வெள்ளி, பிப்ரவரி 13, 2015

இன்விசிபிள் பிளேன்

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. கண்களால் பார்க்க முடியாதவாறு மறையும் 'இன்விசிபிள் பிளேன்'களை உருவாக்க முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பனாஜியில் இன்று நடந்த பாரதீய விஞ்ஞான் சம்மேளனம் ஆராய்ச்சிக் கூட்டத்தில், நேரத்தையும், செலவையும் குறைக்கும் எந்த தொழில்நுட்பமானலும் அதை நாங்கள் வரவேற்கிறோம் என தலைமை ஆணையர் சதீஷ்குமார் தெரிவித்தார்.
அண்மையில், அறிவியல் மாநாட்டில் சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது மகாபாரதத்திற்கு முந்தைய காலகட்டத்து ரிஷியான பரத்துவாசரின் சூத்திரங்களைக் கொண்டு ரேடாரில் கண்டுபிடிக்க முடியாத தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும் என பிரபல விஞ்ஞானி சி.எஸ்.ஆர். பிரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதிலுமிருந்து வந்திருந்த அறிவியல் அறிஞர்கள் நிறைந்த இந்த ஆராய்ச்சிக் கூட்டத்தில் விஞ்ஞானி பிரபுவின் 'இன்விசிபிள் பிளேன் திட்டம்' ஹைலைட்டாக முன்வைக்கப்பட்டது.
மத்திய அரசின் National Informatics Centre-ல் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் விஞ்ஞானி பிரபு. பரத்துவாச முனிவரின் 'பிரிஹத் விமான் சாஸ்திரா' புத்தகத்தில் காணப்படும் சூத்திரங்களை கொண்டு 80 சதவீத ஒளியை உள்வாங்கிக் கொள்ளும் அறிவியல் தத்துவங்கள் மூலம் மறையும் விமானங்களை உருவாக்க முடியும் என உறுதியாக கூறுகிறார் விஞ்ஞானி பிரபு.
இதை டி.ஆர்.டி.ஓ.வுக்கு தெரியப்படுத்திய போது தலைமை ஆணையர் குமார் உடனடியாக மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. நேரத்தையும், பணத்தையும் வீணாக்காத எந்த ஒரு சோதனையும், தொழில்நுட்பமும் வரவேற்கத்தக்கதே. அந்த உள்நாட்டு தொழில்நுட்பத்தால் நாம் பயனடைய முடியும் என்றால் அதற்காக முயற்சி செய்து பார்ப்பதில் எந்த தவறும் இல்லை என்று வரவேற்றார். குமார் ஏற்கனவே, பிருத்வி மற்றும் அக்னி ஏவுகணைகளில் லிக்விட் புரொபல்லண்ட் ராக்கெட் என்ஜின்களை வடிவமைப்பதில் ஈடுபட்டவர். பாரம்பரியமாக இந்தியாவில் உள்ள விஞ்ஞான தத்துவங்களை நவீன அறிவியலுடன் இணைக்கும் நோக்கத்திற்காகவே இந்த ஆராய்ச்சிக் கூட்டம் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக