங்கினால், 10 லட்சம் குறைவு என மதன் அறிவிப்பார். அப்படி வசூலிக்கும் தொகையை வேறு தொழிலில் முதலீடு செய்வார்.
வேந்தர் மூவீஸின் எழுச்சி
மருத்துவ ஸீட் பேரங்களின்வழி கிடைத்த பணத்தைக்கொண்டு மதன், வேந்தர் மூவீஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். ரஜினி நடித்த ‘லிங்கா’, விஜய் நடித்த ‘தலைவா’ உள்பட 20-க்கும் மேற்பட்ட படங்களை வாங்கி, விற்பனை செய்தார். சொந்தமாகவும் படம் தயாரித்தார். ஆனால், தயாரித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தின. சினிமா தயாரிப்புகளுக்கு செலவழித்த பணம் எல்லாம், மாணவர்களிடம் ஸீட் வாங்கி தருவதாகச் சொல்லி வாங்கிய பணம். இப்போது மாணவர்களுக்கு கல்லூரியில் ஸீட் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயம். பச்சமுத்துவுக்கும் மதனுக்கும் இடையில் கடந்த ஆறு மாதங்களாக விரிசல் விழுந்தது. தொழிலில் நஷ்டம் ஏற்படத் தொடங்கியதை பச்சமுத்துவின் மகன்கள் ரவியும் சத்தியநாராயணனும் விரும்பவில்லை. அவர்கள் மதனைக் கண்டித்ததுடன், தொடர்பைத் துண்டித்துக் கொள்ளவும் வற்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், கடிதம் எழுதி வைத்துவிட்டு மதன் தலைமறைவானார்.
ஜம்பாலா டைரிக் குறிப்பு
சென்னை விமான நிலைய ஓய்வு சுங்கத்துறை அதிகாரி ஜம்பாலாவின் வீட்டில், சி.பி.ஐ கடந்த ஆண்டு சோதனை நடத்தியது. அப்போது சிக்கிய வரவு-செலவு டைரியில் தன் மகள் மானஷாவை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காக 40 லட்ச ரூபாயை நன்கொடையாகக் கொடுத்ததாக ஜம்பாலா குறிப்பிட்டிருந்தார். அந்த டைரி ஆதார அடிப்படையில் பச்சமுத்துவிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியது சி.பி.ஐ. அந்த வழக்கு கிடப்பில் இருக்கிறது.
முடிவு என்ன?
பல ஆயிரம் கோடி சொத்துக்கள் இருந்தாலும் வெறும் 72 கோடி ரூபாய் மோசடி பச்சமுத்துவின் இமேஜை வீழ்த்தியிருக்கிறது. `மாயமான மதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டால், பச்சமுத்துவுக்கு மேலும் சிக்கல்’ என்கிறது போலீஸ். இதனால் மதனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் களம் இறக்கப்பட்டுள்ளனர் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார். மதன் திரும்பி வந்தால் இன்னும் பல ஊழல் பூதங்கள் வெளிவரலாம்.
ஆண்டுதோறும் கோடிகளில் வியாபாரமான மருத்துவக் கல்வியின் உண்மை நிலவரம் இந்த வழக்கின் மூலம் வெளி உலகுக்குத் தெரிய வந்துள்ளது. மருத்துவ கவுன்சில் உடனடியாகத் தலையிட்டு, குதிரை பேரம்போல நடந்த மெடிக்கல் ஸீட் வியாபாரம் குறித்து விசாரணை நடத்தி, இந்த இடைத்தரகர்களின் கல்வி பிசினஸை முடக்க வேண்டும். அப்போதுதான் வியாபாரிகளின் கைகளில் சிக்கிக்கிடக்கும் மருத்துவக் கல்வி முற்றிலுமாக விடுவிக்கப்படும்!

திங்கள், ஜூலை 04, 2016

மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்கள் என்ன ஆனார்கள்?

மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்கள் என்ன ஆனார்கள்?


மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்கள் தங்கள் ராஜ்யத்திற்கு திரும்பினார்கள். பின் சில ஆண்டு காலங்கள் (கிட்டத்தட்ட 35 ஆண்டுகள்) தங்கள் ராஜ்யத்தை ஆண்ட பிறகு, தங்கள் பிறப்பிற்கான நோக்கத்தை பூர்த்தி செய்ததால், இவ்வுலகை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றனர்.
மகாபாரதத்தின் மாசாலா பர்வாவும், மகாப்ரஸ்தானிக்கா பர்வாவும் இதனை பற்றி விரிவாக கூறுகிறது. அதிலிருந்து சில முக்கிய நிகழ்வுகள் கீழ் வருமாறு:
காந்தாரியின் சாபத்தை ஏற்ற கிருஷ்ணர்
மகாபாரத போர் முடிந்தவுடன், தன் மகன்கள் இறந்த சோகத்தால், யாதவர்களும் இதேப்போன்ற சாவை சந்திப்பார்கள் என காந்தாரி ஸ்ரீ கிருஷ்ணரை சபித்தாள். இந்த சாபத்தை ஸ்ரீ கிருஷ்ணரும் ஏற்றுக் கொண்டார்.
குறும்பு செய்த கிருஷ்ணரின் மகன்கள்
35 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ கிருஷ்ணரின் மகன்கள் சில ரிஷிகளிடம் குறும்பு செய்து விளையாடியதால் சாபத்தை பெற்றனர். கர்ப்பிணி பெண்ணை போல் வேடமணிந்து கொண்ட சம்பா பிற யாதவர்களுடன் சேர்ந்து கொண்டு அங்கிருந்த சில ரிஷிகளிடம் சென்று, தன் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கூறும்படி கேட்டனர். அதில் கோபமடைந்த ஒரு ரிஷி, அவள் ஒரு இரும்பு துண்டை பெற்றெடுப்பாள் என்றும், அது அவனின் வம்சத்தையே அழித்து விடும் என்றும் சாபமளித்தார்.
பிரபாசாவிற்கு புனித பயணம்
தீய சக்திகளும், பாவ நடவடிக்கைகளும் துவாரகையில் அதிகரித்தது. மற்றவர்களை பிரபாசாவிற்கு புனித பயணம் மேற்கொள்ள ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார்.
ஒருவருக்கொருவர் கொன்று இறந்த யாதவர்கள்
பிரபாசாவில் யாதவர்கள் மது அருந்தி போதையில் மதி மயங்கினார்கள். அவர்களுக்குள் மூண்ட சண்டையில் யாதவர்கள் ஒருவருக்கொருவர் கொன்று இறந்தனர். ஸ்ரீ கிருஷ்ணர், தரூகா, வப்ரூ மற்றும் பலராமன் மட்டுமே உயிருடன் இருந்தனர். ஆனால் பின்னர் வப்ரூவும், பலராமனும் கூட இந்த உலகை விட்டு பிரிந்தனர்.
அவதாரத்தை முடித்த அர்ஜுனன்
அர்ஜுனனிடம் தகவலை கூறி உதவி கேட்க தரூகாவை அனுப்பி வைத்தார் ஸ்ரீ கிருஷ்ணர். இந்த சமயத்தில், ஒரு வேடன் செலுத்திய அம்பு ஸ்ரீ கிருஷ்ணரின் பாதத்தில் தவறுதலாக பாய்ந்தது. இதனால் அவர் காயமடைந்தார். வேடனை தேற்றிய ஸ்ரீ கிருஷ்ணர் விஷ்ணு பகவானின் ஓவியத்தோடு ஒன்றிப்போனார். அதோடு இந்த அவதாரத்தை முடித்துக் கொண்டு உலகத்தை விட்டும் பிரிந்து சென்றார்.
கிருஷ்ணரின் மனைவிகளை காக்க முடியாமல் தோற்ற அர்ஜுனன்
அதன் பின் அங்கே வந்து சேர்ந்தான் அர்ஜுனன். ஸ்ரீ கிருஷ்ணரின் விதவை ராணிகளை காக்க முயற்சி செய்தான். ஆனால் காட்டுமிராண்டிகளை எதிர்த்து போட்ட சண்டையில் தோல்வி அடைந்தான். பாண்டவர்களின் வாழ்க்கைக்கான நோக்கம் முடிந்து விட்டது என வேதவியாசர் அர்ஜுனனுக்கு அறிவுறுத்தினார்.
இமயமலை பயணத்தை மேற்கொண்ட பாண்டவர்கள்
பரிக்ஷித்திற்கு யுதிஷ்டர் முடிசூட்டிய பின்பு 5 பாண்டவர்களும் திரௌபதியுடன் இமயமலை நோக்கி தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். மலையின் மீது செல்லும் போது ஒரு நாய் அவர்களை பின்பற்றி சென்றது.
கீழே விழுந்த பாண்டவர்கள் மற்றும் த்ரௌபதி
மலையை ஏறும் வழியில் திரௌபதி, சகாதேவன், நகுலன், அர்ஜுனன் மற்றும் பீமன், அதே வரிசையில் ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்து இறந்தனர்.
யுதிஷ்டரை வரவேற்ற இந்திரன்
யுதிஷ்டர் மட்டுமே உயிருடன் இருந்தார். அவரை வரவேற்க சொர்க்கத்திற்கு தன் ரதத்தில் வந்து சேர்ந்தான் இந்திரன். அந்த நாயை அப்படியே விட்டு விட்டு, அந்த ரதத்தில் ஏறி சொர்க்கத்திற்கு செல்லுமாறு யுதிஷ்டரிடம் இந்திரன் கூறினார்.
சோதனையில் வென்ற யுதிஷ்டர்
அந்த நாய் தனக்கு நண்பனாகி விட்டதால், தன்னுடன் நாய் வராத வரை தான் சொர்க்கத்திற்குள் நுழைய மாட்டேன் என மறுத்தார் யுதிஷ்டர். உடனே அந்த நாய் எமனாக உரு மாறியது. தன் சோதனையில் தேர்ச்சி பெற்று விட்டதாக யுதிஷ்டரிடம் எமன் கூறினார். அதன் பின் யுதிஷ்டர் சொர்க்கத்திற்குள் நுழைந்தார்.
பாற்கடலுக்குள் மூழ்கிய துவாரகை
இப்படி பல விதமான நிகழ்வுகளுக்கு பிறகு ஸ்ரீ கிருஷ்ணரும் பாண்டவர்களும் இந்த உலகை விட்டு சென்றனர். துவாரகை நகரம் பாற்கடலுக்குள் மூழ்கியது. மெதுவாக தற்போதுள்ள கலியுகமும் தொடங்கியது.

திங்கள், மார்ச் 28, 2016

ஆண்டாள் கோவில்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம்…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது எனக்கு விளையாட்டு மைதானம் போன்றது…
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் என்பதை விட நேரத்தை ஏற்படுத்தி ஆண்டாள் கோவில் செல்வதை இன்றளவும் வழக்கமாக வைத்திருக்கின்றேன்… ஒவ்வொரு முறை செல்லும்போதும் எத்தனையோ விஷயங்களை அந்த கோவிலில் இருந்து கற்று கொண்டு இருந்தாலும் சில நெருடல்களும் அவ்வப்போது அனுபவமாக கிடைத்து கொண்டு தான் இருக்கின்றது.
நெருடல் 1:-
கர்ப்ப கிரகத்திற்குள் பூஜை செய்பவர்கள் மட்டும் தான் போக வேண்டும் என்பது விதி… ஆனால் பணம் கிடைக்கின்றதே என்பதற்காக பெரும் செல்வந்தர்களையும், பெரும் புள்ளிகளையும் கர்ப்ப கிரகத்தினுள் அனுமதிப்பது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை…
நெருடல் 2:-
சமீபத்தில் தமிழ் நாட்டின் மிக முக்கியமான பெண் அமைச்சர் ஒருவருடன் ஆண்டாள் கோவில் போயிருந்தேன். 15 வருடமாக எனக்கு தெரிந்த அர்ச்சகர்கள் எங்களை நன்கு கவனித்தார்கள். முடிவில் நான் எதிர்பாராத தருணத்தில் வடபத்ரசாயி சன்னதியின் மூலஸ்தானத்தை திறந்து அம்மா, பெருமாளை நன்கு தொட்டு சேவித்து கொள்ளுங்கள், பெருமாளின் காலையும், கையையும் தொட்டு தடவி அமுக்கி விடுங்கள் என்று சொல்லி செய்தும் காண்பித்தார்.
அதன் பின் அவர் சொன்னது:-
ஆண்டாள் சார் நீங்களும், அமைச்சரும், அமைச்சரின் கணவரும் பயங்கர புண்ணியம் செய்து இருக்க வேண்டும் காரணம் மூலஸ்தான பெருமாளை தொடுவது என்பது சாமானியனுக்கு கிடைக்கும் வாய்ப்பில்லை… கும்பாபிஷேகம் நடக்க இருப்பதற்கு சில நாள் முன் வரை பெருமாளை தொட்டு சேவிக்காலாம் அதன் பிறகு முடியாது. இன்று நீங்கள் தொட்டு சேவித்ததால் பெரும் பாக்கியசாலிகள் என்று சொல்லிவிட்டு நாங்கள் தொட்டு சேவித்த பிறகு நடையை சாத்தி விட்டு எங்களை வழி அனுப்பி வைத்தார்கள்…
ஆடி Car – ல் பயணம் என்றாலும் ஆடி தான் போய் விட்டேன்…
என்ன அயோக்கிய தனம்…. 15 வருடம் தெரிந்த அர்ச்சகரே மந்திரியுடன் வந்து இருக்கின்றேன் என்ற உடன் எப்படி உருமாறி, எவ்வளவு தரம் தாழ்ந்து இப்படி ஒவ்வாத விஷயத்தை செய்கிறார் என்று என்னை நானே நொந்து கொண்டேன்…
தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில் அந்தந்த கோவில்களின் அர்ச்சகர்களை தவிர வேறு யாரும் கர்ப்பகிரகத்திற்குள் போக கூடாது (அல்லது) எல்லோரும் எல்லா இடத்திற்கும் போகலாம். இரண்டில் ஒன்று குறித்து சரியான நேரத்தில் சரியான வகையில் முடிவெடுக்கப்படும்; அந்த முடிவிற்கு காரணமாக நான் இருப்பேன் என்பதை உறுதியாக கூறி கொள்கின்றேன்.
அதிக பணம், பெரும் தலைவர் என்றால் ஒரு வகையான அதிகப்படி சலுகை ஒருவனுக்கு கிடைக்கும் என்றால் இது சமூக அநீதி… பணம் படைத்தவனுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தான் கோவில் என்றால் இல்லாதவனுக்கு எதுவும் இல்லையா என்ற இரண்டாம் கேள்விக்கு பதிலாக இரண்டு முடிவெடுத்தேன்.
  1. சாமானியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று சமுதாயத்தால் வர்ணிக்கப்படுகிறவர்கள், கஷ்டப்படுகிறவர்கள் (உடலாலும் / மனதாலும் / பணத்தாலும்) என 100 பேரை திரட்டி மூலவர் வடபத்ரசாயியை ஒரு அமைச்சர் எப்படி தரிசனம் செய்தாரோ அதுபோல் தரிசனம் செய்ய வைப்பது என்றும்
  2. அரசியல் அதிகாரம் நம் வசம் வரும்போது கட்டணம் இன்றி, எந்த பிரிவும், பாகுபாடும் இன்றி அனைவருக்கும் சம தரிசனம் என்ற நிலைப்பாட்டை உருவாக்குவது என்றும் முடிவெடுத்தேன்.
முதல் முடிவின் படி ஏறத்தாழ சாமானியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று சமுதாயத்தால் வர்ணிக்கப்படுகிறவர்கள், கஷ்டப்படுகிறவர்கள் (உடலாலும் / மனதாலும் / பணத்தாலும்) என 100 பேரை திரட்டி மூலவர் வடபத்ரசாயியை தொட்டு தரிசனம் செய்ய வைத்து விட்டேன்.
இரண்டாம் முடிவும் நிறைவேற ரொம்ப நாள் ஆகாது என்பதையும் கூறிக் கொள்கின்றேன்…
ஆக பிரச்சினையும், தீர்வும் சொல்லியாகிவிட்டது விஷயம் முடிந்ததா என்றால் கண்டிப்பாக முடியாது; முடிவடையாது. மூலம் தெரியாமல் – புரியாமல்.
மூலம் என்ன:-
ஆண்டாள் சன்னதியில் வேலை செய்ய கொடுத்து வைத்து இருக்க வேண்டும். அதை மறந்து பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையின் இலக்கு என்று என்னும் மாக்கள் திருந்தாவிட்டால் இது போன்று புது, புது விஷயங்களை பணத்திற்காக உண்டு பண்ணி கொண்டு தான் இருப்பார்கள்.
செத்து போன மீனுக்கு கூட குறிக்கோள் இருக்கின்றது – செத்தபிறகு கரை ஒதுங்க வேண்டும் என்று….
ஆனால் இது போன்ற மாக்களுக்கு தான் பிறப்பு முதல் இறப்பு வரை குறிக்கோள் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலை….
இதை ஒட்டுமொத்தமாக சரி செய்ய வேண்டும் என்றால் நம் அனைவருக்கும் குறிக்கோள் இருக்க வேண்டும்
-    “தவறு / தப்பு நடக்கும்போது தட்டி கேட்க வேண்டும்” என்பது தான் அந்த குறிக்கோள்.
நீங்கள் கோவிலுக்கு போவது மன அமைதிக்காக என்று கோவிலில் நடக்கும் அநீதிகளை பார்த்தும், பார்க்காமல் வந்தால் அதைவிட சமூக அநீதி வேறு எதுவும் கிடையாது.
கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர்…
கோவில் எல்லோருக்கும் பொதுவானது….
கோவிலில் எல்லோருக்கும் சம உரிமை உண்டு….
என்பதை நினைவில் நிறுத்தி கொண்டு
இறந்த மீன் போன்று குறிக்கோளுடன் வாழப் போகிறீர்களா? (அல்லது)
உயிருள்ள மாக்களாக வாழப் போகிறீர்களா என்பதை உங்கள் முடிவிற்கே விட்டு விடுகின்றேன்.

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

காதல்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம்…
இல்லாத வெற்றிடத்தை நிரப்ப இறைவனால் நேரடியாக படைக்கப்பட்டு பூமிக்கு வந்தவர்கள் – என்பது போல் ஒரு வாழ்க்கை ஒவ்வொரு காதலர்களுக்கும்….
உடல் ரீதியாக, மனரீதியாக என காதலர்களை இரண்டு வகையாக வகைப்படுத்தலாம்…
முதல் காரணம் பற்றி பேச தேவையேயில்லை….
மனரீதியாக ஒன்றி நான் என் துணையை காதல் மூலம் பெற்றெடுத்தேன் என்று சொல்பவர்களை பகுத்தாய்ந்து பார்த்தோமேயானால்
  1. பாசம் அதிகம் கிடைக்கப் பெற்றவர்களும்
  2. பாசத்தை துளி கூட கிடைக்கப் பெறாதவர்களும்
  3. ஒற்றை குழந்தையாக பிறந்தவர்களும்
  4. தனிமை விரும்பிகளும்          – என
நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம். இதில் காதலர்கள் எந்தப் பிரிவை சார்ந்தவர்கள் என்றாலும் பாதிக்கப்படுவது பெற்றோர்கள் மட்டுமே….
பெற்றோர்கள் தன் சொந்த குழந்தையை எத்தனை சிறப்பாக வளர்த்து இருந்தாலும்; உலகில் உள்ள அத்தனை சந்தோஷங்களையும் கொடுத்து வளர்த்து இருந்தாலும்; தங்கள் தகுதிகேற்ப, சில இடங்களில் தங்கள் சுய தகுதியையும் மீறி படிக்க வைத்து சீராட்டி, பாராட்டி தூக்கி கொண்டாடி அக மகிழ்ந்து இருந்தாலும் தங்கள் குழந்தை காதல் வயப்பட்டு இருக்கின்றது என்கின்ற விஷயம் தெரிய வரும்போதே அவர்கள் 10 முறை சுடுகாட்டில் பிணமாக எரிக்கப்பட்ட உணர்வை அடைந்து விடுகிறார்கள். சில இடங்களில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறியும், பல இடங்களில் பெற்றோர்களின் அனுமதியுடனும் காதல் திருமணங்கள் நடைபெற்றாலும் இரண்டு தரப்பு பெற்றோர்களும் 100 முறை மரித்து, மறைந்து போய் இருந்தும் இல்லாத வாழ்க்கையை தலையில்லாத முண்டம் வாழ்வது போல் வாழ்ந்து கடைசியாக உடல் ரீதியாக மறைகிறார்கள் என்பது தான் எதார்த்த உண்மை….
ஒரே ஜாதியாக இருந்தாலும், வெவ்வேறு ஜாதியாக இருந்தாலும், வெவ்வேறு இனம், மதம் சார்ந்தவர்களாக இருந்தாலும் பெற்றோர்கள் நமக்காக படப்போகும் கஷ்டத்தை காதலை துவங்குவதற்கு முன் ஒவ்வொரு காதலர்களும் நினைத்து பார்க்க வேண்டும்…
என்னை பொறுத்தவரை ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு நிமிடமாவது
காதலிக்கப்படாத பெண்களும் இல்லை…..
காதலிக்கப்படாத ஆண்களும் இல்லை…..
யாரும் எந்தக் காலத்திலும் இந்த விதிக்கு விதிவிலக்காக இருந்து இருக்க முடியவே முடியாது. பெரும்பாலோனர் வாழ்க்கையில் அது சில முறை அல்லது பல முறை வந்து போய் இருக்கலாம். என் வாழ்க்கையிலும் சில பெண்கள் திருமணத்திற்கு முன்பும், பின்பும் வந்ததுண்டு…. அந்த வகையில் என் சொந்த அனுபவத்தில் சில கருத்துக்கள் உங்கள் எல்லோர் பார்வைக்கும்:-
  1. பெற்றோர் பார்த்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் தள்ளுதலும், கொள்ளுதலும் தான் வாழ்க்கை என்பதை தான். இவ்வகை திருமணங்கள் நடைபெறும் போது பெற்றோர்கள் மனரீதியாக சந்தோஷமாக இருப்பார்கள் என்பதால் அந்த சந்தோஷமே இளம் கணவன், மனைவி – க்கு அடுத்த கட்டத்தை காண்பிக்கும். இருந்தாலும்  இதுபோன்ற திருமணங்களில் கணவர் சரியில்லாததால் தான் மாமியார் – மருமகள் சண்டை, ஸ்டவ் வெடிப்பு, விவாகரத்து, துர்மரணம், தனித்து வாழ்வு, மனகஷ்டம் என்பவை ஏற்படுகின்றது எனபது முக்கியமாக கவனத்தில் நிறுத்த வேண்டிய விஷயமாகும். ஒரு கணவனின் எதிர்பார்ப்பு உடல் ரீதியாக, மனரீதியாக பூர்த்தியாகாமல் போகின்ற போதும், அதிகமான அல்லது குறைவான எதிர்பார்ப்பும் தான் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களில் பல தோல்வி அடைவதற்கு காரணமாகும்.
பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் :–
பெற்றோர்களால் ஜாதகம், சாதி, மதம் பார்த்து நடத்தக் கூடிய திருமணங்கள் நிறைய விவகாரம் ஆகி விவகாரத்தில் முடிவடைகின்றதே என என்னிடம் கேட்டால் கடுமையான யுத்த பூமியில் யுத்தங்களுக்கு நடுவே யுத்தத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் மடிவது எப்படி இயற்கையோ அதுபோல் பெரிய விஷயத்தை பற்றி பேசும்போது சிறிய சங்கடங்களை ஊதி பெரிது பண்ணாமல் தவிர்ப்போம்.
  1. பெற்றோர்கள் பார்த்து சொல்பவரை திருமணம் செய்யாமல் தங்கள் துணையை தாங்களே தேர்ந்தெடுக்க கூடிய காதலர்களுக்கு நான் சொல்ல விரும்புவது:-
உங்கள் முடிவு 100% சரியானதாக இருக்கலாம். உங்களுக்கு 200% மகழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கலாம். உங்களுக்கு அருமையான பிள்ளைகள்  பிறக்கலாம். ஊர் மெச்சக் கூடிய அளவிற்கு பணமும், புகழும் கிடைக்கலாம். இராமபிரான் போன்ற கணவனோ, சீதா பிராட்டியார் போன்ற மனைவியோ கிடைக்கலாம். இது போன்ற இணை இவ்வுலகில் பார்க்க முடியாது – “Made for each other” Wills cigarette விளம்பரம் போல ஜோடி என ஒட்டுமொத்த உலகமே பாராட்டலாம். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்.
உங்கள் சந்தோஷமானது உங்கள் பெற்றோர்களை உயிருடன் மண்ணில் புதைத்த சமாதி மேல் தான் தொடங்குகிறது என்பதை நினைவில் கொள்ளவும். காதல் திருமணம் செய்தவர்கள் காதலித்தவர்களை விட தத்தமது பெற்றோர்களை எப்போதும் நன்கு பார்த்து கொள்ளுவது அவசியம். பெற்றோர்களிடம் மானசீகமாக மன்னிப்பு கேளுங்கள். அடிவயிற்றில் இருந்து கேட்கக் கூடிய மன்னிப்பாக அது இருக்க வேண்டும்.
உங்கள் ஜோடிக்கு எத்தனையோ பாராட்டுகள் கிடைத்தாலும், உங்கள் பெற்றோர்களே அதை கண்டு புளகாங்கிதப்பட்டாலும் ஓரத்தில் – நெஞ்சு ஓரத்தில், ஒரு இம்மியளவிற்கு ஒரு துளி கஷ்டமிருக்கும் அவர்களுக்கு கண்டிப்பாக….
அவர்களின் அந்த ஒரு துளி கஷ்டம் அதுபோல் ஓராயிரம் மடங்கு கஷ்டத்தை நமக்கு நிகழ்காலத்திலும், பிற்காலத்திலும் ஏதோ ஒரு வகையில் கொடுக்கவல்லது – அவர்கள் அதற்கு பிரியப்படாவிட்டாலும் கூட…..
நம் வாழ்க்கை முறையில் பெற்றோர், உற்றார், உறவினர்கள் இல்லாத யார் வேண்டுமானாலும் காதல் திருமணம் செய்து கொள்ளலாம். யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் எல்லா சொந்தங்களும் அமையப் பெற்றவர்களின் காதல் திருமணங்கள் நல்ல முடிவாக இருக்கவும் முடியாது. நல்ல செயலாக கருதவும் முடியாது.
இந்த இடத்தில் பெற்ற தாயை கொன்றால் கூட பிராயசித்தம் உண்டு… செய்நன்றி கொன்றவர்களுக்கு எந்த ஒரு சூழ்நிலையிலும் மன்னிப்பும் கிடையாது; பிராயசித்தமும் கிடையாது என்று இராமர் சொல்லியதாக நான் படித்த விஷயத்தை பெற்றோரிடம் நன்றி மறந்த ஒவ்வொரு காதலர்களுக்கும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
அதேபோல் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தங்கள் திருமணத்திற்கு பிறகு ஒரே ஒரு முறை தங்கள் மனைவியை அடித்து இருந்தால் கூட அந்தத் திருமணம் தோல்வி திருமணம் தான் என்பதையும் நினைவில் நிறுத்திக் கொண்டு காதல் மனைவியை நன்கு பார்த்துக் கொள்ளவும்.
  1. என்னை போன்று காதல் செய்து அப்பா / அம்மாவிற்கு என பரிதாபப்பட்டு, குடும்ப சூழ்நிலைகளை காரணம் காட்டி பெற்றோர் பார்த்த வரனை திருமணம் செய்பவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது:-
பெற்றோரை ஏமாற்றுவதை விட கொடிய பாவம் காதலித்தவர்களை ஏமாற்றுவது தான்….
இதற்கு என்ன தண்டனை என்பது தீர்மானிக்கவே முடியாத ஒன்று. உலகில் உள்ள அத்தனை கஷ்டங்களையும் ஒரே சமயத்தில், ஒருங்கே அனுபவித்தால் கூட ஒருவர் மற்றொருவருக்கு செய்த நம்பிக்கை துரோகித்திற்கு சரியான தண்டனையாக இருக்க முடியாது என்பதே என் கருத்து.
இந்த இடத்தில் பெற்றோரை ஏமாற்றும் காதலர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்பதையும் காதலர்கள் காதலுக்கு பின் ஒருவரை ஒருவர் ஏமாற்றி விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படும் போது அந்த ஏமாற்றிய நபரின் குற்றத்திற்கு தண்டனையே இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பதையும் காதல் திருமணம் செய்தபிறகு மனைவியை துன்புறுத்துபவருக்கு, மனைவியை நிர்கதியாக ஆக்குபவருக்கு, தன்னை நம்பி வந்த பெண்ணை நிர்மூலமாக்குபவனுக்கு உலகம் இருக்கும்வரை திரும்ப, திரும்ப மனிதனாக பிறந்து துன்பப்பட வேண்டியது இருக்கும் என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
காதல் தோல்வியும் வேண்டாம்
காதல் வெற்றியும் வேண்டாம்
மொத்தத்தில் காதலே வேண்டாம் என்பது என் கருத்து.
  1. என்னை போன்று உண்மையான காதலியை ஏமாற்றியவர்களுக்கு:-
உண்மையான காதலை தோற்கடித்து ஏமாற்றியவர்கள் தயவு செய்து  நீங்கள் எவ்வளவு நல்ல வாழ்க்கை வாழ்ந்தாலும் ஒரு நாளில் ஒரு முறையாவது உங்களால் ஏமாற்றப்பட்டவர் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனையாவது செய்யுங்கள் அல்லது ஒரு நாளில் ஒரு முறையாவது உங்களால் ஏமாற்றப்பட்டவரை நினைவுக்கு எடுத்து வர பழகுங்கள்.
என் காதலியை நான் பார்த்த போது என் காதலி அணிந்திருந்த உடையின் நிறமானது எனக்கு பிடித்த, எனக்கு பிடிக்கும் என்று அவளுக்கு மட்டும் தெரிந்த, எனக்கு பிடித்ததால் அவளுக்கும் ரொம்ப, ரொம்ப பிடித்து போன இராமர் நீலத்தில் தான்.
அந்த ஞாபகத்தில் என்னுடைய எல்லா நல்ல தருணங்களிலும், நீல நிற வண்ண சட்டை அணிந்து சந்தோஷப்பட்டு கொள்வேன்…. அப்பாவை காப்பாற்றினோம் என்ற சந்தோஷத்துடன்…..

வாழ்க வளமுடன்
என்றும் கண்ணீருடன்….
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

வியாழன், பிப்ரவரி 25, 2016

யார் இந்த நீர் மனிதர்கள்?

நம்பர் 1 - ராஜேந்திர சிங்

நம்பர் 1 - மதுர்பாய் சவானிமுகில்
மிழ்நாட்டில் பொழியும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் வீணாக்காமல், நமக்கு எப்போதும் பயன்படும்படி சேமித்துவைக்க முடிந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்? நினைத்துப்பார்க்கவே குளுகுளுவென இருக்கிறதுதானே!
அது  மட்டும் நிகழ்ந்துவிட்டால் காலம்தோறும் கர்நாடகாவின் கருணையையும், ஆந்திராவின் அன்பையும், கேரளாவின் அனுசரணையையும் எதிர்பார்த்துக்கிடக்க வேண்டாம். `என் தண்ணீர் என் உரிமை' என தலை நிமிரலாம். சொல்வதற்குச் சரி. இதெல்லாம் சாத்தியமா? ‘சத்தியமாகச் சாத்தியமே’ என நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள் இருவர். ஒருவர், ராஜேந்திர சிங் - இன்னொருவர், மதுர்பாய். இவர்கள் வெறும் வாயால் குளம் வெட்டவில்லை. தங்களது செயற்கரிய செயல்களால் ராஜஸ்தானையும் குஜராத்தையும் ‘தண்ணி’றைவு பெற்ற பசுமை மாநிலங்களாக மாற்றிக்காட்டியிருக்கிறார்கள்.
யார் இந்த நீர் மனிதர்கள்?
மதுர்பாயின் கதையில் இருந்து தொடங்கலாம்.
1963-ம் ஆண்டில் குஜராத்தின் பவ்நகர் மாவட்டத்தின் கோபலா (Khopala) கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் மதுர்பாய் சவானி. குடும்பத்துக்குச் சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருந்தது. மானாவாரி விவசாயத்தை நம்பியே வாழ்க்கை. மழை பொய்த்துப்போனால் அந்த ஆண்டின் வருமானமே காலி. வறுமைசூழ் வாழ்க்கை. சௌராஷ்டிராவின் படேல் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள், பிழைப்பு இல்லாத மாதங்களில் சூரத் நகரத்துக்குச் செல்வார்கள். அந்த நகரம் இந்தியாவின் வைரத் தொழில் மையம். அங்கே வைரம் பட்டை தீட்டும் பட்டறைகளில் வேலைக்குச் சேர்வார்கள். சம்பளம் மிக மிகக் குறைவு. இருந்தாலும், அவர்களுக்கு வேறு வழி இல்லை.
ஐந்தாம் வகுப்பு வரைதான் மதுர்பாயால் படிக்க முடிந்தது. பிறகு, வயல் வேலை. பஞ்சம் அடிக்கடி பழிப்பு காட்ட, தன் பதின்வயதில் சூரத்தில் தஞ்சம் அடைந்தார். வைரப் பட்டறையில் வேலை. கடும் உழைப்பைக் கொட்டினாலும் கைக்கு வரும் காசு கம்மி. சாலையோரக் கடைகளில் கிடைக்கும் மலிவு உணவை உண்டுவிட்டு, பிளாட்பாரத்திலேயே படுத்துத் தூங்கும் வாழ்க்கை. வைரத் தொழிலின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொண்டு தனியாக வைரப் பட்டறை ஒன்றை ஆரம்பித்தார். துணைக்கு சகோதரர்களைச் சேர்த்துக்கொண்டார். சவானி பிரதர்ஸ் வாழ்க்கை ஜொலிஜொலிக்கத் தொடங்கியது. மதுர்பாய், தனது 40 வயதுக்குள்ளாகவே சூரத்தின் கோடீஸ்வரர்களில் ஒருவராக உயர்ந்தார். இன்றைக்கு இந்தியாவின் முன்னணி வைர வியாபாரிகளில் மதுர்பாயும் ஒருவர். இருக்கட்டும். விஷயம் அது அல்ல.
வைரத்தில் சம்பாதித்தோமா, வளமுடன் வாழ்ந்தோமா என மதுர்பாய் ஒதுங்கிவிடவில்லை. அடிக்கடி தனது கோபலா கிராமத்துக்குச் சென்றுவந்தார். தன் கிராமத்துக்கு தன்னாலான சிறு உதவிகளையும் செய்துவந்தார். 90-களின் மத்தியில் ஊர் மக்களின் தீராத துன்பமாக தண்ணீர்த் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்தது. கோபலாவில் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த சௌராஷ்ட்ராவும் வறண்டு வாடிப்போயிருந்தது. பல ஊர்கள், தண்ணீரைச் சுமந்துவரும் ரயில்களை மட்டுமே நீர் ஆதாரமாக நம்பியிருந்தன. விவசாயம் விக்கித்து நின்றது. ஒரு குடம் நீருக்காக, கோபலா கிராமத்து மக்கள் பல மைல்கள் அலைய வேண்டிய அவலம்.
இது மதுர்பாயின் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. இதற்குத் தீர்வு காண வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால், எங்கிருந்து எப்படித் தொடங்குவது என்பது புரியவில்லை. அப்போதுதான் மதுர்பாய்க்கு ஒரு விஷயம் தெரிய வந்தது. சௌராஷ்ட்ரா கிராமங்களில் ஒன்றான ராஜ்கோட்டின் ராஜ்சம்தியாலா (Rajsamdhiyala) என்ற ஊரும் தண்ணீர்த்  தட்டுப்பாட்டுடன்தான் இருந்தது. அந்த ஊர் மக்களின் முயற்சியால் நீர் ஆதாரங்கள் பெருகி, இப்போது ஊர் பசுமையாக மாறிவிட்டது என்பதை அறிந்தார். கோபலா மக்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு ராஜ்சம்தியாலாவுக்குச் சென்றார். அங்கே மதுர்பாய் உணர்ந்துகொண்ட பாடம் இதுதான். இந்தியாவில் குறைந்த மழைப்பொழிவுகொண்ட பிரதேசங்களில் சௌராஷ்ட்ராவும் ஒன்று. ஆனால், மழைநீரில் சுமார் 90 சதவிகிதம் கடலில்தான் கலக்கிறது. ராஜ்சம்தியாலா மக்கள், தங்கள் பகுதியில் பொழியும் மழைநீரைச் சேமிக்கும் வழிகளை முறைப்படி ஏற்படுத்தி, பசுமையை மீட்டெடுத்திருக்கிறார்கள்.
உத்வேகத்துடன் கோபலா கிராமத்துக்குத் திரும்பினார் மதுர்பாய். ஊர் மக்களைக் கூட்டினார். ‘தண்ணீர்ப் பிரச்னையை அரசாங்கம்தான் தீர்க்கணும்னு உட்கார்ந்திருந்தா, காலம் முழுக்க இப்படியே தவிச்சுக்கிட்டு இருக்க வேண்டியதுதான். நம்ம பிரச்னையை நாமதான் தீர்த்தாகணும். அதுக்கு என்கிட்ட வழி இருக்கு’ - மதுர்பாய் தம் மக்கள் மத்தியில் புரியும்படி எடுத்துச் சொன்னார். எதைச் செய்தால் தண்ணீர் கிடைக்கும் என்ற தாகத்தில் இருந்த மக்களும் மதுர்பாயின் குரலுக்குச் செவிசாய்த்தனர். ‘மழைநீரைச் சேகரிக்கிறதுக்கு ஏற்ற மாதிரி நம்ம ஊர்ல பல தடுப்பணைகளைக் கட்டணும். அதுக்காக அரசாங்கத்துக்கிட்ட பணம் எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது. நமக்கு நாமே பணம் போட்டு தடுப்பணைகளைக் கட்டுவோம்’ என்ற மதுர்பாய், அதற்கான தெளிவான திட்டத்தையும் வகுத்துக் கொடுத்தார். 
கோபலா கிராமத்தின் மொத்த விவசாய நிலப்பரப்பு 16,000 பிக்ஹா. (Bigha என்பது ஒரு நில அளவை முறை.) ஒரு பிக்ஹாவுக்கு 200 ரூபாய் என்ற அளவில் 32 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. மதுர்பாயும் குறிப்பிட்ட அளவு பணம் போட்டார். மதுர்பாய் போலவே சூரத், மும்பை, பரோடா என்று பல்வேறு நகரங்களில் வளமுடன் வாழ்ந்த கோபலா வியாபாரிகள் பலரும் பணம் போட்டனர். மொத்தமாக சுமார் 2 கோடி நிதி திரட்டப்பட்டது.
மாதக்கணக்கில் ஆராய்ந்து தெளிவாகத் திட்டமிடப்பட்டது. 1998-ம் ஆண்டின் இறுதியில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஊர் மக்களே வேலைகளில் ஈடுபட வேண்டும்; யாருக்கும் கூலி கிடையாது; குடும்பத்துக்கு ஒருவர் வேலைக்கு வரவேண்டும்; வரத் தவறினால் 50 ரூபாய் அபராதம்... என விதிமுறைகள் வகுக்கப்பட்டன; கடைப்பிடிக்கப் பட்டன. சுமார் ஆறு மாதங்கள் கோபலா கிராமமே சேர்ந்து உழைத்தது. மதுர்பாயும் களத்தில் இறங்கி உழைத்தார். ஒவ்வொருவரையும் அர்ப்பணிப்புடன் உழைக்க ஊக்குவித்தார். 1999-ம் ஆண்டு கோடையின் இறுதியில் ஊரில் பல இடங்களில் 200 தடுப்பணைகள் கட்டப்பட்டிருந்தன. சிறியதும் பெரியதுமாக 10 குளங்கள் வெட்டப்பட்டிருந்தன. இந்த நீர்நிலைகளை எல்லாம் இணைக்கும்விதத்தில் சுமார் 58 கி.மீ தொலைவுக்கு வாய்க்கால்களும் வெட்டப்பட்டிருந்தன. வியர்வை சிந்திய மக்கள் ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஒருவழியாக அந்தப் பருவத்துக்கான மழை ஆரம்பித்தது. சாரலும் தூறலும் பெருமழையுமாக ஒரு வாரம் பெய்தது. வழக்கத்தைவிடக் குறைவான அளவுதான். ஆனால், அதற்குள்ளாகவே புதிய தடுப்பணைகளில் நீர் ததும்ப ஆரம்பித்தது. குளங்கள் நிறைமாதக் கர்ப்பிணியாகப் பொலிவுபெற்றன. வாய்க்கால்களில் சலசல நீரோட்டம். செத்துப்போன கிணறுகளில் 50 அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது. ஆழ்துளைக் கிணறுகளும் மறுபிறவி எடுத்தன. கோபலா கிராமத்து மக்கள் தங்கள் ஆனந்தக் கண்ணீரை மழைக்குப் பரிசாகக் கொடுத்தனர். மதுர்பாய், கோபலா விவசாயிகளிடம் தங்கள் வயல்களில் சொட்டுநீர்ப்பாசனத்துக்கான வசதிகளை ஏற்படுத்தச் சொன்னார். அந்த வருடத்தில் குறைவான மழையால் சௌராஷ்ட்ராவின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் பொய்த்துப்போனது. கோபலா விவசாயிகள் மட்டும் பெருவிளைச்சல் கண்டனர். சுமார் ஐந்தரைக் கோடி அளவுக்கு விளைபொருட்களை விற்று நிமிர்ந்தனர்.
மதுர்பாயின் மனதில் குதூகலம். தம் மண்ணுக்கு மீண்டும் உயிர் கொடுத்த திருப்தி. `ஆனால், சௌராஷ்ட்ரா முழுவதுமே நீர் வளமின்றி நிர்கதியாகத்தான் இருக்கிறது. அதற்கு என்ன செய்யலாம்?’ என்ற கவலை அவரை அரிக்க ஆரம்பித்தது. அந்தச் சமயத்தில்தான் மதுர்பாய், ‘தருண் பாரத் சங் (TBS)’ பற்றி கேள்விப்பட்டார். அதன் நிறுவனரும், இந்தியாவின் ‘ஜல் புருஷ்’ (தண்ணீர் மனிதன்) என அழைக்கப்படும் ராஜேந்திர சிங் பற்றியும் தெரிந்துகொண்டார். இங்கே நாமும் தெரிந்துகொள்வோம்.
உ.பி-யைச் சேர்ந்த ராஜேந்திர சிங், ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர் (1959). ஆயுர்வேதத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். ராஜஸ்தானில் பணியாற்றியவர். ஒரு கட்டத்தில் அரசின் நிர்வாகச் சீர்கேடுகளில் மனம் வெறுத்த ராஜேந்திர சிங், `தருண் பாரத் சங்' என்ற அமைப்பில் இணைந்து சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். 1985-ம் ஆண்டில் தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அல்வார் மாவட்டத்தின் கோபால்புரா என்ற கிராமத்தில் ஆயுர்வேத மருத்துவச் சேவையுடன், கல்வி கற்பிக்கும் வேலையையும் தொடங்கினார். அந்த ஊரில் தண்ணீர்ப் பஞ்சம் உச்சத்தில் இருந்தது. ‘இந்த ஊருக்கு இப்போதைய அவசியத் தேவை கல்வி அல்ல; தண்ணீர். நீ நிஜமாகவே ஏதாவது நல்லது செய்ய நினைத்தால் ஊர்க் குளத்தைத் தூர்வாரிக் கொடு’ என்றார் முதியவர் ஒருவர். ராஜேந்திர சிங்கை அந்த வார்த்தைகள் மிகவும் பாதித்தன. `குளத்தைத் தூர்வாரப்போகிறேன். உதவிக்கு வாருங்கள்' என ஊர் மக்களை அழைத்தார். `யாருடா நீ?' என்பதுபோல விநோதமாகப் பார்த்தார்கள். உடன் வந்த நண்பர்களும் விலகிப்போனார்கள்.
ராஜேந்திர சிங், மனம் தளரவில்லை. தனி ஒருவராக மண்வெட்டி, கடப்பாரையுடன் வறண்ட குளத்தில் இறங்கினார். தினமும் குறைந்தது 10 மணி நேரமாவது உழைத்தார். ‘பாவம், பைத்தியம்...’ என ஊர்க்கண்கள் பரிதாபமாகப் பார்த்தன. வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் ராஜேந்திர சிங் சிந்திய வியர்வையால், குளத்தின் பரப்பளவு நீளமும் ஆழமுமாக விரிந்தது. பின்னர் பெய்த மழையில் குளத்தில் நீர் தங்கியது. அருகில் இருந்த கிணறுகளும் உயிர்த்தன. சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. கோபால்புரா மக்களின் மனதில் ராஜேந்திர சிங்கும் உயர்ந்தார். அப்போது வயதானவர்களும் பெண்களும் நோஞ்சான் குழந்தைகளுமே கோபால்புராவில் மிஞ்சியிருந்தனர். பிழைப்புக்காக வெளியூர் சென்றிருந்த ஆண்கள் பலரும், குளம் புத்துயிர் பெற்றதை அறிந்து மீண்டும் ஊருக்குத் திரும்பி வரத் தொடங்கினர். மக்களும் ராஜேந்திர சிங்குடன் கைகோத்தனர்.
கோபால்புராவில் நிகழ்ந்த மாற்றம் அக்கம் பக்கத்துக் கிராமங்களுக்கும் ஜிலுஜிலுவெனப் பரவியது. அவர்களும் வறட்சியை நீக்குவதற்கான புரட்சிக்குத் தயாராக இருந்தார்கள். ராஜேந்திர சிங், அந்த மக்களுக்கு வழிகாட்டினார். அடுத்த ஒரே ஆண்டில் 36 கிராமங்களில் குளங்கள் வெட்டப்பட்டன / தூர் வாரப்பட்டன. அல்வாரில் கொஞ்சம் கொஞ்சமாக பசுமைப் புரட்சி வேரூன்றத் தொடங்கியது. அங்கு இருந்து ராஜஸ்தானின் பிற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கியது. கிராமம் கிராமமாக பாதயாத்திரை சென்ற ராஜேந்திர சிங், மக்களிடையே மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புஉணர்வைக் கொண்டுவந்தார். அடுத்த கட்டமாக, மக்களின் துணையுடன் பல ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துபோன அர்வாரி நதியை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். ஆற்றுப்படுகைகளில் தடுப்பணைகளைக் கட்டுதல், ஆரவல்லி மலையில் சற்றே பெரிய அணை ஒன்றை எழுப்புதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்... என ராஜேந்திர சிங் மக்களுடன் உழைத்தார். அந்த மழைக்காலத்தில், அணையும் தடுப்பணைகளும் தண்ணீரால் தளும்பின. அர்வாரி பழைய பொலிவுடன் மீண்டும் சலசலத்து ஓட ஆரம்பித்தது. அர்வாரியைப் பாதுகாக்க வேண்டும் அல்லவா? அந்த நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருக்கும் 70 கிராமங்களில் இருந்து, ஊருக்கு 2 பேர் வீதம் தேர்ந்தெடுத்து, 140 பேரைக் கொண்ட அர்வாரி நாடாளுமன்றத்தை அமைத்தார். (இது அங்கீகாரமற்ற அமைப்பு என்றாலும் நதி ஆக்கிரமிப்புகளைத் தடுத்தல், அதிக நீர் உறிஞ்சுதலை, மரம் வெட்டுதலைத் தடுத்தல் என இன்று வரை மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது).
சரிஷ்கா தேசியப் பூங்கா பகுதியில் அமைந்திருந்த ஏராளமான சுரங்கங்கள் அந்தப் பகுதியில் நீர் வளத்துக்குப் பெரும் இடையூறாக இருப்பதை அறிந்தார் ராஜேந்திர சிங். அகிம்சை வழியிலான போராட்டங்கள் மூலமாகவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலமாகவும், மாஃபியாக்களின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல் சுரங்கங்களை மூடவைத்தார். அதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அவரவர் கிராமங்களில் அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கவும் வழிவகை செய்தார். ராஜேந்திர சிங்கின் அயராத முயற்சியால் சர்ஷா, பஹானி, ரூபரேல், ஜஹாஜ்வாலி உள்ளிட்ட வறண்டுபோன ராஜஸ்தானின் பல நதிகளும் புத்துயிர் பெற்றன.
ராஜேந்திர சிங், ராஜஸ்தானின் 11 மாவட்டங்களில் சுமார் 4,500 தடுப்பணைகளைக் கட்டியிருக்கிறார். 1,200 கிராமங்களை தண்ணீர்ப் பிரச்னையற்ற பகுதிகளாக மாற்றியிருக்கிறார். இதனால் நிலத்தடி நீரின்றி கறுப்பு மண்டலங் களாக அறிவிக்கப்பட்ட மாநிலத்தின் பல பகுதிகள், நிலத்தடி நீர் மிகுந்த வெள்ளை மண்டலங்களாக உருமாறியிருக்கின்றன. வனப்பகுதி விரிவடைந்திருக்கிறது. விளைச்சல் பல மடங்கு பெருகியிருக்கிறது. மானாவாரி விவசாயத்தை மட்டுமே நம்பிய ராஜஸ்தான் விவசாயிகள், நீர் அதிகம் தேவைப்படும் கரும்பு பயிரிடும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றனர். இப்படியாக, சத்தமே இல்லாமல் ராஜஸ்தானில் மாபெரும் தண்ணீர்ப் புரட்சி ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் ராஜேந்திர சிங்.
ராஜேந்திர சிங்கை, 1999-ம் ஆண்டில் தேடிச் சென்று சந்தித்தார் மதுர்பாய். அவரிடம் பெற்ற அனுபவத்துடன் குஜராத்துக்குத் திரும்பி `சௌராஷ்ட்ரா ஜல்தாரா டிரஸ்ட்’ (SJT) என்ற அமைப்பை ஆரம்பித்தார். 1999-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மதுர்பாயின் தலைமையில் பலரும் சௌராஷ்ட்ரா கிராமங்களுக்குப் பாதயாத்திரை (325 கி.மீ) மேற்கொண்டனர். ஒவ்வோர் இடத்திலும் கூட்டங்கள் கூட்டி, கிராம மக்களுடன் பேசினர். ‘நமக்கான நீர்த்தேவையை நாமே பூர்த்தி செய்துகொள்ள முடியும். எங்கள் அமைப்பு அதற்கான அத்தனை உதவிகளையும் செய்யும். தேவை உங்கள் ஆதரவும் உழைப்பும் மட்டும்தான்.’ கோபலாவில் சாதித்துக்காட்டிய மதுர்பாய்க்குத் தோள்கொடுக்க ஒவ்வொரு கிராமமுமே தயாராக இருந்தது. கிராம சபை மூலமாக இதற்கான குழு அமைக்கப்பட்டது. மக்கள் கொஞ்சம் பணமும் அதிக உழைப்பும் போட வேண்டும். கட்டுமானத்துக்கான சிமென்ட், பிற பொருள்கள் வழங்குவதை மதுர்பாயின் டிரஸ்ட் பார்த்துக்கொள்ளும். பணிகள் நிறைவேறின. பருவமழையும் பொழிந்தது. அந்தந்தக் கிராமங்களின் குடிநீர்ப் பிரச்னை தீர ஆரம்பித்தது.
1997-ம் ஆண்டிலேயே குஜராத்தின் பல பகுதிகளில் தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை, மாநில அரசும் கையில் எடுத்திருந்தது. அது முழுமையாகச் செயல் வடிவம் பெறவில்லை. கட்டப்பட்ட தடுப்பணைகள் பலவும் தரமற்றதாக இருந்தன. பலன் இல்லை. அதே சமயத்தில் சௌராஷ்ட்ரா ஜல்தாரா டிரஸ்ட்டின் சீரிய செயல்கள் மாநில அரசின் கவனம் ஈர்த்தன. அப்போதைய குஜராத் முதலமைச்சர் கேசுபாய் படேல், `Sardar Patel Participatory Water Conservation Programme’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதாவது அரசும் மதுர்பாயின் டிரஸ்ட்டும் இணைந்து செயல்படும் திட்டம்.
அதில் மதுர்பாய்க்குப் பல சங்கடங்கள் இருந்தன. காரணம், அரசு கட்டுமானப் பணிக்கு என டெண்டர்களை வரவேற்கும். அமைச்சர், எம்.எல்.ஏ முதல் கடைநிலை ப்யூன் வரை பலருக்கும் லஞ்சம் தந்து யாரோ ஓர் ஒப்பந்ததாரர், பணியைக் கையில் எடுப்பார். அவருக்கு லாபம் வரவேண்டும் எனில், கட்டுமானத்தில் கை வைப்பார். தரமற்ற தடுப்பணைகள் தண்ணீரைத் தடுக்க முடியாமல், பின்னர் கண்ணீரையே வரவழைக்கும். ஒட்டுமொத்தத் திட்டமும் பாழாகும். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதில் மதுர்பாய் உறுதியாக நின்றார். அரசிடம் அழுத்தமாகப் பேசினார். `டெண்டர், கான்ட்ராக்ட் உள்ளிட்ட நடைமுறைகள் எதுவும் கூடாது. அரசு இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கியிருக்கும் தன் பங்கு பணத்தை கிராம நிர்வாகத்திடம் அளித்துவிட வேண்டும். ஜல்தாரா டிரஸ்ட்டும், ஊர் மக்களும் மீதித் தொகையைப் போட்டு, தங்கள் உழைப்பால், திட்டமிடலால், தங்களுக்குத் தேவையான தரமான கட்டுமானங்களை உருவாக்கிக் கொள்வார்கள்.’
மாநில அரசு அதற்கு ஒப்புக்கொண்டது.
2001-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்து மோடி முதலமைச்சரான பின்னரும், மதுர்பாய்க்கும் அவரது செயல்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தார். அடுத்த 10 ஆண்டுகளில் ஜல்தாரா டிரஸ்ட்டின், மக்களின் அர்ப்பணிப்புடன்கூடிய அயராத உழைப்பில் சௌராஷ்ட்ராவின் பெரும்பாலான கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான தடுப்பணைகள், குறைந்த செலவில், நிறைந்த தரத்தில் உருவாக்கப்பட்டன. நீர் சுமந்துவந்த ரயில்கள் ஓய்வெடுக்க ஆரம்பித்தன. விவசாயத்தை விட்டு விலகிய பலரும் மீண்டும் டிராக்டரில் ஏறினர். கோடைகாலத்திலும் நிறைகுடங்கள் சிரித்தன. அடிபம்புகள், எப்போதும் நீர் சுரக்கும் காமதேனுக்களாக மாறின. ஆனால், இவற்றைச் செயல்படுத்துவதில் சங்கடமான சவால்களுக்கும் குறைவில்லை.
சாதிச் சண்டைகளும் பரம்பரைப் பகைகளும் பழிவாங்கும் தீரா வெறியும் கிராமங்களில் அதிகம். அத்தனையையும் தாண்டி, மக்களை ஊரின் நலனுக்காக ஒன்றுகூட்டி ஒரு காரியத்தில் ஈடுபட வைப்பது சவால். தன் பேச்சின் மூலமும், சாதுர்யமான நடவடிக்கைகள் மூலமும் அதனைச் சாத்தியப்படுத்தினார் மதுர்பாய். தேஷரா என்ற கிராமத்துக்குள் நுழைந்து பேச படேல்கள் தயங்கினர். காரணம் அவர்களுக்கும் அந்த ஊரின் தர்பார் ராஜ்புத்களுக்கும் இடையே பல காலப் பகை. அந்தச் சமயத்தில் ராஜேந்திர சிங்கை தர்பார் ராஜ்புத்களிடம் பேச அனுப்பினார் மதுர்பாய். விருந்தினரை உபசரிப்பதில், அவர்களது தேவையை நிறைவேற்றுவதில் அந்த ராஜ்புத்கள் அதிக அக்கறைகாட்டுவர். ஆக, ராஜேந்திர சிங் சென்று கேட்கவும், ஊரின் நலனுக்காக இறங்கிவந்தார்கள். பகையை மறந்து படேல்களுடன் கைகோத்தார்கள். கொலை வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டன. தேஷரா கிராமத்தின் நீர்வளம் பேஷாகப் பெருகியது.
பெண்கள் நகையைக் கழற்றிக்கொடுப்பது, அடிமட்ட மனிதர்கள் தங்கள் வசம் இருக்கும் நூறு, இருநூறைத் தயக்கத்துடன் கொடுப்பது, வயதானவர்களும் ஊருக்காகக் களமிறங்கி உழைப்பது என பல நெகிழ்வூட்டும் சம்பவங்கள். `ஊரின் நீர்வளத்தைப் பெருக்குவது மட்டுமே நம் குறிக்கோள்’ என மதுர்பாய் உருவாக்கிய மனமாற்றம், பிற சண்டை, சச்சரவுகள், ஏற்றத்
தாழ்வுகளை எல்லாம் ஏறக்கட்டி ஏற்றத்தைக் கொடுத்தது.
தற்போது சௌராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் சுமார் 5,600 கிராமங்கள் நீர்வளத்தில் தன்னிறைவு பெற்று விளங்குகின்றன. 70-க்கும் மேற்பட்ட நதிகள் பெருகி ஓடுகின்றன. `2000-09-ம் ஆண்டுகள் காலகட்டத்தில் குஜராத்தின் விவசாயப் பரப்பளவு 15 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. விவசாய வருமானம், 18,000 கோடி ரூபாயில் இருந்து 49,000 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். இன்றைக்கு நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உள்ள மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. குஜராத் மக்கள் மதுர்பாயை தங்களது ‘நீர்க்கடவுள்’போலத்தான் போற்றுகிறார்கள்.

தமிழ்நாட்டின் கவனத்துக்கு!
‘கடவுள் தமிழ்நாட்டுக்கு அதிக நீரைக் கொடுத்துக் கெடுத்துவைத்திருக்கிறார். ஆண்டுக்கு சராசரியாக 1,000 மி.மீ மழை பொழியும் தமிழ்நாடு, குடிநீர்ப் பஞ்சத்தில் சிக்குவது வாடிக்கை. அதில் பாதி அளவே மழை பெறும் பாலைவன ராஜஸ்தானில் தண்ணீர்ப்  பிரச்னை இல்லை. ஏன்? சிந்தியுங்கள்! தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை மிகவும் கீழ்நிலையில் இருக்கிறது. மழைநீர் சேகரிப்பு அடியோடு இல்லை. மழைநீர் சேகரிப்பு என்ற பெயரில் இங்குள்ள திட்டங்கள் பெயர் அளவுக்கே செயல்படுத்தப்படுகின்றன. அண்டை மாநிலங்களுடன் உள்ள நீர் சிக்கல்களை சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தீர்த்துக்கொள்வது ஒரு பக்கம். அதற்கு முன்பாக முதலில் உங்கள் மாநிலத்துக்குள்ளேயே கிடைக்கும் தண்ணீர் வளத்தை முறையாக, முழுமையாகச் சேகரிக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள். அதில் மக்களை ஈடுபடுத்துங்கள். அது பெரிய வெற்றியைத் தரும் என்பது ராஜஸ்தான் அனுபவத்தில் நாங்கள் கண்ட உண்மை’  என்பதே ராஜேந்திர சிங் தமிழ்நாட்டுக்கு வழங்கும் அறிவுரை.

தேவை, பெண் குழந்தைகள்!
குஜராத்தில் பெண் குழந்தைகள் விகிதாசாரம் குறைந்துகொண்டே செல்வதை உணர்ந்த மதுர்பாய், அதுகுறித்த விழிப்புஉணர்வுப் பிரசாரத்தையும் மேற்கொள்ள ஆரம்பித்தார். பெண் குழந்தைகள் பிறப்பிலேயே கொல்லப்படுவதைத் தடுப்பது முதல், பெண் குழந்தைகளை நேசித்து வளர்த்தெடுப்பது வரை ஊர் ஊராகச் சென்று பலவிதமான பிரசாரங்களை மேற்கொண்டார். இந்த முயற்சிகளின் காரணமாக குஜராத்தில் 1,000 ஆணுக்கு 770 பெண் என்று இருந்த பாலின விகிதம், தற்போது 870 ஆக உயர்ந்திருக்கிறது!

நீருக்கான நோபல்
ராஜேந்திர சிங்குக்கு 2001-ம் ஆண்டில் ராமன் மகசேசே விருதும், 2005-ம் ஆண்டில் ஜம்னா லால் பஜாஜ் விருதும் வழங்கப்பட்டிருக்கின்றன. 2015-ம் ஆண்டில், `நீர் மேலாண்மைக்கான நோபல் பரிசு’ என அழைக்கப்படும் Stockholm Water Prize-ஐ ஸ்வீடன் அரசு வழங்கியது.
குஜராத் அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள மதுர்பாய்க்கு, 2014-ம் ஆண்டில் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது!

வியாழன், ஜனவரி 21, 2016

மீன ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்

மீன ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்
பன்னிரெண்டு ராசிகளிலேயே கடைசியாக வருவதும், மிகவும் பள்ளமானதும் மீனம்தான். அந்தத் தன்மைக்கு ஏற்றாற்போல சகல விஷயங்களையும் உள்ளுக்குள் வைத்து பதுக்குவீர்கள். அதேசமயம் உங்களைத் தேடி மனிதர்களும், பல்வேறு விஷயங்களும் வந்தவண்ணம் இருக்கும். ஆர்ப்பாட்டமில்லாத ஒரு தன்மை எப்போதுமே இருக்கும். பெரும்பாலும் அமைதியாக இருப்பதையே விரும்புவீர்கள். வாழ்க்கையில் புத்தகப் பாடத்தை விட அனுபவப் பாடத்தையே அதிகம் நம்புவீர்கள். எல்லோருக்கும் எத்தனை அறிவுரைகள் கூறினாலும் தனக்கென்று வரும்போது தடுமாற்றம் கொள்வதைத் தவிர்க்க இயலாது. எந்த விஷயத்தையும் தானே முடிவெடுத்துவிட்டு, ஒரு பேச்சுக்காக மற்றவர்களிடம் அபிப்ராயம் கேட்டு வைப்பீர்கள். சிறிய விஷயமாக இருந்தாலும் கூட தன் அனுபவத்திற்குள் வந்தாலொழிய ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். அலட்சியம் உங்களின் மாபெரும் சத்ரு ஆகும். ‘என்ன ஆகிடப் போகுது’ என்கிற எண்ணத்தை நீங்கள் ஒழித்துக் கட்ட வேண்டும்.
நீங்கள் மற்றவர்களின் மனம் புரிந்து பொறுமையாகப் பேசுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் இதை சாதகமாக்கிக் கொண்டு உங்களை ஏமாற்றத் துணிவார்கள். சபைத் துணிச்சல் கொஞ்சம் குறைவுதான். தனியாக விவாதிக்கும் நீங்கள், ‘எதிரியின் மனம் புண்படுமே’ என்று சபையில் அடக்கி வாசித்து வெற்றியைக்கூட விட்டுக் கொடுப்பீர்கள். தனகாரகனான குருவின் ராசியில் பிறந்திருப்பதால், பணத்தை விட மனம்தான் பெரியது என்பீர்கள். இதனால் பண விஷயங்களில் உங்களை ஏமாற்ற ஒரு கூட்டம் தயாராக இருக்கும். ஆனால், தன்மானம் அதிகமுள்ளவர்கள் நீங்கள். யாராவது உங்களை அவமானப்படுத்தினால் வாழ்க்கை முழுவதுமே அவர்களை ஒதுக்கி வைப்பீர்கள். உங்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால், தலைமீது வைத்து அவர்களின் தகுதிக்கு மீறி கொண்டாடுவீர்கள்.
உங்களின் ஆறாம் இடமான நோய், எதிரி, கடன் ஸ்தானத்திற்கு அதிபதியாக, சிம்ம ராசிக்கு அதிபதியாக உள்ள பிதுர்காரகன் என்றழைக்கப்படும் சூரியன் வருகிறார். இதனால் உங்களுக்கும் தந்தையாருக்கும் ஏதேனும் சிறு வாக்குவாதங்கள், கருத்து மோதல்கள் இருந்துகொண்டே இருக்கும். ‘அவர் சொல்வதை செய்யக் கூடாது’ என்பதில் உறுதியாக இருப்பீர்கள். அதிகமாக நீங்கள் அவரை நேசித்தாலும், உள்ளுக்குள் ஒரு பனிப்புகை போன்ற எதிர்ப்புணர்வு இருந்துகொண்டேயிருக்கும். ‘‘அப்பாவுக்கு இந்த கோர்ஸ் பத்தி தெரியாது. எதிர்காலத்துல இதுக்குத்தான் நல்ல வேல்யூ இருக்கும்’’ என்று பள்ளி, கல்லூரி காலங்களிலிருந்தே தந்தைக்கு எதிராகத்தான் முடிவெடுப்பீர்கள்.
பாகப் பிரிவினையின்போது தந்தையார் உங்கள் மீது ஓரவஞ்சனையோடு நடந்து கொள்வதாக நினைத்து வருத்தப்படுவீர்கள். அல்லது அப்படி நடப்பதுபோல ஒரு தோற்றத்தை தந்தையார் வழிச் சொந்தங்கள் உருவாக்குவார்கள். எப்படிப் பார்த்தாலும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப்பிறகு கல்வியின் பொருட்டோ அல்லது வேலைவாய்ப்பின் பொருட்டோ தந்தையாரைப் பிரிந்து செல்வது நல்லது. அது உங்களுக்கும் தந்தையாருக்குமிடையே உள்ள எதிர்ப்புணர்வைக் குறைக்கும். உங்கள் தந்தையாரோடு இருக்கும்போது, அவருக்குக் கீழ்தான் நீங்கள் இருக்க வேண்டியிருக்கும். ஏதோ உங்கள் தந்தை வளர விடவில்லை என்பதுபோல நினைத்துக் கொள்வீர்கள். உங்கள் தந்தையார் பிறவியிலேயே பலவீனமானவராகவோ அல்லது ஏதேனும் நோயுற்றவராக இருந்தாலோ, உங்களின் வளர்ச்சி அபாரமாக இருப்பதை நான் அனுபவபூர்வமாக பார்த்திருக்கிறேன். இந்த ஆறாம் இடத்து சூரியன்தான் இதற்குக் காரணம். ஏனெனில், உங்கள் வாழ்க்கையின் முழு அமைப்புமே ஒன்றை இழந்து ஒன்றைப் பெறுவது போலத்தான் அமையும்.
இப்படியாக ஆறாம் இடத்திற்கு சூரியன் வருவதால், உங்களின் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அதுவும் சமூகத்தில் முக்கிய இடத்தில் உள்ளவர்கள் எல்லாம், உங்களை கண்ணில் எண்ணெயை விட்டுக் கொண்டு பார்ப்பார்கள். எப்போது நீங்கள் சறுக்குகிறீர்கள் என்று கவனிக்கவே ஒரு கூட்டம் இருக்கும். அரசாங்கத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு அவ்வளவு எளிதாக பிரமோஷன் வராது. ஏதேனும் ஒருவிதத்தில் உங்களை மட்டம் தட்டியே வைத்திருப்பார்கள். தனியார் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள், மேலதிகாரிகளோடு பிரச்னை ஏற்பட்டு சமாளிப்பீர்கள். சரசரவென்று பிரமோஷனும் வந்துவிடும். உயரதிகாரிகளோடு நீங்கள் எப்போது பேசினாலும் ஆணையிட்டதுபோல பேசுவதாக நினைத்துக் கொள்வார்கள். உங்கள் கருத்து ஆணித்தரமாக இருக்கும். அதனால், ‘‘ஒரு அபிப்ராயமா சொல்றேங்க...’’ என்று பேசத் தொடங்குவது, உங்கள் ஆலோசனைகளை ஏற்க வைக்கும். எல்லோரும் பேசி முடித்தபிறகு நீங்கள் பேசுங்கள். உங்களின் பேச்சு சபையேறும். நடைமுறைப்படுத்தப்படும். நீங்கள் பொத்தாம் பொதுவாக பேசினாலேயே உயரதிகாரிகள் வியப்பார்கள். குறிப்பிட்டு மேலதிகாரிகளைப் பேசினால் எதிரியாவார்கள்.
நாடாளுபவர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களிடம் நீங்கள் எச்சரிக்கை காட்டுவது மிகவும் அவசியமாகும். அரசாங்க விஷயமென்றால் கூடுதல் ஜாக்கிரதையோடு இருத்தல் வேண்டும். வீட்டு வரி, குடிநீர் வரி, வருமான வரி போன்று எந்தெந்த அரசாங்க வரிகள் உண்டோ, எல்லாவற்றிலும் நீங்கள் முதன்மையானவராக இருந்து கட்டி விடுங்கள். அரசியல்வாதிகள் உங்களோடு நட்பாக இருப்பார்கள். ஏனெனில், உங்கள் ராசியாதிபதியான குருவிற்கு சத்ரு ஸ்தானாதிபதியாக வரும் சூரியன் நட்பு கிரகம் ஆகும். எனவே பிரச்னைகள் இல்லை என்றாலும், அமிர்தம் மிஞ்சினால் நஞ்சாகும் என்பதை நினைவில் வையுங்கள். பெரிய அளவில் அரசாங்கத் தொடர்பு கொண்டவர்களோடு வியாபாரங்களில் ஈடுபடும்போது கவனம் தேவை. சில சதவீதங்கள் லாபத்தில் பங்குகள் குறைந்தால் பரவாயில்லை. ஆனால், சரிநிகருக்கு சமானமாக நீங்கள் எதிர்பார்த்தால் சிக்கல்கள் உருவாகும். அரசாங்க அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்றோர்கள் ஆரம்பத்தில் நட்பு பாராட்டுவார்கள். ஆனால், போகப்போக உங்களுக்கெதிராக மாறுவார்கள். மிக முக்கியமாக வழக்கு போன்ற விஷயங்களில் இறங்கும்போது அதீத கவனத்தோடு இருத்தல் வேண்டும். ஏனெனில், நீதி, நேர்மை, நாணயம் போன்றவற்றிற்கு உரியவராக ராசிக்கு பன்னிரெண்டாம் அதிபதியான சனி வருவதால், கொஞ்சம் பிசகினாலும் சிக்க வைப்பார்.
‘கடன்’ என்கிற வார்த்தையே உங்களுக்கு அலர்ஜிதான். கடனை அடைக்கும் வரை தூக்கமே வராது. கைகட்டி நின்று பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காக கடன் வாங்காமலேயே காலம் கடத்த முயற்சிப்பீர்கள். ‘‘அப்படியென்ன கடன் வாங்கி சொகுசு வேண்டிக் கிடக்கு’’ என்று பரவலாகவே அறிவுரை கூறுவீர்கள். ஆனால், கடன் வாங்குவது உங்களுக்கு நல்லது. ஏதேனும் ஒரு கடனை வாங்கி மாதா மாதம் அடைத்துக் கொண்டேயிருங்கள். இதெல்லாம் உங்களின் ஆரோக்யத்தில் பிரச்னைகள் வராமலும், வேறெந்த விபத்துகளும் நேராமலும் காப்பாற்றும். நேரடியான அரசாங்க வங்கிகளில் கடன் வாங்காதீர்கள். தனியார் வங்கிதான் உங்களுக்கு எப்போதும் நல்லது. தங்கத்தை வைத்து கடன் வாங்குவது இன்னும் உசிதமாகும்.
அதேபோல எப்போதும் புலம்பிக் கொண்டே இருக்காதீர்கள். உங்கள் வாயாலேயே நீங்கள் கெடுவதாக சுற்றியுள்ளோர்கள் சொல்வதை மெய்ப்பித்துக் கொண்டிருக்காதீர்கள். ஏனெனில், சூரியன் வேகமாக நகரும் கிரகம். நீங்கள் பாசிட்டிவ் எண்ணங்களோடு இருந்தால் நல்லது. இல்லையெனில் எதிர்மறையான எண்ணங்களால் நிறைய அவநம்பிக்கையோடு பேசி, நல்ல வாழ்க்கையை இழக்க வேண்டி வரும். உங்களுக்கு கடனெனில் அது தந்தையாரால் கூட ஏற்படும். எப்போதோ சகோதரிகளின் திருமணத்திற்கு தந்தையார் பட்ட கடன்கள் அவருக்குப் பிறகு உங்கள்மீது விழும். சில சமயம் பெருமைக்காக மற்றவர்களுக்கு கடன் வாங்கிக் கொடுத்து அவதிப்படுவீர்கள்.
சிறியதாக உடம்பு படுத்தினாலும் பெரிய அளவில் பயப்படுவீர்கள். உடம்பு கதகதப்பாக இருந்தாலே ‘மலேரியாவா... டைபாய்டா...’ என்ற அளவிற்கு சற்று மிகையாகவே பயப்படுவீர்கள். வீட்டில் மற்றவர்களையும் பயமுறுத்துவீர்கள். வயிறு, தொண்டை, தலையில் ஏதேனும் பிரச்னைகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் உடனே காண்பியுங்கள். சூடாக எதையுமே நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆனால், நீங்கள் அப்படித்தான் விரும்புவீர்கள். இதனால்தான் தொண்டை பாதிக்கப்படும். உங்களுக்கு நிச்சயம் அப்பென்டிசைடிஸ் உண்டு. நோய்க்கு உரிய சூரியனே வழக்கு, பிரச்னைக்குரியவராக வருவதால், சட்டென்று எந்த வழக்கையும் யார்மீதும் போடாதீர்கள். முடிவு உங்களுக்கு சாதகமாக வந்தாலும் அதற்கான நேர விரயத்தையும், அவஸ்தையையும் உங்களால் தாங்க முடியாது. தாமதப்பட்டுத்தான் உங்களுக்கு நீதி கிடைக்கும்.
அவமானத்தை செரித்துக் கொண்டு ஓடும் திறன் உங்களிடம் மிகவும் குறைவு. சுள்ளென்று யாராவது உங்கள்மீது விழுந்தாலே, இரண்டு கிலோ குறைந்து விடுவதுபோல உணர்வீர்கள். சின்னச் சின்ன வார்த்தைகளால் புண்பட்டுப் போவீர்கள். அதேசமயம் நீங்கள் சின்ன வார்த்தைகளால் பேசினால் பெரிய பெரிய இழப்புகள் வரும். ஏனெனில், நீங்கள் கொஞ்சம் அந்தஸ்தில் உள்ளவர்களைத்தான் அப்படிப் பேச வேண்டிய சூழல் வரும்.
புழுவுக்குப் பின்னால் தூண்டில் முள் இருக்கும் என்பதை அறியாத மீன ராசிக்காரர் நீங்கள். உங்களை முன்னிறுத்தி பெரிய திட்டங்கள் தீட்டி பலர் பயனடைவார்கள். இறுதியில் அவர்கள் காரியம் முடிந்ததும் உங்களைத் தூக்கிப் போட்டு விடுவார்கள். நீங்களே அவ்வப்போது, ‘‘நானும் கறிவேப்பிலையும் ஒண்ணு’’ என்று புலம்புவீர்கள்.
பதினோராம் இடமான லாப ஸ்தானத்திற்கும், பன்னிரெண்டாம் இடமான விரய ஸ்தானத்திற்கும் அதிபதியாக சனி பகவானே வருகிறார். கொஞ்ச நாட்களுக்கு செலவே செய்யாமல் இருப்பீர்கள். எடுத்ததற்கெல்லாம் கணக்கு பார்ப்பீர்கள். அடுத்த சில மாதங்களுக்கு ‘நீங்களா இப்படி செலவு செய்கிறீர்கள்’ என்று ஆச்சரியப்படுவதுபோல செலவு செய்வீர்கள். படுத்த உடனேயே தூங்கமாட்டீர்கள். கோழித் தூக்கம்தான் உங்களுக்கு.
பொதுவாகவே சூரியன்தான் உங்களின் எதிரி ஸ்தானத்தை தீர்மானிக்கிறார். சூரியனை கட்டுக்குள் வைக்கும் திறன் செவ்வாய்க்கு மட்டுமே உண்டு. செவ்வாய் எனும் அங்காரகனை இயக்கும் சக்தியான முருகனை வணங்கினால், சூரியனின் எதிர்மறை கதிர்வீச்சுகள் கட்டுக்குள் வரும். எனவே மங்களமான கோலத்தில் முருகன் அருளும் தலமான திருத்தணி செல்லுங்கள். வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானை சென்று தரிசித்து வாருங்கள். திருத்தணிக்கு சென்னை மற்றும் எல்லா ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.
நன்றி

கும்ப ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்

கும்ப ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்
‘நிறை குடம் தளும்பாது; குறை குடம் கூத்தாடும்’ என்கிற பழமொழி முழுமையாக உங்களுக்குத்தான் பொருந்தும். உங்களால் அறிவுஜீவியைப்போல அமைதியாக இருக்கவும் முடியும்; படிப்பறிவில்லாதவர் போல சபையில் பேசியும் சிக்கிக் கொள்வீர்கள். குடத்திற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்தால் தெரியும். அதுபோல உங்களை அறிந்தவர்கள்தான் உங்களின் மறுபக்கத்தையும் அறிவார்கள். ‘‘உங்களுக்குள் இப்படியொரு மனுஷனா’’ என்று எண்ணுமளவிற்கு வியத்தகு மனிதராக தன்னை மறைத்துக் கொண்டு வலம் வருவீர்கள்.
பன்னிரெண்டு ராசிகளுக்குள் கும்பத்தையும், மகரத்தையும் சனிதான் ஆள்கிறது. ஆனாலும் மகரத்தில் பிறந்தவர்களுக்கும், கும்பத்தில் பிறந்தவர்களுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. மகரத்தார் போல கும்பத்தார் வேகமாக இருக்க மாட்டார்கள். ‘இருக்கட்டும்... பார்க்கலாம்’ என்று பாதி வேலையை தள்ளிப் போடுவார்கள். ஆயிரம் விஷயங்களை அறிந்து வைத்திருந்தாலும், சரியான தூண்டுதல் இல்லாமல் எதையுமே வெளிப்படுத்த மாட்டீர்கள்.
நீங்கள் சனி எனும் நீதி கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்திருப்பதால் நியாயத்தை பேச வேண்டும். மாறிப் பேசினால் சிக்கிக் கொள்வீர்கள். உங்களின் கடன், எதிரி, நோய் ஸ்தானத்திற்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். இரண்டரை நாட்களுக்கு ஒருமுறை சந்திரன் மாறிக் கொண்டே இருப்பதால், பௌர்ணமிக்கு முன்பும் பின்புமாகவே உங்களின் மனோநிலை மாறிக் கொண்டேயிருக்கும். கடன் கேட்டால் கூட, ‘‘ரெண்டு நாள்ல திருப்பிக் கொடுத்துடறேன்’’ என்று சொல்லித்தான் கேட்பீர்கள். பிறகு ரெண்டு வாரம், ரெண்டு வருஷம் என்று இரண்டிரண்டாக நீண்டுகொண்டே இருக்கும். உங்களை சீண்டிப் பார்க்கும் வரை எல்லோரும் உங்கள் நண்பர்கள்தான். அதில் கூட தொடர்ந்து யாரையும் எதிரியாகப் பார்க்க மாட்டீர்கள்; பார்க்கவும் தெரியாது. இன்னும் சரியாகக் கூறினால் உங்களின் எதிரியே உங்களின் அதீதமான கற்பனைத்திறன்தான். அதிலும் பகல் கனவைக் காண வைத்தே சந்திரன் உங்களைக் கெடுப்பார். ‘‘இந்த பிசினஸை இப்படி ஆரம்பிச்சு அங்கங்க டெவலப் பண்ணி, சிட்டிக்கு நடுவுல பெரிய பில்டிங் கட்டி...’’ என்று எப்போதும் ஒரு கனவு உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். கனவை நனவாக்க நடைமுறையில் உழைக்க வேண்டும் என்பதையே அவ்வப்போது மறந்து விடுவீர்கள். கனவை விட்டு நிஜ வாழ்க்கைக்கு வரும்போது, அது தரும் வெப்பத்தை தாங்காது ஓடுவீர்கள்.
சந்திரன் மாத்ரு ஸ்தானாதிபதி என்றழைக்கப்படும் தாய் ஸ்தானத்திற்கு உரியவராகவும் வருகிறார். இந்த சந்திரன் உங்களுக்கு பகை ஸ்தானத்திற்குரியவராக வருவதால், தாயார் எதிரியாவாரா என்று யோசிக்கலாம். ஆனால், தாயார் உங்களுக்கு எதிரியாக மாட்டார். ஏனெனில், உங்கள் ராசிக்கு நான்காம் இடமான தாய் ஸ்தானத்தைக் குறிப்பிடும் கிரகமான சுக்கிரன் சனிக்கு நட்பாக வருகிறார். எனவே ஒன்றும் பிரச்னை இருக்காது. என்ன... படிப்பு காரணமாகவோ, அல்லது வேலைக்கு செல்லும் வயதிலோ தாயாரைப் பிரிந்திருப்பீர்கள். தாயாரோடு கருத்துமோதல்கள் வந்து செல்லும்.... அவ்வளவுதான்! சந்திரன் எதிரி ஸ்தானமாக இருப்பதால் மனதைக் குழப்பி அலை பாய வைப்பார். சரியோ, தவறோ... எந்த முடிவை எடுத்தாலும் அதிலிருந்து மாறாதீர்கள். எப்போதுமே சரியாகத்தான் நாம் முடிவெடுக்க வேண்டும் என்றெல்லாம் எந்தவித இறுக்கத்தையும் கொண்டிருக்காதீர்கள். சந்திர கிரகண நாட்களிலெல்லாம் எங்கேனும் புனித தலம் சென்று வாருங்கள்.
எப்போதுமே நீங்கள் நீர்நிலைகளுக்குச் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்பது வாழ்க்கைக்குண்டான பழமொழி மட்டுமல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எப்போதும் கபம் இருந்து கொண்டே இருக்கும். உணவுக் குழலுக்கும் மூச்சுக்குழலுக்கு இடையே தொந்தரவு இருக்கும். அதனால் கும்பகர்ண குறட்டை இருக்கும். அடிக்கடி பார்வையை சரி செய்து கொள்ள வேண்டும். புகழ் போதை, முகஸ்துதி போதை நிறைய இருந்தாலும், மது போதையை மட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள். ‘‘வெறும் பார்லி வாட்டர்தானே’’ என்று தொடங்கினால், மொடாக்குடியனாக வலம் வருவீர்கள்.
கையெழுத்தை மாற்றி மாற்றி போடக் கூடாது. ஏடிஎம் செல்லும்போது பின் நம்பரை மறந்து போவீர்கள். புளியோதரையை அதிகமாக உண்ணாமல் இருந்தால் நல்லது. அது மனதை இன்னும் குழப்பும். பணத்திற்கு எப்போதுமே ஒரே ஆளை நம்பிக் கொண்டு இருக்காமல், பல்வேறு வழிகளைக் கையாள வேண்டும். ‘‘அவருகிட்ட கேட்டிருக்கேன். தலையை அடகு வச்சாவது தந்துடறேன்னு சொல்லியிருக்கார்’’ என்று ஒருவரையே நம்ப வேண்டாம். உங்களின் மாபெரும் திறமையே, பொய்யை பொருந்தச் சொல்வதுதான். சர்வ சகஜமாக சிறிய மற்றும் பெரிய பிரச்னைகளை சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பொய் சொல்லி சமாளிப்பீர்கள். ‘‘அவன் அதுக்குக் காரணமே இல்லை. அவன் எந்த தப்பும் பண்ணலை. அவனைத் தூண்டிவிட்டவன் வேறொருத்தன்’’ என்று சொல்லி, சூழ்நிலையை சமாதானமாக மாற்றுவீர்கள்.
இளைய சகோதர, சகோதரிக்கு நீங்கள் எத்தனைதான் உதவிகள் செய்தாலும் திடீரென்று உறவுகளை முறித்துக் கொள்வீர்கள். செவ்வாய் உங்கள் ராசியாதிபதியான சனிக்கு பகையாக வருவதால் எமோஷனலாக முடிவுகளை எடுக்கத் தூண்டுவார். ஆறாம் இடத்திற்கு அதிபதியான சந்திரனே, அழகு, ஆடை, அலங்காரம் போன்றவற்றிற்கு உரியவராகவும் இருக்கிறார். எனவே, கடன் வாங்கியாவது ஃபேன்சி ஸ்டோருக்குச் சென்று ஒப்பனைப் பொருட்களை வாங்கி வருவீர்கள். வீட்டு பட்ஜெட்டில் இதற்கென்றே குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைப்பீர்கள். சில சமயம் இதுவே ஒவ்வாமையைக் கொண்டு வரும். ஏதோ சில காரணங்களால் தந்தையை பிடிக்காமல் போகும். அதை வெளியில் சொல்லாமல் பூட்டி வைப்பீர்கள். அவர் செய்த தொழிலைத் தட்ட முடியாது தொடர்ந்து வெற்றியும் பெறுவீர்கள். யார் என்ன எதிர்த்தாலும் உங்கள் பாதையில் நீங்கள் பயணிப்பதை யாராலும் தடுக்க முடியாது. உங்கள் ராசியாதிபதியான சனி, பன்னிரெண்டாம் இடமான மகரத்திற்கும் அதிபதியாக வருகிறார். மனசுக்குப் பிடித்தவர்களாக இருந்தால் அள்ளிக் கொடுப்பீர்கள். திடீரென்று நினைத்துக் கொண்டு வெளியூர்களுக்கு பயணப்படுவீர்கள். ராசியாதிபதியே பன்னிரெண்டாம் அதிபதியாக வருவதால் மறுபிறவி இல்லை என்பது ஆன்மிக வாழ்க்கையில் உங்களுக்குப் பொருந்தும். இதனாலேயே, பெரும்பாலும் நேர்மையாகவே சம்பாதிப்பீர்கள். ‘‘நான் என்ன பண்றேன்னு கடவுளுக்குத் தெரியும்’’ என்பீர்கள்.
கும்பம் என்பதே அடக்கி வைத்திருக்கும் சக்தியைக் குறிப்பது. அதை சந்திரன் என்கிற மனோகாரகன் தனது எதிர்மறைக் கதிர்வீச்சுக்களால் மறைத்து வைத்திருப்பான். தீர்மானமாக ஒன்றை செய்ய முற்படும்போது பல்வேறு குழப்ப சிந்தனைகள் உங்களைத் துளைத்தெடுத்துச் செல்லும். காரியத்தை செய்ய விடாமலேயே முடக்கும். ‘‘திடீர்னு எதுக்கு இந்த பிசினஸைப் போய் செய்யணும்? நஷ்டம் வந்தா நம்மால முடியுமா...’’ என்று உங்களை துவளச் செய்யும் எண்ணங்களால் ஆக்கிரமிக்கப்படுவீர்கள். பிரச்னைகள் எனில் அந்த இடத்தில் முதலில் ஆஜராவது நீங்கள்தான். சண்டைக்காரர்களை விட உங்களின் குரல்தான் ஓங்கி ஒலிக்கும். ‘‘உங்களை மாதிரி யாராவது உண்டா’’ என்றால் சொத்தில் ஒரு பங்கை கூட எழுதி வைக்கும் அளவிற்கு புகழுக்கு மயங்குவீர்கள். அதனால், தேன் தடவிய பேச்சுகளுக்கு எப்போதுமே செவி சாய்க்காதீர்கள். எச்சரிக்கையோடு இருங்கள். தேவையில்லாமல் உங்களை யாரும் புகழ மாட்டார்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளாது இருப்பது நல்லது. அதேபோல இரவு நேரப் பயணங்களில் பக்கத்து சீட்காரரோடு தேவையில்லாமல் பேசக் கூடாது. உடைமைகளை கவனத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் ஒரு சிந்தனை மனதைப் போட்டு உழட்டிக் கொண்டே இருப்பதால் ரத்த அழுத்தம் ஏற்படும். பூமிகாரகனான செவ்வாய் உங்களின் ராசியாதிபதியான சனிக்கு பகையாக இருப்பதால் காலியிடங்களை வாங்குவதை விட கட்டிய வீட்டை வாங்குவது நல்லதாகும். கடன் வாங்கும்போது நகையையோ, வீட்டுப் பத்திரத்தையோ வைத்து கடன் வாங்குங்கள். உடனடியாக திருப்பிக் கொடுப்பதாக உறுதியளிக்காதீர்கள்.
உள்மனதில் உறங்கிக் கிடக்கும் மிருகத்தை உசுப்பிவிடும் இடமே ஆறு ஆகும். உங்களுக்கு ஆறாம் இடமாக சந்திரன் வருவதால் மனம் சொல்வதை விட மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ‘‘எனக்கு என்ன தோணுதோ அதுதான் சரி’’ என்றோ, ‘‘எனக்குத் தோணறதை நான் பேசறேன்’’ என்றெல்லாம் நீங்கள் பேசக் கூடாது. ‘‘பெரியவங்க இப்படி இந்த விஷயத்தை பார்க்கறாங்க... இப்படி சொல்லியிருக்காங்க...’’ என்றெல்லாம் பேசினால் வெற்றி பெறுவீர்கள். எதிராளியின் பலத்தை உயர்வாகப் பேசிவிட்டு உங்களைப் பற்றிப் பேசுங்கள். நீங்கள் எளிதாக வெற்றி பெறுவீர்கள்.
இந்த ஆறாம் இடம் என்பது மறைவு ஸ்தானம் ஆவதால், அதற்கு சந்திரன் அதிபதியாக வருவதால், மிகச் சிறந்த உளவியல் மருத்துவராக உங்களில் பலர் வருவீர்கள். நஞ்சை வைத்துத்தான் நஞ்சை முறியடிக்க முடியும் என்பதுபோல மனிதர்களின் மனங்களை அவர்களோடேயே சென்று மாற்றக் கூடிய நுட்பமான திறனை நீங்கள் பெற்றிருப்பீர்கள். நீங்கள் தொடர்ந்து போராடாமல் விட்டு விட்டு முயற்சித்தால் எளிதாக வெற்றி பெற முடியும். உங்களுக்கு தீர்க்க முடியாத பிரச்னையாக உங்களின் மனம்தான் இருக்கும். உங்களின் வாக்கை உங்களால் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாது. உங்களின் குழப்பம்தான் உங்களை வல்லவனாகவும் மாற்றும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் கியர் இல்லாத வண்டியைத் தேர்ந்தெடுங்கள். கார் வாங்கினால் டிரைவர் வைத்துக் கொள்ளுங்கள். வாகனங்களை இயக்கும்போது மனம் அலைபாய்ந்தபடி இருக்கும். பலவகையான சிந்தனைகள் வந்து மோதியபடி இருக்கும். இதனால் கவனம் சிதறும் அபாயம் அதிகம். பழைய வாகனங்களை வாங்காது புதியதாகவே வாங்குங்கள்.
உங்களின் சொந்த ஜாதகத்தில் ராசி அல்லது லக்னத்திற்கு எட்டிலோ, பன்னிரெண்டிலோ சந்திரன் மறைந்தால் விசேஷமாகும். இதனால் சந்திரனால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். சொந்த ஜாதகத்தில் சந்திரன் செவ்வாயோடு சேர்ந்திருந்தால் வீடு, சொத்து மூலமாக திடீரென்று நன்மைகளைப் பெறுவீர்கள். சந்திரன் ராகு, கேதுவோடு சேர்ந்திருந்தால் கெடு பலன்கள் குறையும். உங்களுக்கு சந்திரன் பகையாக வருவதால் தாயாருக்காக அடிக்கடி மருத்துவச் செலவுகள் செய்ய வேண்டி வரும். மேலே சொன்னதெல்லாம் சொந்த ஜாதகத்தைப் பொறுத்த விஷயமாகும்.
உங்களுக்கு கடன், நோய் மற்றும் எதிரிகள் பிரச்னையைத் தீர்க்கும் தலமே, சென்னையை அடுத்த திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில். இந்த ஆலயத்தில் வழிபட்டால், சந்திரனால் ஏற்படும் எல்லா பாதிப்புகளும் குறையும். வடிவுடையம்மனையும், படம்பக்கநாதரையும் தரிசியுங்கள். உங்கள் பிரச்னைகள் தீர்வதை அனுபவபூர்வமாக உணர்வீர்கள்.
நன்றி